You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Vilakilla Vithigal Avan - E 44

Quote

44

சிறையிலிருந்து விடுதலையான லெனினை அவன் சொந்த பந்தங்கள் யாவும் ஒதுக்கிவிட்டன. படிப்பு போனது. நேர்மையான அதிகாரியான அவன் தந்தைக்குப் பெரிதாகச் சொத்துக்களும் இல்லை.

அவன் வீட்டிலுள்ள பொருட்கள் யாவும் என்ன ஆனது என்று தெரியவில்லை. அந்த ஒரு வருடத்தில் அவன் வாழ்க்கையே தலைகீழாக மாறிப் போனது.

படிப்புக்கு ஏற்ற வேலை செய்ய லெனினிடம் எந்த சான்றிதழும் இல்லை. ஏதாவது ஒரு வேலையை செய்யலாம் என்று பார்த்தால் அடையாள அட்டை சிபாரிசு என்று அவனிடம் இல்லாததை எல்லாம் கேட்டார்கள்.

எல்லாவற்றிற்கும் மேல் வேலை கிடைத்தாலும் அவன் சிறையிலிருந்தவன் என்று தெரிந்தால் சோலி முடிந்தது. இப்படி நிறைய நிறைய அவமானங்கள் அசிங்கங்கள்.

 ஆனால் அவன் மனம் துவளவில்லை.

எத்தனை அவமானங்கள் வந்தாலும் சென்னையை விட்டு அவன் போவதாக இல்லை. அவனுடைய எதிரிகள் எல்லாம் அங்கேதானே வசிக்கிறார்கள்.

அறிவழகனை பற்றிய ஒவ்வொரு நாள் செய்தியையும் அவன் எப்படியாவது சேகரித்துவிடுவான். முக்கியமாக ராஜீவ் அடிக்கடி சென்னை வருவது வழக்கம் என்பதால் அங்கே தான் இருப்பது மிக  முக்கியமென்று கருதினான். அவர்கள் மீதான பழியுணர்வு நீர் பூத்த நெருப்பாக  அவனுக்குள் எப்போதும் கனன்றபடியேதான் இருந்தது.

என்றாவது ஒரு நாள் அவன் எதிர்பார்த்திருந்த வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும்?

அந்த நம்பிக்கையோடு அவன் காத்திருந்த சூழ்நிலையில்தான் ஒரு நாள்….

லெனின் பாக்கெட்டிலிருந்த பர்ஸை ஒருவன் லாவகமாகத் திருடிக் கொண்டு ஓட, அவனைத் துரத்தியபடி இவனும் ஓடினான்.

எப்படியோ மூச்சு வாங்க அவனைத் துரத்திப் பிடித்துவிட, அந்த திருடனை மக்கள் சூழ்ந்து அடிக்க முற்பட்டனர்,

அதற்குள்ளாக லெனின் இடைபுகுந்து,  “இல்ல வேண்டாம்… பாவம் விடுங்க” என்று அந்த திருடனை மன்னித்து காப்பாற்றியும்விட்டான்.

“சாரி அண்ணா… தெரியாம” என்று அந்த திருடன் வருத்தபட்டு பர்ஸை திரும்ப தர,

“ஏன் டா? என்கிட்ட இருக்கிறதே பத்து ரூபாய்… அதையும் நீ அடிச்சிட்டு போலாம்னு பார்க்கிறியா? அது கூட பரவாயில்ல… போயும் போயும் இந்த பத்து ரூபாய்க்கு இந்நேரம் எல்லார்கிட்டயும் நீ தர்ம அடி வாங்கி இருப்பியே” என்று லெனின் கூறவும், அந்த திருடனின் முகம் சிறுத்துப் போனது.

“என்ன பண்றது? அந்த பத்து ரூபா கூட என்கிட்ட இல்லையே… அப்படி இருந்திருந்தா ஒரு டீயாச்ச்சும் குடிச்சு இன்னைக்கு நாளை ஓட்டியிருப்பேன்” என்று அவன் பரிதாபமாக கூற, லெனின் அவனை இரக்கமாகப் பார்த்துவிட்டு,

“சரி வா… டீ குடிப்போம்” என்று தன்னிடமிருந்த காசில் அவனுக்குத் தேநீர் வாங்கி கொடுத்தான். அந்த திருடன்தான் விஜ்ஜு. 

அப்படித்தான் அவர்கள் இருவரின் அறிமுகம் நிகழ்ந்தது. அந்த முதல் சந்திப்பிலேயே விஜ்ஜுவிற்கு லெனினை ரொம்பவும் பிடித்துப் போனது. அன்றே தன்னுடைய சொந்த கதை சோக கதையை எல்லாம் அவனிடம் சொல்லிவிட்டான்.

“எங்க அப்பன் ஒரு குடிகாரன்… அம்மா சம்பாதிக்கிற காசை எல்லாம் எடுத்துன்னு போய் குடிச்சிட்டு வந்துருவான் சோமாறி… எங்க அம்மா செத்துப் போன பிறகு அவன் குடிக்கிறதுக்காண்டி என்னைய வேலைக்கு அனுப்பிட்டான் நாதாரி பையன்

எவ்வளவு காசு கொண்டாந்து கொடுத்தாலும் பத்தல பத்தலன்னு அடிப்பான்… அவன் அடிக்கு பயந்துதான் பிக்பாக்கெட் அடிக்க ஆரம்பிச்சேன்… அப்புறம் ஒரு நாள் போலிஸ் கிட்ட மாட்டிகிட்டேன்…

சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிட்டானுங்க… அங்கு இருந்து வெளியே அனுப்பின பிறகு திருடனு முத்திரையே குத்திட்டானுங்க… எவனும் வேலையும் கொடுக்க மாட்டுறான்… சாப்பாடும் கொடுக்க மாட்டுறான்… ஊரு விட்டு ஊரு போய் பிழைக்கலாம்னு பார்த்தா அதுக்கு கூட காசு வேணுமே”

லெனினுக்கு அவன் கதையை கேட்டு பரிதாபமாக இருந்தது. கோடி கோடியாக கொள்ளையடிக்கிறவனை சிம்மாசனத்தில் ஏற்றி வைக்கிறார்கள். சில்லறை திருடனை எல்லாம் பிடித்து சிறையிலடைக்கிறார்கள். இந்த முட்டாள்தனமான சமுதயாத்தின் அவல நிலையை எண்ணி லெனினுக்கு சிரிப்புதான் வந்தது

“என் கதை அவ்வளவு சிரிப்பாவா இருக்கு” என்று விஜ்ஜு முகம் சுருக்க,

“இல்ல… நான் இந்த உலகத்தை நினைச்சு சிரிச்சேன்” என்றான்.

அந்த சில மணி நேர பழக்கத்திலேயே இருவரும் ரொம்ப வருட நண்பர்கள் போல உணர்ந்தனர். அப்போதுதான் லெனின் கொஞ்சம் தயக்கத்தோடு,  

“எனக்கு தங்க ஏதாச்சும் இடம் கிடைக்குமா விஜ்ஜு? இப்போ இருக்கிற இடத்துல இருந்து காலி பண்ண சொல்றாங்க” என்று வினவ,

“என்னை மாதிரி திருடனுக்கு யாரு அண்ணா வீடு கொடுப்பா… ஊருக்கு ஒதுக்கப்புறமாகிற பாழடைஞ்ச வூட்டுலதான் நான் தங்குறது… தூங்குறது எல்லாம்” என்றவன் சொல்ல,

“நானும் உன் கூட அங்கே தங்கிக்கட்டுமா?” என்று லெனின் கேட்டான்.

“அட என்ன அண்ணா… இதெல்லாம் கேட்டுட்டு… வா போலாம்” என்று அவனை அங்கு அழைத்து சென்றான். 

“ஆமா உன் கதையை நீ சொல்லவே இல்ல” என்று விஜ்ஜு கேட்க,

“உன் கதை போலதான் என் கதையும்… நானும் ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன்தான்” என்றவன் அதற்கு மேலாக எந்த தகவலையும் அவனுக்கு கொடுக்கவில்லை.  

“அப்போ நீயும் நம்ம கேஸா… திருட்டா கொலையா… ஆளை பார்த்தா ஸ்மார்டாகிற… கஞ்சா அபின் மாதிரி ஏதாச்சும் கடத்தல் பண்ணியா” என்றவன் வரிசைகட்டி கேள்விகளை அடுக்க லெனின் அமைதியாக புன்னகைத்துவிட்டு,

“இதுவரை அந்த மாதிரி எதுவும் செய்யல… ஆனா இனிமே செய்ய போறேன்” என்றவன் மேலும்,

“திருடனும்னு முடிவு பண்ணிட்டா… பத்து நூறெல்லாம் எடுக்க கூடாது… பெருசா எடுக்கணும்… எவனும் கண்டுபிடிக்காத மாதிரி எடுக்கணும்… முக்கியமா இல்லாதப்பட்டவன் கிட்ட இருந்து எடுக்கவே கூடாது… இல்லாதவன்கிட்ட இருந்து பிடுங்கி வாழுறான் பாரு… அவன்கிட்ட இருந்து எடுக்கணும்” என்றான். 

விஜ்ஜு அவனை விசித்திர பார்வை பார்க்க,

“நானும் நேர்மையான  வழிலதான் போகணும்னு நினைச்சேன்… ஆனா இங்கே நேர்மைக்கு எல்லாம் மதிப்பே இல்ல… இன்னும் சொல்ல போனா நேர்மையா இருக்கிறவனுக்குதான் எல்லாம் பிரச்சனையும்” என்று வருத்தமாகக் கூறிய லெனினின் வலியை, சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட விஜ்ஜுவால் புரிந்து கொள்ள முடிந்ததில் ஒன்றும் வியப்பில்லை.  

அன்றிலிருந்து அவர்கள் இருவரின் பாதையும் ஒன்றாக இணைந்தது.

இருவரும் அரசாங்க அலுலவகத்தில் நோட்டமிட்டு லஞ்சம் ஊழல் என மக்களின் பணத்தை சுரண்டி தின்று கொழுத்து திரியும் அதிகாரிகளாகப் பார்த்துக் குறி வைத்தனர். அவர்களை பின்தொடர்ந்து  தங்கள் கைங்கரியத்தைக் காட்டினர்.

முதல் திருட்டிலேயே பதினைந்தாயிரம் ரொக்கமாக சிக்கியது.

“அண்ணா… நீ பலே கில்லாடிதான் போ… இவ்வளவு நாள் திருடுற எனக்கு இவ்வளவு பணம் எல்லாம் கிடைச்சதே இல்ல” என்றவன் வியந்து பாராட்ட,

“இது லஞ்ச பணம்… அவனால கம்பிளைன்ட் கூட பண்ண முடியாது… இப்ப கிடைச்ச மாதிரி எப்பவும் கிடைக்கும்னு சொல்ல முடியாது” என்றவன் மேலும், “ஒரு மாசத்துக்கு ஒரு திருட்டுதான்… அதுக்கு மேல செய்ய கூடாது… அப்பத்தான் மாட்டிக்க மாட்டோம்” என்றான்.

எடுத்த பணத்தில் தன் தேவைக்கு எடுத்து கொண்டு ஒரு பெரிய தொகையை லெனின் ஒதுக்கி வைத்துவிடுவான்.

விஜ்ஜு கேட்டால், “இதுக்கான தேவை வரும்… அப்போ சொல்றேன்” என்பான்.

 மேலும் மிச்சம் இருக்கும் பணத்தில் ரோட்டோரத்தில் தாங்குபவர்களுக்கு உணவு வாங்கி கொடுப்பது அவர்களின் தேவைகளை செய்து கொடுப்பது என்று செலவழிப்பான்.

விஜ்ஜுவிற்கு லெனினை பார்த்து வியப்பாகவும் குழப்பமாகவும் இருந்தது. ஆனாலும் அவன் கஷ்டபடுபவர்களை தேடி சென்று உதவுதை பார்த்து அவன் மீது மதிப்பும் அன்பும் பெருகியது.

லெனின் இந்த திருட்டு வேலைக்கு இடையிலும் தினமும் செய்தி தாள் வாங்கி முதலமைச்சர் அறிவழகன் பற்றிய செய்திகளை கத்தரித்து எடுத்து வைக்கத் தவறுவதில்லை.

“இன்னாத்துக்கு அண்ணா… இந்த ஆளு மூஞ்சியை மட்டும் கிழிச்சு வைக்குற”

“எல்லாம் ஒரு காரணாமாதான்” என்றவன் கூற, அதற்கு மேல் விஜ்ஜு அவனை தோண்டி துருவி வேறெதுவும் கேட்டு கொள்ளவில்லை. அவன் எது செய்தாலும் அதில் ஏதாவது காரணம் இருக்கும் என்றவன் உறுதியாக நம்ப துவங்கினான்.

இப்படியே இரண்டு வருடம் ஓடிப் போனது.

இந்த இரண்டு வருடத்தில் ஒருமுறை கூட ராஜீவ் சென்னை வரவில்லை. ஆனால் அந்த ஒரு நாள்… அவன் எதிர்பார்த்த அந்த சந்தர்ப்பம்…

ராஜீவின் சென்னை வருகை. இம்முறையும் ஒரு பெரிய வியாபார நோக்கத்துடன்தான் அவன் வந்திருந்தான். அவனை இதற்கு மேலும் உயிருடன் விட கூடாது என்று முடிவோடு அவனைக் கொல்வதற்கான திட்டத்தைத் தயார் செய்தான் லெனின்.

விஜ்ஜுவிற்கு லெனின் திட்டத்தைக் கேட்டு முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும், அவன் எது செய்தாலும் அவன் பின்னோடு நிற்பது என்று முடிவெடுத்தான்.

சென்னைக்கு முதல் முறை வந்த போது ராஜீவை  எதுவும் செய்யமுடியவில்லை. ஆனால் அவன் எதிர்ப்பார்த்தது போலவே அடுத்த ஒரு மாதத்தில் மீண்டும் அவன் திரும்பி வந்தான்.

 ராஜீவ் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையின் தோட்டக்காரனை கைக்குள் போட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தான். அவன் அந்தளவு சிரமப்பட்டு எதற்கு வந்தானோ அந்த காரியத்தைச் நந்தினி செய்து முடித்துவிட்டாள்.

வியப்பின் விளம்பில் நின்றவன் நந்தினி ஆபத்திலிருந்த சமயத்தில் பதில் உபகாரமாக அவன் அவளைக் காப்பாற்றினான்.

நெற்றியெல்லாம் குருதி பெருக லெனின் நந்தினியைத் தூக்கி வர முதலில் அதிர்ந்த விஜ்ஜு பின், “ஹாஸ்பெட்டில் போலாமா அண்ணா” என்று கேட்ட போது, லெனினுக்கு ஏனோ அது சரியாகப்படவில்லை.

முகுந்தனால் நந்தினிக்கு ஆபத்து வருமென்று தோன்றியதால் அவள் காயத்திற்கு மருத்துவம் பார்க்க தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை வாங்கி கொண்டு அவர்கள் தங்கியிருந்த பாழடைந்த மாளிகைக்கு அவளைத் தூக்கி வந்து அவனே சிகிச்சை பார்த்தான்.

அவள் நெற்றியிலிருந்த குருதியை துடைத்து காயத்திற்கு அவன் மருந்திட்டு கட்டு கட்ட அப்போது தெளிவாகப் புலப்பட்ட அவள் வதனத்தை பார்த்த விஜ்ஜு, “செம்ம பிகரா இருக்கு அண்ணா… சினிமா நடிகை மாதிரி” என்க,

“எந்த நேரத்துல என்ன பேசிட்டு இருக்க நீ” என்றவன் கண்டிக்க, அந்த நொடி நந்தினியிடமிருந்து மெல்ல அசைவு தெரிந்தது.

“இன்னும் கொஞ்சம் நேரத்துல எழுந்திருச்சிடுவான்னு நினைக்கிறேன்… நீ போய் குடிக்க ஜூஸ் எடுத்துட்டு வா” என்று லெனின் விஜ்ஜுவை அனுப்ப,

“இதெல்லாம் நமக்கு தேவையா?” என்று அவன் புலம்பிக் கொண்டே சென்றான்.

“பாரதி பாரதி” என்று முனகியபடியேதான் நந்தினி கண் விழித்தாள். தலையில் யாரோ பாரங்கல்லை தூக்கி போட்டது போல அப்படியொரு வலி.

“ஆஅ… அம்மா…” என்றவள் வலியில் முகத்தைச் சுருக்க,

“ரிலேக்ஸ்… கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும் பொருத்துக்கோங்க” என்றான் அவளுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக.

மெல்ல மெல்ல விழிகளை திறந்து பார்த்தவளுக்கு முதலில் அந்த பாழடைந்த கட்டிடம்தான் புலப்பட்டது.

“ரொம்ப வலிக்குதா?” என்று லெனின் கேட்கவும் அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு,

“நீங்க யாரு? இது என்ன இடம்?” என்றவள் மலங்க மலங்க விழித்தபடி கேட்க, லெனினுக்கு அவளுக்கு எப்படி விளக்குவது என்றே புரியவில்லை.

அவன் மௌனத்தைக் கூர்ந்து கவனித்தவளுக்கு நடந்த நிகழ்வு ஒன்றன் பின் ஒன்றாக நினைவுக்கு வர, அவள் பதட்டமானள்.

அப்போது பழச்சாறுடன் விஜ்ஜு அங்கே வர லெனின் அதனை வாங்கி, “இதை குடி… அப்பதான் கொஞ்சமாச்சும் தெம்பு கிடைக்கும்” என்று அவளிடம் நீட்ட அவன் கையை தட்டிவிட்டவள் தட்டுத்தடுமாறி எழுந்து விலகிச் சென்றாள்.

“பயப்படாதே நந்தினி… நாங்க  உன்னை எதுவும் பண்ண மாட்டோம்” என்று உரைக்க,

“நீங்க முகுந்தனோட ஆளுங்கதானே… எனக்கு தெரியும்…  ஆமா அவன் என்ன சொன்னான் உங்ககிட்ட… என்னை அடைச்சு வைச்சு டார்ச்சர் பண்ண சொன்னானா?” என்றபடியே அவள் பயத்தோடு பின்னுக்கு நகர்ந்தாள்.

“நீ நினைக்கிற மாதிரி நான் முகுந்தனோட ஆள் எல்லாம் இல்ல… உன்னை காப்பாத்தத்தான் இங்கே தூக்கிட்டு வந்தேன்” என்றவன் பொறுமையாக விளக்க,

“சும்மா கதை விடாதே… நீ யாருன்னே எனக்கு தெரியல… அப்புறம் எப்படி உனக்கு என் பேர் தெரிஞ்சுது…

இல்ல இல்ல… நீ அந்த முகுந்தனோட ஆள்தான்… அவன் என்னை சுவத்தில இடிச்சு கொல்ல பார்த்தான்… போலிஸ் வந்ததும் நான் அங்கே இருக்க கூடாதுன்னு என்னை இங்கே அடைச்சு வைக்க சொல்லி உங்ககிட்ட சொல்லி இருக்கான்… அப்படிதானே” என்று படபடவென பேசியவள் தலையில் பாரமாக அழுத்த,

“ஸ்ஸ்ஸ்ஸ் அம்மா… வலிக்குதே” என்று தலையைப் பிடித்துக் கொண்டு மயங்கிச் சரிந்தாள். 

லெனின் அவளைத் தூக்கி வந்து படுக்கையில் கிடத்தினான்.

அவளைப் பார்த்து அவனுக்குப் பாவமாக இருந்தது. ஒருவகையில் நடந்ததை வைத்து அவளால் இப்படித்தான் யோசிக்க முடியும்.

“சரியான லூசா இருக்கும் போல… இவளை எதுக்கு அண்ணா நீ காப்பதுன” என்று விஜ்ஜு கடுப்படிக்க,

“வாயை மூடு” என்று அதட்டிவிட்டு அவள் உடல் நிலையைச் சோதித்தான்.

“பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல… கொஞ்சம் பயந்துட்டா” என்றவன் சொல்ல,

“நீ என்ன அண்ணா டாக்டர் மாதிரி பண்ற… நானும் அப்பத்துல இருந்து பார்க்கிறேன்… மருந்து போடுற… கட்டு போடுற” என்று விஜ்ஜு சந்தேகித்துக் கேட்க,

“அப்படி எல்லாம் இல்லை… இதெல்லாம் சும்மா பேஸிக்கான ட்ரீட்மென்ட்தான் … எல்லோரும் பண்ணலாம்” என்று சமாளித்தவன்,

“நம்ம வெளியே இருக்கலாம் வா” என்று அங்கிருந்து சென்றான். சில நிமிடங்களுக்கு பின் அவர்கள் திரும்பி வந்த போது நந்தினி படுத்திருந்த கட்டில் காலியாக இருந்தது.

“எங்க போனா?” என்று லெனின் பதட்டமாகச் சுற்றிலும் தேட,

“அவளே ஓடிட்டா போல… விடு அண்ணா… தொல்லை ஒழிஞ்சுது” என்றான் விஜ்ஜு.

vanitha16, shiyamala.sothy and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
vanitha16shiyamala.sothybhavanya lakshmi.nagarajan
Quote

Super ma 

You cannot copy content