You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Vilakilla Vithigal Avan - E 46

Quote

46

பாரதிக்காகக் காத்திருந்த அந்த சில மணி துளிகளில் அவள் மனம் பாரதியுடன் காதல், திருமணம், குழந்தைகள் என்று காலம் நேரமெல்லாம் கடந்து வெகுதூரம் பயணித்துச் சென்றுவிட்டது. ஆனால் அவள் விதி.

நொடி நேரத்தில் அக்கனவுகள் யாவும் நீர்க்குமிழிகளாகக் கரைந்து போயின.

யார் அவளைக் கடத்தி வந்தது என்று அவளுக்குத் தெரியவில்லை. தன் மொத்த பலம் கொண்டு அவள் எதிர்த்து போராடியும் ஒன்றும் பலனில்லை. அவர்கள் ஏதோ ஒரு பெரிய பங்களாவிற்குள் தூக்கி வந்து  அவள் கை கால்களைக் கட்ட முற்பட, “என்னை விடுங்க டா… என்னை விடுங்க” என்றவள் கத்தி கூச்சலிட்டாள்.

“விடுங்க டா பாப்பாவை” என்று கரகரப்பாய் ஒரு குரல்.

இருள் கவ்வியிருந்த அந்த அறையில் மிக சிறியதாக ஒரு மின்விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. யார் முகமும் அவளுக்கு தெளிவாகத் தெரியவில்லை.

 “சின்ன பாப்பா… அதை போய் கட்டி போட்டுட்டு” என்றவன் விழிகள் அவளை வக்கிர பார்வை பார்த்தது. அந்த பார்வை அவளை நெருங்க, சிகரெட் நெடியும் போதை நெடியும் போட்டி போட்டு கொண்டு அந்த கரிய உருவத்தின் மீது வீசியது.

மின்விளக்கின் வெளிச்சத்தில், அவன் சிவந்த கண்கள் நன்றாக பளிச்சிட்டன.

குரோதமும் வன்மமும் நிறைந்த அந்த கண்கள் அவளுக்கு மிகவும் பரிச்சியமானதாக தோன்றின. முகுந்தனையும் சேஷாத்திரியையும் பார்க்க அவன் அடிக்கடி வீட்டிற்கு வந்திருக்கிறான்.

அவளை வீட்டில் பார்த்துவிட்டால் போதும். தன் வக்கிர பார்வையாலேயே அவளை விழுங்கிவிடுவான்.

வன்புணர்வு என்பது உடல் ரீதியாக செய்தால்தானா? இந்த மாதிரியான பார்வைகள் கூட அதற்கு சமானம்தான். பேருந்து, வீடு, அலுவலகம் என்று பெண்களை தினம் தினம் துரத்தும் இது போன்ற  பார்வைகள் ஏராளம்.

எந்தளவுக்கு அந்த பெண்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்று அவர்களின் நிலையிலிருந்து உணர்ந்தால் மட்டுமே புரியும்.

தினம் தினம் வீட்டில் நந்தினிக்கு இத்தகைய பார்வை வன்புணர்வுகள் நடக்கும். வேலைக்காரன் ஓட்டுனர் முதற்கொண்டு வந்து செல்லும் அரசியல்வாதிகள் அதிகாரிகள் வரை என ஒவ்வொரு பார்வையும் ஒவ்வொரு விதமாக வன்மமாகத் அவளை தீண்டின. ஆனால் யாரையும் அவள் நெருங்கவிட்டதில்லை.

எனினும் இப்படியான பார்வைகளை எதிர்கொண்டு எதிர்கொண்டு அவள் மனதளவில் மறுத்துப் போயிருந்தாள். தற்சமயம் அவளைப் பார்த்த பார்வையும் கூட அந்த வகைதான்.

“நீ வியாசர்பாடி சங்கர்தானே” என்று சரியாக அவனை அடையாளம் கண்டு கொண்டு அவள் கேட்க,

“பரவாயில்ல… என் பேரெல்லாம் தெரியுது உனக்கு” என்றான்.  

“பேர் மட்டுமல்ல… உன்னை பத்தி எல்லாமே தெரியும்” என்று அவள் அசூயை உணர்வோடு அவனை நோக்க,

“ஓ தெரியுமா?” என்ற சங்கர் அசட்டுத்தனமாக புன்னகைத்து அவளிடம் வழிந்து கொண்டிருந்தான்.

“எதுக்குடா என்னை கடத்திட்டு வந்த”

“நானா கடத்தல… தலை சொல்லித்தான்” என்றவன் சொன்னதுதான் தாமதம். அவள் சீற்றமானாள்.

“அவன் என்னை நிம்மதியாவே வாழவிட மாட்டானா? இப்படி என்னை துரத்திகிட்டே இருக்கிறதுக்கு பதிலா அவன் என்னை ஒரேடியா கொன்னுடலாம்” என்று அவள் கடுப்பாக,

“கொல்ல எல்லாம் சொல்லல… கடத்த மட்டும்தான் சொன்னாரு”

“எதுக்கு? என்னையும் அவனுக்குக் கூட்டி கொடுக்கவா?” என்றவள் கேட்டுவிட சங்கர் அதிர்ந்தான். 

அந்த நொடி அறைக்குள் நுழைந்த முகுந்தன் காதிலும் அவள் சொன்ன வார்த்தைகள் விழ, “அடிங்க… என்னடி சொன்ன?” என்றவன் அவளிடம் எகிறவும், 

“இப்ப எதுக்கு கத்துற… நீ இந்த பரதேசி கூட சுத்துறதும் அவன் உனக்கு கூட்டி கொடுக்கிறதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கியா?” என்றவள் அவர்களைக் கேவலமாகப் பார்த்தாள்.  

முகுந்தன் முகம் வெளிறிப் போனது. அவன் பார்வை அந்த நொடி சங்கரை நோக்க, அவன் உடனடியாக அறையை விட்டு வெளியேறிவிட்டான்.

“என்ன வார்த்தை பேசுனடி நீ” என்று முகுந்தன் சீற்றமாக நந்தினி  கன்னத்தில் அறையவும், அவள் சற்றும் அசரவில்லை.

“பரவாயில்லயே… என் உடம்புலயும் உங்க அம்மா ரத்தம்தான் ஓடுதுன்னு உனக்கு ஞாபகம் இருக்கு போலவே” என்றவள் எள்ளல் தொனியில் கேட்டாள்.

“மவளே… இன்னும் ஒரு வார்த்தை பேசுன… உன்னை கொன்னுட்டுத்தான் மறு வேலை பார்ப்பேன்” என்றவன் சீற,

“கொல்லுடா கொல்லு” என்று அவளும் பதிலுக்குக் கத்தினாள்.

அதேநேரம் அவள் மனம் தாங்காமல் உடைந்து அழுதாள். “ஏன் டா… ஏன் என்னை வாழவும் விடாம சாகவும் விடாம இப்படி டார்ச்சர் பண்ற” என்றவள் வேதனையுற,

“ஆமாம்… நான் அப்படித்தான் பண்ணுவேன்… ஏன் னா நீ இப்படி அழுறதை பார்க்கும் போது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு… ம்ம்ம்… அழு நந்தினி… நல்லா அழு… இன்னும் சத்தமா அழு” என்றவன் குரூரமாகச் சொன்னதை கேட்டு அவள் அழுகை நின்றது.

“சரியான சேடிஸ்ட்டா நீ”

“ஆமா… நான் சேடிஸ்ட்தான்… சின்ன வயசுல இருந்தே என்னோட ஹாபி உன்னை அழ வைச்சு பார்க்கிறதுதான்டி… ம்ம்ம் அழு… அழுதுட்டே இரு… நீ சொன்ன மாதிரி நான் உன்னை வாழவும் விட மாட்டேன்… சாகவும் விட மாட்டேன்… முக்கியமா அந்த பாரதியோட உன்னைச் சேரவே விட மாட்டேன்” என்றவன் வஞ்சமாக உரைத்தான்.

“நீ என்னடா என்னை வாழ விடுறது… நான் பாரதியோட சேர்ந்து வாழுவேன்” அவள் திடமாகக் கூற,  

“விட மாட்டேன்டி… நீ அவனை போய் பார்த்த… அடுத்த நிமிஷமே அவனை நான் கொன்னுடுவேன்… அப்புறம் எப்படி நீ அவன் கூட சேர்ந்து வாழ்வ” என்றவன் சொல்லிவிட்டு கடூரமாகச் சிரிக்க, அவள் இதயத்துடிப்பு ஒரு நொடி நின்றுவிட்டது. அவன் வார்த்தையில் அவள் உடைந்து சுக்குநூறானாள்.

அவன் சாவகாசமாக சிகரட்டை பற்ற வைத்து கொண்டு அவளருகில் வந்து நின்றவன், “என்னை கொலை கேஸுல மாட்டிவிட பார்த்த இல்ல நீ… நான் ஜெயிலுக்கு போயிட்டா நீ சந்தோஷமா இருக்கலாம்னு நினைச்சியா?” என்று கேட்டு அவள் முகத்தில் அன்றைய செய்தித்தாளைத் தூக்கி வீசினான்.

“படி… படிச்சு பாரு” என்றான். அவள் அதனைப் பார்த்தாள்.

“மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ராஜீவ் மரணம்… அவருடைய கார் மலைசரவில் உருண்டு விழுந்ததில் உடல் நசுங்கி இறந்தார்” என்ற செய்தியை படித்தவளுக்கு அதிர்ச்சியாக எல்லாம் இல்லை. இதுதான் இன்றைய அரசியல். குற்றத்தை மறைப்பதெல்லாம் அவர்களுக்கு கை வந்த கலையாயிற்றே.

“சும்மா சொல்ல கூடாது… செம்ம க்ளேவரா திட்டம் போட்ட நீ?” என்றவன் அவளை எளக்காரமாக பார்த்து,

“ஆனா நீ நினைச்சது நடக்கல பார்த்தியா? அதான்டி என் அரசியல் பவர்” என்று கர்வமாக உரைக்க, அவள் மௌன சிலையாக அமர்ந்திருந்தாள்.

அவள் முகத்தில் வேதனையோ கோப உணர்ச்சியோ எதுவும் இல்லை.

 “என்ன நந்தினி… நான் தொண்டை தண்ணி வத்த பேசிட்டு இருக்கேன்… நீ அழாம அப்படியே உட்கார்ந்திருக்க… அழு… என் வாழ்க்கை போச்சு… என் சந்தோசம் போச்சுன்னு அழு… அழுடி” என்றவன் சொன்னதை கேட்ட நொடிதான் அவள் பார்வையில் உணர்ச்சி வந்தது.

“மாட்டேன்… அழ மாட்டேன்” என்றவள் உறுதியாக கூற,

“அப்புறம் வேற என்ன பண்ணுவ… அழுறதை தவிர உன்னால வேற என்னடி செய்ய முடியும்… அந்த பாரதி மேல இருக்க லூசுத்தனமான லவ்வில… நீயே உன் டிகிரி செர்டிபிகேட் எல்லாம் எரிச்சு சாம்பலாகிட்ட...

எவன்டி உனக்கு வேலை கொடுப்பான்… இனிமே நீ அந்த வீட்டு பக்கம் கூட வர முடியாது… ச்சோ பாவம்”  என்றவன் முகத்தில் போலியான பச்சாதாபத்தை காட்டி,

“இப்போதைக்கு உன் நிலைமை பிச்சைகாரனை விட மோசம்… இன்னும் கேட்டா… நீ இனிமே பிச்சைதான் எடுக்கணும்… அதை தவிர வேற ஆப்ஷனே உனக்கு இல்ல… ஒரு வேளை உனக்கு பிச்சை எடுக்க சங்கடமா  இருந்தா… நீ அழகாதானே இருக்க… அதை வைச்சு” என்றவன் வார்த்தையை முடிப்பதற்கு முன்பாக,

“இன்னும் ஒரு வார்த்தை பேசுன” என்று ஆக்ரோஷமாகி அவன் கழுத்தை இறுக்கி பிடித்தாள். 

“விடுடி” என்று தன் பலம் கொண்டு அவளை இழுத்துத் தள்ளிவிட்டவன்,

“நீ ஒரு கேவலமான அசிங்கமான பிறப்புடி… உனக்கு எதுக்குடி மானம் ரோஷமெல்லாம்… ஒன்னும் இல்லாததுக்குக் உனக்கு கோபம் மட்டும் வருது”  என்றவன் சொல்லி ஏளன பார்வை பார்த்தான்.

“ஆமான்டா… நான் ஒன்னும் இல்லாதவதான்… இன்னைக்கு என்கிட்ட ஒன்னும் இல்லதான்… ஆனா இப்படியே என் நிலைமை இருக்காது… நீ பார்த்துக்கிட்டே இரு…

 நீ பேசுன பேச்சுக்கு… என்னை சின்ன வயசில இருந்து இப்பவரைக்கும் நீ எனக்கு செஞ்ச அநியாயத்துக்குன்னு ஒவ்வொன்னுக்கும் கணக்கு பார்த்து நான் உனக்கு திருப்பி கொடுக்கிறேன்… உன் அரசியல் பவர்… பணம்… பதவி… எல்லாத்தையும் காலி பண்ணி காட்டுறேன்… உன்னை அணு அணுவா டார்சர் பண்ணி பழி வாங்கிறேன்” என்றவள் கொதிப்புடன் பேச,

“இது என்ன சபதமா இல்ல சாவலா?” அவன் அலட்சிய பார்வையோடு கேட்டான்.

“நீ எப்படி வேணா வைச்சுக்கோ… ஆனா ஏன் டா இவக்கிட்ட வைச்சுக்கிடோம்னு நான் உன்னை கதற விடல… என் பேர் நந்தினி இல்லடா” என்றவள் முடிவாகக் கூற,

“நீ யே ரோட்டுல பிச்சைக்காரியா திரிய போற… இதுல நீ என்னை கதற விட போற… செம ஜோக்… செம ஜோக்” என்றவன் கை தட்டி சிரித்தான்.

“இப்படியே சிரிச்சிக்கிட்டே இரு… ஒரு நாள் நீ சட்டையெல்லாம் கிழிச்சிக்கிட்டு பைத்தியக்கார ஹாஸ்பெட்டில இருக்க போற பாரு”

“ஒகே ஒகே… நீ சொன்னது எல்லாம் நான் டைரில குறிச்சு வைச்சுக்கிறேன்” என்று முகுந்தன் கிண்டல் தொனியில் சொல்ல,

“கண்டிப்பா குறிச்சு வைச்சுக்கோ…  நான் சொன்னது நடக்கும் போது உனக்கு புரியும்” என்றவள் பார்வையில் அத்தனை உஷ்ணம்.

நந்தினியின் சவாலை அவன் மிக சாதாரணமாக எடுத்துக் கொண்டுவிட்டான். ஒரு பெண் தன்னை என்ன செய்துவிட முடியும் என்ற அலட்சியம். ஆனால் அவள் சொன்னது போல அவனை கதறவிட்டாள்.

இன்று அவள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அன்று அவள் வேதனையோடும் வலியோடும் சொன்ன வார்த்தைகள் பலித்துவிட்டன.  

அந்த மனநல காப்பகத்தில் விரக்தியோடு சுவற்றில் தலை சாய்த்து முகுந்தன் தனியாகப் புலம்பிக் கொண்டிருந்தான்.

‘நீ சொன்னது நடந்திடுச்சு நந்தினி… நடந்திடுச்சு… நான் உனக்கு செஞ்ச கொடுமைக்கு எல்லாம் எனக்கு இந்த தண்டனை தேவைதான்’ என்றவனுக்கு அந்த நிலையில் நந்தினிக்குச் செய்த அநியாயங்கள் எல்லாம் நினைவில் எழும்ப,  இதயத்தில் பாரமாக அழுத்தியது.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு தான் செய்த பாவங்களை எல்லாம் எண்ணி அவன் மனம் வருந்தினான். அவன் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

“கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்… அழு… நல்லா அழு… ஆனாலும் நீ செஞ்ச பாவம் கரையாது” பூட்டிய அந்த அறையில் கணீரென கம்பீரமாக எதிரொலித்த குரலைக் கேட்டு முகுந்தன் பதறிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான்.

இருள் சூழ்ந்திருந்தது. “யாரு? யாரு இப்போ பேசுனது?” என்றவன் கேட்க, நிசப்தமாக இருந்தது அந்த அறை.

ஒரு வேளை அந்த குரல் தன்னுடைய பிரமையோ என்றவள் நினைக்கும் போது, “நீ செஞ்ச பாவம்… உன்னை விடாம இத்தனை தூரம் துரத்திட்டு வந்திருக்கு” என்று அதே குரல் மீண்டும் பேச, அவன் நடுங்கிவிட்டான்.

“யாரு யாரு?” என்றவன் கத்த,

“யாரும் இல்லை… நீதான்… சும்மா கத்தாம படுத்து தூங்கு” என்று ரோந்து பணியிலிருந்து காவலன் தன் கையிலிருந்த குச்சியால் அந்த கம்பி கதவில் தட்டிவிட்டு கடந்து செல்ல,

“இல்லை இல்லை…யாரோ உள்ளே இருக்காங்க” என்றவன் கத்த, அந்த காவலாளி காதிலே வாங்கவில்லை. சென்றுவிட்டான்.  

முகுந்தன் பயத்தோடு பார்வையை கூர்மையாக்கிக் கொண்டு அறைக்குள் பார்க்க, ஒரு நிழலுருவம் அவனை நோக்கி நடந்துவந்தது.

அவன் விதிர் விதிர்த்துப் போனான். தேகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது. சிறையில் தன்னை அடிக்க ஆள் அனுப்பியது போல துர்கா தன்னை இங்கே கொல்ல ஆள் அனுப்பி இருப்பாளோ என்ற சந்தேகம் உண்டானது.

அவன் பீதியோடு, “யாராச்சும் வாங்க… என்னை காப்பாத்துங்க… என்னை கொலை பண்ண வந்திருக்கான்… ப்ளீஸ் ப்ளீஸ் கதவை திறங்க” என்றவன் கெஞ்சி கதறி அந்த கம்பி கதவை பிடித்து உலுக்க… அந்த இரும்பு கம்பியும் அசையவில்லை. யாரும் அவன் கத்தலை கதறலையும் பொருட்படுத்தவும் இல்லை.

அவன்தான் இப்போது பைத்தியக்காரனாயிற்றே… யார் அவன் வார்த்தையை நம்பி அவனை காப்பாற்ற வருவார்கள்.

அந்த நிழலுருவம் அவனை நெருங்கி வர வர, அவன் இதயம் அதிவேகமாகத் துடித்தது.

 “என்னை எதுவும் பண்ணிடாதே… வேண்டாம்… என்னை விட்டுடு” என்றவன் கைகள் நடுக்கத்தோடு வேண்டியது.

அப்போது அவன் எதிரே வந்து நின்ற உருவத்தை பார்த்து அவன் அண்டசராசரமே ஆடியது.

உச்சபட்ச அதிர்ச்சியோடும் நடுக்கத்தோடும், “பா..ர.. தி” என்ற பெயரை உச்சரித்தான்.

vanitha16, shiyamala.sothy and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
vanitha16shiyamala.sothybhavanya lakshmi.nagarajan
Quote

Super ma 

You cannot copy content