You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Vilakilla Vithigal Avan - E 47

Quote

47

மாலதி கண்ணனின் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள். பாரதியை பற்றியும் துர்காவை பற்றியும் என தியாகு சொன்னவற்றை ஒன்று விடாமல் கண்ணனிடம் அவள் பகிர்ந்து கொள்ள, அவனுக்கு ஏதோ மாய மந்திர கதைகள் கேட்பது போல ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக இருந்தது. 

“தாத்தா ரொம்ப நல்லவரு கண்ணா…. அவருக்கு போய் இப்படி நடந்தது என்னால தாங்க முடியல… தாத்தாவோட ஒரே ஆசை பாரதி சாரை பார்க்கணும்கிறதுதான்… அதுக்காகதான் நான் உன்னை கூட்டிட்டு சிறுமலைக்குப் போனேன்… கடைசில அதுவே தப்பா முடிஞ்சிடுச்சு… தாத்தாவோட இறப்புக்கு காரணமாயிடுச்சு… நாம பாரதியை பத்தின உண்மையை சொல்லிட்டோம்குற குற்றவுணர்வில அவரும் உயிரை விட்டுட்டாரு” என்றவள் தன் வேதனையைச் சொல்லி அழுது தேம்ப, அவளுக்கு என்ன சமாதானம் உரைப்பதென்றே அவனுக்குப் புரியவில்லை.

மாலதி அழுது அழுது ஒருவாறு மெல்ல அமைதி நிலைக்கு வந்திருந்தாள். ஆனால் அப்போதும் கூட அவளது மன பாரம் குறையவில்லை. 

“நானே ஒரு வகையில தாத்தாவோட இறப்புக்கு காரணமாகிட்டேன்” என்றவள் சொல்லி வருத்தமுற,

“இல்ல மாலு… இதெல்லாமே கோ இன்ஸ்டென்ட்… இதுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்ல” என்றான் கண்ணன்.    

“இல்ல கண்ணா… நிச்சயமா இது எதுவும் கோ இன்ஸிடென்ட் இல்ல… நான் நம்ம நிகழ்ச்சிக்காக பாரதிகிட்ட கேள்வி கேட்டது… தியாகு தாத்தா அவரை பத்தி சொன்னது… நான் அவரை அடையாளம் கண்டுபிடிச்சது… அதுக்கு பிறகு நீயும் நானும் அவரை தேடி போனது… இது எதுவும் எனக்கு கோ இன்சிடென்ட் மாதிரி தோணல  

யோசிச்சு பார்த்தா எல்லாத்துக்கும் பின்னாடி ஏதோ ஒரு காரிய காரணம் இருக்கு…  அதுவும் நம்மலால பாரதியை கண்டுபிடிக்க முடியாத போது அவரை அந்த அக்ஸிடன்ட்னால நாம பார்த்தது எல்லாம் ஒரு த்ரில்லர் ஸ்டோரி மாதிரியே இருந்துச்சு… எனக்கு நடந்த எதையும் சாதாரணமா எடுத்துக்க முடியல” என்று மாலதி பாட்டுக்கு தன் எண்ணங்களை அடுக்க கண்ணன் அவளிடம்,

“நீ சொன்ன மாதிரியே வைச்சுக்கிட்டா கூட நடந்த சம்பவங்கள் எதுக்கும் நீ தனிப்பட்ட முறையில எப்படி பொறுப்பாக முடியும்” என்றான். 

“உண்மைதான் கண்ணா… எதையும் யாரும் திட்டம் போட்டு நடத்தல… இதெல்லாம் இப்படிதான் நடக்கணும்னு இருக்கு” என்றவள் சொல்லவும்,

“அதேதான் நானும் சொல்ல வர்றேன்… அதனால இந்த விஷயத்தை பத்தி ரொம்ப யோசிக்காதே… அப்படியே விட்டுடு” என்றான்.

“அது மட்டும் முடியாது… தியாகு தாத்தா சொன்ன இந்த உண்மையை என்னால சாதாரணமா விட முடியாது”

“விடாம… அப்புறம் என்ன பண்ண போற?” என்றவன் கடுப்பாக,

“நந்தினி பேர்ல இருக்க அந்த துர்காவோட முகத்திரையைக் கிழிக்க போறேன்” என்று மாலதி உறுதியாக சொல்ல கண்ணன் அதிர்ந்தான்.

“பைத்தியம் பிடிச்சிருக்கா உனக்கு… நீயும் நானும் சாதாரண மனுஷங்க… அவகிட்ட போய் நம்ம எல்லாம் மோத முடியாது”

“அவ மட்டும் என்ன வானத்துல இருந்து குதிச்சாளா… துரோகம் வஞ்சம் ஆள் மாறாட்டன்னு செஞ்சுதானே அவ அந்த பதவில போய் உட்கார்ந்திருக்கா”

“இவ்வளவு எல்லாம் செஞ்ச அந்த ராட்சஸிக்கு உன்னை ஒன்னும் இல்லாம பண்ண எவ்வளவு நேரமாகும்… ப்ளீஸ் மாலு… உன்னை கெஞ்சி கேட்டுக்கிறேன்… இந்த பிரச்சனையை இதோட விட்டுடு” என்றவன் எவ்வளவோ மாலதியிடம் சொல்லிப் பார்த்துவிட்டான். ஆனால் அவள் கேட்பதாக இல்லை.

“என்னால முடியாது கண்ணா… ப்ளீஸ் இந்த விஷயத்துல என்னை கன்வின்ஸ் பண்ணனும்னு நினைக்காதே” என்றவள் முடிவாகச் சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டாள்.

கண்ணனால் மாலதிக்கு எப்படி புரிய வைப்பதென்று தெரியவில்லை. இதனால் ஏதேனும் பெரிய விபரீதம் ஏற்படுமோ என்று கவலையாக இருந்தது அவனுக்கு.

******

கோவை பிரச்சார மேடை. தீபம் கட்சியின் தொண்டர்கள் கூட்டம் கடலென திரண்டிருந்தனர். எங்கு பார்த்தாலும் துர்காவின் பதாகைகள் வானுயர உயர்ந்து நின்றன.

 வழி நெடுக தொண்டர்களின் அணிவகுப்புகள்… வரவேற்புகள்… உபசரிப்புகள் என்று துர்காவிற்கு ஒரே ராஜ மரியாதைதான்.

ஆங்காங்கே அவள் ஆட்சிக்கு எதிராகக் கொஞ்சம் எதிர்ப்புக் குரல்கள் எழுந்த போதும், “முதலமைச்சர் நந்தினி வாழ்க!” என்ற கோஷங்கள் அவற்றை சன்னமாக அடக்கிவிட்டன.  இந்த ஆறு வருஷ அரசியல் வாழ்க்கையில் அவள் நிறையவே கற்று தேறியிருந்தாள்.

மேடை பேச்சும் அவளுக்குச் சரளமாக வந்தது. எதிரே இருப்பவர்களைப் பேசி கவிழ்ப்பதில் அவளுக்கு நிகர் அவள்தான்.

கம்பீரமான பேச்சு என்று சொல்ல முடியாவிட்டாலும் கேட்பவர்களைத் தன்வசம் கவர்ந்திழுக்கும் பேச்சு அவளுடையது.

 காசு கொடுத்துச் சேர்ந்த கூட்டங்கள் சில என்றால், அவளுக்காகவே திரண்ட கூட்டங்கள் நிறைய.

முப்பது வயதில் பதவி ஏற்று ஆட்சியை சாமர்த்தியமாகத் தக்க வைத்துக் கொண்ட அவளது திறமை மீதும்… மேலும் பெரும் அரசியல் ஜாம்பவான்களை எல்லாம் தன் கட்டுப்பாட்டிற்குள் கட்டி ஆளும் அவளது ஆளுமை மீதும் மக்களுக்கு ஒரு தனி ஈர்ப்பு இருக்கத்தான் செய்தது.

துர்கா அந்த ஈர்ப்பைச் சாமர்த்தியமாக பயன்படுத்தியும் கொண்டாள்.  பிரச்சாரம் முடிந்ததும் அவள் கோவையிலேயே தங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

பிரச்சாரம் எல்லாம் நன்றாகவே நடந்து முடிந்த போதும் துர்காவின் மனம் அதில் கொஞ்சமும் ஒட்டவில்லை.

“உங்களை எல்லாம் நம்பி ஒரு வேலையை கொடுத்தேன் பாருங்க” என்று ராஜேந்திரனிடம் ஏறு ஏறு என ஏறி கொண்டிருந்தாள்.

அவனோ மௌனமாகத் தலையைக் குனிந்து அவள் வசைகளைக் கேட்டுக் கொண்டிருந்தான். வேறு என்ன செய்ய முடியும். அவள் கொடுத்த கெடு முடிந்த பிறகும் பாரதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் எங்கே இருக்கிறான் என்று எந்த விவரமும் தெரியவில்லை.

“நம்ம டீம்குள்ளயே இரகசியமா இந்த விஷயத்தை முடிக்கலாம்னு நினைச்சேன்… ஹும்… ஒன்னும் நடக்கல… எல்லாம் உதவாக்கரைங்கதான்… இதுக்கு மேல டைம் வேஸ்ட் பண்ண முடியாது” என்றவள் அவனிடம்,

“வெளியே கருணா வந்திருப்பாரு… அவரை வர சொல்லுங்க” என்றாள். 

ராஜேந்திரன் வெளியேறிய சில கணங்களில் கருணா உள்ளே நுழைந்தான். கருணாவை யாரும் மறந்திருக்க முடியாது. பாரதியின் நண்பனாக அறிமுகமானவன்.

வெறும் கட்ட பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தவன் சட்ட மன்ற உறுப்பினர்… பள்ளி கல்வித் துறை அமைச்சர் என இப்போது அவன் அந்தஸ்தே வேறு.

துர்காவைப் பற்றிய உண்மையெல்லாம் தெரிந்தவன். தற்போதோ அவளுக்கு ஐஎஸ்ஐ முத்திரை குத்தப்படாத அக்மார்க் விசுவாசி. அவள் ஒரு வேலை சொன்னால் அதைத் தலையால் ஏற்றுச் செய்யுமளவுக்கான விசுவாசி.

அவள் முதலமைச்சர் பதவிக்கு வந்தது அவனுக்கும் சுத்தமாகப் பிடிக்கவில்லைதான்.

சாதாரண கூலி தொழிலாளியின் மகள். இவளுக்குப் போய் இப்படியொரு வாழ்க்கையா? என்று அவனுக்குள் பொறாமை தீ குபுகுபுவென கும்டி அடுப்பாக எறிந்தாலும் அதனை அவன் தனக்குள்ளாகவே வைத்துக் கொண்டான்.

அன்றைக்கு தலைமை யாரோ அவர்களிடம் தலைகுப்புற விழுந்து சரணடைந்துவிடுவது அரசியலில் எழுதப்படாத சட்டம்.

“கூப்பிட்டீங்களா அம்மா” என்று கருணா பணிவோடு வந்து நிற்க, அவனிடம் அவள் ஒரு ஃபோட்டோவை காட்டினாள்.

அவன் முகத்தில் பிரதிபலித்த உணர்வுகளை ஆராய்ந்தவள், “என்ன கருணா? ஃபோட்டோவை பார்த்ததும் முகமெல்லாம் இருட்டி போச்சு” என்றவள் கம்பீரமாக சோபாவில் சாய்ந்து கொண்டு கேட்க, 

“இல்லம்மா இவன்” என்றவன் குரல் லேசாக நடுங்கியது.

“ஏன்? அடையாளம் தெரியல”

“நல்லா தெரியுது… இது பாரதி” என்றவன் சொன்ன நொடி

“உன் ஆளுங்களை வைச்சு இவனை உடனடியா தேடி கண்டுபிடி… தமிழ் நாட்டுக்குள்ள எங்கே இருந்தாலும் விடாதே… எனக்கு இவன் வேணும்… உடனே வேணும்… ஆனால் கண்டிப்பா உயிரோட வேண்டாம்” என்றவள் வார்த்தையில் அத்தனை குரோதம்.

“அப்படினா பாரதி இன்னும் உயிரோட இருக்கானா?” என்றவன் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

“நான் என்ன உன்கிட்ட கதையா சொல்லிட்டு இருக்கேன்… பாரதி உயிரோட இருக்கானான்னு நிதானமா கதை கேட்டுட்டு இருக்க” என்றவள் கடுப்பாக,

“இல்லமா… இவன் உயிரோட இல்லன்னு” என்றவன் இழுக்க,

“இருக்கான்… உயிரோடத்தான் இருக்கான்… இத்தனை நாள் என் கண்ணுல படாம தப்பிச்சிட்டு இருந்திருக்கான்” என்று கோபமாக சொன்னவள்,

“பேசிட்டு இருக்க எல்லாம் நேரம் இல்ல கருணா… அவனைக் கண்டுபிடிக்கிற வழியை பாரு” என்றவள் பரபரப்பாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போது ராஜேந்திரன் உள்ளே வர அனுமதி கேட்டு நின்றான்.

அவனை குழப்பமாகப் பார்த்து என்னவென்று விசாரித்தாள். அவன் கருணாவைத் திரும்பிப் பார்க்க, “பரவாயில்ல சொல்லுங்க” என்றாள்.

“மேடம்… மனநல காப்பகத்துல இருந்து முகுந்தன் தப்பிச்சிட்டாராம்” என்றவன் சொன்ன நொடி கருணா அதிர்ந்தான்.

“சீக்கிரம் தேடி பிடிக்க சொல்லுங்க… வெளியே இந்த விஷயம் லீக் ஆகாம பார்த்துக்கோங்க” என்று எரிச்சலாக உரைத்தவளுக்கு இருக்கும் பிரச்சனைகளில் இது வேறயா என்று இருந்தது.  

“எவனும் எந்த வேலையும் உருப்புடியா செய்றது இல்ல” என்று அவள் பொறுமி விட்டு ராஜேந்திரனை அனுப்பிவிட்டாள்.

“நான் நாமளுங்க கிட்ட சொல்லி முகுந்தனை தேடச் சொல்லட்டுமா?” என்று கருணா பதட்டப்பட்டான்.

“நான் உனக்கு சொன்ன வேலையை மட்டும் செய்… அந்த பைத்தியக்காரன் ஒன்னும் நமக்கு முக்கியம் இல்ல” என்றாள்.

“என்ன ம்மா இப்படி சொல்றீங்க… அவன் ரிலீஸ் ஆக கூடாதுன்னு பைத்தியகார பட்டம் கட்டினதே நம்மத்தானே… ஏதாச்சும் அவன் பாட்டுக்கு ஏடா குடாம சொல்லி வைச்சா… எலெக்ஷன் டைம் வேற” என்றவன் அவளிடம் சொன்ன அதேசமயம்,

“பேசாம அவனை ஜெயில வைச்சு முடிச்சிருக்கலாம்” என்றவன் தன் ஆதங்கத்தையும் கொட்டினான்.   

“அவனை முடிச்சிட்டா… அவங்க அம்மா அப்பா சும்மா இருப்பாங்களா? அப்புறம் அவங்களால நமக்கு தேவையில்லாத பிரச்சனை வரும்… அதான் அவனை நான் பைத்தியக்கார ஹாஸ்பெட்டில் மாத்தினேன்… இனிமே அவன் எது பேசுனாலும் மக்கள் அவனை நம்ப மாட்டாங்க… ஏன் னா அவன் ஒரு பைத்தியம்?” என்று கூலாகச் சொன்னவள்,

“இப்போ என்னுடைய தலைவலி பாரதிதான்… அவன் இந்த ஆறு வருஷமா உயிரோட இருந்தும் அமைதியா இருக்கான்… அதான் எனக்கு ஏன்னு புரியல?” என்றவள் புருவங்கள் குழப்பமாக சுருங்கின.  

“ஒரு வேளை பிரச்சனை வேண்டாம்னு ஒதுங்கி இருக்கானோ என்னவோ?” என்று கருணா சொன்னதை கேட்டு அவனை முறைத்து பார்த்தாள்.

“நீ அவனுக்கு ரொம்ப வருஷமா ஃப்ரண்டா இருந்திருக்க… அப்போ கூட உனக்கு அவனை பத்தி தெரியல… பிரச்சனையை பார்த்து ஒதுங்கி போறவனா அவன்… அப்படி மட்டும் அவன் ஒதுங்கி போயிருந்தான்னு இந்நேரத்துக்கு அவன் நல்லா வாழ்ந்திருக்க மாட்டான்” என்றவள் சொல்ல, அது வாஸ்தவம்தான் என்று கருணாவுக்கும் தோன்றியது.

இல்லையென்றால் இவளை மாதிரி ஒருத்தியை காப்பாற்ற போய் அவன் தன் வாழ்க்கை மொத்தத்தையும் இழந்திருப்பானா?

இங்கே இவர்கள் பாரதியைப் பற்றிப் பேசி கொண்டிருந்த சமயத்தில்… மகாபலிபுரம் சாலையிலிருந்த பழமையான இடிந்த கட்டிடத்திற்குள் நுழைந்தான் பாரதி. 

தன் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து மயக்க நிலையில் கிடந்த முகுந்தன் முகத்தில் தெளிக்க, அவன் மெல்ல விழிகளை திறந்தான்.

எதிரே பாரதியை கண்ட நொடி, “பேய்” என்றவன் அரண்டு கத்த,

“பேய் என்ன உன் முகத்தில் தண்ணி எல்லாம் தெளிச்சு எழுப்புமா?” என்றவன் ஏளன பார்வையோடு கேட்டான்.

“அப்போ… அப்போ நீ சாகலையா?” என்றவன் அப்போதும் அதிர்ச்சி நீங்காமல் கேட்க,

“அந்த காட்டுக்குள்ள நீ என்னை கொல்லல… அப்புறம் எப்படி நீயா நான் செத்துட்டன்னு முடிவு பண்ண” என்றான்.

“இல்ல நீ?” என்றவன் குழப்பமாக என்ன சொல்வதென்று இழுக்கவும்,

“அந்த புலி என்னை வேட்டையாடி இருக்கும்னு நினைச்சியா?” என்றவன் கேட்க அவன் மௌனமாக அமர்ந்திருந்தான். 

“உங்களை மாதிரி மனுஷங்களை விட மிருகங்கள் ஒன்னும் அவ்வளவு மோசம் இல்ல… அதுங்க பசிக்குத்தான் வேட்டையாடும்… நீங்க எல்லாம் பணம் பதவிக்காக உயிர்களை வேட்டையாடுறீங்க” என்றவன் சொல்ல முகுந்தன் குற்றவுணர்வோடு தலை கவிழ்ந்தான்.

“பணம் பதவிக்காக நீ அக்கிரமும் அநியாயமும் செஞ்ச சரி… ஆனா ஏன் நந்தினியோட வாழ்க்கையை அழிச்ச… அவ என்னடா பண்ணா உனக்கு… அவ மேல உனக்கு ஏன்டா அவ்வளவு பகை வஞ்சம்” என்றவன் வார்த்தைகள் முகுந்தனை ஆழமாகக் குத்தி கிழித்தது.

“என்னதான் இருந்தாலும் அவ உனக்கு அக்காதானே” என்று கேட்ட பாரதி பின் உதட்டைப் பிதுக்கிவிட்டு, “என்னதான் உறவு முறைப்பப்டி அவ உனக்கு அக்கான்னாலும் உங்க அப்பாவுக்கு அவ பிறக்கல… அதானே” என்றவன் சொன்ன நொடி முகுந்தன் முகம் இருளடர்ந்து போனது.

“ஆனா உனக்கு ஒரு விஷயம் தெரியாது முகுந்தா? அவ உன் கூட பிறந்தவதான்… உங்க அப்பா சேஷாத்ரிதான் அவளுக்கும் அப்பா” என்றவன் தனக்குத் தெரிந்த உண்மைகளை முழுவதுமாக சொல்லி,

“இந்த உண்மையை நான் தெரிஞ்சுக்கிட்டதாலதான் உங்க அப்பா என்னை மாடில இருந்து தள்ளிவிட்டாரு… எங்க அம்மாவை வீட்டை விட்டு துரத்தி விட்டாரு” இத்தனை நேரம் அமைதியாக ஒலித்த அவன் குரலில் கோபம் தொனித்தது.

முகுந்தன் அவன் கேட்ட விஷயத்தை நம்ப இயலாமல் அதிர்ச்சியில் உறைந்து போனான்.  

நந்தினியின் பிறப்பைக் கேவலப்படுத்தி அவளை ஓவ்வொரு நாளும் அவமானப்படுத்தி இருக்கிறான். குத்தி குத்தி அவள் மனதைக் கிழித்திருக்கிறான். அசிங்கப்படுத்தி இருக்கிறான். அந்த ஒரு காரணத்திற்காகவே அவளை வெறுத்து ஒதுக்கி இருக்கிறான்.

இப்போது அதையெல்லாம் எண்ணும் போது அவன் உள்ளமெல்லாம் வேதனையில் புழுங்கியது. தாங்க முடியாமல் அவன் முகத்தை மூடி குலுங்கி குலுங்கி அழுதான்.

“நந்தினியை அழ வைச்சு பார்க்கிறதுதான் உன்னோட ஒரே ஹாபி இல்ல முகுந்தா?” என்று பாரதி எள்ளல் தொனியில் கேட்க,

“என்னை கொன்னுடு பாரதி… என்னைச் சாதாரணமா சாகடிக்காதே… கொடூரமான மரணமா கொடு” என்றவன் பாரதியின் காலை பிடித்துக் கொண்டு அழுது அரற்றினான்.

இத்தனை வருடங்களுக்கு பிறகான அவனின் மனமாற்றம் நந்தினியின் இழப்புக்களைச் சரி கட்டிவிட முடியுமா என்ன?

vanitha16, shiyamala.sothy and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
vanitha16shiyamala.sothybhavanya lakshmi.nagarajan
Quote

Super ma 

You cannot copy content