You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Vilakilla Vithigal Avan - E 52

Quote

52

துர்கா விலகி விலகிச் சென்றாலும் சங்கர் அவளை விடுவதாக இல்லை. அவனுடைய ஆட்கள் பத்து பேர் அந்த தொழிற்சாலையின் வெளிப்புறத்தில் குவிந்திருந்தனர். ஓடி தப்பிப்பதெல்லாம் சாத்தியமே இல்லை.

“இப்ப எதுக்கு நீ ஓவரா பண்ற?” என்றவன் அவள் புடவையை உருவ முயன்றான்.

“இதை பாரு… இப்படியெல்லாம் நடிக்கிறதாதான் பேச்சு… அதுவும் பாரதி வந்த பிறகுதான்”

“நடிச்சா தத்ரூபமா வராது துர்கா… அதான் மெய்யாலுமே செய்ற மாதிரியே பண்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்” என்றவன் நெருங்கி வந்து அவள் புடவை முந்தானையை பலம் கொண்டு இழுக்க, அவள் தடுமாறி கீழே விழுந்துவிட்டாள்.

“பட்டுபுடுவை எல்லாம் வேற கட்டிக்கிட்டு நீ பார்க்க ரொம்ப அழகா இருக்க… ஏன்? தலைக்குதான் எல்லாமா? எங்களை எல்லாம் பார்த்தா மனுஷனா தெரியலயா?” என்றவன் வக்கிரமாக கேட்க அப்போது அவள் பார்வை அருகிலிருந்து இரும்பு ராடை பார்த்தது.

அதற்குள் வெளியே மிகப் பெரிய களேபரம் நிகழ்ந்து கொண்டிருந்த சத்தம் கேட்டது. சங்கர் என்ன ஏதென்று பார்க்க வெளியே ஓடினான். துர்காவுக்கு தெரியும். பாரதி வந்துவிட்டிருப்பான். நிச்சயம் தன் உயிரை கொடுத்தாவது அவளைக் காப்பாற்றிவிடுவான். ஆனால் முகுந்தனோ தன் தேவைக்காக உடனிருப்பவர்களையும் கூட பலி கொடுத்துவிடுவான்.

அவள் தீவிரமாகச் சிந்தித்தாள். அவளுக்கு இப்போது இரண்டு வழி இருந்தது. பாரதியிடம் உண்மையைச் சொல்லி அவனை இந்த பிரச்சனையிலிருந்து காப்பாற்றுவது. அப்படி இல்லையென்றால் முகுந்தன் சொன்ன காரியத்தைக் கச்சிதமாக முடித்து அவனின் நன்மதிப்பைப் பெறுவது.

ஆனால் முதல் வழியைத் தேர்ந்தெடுத்தால் முகுந்தன் அவர்களை விடமாட்டான். நிச்சயம் அவளையும் பாரதியையும் பழி தீர்த்து கொள்ள வேறொரு உபாயம் தேடுவான். ஆனால் அதுவே இரண்டாவது வழியில் அவள் தேர்ந்தெடுத்தால் முகுந்தனின் நம்பிக்கையைப் பெறுவதோடு அவனை தன் கைப்பிடியில் போட்டு கொள்ளும் சாத்திய கூறுகளும் அதிகம்.

இவ்வாறு யோசித்தவள் திடமாய் ஒரு முடிவை எடுத்துவிட்டு மெல்ல எழுந்து வந்து எட்டிப் பார்த்தாள். வெளியே மிகப் பெரிய சண்டை காட்சியே ஓடி கொண்டிருக்கிறது. பாரதி அவர்கள் நினைத்தது போல இல்லை.

சங்கரின் ஆட்களை எல்லாம் ஒரே ஆளாக அடித்துவிட்டு உள்ளே நுழைந்துவிட்டான். அவன் முன்னமே சண்டை பயிற்சி அறிந்திருக்க வேண்டும் என்பது சண்டை போடும் போதிலான அவனின் நேர்த்தியான கையசைவுகளிலேயே தெரிந்தது.

சங்கரனின் ஆட்களுக்கு அந்தளவு கூட சண்டை வரவில்லை. அவர்கள் எல்லோரும் அடி தாங்காமல் வலியில் தரையில் புரண்டு கொண்டிருந்தனர்.  பாரதியின் திறமையை அவர்கள் மிகக் குறைவாக எடைபோட்டுவிட்டனர்.

இதில் சங்கர் வேறு வலியச் சென்று அவனிடம் சிக்கிக் கொண்டான்.

“துர்கா எங்கடா?” என்று பாரதி அவன் முகத்தில் ஓங்கி குத்தினான். இப்படியே போனால் சங்கர் அடி வாங்கி சாவது உறுதி… அப்படியொரு சந்த்ரப்பதிற்காகதான் அவளும் காத்திருந்தாள்.

பாரதியின் கண்ணில் பட்டுவிடாமல் முடிந்தளவு மறைவாக நின்று கொண்டாள். ஆனால் அவள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக பாரதி அடித்த அடியில் கீழே விழுந்த சங்கர் தன் ஆட்கள் வைத்திருந்த கட்டையை எடுத்து அவன் மண்டையில் அடித்தான்.

பாரதி மயங்கிச் சரிந்துவிட துர்காவை அச்சம் தொற்றிக் கொண்டது. சங்கர் அடுத்து என்ன செய்வான் என்று எண்ணும் போதே அவளுக்கு கதிகலங்கியது.

சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் ஒரு நாளும் தானாக உருவாகாது. நாம்தான் அதனைச் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பின் அவள் எதுவும் யோசிக்கவில்லை. அவள் அந்த இரும்பு ராடை எடுத்தாள். ஆனால் அதனைத் தூக்கிப் பிடிப்பதே அவளுக்கு அசாத்தியமான காரியமாக இருந்தது.  

முயன்று அதனைக் கையில் ஏந்திக் கொண்டு மெல்ல எட்டிப் பார்த்தாள். பாரதியிடம் வாங்கிய அடியில் சங்கர் நிலைகுலைந்து போயிருந்தான். அவன் தன் உதட்டில் வழிந்த குருதியைத் துடைத்தபடி பாரதியை கடுங்கோபத்துடன் பார்த்திருக்க, சத்தம் வராமல் அவன் அருகில் சென்றவள் பின் மண்டையில் ஓங்கி அடித்துவிட்டாள்.

“ஆஅ அம்மா” என்றவன் அலறி திரும்ப,

“பொறுக்கி நாயே! இப்பதான் உனக்கு உங்கொம்மா ஞாபகம் வருதா… பொம்பளைங்களை எல்லாம் கூட்டிக் கொடுத்துச் சம்பாதிக்கும் போது வரலையாடா?” என்று அவள் உக்கிரமாகக் கேட்க,

“அடியேய் உன்னை” என்றவன் அவள் கழுத்தை பிடிக்கப் போக, அவள் அவன் மண்டையில் மீண்டும் ஒரு போடு போட்டாள்.

சங்கர் இரத்தம் சிதறி தரையில் விழுந்தான். அந்த நொடி அவளுக்கு அப்படி ஒரு வெறி உண்டானது. அவளை வாழவிடாமல் துரத்திய ஒவ்வொரு ஆண்களின் மீதும் அவள் சேகரித்து வைத்திருந்த வஞ்சமெல்லாம் அந்த நொடி கொலைவெறியாக மாறியிருந்தது. அந்த வெறியை மொத்தமாகத் தீர்த்துக் கொள்ள இது ஒரு சரியான சந்தர்ப்பம்.

அங்கே விழுந்த கிடந்த ஆட்கள் ஒருவரையும் விடாமல் அதே இரும்பு ராட் கொண்டு அடித்து கொன்றுவிட்டாள். சிலர் அவள் தாக்க வருவதை அறிந்து அவளைத் தடுக்க முற்பட்டனர். ஆனால் அவள் வெறியின் முன்னே அவர்களின் எதிர்வினை ஒன்றும் பலிக்கவில்லை.

சம்பவம் நடந்த இடத்தில் சாட்சியாக ஒருவரும் இருக்கக் கூடாது என்பதே அவள் எண்ணம். அதன் பின் பாரதி அருகில் சென்று அவனுக்கு மூச்சு இருக்கிறதா என்று சோதித்தாள். 

அதன் பின் தன் கையிலிருந்து இரும்பு ராடை புடவை முந்தானையில் துடைத்துவிட்டு பாரதியின் கைவிரல்களை வைத்து பிடித்து அழுத்தினாள். அவ்வப்போது அவன் விழித்து கொண்டுவிடுவானோ என்ற பயத்தோடே செய்தாள்.

அதுவரை அவன் விழித்து கொள்ளவில்லை. அடுத்ததாக விரைந்து சங்கர் பேக்கெட்டிலிருந்து கைபேசியில், “காரியம் கச்சிதமாக முடிந்துவிட்டதாக” முகுந்தனுக்கு குறுந்தகவலை தட்டச்சு செய்து அனுப்பிவிட்டு அதனை மீண்டும் அவன் பேக்கேட்டில் வைக்க முற்பட்டாள்.

சங்கர் விழித்து கொண்டு அவள் தலை முடியை அழுந்த பிடித்துக் கொண்டுவிட்டான்.

“அடியே… தே*** முண்ட” என்றவன் நிந்தித்தபடி  தன் பிடியை  அவள் பின்னங்கழுத்தில் அழுத்தினான். “ஆஆ…” என்றவள் வலியில் அலறி கொண்டே அவன் கைகளை விலக்கிவிடப் பார்த்தாள்.

அவன் கூர்மையான நகம் அவள் கழுத்தில் இறங்க, “ஆஅ வலிக்குது… என்னை விடு” என்று அவள் கதறினாள்.

“என்னையே அடிச்சு கொல்ல பார்க்கிறியா? சாவுடி நீ” என்றவன்  மெல்ல எழுந்து அவள் கழுத்தை பிடித்து நெறிக்க, அவளுக்கு விழி பிதுங்கி வெளியே வந்துவிடும் போலிருந்தது.

அவளால் ஒன்றுமே செய்ய இயலவில்லை. அவன் பிடி அவளுக்கு மரண பிடியாக இருந்தது.

ஆனால் அந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள அவள் ஒருத்தியால் மட்டுமே முடியும்.

“பாரதி என்னை காப்பாத்து” என்று அவள் அழுகையும் கதறலுமாக கத்தவும் அது பாரதியின் செவிகளை எட்டியது. அவன் பதறியடித்து விழித்து கொண்டுவிட்டான்.

எதிரே துர்கா உயிருக்காகப் போராடும் காட்சியைப் பார்த்தவனுக்கு மனம் தாங்கவில்லை. அவளைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணத்தில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டான். அவன் கரத்தின் அருகில் தட்டுப்பட்ட இரும்பு ராடை எடுத்துக் கொண்டு எழுந்து வந்து சங்கர் தலையில் ஓங்கி அடித்தான்.

சங்கர் அப்படியே உயிரற்று தரையில் சரிய, துர்கா உயிர் பிழைத்துக் கொண்டுவிட்டாள்.

கொஞ்சம் விட்டிருந்தால் அவள் உயிர் போயிருக்கும். ஆனால் அவளுக்கு ஆயுள் கெட்டி. அங்கிருந்து அவள் விதி மாற்றி எழுதப்பட்டது.

சரியாக அந்த சமயத்தில் காவலர்கள் அங்கே வந்துவிட்டனர். முகுந்தனுக்கு அவள் அனுப்பிய குறுந்தகவலின் விளைவு. அங்கே வந்த காவலர்களும் ஒரு வகையில் முகுந்தனின் கைகூலிகள்தான. 

பாரதிக்கு அந்த நொடிதான் என்ன மாதிரியான காரியத்தை தான் செய்துவிட்டோம் என்று உரைத்தது. அந்த ராடை தூக்கியெறிந்துவிட்டுத்  துவண்டு அப்படியே தரையில் மண்டியிட்டுச் சரிந்தான்.

முடிந்துவிட்டது. அவன் இலட்சியம் கனவு எல்லாம் அந்த நொடியே சுக்குநூறாக உடைந்து நொறுங்கிவிட்டது. கதறி அழுதான். அந்த இடமே அதிருமளவுக்கு அழுதான். இனி எதையும் மாற்ற முடியாது.

அந்த காட்சியை எண்ணுகையில் அவளுக்கு இப்போதும் கண்கள் கலங்கின. பின்னந்தின்னி கழுகுகளாக அவளைச் சுற்றி வந்த ஆண்களில் பாரதி மட்டுமே வித்தியாசமானவன். விதிவிலக்கானவன்.

 ஆனால் அவன் ஒருவனுக்காக அவள் தேங்கி நின்றிருந்தால் இத்தகைய உயரத்தை அவள் கனவிலும் எட்டியிருக்க முடியாது. அந்த வகையில் அவள் உச்சபட்ச சுயநலவாதிதான். அது அவளுக்கே தெரியும்.

அதனால்தான் பாரதி என்ற பெயர் கூட அவளை பலவீனப்படுத்துகிறது. அவள் இவ்வாறு யோசித்திருக்கும் போதே நேரம் கடந்துவிட்டதை உணர்ந்து எழுந்து தயாரானாள்.

அவள் காரியதரிசி ராஜேந்திரனும் விரைவாகவே வந்து காத்திருந்தான்.

காரில் புறப்பட்ட பின், “லெனின் பத்தி விசாரிக்க சொன்னேனே… என்னாச்சு?” என்றவள் வினவ,

“டீடைல்ஸ் அனுப்பி இருக்காங்க… ஒரு நிமிஷம் மேடம்” என்றவன் தன்னிடமிருந்த சில கோப்புகளை ஆராய்ந்துவிட்டு அதிலிருந்து ஒரு கோப்பினை நீட்டினான்.

“லெனின் பத்தின டீடையில்ஸ் எல்லம் இந்த பைலில இருக்கு மேடம்”

காரில் சென்று கொண்டிருக்கும் போதே அந்த கோப்பிலிருந்த தகவல்களைப்  புரட்டிப் படிக்க துவங்கினாள். லெனின் ஒரு வருடம் சிறையிலிருந்திருக்கிறான். ஆனால் பாரதி சிறைக்கு செல்வதற்கு ஒரு வருடம் முன்பாக… இருவரும் சிறை தோழர்களாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் வேறு யார் மூலமாவது அவர்கள் நட்பு உண்டாகியிருக்கலாம்.

 எந்த புள்ளியில் அவர்கள் இருவரும் இணைந்திருப்பார்கள். அவர்கள் வாழ்வதற்கும் மற்ற ஏனைய தேவைகளுக்குமான பணம் எங்கிருந்து வருகிறது. ஒரு வேளை அவர்கள் இருவரின் பின்னணியிலும் இன்னும் சிலர் இருக்க கூடுமோ? என்று அடுக்கடுக்காக சந்தேகங்கள் எழுந்தன அவளுக்கு!

ராஜேந்திரன் புறம் திரும்பி, “பாரதியோட இந்த லெனின் தவிர சிறுமலையில வேற யாராவது தங்கி இருந்தாங்களா? இல்ல யாருடனாவது நெருங்கின தொடர்பு பழக்கம்… அதை பத்தி ஏதாவது” என அவள் கேட்க,

அவன் உடனடியாக பாரதியை பற்றி விசாரிக்கும் குழுவிற்கு அழைத்துப் பேசி தகவல்களைச் சேகரித்தான். பேசும் போதே அவன் புருவங்கள் நெறிந்தன. அழைப்பை துண்டித்ததும் அவன் சொல்ல போகும் பதிலுக்காக அவள் ஆர்வமாகக்  காத்திருந்தாள்.

 “அவங்க இரண்டு பேர் தவிர வேற யாரும் அவங்க கூட இல்ல” என்று தொடர்ச்சியாக மற்றொரு தகவலையும் சொன்னான்.

“ஆனா பாரதி அடிக்கடி கேரளாவுக்கு போயிட்டு வந்திட்டிருந்தானாம்”

“எதுக்கு? ஏன்?”

“அங்கே ஏதோ ஒரு ஆசிரமத்துல அவனோட வொய்ப் ட்ரீட்மென்ட்ல இருந்திருக்கிறதா?” என்றவன் சொன்ன மறுகணமே,

“வொய்பா?” என்று அவளுக்கு தன் செவிகளையே நம்ப முடியவில்லை.  

“அப்படி இருக்க வாய்ப்பே இல்லை… இது உண்மையான தகவலா இருக்க முடியாது” என்றவள் மீண்டும், “அப்படி எல்லாம் இருக்காது” என்று சொல்லி மனதைத் தேற்றிக் கொள்ள,

“நீங்க சொன்ன மாதிரி கூட இருக்கலாம் மேடம்… அவங்க வீட்டுல இரண்டு வருசம் முன்னாடி வேலை செஞ்ச அம்மா” என்றவன் ஏதோ சொல்ல எத்தனித்தான்.

“வேண்டாம் ராஜேந்திரன்… இந்த விஷயத்தை நம்ம இப்ப பேச வேண்டாம்” என்றாள் உடனடியாக.

இந்த மாதிரி சூழலில் மீண்டும் எதையாவது கேட்டு வைத்து தன் மனவழுத்தத்தை அதிகரித்துக் கொள்ள அவள் விரும்பவில்லை. அவன் மேலே சொல்ல வந்ததையும் கேட்காமல் நிறுத்திவிட்டாள்.   

இப்போதைக்குத் தேர்தல் பிரச்சாரம்தான் முக்கியம்.

அவள் திருச்சி சென்று இறங்கிய நொடித் தாரை தப்பட்டைகளின் சத்தம் காதை கிழித்தன. அந்த இடமே அதிருமளவுக்கு மேள தாளங்கள் ஒலித்தன. அவளுக்காக மிகப் பிரமாண்டமான முறையில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அந்த நொடியே அவள் மற்ற பிரச்சனைகள் கவலைகள் அனைத்தையும் மறந்துவிட்டாள். வானை முட்டுமளவுக்கு உயர்ந்து நின்றிருந்த அவளின் கட்அவுட்கள் மற்றும் பதாகைகளைப் பார்க்கும் போது அவள் கர்வமும் கூட உச்சந்தலையை தொட்டது. 

நந்தினி நந்தினி என்று வாழ்த்தொலிகள் கேட்கும் போதெல்லாம் சுருக்கென்று ஒரு ஊசி அவள் இதயத்தில் தைக்கும். ஆனால் இம்முறை அப்படித் தோன்றவில்லை. உண்மையான நந்தினியே இங்கே வந்து நின்றாலும் இவர்கள் எல்லோர் பார்வைக்கும் அவள்தான் நந்தினி. 

துர்காவாகிய தன் முகம்தான் அவர்களுக்கு நந்தினி. அந்த உறுதி அவளுக்கு இப்போது வந்துவிட்டது. தன்னை யாரும் அசைத்து பார்த்துவிட முடியாத உயரத்தில் நிற்கிறோம் என்ற அகம்பாவம் கொடுத்த மனவுறுதி அது.

 அதேநேரம் தன் பதவியையும் புகழையும் தட்டி பறிக்குமளவுக்கான ஒரு சிறு காரணத்தைக் கூட அவள் விட்டுவைக்கக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தாள். அது ஒரு சிறிய துரும்பாக இருந்தாலும் சரிதான்.

துர்கா வாகனத்திலிருந்து இறங்கி மேடையை நோக்கி நடந்த போது அங்கிருந்த ஆண் தலைகள் எல்லாம் அவள் முன் தலைவணங்கி நின்றன. அந்த காட்சியைப் பார்க்கும் போதே அவளுக்குள் உலகத்தையே வென்றுவிட்ட உணர்வு ஏற்பட்டது. உள்ளுக்குள் வெறித்தனமாய் ஒரு போதையேறியது. புகழ் போதை… பதவி போதை… என்பதை எல்லாம் தாண்டி தனிபெண்ணாகத் தான் நின்று சாதித்திருக்கிறோம் என்ற அவள் வெற்றியின் மீதான இறுமாப்பு போதை அது.

ஆறு வருடங்களுக்கு முன்பு… முப்பது வயதிலான பெண்ணொருத்தி வந்து இவர்களை எல்லாம் ஆட்டிபடைக்க போகிறார்கள் என்று சொன்னால் இவர்களில் எவனாவது ஒருவன் நம்பியிருப்பானா?

போயும் போயும் ஒரு பெண்ணா? என்று ஏளனமாகச் சிரித்து எள்ளல் செய்திருப்பார்கள்.

அப்படியொரு அசாத்தியமான காரியத்தை அவள் சாதித்துக் காட்டினால் என்றால் அது அத்தனை சுலபமாக நடந்துவிடவில்லை. பாரதி மாதிரியான நல்லவனைப் பலி கொடுக்கும் போது அவளுக்கும் உள்ளூர கஷ்டமாகத்தான் இருந்தது.

ஆனால் ராமனை விட ராவணனின் இடம் பாதுகாப்பானது என்றவள் உள்மனம் சொல்லிற்று. அதனால்தான் முகுந்தனைக் குறி வைத்தாள். பாரதி சங்கரைக் கொலை செய்துவிட்டதாக வந்த தகவல் முகுந்தனுக்கு நம்ப முடியாத அதிர்ச்சியாக இருந்த போதும் ஒரு வகையில் நினைத்தது நடந்து விட்டது என்று மகிழ்ச்சியாகவும் இருந்தது.

அறிவழகன் தன் பதவி மூலமாக மகனை எப்படி எப்படியோ காப்பாற்ற முயன்றார். ஆனால் பாரதி உண்மை விளம்பியாக சங்கரை கொன்றதை அவனே ஒத்துக்கொண்டுவிட்டான். அதன் பின் சங்கர் ஆட்களின் கொலைகளையும் அவன் மீதே சுமத்துவது அவர்களுக்கு பெரிய விஷயமில்லை.

கொட்டை எழுத்தில் பத்திரிக்கையில் ‘கவுன்சிலர் உட்பட பத்து பேரை வெறித்தனமாக அடித்துக் கொன்றவன் கைது’ என்று பிரசுரமானது. பரபரப்பாய் அது பேசவும்ப்பட்டது.

பாரதியின் கதை முடிந்துவிட்டால் துர்காவும் தேவையில்லை என்றுதான் முகுந்தன் நினைத்தான். ஆனால் நடந்தேறிய சம்பவங்கள் எல்லாம் துர்காவின் மூலமாக நடந்தது என்பதால் அவள் மீதான நம்பிக்கை பெருகியது.

ஆனால் இதில் முகுந்தனுக்குக் கடைசி வரை தெரியாத விஷயம் சங்கரை மற்றும் சங்கரின் ஆட்களை துர்காதான் அடித்து கொன்றால் என்பதுதான். அது அவன் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத உண்மை. பாரதி கொன்றுவிட்டதாக அவனும் நினைத்திருந்தான். அவளும் அவனுக்குத் தகுந்தாற் போல நடந்த சம்பவங்களை மறைத்து கற்பனை கதை ஒன்றைச் சொல்லி அவனை நம்ப வைத்துவிட்டாள். அவன் நம்பிக்கையையும் பெற்றுவிட்டாள்.  

நாளடைவில் அது அவள் மீதான கண்மூடித்தனமான நம்பிக்கையாக மாறி பின் அவனுக்குள் காதலாகவும் உருவெடுத்துவிட்டது.

 துர்கா விரும்பிய அனைத்தையும் செய்தான். அவளை வெளிநாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைத்தான். மும்பையில் அவளுக்கு வீடு வாங்கி தந்தான். அவளுக்கு என்னவெல்லாம் வேண்டுமோ அத்தனையும் செய்தான். விஷாலியுடன் திருமணமான பிறகும் கூட அவள் மீது பித்து பிடித்து சுற்றிக் கொண்டிருந்தான். அப்படித்தான் அவளும் அவனை தன் கைப்பிடிக்குள் வைத்திருந்தாள்.

இறுதியாக அவன் காலையே வாரிவிட்டு அவன் பிடிக்க நினைத்த இடத்தை அவள் அடைந்துவிட்டாள்.

துர்கா ஒரு மிகச் சிறந்த அரசியல் சூத்திரதாரி!

அவள் முன்னே பெருந்திரளாக மக்கள் கூட்டம் கோஷமிட்டுக் கொண்டிருந்தன. அவளைக் கொண்டாடிக் களித்தன. அவளும் காது குளிர அவற்றையெல்லாம் கேட்ட பின் எழுந்து நின்று தன் பேச்சை துவங்கினாள்.

அந்த ஆட்டு மந்தை கூட்டமும் மகுடிக்கு ஆடும் பாம்பாக அவள் பேசுவதெற்கெல்லாம் குருட்டாம்போக்கில் தலையசைத்து கொண்டிருந்தது.

அந்த கூட்டத்தோடு கூட்டமாக நிற்க முடியாமல் நின்று அவதிப்பட்டு கொண்டிருந்தாள் மாலதி. இதுவரை ஒரு முறை கூட இது போன்ற அரசியல் கூட்டத்திற்கு அவள் வந்ததில்லை. ஏன்? வரவேண்டுமென்ற அவள் நினைத்தது கூட இல்லை. ஆனால் இன்று வந்திருந்தாள். அத்தனை சிரமப்பட்டு அவள் அங்கே வந்ததற்கு காரணம் நந்தினியின் முகமூடியில் ஒளிந்திருக்கும் துர்காவின் வஞ்சக முகத்தை பார்ப்பதற்காக!  

தியாகு தாத்தாவின் மரணம் அவளுக்குள் இன்னுமும் எரிமலையாகக் குமுறிக் கொண்டிருந்தது. பெரும் சத்தத்துடன் வெடிக்க காத்திருந்தது. இந்த நொடியே துர்காவின் முகத்திரையைக் கிழித்தெறிய வேண்டுமென்ற வெறி எழுந்தது. ஆனால் உணர்ச்சிவசப்பட்டுச் செய்கிற காரியமில்லை அது.

நிதானமாக செயல்படுத்த வேண்டும். அந்த கூட்டத்திலிருந்து மெல்ல நழுவி வெளியே வந்தவள் ஆட்டோவில் ஏறி திருச்சியின் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தாள்.

வீட்டில் வேலை விஷயமாகப் போவதாக ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு சென்னைக்கு புறப்பட்டிருந்தாள். அங்கே மாலதியின் சித்தி வீடு இருந்தது. ஆதலால் அவர்களும் அனுப்பி வைத்துவிட்டனர்.

பேருந்தில் ஏறியதும் ஜன்னலோரமாக அமர்ந்து கண்களை மூடி அவள் சாய்ந்து அமர, அருகே அவளை இடித்து கொண்டு ஒரு உருவம் அமர்ந்தது. அவள் அவசரமாக தம் விழிகளைத் திறக்க அருகே கண்ணன் இருந்தான்  

“நீ ஏன் டா வந்த?”

“உன் கூடதான்… சென்னைக்கு”

“ஒன்னும் வேண்டாம்… இறங்கு” என்றவள் அவனிடம் பலவாறாக சொல்லி பார்த்தாள். ஆனால் அவன் கேட்பதாக இல்லை.

“நான் உன் கூட சென்னைக்கு வருவேன்” என்றவன் பிடிவாதமாக நிற்க,

“ஐயோ! நான் என் சித்தி வீட்டுல போய் தங்க போறேன்” என்றாள்.

“தங்கிக்கோ… நான் என் பிரண்டு வீட்டுல தங்கிக்கிறேன்” என்றவன் அவள் கேள்விக்கெல்லாம் ஏதோ ஒரு பதில் சொல்லி சமாளித்து கொண்டிருந்தான்.

“அன்னைக்கு என்னவோ இதெல்லாம் வேண்டாம் அப்படி இப்படின்னு பேசிட்டு இப்ப எதுக்கு நீ வந்த”

“அப்ப மட்டும் இல்ல… இப்பவும் அதான் சொல்றேன்… ஆனா அதேசமயம் உனக்கு எந்த பிரச்சனையும் வரவும் விட மாட்டேன்” என்றவன் அழுத்தமாக கூறவும் அவள் கோபமெல்லாம் இறங்கிவிட்டது.

“எனக்கு என்னை பார்த்துக்க தெரியும் கண்ணா… ப்ளீஸ் நீ வீட்டுக்கு போ” என்றவள் அமைதியாகச் சொல்லிப் பார்க்க அவன் ஒரே வார்த்தையில் ‘முடியாது’ என்று சொல்லிவிட்டான்.

‘சை’ என்று அவள் தலையிலடித்து கொண்டு பாராமுகமாக ஜன்னல் புறம் பார்வையைத் திருப்பிக் கொண்டாள். சரியாக அதே சமயம் அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்இருக்கையில் நந்தினியும் லெனினும் வந்து அமர்ந்தனர்.

நந்தினியை ஜன்னலோரமாக அமர்த்திவிட்டு லெனின் அருகில் அமர்ந்து கொண்டான். அவள் இலக்கில்லாமல் எங்கேயோ தூரமாக பார்த்தபடி இருந்தாள். அவனோ ரொம்பவும் பதட்டமாகக் காணப்பட்டான். சென்னை சென்று பாதுகாப்பான இடத்தை அடையும் வரை அவனுடைய படபடப்பு குறையாது.

கார், பஸ், ரயில் என்று ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர். யாரும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்துவிடக் கூடாது. அதேநேரம் அவர்கள் சென்ற திசையையும் யாரும் கணித்துவிடக் கூடாது.

மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பல ஊர்களுக்கு ஒரே நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதில் இங்கிருந்து செல்வதுதான் வசதி மற்றும் பாதுகாப்பு என்று அவன் முடிவெடுத்தான்.

இதெல்லாவற்றையும் தாண்டி இன்று முதலமைச்சர் பிரச்சாரத்துக்கு வந்திருப்பதால் மொத்த போலிஸ் பட்டாளமும் பிரச்சார இடத்தில்தான் குவிக்கப்பட்டிருக்கும். துர்கா வரிசையாக நிறைய ஊர்களுக்குப் பிரச்சாரத்திற்காகப் பயணம் செய்யப் போவதாகச் செய்திகளிலும் சொல்லப்பட்டது. இதுதான் அவர்கள் சென்னைக்கு செல்வதற்குச் சரியான சமயம்.

பேருந்து மெல்ல நகர ஆரம்பிக்க, நந்தினியின் கண்கள் ஜன்னலோர காட்சிகளைப் பார்த்துக் கொண்டு வந்தன. அலைமோதும் மக்கள் கூட்டம்…  செவியைத் துளைக்கும் அவர்களின் இரைச்சல்கள்… கூவிக் கூவி தின்பண்டங்கள் விற்பவர்கள்…  ஊர்ந்து செல்லும் பேருந்துகளின் சத்தங்கள்…  இது எதுவுமே அவளுக்குள் எந்தவித உணர்வுகளையும் எழுப்பவில்லை.

ஆனால் வழிமுழுதும் நந்தினி வாழ்க வருக போன்ற பதாகைகள் காணப்பட, அவள் பார்வை அவற்றின் மீது பதிந்தது. குறிப்பாக நந்தினி என்ற பெயரின் மீது.

லெனினோ அவற்றை எல்லாம் பார்த்து முகம் சுளித்தான். நந்தினி என்ற பெயரில் துர்கா இருப்பதை அவனால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. அசூயையாக முகத்தைத் திருப்பியவன் நந்தினியின் பார்வையும் அவற்றை எல்லாம் கவனித்திருப்பதைப் பார்த்து, “உனக்கு இதெல்லாம் பார்த்தா ஏதாச்சும் தோணுதா நந்தினி?” என்று ஆர்வத்துடன் கேட்டான்.

அவள் அவனை உணர்வற்ற பார்வை பார்த்தாள். அவன் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு, “நீ கொஞ்ச நேரம் கண்ணை மூடி தூங்கு” என்று சாய்வாக அவளை இருக்கையில் படுக்க வைத்தான்.

அவன் சொன்னதை மறுக்காமல் அவளும் செய்தாள். ஒரு வகையில் அவள் அவ்வாறு பழக்கப்பட்டிருந்தாள். அவள் தலையை சுற்றியிருந்த துப்பட்டாவை அவள் முகம் மறைத்தவாறு இழுத்துவிட்டான்.

இதுவே பழைய நந்தினியாக இருந்தால் அவன் சொல்லும் ஒவ்வொரு கருத்திற்கும் எதிர்மறையாக ஒரு கருத்துச் சொல்லுவாள்.  விதாண்டவாதம் செய்வாள். சண்டை பிடிப்பாள். அதேநேரம் மிகச் சாமர்த்தியமாகச் செயல்படுவாள்.

அவளுடைய தைரியத்தையும் புத்திசாலித்தனத்தையும் பார்த்து அவன் வியக்காத நாளே கிடையாது. அவள் தான் வாங்கிய ஒவ்வொரு அடிகளிலும் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டவள்.

இன்று மட்டும் அந்த நந்தினி இருந்திருக்க வேண்டும். இந்திய அரசியல் சாம்ராஜ்ஜியத்தையே அவள் தலைகீழாகப் புரட்டி போட்டிருப்பாள்.

vanitha16, shiyamala.sothy and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
vanitha16shiyamala.sothybhavanya lakshmi.nagarajan
Quote

Super ma 

You cannot copy content