You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Vilakilla Vithigal Avan - E 56

Quote

56

கருணாவின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட காட்சியையும் மதுரையிலிருந்த விமானம் மூலம் சென்னை வந்திறங்கிய துர்காவையும் அந்த செய்தி சேனலில் மாற்றி மாற்றிக் காட்டி டிஆர்பியை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

செய்தியாளர்கள் எல்லாம் துர்காவைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

 “நீங்க யோசிக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல… நடந்தது ஒரு விபத்து… இதுக்கு மேல சொல்றதுக்கு ஒன்னும் இல்ல… கட்சியின் சார்பாக கருணாவின் குடும்பத்திற்கு என்னோட இறங்கலை தெரிவிச்சுக்கிறேன்” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து அகன்றாள்.

பின்னர் அவள் நேராக தன் அலுலவகத்தை அடைந்தாள். அங்கே காத்திருந்த கருணாவின் காரியதரிசியையும் அவன் மனைவியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே நுழைய, அவர்கள் நடுக்கத்துடன் நின்றனர்.

முதலமைச்சர் அலுவலகத்திற்கு வர சொல்லி தகவல் வந்ததில் அவர்கள் இருவரும் பதட்டமாகினர். எதற்கு ஏனென்று தெரியாமல் இருவரும் படபடத்து நிற்க, “உங்களை மேடம் உள்ளே கூப்பிட்டாங்க” என்று ஒருவன் கருணாவின் காரியதரிசியின் மனைவியை குறிப்பிட்டுக் கூற,

அவனோ புரியாமல், “என்னை கூப்பிடலையா?” என்று வினவினான்.  

“இல்லை… உங்க வொய்ஃபை மட்டும்தான் கூப்பிட்டாங்க” என்று சொல்லிவிட்டு செல்ல, அந்த பெண் எச்சிலை விழுங்கிக் கொண்டாள். 

அவள் நடுக்கத்துடனும் பயத்துடனும் அந்த அறைக்குள் நுழைய, துர்கா சில நிமிடங்கள் அவளை ஆழதுளையிடுவது போல பார்த்துவிட்டு, 

 “நேத்து நைட்டு கருணா எத்தனை மணிக்கு உன் வீட்டுல இருந்து கிளம்புனாரு” என்று கேட்டாள். அவள் பதில் சொல்லாமல் பேந்த பேந்த விழிக்க,

“கேட்குறது காதுல விழல” என்று துர்கா குரலை உயர்த்த அவள் விதிர் விதிர்த்துப் போனாள்.

“இல்ல ம்மா… அவரு வீட்டுக்கு எல்லாம்” என்று அவள் மறுக்க,

“நீ உன் புருஷனை ஏமாத்துற மாதிரி எல்லாம் என்னை ஏமாத்த முடியாது… எல்லாம் எனக்கு தெரியும்” என்றதும் அவள் முகம் சுருங்கிப் போனது.

அதற்கு மேல் அவள் எதையும் மறைக்கவில்லை. அவன் எப்போது வந்தான்… எத்தனை மணிக்கு சென்றான் என அனைத்து தகவலையும் சொல்லி முடித்தாள்.

“கருணா கிளம்பறதுக்கு முன்னாடி ஏதாவது சந்தேகபடுற மாதிரி நடந்துச்சா… யாராச்சும் வீட்டுக்கு வந்த மாதிரி”

“அப்படியெல்லாம் எதுவும் இல்லீங்கம்மா”

“ம்ம்ம்… கருணாவோட டெத்ல உன் புருஷனுக்கு ஏதாச்சும் சம்பந்தம் இருக்குமா? ஒரு வேளை உங்க விஷயத்துல சந்தேகம் வந்து”

“சேச்சே… அவரு அப்படி எல்லாம் செய்ய மாட்டாரு… ரொம்ப நல்லவரு” என்றதும் அவளை ஏற இறங்கப் பார்த்த துர்கா, “ஹும்… உன் புருஷன் ரொம்ப நல்லவனா இருக்கிறதாலதான் அவனுக்கு நீ துரோகம் செஞ்சிருக்க இல்ல” என, அவள் தலை தாழ்ந்தது.

“சரி நீ போ… உன் புருஷன் என்ன விசாரிச்சாங்கன்னு கேட்டா கருணா ஆக்ஸிடென்ட்ல நீங்களும் சம்பந்தப்பட்டு இருக்கீங்களான்னு விசாரிச்சன்னு சொல்லிடு… அதுக்கு மேல அவன் எதுவும் கேட்க மாட்டான்” என, “சரிங்க ம்மா” என்று அவள் பவ்யமாக தலையாட்டினாள்.

“ஆன்… அப்புறம்… கருணா இறந்த அன்னைக்கு நைட் ஏதாவது சந்தேகப்படும்படியா நடந்ததா உனக்கு ஏதாச்சும் தோணுச்சுன்னா தனிப்பட்ட முறையில என்கிட்ட வந்து சொல்லணும்…” 

“சரிங்க ம்மா” என்று அதற்கும் தலையாட்டிவிட்டு வெளியே செல்ல எத்தனித்தவள் மீண்டும் துர்காவிடம் வந்து, “நேத்து நைட் நடந்ததுல இப்போ எனக்கு சந்தேகப்படும்படியா ஒரு விஷயம் தோணுது… சொல்லட்டுங்களா ம்மா?” என்று கேட்டாள்.

“ம்ம்ம்… சொல்லு சொல்லு” என்று துர்கா ஆவல் ததும்பிய பார்வையுடன் இருக்கையின் முனைக்கு வர,

“அவர் ஒரு பொண்ணு பேரை திரும்ப திரும்ப சொல்லிட்டே இருந்தாரு ம்மா” என்றாள் அவள்.  

“பொண்ணு பேரா? யாரு” என்று ஆர்வமாக கேட்க,  

“துர்கா… அந்த பேரைத்தான் சொல்லி பயங்கரமா திட்டிட்டு இருந்தாரும்மா… யார் அந்த பொண்ணுன்னு கேட்டதுக்கு அப்படி ஒரு பொண்ணே இல்லன்னு சொல்லி மழுப்பிட்டாரு” என்றவள் அதிமுக்கியமான அந்த தகவலை கூற, துர்காவிற்கு கடுப்பேறியது. கோபமாக அவள் பற்களை கடிக்க அந்த பெண் நிறுத்தாமல்,

“நீங்க உடனே அந்த துர்காங்குற பொண்ணை கண்டுபிடிச்சு விசாரிச்சீங்கன்னா உங்களுக்கு ஏதாச்சும் தகவல் கிடைக்கும்மா” என்றாள்.

“துர்காவைத்தானே… ம்ம்ம் விசாரிக்க சொல்றேன்… நீ அந்த துர்கான்ற பேரை வேற யார்க்கிட்டயும் சொல்லி வைக்காதே… சரியா… கிளம்பு” என்றவள் எரிச்சலுடன் அவளை அனுப்பிவிட்டு,

‘டேய் கருணா… என்னய்யா திட்டுற… மவனே நீ இப்ப உயிரோட இருந்திருக்கணும்… உன் மேல புல் டோசர் வைச்சு ஏத்தி நானே கொல்ல சொல்லி இருப்பேன்’ என்று கடுப்பாக மேஜை மீது குத்தினாள்.

அதன் பின் சில நிமிடங்களில் மருத்துவமனையிலிருந்து கருணாவின் உடற்கூறு ஆய்வறிக்கை வந்து சேர்ந்தது. அதிர்ச்சியில் ஏற்பட்ட மரணம் என்றே அதில் குறிப்பிட்டிருந்தது. மேலும் அவன் உடலில் எந்தவித காயங்கள் மற்றும் சிராய்ப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

“ஹாஸ்பெட்டில இருந்து பாடியை வீட்டுக்கு கொண்டு போயாச்சா” என்றவள் ராஜேந்திரனிடம் தகவல் கேட்க,

“இல்ல மேடம்… இனிமேதான்” என்றான்.

“சரி டைம் ஃபிக்ஸ் பண்ணிட்டு சொல்லுங்க... அதுக்கு முன்னாடி சிட்டி கமிஷ்னரை வந்து என்னை பார்க்க சொல்லுங்க” என்றாள்.

“ஓகே மேடம்” என்றவன் சொல்லிவிட்டு சென்ற சில நிமிடங்களில் கமிஷ்னர் வந்து அவள் முன்னே நின்றார்.  

“எனக்கு வேண்டிய ஒருத்தங்க மிஸ்ஸிங்… அவங்க நம்ம தமிழ் நாட்டு பார்டர்குள்ள எங்கேயோதான் மிஸ்ஸாகி இருக்காங்க… உடனே நான் அனுப்புற அவங்க ஃபோட்டோவை தமிழ்நாடு முழுக்க இருக்க எல்லா போலிஸ் ஸ்டேஷனுக்கும் அனுப்பி தேட சொல்லுங்க… பஸ் ஸ்டாண்ட்ஸ் ரயில்வே ஸ்டேஷன் ஏர் போர்ட்னு ஒரு இடம் விடாதீங்க… மால்ஸ் தியட்டர்ஸ் கூட விடாதீங்க… இன்னும் இருபத்து நாலு மணி நேரத்துக்குள்ள அவங்களை நீங்க கண்டுபிடிச்சாணும்” என்று கட்டளையாக உரைத்து தன்னிடமிருந்து நந்தினியின் படத்தை அவருடைய கைப்பேசிக்கு அனுப்பி வைத்தாள்.

“இவங்க பேரு… டீடையில்ஸ் எல்லாம்” என்றவர் அந்த படத்தை பார்த்தபடி கேட்க,  

“இவங்க பேரும் என் பேரும் ஒரே பேர்தான்… நந்தினி… ஒரு முப்பத்து எட்டு வயசு இருக்கலாம்” என்றாள்.

“அவ்வளவு வயசு இருக்குமா?”

“இருக்கும்… அப்புறம் கொஞ்சம் மனநிலை சரியில்லாதவங்க… சீக்கிரமா கண்டுபிடிங்க” என்றாள்.

“கண்டிப்பா மேடம்… ஆனா ஃபோட்டோ இன்னும் கொஞ்சம் க்ளேரிட்டியா இருந்தா நல்லா இருக்கும்” என்றவன் தெரிவிக்க,

“இந்த ஒரு ஃபோட்டோதான் இருக்கு… இன்னைக்கே கண்டுபிடிச்சாகணும்… கிளம்புங்க” என்றாள். அவரும் வேறு வழியில்லாமல் அவளிடம் பணிவாக தலையசைத்துவிட்டு வெளியேறிவிட்டார்.

மீண்டும் துர்கா தன் கைப்பேசியிலிருந்த நந்தினியின் படத்தை பார்த்து, ‘இவ எல்லாம் இன்னும் உயிரோட இருக்கிறதே தப்பு… இதுல ஃபோட்டோ வேற க்ளேரிட்டியா எடுக்கணுமாக்கும்’ என்று மனதிற்குள் கடுகடுத்துக் கொண்டாள்.

கருணா இந்த படத்தை அனுப்பிய போது முதலில் அவளுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் அவள் அடுத்த கணமே தன் ஆட்களுக்கு இந்த ஃபோட்டோவை அனுப்பி கேரளா ஆசிரமத்தில் விசாரிக்கச் சொன்னாள். அவர்கள் உடனடியாக ஆசிரமத்தில் வேலை செய்யும் ஒரு பணியாளைப் பிடித்து முழு விவரத்தையும் கறந்துவிட்டனர்.

இதெல்லாம் அவள் மதுரையிலிருந்து சென்னை வரும் இடைப்பட்ட வேளையில் நடந்து முடிந்தது.

நந்தினி உயிருடன் இருந்தாலும் அவள் தற்சமயம் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது துர்காவுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இதற்கு பிறகு அவளை விட்டு வைக்கக் கூடாது. அவளுக்குக் குணமாவதற்கு முன்பாகவே அவளைக் கண்டுபிடித்துக் கொன்றுவிட வேண்டும். அதேநேரம் இவள் ஒருத்தியைப் பிடித்துவிட்டால் போதும். அந்த பாரதியையும் லெனினையும் கூட பிடித்துவிடலாம் என்று துர்கா எண்ணமிட்டுக் கொண்டிருந்தாள்.

அதேசமயம் லெனின் அவனும் நந்தினியும் புறப்படுவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டிருந்தான். அவர்கள் அந்தமான் எடுத்து போக வேண்டிய பெட்டியிலிருந்த பொருட்களைச் சரி பார்த்து மூடி வைத்தான். அப்போது அவன் அருகிலிருந்த பாரதி,

“எனகென்னவோ மனசே சரியில்ல… நீயும் நந்தினியும் நல்லபடியா போயிடணுமேன்னு ரொம்ப டென்ஷனா இருக்கு” என்றான்.

“எனகென்னவோ உன்னை நினைச்சாதான் கவலையா இருக்கு” என்றான் லெனின் பதிலுக்கு.

“இனிமே என் வாழ்க்கையில நடக்க என்ன இருக்க… கவலைப்பட”

“ஏன் நீ இவ்வளவு விரக்தியா பேசுற… என்னாச்சு உனக்கு?” என்று வினவியபடி பாரதியின் அருகில் அமர்ந்தான் லெனின்.

“விரக்தி எல்லாம் இல்ல… எது நடந்தாலும் அதை ஏத்துக்கிற மனப்பக்குவத்துக்கு நானா வந்துட்டேன்… ஆனா எது நடந்தாலும் அது எனக்கு மட்டுமே நடக்கணும்… உங்க யாருக்கும் எதுவும் ஆகிட கூடாது” என்றவன் அழுத்தமாகக் கூற,

“அப்படி எல்லாம் பேசாதே… உனக்கு ஏதாவது ஆச்சுனா நந்தினியால அதை தாங்கிக்கவே முடியாது… அவளுக்கு இந்த நொடி நினைவு வராம இருக்கலாம்… ஆனால் ஒருநாள் கண்டிப்பா அவளுக்கு எல்லாம் நினைவுக்கு வரும்… அன்னைக்கு நீ அவ பக்கத்துல இருக்கணும்… நீயும் அவளும் சேர்ந்து வாழணும்” என்று லெனின் நம்பிக்கையுடன் உரைத்தான். 

“அப்படியெல்லாம் நடக்குமா லெனின்?” பாரதியின் குரலில் துளி கூட நம்பிக்கை இல்லை.

“கண்டிப்பா நடக்கும்… எந்த காரணத்தைக் கொண்டும் நீ உன் நம்பிக்கையை மட்டும் விட்டுடாதே”

“எனக்கும் நம்பிக்கை இருந்துச்சு… நந்தினிக்கு இப்போ நினைவு வந்திரும்… அப்போ வந்திரும்னு… ஏன்… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட அவகிட்ட நான் பேசுனேன்…

என்னை யாரோ ரோட்ல போறவன் மாதிரி பார்க்குறா லெனின்… இது எப்பவும் யூஸ்வலா நடக்கிறதுதானாலும் இன்னைக்கு என்னவோ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… அதுவும் இன்னும் கொஞ்ச நேரத்துல அவ என்னை விட்டு தூரமா போயிடுவா…

ஒரு வேளை… நானும் அவளும் இதுக்கு அப்புறம் எப்பவுமே சந்திக்க முடியாத போயிட்டா… இல்ல எப்பவுமே சேர முடியாத போயிட்டா” என்று பாரதி வருத்தப்பட்டு கண்கள் கலங்க,

“நிச்சயமா அப்படியெல்லாம் ஆகாது பாரதி… உங்க காதல் உண்மையானது… அது நிச்சயம் ஜெயிக்கும்” என்று லெனின் உறுதியாகக் கூறினான்.

பாரதி விரக்தியாகப் புன்னகைத்துவிட்டு, “நீ தெரியாம பேசுற… உண்மையான காதல்தான் ஜெயிக்கிறது இல்ல… எங்க காதலும் அந்த லிஸ்ட்ல சேர்ந்துடும் போல” என்றான்.    

“அப்படின்னா நந்தினிக்கு எப்பவுமே நினைவே வராதுன்னு சொல்றியா?”

“தெரியலேயே… வருமா வராதா? இல்ல வராமலே போயிடுமா… எதுவும் தெரியல… ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்… நான் அவளுக்கு செஞ்சதுக்கு எல்லாம் அவ என்னை நல்லா பழி வாங்கிட்டா” என்றான்.

“நிச்சயமா இல்ல… அவ மயக்கத்துல கூட உன் பேரை மட்டும்தான் சொல்லி புலம்பிட்டு இருந்தா… அவளால உன்னை மறக்கவே முடியாது”

“அவ நினைவுலயே நான் இல்ல… நீ என்னடான்னா” என்று பாரதி அயர்ச்சியுடன் கூற,

“நான் ஒன்னு சொல்லட்டுமா?” என்ற லெனின் நிதானமாக பாரதியின் முகம் பார்த்து பேசினான்.

“உனக்கும் நந்தினிக்கும் சின்ன வயசு பழக்கம்தான்… அதுக்கு பிறகு இத்தனை வருஷத்துல நீயும் நந்தினியும் ஒண்ணா இருந்ததே கிடையாது… பேசினதே கிடையாது… உங்களுக்குனு யோசிக்க எந்தவொரு ஸ்வீட் மெமரிஸூம் கூட இல்ல… ஆனா அப்பவும் நந்தினி உன்னை பைத்தியம் மாதிரி காதலிச்சிருக்கா

அப்படி பார்த்தா உன் கூட அவ வாழ்ந்தது எல்லாமே அவ கற்பனையில மட்டும்தான்… அந்த கற்பனை எப்படி இருக்கும்னு அவளை தவிர வேற யாருக்கும் தெரியாது… அவ யாருக்கிட்டயும் நெருங்கி பழகுற ஆளும் கிடையாது… தான் மனசுல இருக்க கஷ்டம் சந்தோஷம் எதையுமே அவ யார்க்கிட்டயும் பகிர்ந்துக்கிட்டதும் இல்ல… என்கிட்ட கூட அவ எதையும் சொன்னது கிடையாது

அவ உலகம் தனி உலகம்… அவ அவளுக்கான அந்த தனி உலகத்துலதான் கடந்த முப்பது வருஷமா வாழ்ந்திட்டு இருந்திருக்கா… அப்படிப்பட்டவளோட எண்ணங்களுக்குள் புகுந்து அவளுக்குள்ள புதைஞ்சு இருக்க ஞாபகங்களைக் வெளியே கொண்டு வர்றது அவ்வளவு சுலபமான காரியமில்ல பாரதி

ஆசிரமத்துல சாமி நம்மகிட்ட சொன்னது ஞாபகம் இருக்கா உனக்கு… அவ ஆழ்மனதை திறக்கிற மாதிரியான ஒரே ஒரு விஷயம்… அந்த ஒரு விஷயம் என்னன்னு நாம கண்டுபிடிச்சிட்டா அவளுக்குள்ள புதைஞ்சு இருக்க மொத்த நினைவுகளும் நாம வெளியே கொண்டு வந்திரலாம்னு சொன்னாரு இல்ல” என்று லெனின் கூற, பாரதி ஆமோதிப்பாக தலையசைத்துவிட்டு,

“அப்படி அவ ஆழ்மனசை திறக்கிற மாதிரியான விஷயம் எது?” என்று கேட்டான்.

“அதை நீதான் கண்டுபிடிக்கணும்… எனகென்னவோ நிச்சயம் அது உனக்குள்ள இருக்க ஏதோ ஒரு விஷயமாதான் இருக்கும்னு தோணுது… தேடு பாரதி… உனக்குள்ளயே தேடி பாரு… ஒரு வேளை விடை கிடைக்கலாம்” என்று லெனின் சொல்லிவிட்டு அவனை தனியே அந்த அறையில் யோசிக்க விட்டுச் சென்றுவிட்டான்.

பாரதி எத்தனை யோசித்தாலும் அவன் மூளைக்கு ஒன்றும் தட்டுப்படவில்லை. அப்போது வெகுதூரத்தில் மெலிதாக ஒரு இசைகானம் அவன் செவிகளைத் தட்டியது.

அவன் அதனை உற்றுக் கவனித்துவிட்டு அவசரமாகக் கதவைத் திறந்து பக்கத்து அறைக்குள் நுழைந்தான்.

அங்கிருந்துதான் அந்த பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அவன் சுற்றும் முற்றும் பார்க்க நந்தினி ஜன்னல் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள். விஜ்ஜுவின் மகன் சந்தோஷ் அவன் பேகை திறந்து அதிலிருந்த பொருட்களை எல்லாம் கொட்டி ஆராய்ந்து கொண்டிருந்தான்.

அவன் தன்னுடைய குறும்புத்தனத்தை நந்தினி பாரதிக்கு பரிசாக அளிக்க வைத்திருந்த பாட்டு இயந்திரத்திலும் காட்டியிருந்தான் போல. அதனைத் தாறுமாறாகத் திறந்து அவன் ஏதோ செய்ததில் அது தாமாகவே பாட தொடங்கிவிட்டிருந்தது.

“என்னடா சந்தோஷ் பண்ணிட்டு இருக்க…  உடைச்சிட்டியா?” என்று பாரதி  கேட்டதுதான் தாமதம். அவன் அந்த நொடியே தலைதெறிக்க ஓடிவிட்டான்.  

“டேய்” என்று பாரதி கடுப்பாகிவிட்டு அதனை எடுத்து, “ஸ்டாப்” என்று சொல்ல, அது நிற்காமல் பாடிக் கொண்டேயிருந்தது.

“ஸ்டாப் ஸ்டாப்” என்றவன் பலமுறை சொல்லியும் அது பாடுவதை நிறுத்தவில்லை.

அதில் ஏதோ இயந்திர கோளாறு உண்டாகியிருக்கலாம். அவன் அதனை சரி செய்ய முற்பட்டும் அது தொடர்ந்து பாட, அவனுக்குக் கோபமாக வந்தது. ஒருபக்கம் அந்த இயந்திரத்தின் மீதும் இன்னொரு பக்கம் அதனை உருவாக்கியவள் மீதும்.

“எதுக்கு இதையெல்லாம் சேர்த்து வைக்கணும்… யாருக்காக… இதெல்லாம் செஞ்சு அப்படி என்னத்த சாதிச்சா… எல்லாத்தையும் மறந்து பைத்தியக்காரியா இருக்கிறதுதான் மிச்சம்…

பார்க்காம பேசாம அப்படி என்ன காதல்… இதே என்னைத் தவிர வேற யாரையாவது அவ காதலிச்சிருந்தா குடும்பம் குழந்தைங்கன்னு சந்தோஷமாவது வாழ்ந்திருக்கலாம்” என்றவன் உணர்ச்சி பொங்கப் பேசிக் கொண்டே அதனைச் சரி செய்ய முயன்றான். ஒரு வித இயலாமை… கோபம்… ஏமாற்றம் எல்லாம் சேர்ந்து அவனை அப்படிப் பேச வைத்தது.

ஆனால் அவனால் அதனை நிறுத்த முடியவில்லை. அது தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தது. அவன் கோபத்தை ஏற்றி கொண்டேயிருந்தது. அவன் குரலும் அவன் பாடிய பாடல்களும் அந்த நொடிகளில் அவனுக்கு நாராசமாகவே ஒலித்தது.

இசையின் மீது அத்தனை பிரியம் கொண்டவன் இப்போது அதனை உச்சமாக வெறுத்தான்.

விரக்தியின் உச்சப்படி நிலையில் நின்றிருந்த அவன் மனதை வேறெதுவும் அமைதிப்படுத்த முடியாது.

அவன் ரசித்து ரசித்துப் பாடிய பாடல்கள் எல்லாம் இப்போது அவன் மனதைக் கசக்கிப் பிழிந்தன. பொறுக்க முடியாமல் அந்த இயந்திரத்தைத் தூக்கிப் போட எத்தனித்தவனின் கரங்களை வேறொரு கரம் தடுத்து பிடித்தது .

பாரதி அதிர்ந்து நிமிர, நந்தினிதான் நின்றிருந்தாள். அவன் கரங்களை அவள் கரம் பிடித்திருந்தது. அவன் இதை எதிர்பார்க்கவில்லை. உலகம் தன் சுழற்சியை  நிறுத்திவிட்டது போல அவன் ஸ்தம்பித்து நின்றான்.

பாரதியின் கரங்களிலிருந்த அந்த ஒலிப்பானை அவள் வாங்கி கொண்டாள். இன்னும் அது பாடிக் கொண்டிருந்தது. அவன் பாடிய பாடல்களை எல்லாம் வரிசையாக இசைத்துக் கொண்டிருந்தது.

உலகத்திலுள்ள அனைத்து இனத்தவருக்குமான பொதுவான மொழி இசை. அது புரியாதவர்களும் கிடையாது. அதனை ரசிக்காதவர்களும் கிடையாது. எனினும் அதுதான் அவள் மனதிடம் பேசும் மொழி என்றவன் இதுநாள் வரை அறிந்திருக்கவில்லை. ஏன் அவன் அவ்விதம் யூகித்திருக்க கூட இல்லை. அவனின் அறியாமையை என்னவென்று சொல்வது.

அவள் உணர்வுகளை எழுப்பும் மந்திர சக்தி அவனுக்குள்தான் இருந்திருக்கிறது. அவன் குரலுக்குள் இருந்தது.

காரிருளில் மூழ்கியிருந்த நந்தினியின் உலகம் அவன் பாடலை கேட்டு உயிர்த்தெழுந்தது. அவளுக்குள் நிறைந்திருந்த பயங்கர அமைதியைக் குலைத்தபடி அந்த பாடல் ஒலித்தது.

‘சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா

சூரிய சந்திரரோ…

வட்ட கரிய விழி கண்ணம்மா

வான கருமைகளோ’

ஒவ்வொரு வரியும் இருண்ட அவள் மனதிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்தைப் புகுத்தியது. அவள் நினைவுகளெல்லாம் ஒவ்வொன்றாக அவள் உணர்வுகளைத் தட்டி சென்றன. அவளை இயல்பு நிலைக்கு இழுத்து வந்தது.

தன் கண்கள் காண்பது என்ன நிஜமா? இப்போதும் கூட நடப்பதை அவனால் நம்ப முடியவில்லை. அவன் உதடுகள் பேச மறந்தன. அவன் கண்கள் இமைக்க மறந்தன. அவனோ இந்த உலகையே மறந்து அவள் முகத்தைப் பார்த்திருக்க, அவள் தன் கரத்திலிருந்த ஒலிப்பானை மிக நேர்த்தியாகத் திறந்து அதனை அணைத்தாள். அது பாடுவதை நிறுத்திவிட, அவன் அவளையும் அவள் செயலையும் வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அதனைப் படைத்தவளுக்குத் தெரியாதா அதன் சூட்சமம்!

விதியின் சூட்சம முடிச்சுகளும் கூட அப்படித்தான். அந்த முடிச்சுகளை அவிழ்க்க மிகச் சுலபமான வழிமுறைகள் இருந்தும் கூட அது நம் கண்களுக்கு புலப்படுவதில்லை.

நந்தினியின் மனதைத் திறக்கும் சாவி பாரதியின் பாடலிலிருந்தது.

அந்த அறையைத் தற்சமயம் ஓர் ஆழமான மௌனம் நிறைக்க, பாரதி மெல்ல அந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து மீண்டு, “நந்தினி” என்று உணர்வுப்பூர்வமாக அழைத்தான். அவ்வளவுதான்.

அந்த ஒரு அழைப்பில் அவள் உணர்வுகள் எல்லாம் பிரவாகமாக பொங்கிப் பெருகிவிட்டன. அவள் அந்த நொடியே அவனைக் கட்டியணைத்துக் கொண்டு அழத் தொடங்கினாள். அவன் விழிகளிலும் அந்த நொடி ஆனந்தமாய் கண்ணீர் பெருக, அவனும் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

அவள் உணர்வுகளும் அவள் மறந்த நினைவுகளும் யாவும் கண்ணீராக வெளிவந்து கொண்டிருந்தன.

உணர்ச்சிகளின் உயிரோட்டம் கண்ணீர். நமக்குள் இருக்கும் சோகங்களை… வலிகளை…  தவிப்புகளை… ஏன், சொல்ல முடியாத பல உணர்வுகளைக் கூடச் சொல்லக் கூடிய ஓர் உணர்வு அதுதான்.

வெகுநேரம் இருவரும் தங்கள் மனப்பாரங்கள் தீர அழுது முடித்தனர். 

vanitha16, shiyamala.sothy and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
vanitha16shiyamala.sothybhavanya lakshmi.nagarajan
Quote

Super ma 

You cannot copy content