You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Vilakilla Vithigal Avan - E 57

Quote

57

நந்தினி பாரதியின் தோள்களில் சாய்ந்திருந்தாள். இருவரின் விழிகளிலிருந்த கண்ணீர் மொத்தமாக அந்நேரம் வற்றிவிட்டிருந்தது. அவர்கள் இருவரின் கன்னங்களில் கண்ணீர் தடம் மட்டும் மிச்சமிருந்தன. இன்னும் மிச்சம் மீதியாக இருக்கும் அவர்களது காதல் தடங்கள் போல!

வயது, வாழ்க்கை என எல்லாமே கடந்துவிட்ட போதும் அவர்களின் காதல் மட்டும் உயிர்ப்புடன் இருந்தது. உயிரும் உணர்வுமாக அவர்களுக்குள் கலந்திருந்தது.

“என்னால இப்ப கூட நம்ப முடியல நந்தினி… நான் பாடின பாட்டை கேட்டு உனக்கு எல்லாமே நினைவு வந்திருச்சா?” என்றவன் ஆச்சரியம் கொள்ள,

“நான் இத்தனை நாள் எல்லாத்தையும் மறந்துட்டு இருந்தேனா பாரதி?” என்றவள் சிவந்த விழிகளுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்தவை எல்லாம் அவள் நினைவில் நின்றிருக்கவில்லை.

அந்த பாட்டை கேட்ட போது முதல் முதலாக பாரதி மேடையில் பாடிய அந்த காட்சிதான் அவள் நினைவில் வந்து நின்றது. வரிசையாக ஒரு படம் போல நடந்தவை எல்லாம் அவளுக்கு ஞாபத்திற்கு வர, அவளுக்கு தலை சுழன்றது.

குண்டடிப்பட்டு வீழ்ந்தது நினைவுக்கு வந்த போது அவள் விழிகளில் இருள் சூழ, சட்டென்று அழுத்தமாக அவள் செவிகளில் பாரதியின் குரல் ஒலித்து அவளை இயல்பு நிலைக்கு இழுத்து வந்தது.  

அவன் வேதனையுடன் பேசும் வார்த்தைகளை கேட்டு அவள் மனம் வருந்தியது. ஏதோ தூக்கத்திலிருந்த விழித்தது போன்ற உணர்வுடன்தான் அவன் முன்னே வந்து நின்றிருந்தாள்.

அவனுடைய நந்தினி என்ற ஓர் அழைப்பில் அவள் உணர்வுகள் எல்லாம் மடை திறந்த வெள்ளமாக பொங்கிவிட்டன.

பாரதி அவளிடம் ஒவ்வொன்றாக சொல்லவும்தான் அவளால் ஆசிரமத்தில் இருந்தவற்றை எல்லாம் ஒருவாறு நினைவுப்படுத்தி கொள்ள முடிந்தது. ஆனால் பாரதி அவளை அந்த கோரமான நிகழ்விலிருந்து போராடி காப்பாற்றியதெல்லாம் அவன் சொல்லித்தான் அவளுக்கு தெரிந்தது.

பாரதி மேலும் அவள் கன்னங்களை ஏந்தியபடி, “நீ இரத்த வெள்ளத்துல என் மடில சாய்ஞ்ச போதுதான் எனக்கு உன் காதலோட ஆழம் புரிஞ்சுது… அதுவரைக்கும் உன்னை புரிஞ்சிக்காம நான் ரொம்ப காயப்படுத்திட்டேன்” என்று வேதனையுற்றவன்,

“எனக்காக நீ உன் உயிரை கூட விட துணிஞ்சிட்டியே நந்தினி” என்று சொல்லி மனம் நெகிழ்ந்தான்.

“இல்ல பாரதி… அன்னைக்கு உன் மேல ஒரு வேளை குண்டு பட்டிருந்தாதான் நான் உயிரை விட்டிருப்பேன்” என்று அவள் தீர்க்கமாக சொல்ல, அவன் திகைப்பிலாழந்தான்.

அவனுக்கு அவள் காதலை எண்ணுகையில் அத்தனை பிரமிப்பாக இருந்தது.

“ஏன்டி என்னை இந்தளவுக்கு காதலிக்குற… நான் உனக்கு எந்தவிதத்தில தகுதியானவன்… எனக்கு சத்தியமா இப்ப கூட தெரியல” என்றவன் ஆச்சரியத்துடன் வினவ, அவனை ஆழமாக பார்த்தாள்.

“காதல் எல்லோருக்கும் ஒவ்வொரு மாதிரி… அவங்க அவங்களுக்குன்னு காதலை பத்தி தனித்தனி டெஃபனிஷன் இருக்கும்… அன்பு அழகு இப்படி என்னவா வேணா இருக்கலாம்… ஆனா என்னை பொறுத்த வரை காதலுக்கான ஒட்டுமொத்த டெஃபனிஷனுமே நீதான்… என் பாரதிதான்” என்றவள் அழுத்தம் திருத்தமாக சொல்லி அவனை அணைத்து கொண்டு தன் மனஉணர்வுகளை எல்லாம் அவனிடம் கொட்டி தீர்த்தாள். 

“பெத்த அம்மாவாலயே வெறுக்கப்பட்ட துரதிஷ்டசாலி நான் பாரதி… எனக்கு எல்லா வசதியும் இருந்துச்சு… பெரிய வீடு… பெரிய ரூம்… ஆனா எனக்குன்னு அங்கே ஒரே ஒரு உறவு கூட இல்ல… நான் பேச… சிரிக்க… ஏன் அழுதா ஆறுதல் சொல்ல கூட எனக்கு அங்கே யாருமே இல்ல

ஒரு வேளை நான் அனாதை ஆசிரமத்துல வளர்ந்திருந்தா கூட என்னை சுத்தி ஒரு நாலு பேர் இருந்திருப்பாங்க இல்ல… பேசி இருப்பாங்க இல்ல… ஆனா அந்த வீட்டுல நான் தனியாளா வளர்ந்தேன்… ஸ்கூலில் கூட என்னவோ அதனாலயே என்னால யார்கூடயும் ஒட்ட முடியல 

நான் அந்த நரகத்துல மாட்டிகிட்டி பைத்தியம் பிடிச்சு கிடந்த போதுதான் நீ என் வாழ்க்கைல வந்த பாரதி… என் வானத்துல வந்த சூரியன் பாரதி நீ… அன்புன்னா என்ன பாசம்ன்னா என்ன நட்புன்னா என்னன்னு எனக்கு எல்லாத்தையும் காட்டினது நீதான்… எனக்காக ஆதரவா பேசுன ஒரே ஆள் நீதான்… நீ வந்த பிறகுதான் என் வாழ்க்கைல சந்தோஷமே வந்துச்சு… ஒரு வேளை நீ என் கூடவே இருந்திருந்தா நான் உன் மதிப்பை புரிஞ்சிக்கிட்டு இருந்திருப்பேனோ என்னவோ?

நீ என்னை பிரிஞ்சு போன பிறகுதான் எவ்வளவு நீ எனக்கு முக்கியம்னு புரிஞ்சுது… அன்னைக்குதான்… நீ என் மொத்த உலகமாகவே மாறி போன” என்றாள்.

அவன் வியப்படங்காமல் அவள் சொல்வதை எல்லாம் கேட்டிருந்தான். “அந்த பாட்டை கேட்டதும் எனக்கெப்படி எல்லாம் ஞாபகம் வந்திருச்சுன்னு நீ கேட்ட இல்ல?” என்றவள் அந்த கேள்விக்கான பதிலையும் கூறினாள்.

“ரொம்ப வருஷம் கழிச்சு உன்னை நான் பார்த்த போது… நீ அந்த பாட்டை மேடையில பாடிட்டு இருந்த… அப்புறம் நிறைய இடங்களில் நீ அந்த பாட்டை பாடி நான் கேட்டிருக்கேன் 

அந்த பாட்டை உன் குரலில் ரெகார்ட் பண்ணி வைச்சுட்டு பைத்தியக்காரி மாதிரி எப்பவும் கேட்டுக்கிட்டே இருப்பேன் தெரியுமா?… நீ ஜெயில இருந்த காலத்துல நீ அங்கே என்ன கஷ்டபடுவியோன்னு யோசிச்சு யோசிச்சு நைட்டெல்லாம் தூக்கம் வராம இருந்த போதெல்லாம்… இந்த பாட்டை ரீபீட் மோட்ல கேட்டுட்டே அப்படியே விடிய விடிய முழிச்சிட்டு இருந்திருக்கேன்… லட்சம் தடவை கோடி தடவை அதுக்கு மேல இருக்கலாம்… எனக்கு தெரியல

இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் நீயும் நானும் என்னைக்காவது ஒரு நாள் சேர்ந்திடுவோம்னு ஒரு நம்பிக்கை வரும்… அந்த நம்பிக்கையை பிடிச்சிக்கிட்டுதான்  இத்தனை வருஷமா நான் உனக்காக காத்திட்டு இருந்தேன்… எனக்குள்ள இருந்த காதலை உயிர்போட வைச்சு இருந்தது உன் குரலும் அந்த பாட்டும்தான் பாரதி” என்றவள் அவள் உணர்வுகளை சொல்லி அவன் முகத்தை பார்த்தாள். அந்த கண்களில் அத்தனை வலிகள். அவன் இதயத்தை யாரோ அந்த நொடி அழுத்தி பிழிவது போல ரணவேதனையாக இருந்தது.

அவன் இமைக்கவும் மறந்து அவள் கண்களை பார்த்திருந்தான். அவனுடைய மொத்த உலகமும் அவள் கருவிழிக்குள் பிரதிபலித்தது.

“என்ன பாரதி… அப்படி பார்க்குற” என்றவள் குரலில் அவன் உதடுகள் தம் மௌன கோலத்தை கலைத்தன. அந்த பாரதியின் கவிதையில் இந்த பாரதி தன் காதலை உணரப்பெற்றான்.

பல வருடங்கள் கழித்து அவன் அன்று பாடினான். அவளுக்காக பாடினான். அவளை தன் கண்ணம்மாவாக எண்ணி பாடினான். 

“சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா

சூரிய சந்திரரோ…

வட்டக் கரிய விழி கண்ணம்மா

வானக்கருமை கொலோ…

பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்

நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ…

சோலை மலரொளியோ

நினது சுந்தரப் புன்னகை தான்…

நீலக் கடலலையே

நினது நெஞ்சின் அலைகளடீ…

கோலக் குயிலோசை

உனது குரலின் இனிமையடீ…

வாலைக் குமரியடீ கண்ணம்மா

மருவக்காதல் கொண்டேன்…

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா

சாத்திரம் ஏதுக்கடீ…

ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா

சாத்திரமுண்டோடீ…

மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்

காத்திருப்பேனோடீ இது பார்

கன்னத்து முத்தமொன்று…” பாடி முடித்து அவன் இதழ்கள் அவள்  இதழ்களிடம் சரண்புகுந்தன. பல வருட கால காதல் தாகம் தணிய தணிய இருவரும் அந்த முத்தத்திற்குள் மூழ்கி திளைத்தனர்.

அவர்கள் உதடுகள் வழியே அவர்களின் உயிர்கள் இடமாறின. உணர்வுகள் ஒன்றோடு ஒன்றாக கலந்து பல வருட காத்திருப்பின் வலிகளை மாயமாக மறைந்து போக செய்தன.

பாரதி மெல்ல அவள் உதடுகளை விட்டு பிரிய அவள் தேகமெல்லாம் சிலிர்த்து கொண்டது.

அவன் குரலின் இனிமையில் மயங்கி இருந்தவள் அவன் முத்தத்தில் இன்னும் ஆழமாக கிறங்கி தன்னை மறந்தாள்.

மெல்ல அந்த மயக்கத்திலிருந்து மீண்டு அவன் விரல்களுக்குள் தம் விரல்களை கோர்த்து கொண்டு, “இதுக்கபுறமாச்சும் நம்ம எந்த பிரச்சனையும் இல்லாம சந்தோஷமா இப்படியே சேர்ந்திருப்போம்தானே பாரதி” என்று கேட்டாள். அவளது கேள்விக்கு ஆம் என்று சொல்லிவிட வேண்டும் என்றுதான் அவன் உதடுகளும் துடித்தன.

ஆனால் தற்சமயம் இருக்கும் சூழ்நிலை அதற்கு சற்றும் பொருந்தாது.

அவன் மௌனத்தின் அர்த்தம் விளங்காமல், “என்னாச்சு… நான் கேட்டதுக்கு நீ எதுவும் சொல்லல… ஏதாவது பிரச்சனையா?” என்று அவள் படபடப்புடன் கேட்கவும்,

“ச்சேச்சே அப்படி எல்லாம் இல்ல… நம்ம கண்டிப்பா சேர்ந்திருப்போம் நந்தினி… இனி நம்ம வாழ்க்கையில இப்படியான பிரிவு வரவே வராது” என்றவன் அவன் விரல்களோடு கோர்த்திருந்த அவள் விரல்களுக்கு முத்தமிட்டு கூறினான். அவள் இதயத்தின் பொங்கிய இன்பம் அவள் புன்னகையின் வழியே அழகாய் வெளிப்பட்டது.

“நீ குணமானது விஜ்ஜு லெனினுக்கெல்லாம் தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவாங்க நந்தினி… முதல அவங்ககிட்ட போய் சொல்லணும்” என்றவன் அவளை முகப்பறைக்கு அழைத்து வர, அங்கிருந்த ஆழ்ந்த அமைதி சட்டென்று கலைந்து வண்ணமயமான பூ தூறலாக மாறியது.

லெனினும் விஜ்ஜுவும் தங்கள் கரங்களிலிருந்த வண்ண காகிதங்களை வெடித்து அவர்கள் மீது சிதறவிட்டனர்.

பாரதியும் நந்தினியும் வியப்படைந்தனர். அதற்குள் எப்படி தெரிந்தது. ‘நந்தினி இஸ் பேக்’ என்ற வார்த்தைகளை வண்ண தாள்களில் அவர்கள் வடிவமைத்து தொங்கவிட்டிருந்ததை பார்த்த பாரதி,

“நானே இப்பதான் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்தேன்… அதுக்குள்ள உங்களுக்கு எப்படி?” என்று கேட்க,

லெனின் சங்கடமாய் புன்னகைத்து, “உங்க ரூமுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் வந்தேன்… நீங்க கட்டிபிடிச்சு அழுதிட்டிருக்கிறதை பார்த்ததும் எனக்கு புரிஞ்சிடுச்சு… அதான் உங்க ரெண்டு பேரையும் டிஸ்டர்ப் பண்ணாம வந்து இவங்க கிட்ட எல்லாம் சொல்லி… இதெல்லாம் ஏற்பாடு பண்ணி” என்று சொல்ல அவனை தொடந்து விஜ்ஜுவும்,

“ஆமா ஆமா… ஆனா இப்போதைக்கு நீங்க ரூமை விட்டு வெளியே வருவீங்களான்னுதான் எங்களுக்கு டவுட்டே வந்திருச்சு” என்று கிண்டலாக கூற, நந்தினியின் முகம் வெட்க புன்னகை பூத்தது. பாரதியின் கரங்களை அவள் இறுக்கமாக பிடித்து கொள்ள லெனின் அவர்களை பார்த்து,

“எது எப்படியோ… நந்தினி இஸ் பேக்… இப்ப எங்க எல்லோருக்கும் அவ்வளவு சந்தோஷமா இருக்கு” என்றான்.

பாரதி அப்போது சந்தோஷிடம் சென்று, “நம்ம சந்தோஷத்துக்கு எல்லாம் காரணம் இந்த சந்தோஷ்தான்” என்று கூறிவிட்டு அவனை தம் கரங்களில் தூக்கி கன்னத்தில் முத்தமிட்டு, “தேங்க்ஸ் டா கண்ணா” என்றான்.

விஜ்ஜு ஒன்றும் புரியாமல், “அவன் எப்பவும் சேட்டைத்தானே பண்ணுவான்” என்று சொல்ல,

“அவன் செஞ்ச சேட்டைத்தான் இப்ப நந்தினியை நமக்கு திரும்பவும் மீட்டு கொடுத்திருக்கு” என்று பாரதி நடந்தவற்றை எல்லாம் அவர்களுக்கு விளக்கி கூற லெனின் மகிழ்வுடன்,

“அதான்… குழந்தையும் தெய்வமும் ஒன்னுன்னு சொல்லுவாங்க” என்றான்.

“நாரதர் கலகம் நன்மையில் முடியிற மாதிரி என் பையன் சேட்டையும் நன்மையில முடிஞ்சிருச்சு டோய்” என்று விஜ்ஜு சொல்லி சிரிக்க அவர்கள் சொல்வதை ஆச்சரியத்துடன் கேட்ட நந்தினி,

“இவன் உன் பையனா? அப்போ உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா விஜ்ஜு” என்று நந்தினி அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக கேட்க, விஜ்ஜு அப்போது தன் மனைவி சீதாவை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

சீதாவும் சரியாக அந்த சமயம் எல்லோருக்கும் இனிப்பு செய்து எடுத்து வந்தாள். 

விஜ்ஜு தன் காதல் கதையெல்லாம் நந்தினியிடம் கூறி முடிக்க அவள் முகம் சோர்வானது.

“நேத்து லவ் பண்ணவன் எல்லாம் கல்யாணம் பண்ணிட்டான்… ஆனா நாம” என்று அவள் பாரதியை பார்த்து முகம் சுருங்க,

“நமக்கும் கல்யாணம் ஆகிடுச்சு நந்தினி” என்றான் பாரதி உடனடியாக.

“எப்போ? எப்படி?” என்றவள் கண்கள் அதிர்ச்சியில் பெரிதாகவும்தான் பாரதி தான் அவசரத்தில் உளறிவிட்டோமோ என்று உதட்டை கடித்து கொண்டான்.

நந்தினி அப்போதுதான் தன் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த தாலியை பார்த்து அதிர்ச்சியானாள்.

“சாரி நந்தினி… எனக்கு வேற வழி தெரியல… ஆசிரமத்துல உனக்கு ட்ரீட்மென்ட் பார்க்கிறதுக்காக நீ என் வொய்ஃப்னு ஒரு பொய்யை சொல்லிட்டோம்… வேற வழியில்லாம அந்த பொய்யை உண்மையாக்க வேண்டி” என்று பாரதி தயக்கத்துடன் விவரித்துவிட்டு,

“உனக்கு நினைவு இல்லாத போது இப்படி செஞ்சிருக்க கூடாது… தப்புதான்” என்று அவன் குற்றவுணர்வுடன் அவளை பார்க்க, லெனின் உட்பட எல்லோரும் அச்சத்துடன் பார்த்திருந்தனர்.

அவள் என்ன சொல்லுவாளோ என்று அவர்களுக்கு கவலையாக இருந்தது. அந்த இடமே கனமான மௌனத்தை சுமந்திருக்க, அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்து விழுந்தது.

அவள் பாரதியை நிமிர்ந்து பார்த்து, “எனக்கு நம்ம கல்யாணத்தை பத்தி ரொம்ப பெரிய கனவு இருந்துச்சு” என்று சொல்ல அவன் துடிதுடித்து போனான். அவள் கரத்தை அழுந்த பற்றி கொண்டவன்,

“என்னை மன்னிச்சிடு நந்தினி… உன் கனவை உடைக்கணும்னு நான் இப்படி செய்யல” என்று வேதனையுடன் கூற,

“சேச்சே… நான் அப்படி நினைக்கல… நீ வருத்தப்படாதே பாரதி… எனக்கு உன் நிலைமை புரியுது… எது எப்படி நடக்கணும்கிறதெல்லாம் நம்ம கையிலயா இருக்கு… எனக்கு இப்போ ஒருவகையில சந்தோஷமாதான் இருக்கு… நவ் ஐம் மிஸஸ். பாரதி” என்று பெருமிதமாக கூறியவள்,

“இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி?” என்று அவள் தம் தோள்களை குலுக்கி புன்னகைக்க எல்லோரும் அவள் சொன்னதை கேட்டு புன்னகை செய்தனர்.

அந்த இடத்தை சந்தோஷம் நிறைத்தது. ஆனால் அதனை குலைக்கும் விதமாக நந்தினி அடுத்த கேள்வியை கேட்டாள்.

 “சரி… இதை தவிர வேற ஏதாவது ஷாக் இருக்கா எனக்கு?” என்று வினவ, இனிமேதானே உண்மையான அதிர்ச்சிகளே இருக்கின்றன.

அந்த நொடி யார் முகத்திலும் ஈயாடவில்லை. எல்லோரின் உதடுகளும் ஒரு சேர பூட்டி கொள்ள அங்கே சீதா நுழைந்து அந்த சூழ்நிலையை மாற்றிவிட்டாள்.

 “சாப்பிட்டு பேசலாம்” என்று எல்லோரையும் சைகையில் அழைத்துவிட்டு நந்தினியை கையோடு உணவு மேஜைக்கு இழுத்து சென்று வகை வகையாக உணவுகளை பரிமாறி அவளை அசத்தினாள். 

லெனினும் பாரதியும் நிம்மதி பெருமூச்சுவிட்டு கொள்ள விஜ்ஜு அவர்களுக்கு இடையில் வந்து, “இன்னும் கொஞ்ச நேரம்தான்… சாப்பிட்டு முடிச்சுட்டு வந்து திரும்பியும் கேட்க போறாங்க… அதுவும் தமிழ்நாட்டு சி எம் யாருன்னு கேட்டா என்ன சொல்லுவீங்க?” என்று அவர்கள் டென்ஷனை அவன் ஏற்றிவிட்டு போனான்.

இந்த படபடப்பில் இருந்த காரணத்தால் உணவு உண்பதற்கு தவிர  பாரதியும் லெனினும் வேறு எதற்காகவும் வாயையே திறக்கவில்லை. நந்தினி ரொம்ப மகிழ்வாக சந்தோஷுடன் விளையாடி கொண்டே உணவு உட்கொண்டாள்.

அவ்வப்போது சீதாவை பார்த்து அவள் சமையலை பாராட்டி தள்ளினாள். பின் போதும் போதுமென்றளவுக்கு அவள் சாப்பிட்டு முடித்து கை அலம்ப சென்ற இடத்தில் அங்கே மாட்டியிருந்த நாட்காட்டியில் தேதியும் வருஷத்தையும் பார்த்தாள்.

ஆறு வருடங்கள். அவள் உள்ளம் கலங்கியது. கண்களில் எட்டி பார்த்த கண்ணீரை உள்ளிழுத்து கொண்டவள் பின் நடந்தவைகளை யோசித்து பார்த்து,

“ஆமா அன்னைக்கே அறிவழகன் மாமா இறந்துட்டாரு… அப்போ இப்போ யாரு சி எம்?” என்று விஜ்ஜு சொன்ன அதே கேள்வியை கேட்டு வைக்க, அந்த கணமே சாப்பிட்டு கொண்டிருந்த லெனின் பாரதி இருவருக்கும் ஒன்றாக பொறையேறியது. பரிமாறி கொண்டிருந்த சீதா அவசர அவசரமாக அவர்கள் இருவருக்கும் தண்ணீர் எடுத்து கொடுத்தாள்.

நந்தினி விஜ்ஜுவை பார்த்து, “என்னாச்சு இவங்க இரண்டு பேருக்கும்… என்ன கேட்டுட்டேன் அப்படி?” என்று கேட்க,

“எனக்கு தெரியாது… நான் சாப்பிட்டு முடிச்சிட்டேன்” என்று சாப்பிட்டு கொண்டிருந்த தட்டையும் எடுத்து கொண்டு சமையலறைக்குள் ஓடிவிட்டான்.

“நான் இப்போ சிஎம் யாருன்னு தானே கேட்டேன்… அவங்க பேரை சொல்றதுல என்ன பிரச்சனை… என்ன? அந்த முகுந்தன் சி எம் ஆகிட்டானோ? அதை சொல்லத்தான் நீங்க ரெண்டு பேரும் இப்படி பயப்படுறீங்களா?” என்றவள் தானாக ஒரு யூகம் செய்து கேட்க,

லெனின் உடனே, “நீ செஞ்சுட்டு போன வேலைக்கு அந்த முகுந்தன் யார் நினைச்சாலும் சி.எம் ஆகி இருக்க முடியாது… அதுவுமில்லாம அவன் இப்ப உயிரோடவும் இல்ல” என்று சொல்ல, “என்ன? முகுந்தன் உயிரோட இல்லையா?” என்று அதிர்ச்சியானாள்.

“ஆமா” என்று ஆமோதித்துவிட்டு லெனின் எழுந்து வந்து கை அலம்பி கொண்டு நழுவி கொள்ள, நந்தினி விடுவதாக இல்லை.

“அப்போ அவன் சி எம் இல்லன்னு வேற யாரு?” என்றவள் மீண்டும் அதே கேள்வியில் வந்து நின்றாள்.

பாரதி அவளிடம் வந்து, “எல்லாம் நாங்க பொறுமையா சொல்றோம்… நீ கொஞ்சம் ரிலேக்ஸா இரு” என,

“யாருன்னு ஒரு பேரை சொல்றதுல அப்படி என்ன பிரச்சனை உங்களுக்கு?” என்றவள் புரியாமல் கேட்டாள்.

“அந்த பேர்லதானே பிரச்சனையே” என்று விஜ்ஜு தன் பங்குக்கு அவளை குழப்ப, “பேர்ல என்னடா பிரச்சனை?” என்று அவள் பதில் கேள்வி கேட்டாள்.

“ப்ச்… நீ வா… நான் சொல்றேன்” பாரதி அவள் கரம் பிடித்து அழைத்து வந்து சோபாவில் அமர வைத்து பின் மெல்ல சொல்ல தொடங்கினான்.

முதலில் அவளுக்கு அவன் சொன்னது ஒன்றும் புரியவில்லை. பின்னரே துர்கா அவள் பெயரை வைத்து ஆள்மாறாட்டம் செய்து முதலமைச்சர் பதவியேற்றிருப்பது தெள்ளத்தெளிவாக அவள் மூளைக்கு விளங்கியது.

அவளுக்கு அவற்றையெல்லாம் கேட்க பேரதிர்ச்சியாக இருந்த அதேசமயம் ஆச்சரியமாகவும் இருந்தது. வர்மா எத்தனை புத்திசாலித்தனமாக திட்டம் தீட்டியிருக்கிறார். அதுவும் துர்கா அந்த திட்டத்தை எத்தனை சாமர்த்தியமாக நிறைவேற்றி இருக்கிறாள்.

மேலும் லெனின் நந்தினியிடம் தற்சமயம் நடக்க போகும் தேர்தல் மற்றும் அவர்களை சூழ்ந்திருக்கும் பிரச்சனைகளை பற்றியும் கூறிவிட்டு இறுதியாக கொஞ்சம் தயக்கத்தோடு,

“நீ உயிரோட இருக்கிறது ஒரு வேளை துர்காவுக்கு தெரிஞ்சா அவன்  எங்க உன்னை கொன்னுடுவாளோன்னு பயந்து… உன்னை அந்தமான் கூட்டிட்டு போயிடலாம்னு முடிவு பண்ணோம்… இன்னைக்கு நைட் நம்மிரண்டு பேருக்கும் ஃப்ளைட்” என்றான்.

“ஓ! அப்போ நீயும் நானும் அந்தமான் தப்பிச்சு போறதா ப்ளேன்… பாரதி மட்டும் சூப்பர் ஹீரோ மாதிரி துர்காகிட்ட சண்டை போட்டு தமிழ்நாட்டை மீட்க போறாரு… அப்படித்தானே?” என்று எள்ளல் தொனியில் கேட்டு பாரதியை முறைத்து பார்த்தாள்.

“என்னால முடிஞ்சதை பண்ணனும்னு நினைச்சேன் நந்தினி” என்று பாரதி கூற,  

“எது… துர்காவை போட்டு தள்ளுறதா? போட்டு தள்ளிட்டு இன்னும் ஒரு பத்து வருஷம் ஜெயிலுக்கு போறதா சாருக்கு உத்தேசமா?” என்றவள் கோபமாக வினவ, பாரதியால் அவளுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

 “நம்ம இரண்டு பேரும் ஒன்னு வாழவாவது செய்யணும்… இல்ல செத்தாவது தொலையணும்… ஆனா இது இரண்டும் பண்ணாம… இடையில நின்னுகிட்டு” என்று கடுப்பாகி அவள் தலையை பிடித்து கொண்டுவிட,

“சரி இப்ப என்னதான் பண்ணலாம்னு நீயே சொல்லு” என்று லெனின் அவளிடம் கேட்டான்.

அவர்கள் இருவரையும் நிதானமாக நிமிர்ந்து பார்த்த நந்தினி, “அந்தமான் போற பிளேனே ஓகே… ஆனா மூணு பேருமே போயிடலாம்… இதுக்கு மேலயும் இங்கே இருக்க எனக்கு சுத்தமா விருப்பமே இல்ல” என்றவள் கூற, லெனினும் பாரதியும் அவள் சொன்னதை நம்ப முடியாமல் பார்த்தனர்.

“என்ன நந்தினி இப்படி சொல்ற? அந்த துர்கா உன் பேரை வைச்சு ஆள்மாறாட்டம் பண்ணி இருக்கா” என்று லெனின் சொல்ல,  

“அதுக்கு… நான் அவளை போய் பழிவாங்க சொல்றியா? இன்னும் இருக்கிற கொஞ்ச நஞ்ச வாழ்க்கையையும் இவங்க பின்னாடி ஓடி மொத்தமா முடிச்சுக்க சொல்றியா?” என்றவள் எரிச்சல தொனியில் கேட்டாள்.  

“அப்படி இல்ல நந்தினி… திரும்பியும் எலெக்ஷன்ல அந்த துர்கா ஜெய்ச்சிட்டா அவ்வளவுதான்… எல்லா முடிஞ்சிடும்… அந்த வர்மா தான் நினைச்சது எல்லாம் சாதிச்சிருவான்… தமிழ் நாட்டோட இயற்கை வளத்தை எல்லாம் ஒரு சொட்டு விடாம அழிச்சுடுவான்… அப்புறம் விவசாயமே இருக்காது… நிலத்தடி நீர் மொத்தமா வத்திடும்… நம்ம ஊரே சோமாலியா மாதிரி மாறினாலும் ஆச்சிரியபடுறதுக்கில்ல” என்று லெனின் ஆதங்கத்துடன் அவளை பார்த்து கூற,

“என்னவோ ஆகி தொலையட்டும்… அதுக்கு நீயும் நானும் என்ன பண்ண முடியும் லெனின்… அந்த வர்மா மாதிரியான ஆளுங்களை எல்லாம் ஓட்டு போட்டு ஜெயிக்க வைச்சதுக்கு இந்த மக்களுக்கு இதெல்லாம் வேணும்… ஆயிரம் ரூபா கொடுத்தா போதும்… ஒன்னும் இல்ல பத்து ஓட்டு கூட போடுவானுங்க…

இங்க இருக்க முக்கால் வாசி ஜாதியை பார்த்து ஒட்டு போடுது… இல்ல சின்னத்தை பார்த்து ஒட்டு போடுதுங்க… எல்லாம் ஆட்டு மந்தை கூட்டங்க… மழு மட்டைங்க… எவனாச்சும் மனுஷனை பார்த்து ஒட்டு போடுறான்னா… இந்த முட்டாள் மக்களுக்காக நம் வாழ்க்கையை இதுவரைக்கும் அழிச்சிக்கிட்டதெல்லாம் போதும்… இதோட இந்த விஷயத்தை முடிச்சிடுங்க… நம்ம போயிடுவோம்… அந்தமானோ இல்ல அமேரிக்காவோ… எங்கயாவது தூரமா போயிடுவோம்” என்றாள்.

பாரதி அப்போது, “நீ சொல்ற மாதிரி எல்லாம் நம்ம மக்கள் முட்டாள் இல்ல நந்தினி… நிறைய மாற்றங்கள் வந்திருக்கு… இந்த அரசியல் கட்சிகள் மேல கோபமும் ஆதங்கமும் ஒவ்வொருத்தருக்குள்ளயும் இருக்கு… ஆனா அவங்களுக்கு வேற ஆப்ஷன் இல்லை… நல்லது செய்ற யாரும் அரசியலுக்கு வர்றது இல்ல… அப்படியே வந்தாலும் இந்த கொள்ளை கூட்டம் அவங்களை அரசயிலில் விடுறதில்லை” என அவன் நாட்டின் நிலைமையை வேதனையுடன் விவரிக்க, 

“அப்படின்னா பேசாம நீயே எலெக்ஷன்ல நின்னு சி எம் ஆகிடு” என்றவள் அசால்ட்டாக கூற,  

அவன் அதிர்வான அதேநேரம், “என்னடி… கிண்டல் பண்றியா?” என்று கேட்டான்.

“நோ… ஐம் சீரியஸ்” என்றவள் லெனினிடம் திரும்பி,

“ஏன் லெனின்? பாரதி சி எம் ஆக முடியாதா என்ன?” என்று கேட்டாள்.

“முடியும்… ஆனா இப்போ இவ்வளவு நெருக்கத்துல எலெக்ஷனை வைச்சுக்கிட்டு முடியுமான்னுதான் தெரியல” என்றவன் பதில் கூற,

“ஏன் முடியாது... முடியும்… ஆனா அதுக்கு வெறும் பாரதி போதாது… அறிவழகனோட நேரடியான வாரிசு அருள் பாரதி வேணும்” என்றாள்.  

பாரதி கொந்தளிப்பாக மாறினான்.

“சத்தியமா என்னால முடியாது நந்தினி” என்றவன் திட்டவட்டமாக மறுக்க,

“அப்படின்னா சரி… நீ நான் லெனின்… மூணு பேரும் அந்தமான் போயிடலாம்… அங்கே இருக்க ஆதிவாசிகளோட ஆதிவாசிகளா நாமளும்  ஐக்கியமாகிடலாம்… அங்கேதான் லஞ்சம் ஊழல் திருட்டு இதெல்லாம் இருக்காது… நிம்மதியா இருக்கலாம்” என்றவள் சொல்ல விஜ்ஜு பக்கென்று சிரித்துவிட்டான்.

லெனின் முகத்திலும் புன்னகை அரும்ப பாரதி மட்டும் கோபமாக நின்றிருந்தான்.

“சரி நீங்க சொல்ற மாதிரி நான் அருள்பாரதியா மாறினா மட்டும்  சிஎம் ஆகிட முடியுமா? இதென்ன விளையாட்டு காரியமா?” என்றவன் கேட்க,

“விளையாட்டு காரியமா? அது என் பத்து வருஷ கால திட்டம்… அதுக்காக நான் என்னவெல்லாம் பண்ணி இருக்கேன்னு உனக்கு தெரியாது பாரதி” என்றாள். அந்த மொத்த வீடும் அவளை அதிர்ச்சியாக பார்த்தன. ஒரு வகையில் லெனினுக்கும் கூட இந்த தகவல் ரொம்பவும் புதிது.

vanitha16, shiyamala.sothy and 2 other users have reacted to this post.
vanitha16shiyamala.sothybhavanya lakshmi.nagarajanmaanya.rangarajan
Quote

Super ma 

You cannot copy content