You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Vilakilla Vithigal Avan - E21

Quote

21

விமான நிலையம் விட்டுக் கிளம்பிய முகுந்தன் நேராக வீடு வந்து சேர்ந்தான். மருத்துவமனைக்குச் சென்றால் ஊடகம் மூலமாக விஷயம் வெளியே கசிந்துவிடலாம். அதற்கான சிறு வாய்ப்பை கூட தரக்கூடாது என்று எண்ணினான்.

தலைமை காவல் அதிகாரி இருவர் முகுந்தன் அறையில் நின்றிருந்தனர். முதலமைச்சர் கடத்தல் மற்றும் பிரபல தனியார் மருத்துவமனை நிறுவனர் விஸ்வநாதன் தற்கொலை பற்றி அவர்கள் மேற்கொண்ட விசாரணைகளைக் குறித்து அவனிடம் விவரித்தனர்.

“ஹாஸ்பெட்டில சிசிடிவி புட்டேஜ் எதுவும் இல்ல… காலையில அந்த ரூம்ல ஏற்பட்ட ஆக்ஸிடென்ட்னால பழைய புட்டேஜ் புது புட்டேஜ்னு எல்லாமே அழிஞ்சிடுச்சு… பட் டெக்னிஸியன் வைச்சு பேக் அப் எடுக்க முயற்சி பண்ணிட்டு இருக்கோம்

அப்புறம் இன்னைக்கு டுயுட்டில இருந்த டாக்டர்ஸ் நர்ஸஸ் உள்ளே இருக்க பேஷன்ட்ஸ் யாரையும் வெளியே போக விடாம சீக்ரெட்டா விசாரிச்சிட்டு இருக்கோம்

நடந்த இன்ஸிடென்ட் எல்லாம் பார்த்தா டாக்டர் விஸ்வநாதன் டெத் கூட தற்கொலையான்னு டவுட்டா இருக்கு… போஸ்ட்மாட்டர்ம் அனுப்பி இருக்கோம்… ரிசல்ட் வந்த பிறகுதான் எதுவுமே முடிவு பண்ண முடியும்”   

அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டிருந்த முகுந்தன், “சி எம் கிட்னேப் பத்தி யாருக்கும் எதுவும் தெரிய கூடாது… அதுதான் இப்போ ரொம்ப முக்கியம்” என்று கூற,

“சேனல்ஸ் எல்லாம் விஸ்வநாதன் டெத் பத்தி ஃபோகஸ் பண்ணிட்டு இருக்காங்க… சி எம்க்கு அங்கே பாதுகாப்பு இல்லன்னு அவரை வேற ஹாஸ்பெட்டில் மாத்திட்டதா ஒரு டிராமாவை பண்ணிட்டோம்… இப்போதைக்கு விஷயம் வெளிய வராது” என்று அந்த இளம் ஐ பி எஸ் அதிகாரி விஜய் தெரிவிக்க,

“குட்” என்று முகுந்தன் ஆசுவாசமாக மூச்சை இழுத்துவிட்டான். ஆனாலும் அவனுக்கு  நந்தினி அடுத்து என்ன செய்வாள் என்ற படபடப்பு  உள்ளுக்குள் இருந்து கொண்டேதான் இருந்தது.

“சி எம் தேடுறதுக்கு சீக்ரெட்டா ஒரு தனி டீம் அமைச்சு இருக்கோம்… செக் போஸ்ட் எல்லாம் அலெர்ட் பண்ணிட்டோம்… ஹாஸ்பெட்டில சுத்தி இருக்க எல்லா பில்டிங்ல இருக்க சிசிடிவில ரெகார்ட்ஸ் எல்லாம் எடுத்து இன்னைக்கு காலையில இருந்து ஹாஸ்பெட்டில் விட்டு வெளியே போன வெகிக்கல்ஸோட டீடைல்ஸ் ட்ரக் பண்ணி டோல் கேட்ஸ்ல கேமராவை செக் பண்ணிட்டு இருக்கோம்” என்று அவர்கள் சொன்னதைக் கேட்டவன் கடுப்பாக,

“உங்க விளக்கமெல்லாம் போதும்… பிரச்சனை பெருசாகிறதுக்கு முன்னாடி சிஎம்மை கண்டுப்பிடிக்கிற வழிய பாருங்க” என்று அதிகாரமாக உரைத்து அவர்களை அனுப்பி வைத்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தான். 

இந்த தேடல் எல்லாம் எந்தளவு பயன் தருமென்று அவனுக்குத் தெரியவில்லை. நந்தினி அத்தனை பெரிய முட்டாள் இல்லை. அவள் திட்டம் போடுவதில் கை தேர்ந்தவள். அத்தனை சீக்கிரத்தில் சிக்கிக் கொள்ள மாட்டாள்.

ஒரு வேளை அவள் மீது கை வைத்தால் ஊடகத்தில் இந்த செய்தியை வெளிப்படுத்திவிடவும் தயங்க மாட்டாள். ஏற்கனவே சமூக ஊடகங்களில் முதலமைச்சரை அவன் தந்தையும் அவனும்தான் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக வதந்திகள் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த கடத்தல் விஷயம் தெரிந்தால் அது தங்களுக்கு எதிராகவே திரும்பிவிடலாம்.

அறிவழகனுக்குக் காவலாக மருத்துவமனையில் காவலர்கள் அதிகம் வைக்க வேண்டாமென்று கூறியதும் அவன்தான். அவருடைய தனிபட்ட பாதுகாப்பு அதிகாரிகளில் முக்கியமான சிலர் மட்டுமே அங்கே இருந்தனர். முதலமைச்சர் உடல் நிலை குறித்த விஷயங்கள் வெளியே கசிந்துவிட கூடாது என்றுதான் இப்படியொரு முடிவெடுத்தான். ஆனால் அவன் யோசனை இப்போது அவனுக்கு எதிராகவே திரும்பிவிட்டது.

தன் அப்பா சொன்னது போல நந்தினியிடம் பொறுமையாகப்  பேசுவதெல்லாம் வேலைக்கு ஆகுமா? அவள் தான் சொல்வதைக் கேட்பாளா?

‘நிச்சயம் மாட்டாள்’ என்று அவன் மனசாட்சி இடித்துரைத்தது.

நந்தினியை அந்தளவு அவன் பாடாய் படுத்தியிருக்கிறான்.

அன்று வித்யாவை அடிப்பட்டு மருத்துவமனையில் சேர்த்த பிறகு நந்தினி பின்னங்கழுத்தைப் பிடித்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்தான்.

 “அத்தை ரொம்ப சீரியஸா இருக்காங்க முகுந்தா… நான் இங்கே ஹாஸ்பெட்டில இருக்கேனே” என்று அவள் கெஞ்சிக் கதற அவன் துளியும் பொருட்படுத்தவில்லை.

“ஒழுங்கா கார்ல ஏறுடி” என்றவன் சீற,

“இன்னும் கொஞ்ச நேரத்துல பாரதி வந்திருவான்… நான் எங்கேயும் வர மாட்டேன்” என்ற அவள் பிடிவாதமாக நிற்கவும்,

“நீ இப்போ ஒழுங்கா கார்ல ஏறல… அந்த பாரதி உயிரோட இங்கே வந்து சேர மாட்டான் சொல்லிட்டான்… மெட்ராஸ் பூரா எங்க வண்டிங்க ஓடுது… அடிச்சு தூக்க சொன்னேன் வைய்யு… கால் வேற கை வேறயா துண்டு துண்டாத்தான் வருவான்” என்றவன் குரூரமாக சொல்ல அவள் அதிர்ந்துவிட்டாள்.

“ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்… அப்படியெல்லாம் பண்ணிடாதே… நான்… நா… ன் கார்ல ஏறிடுறேன்” என்றவள் தாமதிக்காமல் ஏறி அமர்ந்து கொண்டாள்.

முகத்தை மூடி அழுது கொண்டே வந்தவளை கார் கண்ணாடியில் பார்த்து வஞ்சமாக சிரித்தவன், “ஆமா உனக்கு அத்தை மேல கரிசனமா? இல்ல அந்த பாரதி மேலயா?” என்று வினவ, அவள் எதுவும் பேசவில்லை.

“எனக்கு தெரியும்டி… உனக்கு அந்த பாரதி மேலதான் இன்டிரஸ்ட்னு” என்றவன் மேலும் அவளை எரிச்சல் படுத்திக் கொண்டே வந்தான். அவள் அப்போதும் தன் மௌனத்தைக் கலைக்கவில்லை.

வீடு வந்து சேர்ந்ததும் அவள் அமைதியாக இறங்கிச் செல்ல, அவள் பின்னோடு வந்தவன் அவளைச் சீற்றமாக அறைக்குள் இழுத்து வந்து தள்ளினான்.

“ஆ அம்மா” என்று அலறியபடி கீழே விழுந்தவளிடம்,

“ஏன் டி… அந்த பாரதியோட ஒட்டி உறவாடி… முறிஞ்ச உறவை திரும்பியும் சேர்க்கலாம்னு பார்க்கிறியா? அது நடக்காது… நான் விட மாட்டேன்… அத்தையும் மாமாவையும் சேர்த்து வைக்கலாம்னு நீ போடுற திட்டமெல்லாம் ஒன்னும் நடக்காது” என்றவன் சீற்றமாகச் சொல்ல அவளுமே கோபமாக நிமிர்ந்தாள்.

“சத்தியமா நான் அப்படி எல்லாம் யோசிக்கல… எனக்கு பாரதியோட சந்தோஷமா வாழ்ந்தா போதும்” என்றவள் மெல்ல இறங்கிய குரலில்,

“என்னை விட்டுடு முகுந்தா… நான் போயிடுறேன்… பாரதியை கூட்டிக்கிட்டு எங்கயாவது தூரமா போயிடுறேன்… உன் கண்ணுல படாத தூரத்துக்கு போயிடுறேன்” என்று அவனிடம் மன்றாடவும் செய்தாள்.

 “ஒரு வேளை முன்னாடியே நீ இதை சொல்லி இருந்தா நான் யோசிச்சிருப்பேன்… ஆனா இப்ப முடியாது… நீ எனக்கு இப்போ தங்க முட்டை இடுற வாத்து… உன்னை அப்படியெல்லாம் விட முடியாது” என்றவன் சொன்னதைக் கேட்டவள் அசூயையாக முகம் சுளித்தாள்.

“சீ மனுஷனாடா நீ” என்றவளின் கோபத்தைத் துளியும் பொருட்படுத்தாமல்,

“இனிமே வீட்டை விட்டு ஓடி போகலாம்னு நினைச்ச செத்தடி மவளே” என்று கண்டித்து விட்டு திரும்பியவன் மீண்டும் மனதில் ஏதோ குறுகுறுக்க திரும்பி அவள் கைக்குள் அணைத்துப் பிடித்திருந்த பேகை பார்த்தான்.

“அந்த பேக்ல என்னடி வைச்சு இருக்க?” என்றவன் கேட்ட நொடி,

“அது” என்றவள் தயங்க அவன் உடனடியாக அந்த பேகை பறித்து, அதனைத் திறந்து உள்ளிருந்தவற்றை எல்லாம் தரையில் கொட்டினான்.

அவளுடைய பள்ளி கல்லூரி மதிப்பீட்டு தாள் மற்றும் அவளுடைய அடையாள அட்டை பாஸ் போர்ட் ஆகியவை எல்லாம் வெளியே வந்து விழுந்தன. கடைசியாக வண்ணத்தாளில் சுற்றியிருந்த ஒரு பரிசு பொருள் விழவும் நந்தினி அவசரமாக அதனை தம் கைகளில் எடுக்க முற்பட முகுந்தன் அதனை எடுத்துவிட்டான்.

“முகுந்தா அதை கொடுத்துடு” என்றவள் பதற,

“என்னடி இது?” என்றபடி அதனை பிரித்து பார்த்தவன்,

“ஜோடி புறா… இது என்ன அந்த பாரதிக்கா?” என்று எகத்தாளமாகச் சிரித்துக் கொண்டே கேட்க,

“அதை ஒழுங்கா என்கிட்ட கொடுத்துடு முகுந்தா… உடைஞ்சிர போகுது” என்றாள்.

“உன் செர்டிபிகேட் எல்லாம் கீழே கிடக்கு… அதெல்லாத்தையும் எடுக்கிறதை விட்டுட்டு போயும் போயும் இந்த பொம்மையை கேட்குற… இதென்ன உனக்கு அவ்வளவு முக்கியமா?” என்று அவன் குரோதத்துடன் அந்த பொம்மையை பார்ககலானான். 

“ஆமா… எனக்கு அதுதான் முக்கியம்… அதை என்கிட்ட கொடுத்துடு… இல்லன்னா நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்” என்றவள் சீறலாக சொன்ன நொடி,

“இந்த உயிரில்லாத பொம்மைக்கா டி இந்த சீனு ” என்று அவன் எள்ளலாக சிரித்தான்.

“உனக்குத்தான் அது உயிரில்லாத பொம்மை… ஆனா எனக்கு அதுதான் உயிர்… அந்த பொம்மைக்கு ஏதாவது ஆச்சு… உன்னை கொன்னுடுவேன் டா” என்றவள் சீறினாள்.

“அப்படியா… இது உன் உயிரா?” என்றவன் அதனை தூக்கிப் போடுவது போல் பாவனை செய்ய, “டேய்ய்ய்ய்ய்” என்று அவள் ஆவேசமாகக் கத்த, அவன் அந்த பொம்மையைக் கீழே போடாமல் அழுத்திப் பிடித்துக் கொண்டு,

“உடைக்கல… ஆனா உடைக்கத்தான் போறேன்” என்றான்.

“முகுந்தன் ப்ளீஸ்… உடைச்சிராதே… அதுல பாரதி பாடுன பாட்டை எல்லாம் ரெகார்ட் பண்ணி வைச்சு இருக்கேன்… உன்னை கெஞ்சி கேட்கிறேன்… அதை கொடுத்துடு” என்றவள் அவனிடம் கெஞ்சியபடி நிற்க, “அவன் பாட்டெல்லாம் பாடுவானா? எனக்கும் கேட்கணுமே… எப்படி இதை பாட வைக்கிறது” என்றவன் அந்த பொம்மையை உற்றுப் பார்க்க,

“சுவிட்ச் ஆன் பண்ணிட்டு ப்ளேன்னு சொன்னா பாடும்” என்றவள் சொன்ன நொடி அவனும் அதன் சுவிச்சை அழுத்திவிட்டு, “ப்ளே” என்றான்.

“சுட்டும் விழி சுடரே கண்ணம்மா” என்று அதில் பாட்டொலிக்க அதனை மௌனமாகக் கேட்டவன், “ம்மம் நல்லாத்தான் பாடி இருக்கான்” என்று கூற,

“ப்ளீஸ் முகுந்தா… அதை கொடுத்துடு” என்றவள் மீண்டும் கெஞ்ச,

“சரி கொடுத்துடுறேன்… ஆனா இது உனக்கு எல்லாத்தையும் விட முக்கியம்னு சொன்ன இல்ல? எங்கே நிருபிச்சு காட்டு பார்ப்போம்” என்றான்.

“எப்படி? எனக்கு புரியல”

 “அங்கே இருக்க உன் செர்டிபிகேட் பாஸ்போர்ட் எல்லாம் எரிச்சிடு… நான் இந்த பொம்மையை முழுசா உடைக்காம கொடுத்துடுறேன்” என்று எக்காளமாக சொல்லி சிரித்தான்.

 தன் பேக்கெட்டிலிருந்த தீபெட்டியை வேறு தூக்கி வீசி, ‘என்ன செய்கிறாள் பார்ப்போம்’ என்றவன் அவளைப் பார்த்து எள்ளி நகைத்தான். அவளை அழ வைத்து பார்க்க நிச்சயம் அவன் எந்த எல்லைக்கும் போவான் என்று அவளுக்கு தெரியும்.

சில நிமிடங்கள் ஸ்தம்பித்தவள் பின் கொஞ்சமும் கலங்காமல் அவனைத் தீர்க்கமாக பார்த்து, “இப்ப உனக்கு என்ன? என்னோட செர்டிபிகேட் பாஸ்போர்ட் எல்லா எரிக்கணும்… அவ்வளவுதானே” என்று கீழே கிடந்த தீப்பெட்டியை எடுத்து நொடி நேரத்தில் அவற்றை எல்லாம் மொத்தமாக தீவைத்துவிட்டாள்.

இப்போது அதிர்ச்சியாவது முகுந்தனின் முறையானது. “ஏ… ஏய்… என்னடி பண்ற?” என்றவன் பதறும் போதே நெருப்பு கொழுந்துவிட்டு எரிய, “போதுமா… இப்போ உனக்கு சந்தோஷமா? அதை கொடு என்கிட்ட” என்றவள் கோபமாக கர்ஜித்தாள்.

மௌனமாக அந்த பொம்மையை அவளிடம் கொடுத்தவனுக்கு நந்தினி செய்த காரியத்தை நம்பவே முடியவில்லை. இப்படியும் கூட ஒரு முட்டாள்தனத்தை யாரும் செய்வார்களா என்று அவனுக்கு வியப்பாக இருந்தது. ஆனால் நந்தினியை பொறுத்துவரை அவள் செய்ததுதான் சரி. பாரதியை தவிர்த்து அவளுக்கு இந்த உலகத்தில் எதுவுமே முக்கியமில்லை.

முகுந்தன் எதுவும் பேசாமல் அறையை விட்டு வெளியே வந்துவிட்டான்.

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா

சாத்திரம் ஏதுக்கடீ

ஆத்திரம் கொண்டவர்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடி” என்று பாடியபடி அழகாய் சுற்றிய அந்த ஜோடி புறாவை தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.

வெளியே எரிந்து கொண்டிருந்த கனலை விட அவளுக்குள் எரிந்து கொண்டிருக்கும் காதல் தீ அதிதீவிரமாகவும் உக்கிரமாகவும் கொழுந்துவிட்டிருந்தது.

vanitha16, shiyamala.sothy and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
vanitha16shiyamala.sothybhavanya lakshmi.nagarajan
Quote

Super ma 

You cannot copy content