You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Vilakilla Vithigal Avan - E30

Quote

30

ஆறு வருடங்களுக்குப் பிறகு… மத்திய சிறைச்சாலை. புழல்

தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் முகுந்தன் பித்துப் பிடித்தவன் போல அமர்ந்திருந்தான்.

தீபம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட செய்தியால் முதலில் அவனுடைய  அமைச்சர் பதவி பறிப்போனது. எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனம், மக்களின் கோபம், எல்லாவற்றிற்கும் உச்சம் வைத்தார் போல ஊழல் தடுப்பு பிரிவின் கைது என்று அவன் அரசியல் வாழ்க்கையே சூனியமாகிப் போனது.

இப்படியொரு நாள் தன் வாழ்க்கையில் வருமென்று அவன் கற்பனை கூடச் செய்து பார்க்கவில்லை. முன்னாள் அமைச்சர் என்ற வகையில் என்னதான் சிறையில் அவனுக்கு ராஜபோகமாக வசதிகள் செய்து தரப்பட்டாலும் அது சிறைதானே!

இதெல்லாம் கூட பரவாயில்லை. பதவி நீக்கம் செய்து முதலமைச்சர் கையெழுத்திட்டதாக வந்த செய்திதான் அவனை உச்சபட்ச அதிர்ச்சியில் தள்ளியது.

“செத்து போன மனுஷன் எப்படி கையெழுத்து போட முடியும்”

“ஒரு வேளை நம்ம சரியா பார்க்கலயா? மாமா உயிரோடதான் இருந்தாரா?”

“இல்ல இல்ல… அவர் செத்துட்டாரு” இப்படி பித்துப் பிடித்தவன் போலப் புலம்பித் தீர்த்தான்.

அவனுக்கு நடப்பது ஒன்றுமே புரியவில்லை. இப்போது வரை கட்சி சார்பாக ஒருவர் கூட அவனை வந்து சந்திக்கவில்லை. அவன் தந்தை தாயுமே கூட வந்து பார்க்கவில்லை.

கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்திருந்தது.

சிறப்பு நீதிமன்றம் மூன்று மாதத்தில் அவனுடைய வழக்கை விசாரித்து ஆறு வருடச் சிறைத் தண்டனையும் பத்து கோடி ரூபாய் அபராதமும் வழங்கியது.

தன்னை இந்த வழக்கிலிருந்து காப்பாற்ற யாரும் விரும்பவில்லை. தன்னை எதற்காகவோ பலிகொடுக்க பார்க்கிறார்கள் என்று தோன்றியது.

அரசியலில் பலி கொடுப்பது என்பது மிக சாதாரணம். அறிவழகனை இவன் பலி கொடுத்தான். இவனை வேறொருவன் பலி கொடுக்கிறான். அவ்வளவுதான்.

“போச்சு… என் அரசியல் வாழ்க்கை போச்சு” என்று தலையில் கை வைத்து கொண்டவன், “எல்லாம் அந்த நந்தினி சனியனாலதான்… அவளாலதான்… அடியேய் நந்தினிஈஈஈஈ” என்று ஆங்காரமாகக் கத்திக் கொண்டிருந்தவன் நாளடைவில் தனியாக அமர்ந்து பைத்தியக்காரன் போல தனக்குத்தானே பேசிக் கொள்ள ஆரம்பித்தான்.

சிறைக் காவலர்கள் உட்பட அவனை யாரும் நெருங்கவும் பயந்தனர்.

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்… எல்லாமே நான் செஞ்சதுதான்… எனக்கே திருப்பி நடக்குது”.

“யாரை நாம வெட்டனும்… ஆட்டத்தை விட்டு தூக்கணும்னு நம்மதான் முடிவு பண்றதா நாம நினைச்சிட்டு இருக்கோம்… ஆனா நமக்கு மேல ஒருத்தன் இருக்கான்… அவன்தான் நம்மளை ஆட வைச்சிட்டு இருக்கான்… ஆட்டிவிச்சிட்டு இருக்கான்…  அது புரியாம நம்மதான் எல்லாம்ங்குற அகங்காரம்… கோபம்”  இப்படியாக தனியே அமர்ந்து என்று தன் தாடியை தடவி கொண்டே விட்டத்தை பார்த்து சித்தாந்தம் பேசி கொண்டிருப்பான். அவனுடைய சிறைத்  தண்டனை முடிந்த போதும் அபராதம் கட்ட தவறிய காரணத்தால் அவன் சிறைத் தண்டனை மேலும் இரண்டு வருடங்கள் நீட்டிக்கப்பட்டது.

இது பற்றி தொலைக்காட்சி செய்திகளில் தீவிர விவாதம் நடந்து கொண்டிருந்தது.

“முகுந்தன் ஒரு வேளை ஜெயில இருந்து வந்தா அரசியல மிக பெரிய மாற்றம் நடக்கும்”

“என்ன புடலைங்காய் மாற்றம் நடக்கும்… அதெல்லாம் ஒன்னும் நடக்காது… அவர் ஜெயில இருந்து வந்தா ஆறு வருஷம் தேர்தல நிற்க முடியாது”

இப்படி பரபரப்பாக நடந்து கொண்டிருந்த உரையாடலுக்கு இடையில் இடைவேளை வந்தது. 

இந்த விவாத நிகழ்ச்சியை தொலைகாட்சியில் பார்த்திருந்த மளிகை கடை வியாபாரி ஒருவர்,  “வேற வேலை ஒன்னும் இல்ல இவனுங்களுக்கு… இதெல்லாம் ஒரு விஷயம்னு உட்கார்ந்து  பேசிட்டு இருக்கானுங்க... லூசு பசங்க” என்று  சலித்தபடி வாடிக்கையாளர் கேட்ட பொருட்களை அளந்து கட்டி கொடுத்து கொண்டிருந்தார்.

“சரியா சொன்னீங்க அண்ணே… இங்கே என்ன அரசியல் மாற்றம் வந்தாலும் நம்ம பொழைப்பு மாற போகுதா?” என்று வாடிக்கையாளரும் புலம்பும் போதே உள்ளே நுழைந்த மற்றவன், “அண்ணே ஒரு சிகரெட்” என்று காசை நீட்டினான். 

திருச்சி மாநகரின் காலை வேளை பரபரப்பில் இயங்கி கொண்டிருந்த அந்த மளிகை கடைக்குள் படக்கருவி ஒலிவாங்கியுடன் (கேமரா மைக்குடன்) நுழைந்த இளைஞர்கள் குழு, “நாங்க நம்மவர் யூ டியூப் சேனலில் இருந்து வாரோம்… உங்க கிட்ட ஒரு கேள்வி” என்று ஒலிவாங்கியை அந்த வியாபாரியிடம் நீட்டி,

“ஒரு வேளை நீங்க தமிழ் நாட்டோட சி எம் ஆகுற சான்ஸ் கிடைச்சா நீங்க என்னவெல்லாம் பண்ணுவீங்க… சொல்ல முடியுமா?” என்று  வினவினாள் அந்த குழுவின் தொகுப்பாளினி.

“ம்ம்ம்… இந்த கடையை இழுத்து மூடிடுவேன்” என்று கடுகடுத்துவிட்டு, “மைக்கை தூக்கிட்டு அந்த சேனல் இந்த சேனல்னு கிளம்பி வந்துடறாங்க… அப்படி ஓரமா போங்க ம்மா… வியாபாரத்தை கெடுக்காதீங்க” என்று கடுப்பாக துரத்திவிட்டார். 

“என்கிட்ட கேளுங்க… நான் பதில் சொல்றேன்” என்று அந்த சிகரெட் கேட்ட பார்ட்டி தன்னார்வமாக முன்னே வந்தான். 

“சரி நீங்க சொல்லுங்க… தமிழ் நாட்டு சி எம் ஆனா என்ன பண்ணுவீங்க?” 

“அத்தியவாசிய பொருளோட விலையெல்லாம் குறைப்பேன்… முதல பெட்ரோல் டீசல் விலையை குறைப்பேன்… ஆமா” என்றதும் அந்த ஒலிவாங்கியை பிடித்தவளின் புருவங்கள் நெறிந்தன.

“தமிழ் நாட்டு சி எம் ஆகி பெட்ரோல் டீசல் விலை குறைப்பீங்களா? ரைட்டு”  அந்த கேமராமேன் குழுவினர் சிரிப்பை பெரும் பாடுபட்டு கட்டுப்படுத்திக் கொண்டனர்.

“உங்க கருத்துக்கு நன்றி” என்றவர்கள் முடிக்க,

“ஆமா இந்த புரோக்ராம் எத்தனை மணிக்கு டிவில வரும்” என்று ஆர்வமாக கேட்டான்.

“இல்ல சார்… இது யூ ட்யூப் சேனல்”

“அந்த சேனல்தான்… டிவில எந்த நம்பர்ல வரும்” என்றவன் திரும்ப திரும்ப கேட்க அவனைச் சமாளித்துத் துரத்திவிட்டு வருவதற்குள் அவர்கள் குழுவிற்கு போதும் போதுமென்றாகிவிட்டது.

அதன் பின் இதே கேள்வியை விதம் விதமான மனிதர்களிடம் கேட்டு வித்தியாசமான பதில்களையும் பெற்றனர்.

“ப்ரைவட் ஸ்கூலஸ் ஒழிப்பேன்… பகல் கொள்ளை அடிக்கிறானுங்க”

“டாஸ்மாக்கே இல்லாம பண்ணிடுவேன்”

“தண்ணீர் பிரச்சனைதான் இங்க பெருசா இருக்கு… அதனால ஏரி குளத்தை எல்லாம் போர்கால அடிப்படையில சீரமைப்பேன்”  இப்படி பலரும் தங்கள் ஆதங்கத்தையும் ஏக்கத்தையும் கொட்டி தீர்க்க, சிலரிடம் வாலண்டியராக சென்று வாங்கியும் கட்டி கொண்டனர்.

“வேற வேலை இல்ல… போ ம்ம்மா”

“இதெல்லாம் ஒரு புழைப்பா உங்களுக்கு”

“இப்படியெல்லாம் கேட்டு என்ன பண்ண போறீங்க”

“த்தா…. போயிரு” என்று ஒருவர் அசிங்கமாகவும் திட்டிவிட ‘இதோடு போதும்டா சாமி’ என்று தங்கள் பேட்டியை முடித்துக் கொண்டு தேநீர்க் கடையில் ஓய்வாக அமர்ந்தனர். 

“சத்தியமா என்னால முடியல” என்று ரமேஷ் சத்தமாகச் சிரித்தான்.

“அந்த ஆளு என்னை அசிங்கமா திட்டனது உனக்கு சிரிப்பா இருக்கா?” என்று மாலு கோபமாக,

“உனக்கு மைக்கை யாருகிட்ட நீட்டிறதுன்னு விவஸ்த்தையே இல்லையா?” என்று அனிதாவும் கலாய்க்க,

“நான் என்ன தெரிஞ்சா நீட்டினேன்” என்று மாலு முக்கு சிவக்கக் கோபிக்க,  

“போதும் விடுங்க கைஸ்” கண்ணன் எழுந்த அந்த சலசலப்பை அப்போதைக்கு அடக்கினான்.

நம்மவர் குழு. அனிதா, மாலதி, ரமேஷ், கண்ணன் என்று நால்வரை கொண்ட குழு. கல்லூரி நண்பர்கள். விஸ் காம் படித்துவிட்டு வேலையில்லாமல் இந்த வேலையைச் செய்கிறார்கள்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும் படங்கள் நிகழ்ச்சிகள் என்று இயக்கி அவர்கள் யூ ட்யூபில் பதிவேற்றம் செய்வார்கள். ஆனால் இப்போது வரை பெரிதாக அவர்கள் குழுவிற்குப் பார்வையாளர்கள் கிடையாது.

கண்ணன்தான் அவர்கள் குழுவின் கேமரா மேன். ரமேஷ் எடிட்டிங். அனிதா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் பின்னி பெடலெடுப்பாள்.

இவர்கள் குழுவில் மாலு என்ற மாலதிதான் எழுத்தாளர். நிறையப் புதுமையான சிந்தனைகள் அவளிடம் இருந்த போதும் அதை மக்களிடம் ஏனோ சரியாகச் கொண்டு சேர்க்க முடியவில்லை.

 “இன்னைக்கு புரோகிரம் செம சொதப்பல்” என்று ரமேஷ் மீண்டும் ஆரம்பிக்க,

“இல்ல… எனக்கு அப்படி தோணல” என்று திட்டவட்டமாக மறுத்த மாலதி,

“எல்லோரும் பேசுன விதத்துலயே அவங்க மனசுல நம்ம அரசியல்வாதிங்க மேல எந்தளவு கோபம் இருக்குன்னு தெரியுது… எல்லோருமே கிட்டதட்ட இந்த சி எம் பதவி மேல படுஎரிச்சல இருக்காங்க… ஏதாவது ஒரு மாற்றம் வருமான்னு காத்திருந்து கிட்டதட்ட எல்லோருக்கும் கிடைச்சது ஏமாற்றம்தான்… நாட்டுல நடக்கிறதைப் பார்த்து எல்லோரும் உச்சபட்ச விரக்தில இருக்காங்கன்னு மட்டும் புரியுது

ஆனா இவங்க யாருக்கும் ஒரு விஷயம் புரியல… எல்லோரும் சங்கர் படத்துல வர முதல்வன் மாதிரி ஒருத்தன் வானத்துல இருந்து குதிப்பான்னான்னு எதிர்பார்த்துட்டே இருக்காங்க… ஆனா அப்படி ஒருத்தன் நமக்குள்ள இருந்துதான் வரணும்னு யாரும் யோசிக்குறதே இல்ல

 இந்த பேட்டியோட நோக்கமும் அதுதான்… காமெடிக்காக ஒன்னும் இந்த நிகழ்ச்சியை நம்ம செய்யல” என்று படபடவென பொரிந்தவள் பட்டென்று இருக்கையிலிருந்து எழுந்து கொண்டு,

“எனக்கு டைமாச்சு வீட்டுல தேடுவாங்க” என்று புறப்பட ஆயத்தமானாள். 

“ஏய் மாலு… சாரி சாரி கோவிச்சுகாதே” என்று ரமேஷ் அவளை சமாதானம் செய்ய முயல,

“ச்சே ச்சே அதெல்லாம் ஒன்னும் இல்ல… டைமாச்சு… அதான்…  நாளைக்கு வீட்டுல மீட் பண்ணுவோம்… எடிட்டிங் ஜாப் இருக்கு இல்ல… ஒகே பை” என்று பொதுப்படையாகச் சொல்லிவிட்டுப் உடனடியாக புறப்பட்டுவிட்டாள்.

“சும்மா சொல்றா… கண்டிப்பா கோச்சிக்கிட்டா” என்று அனிதா சொல்ல,  

“என்னடா உன் ஆளு கோச்சுட்டு போறா… நீ அப்படியே உட்கார்ந்துட்டு இருக்க” என்று கண்ணனை ரமேஷ் உசுப்பினான்.

“செய்றதெல்லாம் நீங்க செஞ்சுட்டு அடியும் உதையும் நான் வாங்கனுமா… விடுங்க… நாளைக்கு அவளே சரியாயிடுவா” என்றான்.

கண்ணனுக்கு மாலுவை பற்றி நன்றாக தெரியும். அவளைச் சமாதானம் செய்வதெல்லாம் ரொம்பவும் கடினம். அப்படி ஏதாவது முயன்றால் பிறகு அவனுக்குத்தான் சிக்கல். சிலமுறைகள் அப்படி சிக்கி சின்னாபின்னமானதால் அவன் அந்த ரிஸ்க்கெல்லாம் எடுப்பதில்லை.

வேகமாக அங்கிருந்து கிளம்பிய மாலு பத்து நிமிடத்தில் தன் வீட்டை அடைந்துவிட்டாள்.

அவள் செருப்பு கழற்றி கொண்டிருக்கும் போது, “மாலதி” என்று அழைப்பில் ஆச்சரியமாகத் திரும்பியவள்,

“தாத்தா… நீங்களா கூப்பிட்டீங்க” என்று வியப்பாகக் கேட்க,

“ம்ம்ம்” என்று தலையை அசைத்து அவளை வீட்டிற்கு வரும்படி செய்கை செய்தார்.

அதேசமயம் உள்ளிருந்து, “என்னடி... வாசலியே நிற்குற… உள்ள வா” என்று அவள் அம்மா குரல்கொடுக்க,

“இரு ம்மா… வீட்டு ஓனர் தாத்தா கூப்பிடுறார்… போயிட்டு வந்துடுறேன்” என்று வேகமாக தன் பேகை எல்லாம் கழற்றி வைத்துவிட்டு ஓடினாள்.  

மாலு குடும்பத்தினர் இவர் வீட்டிற்கு குடிவந்து பத்து வருடங்களுக்கு மேலாகிறது. ஆனால் அந்த வீட்டின் உரிமையாளரான அவர் யாரிடமும் பேசி அவள் பார்த்ததே இல்லை.

“ஏன் ம்மா தாத்தா யார்கிட்டயும் பேச மாட்றாரு?” என்று அவள் கேட்ட போதெல்லாம் “அவர் அப்படித்தான்… நீ ஏன் அங்க போற” என்றுதான் பதில் கிடைக்கும்.

 அவளுக்கு தெரிந்தவரைத் தனிமையில்தான் இருந்திருக்கிறார். உடல்நிலை சரியில்லை என்றால் கூட யார் உதவியையும் அவர் நாடியதில்லை. சொந்த பந்தம் என்று யாரும் வந்து சென்றதும் இல்லை.  

அவருடைய ஒரே மகனும் மனைவியுடன் துபாயில் இருக்கிறான். எப்போதாவது அவன் மட்டும் வந்து போவான்.  

மாலுவிற்கு அவரை பார்க்கப் பாவமாக இருக்கும். ஆதலால் கடந்த ஒரு வருடமாக அவளாகச் சென்று அவரிடம் பேசுவாள்.

.’ஹாய் தாத்தா’ ‘குட் மார்னிங் தாத்தா’ ‘ஹாப்பி பொங்கல் தாத்தா’

இப்படி அவளாக எது பேசினாலும் அவரிடமிருந்து பதில் வராது. ஒரு சின்ன சிரிப்பு கூட கிடைக்காது.

 வீட்டில் என்ன விசேஷம் என்றாலும் அவருக்கு பலகாரங்கள் எடுத்துச் சென்று தருவாள். ஆனால் அவர் அதனை வாங்கமாட்டார். வம்படியாக அவளே வீட்டிற்குள் சென்று வைத்துவிட்டு ஓடிவிடுவாள். 

அவளின் இத்தனை நாள் முயற்சிக்கு இன்றுதான் பலன் கிட்டியிருந்தது.

“என்ன தாத்தா? அதிசயமா என்கிட்ட பேசியிருக்கீங்க? ப்பா… என்னால இப்ப கூட நம்ப முடியல” என்றவள் பேசியதைப் புன்னகையாக கேட்டிருந்தவர்,

“அது… இன்னைக்கு என் பொண்ணுக்கு பிறந்த நாள்” என்றதும் மாலதி அதிர்ச்சியாக பார்த்தாள்.

“உங்களுக்கு பொண்ணு இருக்கா? சொல்லவே இல்ல”

“இருந்தா… ஆனா இப்ப இல்ல” என்று கண்கள் கலங்கியபடி சொன்னவர் அவளிடம் சுவற்றிலிருந்த படத்தைக் காண்பித்தார்.

மாலதி கண்களை வியப்பாக விரித்தாள்.

“சின்ன பொண்ணா இருக்காங்க”

“ஆமா அவ இறக்கும் போது அவளுக்கு வயசு பத்தொன்பது” என்றவர் ஒரு பையை எடுத்து மாலதியிடம் நீட்டினாள்.

“உன்னை பார்க்கும் போது அப்படியே என் மகளை அப்போ பார்த்த மாதிரியே இருக்கு… அவளும் உன்னை மாதிரிதான் துருதுருன்னு இருப்பா… எப்பவும் அவ பிறந்த நாளுக்கு ஏதாச்சும் ஆசிரமத்துக்குப் பணமா கொடுப்பேன்… இந்த தடவை என்னவோ உனக்குப் புடவை எடுத்து கொடுக்கணும்னு தோனுச்சு” என்றதும் அவள்,

“தேங்க்ஸ் தாத்தா” என்று அவள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க அவர் நெகிழ்ச்சியாக விபூதி இட்டு புடவையை அவளிடம் தந்தார்.

“நீ பேசும் போதெல்லாம்… எனக்கும் உங்ககிட்ட பேசணும்னு தோணும்… ஆனா” என்றவர் வேதனையோடு நிறுத்த,

“அழாதீங்க… ப்ளீஸ்” என்றதும் அவர் தன் முகத்தை துடைத்தபடி,

“இல்ல ம்மா… நான் ரொம்ப நேசிச்சவங்க எல்லாம் என்னை விட்டு போயிட்டாங்க… அதுக்கப்புறம் என் வாழ்க்கையே இருண்டு போச்சு” என்று வருத்தமாகப் உரைத்தார்.

“கவலைபடாதீங்க தாத்தா… பழைய விஷயத்தை எல்லாம் விடுங்க… இனிமே நான் உங்களுக்கு இருக்கேன்” என்றாள்.

ரொம்ப வருடங்கள் கழித்து அவர் வாழ்க்கையில் மீண்டும் அன்பும் பாசமும் புது பரிமாணம் கொண்டது.

“இரு மாலதி…. போயிடாதே… நான் ஸிவீட் எடுத்துட்டு வரேன்… வெயிட் பண்ணு” என்று அவர் சமையலறைக்குள் செல்ல. அவளும் பின்னோடு வந்து அவர் செய்து வைத்திருந்த கேசரியை ஆசையாக வாங்கிக் கொண்டு,

“ஏன் தாத்தா? உங்க பொண்ணு பேர் என்ன?” என்று கேட்டாள்.

“வசுமதி” என்றார் தியாகு மிதமான புன்னகையுடன்.

தனிமையும் அவரின் வாழ்க்கையில் கடந்து வந்த மிக மோசமான அனுபவங்களும் அவரை உடலளவிலும் மனதளவிலும் ரொம்பவும் தளர்த்திவிட்டது.

இயல்பை விடவும் மிகவும் முதிர்ந்தவராக தெரிந்தார்.

vanitha16, shiyamala.sothy and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
vanitha16shiyamala.sothybhavanya lakshmi.nagarajan
Quote

Super ma 

You cannot copy content