You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Vilakilla Vithigal Avan - E31

Quote

31

ரமேஷ் வீடு. நேற்றைய தினம் எடுத்த காணொளியை அவர்கள் நால்வரும் ஒன்று கூடி மும்முரமாகக் கத்தரித்துச் சரி செய்து கொண்டிருந்தனர்.

“முதல அந்த கெட்ட வார்த்தை பேசுனானே… அவனை கட் பண்ணு” என்று மாலு சொல்ல,

“ஏய் இருக்கட்டும்… அதுதான் இன்டிரஸ்டிங்” என்று ரமேஷ் சொன்னதில் அவள் முகம் சுருங்கிப் போனது.

அவள் தீவிரமாக முறைத்த போதும் ரமேஷ் அந்த காட்சியை மட்டும் கத்தரிக்கவில்லை.

“கண்ணா நீயாச்சும் சொல்லேன்” என்று மாலதி கண்ணனிடம் கேட்க,

“ஏன் இந்த விஷயத்தை இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிற மாலு… விடு… எங்களை எல்லாம் இதை விட கேவலம் கேவலமா திட்டி இருக்காங்க தெரியுமா?” என்றான்.

“கைஸ்… எடிட்டிங் முடிஞ்சிடுச்சு… வாங்க பார்க்கலாம்” என்று ரமேஷ் அழைக்க எல்லோரும் ஒன்றாக அமர்ந்தனர். குறிப்பிட்டு ஒருவன் பேசியதை மட்டும் வியப்பாகப் பார்த்து,

  “செமையா பேசுறான் பா… இந்த புரோகராம்லயே இவன் பதில்தான் இம்பிரஸ்ஸிவா இருக்கு… ரமேஷ் இவர் பேசுறதை தனியா எடிட் பண்ணி ஹைலைட்ல போடு” என்று மாலதி உரைக்க எல்லோருமே அவள் சொன்னதை ஆமோதித்தனர்.   

 நாம் சாதாரணமாகச் செய்யும் ஒரு காரியம் மிகப் பெரிய விளைவுகளின் தொடக்கமாக மாறும். அந்த இளைஞர்களுக்கும் இந்த நிகழ்ச்சி அவர்கள் வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனையாக அமையப் போகிறது.

வேலை முடிந்ததும், “ஒகே பை… நம்ம நெக்ஸ்ட் புரோகிராம் பத்தி அடுத்த மீட்ல பேசுவோம்” என்று சொல்லிவிட்டு மாலதி புறப்பட்டுவிட,

“இவளை மாத்தவே முடியாது… வேலை முடிஞ்சா கிளம்பி போயிட்டே இருப்பா… அரட்டை அடிப்போம்… ஜாலியா சிரிச்சு பேசிட்டு இருப்போம்… ஒன்னும் கிடையாது” என்று அனிதா புலம்பிக் கொண்டிருக்கக் கண்ணன் மாலதியை வாசல் வரை துரத்திச் சென்று,

“ஏ மாலு… நில்லு…நில்லுடி” என்று அழைத்தான்.

“என்ன?” என்று அவள் நின்று திரும்ப,

“எங்கயாச்சும் வெளியே போவோம் வாயேன்… அதான் வேலை சீக்கிரம் முடிஞ்சிடுச்சு இல்ல… ஜஸ்ட்  ஒன் ஆர் டூ ஹவர்ஸ்தான்… அப்படியே வெளியே சுத்திட்டு வரலாமே” என்று கேட்க அவனை முறைப்பாக ஏறிட்டவள்,

“ஆமா… நம்ம லவ் பத்தி உங்க வீட்டுல பேச சொன்னேனே… பேசிட்டியா?” என்றாள்.

காற்று ஃபோன் பலூன் போல அவன் முகம் சுருங்கி போக, “அது வந்து” என்றவன் தடுமாறியதைப் பார்த்தவள்,

“அப்போ சொல்லல… இதுல நம்ம இரண்டு பேரும் வெளியே சுத்தலாம்னு எந்த தைரியத்தில கூப்பிடுற நீ” என்றாள் கோபமாக.

“ஊர் உலகத்துல இருக்க லவர் எல்லோரும் அம்மா அப்பாகிட்ட சொல்லிட்ட்ட்ட்டுத்தான் வெளியே சுத்துறாங்களா?”  

“நம்ம ஏன் மத்த லவர்ஸ் மாதிரி இருக்கணும் கண்ணா? நம்ம வித்தியாசமா இருப்போமே”

“வித்தியாசம்ன்னா எப்படி... உங்க அம்மா அப்பாவை கூட்டிட்டு வேணா நான் சினமா பார்க்ன்னு சுத்தவா” என்று அவன் கடுகடுக்க,

“டேய்” என்றவள் கடுப்பாகக் கத்தினாள்.

“பின்ன என்னடி… வெளிய போலாம்னு கூப்பிட்டா ஓவராத்தான் சீனை போடுற” என்றான். அவன் பொறுமை பறந்திருந்தது.

அவனை நெருங்கி கரத்தை பற்றியவள்,  “எனக்கு உன் நிலைமை புரியுது கண்ணா… பட் ப்ளீஸ் என்னையும் நீ கொஞ்சம் புரிஞ்சிக்கோ… வீட்டுல இருக்கவங்ககிட்ட முதல நம்ம காதல் விஷயத்தை சொல்லுவோம்… அதுவரைக்கும் இந்த வெளியே சுத்துறதெல்லாம் வேண்டாம்” என்று நயமாக அவனிடம் கூற,

“சரி வீட்டுல சொல்லி நம்ம காதலை அவங்க ஏத்துக்கலன்னா” என்று சந்தேகமாகக் கண்ணன் அவள் கரத்தை இன்னும் அழுத்தமாக பற்றி கொண்டான்.

“ஏத்துக்கலன்னா… ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிப்போம்… அவ்வளவுதானே” என்றவள் பட்டென்று சொன்னதில் அவன் வாயடைத்து நிற்க, “அப்புறம் நீ நினைச்ச மாதிரி ஃபீரியா யாரை பத்தியும் பயப்படாம வெளியே சுத்தலாம்… சரியா? இப்ப நான் வீட்டுக்கு கிளம்பணும்… பை” என்று சாமர்த்தியமாக தன் கையை அவன் கரத்திலிருந்து விடுவித்துக் கொண்டு நழுவிவிட்டாள்.

“அசால்ட்டா சொல்ல்லிட்டு போறா” என்று பலமாக மூச்சை இழுத்துவிட்டவன், “இவகிட்ட லவ்வை சொல்லி ஒகே பண்ணவே… மூணு வருஷமாகிடுச்சு… இதுல வீட்டுல சொல்லி அவங்க சம்மதிச்சு… ம்ஹும்…என் வாழ்க்கையில காதல் அத்தியாயமே கிடையாது… உஹும் எனக்கு இல்லை எனக்கு இல்லை…” என்று திருவிளையாடல் நாகேஷ் பாணியில் புலம்பிக் கொண்டான்.

அரசு பேருந்தில் சென்று இறங்கிய மாலதி வீட்டிற்கு நடந்தாள். திடீரென்று இருபக்கமும் உயர உயரமான கட்அவுட்கள் முளைத்திருந்தன. ஒரு பக்கம் தேச பிரதமரும் மற்றொரு பக்கம் தமிழகத்தின் முதலமைச்சரும் நின்றிருக்க அவற்றையெல்லாம் பார்த்தவளுக்கு எரிச்சலாக வந்தது. 

இதில் முதலமைச்சரின் சாதனைகள் என்று பொரிக்கப்பட்டிருந்த நீண்ட பட்டியல் கொண்ட பதாகையைப் பார்த்து அவளுக்கு உச்சபட்சமாக கடுப்பேறியது.

கடந்த ஆறு வருடத்தில் தமிழ் நாட்டின் அரசியல் மாற்றங்களில் மொத்த உலக சினிமாவின் திரைப்படங்கள் கூட தோற்றுப் போகும். நொடிக்கு நொடி பரபரப்பு! திருப்பங்கள் என்று அரசியல் அதகளங்கள் பல அரங்கேறின.

முகுந்தனின் கைது… அறிவழகனின் மரணம்… ஆட்சி மாற்றம்… ஆட்சி களைப்பு… என்று அடுத்தடுத்து நடந்ததெல்லாம் அதிர்ச்சிகள்தான். ஆனால் எல்லாவற்றிருக்கும் உச்சமாக முகம் தெரியாத பெண் ஒருத்தி ஆட்சி பீடத்தில் அமர்ந்து அவள் செய்துவரும் அட்டூழியங்கள்தான்.

இதில் இன்னும் மூன்று மாதத்தில் தேர்தல் வர இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பிரதமர் தமிழ்நாட்டுக்கு வருவதன் பின்னணியில் ஏதேனும் பெரிய சூழ்ச்சிகள் இருக்க கூடுமா என்ற யோசித்தபடி வீட்டின் வாயிலை அடைந்தாள். அங்கே வாசலிலேயே தியாகு முறைப்பாக எதையோ ஆழ்ந்து பார்த்திருப்பதைப் பார்த்து துணுக்குற்று திரும்பிப் பார்த்தாள்.

முதலமைச்சர் கட்அவுட் வானை தொட்டும் உயரத்தில் நின்றிருந்தது.

“என்ன தாத்தா… அந்த கட்அவுட்டை பார்த்து உங்களுக்கும் கடுப்பா இருக்கா?” என்று மாலு கேட்க,

“ம்ம்ம்… வாசலிலேயே வைச்சு இருக்கானுங்க” என்று கடுகடுக்க,

“அவங்க இஷ்டத்தை எங்க தோணுதோ அங்க வைச்சுட்டு போயிடுவாங்க தாத்தா… என்னத்த சொல்ல” என்றவள் பதிலுரைக்க, அவரும் விரக்தியாக தலையசைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

அவர் அடக்கி வைத்திருந்த வேதனையை யாரிடமும் சொல்ல முடியாமல் மனதிற்குள் புழுங்கித் தவித்தார்.

அடுத்து ஒரு வாரமும் அந்த கட்அவுட் அங்கேதான் இருந்தது. அதனைப் பார்க்கக் கூடாது என்பதற்காகவே அவர் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தார்.

“என்னாச்சு தாத்தா? ஏன் ஒரு மாதிரி டிப்ர்ஸ்ட்டா இருக்கீங்க… திரும்பியும் மூடியா மாறிட்டீங்க… அன்னைக்கு என்கிட்ட நல்லாத்தானே பேசுனீங்க” என்று  மாலதி அவ்வப்போது அவரை தேடி வந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அடுத்து வந்த நாட்களில் பெரிதாக எந்த வேலையும் இல்லாத காரணத்தால் தன்னுடைய பெரும்பாலான நேரத்தை தியாகுவுடன் செலவழித்தாள்.

மாலுவின் வருகையால் அவருடைய தனிமையும் கவலைகளும் ஓரளவு விலகியிருந்தது. அவரும் கொஞ்சம் இயல்பாக மாறியிருந்தார். தான் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களை எல்லாம் பரண் மீதிருந்த தூசி தட்டி எடுத்தவர்,  

“இந்த புக்ஸ் எல்லாமே நல்லா இருக்கும் மாலதி… ராகி ரங்கராஜன், புதுமைப் பித்தன், ஜெயகாந்தன், ஜெயமோகன் எல்லாமே நல்ல நல்ல கதைகள்… படிச்சு பாரு.. உனக்கு பிடிக்கும்” என்றவர் சொல்லி அவற்றைக் கொடுக்க,

“தேங்க்ஸ் தாத்தா” என்று வாங்கி கொண்டு அந்த புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தவள் அவற்றுக்கு இடையில் சிக்கியிருந்த ஒரு போட்டோ வெளியே வந்து விழ அதனைக் கையில் எடுத்து,

“இது என்ன போட்டோ தாத்தா?” என்றாள்.

அதனை வாங்கி பார்த்தவருக்கு கோபமேறியது. அந்த போட்டோவில் பாரதி வசுமதியுடன் அருகில் துர்காவும் நின்றிருந்தாள்.

அவர் கண்களில் கோபம் தெறிக்க, மாலதி ஆச்சரியமுற்றாள்.

“தாத்தா…. அப்படியே நம்ம சிஎம் ஜாடையிலயே இருக்கா இந்த பொண்ணு” என்று துர்காவை காட்டி சொல்ல, தியாகு உடனடியாக அந்த போட்டோவை இரண்டாகக் கிழித்தார்.

“தாத்தா என்ன பண்றீங்க?” என்று மாலதி அதிரும் போதே போட்டோவிலிருந்து துர்காவின் பாகத்தை துண்டு துண்டாக கிழித்து போட்டார். அவரின் சீற்றம் அப்போதும் அடங்கவில்லை.

“எல்லாம் இவளாலதான்… நந்தவனமா இருந்த எங்க குடும்பத்தை பாலைவனமா மாத்திட்டா… என் பொண்ணை கொன்னுட்டா… பாரதி வாழ்க்கையை அழிச்சுட்டா” என்றவர் படபடப்பாகப் பேச, மாலதிக்கு ஒன்றும் புரியவில்லை.

அத்தனை வருடங்களாக அடக்கி வைத்திருந்த வேதனையெல்லாம் கோபமாகப் பெருகியது. அந்த நொடியே இரத்த அழுத்தம் அதிகரித்து மயங்கி சரிய, “தாத்தா… என்னாச்சு தாத்தா?” என்று மாலதி அவரை தாங்கி பிடித்துக் கொண்டாள்.

தியாகுவின் மனழுத்தத்திற்கும் கோபத்திற்கும் காரணமான துர்காவோ அச்சமயம் சொகுசு வாகனத்தில் தம் பாதுக்காப்பு படைகள் புடைச்சூழ திருச்சியில் நடைபெறும் பிரமாண்டமான தமிழ் மாநாட்டிற்கு வந்து கொண்டிருந்தாள்.

சிறப்பு விருந்தினராகப் பிரதமர் வர்மா ஜீயும் வந்து சேர்ந்ததில் அந்நகரமே விழா கோலம் பூண்டது. மாநாட்டைச் சுற்றியுள்ள இடங்கள் தீவிரமான பாதுக்காப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன.

வழிமுழுதும் நிற்க வைக்கப்பட்ட கம்பீரமான பதாகைகளைப் பார்த்த அவளின் இரத்தமெல்லாம் சூடேறியது. இன்னும் மூன்று மாதத்தில் தேர்தல் வர இருக்கையில் ஒரு வேளை இந்த பதவி மரியாதையெல்லாம் நம் கையை விட்டு போய் விட்டால்…   

பயத்தில் தேகமெல்லாம் உஷ்ணமாக தகித்தது. இதயத்தின் படபடப்பு அதிகரித்தது. லேசாக உடலில் மின்னலெனச் சிறு நடுக்கம் ஓடி மறைந்தது. அவர்கள் கார் மாநாட்டை நெருங்கிவிட்டதால் கண்களை அழுந்த மூடி மெது மெதுவாக தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

கனவு போல இருந்தது.

அதிர்ஷ்ட காற்று திடீரென்று அவள் பக்கம் வீசிற்று. தமிழகத்தின் முதலமைச்சர் பதவி. பதவியேற்ற அந்த நிமிடம்… மகுடம் சூட்டிய ராணியைப் போல… அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

பதவி ஒரு பெரும் போதை… அதனைக் கொஞ்சமாக சுவைத்துவிட்ட பின் அதுவும் நம்மை விடுவதில்லை. நாமும் அதை விடுவதில்லை.

இன்னும் இன்னும் வேண்டுமென்று கேட்கிறதே. புகழுக்கும் பதவிக்கும் ஆசைப்படாத மனிதன் உண்டா என்ன?

பிறந்த ஊரை விட்டுப் பிழைக்க வந்து கட்டுமான பணி செய்தது எல்லாம் கண்முன் காட்சிகளாக ஓடின.

அம்மாவின் மரணத்திற்கு பிறகு பிணந்தின்னி கழுகுகளாக அவளைச் சூழ்ந்த ஆண்களின் முகங்களை எல்லாம் இப்போது நினைத்தாலும் அருவருப்பில் உடம்பெல்லாம் எரிந்தது.

அந்த முகங்களை எல்லாம் இத்தனை வருடங்களுக்கு பிறகும் அவளால் மறக்க முடியவில்லை. அதுவும் அந்த எஞ்சினியர் நடந்து கொண்ட விதத்தை யோசித்தால் இப்போதும் அவளின் நாடி நரம்பெல்லாம் புடைத்தது.

அவளை துரத்தி வந்து தவறி விழுந்து சுவற்றை பிடித்துக் கொண்டு, “ப்ளீஸ் ப்ளீஸ்… என்னை காப்பாத்து… நான் செஞ்சது தப்புதான்… காப்பாத்து துர்கா” என்றவன் கெஞ்சிய  போது,

“போடா… நான் உன்னை காப்பாத்தனுமா… சாவுடா” குரூரமாகச் சிரித்துவிட்டு அவன் தலையில் அருகிலிருந்த கல்லைத் தூக்கிப் போட்டாளே!.

அவள்… அவள்தான் நிஜமான துர்கா!

தன்னை காப்பாற்றிக் கொள்ள அந்த எஞ்சினியரை பலி வாங்கியவள் அதற்கு பிறகு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தன் சுயநலத்திற்காக உடன் இருந்தவர்களையெல்லாம் பலி வாங்கிவிட்டு இந்த இடத்தில் வந்து நிற்கிறாள்.

முதலமைச்சர் வாழ்க! முதலமைச்சர் வாழ்க!

மாநாட்டின் கூட்டத்திலிருந்து எழுந்த கோஷங்களைக் கேட்டு அவள் உடல் சிலிர்த்துக் கொண்டது. கோடி முறை கேட்டாலும் இதே சிலிர்ப்பும் சிலாகிப்பும் ஏற்படும் அவளுக்கு!  

ஐந்து வருடம் முடிய போகிறது. அடுத்து வரும் தேர்தலில் தான் தோற்றே போனாலும் தமிழகத்தின் முதலமைச்சராகச் சரித்திரம் தன் பெயரை நினைவுகூரும் என்று எண்ணிய அடுத்த நொடி

“முதலமைச்சர் நந்தினி வாழ்க” என்ற கோஷங்கள் கேட்டு சுருக்கெனக் குத்தியது.

‘சரித்திரம் நிச்சயம் உன் பெயரை நினைவில் கொள்ளாது… யாருடைய அடையாளத்தில் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாயோ அவள் பெயரைத்தான் நினைவு கொள்ளும்’ என்று தலையில் தட்டியது அவள் மனசாட்சி. 

vanitha16, shiyamala.sothy and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
vanitha16shiyamala.sothybhavanya lakshmi.nagarajan
Quote

Super ma 

You cannot copy content