You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Vilakilla Vithigal Avan - E37

Quote

37

பச்சை வண்ணம் போர்த்திய சிறுமலை அத்தனை அழகு. ஆனால் அத்தகைய அற்புத அழகை ரசிக்கும் மனநிலையில் மாலதி இல்லை. கொண்டை ஊசி போல ஆபத்தான வளைவுகளில் அவர்கள் வாகனம் வளைந்து நெளிந்து மேலேறிச் சென்றதில் அவள் தலை கிறுகிறுத்தது.

மேலே செல்ல செல்ல  இன்னும் சாலையில் வளைவுகள் மோசமாகிக் கொண்டே போனதில் இரண்டு மூன்று முறை குமட்டிக் கொண்டு வாந்தி எடுத்ததில் அவள் உடலின் மொத்த சக்தியும் வற்றிப் போனது போலானது.

கண்ணனுக்கு அந்த பயணம் மிக சுவாரிசயமாக தொடங்கிய போதும் மாலதி சிரமப்படுவதைக் கண்டு அவன் மனம் பொறுக்கவில்லை.

“இவ்வளவு கஷ்டப்பட்டு மேலே போகணுமா மாலு… பேசாமா திரும்பிடலாமா?” என்ற கேட்டவனை முடிந்த மட்டும் முறைத்தவள்,

“ஒரு விஷயத்தை ஆரம்பிச்சா எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பின்வாங்க கூடாது” என்று உறுதியாகக் கூறியவளைப் பார்த்து அவனுக்குக் கோபமாக வந்தது.

“அப்படி யாருடி அந்த ஆளு… அவரை தேடி கண்டுபிடிச்சு நம்ம என்ன பண்ண போறோம்?” என்றவன் பதிலுக்கு கடுகடுக்க,

“ஆளுன்னு சொல்லாதே கண்ணா… மரியாதையா பேசு” என்றாள்.

“சரிங்க மேடம் சொல்லல… யாருங்க மேடம் அவர்ர்ர்ர்ரு” என்று அழுத்தி கலாய்ப்பது போல் கேட்கவும்,

“நான் முதலயே சொல்ல வந்தேன்… நீதானே கேட்க மாட்டேன்னு சீனை போட்ட… இப்ப எனக்கு சொல்ற மூடு இல்ல… நீ நேரா பார்த்து வண்டியை ஒட்டு” என்றவள் உதட்டைச் சுழித்துவிட்டு பார்வையைத் திருப்பிக் கொள்ள, அவன் முகம் சுணங்கி போனது.

இருவரும் இப்படி ஏட்டிக்கு போட்டியாக உரையாடிக் கொண்டே மலையேறி வந்திருந்தார்கள். சில இடங்களில் கார் செல்லாவதற்குச் சரியான சாலைகள் இல்லாததால் இருவரும் இறங்கி நடந்து பாரதியைப் பற்றிய விசாரணையை மேற்கொண்டனர். அதிலும் கண்ணன் வேண்டா வெறுப்பாகத்தான் அந்த வேலையைச் செய்தான். அதுவரையில் அவர்களுக்கு எந்த தகவலும் கிடைத்தபாடில்லை.

அப்போது நாசியை துளைத்த மிளகு வாசமும் பசுமையாக செழித்து வளர்ந்திருந்த மிளகு கொடியையும் பார்த்தபடி அந்த தோட்டத்திற்குள்  நடந்தவளின் கண்ணில்பட்டது ‘நந்தினி மிளகு எஸ்டேட்’ என்ற பிரம்மாண்டமான பெயர் பலகை. ஐம்பது அறுபது ஏக்கர் பரப்பளவிலான பெரிய தோட்டம் அது. 

உடனடியாக மனதில் ஒரு யோசனை உதிக்க, அங்கே வேலையில் ஈட்டுப்பட்டிருந்த பணியாளர்களை நோக்கிச் சென்றவள் இம்முறை பாரதியின் படத்தை காண்பித்து விசாரிக்காமல்,

“இந்த எஸ்டேட் ஒனர் யாரு?” என்று வினவினாள்.

“எதுக்கு கேட்குறீங்க?” என்ற அந்த நபர் புருவத்தை நெறிக்கவும்,

“இல்ல… நந்தினி எஸ்டேட்னு போட்டிருந்துது… எனக்கு தெரிஞ்ச நந்தினியான்னு ஒரு சின்ன டவுட்ல… ஆவங்களைப் போய் பார்க்கலாம்னு… எஸ்டேட் ஓனர் இந்த ஊர்தானா இங்கதான் இருக்காங்களா?”

“ஆமாம் இந்த ஊர்தான்… அதோ மேல பாருங்க… அதுதான் சாரோட வீடு” என்றவன் கை காண்பித்துவிட்டு நகர்ந்துவிட்டான்.

அவன் காட்டிய திசையில் மிக அழகானதாகவும் சிறியதாகவும் ஒரு எஸ்டேட் பங்களா தெரிந்தது.

ஏதோ ஒரு சிறிய வெளிச்ச புள்ளி கிடைத்தது போல உற்சாகமாக புறப்பட்டவள், பாரதியின் புகைப்படத்தைக் காண்பித்து அவர்களிடம் உறுதிப்படுத்திக் கொள்ள மறந்துவிட்டாள். ஒரு வேளை அப்போதே கேட்டிருந்தால் அவள் தேடலுக்கான விடை கிடைத்திருக்கலாம்.

அவசர அவசரமாகக் கண்ணனைக் கிளப்பிக் கொண்டு அந்த பங்களாவை வந்தடைந்தாள். வண்ணமயமான பூக்களால் பூத்துக் குலுங்கிய தோட்டத்திற்கு இடையிலிருந்த அந்த பங்களாவின் அழகை ரசிப்பதையும் தாண்டி அவள் உள்ளம் பாரதியை காண ஆவல் கொண்டது என்றால் அது மிகையல்ல.

ஆனால் ஒரு சில வினாடிகளிலேயே அவள் எதிர்பார்ப்பு முழுவதும் ஏமாற்றத்தில் முடிந்தது. ஜிப்பா அணிந்து கொண்டு எதிரே வந்த நபரைப் பார்த்து அவள் முகம் வாடிப் போனது. பார்க்க முப்பதுக்கும் நாற்பதுக்குமான இடைப்பட்ட தோற்றம்தான். 

“நாங்க பாரதியை பார்க்கணும்… அவரு இருக்காரு இல்ல”

அவர்கள் இருவரையும் ஏற இறங்கப் பார்த்த அந்த நபர் சில வினாடிகளுக்குப் பின்,

“அப்படி யாரும் இங்கே இல்ல” என்ற பதில் சொல்ல அவள் சோர்ந்து போனாள்.

சட்டென்று அவள் ஏதோ நினைவு வந்தவளாக அந்த ஜிப்பா நபரிடம், “சார் இந்த வீடியோல இருக்கவருதான் பாரதி… நீங்க இவரை இந்த ஏரியால எங்கயாச்சும் பார்த்த மாதிரி ஞாபகம் இருக்கா?” என்றவள் விசாரிக்கவும்,

“அப்படி எதுவும் எனக்கு ஞாபகம் இல்ல” என்று பதில் சொல்லிவிட்டு, “கிளம்புறீங்களா?” என்று வாசலை சுட்டிகாட்டவும் அவள் முகம் இருளடர்ந்து போனது.

வெற்றியின் விளிம்பைத் தொட்டுவிட்ட பரவசத்திலிருந்தவளுக்கு மீண்டும் சுவற்றில் அடித்த பந்து போல துவங்கிய இடத்திற்கே வந்துவிட்ட அபரிமிதமான ஏமாற்றம்.

“வாட்ச் மேன்… யாரு என்னன்னு கேட்காம உள்ள விட்டுடுவீங்களா?” என்று வேறு அவன் காவலாளியை கடிந்து கொள்ள,  சிலை போல அங்கேயே நின்றிருந்தவளின் கையை பிடித்து கண்ணன் வெளியே இழுத்து வந்துவிட்டான்.

காரில் ஏறாமல் அயர்ச்சியாக நடந்து வந்து அங்கிருந்த ஒரு பெரிய பாறையில் அமர்ந்து கொண்டாள். சிலுசிலுவென குளிர்ந்த காற்று வீச, தம் கைகளை இறுகி பிணைத்தபடி கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்தாள்.

பாரதியை தேடி அவள் வகுத்த பாதையின் புள்ளிகளில் எங்கேயோ ஒரு புள்ளியைத் தவறவிட்டது போல அவள் மனதிற்குத் தோன்றியது.

‘வழித்தடம் மாறி வந்துவிட்டோமோ?’ என்ற தன் மனதைத் தானே கேட்க,

‘எதற்காக சம்பந்தமே இல்லாத ஒரு மனிதரை நீ தேடி அலைய வேண்டும்’ என்று அவள் மனம் அவளைத் திருப்பி கேட்டது போன்ற பிரமை.

நிறையக் கேள்விகளுக்குப் பதில்களே கிடையாது. சம்பந்தமே இல்லாமல் நாம் செய்யும் பல காரியங்கள் நம் உள்ளுணர்வின் தூண்டுதல்கள். அவளுக்கும் அப்படித்தான்.

இப்படியான தீவிர சிந்தனைக்குள் மூழ்கிய மாலதியின் தேகத்தில் கதகதப்பாகத் தீண்டிய கண்ணனின் அணைப்பை உணர்ந்த மறுகணம்,

“ஏய் என்ன பண்ற? கையை எடு” என்று முரண்டி விலகியவளை அவன் பொருட்டாகவே மதிக்கவில்லை.

“சும்மா சீன் போடாதே… இப்ப என்ன பண்ணிட்டாங்க உன்னை” என்று கடுப்படித்தவன், “அந்த பக்கம் பாருடி… எவ்வளவு அழகா இருக்கு இந்த இடம்னு” என்று அவன் கை காட்டிய திசையிலிருந்து இயற்கையின் ரம்மியமான அழகு மாலதியையும் கவர்ந்திழுத்தது.

மாலை சூரியனின் மறைவை மலை மீதிருந்து பார்ப்பதே தனி அழகுதான். அவளிருந்த மனநிலையில் இத்தனை ரம்மியமான இயற்கை  சூழ்நிலையை அவள் உள்ளம் கிரகிக்கவே இல்லை.

பெண்மகளின் வெட்கம் போலச் சிவந்து ஜொலித்த வானமும் பசுமையில் போர்த்திய அந்த மலைசிகரின் கம்பீரமும் ஒன்றோடு ஒன்று இயைந்து அற்புதம் செய்தன. அந்த காட்சியைப் பார்த்தவளுக்கு பாரதியை பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்ற தொய்வு சற்றே விலகி போனது. 

“நம்ம நினைச்சது நடக்காட்டியும் இப்படியொரு அழகான இடத்தை பார்த்த திருப்தியாவது மிஞ்சியதே” என்றவள் மனம் கொஞ்சமாக ஆறுதல் அடைந்து கொண்டது.

மெல்ல வானத்தில் இருள் கவ்வத் தொடங்க அவர்களின் வாகனம் சிறுமலை விட்டு இறங்கத் துவங்கியது. சாலையின் ஆபத்தான வளைவு ஒன்றில் எதிரே வந்த வாகனம் மோதுவது போல வேகமாக வரவும் கண்ணன் ஸ்டியரிங்கை பலமாக ஒடித்துத் திருப்ப, அவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. 

****

புழல் சிறைச்சாலை

முகுந்தனை அங்கிருந்த வீடியோ கான்பரென்ஸ் அறைக்குச் சிறைக் காவலர்கள் அழைத்து சென்றனர்.

அவனும், “எனக்கு ரிலீஸ் ஆர்டர் வந்திருச்சா என்ன? அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லையே” என்று தனக்குத்தானே சொல்லிச் சிரித்துக் கொண்டு வந்தான்.

முகுந்தனை அந்த வீடியோ கான்பரென்ஸ் அறைக்குள் அனுப்பிவிட்டு காவலர்கள் வெளியே தேங்கி நின்றுவிட, அவனுக்கு குழப்பமாக இருந்தது.

நீதிபதிகள் கைதிகளைக் காணொளி மூலமாக சந்தித்து அவர்கள் சிறைகாவலை நீட்டிப்பதைக் குறித்து கருத்துக் கேட்பதற்காகச் சிறைக்குள் இத்தகைய வசதி அமைக்கப்பட்டிருந்தது. இதனால் ஒவ்வொரு முறையும் கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்து வரும் நேரம் மிச்சம்.

ஆனால் தண்டனை பெற்ற தன்னை இங்கே அழைத்து வரும் நோக்கம் என்னவாக இருக்கும் என்று அவனுக்குச் சுத்தமாகப் புரியவில்லை. காவலர்களும் அதிகாரிகளும் கூட வெளியே நின்றுவிட்டது அவனுக்கு வியப்பாக இருந்தது.

அவன் மட்டுமே அந்த அறையிலிருந்தான். எதிரே இருந்த திரை ஒளிர்ந்து துர்காவின் பிம்பம் அதில் பிரசன்னமான மறுகணமே தீயிலிட்டது போல அவன் விழிகள் உஷ்ணமாகத் தகித்தன.

“அடியே துர்கா… நம்பிக்கை துரோகி” என்று அவன் கர்ஜிக்கவும் அவள் விரக்தியாகப் புன்னகைத்தாள்.

உணர்ச்சி துடைத்த முகத்தோடு அவனை ஆழமாக பார்த்தவள், “நானா முகுந்தன் நம்பிக்கைத் துரோகி… உங்க மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்க” என்று வினவ,

“ஆமாண்டி நீதான்டி நம்பிக்கை துரோகி… உன்னை என் கையால கண்டம் துண்டமா வெட்டி போட்டாத்தான் என் மனசு ஆறும்” என்றவன் சீற்றமாக பேச அவள் அமைதியான பார்வையோடு,

“கொல்லுங்க முகுந்தன்… உங்க கையால சாகுறது கூட பாக்கியம்தான்” என்றாள்.

“என்னடி நடிக்கிறியா? அடிங்க… ***” என்றவன் மிக மோசமான கெட்ட வார்த்தைகளைக் கொண்டு அவளை நிந்திக்கவும்,

“இவ்வளவுதானா… இல்ல இன்னும் ஏதாச்சும் இருக்கா… மொத்தமா சொல்லிடுங்க… கேட்டுக்கிறேன்” என்றவள் அப்போதும் தன்னுடைய பொறுமையை விட்டுக் கொடுக்கவில்லை.  

அவனுக்குத்தான் கோபத்தில் மூச்சு வாங்கியது. அவள் முகம் ஒளிரும் திரையை நார் நாராக கிழிக்க வேண்டும் போல பற்றி கொண்டு வந்தது. அவனின் தேகம் மொத்தமும் தீயாக எறிய அவளைக் கடுகடுக்கப் பார்த்தவனிடம்,  

“ஏன் என்னை புரிஞ்சிக்க மாட்றீங்க முகுந்தன்… நான் வேற வழியில்லாமதான் இந்த பதவில இருக்கேன்… வர்மாஜீதான் என்னை தேவையில்லாம இதுல  மாட்டிவிட்டாரு… இல்லாட்டி போனா எனக்கு என்ன தகுதி இருக்கு… தமிழ்நாட்டு சி எம்மா இருக்க” என்றதும் அவன் ஏளனமாகச் சிரித்துவிட்டு,  

“ஏய்… ஏய்… போதும்டி…  உன்னை பத்தி எவனுக்கு தெரியுமோ இல்லையோ… எனக்கு தெரியும்டி” என,

“எனக்கு தெரியும்… நீங்க இப்படித்தான் சொல்வீங்கன்னு…  ஆனா நீங்க தமிழ் நாட்டு சி எம் ஆகணும்னு உங்களைவிட அதிகமா ஆசைபட்டது நான்தான்… அதுக்காக நான் கொலை கூட பண்ணேன்

அந்த வசுமதியை ஏமாத்தினேன்… பாரதியை நம்ப வைச்சு ஏமாத்தி கொலை கேசுல மாட்டிவிட்டேன்… எல்லாமே உங்களுக்காகதான் செஞ்சேன்… ஆனா நீங்களே என்னை புரிஞ்சிக்காம பேசுறீங்க முகுந்தன்” என்றவள் தன் கண்ணீரை துடைத்தபடி பேசவும் அவன் குழம்பி நின்றான். 

அவள் சொல்வதில் உண்மை இருக்குமோ என்றவன் யோசித்த ஒரு கணம், அவளுக்கு போதுமானதாக இருந்தது.

“வர்மா ஜீதான் எல்லாத்துக்கும் காரணம்… உண்மையை சொல்லணும்னு நந்தினியோட பேர்ல இருக்கிறதுக்கே எனக்கு அசிங்கமாவும் அவமானமாகவும் இருக்கு

ஆனா இதெல்லாம் நான் யார்கிட்ட சொல்வேன் சொல்லுங்க…  தினம் தினம் நான் எனக்குள்ளேயே புழுங்கி புழுங்கி அழுதிட்டு இருக்கேன்… நேரடியா வந்து உங்களை பார்க்க கூட முடியாம  தவிச்சிட்டு இருக்கேன்” அவள் வீசிய பரிதாப அலையும் அவள் விழிகளில் நிரம்பி வழிந்த வேதனையும் அவன் மனதில் இரக்கத்தைச் சுரந்தது.

அவன் மௌனமாக நின்றிருப்பதை பார்த்தவள், “நீங்க இப்பவும் என்னை நம்ப மாட்டீங்கன்னு தெரியும்… பரவாயில்ல… உங்களை பொறுத்தவரைக்கும் நான் துரோகியாவே இருந்துட்டு போறேன்… ஆனா ஒன்னு முகுந்தன்… நான் உங்க மேல வைச்சு இருந்த நேசம் மட்டும் பொய்யில்லை” என்ற போது முகுந்தன் அவளைக் கூர்ந்து பார்த்து,

“என்னை உண்மையிலேயே நீ நேசிக்கிறன்னா என்னை காப்பாத்தா தானடி முயற்சி பண்ணி இருக்கணும்” என்று கேட்கவும்,

“நான் உங்களை காப்பாத்த முயற்சி பண்ணலன்னு உங்களுக்கு தெரியுமா?” என்று கோபமாக ஆரம்பித்தவள், “உங்களுக்கு எதிரா அந்த நந்தினி ரொம்ப ஸ்ட்ராங்கான ஆதாரத்தைத் திரட்டு வைச்சிட்டு போயிட்டா… என்னால இந்த கேசுல எதுவுமே செய்ய முடியல… ஆனா அதுலயும் ஒரு நல்ல விஷயம்… நீங்க நந்தினியையும் பாரதியையும் கொன்ன வீடியோ வெளியே வராம நான் எப்படியோ தடுத்திட்டேன்… ஆனா அந்த ஆதாரத்தை மட்டும் மக்கள் பார்த்திருந்தா” என்றவள் சொல்லி நிறுத்த அவன் அதிர்ந்தபடி,

“நந்தினியும் பாரதியும் கொலை செஞ்ச வீடியோ ஆதாரமா? என்னடி ஒளர?” என்றவன் கேட்க, “உண்மையாத்த்தான் சொல்றேன்” என்றாள் துர்கா.

முகுந்தன் குழப்பமாக யோசித்துவிட்டு, “இல்ல இல்ல… அப்படியொரு ஆதாரம் இருக்க வாய்ப்பே இல்ல” என்றவன் உறுதியாக கூற,

“இப்போ இல்ல… ஆனா இருந்துச்சு… நீங்க நந்தினியையும் பாரதியையும் சுட்டு கொன்ன அந்த வீடியோவை நான் பார்த்தேன்” என்றாள்.

அவனுக்கு தலை கிறுகிறுத்தது. குழப்பமாக யோசிக்கத் துவங்கியவன் சட்டென்று,

“அதெப்படி இருக்க முடியும்… நான் நந்தினியை மட்டும்தானே சுட்டேன்… நான் பாரதியை சுடவே இல்லயே” என,

“அப்போ அன்னைக்கு இரண்டு பேரையும் தீர்த்துகட்டிட்டதான் சொன்னது” என்று வினவியபடி அவனை ஆழமாகப் பார்த்தான்.

 “அந்த சமயத்துல புலி உறுமுற சத்தம் கேட்டதால என் வேலையைப் புலி பார்த்துக்கும்னு நான் அவனை அப்படியே விட்டுட்டு வந்துட்டேன்” என்றான்.

“அப்போ நீ பாரதியை கொல்லல?” என்று கேட்டவளின் குரலில் அப்பாவித்தனமும் பரிதாபமும் தொலைந்து அதிகாரம் தலைதூக்க,

“இப்படி எல்லா வேலையும் அரைகுறையா செய்றதாலதான்டா நீ இந்த நிலைமையில இருக்க” என்றவள் கடுப்பாகக் கூற அவன் அதிர்ச்சியாக நிமிர்ந்தான். அந்த திரை அணைந்துவிட்டிருந்தது.

அப்போதுதான் அவளின் சூழ்ச்சி அவனுக்கு விளங்கியது. எதிரே நிற்பவர்களை நொடி நேரத்தில் தன் வசப்படுத்தவுத்திலும் ஆட்டி வைப்பதிலும் துர்காவிற்குத் தனித்திறமையே இருந்தது.

அவர்களின் முதல் சந்திப்பிலும் கூட அவன் துர்காவின் வசப்பட்டது அப்படித்தான். இந்த யோசனையோடு நின்றவனைச் சிறைக்குள் தள்ளிவிட்டு காவலாளிகள் சென்றுவிட்டனர்.

துர்காவுக்கு வேண்டியது பாரதி இறந்தவிட்டானா என்ற தகவல். அதற்காகத்தான் அவள் இத்தனை பசப்பு வேலை பார்த்தாளா என்று கடுப்பானவன் சுவற்றை ஆக்ரோஷமாகக் குத்தி, “ஏ துர்கா… உன்னை” என்று கோபமாகக் கத்தி கூப்பாடு போட தொடங்கினான்.

அவன் இப்படி கத்துவதும் கூப்பாடு போடுவதும்  காவலாளிகளுக்கும் கைதிகளுக்கும் பழக்கமான விஷயம்தான். ஆனால் அவன் இப்படி ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டிருக்கும் போது மூர்க்கமாக அவன் பின்னங்கழுத்தைப் பிடித்து யாரோ அவன் தலையைப் பலமாக சுவற்றில் மோதினர். அவன் கதறலும் அழுகையும் அங்கிருந்த யாரும் கண்டுகொள்ளவில்லை.

vanitha16, shiyamala.sothy and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
vanitha16shiyamala.sothybhavanya lakshmi.nagarajan
Quote

Super ma 

You cannot copy content