You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Vilakilla Vithigal Avan - E39

Quote

39

வீட்டிற்குத் திரும்பிய பின் மாலதி சிறுமலையில் நடந்தவற்றை விரிவாக தியாகுவிடம் விவரித்தாள்.

“எனக்காகவா நீ அவ்வளவு தூரம் பாரதியை தேடி போன” என்றவர் உள்ளம் நெகிழ்ந்து கண்கள் கலங்கினார்.

“எமோஷனல் ஆகாதீங்க தாத்தா… நான் உங்களுக்காக தேடி போனது உண்மைன்னாலும் எனக்கே பாரதி சாரை பார்க்கணும்னு போல இருந்துச்சு… ஆனா அவரு ஏன் உங்களை தெரியாதுன்னு சொன்னாருன்னுதான் எனக்கு ஒரே குழப்பமா இருக்கு” என்றாள்.

“பாரதி அப்படி சொல்லி இருக்கான்னா அதுக்கு ஏதாச்சும் முக்கியமான காரணம் இருக்கும் மாலதி” என்று தியாகு சொல்ல,

“அப்படியா தாத்தா சொல்றீங்க” என்று மாலதியும் தீவிரமாக யோசித்துவிட்டு, “ஆனாலும் ரொம்ப கஷ்டமா இருக்கு… அவ்வளவு தூரம் போயிட்டு… கடைசில நினைச்சது நடக்காம” என்றவள் வருத்தப்பட்டு முகத்தை சுருக்க, தியாகு அவள் தோளில் ஆதரவாக தட்டி கொடுத்து,

“பாரதி நல்லா இருக்கான்னானு தெரிஞ்சுக்கணும்னுதான் நான் ஆசைப்பட்டேன்… அது ஒருவகையில நடந்திடுச்சு… எல்லாமே உன்னாலதான்… எனக்கு அதுவே போதும்… இந்த விஷயத்தை இதுக்கு மேல விட்டுடு மாலதிமா” என்றவர் உரைக்க அவளும் பெரு மூச்செறிந்து சம்மதமாகத் தலையசைத்தாள்.

ஆனால் இனி அவர்களே விட்டாலும் இந்த பிரச்சனை அவர்களை விடப் போவதில்லை.

மாலதியின் நண்பன் ரமேஷ் அவளுக்கு அழைத்து, “ஏய் மாலு… கொஞ்சம் உடனே கிளம்பி வர்றியா?”என்றான் பரபரப்பாக!

“ஏன் என்னாச்சு ரமேஷ்?”

“நீ கொஞ்சம் வீட்டுக்கு வாயேன்” என்று அவன் வேண்டுதலாக கேட்கவும், “சரி வர்றேன்” என்ற அவளும் விரைவாக அவன் வீட்டை சென்றடைந்தாள்.

அங்கே கண்ணன் அனிதா என்று அவர்கள் குழுவினர் அனைவரும் குழுமியிருந்தனர்.

“என்ன விஷயம் கண்ணா?” என்று மாலதி அவனிடம் விசாரிக்க,

“ஒன்னும் தெரியல… ரமேஷ்தான் ஃபோன் பண்ணி வரச் சொன்னான்” என்க, மூவரும் ரமேஷை பார்த்தனர்.

அவன் உடனடியாக முகநூல் பக்கங்களில் அதிகமாகப் பகிரப்பட்ட அவர்கள் சேனலை பற்றித் தெரிவித்தான். நேற்று மட்டும் பார்வையாளர்கள் லட்சங்களைக் கடந்திருந்ததாகவும் தெரிவிக்க, எல்லோருமே இந்த தகவலை கேட்டு சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர்.

 ‘நீங்கள் தமிழகத்தின் முதலமைச்சரானால்’ என்ற நிகழ்ச்சிதான் மக்களுக்கு இடையில் காட்டு தீயாக பரவியிருந்தது. அதிலும் பாரதியின் பதிலைத்தான் மக்கள் அதிகமாக தங்கள் முகநூல் பக்கங்களில் பகிர்ந்தனர்.

“ஏய்… செம்ம ஹாப்பியான விஷயம்… இதை நம்ம செலப்பிரட் பண்ணணும்” என்று கண்ணன் குதூகலிக்க

“டேய்… அதுக்குள்ள ரொம்ப அவசரபடாதே… நான் அடுத்து சொல்ல போற விஷயத்தையும் கேட்டுடு” என்ற ரமேஷ் மேலும்,

“நம்ம சேனலை ப்ளாக் பண்ணிட்டாங்க” என்றதும், எல்லோர் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள் படர்ந்தன.

“என்னடா சொல்ற?”

“ம்ம்ம் ஆமா… அதுவுமில்லாம மூணு பெரிய ஆபீசர்ஸ் வந்து நம்ம சேனலை பத்தி விசாரிச்சாங்க” என்று கூறி மேலும் மேலும் அதிர்ச்சியை கிளப்பினான்.  

“ஆமா யாரு அந்த ஆபீசர்ஸ்… என்ன விசாரிச்சாங்க?” என்று கண்ணன் குழப்பமாக வினவ,

“தெரியலடா… எல்லோரும் போலிஸ் ஆபீசர்ஸ்தான்… ஆனா யூனிபார்ம்ல இல்ல” என்றவன் உரைக்க,

“கார்ட் வாங்கி செக் பண்ணியா?” என்று மாலதி தெளிவாகக் கேட்டாள்.

“வாங்கி செக் பண்ணேனே… எல்லாமே ஹயர் கிரேட் ஆபீசர்ஸ்… சி எம்க்கு கீழே நேரடியா வேலை செய்றவங்களாம்” என்றதும் மாலதியின் முகம் குழப்பமாக மாறியது.  

“என்னது?! சி எம்மா?” என்று வாயை பிளந்த அனிதா,

“நான் அதுக்குதான் அப்பவே சொன்னேன்… இந்த தஞ்சாவூர் மேட்டரு பத்தியெல்லாம் கவர் ஸ்டோரி எல்லாம் பண்ண வேண்டாம்னு கேட்டீங்களா… நம்ம பண்ண ஸ்க்ரிப்ட் எல்லாமே அரசாங்கத்துக்கு எதிரானது” என்று அவளாக ஒன்றை யூகம் செய்து புலம்பி தீர்க்க,

மாலதி அவளை முறைத்துவிட்டு, “போதும் நிறுத்துறியா… முதல ரமேஷ் முழுசா சொல்லி முடிக்கட்டும்” என்றவள், “நீ சொல்லு ரமேஷ்… அவங்க அப்படி என்ன விசாரிச்சாங்க” என்று கேட்டாள் .

“அன்னைக்கு… நீங்க சி எம் ஆனான்னு ஒரு ப்ரோக்ராம் பண்ணோம் இல்ல… அந்த வீடியோ காண்பிச்சுத்தான் விசாரிச்சாங்க… எனக்கு அல்லு இல்ல” என்றவன் கூற,

“அந்த ப்ரோக்ராம்ல விசாரிக்க என்ன இருக்கு?” என்று கண்ணன் புரியாமல் கேட்க,

“அந்த ஷூட்டை நம்ம எங்க எடுத்தோம்னு கேட்டாங்க… முக்கியமா அதுல பேசுனவங்களை பத்தி எல்லாம் வேற கேட்டாங்க… அது மட்டுமில்லாம அரசாங்கத்துக்கு எதிரா நாம இனிமே நம்ம சேனலில் எதுவும் போட கூடாதுன்னு வேற மிரட்டிட்டு போனாங்க” என்றதும் எல்லோர் முகமும் பேயரைந்தது போலானது.

மீண்டும் அனிதா, “நான் அப்பவே சொன்னேன் இல்ல” என்று ஆரம்பித்துவிட்டாள். ஆனால் அவர்களின் கேள்விகளுக்கும் விசாரணைகளுக்கும் பின்னணியில் வேறெதோ காரணம் இருக்கிறது என்று மாலதிக்குத் தோன்றியது.

ஒரு வேளை இந்த விசாரணை பாரதி சம்பந்தப்பட்டதாக இருக்குமோ என்று சந்தேகம்தான் அவளுக்கு.

அவள் இவ்வாறு தீவிரமாக யோசித்திருக்கும் போதே ரமேஷ் கவலையாக, “திரும்பியும் வந்து விசாரிப்போம்… உங்க டீம்ல இருக்க எல்லோரும் இருக்கணும்னு சொல்லிட்டு போனாங்க… எனக்கு நடுங்கி போச்சு” என்றான். 

உடனடியாக மாலதி கண்ணனை தனியே அழைத்து சென்று தன்னுடைய சந்தேகத்தை கூறவும், “என்ன சொல்ற மாலு… இதுக்கும் அந்த பாரதிக்கும் என்ன சம்பந்தம்… முதல யார் அந்த பாரதின்னு எனக்கு தெளிவா சொல்லி புரிய வை” என்றான்.

“நான் எல்லாமே உனக்கு சொல்றேன்… ஆனா இப்போ வேண்டாம்… நான் முதல தியாகு தாத்தாவை பார்த்து விஷயத்தை சொல்லிட்டு வரேன்” என்றவள் அவசரமாக ஓடிவிட, கண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.

******

பாரதி சிறுமலை அகத்தியர் கோவிலருகிலிருந்த உச்சி பாறையில் தீவிரமான யோசனையில் நின்றிருந்தான்.

மலைக்கு கீழுள்ள நகரம் அவன் பார்வைக்கு சிறு வெளிச்ச புள்ளிகளாகப் படர்ந்திருந்தன. உச்சியிலிருந்து அவை மினுக் மினுக்கென்று மின்னுவதை கண் இமைக்காமல் பார்த்திருந்தவனை ஆகாயத்திலிருந்த நட்சத்திரங்கள் யாவும் வியப்பாக நோக்கிக் கொண்டிருந்தன.

துரோகம், வஞ்சம், குரோதம் என்று அவனை அகலபாதாளத்தில் தள்ளிவிட்ட விதியிடம் சவால் விட்டு நின்றிருந்த அவனின் நம்பிக்கைதான் அவைகளின் ஆச்சரியமாக இருக்கும்.

அவன் கடந்த வந்த சோதனைகளும் போராட்டங்களும் அவனை இன்னும் இன்னும் பலப்படுத்தவே செய்திருக்கிறது. சொல்ல போனால் அந்த பாறைகளோடு பாறையாக இறுகி இருந்தான். உறுதியாக நின்றிருந்தான்.

அவனின் ஆழ்ந்த பார்வையையும் சிந்தனையையும் கவனித்தபடி வந்த லெனின், “எதுக்கு பாரதி அவ்வளவு உயரத்தில நின்னுட்டு இருக்க… இறங்கி வா… உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என,

“என்னை தேடி இரண்டு பேர் வந்தாங்க… அதானே” என்றான்.

“ஏ ஆமா… அவங்க துர்காவோட ஸ்பையா இருப்பாங்களோன்னு எனக்கு ஒரு டவுட்?”

“இல்ல… அவங்க தியாகு மாமாவுக்கு தெரிஞ்சவங்க” என்றான்.

“ஆனா அந்த வீடியோ… அது பேஸ் புக் பேஜ்ல எல்லாம் வைரலாகி இருக்கு” என்றவன் கூறியதும் அவனை குனிந்து பார்த்தவன்,

“நான் திருச்சி போன போது நடந்த சம்பவம்… ஆனா அது இப்படி ஒரு தாக்கத்தை உண்டாக்கும்னு நான் கொஞ்சம் கூட யோசிக்கல… ஒரு வகையில இதுவும் நமக்கு சாதகமானதுதான்” என்றவன் பாறையின் மீதிருந்து இறங்கியபடி, “துர்கா என்னை கண்டுபிடிக்கிறதுக்கு இது கொஞ்சம் ஈசியா இருக்கும் இல்ல” என்றான்.

“என்ன சொல்ற நீ?”

“ம்ம்ம்… அவ என்னை தேடி கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி நானே அவ முன்னாடி போய் நிற்கணும்” என்றான்.

“அது ரொம்ப பெரிய ரிஸ்க் பாரதி” என்று லெனின் பதட்டப்பட,

“இதெல்லாம் நம்ம முன்னாடியே யோசிச்சதுதானே” என்றவன்,

“இதுவரைக்கும் என்னை ஒப்புக்கு சப்பாணியா வைச்சுட்டு என் விளையாட்டையும் சேர்த்து  அவங்க விளையாடுனாங்க… இனிமே நான் விளையாட போறேன்… என் விளையாட்டு எப்படி இருக்கும்னு நான் காட்ட போறேன்” என்றவன் சவலாக கூறி கொண்டிருந்த நொடியில் துர்கா தன் காரியதரிசி ராஜேந்திரனை வெளுத்து வாங்கி கொண்டிருந்தாள்.

“உங்களுக்கு ஒரே ஒரு நாள்தான் டைம் ராஜேந்திரன்… அதுக்குள்ள பாரதியை கண்டுபிடிச்சு என் கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்தணும்” என்றாள் அதிகாரமாக.

“சரிங்க மேடம்” என்று அவனும் பவ்யமாக சொல்லிவிட்டு அகல,  துர்கா தன் பேசியிலிருந்த பாரதியின் காணொளியை மீண்டும் மீண்டும் ஓடவிட்டு பார்த்தாள்.

அவளுக்குள் எரிந்திருந்த கோபத் தீ இன்னும் அதிகமாகக் கொழுந்துவிடத் தொடங்கியிருந்தது. அவள் நினைவுபடுத்திக் கொள்ளவே விரும்பாத விஷயங்கள் எல்லாம் வரிசைக்கட்டி காட்சியாகக் கண் முன் வந்தன.  

பாரதியின் வீட்டிலிருந்து ஆசிரமத்திற்கு வந்த பிறகு துர்கா மனதளவில் ரொம்பவும் நொறுங்கிப் போயிருந்தாள்.

முதல் காதல் தோல்வி ஏற்படுத்திய காயங்கள். மனவலிகள். அதிலிருந்து மீண்டு வர அவள் தனக்குள்ளாகவே நிறையப் போராட வேண்டியதாக இருந்தது. இரவெல்லாம் போர்வைக்குள் அழுதழுது கரைந்தாள்.

மேலும் அந்த புதுவிதமான சூழ்நிலைக்குள் தன்னை பொருத்திக் கொள்ள ரொம்பவும் முயன்றாள். ஆனால் அது அத்தனை சுலபமாக இல்லை. யாரும் அவள் முகம் பார்த்து புன்னகைக்கவும் மறுத்தனர். ஒருவிதமான இறுக்கம் எல்லோர் முகத்திலும் படிந்திருந்தது.

அவர்களுள் ஒருத்தி மனநிலை பாதிக்கப்பட்ட, ‘எனக்கு பயமா இருக்கு… இருட்டா இருக்கு’ என்று இரவெல்லாம் சத்தமிடுவாள்.

அவளின் அந்த ஓலக்குரலைக் கேட்கும் போதெல்லாம் துர்காவுக்கு ஏதோ ஒரு இனம் புரியாத நடுக்கம் உண்டாகும். அடிவயிறெல்லாம் கலங்கிப் போகும்.

அந்த இடம் அவளுக்கு ஒருவிதமான அச்சுறத்தலை ஏற்படுத்தியிருந்த நிலையில்தான் ஆசிரமத்தின் பெண் நிர்வாகி கனிவாக பேசி அவளைக் கொஞ்சம் இயல்பு நிலைக்குக் கொண்டு வந்திருந்தார்.  

“மேலே உனக்கு என்ன படிக்கணும்னு ஆசைப்படுறியோ அதை படி… அதுக்கான எல்லா உதவியும் எங்க நிறுவனத்துல செஞ்சு தருவாங்க… நீ நல்லா படிக்கிற பொண்ணுன்னு எனக்கு தெரியும்… உன் படிப்புல முழு கவனத்தை செலுத்து” என்று பேசி அவளுக்கு நம்பிக்கை கொடுத்தார்.

மெல்ல துர்காவுக்குள்ளும் மனமாற்றம் ஏற்பட்டது.

இனி வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் படிப்பில் மட்டுமே முழு கவனத்தைச் செலுத்த வேண்டுமென்ற மனநிலைக்கு வந்திருந்தாள் துர்கா.

அந்த பெண் நிர்வாகியின் மீது அதீத நம்பிக்கையும் மரியாதையும் உண்டாகியிருந்தது.

அப்படியான சமயத்தில்தான் ஒரு நாள், “படிப்பு விஷயமா ஒரு முக்கியமானவரை பார்க்க வேண்டி இருக்கும்… சீக்கிரம் ரெடியாயிட்டு வா… அப்படியே  உன் செர்டி பிக்கேட் எல்லாம் எடுத்து வைச்சுக்கோ” என்றவர் சொல்ல, அவளும் முழுவதுமாக அவர் வார்த்தைகளை நம்பி புறப்பட்டாள்.

“நான் வர மாட்டேன்… நீதான் போகணும்… உன் கூட இவங்க இரண்டு பேரும் வருவாங்க” என்றவர் அந்த ஆசிரமத்தில் பணி செய்யும் இருவரை அவளுடன் அனுப்பி வைத்தாள். அப்போதே அவளுக்கு முதல் சந்தேக துளி விழுந்தது. ஆனால் அதனை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

அதன் பின் அவள் சென்ற இடமும் அடியாட்கள் போல பயங்கர தோற்றத்திலிருந்த மனிதர்களையும் பார்த்து உள்ளுர அவளுக்கு படபடப்பானது.

தனியாக ஒரு மான் சிங்கத்தின் குகையில் சிக்கிக் கொண்டது போல மருள மருள விழித்துக் கொண்டே நடந்தாள்.

அங்கிருந்த பணியாள் பழச்சாறு எடுத்து வந்து நீட்ட, “இல்ல எனக்கு வேண்டாம்” என்றவள் நடுக்கத்தோடு உரைக்க,

“எடுத்துக்க மா” என்று அவர் திரும்ப திரும்ப சொல்ல, பிடிவாதமாக அவளும் மறுத்தாள். ஏதோ அவள் மனதிற்கு தப்பாக தோன்றியது.

“நாங்கெல்லாம் குடிக்கிறோம் இல்ல… உனக்கென்ன” என்று உடன் வந்தவர்கள் சற்றே கட்டாயப்படுத்த வேறு வழியில்லாமல் அதனை பருகினாள்.

அதற்கு பிறகு அவளிடம் அத்தனை நேரம் பவ்யமாக பணிவாகவும் பேசியபடி அழைத்து வந்தவர்கள் அவளிடம் அதிகாரமாக நடந்து கொள்ளத் துவங்கினர்.

அவளை அங்கிருந்த ஒரு அறைக்குள் தள்ளிய வரைதான் அவள் நினைவில் பதிவானது. மயக்கம் தெளிந்து அவள் எழுந்த போது உலகமே தலை கீழாகச் சுழன்றது. 

மீண்டும் ஆசிரமத்திற்குத் திரும்பிய பிறகுதான் தனக்கு என்ன நிகழ்ந்தது என்பதையே அவள் தெளிவாக உணர துவங்கினாள்.

தன் சுயநினைவை இழக்க வைத்து ஏதோ ஒரு மனித மிருகம் தன்னை வேட்டையாடி இருக்கிறது.  தன் தேகத்தின் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தியிருக்கிறது. அதற்கு இந்த கேடுகெட்ட கூட்டமும் உடந்தையாக இருந்திருக்கிறது. இதையெல்லாம் நினைக்க நினைக்க  அவள் சுக்குநூறாக உடைந்தாள்.

‘உனக்கு நான் இருக்கிற வரைக்கும்தான் பாதுகாப்பு… ஒரு வேளை நானும் இல்லாம போயிட்டா உன்னை யாரும் இங்க வாழ விடமாட்டாங்க’  என்றவர் அம்மா கடைசி தருணத்தில் சொன்னதை நினைவு வந்து தொண்டைக்குள் இருந்து அழுகை வெடித்து வெளியே வந்தது.

“அம்மா… அம்மா… ஆஅ” என்று அவள் கண்ணீர் விட்டுக் கதறினாள். தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி ஓடி…  இறுதியில் தான் தோற்றுவிட்டோம். எந்தவொரு துணையும் இல்லாத தனி பெண்ணாக வாழ முடியாது. இந்த சமூகம் வாழ விடாது.

அவள் அழுகை நின்றபாடில்லை. அப்போது அந்த பெண் நிர்வாகி அவள் தோளில் தட்டி, “கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணாத்தான் நீ நினைச்ச மாதிரி படிச்சு பெரியாளாக முடியும்… தலைவர் உனக்கு எல்லாம் உதவியும் செய்றன்னு சொல்லி இருக்காரு… இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல… விடு” என்றவள் மிக சாதாரணமாக பேசியதை கேட்டு துர்காவுக்கு வெறி பிடித்துப் போனது.

தேகமெல்லாம் தீ பிடித்து  போல கனலாக எறிந்தது. அவளுடைய அழுகையும் கண்ணீரும் கோபமாக உருவெடுத்தது.

சிவந்த விழிகளோடு நிமிர்ந்தவள், “என்னடி பொம்பள நீயெல்லாம்” என்று சீற்றமாக அவள் கன்னத்தில் அறைந்து தலை முடியைப் பிடித்து உலுக்கி எடுத்தாள். அங்கிருந்த பணியாட்கள் துர்காவை கட்டுக்குள் கொண்டு வர மிகவும் பிரயத்தனப்பட்டனர்.

அந்த பெண் நிர்வாகி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நிமிர்ந்து  படு உக்கிரமாக துர்காவை அடித்து கீழே தள்ளியவள், “அவ்வளவு திமிராடி உனக்கு” என்று கோபமாகக் கர்ஜித்துவிட்டு,

“இவளை கொண்டு போய் அந்த இருட்டு ரூம்ல போடுங்க… உள்ளேயே  கிடந்து சோறு தண்ணி இல்லாம சாகட்டும்” என, அந்த பணியாட்கள் துர்காவின் கெஞ்சலையும் கதறலையும் பொருட்படுத்தாமல் அந்த இருட்டறையில் அவளை இழுத்து சென்று தள்ளிவிட்டனர்.

அத்தனை பயங்கரமான இருளை அவள் இதுவரை பார்த்ததில்லை. கை கால்கள் எல்லாம் வெடவெடத்தன.

“கதவை திறங்க… ப்ளீஸ் பயமா இருக்கு” என்றவள் கதவைப் பலமாகத் தட்டினாள். தட்டி தட்டி அவள் கைகளில் இரத்தம் கசிந்தன. ஆனால் எதிர்புறத்தில் நிசப்தம் மட்டுமே.

 அவள் ஓய்ந்து தரையில் சரிந்து அழுத போது அவள் பாதத்தின் மீது ஏதோ ஊர்ந்து செல்ல அவள் பதறி கொண்டு எழுந்தாள். அந்த இருளோடு சேர்ந்து சில அமானுஷ்ய ஒலிகள் கேட்டு அவளை மேலும் அச்சுறுத்தியது.  அவள் இதயம் பயங்கரமாக அடித்து கொண்டது.

தொடர்ந்து கேட்ட எலியின் க்ரீச் க்ரீச் சத்தங்களைத் தாங்க முடியாமல் காதுகளை அழுந்த மூடியபடி  இங்கும் அங்கும் அலறி கொண்டு ஓடினாள்.

எங்கு ஓடினாலும் எலி கூட்டங்கள் அவளை படையெடுத்துத் துரத்தியது போன்ற உணர்வு.

“என்னை வெளியே விட்டுடுங்க… பயமா இருக்கு… ரொம்ப பயமா இருக்கு” என்றவள் அழுகுரல் அந்த அறையின் ஒவ்வொரு சுவற்றிலும் தெறித்து பயங்கரமாக எதிரொலித்தன.

vanitha16, shiyamala.sothy and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
vanitha16shiyamala.sothybhavanya lakshmi.nagarajan
Quote

Super ma 

You cannot copy content