You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

vithai panthu - 7

Quote

பெண்ணியம்

பெண்ணியம் என்றதும் ஆண் பெண்ணை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தி கொண்டிருக்கிறான் என்றும் இது ஒரு ஆணாதிக்க சமுதாயம் என்றும் நான் கருத்து சொல்ல போவதாக எண்ணி கொள்ள வேண்டாம்.

இங்கே நான் பேச போவது பெண்களின் அடிமை மனநிலை பற்றி!

அதாவது அடிமை மனப்பான்மையை உருவாக்கி வைத்திருக்கும் இலக்கியங்கள் புராணங்கள் பற்றி!

அவற்றை தொடர்ந்து இங்கே உள்ள பெண் எழுத்தாளர்கள் பலரும் தங்கள் எழுத்துக்கள் மூலமாக அத்தகைய அடிமை மனப்பானமையை கண்ணும் கருத்துமாக போற்றி காத்துவரும் மிக மோசமான நிலையை பற்றி!

ஆனால் இது பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்னதாக நான் பார்த்த படித்த அனுபவப்பூர்வமாக உணர்ந்த பெண்ணிய கருத்துகளை இந்த கட்டுரையின் மூலமாக பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

மற்றபடி நான் சொல்லும் கருத்துக்களோடு நீங்கள் கண்டிப்பாக உடன்பட வேண்டுமென்ற அவசியமுமில்லை. இது என் கருத்து மட்டுமே ஒழிய நான் பெரிய அறிவாளி… நான் சொல்வதே சரி என்று பறைசாற்றவுமில்லை.

நற்சமுதாயத்தை உருவாக்கும் நோக்கொடு மட்டுமே விதைபந்து இங்கே தூவப்படுகிறது. யார் மனதையும் புண்படுத்த அல்லது நம்பிகையையும் உடைக்கும் நோக்கத்தில் கிடையாது.

அதேநேரம் ஒரு பொய்யான நம்பிக்கைகள் மீது நம் மனங்களும் சிந்தனைகளும் ஆதாரப்பட்டு இருக்குமேயானால் அது நம்மை மட்டுமல்ல நம் சமூகத்தை சிந்தனையை சந்ததிகளை என்று எல்லாவற்றையும் முடமாக்கிவிட கூடும் என்று சொல்லி கொண்டு

வாருங்கள் விதைப்போம்!

நற்சிந்தனைகளை…

சமீபமாக நடந்த சென்னை புத்தக கண்காட்சிக்கு நான் சென்றிருந்த போது அங்கே ஒரு பதிப்பகத்தில் பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற புத்தகத்தை வாங்கினேன்.

அப்போது அந்த பதிப்பகத்திலிருந்த பெண் ஒருவர் என் கையை பற்றி, “எங்க பப்ளிகேஷன்ல இந்த புத்தகத்தை வாங்குகிற முதல் பெண்மணி நீங்கதான்” என்று பாராட்டி கை குலுக்கினார். நான் பதிலேதும் சொல்லாமல் மிதமாக புன்னகைக்க அவர் என்னிடம், “இந்த புத்தகத்தை எல்லா பெண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டும்” என்று சொன்னார்.

ஒரு வகையில் என் கருத்தும் கூட அதுதான்.

கல்வி மறுக்கபட்ட காலத்தில் பெண்கள் அடிமைகளாக இருந்தது கூட பரவாயில்லை. ஆனால் இன்றைய கால்கட்டத்த்திலும் அத்தகைய அடிமை மனபான்மையை விட்டு வெளியே வராமல் இருப்பதை என்னவென்று சொல்வது?!

தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள் விளம்பரங்கள் தொடங்கி எழுத்து துறை வரை அத்தகைய அடிமை மனபான்மையின் தாக்கத்தை அழுத்தமாக உணர முடிகிறது.

சீரியல்களில் வரும் நாயகி சமையல்காரியாக இருந்தாலும் சரி. அல்லது ஒரு மாவட்ட ஆட்சியராகவே இருந்தாலும் சரி. தாலி செண்டிமென்ட், மண் சோறு சாப்பிடுவது, தீ மிதிப்பது, மாமியாரின் அடக்கு முறைக்குள் சிக்கி சின்னபின்னமாவது என்று இதெல்லாம் மாறாமல் எல்லா சீரியல்களினும் டெம்ப்ளேட்களாக தொடர்கின்றன! அதையும் ஒரு கூட்டம் பார்த்து ரசிக்கின்றது.

இதே போலஅடிக்கடி தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் கூட அவ்விதமே இருக்கின்றன. ஒரு டிஷ் வாஷர் விளம்பரம். சிறுவன் ஒருவன் தன் அம்மாவுக்கு எந்தவித அங்கீகாரமும் இல்லையென்பது போல, “அம்மாவுக்கு எதுவும் இல்லை” என்கிறது. அதாவது குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களுக்கு எந்தவித சுயமும் அங்கீகாரமும் இல்லையென்று சொல்வது போல. இது சரியான மனநிலைதானா?

அவள் ஏதாவது ஒரு வேலை செய்தால்தான் அவளுக்கு அங்கீகாரம் தரப்படுமா? எந்தவித பிரதிபலனுமின்றி குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களை இப்படியான வார்த்தைகள் அவமானப்படுத்துவது போல்  இல்லையா? அவர்களின் உழைப்பிற்கு எந்தவித அர்த்தமும் இல்லையா?

வீட்டிலிருந்தபடி பெண்கள் தங்கள் குழந்தைகளை நல்லபடியாக வளர்ப்பதும் கூட சாதனைதான். Home maker என்பது அவமதிப்பான ஒன்றாக நம் வருங்கால சந்ததிகள் முன்பாக காட்டுவது நம் அம்மா பாட்டி என்று எல்லோரையும் அவமதிக்கும் செயலாகும்.

தந்தைகளை போல தாயுமே அந்த குடும்பத்திற்காக பாடுபட்டு உழைக்கும் போது வீட்டிலிருக்கும் பெண்களை அங்கீகாரமில்லாதவர்களாகவும் அதனை அவமானமாகவும் சித்தரிப்பது மிக பெரிய தவறு. அப்படி பெண்கள் வீட்டிலிருந்து குழந்தைகளை தங்கள் குடும்பத்தை அரவணைத்து அன்பு செலுத்தி நல்வழிப்படுத்தவில்லை என்றால் இந்த சமூகமே முடமாகி போகும் என்பதை எல்லோரும் உணர வேண்டும்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க தற்சமயம் ஒளிப்பரப்பாகும் விளம்பரங்கள் பெண்களை மிகவும் கவர்ச்சிகரமான ஒரு போகப்பொருளாக காட்டுகின்றன. அதுவும் பெண்கள் அடிமை தளைகளிலிருந்து வெளியே வந்து சுயசார்போடு வளர்ந்துவிட்ட பிறகுதான் இப்படியான அவலங்கள் அதிகமாக அரங்கேறி கொண்டிருக்கின்றன.

சினிமா, சின்னத்திரை, விளம்பரங்கள் போன்றவற்றில் இன்றளவிலும் பெரும்பாலும் ஆண்களின் ஆதிக்கத்திற்குள்ளாகதான் இருக்கிறது. ஆனால் எழுத்து துறை அப்படி இல்லை. தமிழ் நாவல்களில் எண்ணற்ற பெண் எழுத்தாளர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியிருக்கின்றனர்.

அதுவும் இணையத்தின் மூலம் புத்தகம் படிக்கும் பழக்கும் பெருமளவில் உலகமெங்கும் பரவ தொடங்கிய பிறகு ஆண்களை விடவும் பெண்களின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே வருவது மனதிற்கு சந்தோஷமாக இருந்த போதும் பல பெண் எழுத்தாளர்களின் பெரும்பாலான கதைகள் ஆண்களின் ஆதிக்க நிலையை தூக்கி நிறுத்துவது போலவே காட்சிப்படுத்துவது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்.

அதுவும் சமீபத்தில் படித்த பல நாவல்கள் ஆணாதிக்க மனநிலையை அப்பட்டமாக காட்டுவது போலவே உள்ளது. அதுவும் ஒரு பெண்ணின் வாழ்க்கை லட்சியமே நாயகனின் காதலை அடைவதே என்பது போலவும் அதுவே மிக பெரிய முக்தி நிலை என்றும் தீவிரமாக சொல்லப்பட்டு கொண்டிருக்கிறது.

இதுவே ஒரு பெண்ணின் வாழ்க்கை என காட்டப்படுவதன் மூலமாக அந்த கற்பனைக்குள் கனவுகளை மட்டுமல்ல கண்களையும் தொலைத்து குருடாகி போனவர்கள்தான் அதிகம்!

அழகான கற்பனைகளை ரசிப்பது தவறா என்று கேட்கும் வாசக தோழமைகளுக்கு நாயகன் நாயகியை அடித்து துன்புறுத்துவதும் கடத்தி  கொண்டு போய் வைத்து கொள்வதும் மேலும் காட்டாயப்படுத்தி அவள் கழுத்தில் தாலி கட்டுவதும் மேலும் உச்சகட்ட நிலையாக பாலியல் வன்முறை செய்வதும் இறுதியாக அவளை காதலாகி கசிந்துருக வைப்பதும்தான் அழகான ரசனையா? என்று கேட்க தோன்றுகிறது.

இருப்பினும் பெண்களின் மனநிலையிலிருந்து யோசித்தால் இதை ஒரு தவறான விஷயமாக கருத முடியாது. இயல்பாகவே பெண்கள் ஆல்பா ஆண்களை அதாவது ஆதிக்கம் செலுத்தும் ஆண்களை விரும்புவதுதான் வழக்கம். இது காலம் காலமாக இப்படிதான் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது.

வேட்டையாடிய காலகட்டத்தில் பெரிய விலங்கை வேட்டையாடுபவன் ஆல்பா ஆண். குறி பார்த்து அம்பு எய்துபவன், மாட்டை அடக்குபவன், இப்படி ஆளுமையான ஆண்கள் காலத்திற்கு ஏற்றார் போல மாறி வந்திருக்கின்றன.

Orgin of species என்ற உயிரனங்களின் பரிமாண வளர்ச்சிகளை விளக்கிய சார்லஸ் டார்வின் இது பற்றியும் அவருடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதிகாலம் தொட்டு பெண்னினம் எத்தகைய ஆண் தனக்கு துணையாக வேண்டுமென்பதை அவளே முடிவு செய்திருக்கிறாள். ஆளுமையும் செய்திருக்கிறாள். தாய் வழி சமூகமாக ஒரு மூத்த பெண்ணின் வழிநடத்தலில் ஒட்டுமொத்த மனித இனமே இயங்கியிருப்பபதற்கு நிறைய ஆதாரங்கள் இந்த பூமி முழுக்கவும் நிறைந்திருக்கின்றன.

ஏன்? பூமியில் வாழும் மற்ற உயிரினங்களே சான்று. ஆண் சிங்கத்திற்கு பிடரி முடியும் ஆண் மயிலுக்கு தோகையும் ஆண் மாட்டிற்கு கம்பீரமான திமிலும் என்று ஆணினம்தான் தன் திறமையை அழகை கம்பீரத்தை பறைசாற்றி பெண் இனத்தை கவர முயன்றிருக்கிறது.

வேட்டையாடுவதில் தொடங்கி தங்கள் சந்ததிகளை காப்பது வரை பெண்ணினமே முன்னே நின்று அதிகாரம் செலுத்தி கொண்டிந்தது. ஏன் பூச்சி இனமான தேனீக்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் மனித இனம் மட்டும் இப்படி தலை கீழான ஒரு மாற்றத்தை அடைந்ததற்கு பின்னணயில் நாம் வணங்கும் கடவுள்கள், சாஸ்திரம் சம்பிராதயம், புராணங்கள் என்று ஒரு மிக பெரிய சூட்சம சூழ்ச்சிகள் அரங்கேறின.

அடுத்த சந்ததிக்கு தங்கள் மரபணுக்களை கடத்த ஆண்கள் பெண்களை கவர்வதற்கான புதுப்புது யுக்திகளை கண்டறிந்தனர். ஆனால் பெண்ணவள் மிகவும் கறாராக (ஆல்பா) ஆளுமையான ஆண்களை மட்டுமே தேர்ந்தெடுத்தாள்,

அடுத்த சந்ததிக்கு அத்தகைய ஆரோக்கியமான மரபணுக்களை கடத்தினாள். ஆனால் இதன் விளைவு தோல்வியை தழுவிய ஆண்களுக்குள் பொறாமையும் துவேஷமும் அபிரிமிதமாக வளர்ந்தது.

பெண்ணின் சுதந்திரமும் சுயமும் ஆதிக்க மனபான்மையும் நீண்ட நெடிய கால இடைவெளியின் போராட்டத்தில் முற்றிலுமாக பறிக்கப்பட்டது. பெண்கள் இரண்டாம்தர பிரஜையாக ஆணினத்திற்கு அடிமையாக மாற்றப்பட்டார்கள். அவமதிக்கப்பட்டார்கள்.

பெண் தன்னுடைய choser நிலையை துறக்க வேண்டி அவளின் உடல்ரீதியாக உண்டாகும் பாலியல் உணர்வுகளை மறக்கடிக்கும் பொருட்டு பெண்ணுறுப்புகள் தீயால் சுடப்பட்டன. இன்றும் சில ஆதிவாச இனங்கள் அத்தகைய கொடுரங்களை செய்வதாக சான்றுகள் உண்டு.

ஆனால் ஏன் மற்ற உயிரினங்களுக்குள் இத்தைகய புரட்சியும் மாற்றமும் நிகழவில்லை என்பதற்கு மிக முக்கிய காரணம் மனித மூளை.

எல்லா மிருகங்களும் தன்னை வேட்டையாட வரும் மிருகங்களிடமிருந்தும் இயற்கை சூழ்நிலை மாற்றங்களிலிருந்தும் தங்களை தற்காத்து கொள்ள ஏதோவொரு திறமையை பிறப்பிலேயே பெற்றுவிடுகின்றன. வேகமாக ஓடும் கால்கள், கூரிய கொம்புகள், குளிரிலிருந்து காத்து கொள்ள ரோமங்கள், இறக்கைகள்… இப்படியாக

ஆனால் மனிதனுக்கு இப்படி எந்தவிதமான தற்காத்து கொள்ளும் அமைப்புகளும் அவன் உடலில் இல்லை. அங்கேதான் மனிதன் மற்ற உயிரனங்களை விட்டு விலகி நிற்கின்றான்..

பல விதமான ஆபத்துகளிலிருந்து தன் உயிரை காப்பாற்றி கொள்ளும் தேடலில்தான் மனிதன் அறிவார்ந்தவனாக மாறினான். கூரிய கற்களை கொண்டு ஆயுதம் தயாரிப்பது மலை குகைகளை தங்கும் இடங்களாக மாற்றி கொண்டது. ஆற்று படுகைகளை விவசாய நிலமாக மாற்றி உணவு தயாரித்தது என்று மனிதன் பூமியை தனக்கு ஏற்றவாறு மாற்றி கொண்டான்.

அத்தகைய மாற்றங்களுக்கு வித்திட்ட மனித அறிவுதான் மனித இன பெண்களை அடிமையாக்கியது.

விளைவு… பெண் அடிமையானாள்… ஆண் ஆளுமையானான்… பூமி அழிவு நிலையை எய்து கொண்டிருக்கிறது.

பூமியை அழிவதற்கும் பெண் அடிமையானதற்கும் யாதொரு சம்பந்தம் என்ற கேள்வி எல்லோருக்கும் தோன்றும்.

சூரியனை பூமி சுற்ற வேண்டுமென்பது இயற்கையின் விதி. ஒரு வேளை அந்த விதி உடைக்கபட்டால்….

அப்படிதான் இயற்கை சில விதிகளை இய்லபாகவே உருவாக்கி வைத்திருக்கின்றன. அந்த விதியில்தான் உயிரினங்களின் படைப்புகள்  பெண்ணினத்தின் ஆளுமையிலிருந்தது. ஆனால் அத்தகைய இயற்கை விதி முறியடிக்கப்பட்டதில் நிறைய விபரீதமான மாற்றங்கள் நிகழ தொடங்கின.

அடிமை மனபான்மைக்குள் கிடந்த பெண்கள் வழியாக உருவாகிய சந்ததிகள் அறிவற்ற சமூதாயத்தை உருவாக்கின. இப்படியாக மனித இனம் மானவரியாக பூமி முழுக்க பல்கி பெருக தொடங்கியதன் விளைவாக மற்ற உயிரனங்கள் அழிவு நிலையை எய்தின. பெரும்பாலும் மனிதன் தன் தேவைக்காக அவற்றை அழிக்க முற்பட்டான். Ecological balance உடைப்பட்டு இயற்கை விதிகள் முறியடிக்கப்பட்டன.

இது எல்லாவற்றிற்கும் முக்கிய காரணம் பெண்ணின் அடிமை மனபான்மை. இத்தகைய அடிமை மனப்பானமை எழுத்திலும் விரவியிருக்கின்றன. பெரும்பான்மையான புத்தகங்களில்  மனதளவிலும் உடலளிவிலும் பெண்ணை பலவீனமானவளாக காட்டுவதன் மூலம் வெகுகாலமாக அடிமை மனப்பான்மையிலிருந்த பெண்ணினம் இன்னும் அந்த மனநிலையிலிருந்து மீண்டு வரவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

காலம்காலமாக ஆணாதிக்கவாதிகளின் கீழ் வாழ்ந்து பழகிய பெண்கள் அப்படியானவர்களையே தங்கள் நாயகர்களாக ஆல்பா ஆண்களாக பார்த்து பழகிவிட்டார்கள் என்பதே உண்மை.

சிறு வயதில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட யானை தான் வளர்ந்த பின்பும் அந்த பிணைப்பிலிருந்து தன்னை மீட்டு கொள்ளாமல் இருப்பதற்கு பேர்தான் அடிமை மனபான்மை. அந்த யானை வளர்ந்த பின்னும் மனதளவில் பலவீனப்பட்டு பாகன் சொல் பேச்சை தட்டாமல் கேட்கும் அவனின் சேவகனாகவே தன்னை பாவித்து கொள்கிறது. தன் பலத்தை அது மொத்தமாக மறந்து அடிமையாகவே வாழ்ந்து பழகிவிடுவது போலதான் இன்று பெண்களின் மனநிலையும்!

அந்த மனநிலை மாறினால்தான் மாற்றங்கள் உருவாகும்.

பெண்கள் தங்கள் மனோபலத்தை உணர்ந்து கொள்ளும் வகையில் இனி வரும் இலக்கியங்கள் உருவாக வேண்டும். எழுத்திற்கு மட்டுமே அத்தகைய சக்தி உண்டு.

ஆண்கள் எழுதிய பல புராணங்கள் ஆளுமை நிலையிலிருந்த பெண்ணை ஏவளாகவும் நளாயினியாகவும் திரௌபதியாகவும் சீதையாகவும் சித்தரித்து பெண்களை அடிமை மனப்பான்மைக்குள் தள்ளியிருக்கிறது.

அங்கேதான் கதை என்ற ஆயுதம் எழுத்தின் மூலமாக பல்லாயிரம் சந்ததிகள் கடந்தும் பெண்ணை அடிமையாக வைத்திருக்கும் சூட்சமத்தை கையாள்கிறது.

அத்தகைய ஆயுதம் இன்று நம் கையிலும் இருக்கிறது. அதை வெறும் பொழுதுபோக்கு என்ற ஒரு சிறு வட்டத்திற்குள் முடக்கிவிடாமல் மாற்றங்களுக்கான விதையாக அதனை வித்திடுவோமாக!

எழுதுபவர்கள் மட்டுமல்ல. படிப்பவர்களும் இப்படியான ஆணாதிக்க கதைகளை ஆதாரிக்காமல் இருப்பதன் மூலம் இனி வரும் சந்ததிகள் ஆரோக்கியமான சமூதாயமாக உருவாக கூடும்… உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும்…

விதைப்பந்து தொடரும்…

எமக்குக் கடவுள் நிகர் பதவியும் வேண்டாம்...
காலில் போட்டு மிதிக்கவும் வேண்டாம்!

தேவதை சிறகுகள் எமக்கு வேண்டவே வேண்டாம்!
அச்சிறகுகள் பிய்த்தெறிந்து துடிக்கவும் வேண்டாம்!

எம் சிந்தைக்குள்ளே புகுந்து பாடும்...
பொய் சாத்திரங்கள் எமக்கு வேண்டவே வேண்டாம்!

கண்ணே மணியே காவியமே என வருணிக்க வேண்டாம்!
பச்சிளம் குழந்தையென்றில்லாமல்..
எம்மை பாலியல் கண் கொண்டு பார்க்கவும் வேண்டாம்!

இப் பறந்து விரிந்த புவி தனிலே எமக்கு...
பரபட்சமில்லா பாதுகாப்பு வேண்டும்!

மனதில் துளிர்க்கும் துளி துணிவையும்...
இங்கே தகர்த்தெறியா நல் சமுதாயம் போதும்!

ஆம்... பெண் இங்கே பெண்ணாய் வாழ...
மாசறு நல் சமுதாயம் போதும்!

-மோனிஷா & kpn

 

Avinash Tony has reacted to this post.
Avinash Tony
Quote

உண்மையான வரிகள் .. கண்டிப்பாக சிந்திக்க வேண்டும் பெண்கள் தங்களைப் பற்றி .. உலக மகளிர் தினத்தில் நல்ல பதிவு மற்றும் நீண்ட பதிவு ,, மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள் எழுத்தாளர் .,!!

monisha has reacted to this post.
monisha

You cannot copy content