You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Vithai Panthu - 9

Quote

9

//ஒரு சதுர கஜம் எட்டரை விலைக்கு நிலம் வாங்கி வீடு கட்டினாராம் கிஷனின் அப்பா. ரயில்பெட்டித் தொடர் மாதிரி வரிசையாய் அறைகள். எல்லா அறைகளும் முடிந்தபின் போனால் போகிறது என்று ஒட்டவைத்தாற்போல் ஒரு சமையலறை. இரு ஜன்னல்கள். ஒரு ஜன்னலின் கீழ், குழாய் வைத்த தொட்டி, ஒரு பெரிய தட்டுக்கூட வைக்க வகையில்லாமல் குறுகியது. கீழே, செங்கல் தடுப்பு இல்லாத சாக்கடை முற்றம். மேலே குழாயைத் திறந்ததும் கீழே பாதங்கள் குறுகுறுக்கும். பத்து நிமிடங்களில் ஒரு சிறு வெள்ளக்காடு காலடியில். அதில் நின்று நின்று அடிப்பாதம் எல்லாம் வெடிப்புக் கீறல்கள். சமையலறையில் அடி வைத்து, முதல் நாள் சமைத்து, கைக்கு;த் தங்க வளையல் போட்ட உடனேயே வெடிப்புக்குத் தடவ ஒரு மெழுகுக் களிம்பு தந்து விடுவாள், ஜீஜி என்று எல்லோரும் கூப்பிடும் கிஷனின் அம்மா.//

இவ்வரிகள் எழுத்தாளர் அம்பையின் சிறுகதை தொகுப்பில் ஒன்றான ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற கதையிலிருந்து எடுக்கப்பட்டது.

கதைகள் என்பது வெறும் வரிகளின் அணிவகுப்பு அல்ல. அது உணர்வுகளின் சஞ்சாரம். வலிகளின் வழித்தடம். இந்த சிறுகதையை நீங்கள் படித்திருப்பீர்களேயேனால் உங்களுக்கு நான் சொல்வதன் அர்த்தம் நன்றாகவே விளங்கும்.

ஒரு வேளை நீங்கள் படித்திருக்காவிட்டால் உடனடியாக படித்து பாருங்கள்.

இன்று பெண்களின் நிலை உயர்ந்திருக்கிறது. ஆனால் அதேநேரம் இந்த சமையலறை அவளுக்கான அறை என்ற அடையாளப்படுத்த பட்டிருப்பது இன்றும் மாறவில்லை. மாற்றம் வந்திருக்கிறது. ஆண்கள் சமையலறையில்  உதவி புரிய முன்வந்திருக்கிறார்கள். இருப்பினும் பொறுப்பு அவளுடையதுதான்.

சம்பாதிப்பது கணவனின் கடமை என்பது கைமாறிய போதும் கரண்டிகள் இடமாறவில்லை.

ஒரு கவிதை படித்த நினைவு

‘உள்ளே வீசப்படும்

 செய்தித்தாளை

அப்பாவிடம் கொடுக்கவும்,

கீரை விற்பவள் வந்தால்

அம்மாவை கூப்பிடவும்

கற்றுகொள்கிறது குழந்தை

யாரும் கற்றுத் தராமலேயே.’

அலுவலகம் விட்டு களைப்போடு எந்த நேரத்தில் வீடு திரும்பினாலும் சமையலறை அவள் வரவிற்காக காத்து கொண்டிருக்கும். அந்த அறையின் மௌனத்தை அவள்தான் வந்து குலைக்க வேண்டுமென்று அது அத்தனை நேரம் மௌன விரதம் பூண்டிருக்கும்.

‘சாகும் வரை இந்த அடுப்படில வெந்து சாகணும்னு என் தலைவிதில எழுதி இருக்கு’ என்று பொறுமிய அம்மாக்களின் குரல்கள் குக்கர் விசில்களின் சத்தத்தினூடே இப்போதும் நம் காதுகளில் ஒலிக்கத்தான் செய்கின்றன.   

அவர்களின் எண்ணங்கள் கூட அங்கிருந்து எண்ணெய் சிகிடுகளோடு பிசுபிசுத்து போயின. கோபம் வெறுப்பும் அலுப்பு எல்லாம் ஒரு நிலைக்கு மேல் அவர்களுக்கே சலித்து போய்விட்டன.

இது போன்ற வலிகளை வீட்டாரிடம் சொன்னாலும் அதை காது கொடுத்து கேட்போர் இல்லை. காற்றில் எழுதினாலும் கரைந்து போய்விடும். தண்ணீரில் எழுதினாலும் மறைந்து போய்விடும்.

அதனால்தான் அவள் கதைகளில் எழுதினாள். கவிதைகளில் சாடினாள்.

காலத்திற்கு அவள் குரல் ஒலிக்கும்படி பதிவு செய்தாள்.

கதைகள் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அது பேசும் உணர்வுகளின் மொழி ஆழமானது. எழுதுபவரின் எழுதுகோலின் கூர்மையை பொறுத்தது மிகவும் அழுத்தமாக பதிவானது.

எழுத்தாளர் அம்பையின் பெண்ணிய சிந்தனைகளும் அப்படியாக பதிவு செய்யப்பட்டது.

ஆமாம் யார் இந்த அம்பை?

இந்த கேள்விக்கு ஒரு வேளை உங்களுக்கு பதில் தெரியாமல் இருந்தால் இதோ அவரின் சிறு குறிப்பு.

அம்பை (Ambai) என்கிற சி. எஸ். லக்சுமி (C. S. Lakshmi, பிறப்பு:1944) தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர். 1960களின் பிற்பகுதியில் எழுதத் ​தொடங்கியவர்.

 ​பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. பல பெண் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விடயங்களை சர்வ சாதாரணமாக தொட்டுச் சென்றவர். உறவு, காதல், திருமணம், அரசியல், இசை என்று பல்வேறு பரிமாணங்களைத் தொட்டவர்.

 பெண்களின் வாழ்க்கையை அதுவும் சுயசிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாக படைத்தவர். தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் ​பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன.

இவர் ”SPARROW” (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.

டாக்டர் சி. எஸ். லட்சுமி (Dr. C. S. Lakshmi) என்ற தன்னுடைய இயற்பெயரில் தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி வருகிறார்.

1976இல் விஷ்ணுவைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்தார்.

பொருளாதாரக் காரணங்கள் மட்டுமின்றி படைப்பு, மற்றும் தான் தேர்ந்தெடுத்த சமூகப் பணிகளுக்குக் குழந்தைகளை உள்ளடக்கிய குடும்ப அமைப்பு தடையாக இருக்கும் என்பது அவரது கருத்தாக இருந்தது. வரலாற்றில் எம்.ஏ பட்டமும் அமெரிக்கன் ஸ்டடிஸில் முனைவர் பட்டமும் பெற்றவர். 

தமிழ்ஆங்கிலம்இந்தி மற்றும் கன்னடத்தில் புலமை பெற்றவர். ‘தங்கராஜ் எங்கே’ என்ற சிறுவர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். ‘முதல் அத்தியாயம்’ என்ற சிறுகதையைத் திரைப்படமாகத் தயாரித்துள்ளார்.

இது அவருடைய சிறு குறிப்பு மட்டும்தான். அவர் தொட்ட உயரங்களும் அனுபவங்களும் ஒரு தனி புத்தகம் எழுதுமளவிற்கு நீண்ட நெடியது.

மேலும் அம்பை அவர்கள் அவர் காலத்திற்கு முன்பும் பின்பும் எழுதிய பெண்ணிய எழுத்தாளர்களின் பெயர் பட்டியல்களையும் அவர்கள் சிந்தனையின் சிறு துளிகளையும்  ‘உடலெனும் வெளி’ என்ற தன் கட்டுரை தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார்.

ஒவ்வொரு பெண்ணும் முக்கியமாக பெண் எழுத்தாளர்களும் படிக்க வேண்டிய கட்டுரை தொகுப்பு அது.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மிக சுலபமாக எழுத்தாளர் என்ற அடையாளத்தை பெற்றுவிட்டார்கள். ஆனால் அக்காலகட்டத்து பெண்களுக்கு அது சுலபம் அல்ல என்பதை அக்கட்டுரை தொகுப்பை முழுவதுமாக படித்தால் நமக்கு புரியும்.  

பெண் தன் உணர்வுகளை பேசினால் கூட அது ஒழுக்கமற்ற செயலாக பார்க்கப்பட்ட காலங்கள் அது.

என்னதான் நதிகளை அணைகள் போட்டு தடுத்தாலும் அது ஒரு நாள் கரையை உடைக்கும். அப்படித்தான் தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குடும்ப வன்முறை அடக்குமுறைகளுக்கு எதிராக பெண்களின் எழுத்துக்கள் சீறி கொண்டு பாய்ந்தன. அதன் வீரியம் தாங்காமல் பல ஆண்கள் மிரண்டு போனார்கள். எழுதிய விரல்கள் உடைக்கப்பட்ட போதும் குரல்கள் நசுக்கப்பட்ட போதும் அவர்களின் பெண்ணிய சிந்தனைகளை சிதறடிக்க முடியவில்லை. எழுத்துக்களை நிறுத்த முடியவில்லை.

ஏனெனில் அவை எழுதுகோல் மைகளில் இருந்து சுரக்கவில்லை. அவர்களின் கண்ணீரிலும் இருந்தும் குருதியிலும் இருந்தும் உணர்வுகளின் வழியாக செரிந்தது.

ரிலே ஓட்டத்தில் கை மாறும் குச்சியை போல அடுத்தடுத்த நிலைக்கு ஒவ்வொரு காலகட்ட எழுத்தாளர்களும் அதனை கைமாற்றி எடுத்து கொண்டு வந்தனர்.

உரிமைக்கான பெண்களின் குரல் அவர்களின் கதைகள் கவிதைகள் மூலமாக களம் கண்டன. அந்த வலி நிறைந்த வழி தடத்தில் ஏறி வந்து இன்றைய பெண் எழுத்தாளர்கள் சுதந்திரமாக தங்கள் சிந்தனைகளை பதிவு செய்ய தொடங்கியிருக்கின்றனர்.

தேவர் மகன் படத்தில் வரும் வசனம் நினைவிற்கு வருகிறது.

‘விதை போட்டது நான்… இது பெருமையா… இல்ல ஒவ்வொருத்தரோட கடமை’

ஆம். விதையிட்டது அவர்கள். அதன் விளைவுதான் பெண்களுக்கு மட்டுமல்ல. திருநங்கைகளும் கூட அங்கீகாரம் பெற தொடங்கியிருக்கிறார்கள்.

நூற்றாண்டுகள் முன்பிலிருந்து இன்று வரை கதைகள் புதினங்கள் கவிதை வடிவங்கள் மூலமாக பெண்ணிய சிந்தனையை ஆழமாக விதைத்திருக்கின்றனர். அதன் காரணமாகவே இன்று பெண்களின் வளர்ச்சிகள் ஆலமரமாக வேரூன்றி வளர்ந்து நிற்கின்றன.

அதற்காக பாலின பேதங்கள் ஒழிந்துவிட்டதாக அர்த்தம் அல்ல. அவர்கள் தூவிய விதைகள் முளைத்து வளர்ந்துள்ளன. அவ்வளவுதான்.

அதனை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல வேண்டிய கடமை இன்றைய ஒவ்வொரு பெண் எழுத்தாளர்களுக்கும் உண்டு. எழுத்துதான் நம்முடைய ஆயுதம். ஆனால் இன்றைய அந்த எழுத்து என்கிற ஆயுதம் முனை தேய்ந்து அதன் கூர்மையை இழந்துவிட்டதாக தோன்றுகிறது.

சமீப கால குடும்ப நாவல் எழுத்தாளர்கள் இந்த வளர்ச்சியை வேரோடு தகர்க்குமளவுக்காய் ஆணாதிக்க உணர்வை உயர்த்தி பிடிக்கிறார்கள். பலரின் நாவல்கள் அத்தகைய ஆணாதிக்க உணர்வுகளை பிரதிபலிக்கின்றன.

ஆணாதிக்கத்தை கொண்டாடும் மனநிலை ஒரு புறம் என்றால் அவர்களே பெண்ணின் சுதந்திரத்தை போட்டு உடைக்கும் நிலையும் கூட உருவாகியுள்ளது.

நமக்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்திற்கு பின்னிருக்கும் வலியை புரிந்து கொள்ளாத அலட்சிய மனபோக்கு நிறைய பெண் எழுத்தாளர்களின் வரிகளில் காண முடிகிறது.

ஆண் என்பவனிடம் ஆதிக்கத்தில் அடங்கி இருக்கிறாள் அல்லது காதலால் அடங்கி இருக்கிறாள். பெண்களின் தனித்துவம் இது போன்ற எழுத்துக்களிலும் கதைகளிலும் மீண்டும் கேள்விகுறியாக்கப்பட்டுள்ளன.

முன்பிருந்த பெண் எழுத்தாளர்ளுக்கு இருந்த தெளிவு இப்போது நம்மிடம்  இருக்கிறதா? நாம் அடுத்த நிலையை எட்ட முயல்கிறோமா? நம்முடைய வருங்கால சந்ததிகளுக்கு நாம் என்ன தந்துவிட்டு செல்ல போகிறோம்?

இது போன்ற கேள்விகளை நாம் நம்மிடமே கேட்டு பதில் தேட வேண்டும்.

மாற்றம் எழுத்திலிருந்து உருவாகிறது. கதைகளிலிருந்து சமுதாயங்களில் பரவுகிறது. அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும். 

அன்றும் சரி இன்றும் சரி. இலக்கியங்கள் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இடமாகவே இருக்கின்றன. ஏன்? ஆண் எழுத்தாளர்கள் தங்கள் ஆளுமையை தக்கவைத்து கொள்கிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு எழுத்து துறையில் பெண்கள் அடுத்த நிலையை எட்டுவதில் தயக்கம் காட்டுகிறார்கள்.

 அவர்களுக்குள் இருந்த போராட்ட குணம் மலிந்து வருகிறது.  

உச்சம் தொட்டு உயரத்தில் நிற்பதாக எண்ணி கொண்டிருக்கும் பெண் எழுத்தாளர்கள் தாங்கள் நின்று கொண்டிருக்கும் பாதையில் பதிவான வலி நிறைந்த வரலாறுகளை படித்தறிந்து கொள்வது அவசியம்.

அதற்கு அம்பையின் ‘உடலெனும் வெளி’ படிக்க வேண்டும். 

 

You cannot copy content