You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Vithaipanthu-6

Quote

இரசனையும் படைப்புகளும்!

தத்தித்தா தூதுதி தாதுதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?

[வண்டே! தத்தி தாது ஊதுதி - தாவிச் சென்று பூந்தாதினை ஊதி உண்ணுகின்றாய்; தாது ஊதித் துத்தி - பூந்தாதினை ஊதி உண்ட பின்னர் மீளவும் தாவி எங்கோ செல்லுகின்றாய்; துத்தி துதைதி - துத்தி என ரீங்கார ஒலி எழுப்பியபடியே மற்றொரு பூவினை நெருங்குகின்றாய்; துதைந்து அத்தாது ஊதுதி - அப் பூவினை அணுகி அதனிடத்துப் பூந்தாதினையும் ஊதி உண்ணுகின்றாய். தித்தித்த தாது எது நினக்கு இனிப்பாயிருந்த பூ எதுவோ? தித்தித்தது எத் தாதோ - இனித்திருந்தது எதன் மகரந்தமோ? தித்தித்த தாது - இதழாக அழகியதும் எப் பூவோ? துதைந்து என்ற சொல் துதைத்து என விகாரமாயிற்று. தாது - பூந்தாது, பூவிதழ், பூ என மூன்றையும் குறிப்பதாம்]

இப்படிப்பட்ட இலக்கிய சுத்தமான பாடலை இலகுவாக புரிந்துக்கொண்டு ரசிக்கச் சிலரால் முடியும்.

பூ பூக்கும் ஓசை....

அதைக் கேட்கத்தான் ஆசை!

புல் விரியும் ஓசை...

அதைக் கேட்கத்தான் ஆசை!

என எளிமையாகச் சொன்னால்தான் பலரால் இரசிக்கவே முடியும்.
மக்களுடைய ரசிப்புத்தன்மை என்பதை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடக்கிவிட முடியாது.
ஒரு சிலருக்கு இயற்கையை ரசிக்கப் பிடிக்கும்.

ஒரு சிலர் விலங்குகளையும் பறவைகளையும் ரசிப்பார்கள்.
சுவைத்து ரசித்துச் சாப்பிடச் சிலருக்குப் பிடித்தால், ரசித்து ரசித்து விதம் விதமாகச் சமையல் செய்யச் சிலருக்குப் பிடிக்கும்.

ஒருவரது ரசனை அவர்களால் சுலபமாக அணுக முடிந்த விஷயத்தைச் சார்ந்ததாகவே இருக்கும்.

அந்த காலம் தொட்டு பெண்களின் ரசனை சமையல், கோலம் போடுவது, அழகாக ஒரு தோட்டத்தைப் பராமரிப்பது வாய்ப்பு கிடைத்தரவர்க்ளுக்கு சங்கீதம் நடனம் என ஒரு வட்டத்துக்குள் அமைந்ததே துரதிர்ஷ்டம்.

அவர்களது ரசனை அதனைக் கடந்து எழுத்து, இலக்கியம், விஞ்ஞானம் என வளர்வதற்கு ஒரு நூறாண்டு காலம் தேவைப் பட்டது.

ரசனையும் படைப்பாற்றலும் ஒன்றை ஒன்று சார்ந்தவை.
தானே ரசிக்காத ஒன்றை ஒருவரால் படைக்க இயலாது.
ஒவ்வொரு படைப்பாளியும் ஒரு ரசிகராகத்தான் இருக்கமுடியும்.

தான் ஆழ்ந்து ரசித்த ஒவ்வொரு விஷயத்தையும் தானே படைக்கவேண்டும் என்ற வேட்கைதான் அவர்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்கிறது.

அதை அடுத்தவர் பாராட்டும்பொழுது அந்த படைப்பாற்றல் வேறு நிலைக்குப் போகிறது.
இந்த சமூக வலைத்தளங்கள் தலையெடுப்பதற்கு முன்புவரை, அதாவது ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை பல திறமையாளர்களுக்கு அங்கீகாரம் என்பது ஒரு எட்டாக்கனியாகவே இருந்தது.

ஆனால் இன்றோ சாமானியர்கள் கூட தங்கள் திறமைகளை ஒரு பெரிய சமூகத்தின் முன் நிறுத்த அவர்களுக்கு வாய்ப்பிருக்கிறது.

உண்மையாகவே திறமை இருப்பவர்கள் பலரால் ரசிக்கப்படுகிறார்கள், புகழப்படுகிறார்கள்.

சிலர் நேர்மறையாகச் சென்றால், சிலர் எதிர்மறையாகச் சென்று இங்கே தங்களை நிலைநிறுத்த முயல்வதும் நடக்கிறது.

காரணம், பல ஆண்டு காலமாக அடக்குமுறைகளுக்குள்ளேயே வாழ்ந்து புழுங்கித் தவித்த பெண் சமுதாயம், கடந்த நூற்றாண்டில்தான் தன் கூட்டை விட்டு வெளியே வந்து சுதந்திர காற்றைச் சுவாசித்தது.

என்னதான் படித்து வேலைக்குச் சென்று பொருள் ஈட்டினாலும், கணவர், மாமியார் நாத்தனார் உட்பூசல்களுடன் கூடிய வீட்டுக்கடமைகள் மற்றும் அலுவலக/ தொழில் சார் கடமைகள் என இரண்டு படகுகளில் சவாரி செய்ய வேண்டிய சூழ்நிலை இருபாலரில் பெண்களுக்கு மட்டுமே இருந்தது. (இன்றும் இருக்கிறது)

இதற்கிடையில் மகப்பேறு, பிள்ளை வளர்ப்பு, பிள்ளைகளின் கல்வி எனப் பெண்கள் அனைத்தையும் ஒரு கை பார்க்கத்தான் செய்தார்கள்.
ஆனாலும் அன்னையும் பாட்டியும் பட்ட இன்னல்களையும் அடக்குமுறைகளையும் பார்த்தும் கேட்டும் வளர்ந்ததால் தற்பொழுது காட்டாற்று வெள்ளமென அனுபவிக்கும் சுதந்திரம் இத்தலைமுறை பெண்கள் சிலரைப் புகழ் எனும் போதைக்கு அடிமையாக்கி எதிர்மையான பாதைக்கு இட்டுச்செல்கிறது எனலாம்.

அதன் வெளிப்பாடுதான் இந்த 'டிக் டாக்' செயலி போன்ற சமூக ஊடகங்கள் மூலம் அவர்கள் தம்மை வரம்பு மீறிக் காட்டிக்கொள்ளக்கூடக் காரணம்.
எழுத்துலகிலும் கூட இதுதான் நடக்கிறது.

ஒரு சிலர் எதிர்மறையாகத் தகாத விஷயங்களை இணைத்து எழுதுவதால், பொதுப்படையாக எல்லா பெண் எழுத்தாளினிகளுமே, (எழுத்தாளர் என்பதே ஆண் பெண் இருவருக்கும் பொதுவான வார்த்தைதான். எழுத்தாளிணி என்ற வார்த்தை தமிழில் இல்லவே இல்லை. ஆனால் இப்படி சொல்வதால் தவறொன்றும் இல்லை என நினைக்கிறேன்.) இகழ்ச்சிக்கு உள்ளாகிறார்கள் என்பது கசப்பான உண்மை.
இயற்கையே ஒரு பெண்ணை படைப்பாளியாகத்தான் படைத்திருக்கிறது.
ஒரு உயிரை இந்த உலகத்திற்குக் கொண்டு வருவதில் ஒரு பெண்ணின் பங்கு அளப்பரியது.

பெண் நினைத்தால் மட்டுமே உயிர்கள் உலகில் நிலைத்திருக்கும்.
ஒரு கற்பனைக்கு, உலகில் உள்ள பெண்கள் அனைவரும் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் எனச் சொல்கிறார்கள் என்று வையுங்கள், ஒரு சில வருடங்களில் இங்கே மனித இனம் என்ற ஒன்றே இல்லாமலே போய்விடும்.
அதை யாருமே உணரவில்லை.

பெண்கள் முன்னேற்றம் அடைந்துவிட்டாரகள்.
பெண்கள் எல்லா துறைகளிலும் கால் ஊன்றி இருக்கிறார்கள் என நாம் பெருமைப் பட்டுக்கொண்டாலும் இன்னும் கூட ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகள் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

ஆண்களின் அடி மனதில் பெண்ணை அடிமைப் படுத்தும் எண்ணம் என்பது முற்றிலுமாக ஒழியவில்லை.
இன்றைய அவளின் வாழ்க்கை முறை ஆண்களால் வரையறுக்கப்பட்டதுதான்.
நம் சமூகத்தைப் பொறுத்தமட்டில் இன்றளவும் ஒரு பெண் அதிகாலை கண் விழிக்கும் முன்னமே அவளது அன்றாட பணிகள் கண் விழித்து விடும்.
காலை சிற்றுண்டிக்கு என்ன செய்வது என்பதுதான் அவளது ஆகச்சிறந்த முதல் கவலையாக இருக்கும்.

'என்ன இன்னைக்கு ஒரே ஒரு சைட் டிஷ் தானா?'
'தினமும் இதே இட்லி; இதே தோசை! வேற வெரைட்டி செய்யக்கூடாதா?' என்ற கேள்விகள் மற்ற அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிவிடும்.
'நேத்து என்ன டிபன் செஞ்சோம்; முந்தாநாள் என்ன குழம்பு வெச்சோம்' இதையல்லாம் சிந்தித்து பார்த்து அன்றைய உணவு வகைகளைத் திட்டமிட வேண்டும்.

வருவாய் ஈட்ட வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தாலும் சரி வீட்டில் இருந்து குடும்பத்தை கவனிக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி எல்லோருமே இந்த கவலைகளைப் பட்டே தீரவேண்டும்.

பூரண அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் குடும்பத்தை கவனித்தாகவேண்டிய பொறுப்பு ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிகம். காரணம் இயற்கையே அவள் மேல் சுமத்தியுள்ள கருணை, தாய்மை போன்ற அடிப்படை பண்புகள்.
இந்த நிலையில் ஒரு ஆணை காட்டிலும் பெண் ஒரு துறையில் முன்னேறிச் செல்கிறாள் என்றாள் அவள் ஒரு ஆணை காட்டிலும் வலிமையாக இருக்கிறாள் என்று பொருள்.
அதுவும் பெண் ஒரு எழுத்தாளராகச் சிறு அங்கீகாரம் பெறுகிறாள் என்றால் அது இமாலய சாதனையே.

ஆண் இலக்கியவாதிகள் போல நம் பெண் எழுத்தாளர்கள் ஒன்றும் இந்த திறமையை வருவாய் ஈட்ட என்று பயன்படுத்துவதில்லை.
சமையல் அறையிலேயே நாம் ஆயுள் முழுதும் முடங்கிவிடுவோமோ என்ற கேள்வி, அவளை அடுத்தடுத்து எழுதத் தூண்டுகிறது.
பெண்களைப் பொருத்தமட்டும் இந்த எழுத்தார்வம் என்பது ஒரு வேட்கை. வெறும் பொழுதுபோக்கல்ல.

இத்தனை இன்னல்களுக்கு நடுவில் நல்ல விஷயங்களை மட்டுமே நம் வாசகர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்கிற கொள்கை கோட்பாடுகளுடன் எழுதும் எழுத்தாளினிகளுக்கு தகுந்த அங்கீகாரத்தை வாசகர்களால் மட்டுமே கொடுக்கமுடியும்.
மேலும் இணையம் மூலம் நாம் வாசிப்பதையும், நாம் விமர்சிப்பதையும், நாம் இடும் ஒவ்வொரு 'comment மற்றும் likes' அனைத்தையும் பல கண்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன.

நாம் தவறாக எழுதினாலும் சரி தவறான எழுத்துக்குத் துணை போனாலும் சரி கட்டாயம் இகழ்ச்சிக்கு உள்ளாவோம் என்பதே உண்மை.
எனவே தேர்ந்தெடுத்து தரமாக எழுதுவோம்! தரமான எழுத்துக்களைத் தேடிப் படிப்போம்!
**

சிறகுகள் தேவை...
சுதந்திரமாய் சுற்றித் திரிய அல்ல...
குடும்பத்தலைவி என்ற கூட்டுக்குள்ளே இருந்தாலும்கூட...
என்னாலும் விண்ணைத் தொட முடியும் என்ற தன்னம்பிக்கைக் காக-

எனக்கு மென் சிறகுகள் தேவை...
கரண்டிகள் என் கைத்தடியாக மாறிப்போகாமல் இருக்க...
எனக்குச் சிறகுகள் தேவை...
துடைப்பதோடு துடைப்பமாய்…
என் ஆற்றலும் மூலையில் முட்டிக்கொண்டு நிற்காமல் இருக்க...

சிறகுகள் தேவை...
கழிவிரக்கம் என்னைக் கடித்துத் தின்னாமல் இருக்க...
சிறகுகள் தேவை...
தொலைக்காட்சி பெட்டிக்குள் நான் தொலைந்துபோகாமல் இருக்க...

என் சிறகுகள்...
என் சிந்தனையில் பிறந்து-
என் விரல் வழி உயிர் பெரும் எழுத்துக்கள்...

என் சிறகுகள்....
எனக்கான அங்கீகாரம்.
ஒவ்வொருவருக்கும் சிறகுகள் முளைக்கலாம் ...
அவை உங்களை அங்கீகரிக்கலாம்!

(விதைப்போம்)

Uploaded files:
  • விதை6.jpg
kavyajaya and Avinash Tony have reacted to this post.
kavyajayaAvinash Tony
Quote

மகிழ்ச்சி

monisha has reacted to this post.
monisha
Quote

Sooper.. and nitharsana unmai

monisha has reacted to this post.
monisha

You cannot copy content