You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic thriller

Iru thruvangal-26to30

26

பிரம்மாஸ்திரம்

விடிந்தவுடன் விந்தியா புறப்பட தயாராகிக் கொண்டிருக்க ஆதித்தியா அவளைப் போக வேண்டாம் என தடுத்தான். முடிந்த வரை சீக்கிரம் வந்துவிடுவதாகச் சொல்ல அப்படியும் ஆதித்தியா சமாதனமாவதாகத் தெரியவில்லை. கடைசியில் ஆதித்தியா விந்தியாவின் பிடிவாதத்திற்கு ஒத்துப்போக வேண்டியே இருந்தது.

விந்தியா அன்று ஹோட்டலுக்கு வந்தது சிவா கேட்ட ஆதாரத்தை வேறு யாரின் கையிலும் கிடைக்காமல் தானே அவனிடம் கொடுக்க வேண்டுமே என்ற அவசியத்தால்.

நேராக அவள் தன் அறைக்குள் நுழைந்தவுடன் மேனேஜர் ரமேஷை அழைத்தாள்.

ரமேஷ் உள்ளே நுழைந்தவுடன், ஆதித்தியா சார் எப்படி இருக்காரு?” என்று நலம் விசாரித்தான்.

ஹி இஸ் பைஃன்… நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆயிடுவார். அப்புறம் ரமேஷ் நான் பழைய சிசிடிவி ரெக்காடிங்ஸை பேக்அப் எடுக்கச் சொன்னனே… அந்த ரெக்காடிங்ஸ் வந்துருச்சா?

எஸ் மேடம்என்று சொல்லிவிட்டு ரமேஷ் ஒரு சீ. டி யை அவளிடம் தயக்கத்தோடு கொடுத்தான்.

தேங்க்ஸ் ரமேஷ்!என்று சொல்லிவிட்டு சீ. டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

மேடம்… ஒரு நிமிஷம்… அந்தச் சீ. டி எதுக்குனு நான் தெரிஞ்சிக்கலாமா?

விந்தியா அவன் ஏன் கேட்கிறான் எனப புரியாதவளாய், நம் ஹோட்டலில் நடந்த டெத் பத்தின விசாரணைக்காக போலிஸ் கிட்ட கொடுக்கணும்

ரமேஷுக்கு முகமெல்லாம் வியர்த்துப் போனது.

அந்த ஆக்ஸிடென்ட் நடந்த போதே போலீஸ் கேட்ட எல்லா ஆதாரத்தையும் கொடுத்தாச்சு

அத பத்தி எனக்குத் தெரியல ரமேஷ்… அப்போ கொடுத்த ஆதாரத்தில் தப்பு இருக்குனு இன்ஸ்பெக்டர் சிவா பீஃல் பண்றாரு… அதை நாமதானே தெளிவுபடுத்தனும்என்று சொன்னாள்.

ரமேஷின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டவளாய்,நீங்க ஏன் இத்தனை கேள்வி கேட்கீறீங்க? இந்த ஆதாரத்தினால் உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா?என்று கேட்டாள் விந்தியா.

இல்ல மேடம்… அது உங்களுக்குத்தான் பிரச்சனைஎன்றான்.

எனக்கு பிரச்சனையா?என்று குழப்பமாகக் கேட்டாள்.

நீங்களே அந்த சீ.டியை போட்டு பாருங்கஎன்றான்.

அப்படி என்ன இருந்துவிட போகிறதென ஆவலுடன் அந்த சீ. டியை தன்னுடைய லேப் டாப்பில் போட்டு பார்த்தாள். அவள் சொன்ன குறிப்பிட்ட தேதியில் ஹோட்டல் முழுக்க உள்ள கேமராக்களின் பதிவுகள் அடங்கியிருந்தன.

ரமேஷ் சொன்னபடி கேமரா நம்பர் 61 பதிவை திறந்து பார்த்தாள். அறை எண் 603 கதவு பளிச்சென்று தெரிந்தது.

இரவு வெகு நேரம் கழித்துக் கேத்ரீன் தள்ளாடிக் கொணடு நுழைய அவள் போன சில நொடிகளில் ஆதித்தியாவும் பின்னோடு நுழைந்தான். அதைப் பார்த்த கணத்தில் விந்தியா அப்படியே உறைந்து போனாள்.

என்ன நடந்தது என்று யூகிக்க முடியாமல் தலை மேல் பெரும் பாரம் இறங்கியது. இவைகளுக்கான விளக்கம் என்ன என்பது போல் கேள்வி குறியோடு ரமேஷை பார்க்க அவன் நடந்ததைத் தெளிவாக உரைத்தான்.

சந்திரகாந்த் சார் வெளிநாட்டுக்கு ஒரு ஆர்டர் விஷயமா போயிருந்த சமயத்தில் ஆதித்தியா சார்கிட்டதான் பொறுப்பை கொடுத்துட்டு போனாரு. அந்த இன்சிடன்ட் நடந்த நைட் மிஸ். கேத்ரீன் குடிச்சிட்டு வந்து ஆதித்தியா சாரை மீட் பண்ணனும் என்று ரொம்பக் கலாட்டா பண்ணாங்க… பட் நான் அலோவ் பண்ணல.

அப்புறம் கேத்ரீன் போன பிறகு நான் அவங்க கொடுத்த விசிட்டிங் கார்ட்டை கொடுத்தேன். அப்புறம் கேத்ரீன் அதிகப்படியான போதையில் வந்தது பற்றியும் சொன்னேன்.

 உடனே ஆதித்தியா சார் என்கிட்ட எதுவும் சொல்லாம வேகமா போயிட்டாரு… அந்த நேரத்தில்தான் ரூம் நம்பர் 603 ல் இருந்து ஒரு பெண் தவறி விழுந்துட்டதா நீயூஸ் வந்துச்சு.

அந்த நேரம் பார்த்து ஆதி சார் எங்க போனாருனு தெரியல. நான் உடனே சமுத்திரன் சாருக்கு போன் பண்ணேன். அவர் வந்த பிறகுதான் இறந்தது கேத்ரீன் என எனக்குத் தெரிய வந்தது மேடம்என்று அன்று நடந்த சம்பவத்தைச் சொல்லி முடித்தான்.

ஓகே… அந்த சீசிடிவி ரெக்காட்டிங்க்ஸை மாத்தினது யாரு?

சமுத்திரன் சார்கிட்ட கேத்ரீன் ஆதித்தியாவை மீட் பண்ண வந்ததைப் பத்தி நான்தான் சொன்னேன். அப்புறம் சமுத்திரன் சார்தான் இந்தப் பிராப்ளத்தை சால்வ் பண்ணறதுக்காக…என்று சொல்லி முடிக்கும் போதே விந்தியா கோபமானாள்.

அந்த சமுத்திரன் கிரிமனல் லாயரா இல்ல கிரிமனலா?” என்றாள்.

இல்ல மேடம்… ஆதித்தியா சாரை காப்பாற்றத்தான்

ஸ்டாப் ட் ரமேஷ்… தானா நீந்தி கரையேறுபவனை காப்பாத்துறேனு தண்ணில அமுக்கி கொல்ற மாதிரி இருக்கு… நீங்க சொல்ற கதை

ரமேஷ் அப்படியே மெளனமாய் நின்றான். விந்தியா தீவரமாய் யோசித்து விட்டு சொன்னாள்.

வேற வழியே இல்லை… இந்த சீடியை போலீஸ்கிட்ட கொடுத்துதான் ஆகணும்என்றாள்.

மேடம் ஆதித்தியா சார்…

பொய் எதுக்கும் தீர்வில்லை ரமேஷ். உண்மையை மறைப்பது நமக்கு மேலும் மேலும் சிக்கலைத்தான் அதிகமாக்கும்என்று விந்தியா சொல்லிவிட்டு சோர்வுடன் தலையில் கை வைத்து கொண்டாள். ரமேஷ் அவளை தனிமையில் விட்டுவிட்டு அங்கிருந்து அகன்றான்.

இங்கே விந்தியா கவலையோடு வீழ்ந்து கிடக்க, அங்கே தித்தியா தவிப்புடன் காத்துக் கிடந்தான்.

ஆதித்தியாவிற்கு விந்தியா இல்லாத நொடி பொழுதும் யுகங்களாய் தோன்றியது. சந்திரகாந்தும் சமுத்திரனும் ஆதித்தியாவை பார்க்க வந்த போது அங்கே விந்தியா இல்லாதது அவர்களுக்கே அதிர்ச்சியா இருந்தது. கடைசியில் அன்று இரவு சமுத்திரனே ஆதித்தியாவோடு தங்கினான்.

விந்தியாவிற்கு அப்படி என்ன முக்கியமான வேலை வந்திருக்கும்… அதுவும் உன்னைக் கூட கவனிச்சிக்க முடியாத அளவுக்குஎன்று ஆதியை தூண்டி விட்டான் சமுத்திரன்.

இங்க அவ வராமல் இருக்கானா… அதுக்கு ஏதாவது முக்கியமான ரீஸன் இருக்கும்என்றான் ஆதித்தியா. அதற்கு மேல் விந்தியாவைப் பற்றி எதுவும் பேசாமல் சமுத்திரன் அமைதியானான்.

அன்று இரவு கோவாவிலிருந்து சிவாவும் வேணுவும் சென்னை வந்து இறங்கினர்.

சிவா வீட்டை அடைந்த போது அங்கே விந்தியாவை எதிர்பார்க்கவில்லை. அவள் சோபாவில் அமர்ந்து கொண்டு சிந்துவோடு விளையாடிக் கொண்டிருந்தாள். சிவா வந்ததும் தன் பொருட்களை எடுத்து வைத்து விட்டு உடை மாற்றிக் கொண்டு வந்தான்.

அதற்குள் சிந்து விந்தியாவின் கைகளிலேயே உறங்கிப் போக, வனிதா அவளைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டாள்.

விந்தியாவும் சிவாவும் வெகு நேரம் மௌனமாகவே இருக்க முதலில் சிவா அவன் மனதில் தோன்றியதை கேட்டான்.

ஏதோ கேட்கணும்னு வந்துட்டு இப்படியே அமைதியா இருந்தா என்ன அர்த்தம் விந்து?

பேக்கில் இருந்த சீடியை அவனிடம் நீட்டினாள்.

கேட்க வரல… கொடுக்க வந்திருக்கேன். இது என் கையில் இருந்தா தேவையில்லாத டென்ஷன்… பிடி… நான் கிளம்பணூம்

நீ டென்ஷனாகிற அளவுக்கு அப்போ இந்த சீடில ஏதோ இருக்கு… நீ தேடி கண்டுபிடிச்சி கட்டிக்கிட்டியே அந்த நல்லவன் சம்பந்தப்பட்ட ஆதாரமா?

சிவா அந்த ஆதாரத்தைப் பார்க்காமலே சரியாக யூகித்தான்.

இதான் டைம்னு குத்திக் காட்டுறியா?என்றாள் விந்தியா.

அதெல்லாம் இல்ல… இந்த ஆதாரம் என் கைக்கு வந்துட்டா அப்புறம் நடக்கப் போகிற எதையும் என்னாலயும் தடுத்து நிறுத்த முடியாது

கோ ஹெட்… ஆதித்தியா தப்பு செய்யலனா இந்த ஆதாரத்தால் அவரை ஒண்ணும் செய்ய முடியாதுஎன்று சொல்லியபடி விந்தியா சீடியை அவன் அருகில் வைத்து விட்டு புறப்பட்டாள்.

ரொம்ப லேட்டாயிடுச்சு… நானும் துணைக்கு வர்றேன்

இல்ல… வேண்டாம்… காரிலதான் வந்தேன். இனிமே நீ எனக்கு துணைக்கு வர முடியாது… உன் வழியும் என்னோட வழியும் வேற வேறாயிடுச்சுஎன்று சொல்லிவிட்டு விந்தியா புறப்பட அவள் சென்ற வழித்தடத்தைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

விந்தியா வீட்டை அடைந்ததும் சந்திரகாந்த் வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தார்.

என்னம்மா இவ்வளவு லேட்டாயிடுச்சு…என்றார்.

நான் அத்தை வீட்டுக்கு போயிட்டு வந்தேன்

ஒ அப்படியா! சரி பரவாயில்ல… நாளைக்குக் காலையில் ஆதிக்கு டிஸ்சார்ஜ்… நீயும் வர இல்ல

இல்ல மாமா… நீங்க போயிட்டு வாங்கஎன்று சொல்லிவிட்டு மாடியிலிருந்த தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.

சந்திரகாந்திற்கு அவளின் போக்கே விளங்கவில்லை.

விந்தியாவிற்கு அந்த அறையின் வாசனையும் ஆதித்தியாவை நினைவுப்படுத்தியது. அன்றைய நீண்ட இரவும், தனிமையும் விந்தியாவிற்குப் பெரும் வலியாக இருந்தது.

ஆதித்தியா விழித்திருக்கும் அந்த இரவு விளக்குகளோடு அவனும் விந்தியாவைப் பற்றி நினைத்தபடி விழித்திருந்தான்.

பொழுது விடிந்து விட்ட போதும் விந்தியாவை சூழ்ந்திருந்த குழப்பங்கள் இருளாய் படர்ந்திருந்தன. வாசலில் கார் நின்ற சத்தம் கேட்க ஆதித்தியாவின் வருகை விந்தியாவை மேலும் கலவரப்படுத்தியது.

அவனிடம் எதற்கான விளக்கத்தைக் கேட்பது… நடக்கும் பிரச்சனையை எப்படி விவரிப்பது என்று புரியாமல் திணறினாள்.

சிவா தன்னிடமிருந்த அந்த ஆதாரத்தை வேணு மகாதேவனிடம் காண்பித்தான்.

வெல் டன் சிவா… கிரேட்…என்று ஆரவாரித்தார்.

சிவாவின் மனிதில் துளி கூட சந்தோஷம் ஏற்படவில்லை.

இந்தக் கேஸோட பெரிய முடிச்சு அவிழ்ந்திடுச்சு. நம்ம கையில சிக்கியிருக்கிறது பிரம்மாஸ்திரம் சிவா… சரியா உபயோகப்படுத்தணும். இனி ஆதித்தியாவோட பிடி நம்ம கையிலஎன்றான் வேணு அதீத உற்சாகத்தோடு.

இந்த ஆதாரத்தை மட்டும் வைச்சு நாம ஆதியை குற்றவாளினு சொல்ல முடியாதுஎன்றான் சிவா

அது நமக்கு தேவையில்லாத விஷயம்… ஆதித்தியா குற்றவாளியா இல்லையா என்பதை கோர்ட் முடிவு பண்ணிக்கும்… நான் கமிஷனரை பார்த்துட்டு வர்றேன்… கெட் ரெடி சிவா… நாம ஆதித்தியா வீட்டுக்கு போகணும்என்றார்.

விந்தியாவின் முன்னிலையில் ஆதித்தியாவை கைது செய்யப் போகும் தருணத்தை நினைத்தாலே சிவாவிற்கு நிலை தடுமாறியது.

ஆதித்தியா ரொம்பவும் பொறுமையாக தன் அறைக்குள் நுழைந்தான். அவனுடைய வலது காலில் லேசான வலியிருந்தது. உள்ளே நுழைந்ததும் அவன் பார்வை விந்தியாவைத் தேடியது.

அவள் சோபாவில் கால்களைத் தூக்கி வைத்துக் கொண்டு தலையைச் சாய்த்தடி துவண்டு இருந்ததைப் பார்த்து அவனுக்கும் இனம் புரியாத சோகம் தொற்றிக் கொண்டது.

மெல்ல நடந்து வந்து அவள் நெற்றியில் கை வைத்தான். அவன் தொடுகையை உணர்ந்தவுடன் விந்தியா எழுந்து விலகி நின்று கொண்டாள்.

என்னாச்சு… உடம்பு சரியில்லையா?” என்று ஆதி கேட்கவும், ‘இல்லை என்பது போல் முகத்தைப் பார்க்காமல் தலையாட்டினாள் விந்தியா.

அப்புறம் ஏன் நீ இவ்வளவு டல்லா இருக்கே?

நான் நல்லாதான் இருக்கேன் ஆதி

எனக்கு அப்படித் தோணல

என்னைப் பத்தி விடுங்க… உங்களுக்கு காலில் வலி குறைஞ்சிருக்கா?

அந்த வலியை விட மனசில ஏற்பட்ட வலிதான் அதிகமாயிருக்கு… காலையிலிருந்து இப்ப வரைக்கும் நீ எனக்கு விஷ் பண்ணுவேன்னு வெயிட் பண்ணிட்டிருக்கேன்… தெரியுமா?”

விந்தியா ஏதோ நினைவுக்கு வந்தவளாய், ஓ சாரி… இன்னைக்குதான் உங்களோட பிறந்த நாளா?”

தெரியாத மாதிரி கேட்கிற? அன்னைக்கே சொன்னேன், மறந்துட்டியா? இட்ஸ் ஓகே… ஒண்ணும் பிரச்சனை இல்லைஎன்றான்.

விந்தியாவிற்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. ஆதித்தியா அவளின் உணர்வுகளைக் கவனிக்கால் அவன் இடது கையிலிருந்த பூங்கொத்தை நீட்டினான்.

திஸ் இஸ் பாஃர் மை டார்லிங்… என் வாழ்க்கையை மாற்றிய தேவதைக்காக…என்று சொல்லியபடி ஆதி அழகான அந்தப் பூங்கொத்தை விந்தியாவிடம் நீட்டினான்.

அழகான சிவப்பு நிற ரோஜாக்கள் கொண்ட பூங்கொத்தோடு ஆதித்தியா நிற்க அந்தத் தருணத்தின் இன்பத்தை அனுபவிக்க முடியாமல் விந்தியா தவித்தாள்.

27

நட்பும் காதலும்

ஆதித்தியா பூங்கொத்தை நீட்டி கொண்டிருக்க விந்தியா நடக்கப் போவதை எண்ணி பயம் கொண்டவளாய் நின்றாள். அவளின் கவலை புரியாமல் விந்தியாவின் செயல் குறித்து அவனே அர்த்தம் கற்பித்துக் கொண்டான்.

இதை வாங்கிட்டா நான் உன்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துப்பேனோன்னு பயப்படுறியா? உன்னோட அனுமதி இல்லாம என் விரல் நகம் கூட உன் மேல படாது… பிராமிஸ்என்றான்.

நான் அப்படியெல்லாம் யோசிக்கல ஆதிஎன்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சண்முகம் வந்து கதவை தட்டினார்.

விந்தியா சென்று கதவை திறக்க ஆதித்தியா பூங்கொத்தை படுக்கை மீது வைத்தான்.

ஆதி ஐயாவை பெரிய ஐயா கூப்பிட்டாருஎன்றான் சண்முகம்.

எதுக்கு?” என்று ஆதி கேட்டுக் கொண்டே சண்முகத்தை நெருங்கி வந்தான்.

கீழே போலீஸ் வந்திருக்காங்க… ஏதோ கேஸ் விஷயமா உங்களை பார்க்கணுமாம்என்றான்.

என்னை பார்க்கணுமா?என்று அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டே ஆதித்தியா கீழே சென்றான்.

விந்தியாவிற்கு கீழே போகவே தயக்கமாய் இருந்தது. நடக்கப் போவதை தடுக்க முடியாது எனும் பொழுது ஆதியின் நிலைமையைப் பார்க்கவும் சிவாவின் சங்கடத்தை எதிர்கொள்ளவும் முடியாமல் விந்தியா அறையின் உள்ளேயே தங்கி விட்டாள்.

வேணு மகாதேவன் வெளியில் காத்திருக்க சிவா மட்டும் உள்ளே நுழைந்தான். விந்தியா ஆதித்தியாவை திருமணம் செய்து கொண்டதினால் அந்த வீட்டிற்குள் வர விருப்பமில்லாமலிருந்த சிவாவிற்கு இப்படி ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

சிவா சந்திரகாந்திடம் நடந்தவற்றை விளக்கமாகக் கூற அதை நம்ப முடியாமல் அதிர்ச்சியானார். ஆதித்தியா இப்படிப்பட்ட செயலை செய்யக் கூடியவன் அல்ல என்ற உறுதியான நம்பிக்கை இருந்த போதும் மனம் கலக்கமுற்றது.

ஆதித்தியா நேராக இறங்கி வந்து சிவாவை எதிர்கொண்டு நின்றான்.

என்ன விஷயம்?என்றான் ஆதி.

கேத்ரீனோட கேஸில் நீங்கதான் குற்றவாளினு சந்தேகமா இருக்கு… உங்களுக்கு எதிரா பலமான ஆதாரங்கள் இருக்கு மிஸ்டர். ஆதி. சோ… பிரச்சனை பண்ணாம நீங்களே வந்துட்டா நல்லா இருக்கும்என்றான் சிவா

சந்திரகாந்த் ஆதிக்காக சிவாவிடம் பரிந்து பேசி கொண்டிருக்க ஆதித்தியா நடப்பவை எல்லாம் என்னவென்று புரியாமல் சிலையாக நின்றிருந்தான்.

சாரி… என்கிட்ட நீங்க பேசுறது வேஸ்ட். நீங்க யாராவது ஒரு லாயர கன்ஸல்ட் பண்ணுங்க. இப்ப நாங்க ஆதியை அழைச்சிட்டு போறோம். போலாமா மிஸ்டர். ஆதிஎன்று சிவா அழைத்ததும் ஆதித்தியா மெளனமாக நடந்தான்.

ஒரு புறம் விந்தியாவிடம் இந்த விஷயத்தை எப்படி புரிய வைப்பது என்பது பற்றிய கவலையும் கேத்ரீனின் இறப்பு பற்றிய குழப்பமும் அவனை வேதனைக்குள்ளாக்கியது.

சந்திரகாந்த் உடனே சமுத்திரனை தொடர்பு கொண்டு நடந்த அனைத்தையும் விளக்கமாகக் கூறினார். விந்தியா மாடியிலிருந்து இறங்கி வராமல் இருந்தது சந்திரகாந்த்திற்கு புரியாத புதிராய் இருந்தது. அவளுக்கு ஆதித்தியாவை கைது செய்யப் போவது பற்றி முன்னாடியே தெரிந்திருக்குமோ என்ற சந்தேகம் தோன்றியது.

விந்தியா தன் சோகத்தை மறைத்தே பழகியவள். இம்முறையும் அவள் மனதில் உள்ள வேதனையை வெளிக்காட்டாமல் புழுங்கி கொண்டிருந்தாள் என்பது யாரும் அறிந்திருக்க வாயப்பில்லை.

வேணு மகாதேவன் எதிரே ஆதித்தியா அமர்ந்திருக்க அவர் மனதில் தோன்றிய கேள்வியை அடுக்கடுக்காகக் கேட்க தொடங்கினார். ஆதித்தியா அமர்ந்திருந்த தோரணையில் பயமும் கலக்குமும் இல்லை. ரொம்பவும் இயல்பாகவே வீற்றிருந்தான்.

பணக்கார பசங்கன்னா தலையில இரண்டு கொம்பு முளைச்சிருக்கா என்ன?”என்று கேட்டார் வேணு.

அப்படியா தெரியுது?என்று வேடிக்கையுடன் தலையைத் தொட்டுப் பார்த்தான்.

யார் முன்னாடி உட்காந்திடிருக்கனு தெரியுதா?

சொல்லுங்க… தெரிஞ்சிக்கிறேன்என்றான் ஆதி தயக்கமின்றி.

இதுவரைக்கும் நான் எடுத்த கேஸில தோல்வியே கிடையாது… தப்பு செஞ்சவன் எப்பேர்பட்டவனாய் இருந்தாலும் தண்டனை வாங்கித் தராமல் விடமாட்டேன்என்று வேணு சொன்னதும் ஆதித்தியா முகத்தில் புன்னகை மலர்ந்தது.

வேணுவின் பின்னாடி விறைப்பாக நின்றிருந்த சிவா ஆதியின் தெளிவான நடவடிக்கையைப் பார்த்து ஆச்சரியம் கொண்டான்.

கேத்ரீனை உனக்கு எப்படித் தெரியும்?”

நாங்க ரெண்டு பேரும் பேங்களூரில் பிஸ்னஸ் மேனஜ்மென்ட் படிச்சோம். அப்படித்தான் எனக்குக் கேத்ரீனை தெரியும்… ஷி இஸ் மை குட் பிரண்ட்

“ஃபிரண்டுனா உங்க அகராதியில் என்ன அர்த்தம்

எல்லா அகராதியிலும் என்ன அர்த்தமோ… அதேதான் எனக்கும்

வெறும் பிரண்டுன்னா… கேத்ரீன் எதுக்கு முக்கியமான லாக்கரோட பின் நம்பரா உன்னோட பிறந்த நாள் தேதியை வைச்சிருக்கா? ஃபிரண்டுன்னு நினைச்சாஅவ கம்பெனியோட பாதி ஷேரை உன் பேரில எதுக்கு எழுதி வைச்சிருக்கா?”

கேத்ரீன் என்னை விரும்பினா… ஆனா நான் அவளைப் பிரண்டாதான் நினைச்சேன்

சரி அப்படியே இருக்கட்டும்… நீங்க இரண்டு பேரும் பேசிக்க முடியாத அளவுக்கு உங்களுக்குள்ள அப்படி என்ன பிரச்சனை?

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல ஆதித்தியா கொஞ்ச நேரம் யோசித்தான். அதற்குள் வேணு கோபமடைந்தவராய், என்ன பொய் சொல்லலாம்னு யோசிக்கிறியா? கேட்ட கேள்விக்கு கரெக்டா பதில் சொல்லு

ஆதித்தியா நடந்தவற்றை சொல்ல தொடங்கினான்.

நாலு வருஷத்துக்கு முன்னே… படிப்பை எல்லாம் முடிச்ச பிறகு கேத்ரீனும் நானும் புது பிஸ்னஸ் ஆரம்பிக்க நிறைய ஐடியா யோசிச்சு வைச்சிருந்தோம். ஆனா சூழ்நிலை சந்தர்ப்பத்தால் கேத்ரீன் அப்பா அமரேஷ் உடல் நிலை சரியில்லாம இறந்து போனாரு. அமரேஷ் பேஃக்டரியை நிர்வகிக்க வேண்டிய நிர்பந்தம் கேத்ரீனுக்கு ஏற்பட்டது.

கம்பெனி ஷேர்ஸ் எல்லாம் கம்பிளீட்டா டவுனாயிடுச்சு… அந்த நேரத்தில் நானும் கேத்ரீனும் கிட்டதட்ட ஆறு மாதம் பாடாய்பட்டு அமரேஷ் பேஃக்டரியோட வீழ்ச்சியைத் தூக்கி நிறுத்தினோம்.

 அப்ப என் வாழ்க்கையில் இன்னைக்கு மாதிரி அன்னைக்கும் ஒரு மோசமான பிறந்த நாள் வந்துச்சு… எனக்காக அவளுடைய வீட்டில் பார்ட்டி ஏற்பாடு செஞ்சிருந்தா… நிறையப் பிரண்ட்ஸ் வந்திருந்தாங்க… நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

 கேத்ரீன் என்னைக் காதலிப்பதாகவும் அவங்க கம்பெனியோட ஐம்பது சதவீத லீகல் ஷேர் ஹோல்டராக ஆக்குறாதாவும் சொன்னாள். நான் இரண்டையும் நிராகரிச்சிட்டேன்.

கேத்ரீனால் அந்த ஏமாற்றத்தை தாங்க முடியல. ஷீ இஸ் வெரி சென்சிட்டிவ்… போதை தலைக்கு ஏறும் அளவுக்கு குடிச்சிட்டு நிலை தடுமாறி இருந்தவளை அவளோட ரூமில் படுக்க வைச்சிட்டுக் கிளம்பிட்டேன்.

அடுத்த நாள் கேத்ரீன் ரொம்பக் கோபத்தோடு என்கிட்ட சண்டை போட்டா… ஏன் எதுக்குனு ஒண்ணுமே புரியல. கடைசியாகத்தான் எனக்குப் புரிஞ்சுது… யாரோ அவ கிட்ட அன்னைக்கு நைட் தப்பா நடந்துக்கிட்டு இருக்காங்க

தட் மீன்ஸ் சுயநினைவு இல்லாத போது அவளை ரேப் பண்ணிருக்காங்க அப்படித்தானேஎன்று கேட்டார் வேணு

ம்… போதையில் இருந்ததால் அவளுக்கு யாருனு தெரியல… அவ்வளவு பெரிய பழியை என் மேல தூக்கி போட்டா. இப்படி ஒரு கேவமான பழியை என்னால தாங்க முடியல… நானும் பதிலுக்கு அவகிட்ட சண்டை போட்டேன். சண்டை முற்றி வாக்குவாதம் பெரிசாகி இரண்டு பேரும் மொத்தமா பிரிஞ்சிட்டோம்

அதுக்கப்புறம் நீ அவளைப் பார்க்கவே இல்லையா?”

அவளோட இறப்புக்கு முன்னாடி நாள் ஹோட்டலில் அவ கிளைன்ட்ஸோட மீட்டிங்கில் இருந்த போது பார்த்தேன். அவளும் என்கிட்ட பேச வரல… நானும் அதைப் பெரிசா எடுத்துக்கல. பட், அந்த ஆக்ஸிடன்ட் நடந்த நைட் கேத்ரீன் என்னை மீட் பண்ண வந்ததாக மேனேஜர் ரமேஷ் சொன்னாரு.

போதாக் குறைக்கு அளவுக்கு அதிகமா குடிச்சிருந்ததாகவும் சொன்னாரு. அவ லிக்கர் சாப்பிட்டா ரொம்ப அப்நார்மலா மாறிடுவா… என் மனசு கேட்கல… அவளோட ரூமுக்கு பத்திரமா போகணுமேன்ற அக்கறையிலதான் அவ பின்னாடி போனேன்…என்று சொல்லிவிட்டுக் கண்களில் நிரம்பிய நீரை துடைத்துக் கொண்டான்.

மீண்டும் ஆதித்தியா சுதாரித்துக் கொண்டு எழுந்தான்.

ஜஸ்ட் ஒன் மினிட் முன்னாடி போயிருந்தாலும் காப்பாத்திருப்பேன். என்னோட பேட் லக்… அவ தவறி விழுந்ததை மட்டும்தான் என்னால பார்க்க முடிஞ்சுது

ஆதித்தியா சொன்ன விஷயங்களை கேட்டபின் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்ட வேணு,

அவ போதையில் இருந்தபோது நீ அவளைக் கெடுத்துட்டனு பழி போட்டதா சொன்ன… அப்படி இருக்கும் போது திரும்பியும் அவ போதையில் இருக்கும் போது அவ பின்னாடி நீ போயிருக்கன்னா… இந்த சந்தர்ப்பத்தை யூஸ் பண்ணிக்கவா? அவகிட்ட நீ தப்பா நடந்துக்க முயற்சி பண்ணி அவ உன்னைத் தடுக்கப் போய்த் தவறுதலா கீழே விழிந்திருக்கலாமே

இத்தனை நேரம் இயல்பாக இருந்த ஆதித்தியா அந்த வார்த்தைகளைக் கேட்டு நொறுங்கி போனான். கோபம் அவன் கண்களில் அனலாய் பறந்தது.

நான் நல்ல எண்ணத்தோடுதான் அவ பின்னாடி போனேன்

சரி… நல்ல எண்ணம்னே வைச்சுப்போம்… நீ அவ ரூமுக்கு போன வீடியோ ஆதாரத்தை எதுக்கு நீ எடிட் பண்ணனும்

இதற்கு ஆதித்தியாவிடம் எந்தப் பதிலும் இல்லை. என்ன சொல்வதென்று புரியாமல் மெளனமாய் இருந்தான்.

உன்கிட்ட பதில் இல்லைன்னா… உன் கிட்ட தப்பு இருக்கு மிஸ்டர் ஆதி

நான் எனக்குத் தெரிந்து உண்மை எல்லாம் சொல்லிட்டேன்… நான் அவ ரூமுக்குப் போனதும் உண்மை… அதே போல அவ தானா தவறி விழுந்ததும் உண்மை

உடனே வேணு கோபமடைந்தவராய், கான்ஸ்டபில் அந்த லத்தியை எடுத்துட்டு வாங்க… அடிச்சா உண்மை எது … பொய் எதுன்னு தானா தெரியும் என்றார்.

ஆதித்தியா பதட்டமடையாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தான்.

த்தியை கையில் வாங்கிய வேணு திரும்பி சிவாவை பார்த்தார். அத்தனை நேரம் ஆதியுடன் நடந்த விசாரணையை தன்னுடைய கைப்பேசியில் பதிவு செய்து கொண்டிருந்த சிவாவிடம் நீட்டினார்.

நீங்க அடிச்சி விசாரிங்க சிவா… அப்படியாவது முழுசா உண்மை பேசுறானானு பார்க்கலாம்

சிவா அந்த லத்தியை கைகளில் வாங்க கூடத் தயாராக இல்லை.

வேணு சிரித்து விட்டு, என்ன சிவா… உங்க மனைவியோட அக்கா புருஷன்னு யோசிக்கிறீங்களா? நம்ப முடியலியே… அவ்வளவு சென்டிமன்ட் இருந்தா ஆதிக்கு எதிரான ஸ்டிராங்கான ஆதாரத்தைக் கொடுக்கும் போது யோசிக்காம இப்ப மட்டும் என்ன… கம்மான் சிவாஎன்று வற்புறுத்தி அந்த லத்தியை கைகளில் கொடுத்து விட்டு வெளியே போனார்.

ஆதித்தியா கலகலவென சிரித்தான்.

நீ எதிர்பார்த்த சான்ஸ் கிடைச்சிடுச்சுல்ல… ஏன் யோசிக்கிற? கம்மான் டு இட்

சிவா சினம் கொண்டவனாய், உன்னை அடிக்க ஒரு செகண்டு கூட ஆகாது… நான் யோசிக்கிறது விந்தியாவைப் பத்தி மட்டும் தான்

நீ அவளைப் பத்தி கவலைப்பட்டிருந்தா… இந்தப் பொய்யான பழியை என் மேல திட்டம் போட்டு சுமத்தி இருப்பியா?

உன்னை கல்யாணம் பண்ண வேண்டாம்னு நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காம செஞ்சிக்கிட்டாளே… அவளுக்கு இதெல்லாம் தேவைதான்

என்னை அவ கல்யாணம் பண்ணிக்கிட்டது உனக்கு சுத்தமா பிடிக்கல இல்ல… நீ அவளுக்கு நண்பன்னு சொல்ற… ஆனா உன் மனசில அந்த மாதிரியான எண்ணம் இருக்கிற மாதிரி தெரியலயே

எங்க நட்பை புரிஞ்சிக்க ஒரு தகுதி வேணும்… அது உன் கிட்ட இல்லஎன்று சொல்லி ஆதித்தியாவை இளக்காரமாய் பார்த்தான்.

உன் நட்பை ஒண்ணுமில்லாம பண்றேன்… அப்போ தெரியும் என் தகுதி என்னனு

சிவாவுக்கு சிரிப்பு வந்தது.

அத்தைக்கு உடம்பு சரியில்லாத போது உங்க அப்பா அவளுக்கு உதவி செய்யலன்னா… நீ எல்லாம் அவ வாழ்கையில் வந்திருக்கவே மாட்ட. ஒன்னா பிறந்து வளர்ந்து படிச்சி எத்தனையோ தடங்கல்களைக் கடந்தும் சேர்ந்தே இருக்கிற எங்களோட நட்புக்கு முன்னாடி நீ கால் தூசி பெறமாட்ட ஆதி

வார்த்தைய அளந்து பேசு சிவா… இந்த இடமும் சூழ்நிலையும்தான் உன்னை இப்போ காப்பாத்திட்டிருக்கு

சிவா கலகலவென்று சிரித்தான்.

நான் மட்டும் நினைச்சேனா உன்னை இங்கயே நார் நாராய் கிழிச்சு தொங்க விட்டிடுவேன்…

அதான் லத்தி இருக்கு இல்ல… ஏன் யோசிக்கிற… அடி

இருவருமே உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை வாளாக வீசினர். பனி விலகி நேருக்கு நேரான போர் அவர்களுக்குள் மூண்டது. ஆதித்தியாவின் மீது கை வைத்தால் விந்தியாவின் முகத்தை எப்படி பார்ப்பது என்று சிவா மனதிற்குள் பயந்தான்.

சரியான சமயத்தில் கான்ஸ்டபிள் வந்ததால் அவர்கள் அமைதியாகினர். ஆதித்தியாவிற்கு ஜாமீன் வந்ததாகச் சொல்லி கான்ஸ்டபிள் அவனை அழைத்து சென்றார்.

இவர்களின் நட்பும் காதலும் மோதிக் கொண்டதில் சம்பந்தமில்லாமல் காயப்படப் போவது விந்தியாதான்.

28

உடைந்து போனதோ!

ஆதித்தியாவும் சமுத்திரனும் வீட்டு வாசலில் வந்து இறங்கினர். ஆதித்தியாவின் முகத்திலிருந்த வேதனையைப் பார்த்து சமுத்திரன் சொன்னான்.

உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் ஐம் தேர் பாஃர் யூ… நீ ஏன் கவலைப்படற…என்றான் சமுத்திரன்.

அதெல்லாம் ஒண்ணுமில்ல… விந்தியாவிற்கு இந்தப் பிரச்சனையை எப்படி புரிய வைக்கப் போறேன்னு நினைச்சாதான் பயமா இருக்குஎன்று சொல்லிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான்.

அவனை எதிர்பார்த்திருப்பது போலவே அவன் வந்தவுடன் வாசலில் நின்று அழைத்து வந்தாள் விந்தியா.

நீங்க வருவீங்கன்னு மாமா இப்பதான் போன் பண்ணாரு… ஆர் யூ ஓகே?என்று அவள் கனிவாக விசாரித்த விதம் அவனுக்குக் குழப்பமாய் இருந்தது. எந்த பதிலும் சொல்லாமல் அவளின் முகத்தை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

என்ன அப்படி பார்க்கிறீங்க? வாங்க சாப்பிடலாம்

எனக்குப் பசிக்கல… வேண்டாம் விந்தியா

நானும் உங்களுக்காகச் சாப்பிடாம காத்திருக்கேனே… பரவாயில்லையா?என்று விந்தியா சொன்னதும் படிக்கெட்டு ஏறச் சென்றவன் மீண்டும் விந்தியாவை நோக்கி திரும்பி வந்தான்.

அதற்குள் பின்னாடியிருந்து கை தட்டும் ஓசை கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தனர். அவர்கள் பார்த்த திசையில் சமுத்திரன் நின்று கொண்டு ஏளனமாய் சிரித்தபடி கைதட்டி கொண்டிருந்தான்.

சூப்பர் விந்தியா… பிரமாதமான நடிப்பு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்என்றான் சமுத்திரன்.

ஆதித்தியாவிற்கு அவன் செயலின் அர்த்தம் புரியவில்லை. ஆனால் விந்தியா அவன் எண்ணத்தை யூகித்து விட்டாள்.

நடிச்சு நடிச்சு இன்னும் எத்தனை நாளைக்கு ஆதித்தியாவை ஏமாத்த போற?

நீ உன் வேலையைப் பாத்துட்டு போ… தேவையில்லாம பேசாதேஎன்றாள் விந்தியா கோபமாக.

இன்னைக்கு நான் பேசியே தீருவேன்… உன்னால என்ன செய்ய முடியும்னு நானும் பாக்குறேன்என்று சமுத்திரன் பேசியதும் ஆதித்தியா தலை கால் புரியாமல் விழித்தான்.

என்ன நடக்குது இங்க… உங்க இரண்டு பேருக்கும் என்ன பிரச்சனை?என்று இருவரையும் பொதுவாக ஆதித்தியா கேட்டான்.

நத்திங் ஆதி… நாம இதைப் பத்தி அப்புறம் பேசலாம்என்றாள் விந்தியா.

ஆனால் சமுத்திரன் விடுவதாக இல்லை.

என்ன விந்தியா… உன்னோட வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிடும்னு பயமா இருக்கா?

விந்தியா எரிச்சல் அடைந்தளாய்,ஹி இஸ் டோட்டலி மேட்என்றாள்.

ஆதித்தியா இம்முறை கொஞ்சம் தெளிவு பெற்றவனாய்,வெயிட் பண்ணு விந்தியா… அப்படி என்னதான் சொல்றான்னு கேட்போமேஎன்று ஆதித்தியா உரைத்ததும் சமுத்திரன் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

விந்தியா எதுவும் பேசாமல் மாடிக்குச் செல்லும் படிக்கெட்டுகளில் அமர்ந்து கொண்டு சமுத்திரன் முகத்தைப் பாராதது போல் திரும்பிக் கொண்டாள்.

விந்தியா ஹோட்டலில் இருந்து ஆதாரத்தை எடுத்து வந்தது… ஆதியை மருத்துவமனையில் பார்க்க வராமல் சிவாவிடம் அந்தச் சீடியை கொடுத்தது வரை சமுத்திரன் சொல்லி முடித்தான்.

ஆதியின் முகத்தில் லேசான சலனம் ஏற்பட அவன் விந்தியாவை நோக்கினான்.

இதெல்லாம் என்ன கதை விந்தியா? சமுத்திரன் சொல்றதெல்லாம் கொஞ்சம் கூட நம்புகிற மாதிரி இல்லையே

எவற்றை எல்லாம் அவள் சொல்ல தயங்கினாளோ அவற்றை அனைத்தும் சமுத்திரனே சொல்லி முடித்தான்.

ஹி இஸ் ரைட் ஆதி. நான் என்ன சொல்ல தயங்கிட்டு இருந்தேனோ… அதை எல்லாம் மிஸ்டர். சமுத்திரனே சொல்லி முடிச்சிட்டாரு. தேங்க் யூ வெரி மச்… நீங்க வந்த வேலை முடிஞ்சுதா… கிளம்புங்கஎன்று வாசலை காண்பித்தாள் விந்தியா.

ஆதித்தியாவிற்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அவனைச் சில நிமிடங்கள் இயங்க விடாமல் செய்தது.

நான் கிளம்பணுமா… இருக்கணுமா என்பதை பத்தி ஆதி சொல்லட்டும்… அத பத்தி நீ ஏன் கவலைப்படற? உன் முன்னாள் காதலன் பத்தின ரகசியத்தைப் பத்தி சொல்லிடுவேனோனு பயமா இருக்கா?

விந்தியா அவன் பேசியதை கேட்டுப் படிக்கெட்டில் இருந்து எழுந்து கொள்ள ஆதி அவள் கைகளைப் பிடித்துத் தடுத்தான்.

வேண்டாம் சமுத்திரன்… உன் பேச்சு சரியில்ல… நீ புறப்படுஎன்றான் ஆதித்தியா.

என் பேச்சு சரியாதான் இருக்கு… உன் மனைவியோட கேரக்டர்தான் சரியில்லஎன்று சமுத்திரன் சொன்ன மாத்திரத்தில் ஆதித்தியா கோபம் கொண்டவனாய் கை ஓங்கி கொண்டு போக, சமுத்திரன் துளி கூடப் பயமின்றி தொடர்ந்து பேசினான்.

நீயே விந்தியா கிட்ட கேளு… சிவா அவளோட முன்னாள் காதலனா இல்லையானு

சமுத்திரனின் பேச்சை கேட்டு ஆதித்தியா கொஞ்சம் யோசனையோடு அடிக்காமல் கையினை இறக்கினான். சிவா என்ற பெயர் அவன் மனதில் வெறுப்பை உண்டாக்கியிருந்தது.

ஆதித்தியா அமைதியாய் சோபாவில் தலையை மேலே சாய்த்தபடி அமர்ந்து கொண்டான். விந்தியா சமுத்திரனின் வார்த்தைகள் கேட்டு அவனை எதுவும் செய்ய முடியாத இயலாமையோடு அங்கிருந்த தூணில் சாய்ந்து கொண்டாள்.

சீதையென வாழும் ஒவ்வொரு பெண்ணுமே வார்த்தை என்ற நெருப்பால் பற்ற வைக்கப்படுவாள் என்பதுதான் இந்தச் சமூக நியதி என்று விந்தியா மனதில் எண்ணிக் கொண்டாள்.

ஆதியின் அமைதி சமுத்திரனுக்கு சாதகமாய் அமைந்தது. அவன் ஆதித்தியாவின் அருகில் அமர்ந்தான்

கேத்ரீன் பற்றிய விஷயம் முன்னாடியே தெரிஞ்சதை பற்றி உன் பொண்டாட்டி கேட்டாளா? இல்ல சீடியை கொடுப்பதற்கு முன்னாடியாவது இத பத்தி ஏதாச்சும் பேசினாளா? அவ வாழ்கையில் சிவாவுக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தில் பாதியாவது உனக்குக் கொடுக்கிறாளானு யோசிச்சியா ஆதி?என்று அவன் இஷ்டத்துக்கு விந்தியாவின் மீது குற்றங்களைச் சுமத்தி கொண்டிருந்தான்.

விந்தியா சமுத்திரனின் பேச்சை கேட்கக்கேட்க அவனை அறைய வேண்டும் போல் கோபம் பொங்கி கொண்டு வந்தது. ஆதித்தியாவின் மெளனம் விந்தியாவை எதுவும் செய்ய முடியாமல் தடுத்தது.

ஆதித்தியா மீண்டும் எழுந்து விந்தியாவின் அருகில் வந்து நின்றான்.

கேத்ரீன் பத்தி உனக்குத் தெரிஞ்சது… அத பத்தி நீ என்கிட்ட சொல்லாம மறைச்சது… அப்புறம் அந்த சீடியை நீ போலிஸ்கிட்ட கொடுத்தது… இது எல்லாதுக்கும் நிச்சயமா உன்கிட்ட நியாயமான காரணம் இருக்கும். அதை நீ விளக்க வேண்டிய அவசியமும் இல்ல… நானும் தெரிஞ்சிக்க வேண்டிய அவசியமுமில்ல… நான் உன்னை முழுசா நம்புறேன்டிஎன்று ஆதித்தியா சொன்னதும் சமுத்திரனின் முகம் கறுத்துப் போனது.

அத்தனை நேரம் தன் நிலைமையைப் புரிய வைக்க முடியாமல் வாடிக் கொண்டிருக்க இந்த வார்த்தைகள் விந்தியாவை உயிர்ப்பித்தன.

விந்தியா விவரிக்க முடியாத ஆனந்த்துடன், தேங்க் யூ… ஆதி… தேங்க் யூ சோ மச்…என்று சொல்லியபடி ஆதியின் தோள்களின் மீது சாய்ந்து கொண்டு கண்ணீர் வடித்தாள். ஆதித்தியா அவளின் தலையை வருட சமுத்திரன் அங்கே நடப்பதை சகித்துக் கொள்ள முடியாமல் வெளியே சென்றான்.

விந்தியா சாய்ந்தபடி இருக்க ஆதித்தியா அவளிடம் தன் மனதில் தோன்றிய எண்ணத்தை உரைத்தான்.

நாம இப்படியே சந்தோஷமா இருக்கணும்னா… அந்த சிவா நம் வாழ்கையில் இருக்கக் கூடாதுஎன்றான்.

உடனே விந்தியா அவனின் கைகளை விலக்கி விட்டு நிமர்ந்து கொண்டாள். கண்களில் வழிந்த நீரை துடைத்தபடி அவனை உற்றுப் பார்க்க ஆதி மேலும் சொன்னான்.

உன்னுடைய பாஸ்ட் பத்தி எனக்குக் கவலையில்ல… அதுல சிவா என்ன ரோல் வேணா பிளே பண்ணி இருக்கட்டுமே… ஐ டோன்ட் கேர்… பட் இனிமே அவன் நம்ம லைஃப்ல வரவே கூடாது

ஆதித்தியாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டு அவனை விட்டு விலகி வந்தாள்.

நமக்கு அதுதான் நல்லது விந்தியாஎன்று மீண்டும் அவள் அருகில் சென்றவனிடம் இருந்து விலகி நின்றாள்.

அங்கயே நில்லுங்க ஆதி… என்கிட்ட வராதீங்க…

ஏன்?” என்று தங்கத்துடன் கேட்டான்.

சிவாவை விட்டுக்கொடுத்தால்தான் நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும்னா… அப்படி ஒரு லைஃப் எனக்கு வேண்டவே வேண்டாம்… சாரிஎன்றாள்.

இதுக்கு என்ன அர்த்தம்… என் கூட வாழ உனக்கு விருப்பமில்லையா?

சத்தியமா அப்படி இல்ல. என் மனசிலிருந்து சொல்றேன்… நான் உங்களை விரும்புறேன் ஆதி… நான் உங்க கூட வாழணும்னு ஆசைப்படறேன்… யூ ஆர் மை லவ். அதுக்காகவெல்லாம் எனக்கு எப்பவுமே சப்போர்ட்டா இருந்த என் நண்பனை உதறித் தள்ளணும்னு சொன்னா… அது இம்பாஸிபிள் ஆதிஎன்றாள்.

அவனுக்காக நீ என்னை வேண்டாம்னு சொல்ற… அப்போ அவன்தான் உனக்கு ரொம்ப முக்கியம் இல்ல

விந்தியா சோகம் கலந்த சிரிப்போடு, மூளை, இதயம் இந்த இரண்டில் முக்கியத்துவம் வாய்ந்தது எதுனு நீங்க சொல்லுங்க… அப்புறம் உங்களில் யார் முக்கியமானவங்கன்னு நான் சொல்றேன்என்று அவனைக் கேட்டாள்.

ஆதித்தியா மெளனமாக நிற்க விந்தியா படிக்கட்டு ஏறி அவள் அறைக்குள் சென்றாள்.

ஆதித்தியாவும் சிறிது நேரம் கழித்து அவன் அறைக்கு செல்ல விந்தியா அவளுடைய பொருட்களை எடுத்து பெட்டிக்குள் அடுக்கிக்கொண்டிருந்தாள்.

விந்தியா ஸ்டாப் இட்என்று அவள் அடுக்குவதை தடுத்தான்.

இப்ப உங்களுக்கு என்னதான் பிரச்சனை?

அந்த சிவா என் பார்வைக்கு நல்லவனா தெரியல

அப்படின்னா உங்க பார்வையிலதான் தப்பு இருக்கு

என் வார்த்தையில உனக்கு நம்பிக்கை இல்லையா?

எனக்கு சிவா மேல நம்பிக்கை இருக்கு

அவன் உனக்கு உண்மையான நண்பனா இருந்தா… என்னையும் நண்பன மாதிரிதானே பார்க்கணும்? ஆனா அவன் ஏன் என்னை எதிரி மாதிரி நடத்தணும்? அவனுக்கு என் மேல கோபமா இல்ல உன் மேல விருப்பமா?

போதும் நிறுத்துங்க ப்ளீஸ்… எங்க நட்பை புரிஞ்சுக்க ஒரு தகுதி வேணும்… சாரி அது உங்கக்கிட்ட இல்லஎன்று விந்தியா சொல்ல இதே வார்த்தையை அச்சுப் பிசகாமல் சிவா சொன்னது அவன் நினைவுக்கு வந்தது.

இதற்கு பிறகு ஆதித்தியா விந்தியாவைத் தடுத்து நிறுத்தவில்லை.

கடைசியாக விந்தியா தன் பெட்டியை எடுத்துக் கொண்டு போகும் போது வழிமறித்து நின்றான்.

உங்க மாமனார் வந்து உன்னைப் பத்தி கேட்டா நான் என்ன சொல்லணும்? நன்றிக்கடனுக்காக செய்த கல்யாணம் இன்றோடு முறிஞ்சு போச்சுனு சொல்லணுமா?

அவளுக்குக் குத்தலாக இருக்க வேண்டுமென்றே ஆதித்தியா அப்படி பேசினான்.

எனக்கான உரிமையையும் சுதந்திரத்தையும் தொலைச்சிட்டு அவரோட மகன் கூட எனக்கு வாழ விருப்பமில்லைனு சொல்லிடுங்கஎன்று சொல்லிவிட்டு விந்தியா கடந்து சென்றாள்.

அவளுக்காக வாங்கிய ரோஜாக்கள் படுக்கை மீது துவண்டு கிடக்க கோபத்தில் அதை கைகளில் எடுத்து வீசி எறிந்தான். ஏற்கனவே ஆதியின் கைகளில் இருந்து விந்தியா காப்பாற்றிய பூ ஜாடி அந்தப் பூக்கள் பட்டு சாய்ந்து விழுந்து உடைந்தது.

ஈகோ என்ற கண்ணாடி துகள்களால் மென்மையான உறவுகளைக் கையாள்வதால், அது கிழிந்து போகும் என்பதை ஆதித்தியா மட்டுமல்ல நாம் யாருமே உணர்வதில்லை.

29

மீண்டும் சுழற்சி

விந்தியா பெட்டியோடு வீட்டு வாசலில் நின்றிருப்பதை வருண் பார்த்து கலக்கமுற்றான். அவளை உள்ளே கூட அழைக்காமல் ஏதேதோ கேள்விகளை வரிசையாய் கேட்டுக் கொண்டிருந்தான்.

விந்தியா என்ன சொல்வதென்று புரியாமல் நிற்க நந்தினி ஓடி வந்து பெட்டியை வாங்கினாள்.

நல்ல மரம் மாதிரி நின்னுட்டு இருக்கீங்க… வழியை விடுங்கஎன்று வருணிடம் சொல்லிவிட்டு நந்தினி விந்தியாவை உள்ளே அழைத்தாள்.

விந்தியா உள்ளே நுழைந்ததுமே சுவற்றில் தரையில் சாய்ந்தபடி உட்கார்ந்து கொண்டாள்.

மாமாவை ஏன் அரெஸ்ட் பண்ணாங்க? அதைப் பத்தி தெரிஞ்சதிலிருந்து அம்மா ரொம்ப அப்செட்டா இருந்தாங்க. இதுல நீ வேற இங்க வந்திருக்கே… என்னதான் அக்கா நடந்துச்சு?

நான் இங்க வரக் கூடாதா? இது என் வீடில்லையா வருண்?”

சேச்சே அப்படி இல்லக்கா…

அப்புறம் என்ன? காலையில எல்லாவற்றையும் தெளிவா சொல்றேன்… இப்போ போய்ப்படுஎன்றாள் விந்தியா அதிகார தொனியில்.

நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் அண்ணி… முதலில் வாங்க சாப்பிடலாம்என்று அழைத்தாள் நந்தினி.

ஆதித்தியாவை சாப்பிட அழைக்கும் போதுதான் இத்தனை பிரச்சனையும் நடந்து முடிந்தது. அங்கே அவன் சாப்பிட்டிருப்பானோ என்று எண்ணுகையில் அவளை அறியாமல் கண்ணீர் வழிந்தது.

என்ன அண்ணி?” என்று அவள் வேதனையைக் கண்டு நந்தினி பதறினாள்.

எனக்குப் பசிக்கல நந்தினி. நீ போ… என்னை கொஞ்ச நேரம் தனியா விடுஎன்றாள் விந்தியா.

அவளை மேலும் வேதனைப்படுத்தாமல் அவர்கள் இருவரும் அங்கிருந்து அகன்றனர்.

கமிஷனர் ஆபிஸுக்கு போயிட்டு திரும்பி வந்த சந்திரகாந்திற்கு நடந்தவை எல்லாம் சண்முகம் மூலமாக தெரிய வந்தது. கோபத்தோடு ஆதித்தியாவின் அறைக்குச் சென்றவர் ஆதியை பார்த்த மாத்திரத்தில் சிலை போல நின்றார்.

ஆதித்தியா சிதறிய பூக்களுக்கும், உடைந்த ஜாடிக்கும் அருகாமையில் சுவற்றில் தலை சாய்த்தபடி அப்படியே நொறுங்கி போயிருந்தான்.

அவனின் குறும்புதனத்தையும் கோபத்தையும் அதிகாரத்தையும் பார்த்த சந்திரகாந்திற்கு அவனின் இந்த வேதனையும் வலியும் தோய்ந்த முகம் புதிதாய் தோன்றியது. அவனை அப்படிப் பார்க்க முடியாமல் மீண்டும் தன் அறைக்கே சென்றார் சந்திரகாந்த்.

விடிந்து சில மணி நேரங்களில் சிவா தன்னுடைய பைக்கில் போலிஸ் ஸ்டேஷன் வந்து இறங்கினான். சிவாவின் வருகையைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோரும் தங்கள் வேலைகளில் ஈடுபடத் தொடங்கினர்.

அவன் உள்ளே நுழைந்தவுடன் அங்கே இருந்த கான்ஸ்டபிளை அழைத்து, வேணு சார் வந்துட்டாரா? என்று கேட்டான்.

இல்ல சார்… இன்னைக்கு அவரோட பொண்ணை காலேஜ் சேர்க்கிற விஷயமா போயிருக்காருஎன்றான்.

இதைக் கேட்டதும் சிவா தலையாட்டிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தவுடன் அவன் எதிர்பாராமல் கான்ஸ்டபிள் இருவர் பேசிக் கொண்டது காதில் விழுந்தது.

அசிஸ்டன்ட் கமிஷனர் ரொம்ப நேர்மையானவர் ஆச்சே… அவர் பொண்ணுக்கு எப்படி வித்யா மெடிக்கல் காலேஜில் சீட் கிடைச்துனு புரியலயே

இதற்கு மற்றொரு கான்ஸ்டபிள் சொன்ன பதில்தான் சிவாவை கலவரப்படுத்தியது.

ஒவ்வொரு மனிஷனுக்கும் ஒவ்வோரு விதமான விலை இருக்கும்என்றான்.

சிவாவின் மூளை ரொம்ப வேகமாய் வேலை செய்தது. சட்டென்று லேப்டாப்பை இயக்கி வித்யா மெடிக்கல் காலேஜ் பற்றிய விவரங்களை தேடினான்.

அது சென்டிரல் மினஸ்டர் வித்யாதரனுடையது. அவனைப் பற்றிய விவரங்களைப் பற்றித் தேடிப் பார்த்தான்.

அவனின் அரசியல் பிரவேசத்திற்கு முன்பு ரியல் எஸ்டேட் தொழில் செய்திருந்தான். வி. டி ரியல் எஸ்டேட். வி. டிஎன்ற வார்த்தை எங்கயோ கேள்விப்பட்டதாய் தோன்ற அதை அவன் ரொம்பவும் பிராயத்தனப்பட்டு நினைவுப்படுத்த முயற்சி செய்தான்.

திடீரென்று அவனுக்கு ஞாபகம் வந்ததும் முன்னாடி இருந்த டேபிள் மீது ஓங்கி ஒரு குத்து குத்தி எஸ்என்றான்.

உடனே கான்ஸ்டபிள் அவனருகில் வந்து சார்என்றார்.

ஒண்ணுமில்லைஎன்று சொல்லிவிட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

கோவாவில் உள்ள எம். வி. டி லிக்கர் பாக்டரி… அதுவும் வித்யதாரனுடையது என்பது அவனுடைய யூகம். இந்த எம் என்ற வார்த்தை மக்களை ஏமாற்ற அவன் வைத்த குறியா இல்லை அதற்கும் ஏதேனும் அர்த்தம் இருக்குமோ என்று யோசித்தான்.

 நம் வாசகர்கள் கூட மறந்திருக்கக் கூடும். ஆனால் சிவாவிற்கு ஞாபகம் பலமாய் இருந்தது. அந்த எம். வி. டி லிக்கர் ஃபாக்டரியை பத்தி வேணுவிடம் சொல்லும் போது ஏதேதொ கதை சொல்லி வேணு அவனை திசை திருப்பியதை நினைவுப்படுத்தினான்.

அதுவும் இன்றி லாக்கரை உடைக்கலாம் என்று சொல்லும் போது அதற்கு மறுப்புத் தெரிவித்தது, லாக்கரின் ரகசிய எண்ணை பற்றி முதலில் வேணுவிடம் சொன்னது, அடுத்த நாள் அவன் லாக்கரை திறந்த போது அதில் முக்கியமான எந்த விஷயமும் கிடைக்காதது, இவை எல்லாம் வேணுவின் லீலைகள் என்று தோன்றிற்று. ஆனால் இவை அனைத்துமே இப்போதைக்கு சிவாவின் யூகம் மட்டும்தான்.

கடைசியாக ஆதியின் விசாரணை நினைவுக்கு வர, அதில் ஆதி கேத்ரீன் தானாக விழுந்ததை அவன் பார்த்ததாக சொன்னது இந்த கேஸை ஆரம்பித்திலிருந்து தனக்கு ஏற்பட்ட யூகமும் சந்தேகமும் தவறா என்று கேள்வி மனதில் எழுந்தது. ஆதியும் கொலையாளிகளுக்கு உடந்தையா என தவிர்க்க முடியாத கேள்வி மனதில் ஏற்பட்டது. அந்தக் கேஸ் மீண்டும் அவனை சுழற்சியில் தள்ளியது.

சிவா தன்னுடைய வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்க்கு விரைந்தான். படுக்கையின் மீது அமர்ந்திருந்த வனிதாவிடம் காபிஎன்றான்.

அவன் உடைகளை மாற்றிக் கொண்டு வந்த பின்பும் அவள் அங்கேயே அசையாமல் அமர்ந்திருந்தாள்.

ஏ வனிதாஎன்று அவள் தோள்களை உலுக்கியதும் சிவாவை நிமிர்ந்து பார்த்தாள்.

நீங்கதான் ஆதித்தியா மாமாவை அரஸ்ட் பண்ணீங்களா?என்று வனிதா கேட்டதும் அவளின் வருத்தம் புரிந்தவனாய், நீ நினைக்கிற அளவுக்கு ஒண்ணுமில்ல… நான் பாத்துக்கிறேன்என்றான்.

என்ன நீங்க பாத்துப்பீங்க? அக்கா அம்மா வீட்டில இருக்கா… தெரியுமா உங்களுக்கு?என்றாள்.

அப்பொழுது சிவாவிற்கு ஆதிக்கும் தனக்கும் நிகழ்ந்த வாக்குவாதம் நினைவுக்கு வர அதன் விளைவாக ஆதி விந்தியாவிடம் கோபித்துக் கொண்டிருப்பானோ என்று தோன்றியது.

 பல நேரங்களில் சிவாவின் யூகம் சரியாகவே இருந்தது. வனிதாவின் கலக்கத்தைத் தீர்க்க அவன் வனிதாவை விந்தியாவிடம் அழைத்து சென்றான்.

விந்தியாவிற்கு காலையிலிருந்து மாதவியைத் தேற்றவே சரியாக இருந்தது. விந்தியாவின் தன்னம்பிக்கையான பேச்சை தவிர்த்து வேறு எந்த வித பிடிப்பும் மாதவிக்கு ஏற்படவில்லை.

ஆதித்தியாவை பார்த்து பேச வேண்டும் என்று மாதவி பிடிவாதமாய் இருக்க, ‘என்ன செய்யப் போகிறோம் எனக் குழம்பி கொண்டிருந்த நேரத்தில்தான் வனிதாவும் சிவாவும் வீட்டிற்கு வந்தனர்.

விந்தியா மாடியில் நின்று கொண்டிருக்க வனிதா நடந்தவற்றை எல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தாள். வனிதா மாதவியின் அழைப்பிற்கு கீழே செல்ல சிவாவும் விந்தியாவும் பேசத் தொடங்கினர்.

ஒரு சில மணி நேரங்களில் விந்தியா சிவாவை சண்டையிட்டு கீழே இறங்கி போகச் சொன்னாள்.

இத பார் விந்தியா… ஆதிக்கிட்ட சண்டை போடணும்னு நான் ப்ளான் பண்ணல… அதுவா நடந்து போச்சு

அதெப்படி அதுவா நடக்கும்… உனக்கு வாய் ரொம்ப அதிகம்என்றாள்.

ஆதிதான் முதல்ல வம்புக்கு வந்தான்

சரி இருக்கட்டும்… அதுக்காக நீ வரைமுறை இல்லாம பேசுவியா?

பாத்தியா வனிதா… நேத்து வந்தவனுக்காக இவ என்கிட்ட சண்டை போடுறா. இனிமே நாம இங்க இருக்கக் கூடாது… வா கிளம்பலாம்

வனிதாவின் முகத்தில் ஈயாடவில்லை. சிவாவின் கையைப் பிடித்துக் கொண்டு விந்தியாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே போனாள்.

இனிமே நீ என் முகத்தில் கூட விழிக்காதேஎன்றாள் விந்தியா.

நீயும்தான்என்று சொல்லிவிட்டு வனிதாவை அழைத்துக் கொண்டு வாசலை கடந்து போக, அங்கே சந்திரகாந்த் சமுத்திரனுடன் வந்திருக்க அவர்களைப் பார்த்தும் பார்க்காமல் கடந்து சென்றான்.

இவர்கள் பிரச்சனையில் சந்திரகாந்தை கவனிக்காத மாதவி தன் தவறை உணர்ந்து மரியாதையுடன் உள்ளே அழைத்தாள்.

 விந்தியாவிற்கு சமுத்திரனை பார்க்க பார்க்க எரிச்சலாய் இருந்தது. கண்களால் எரிப்பது போல் அவன் அவளைப் பார்த்த பார்வையும், ‘தான் நினைத்தது போல் ஆதித்தியாவிடம் இருந்து உன்னைப் பிரித்து விட்டேன் என அவன் திமிராகப் பார்த்த பார்வையும் யார் பார்வையிலும் படவில்லை.

விந்தியாவை அழைத்துச் செல்ல வந்த சந்திரகாந்தின் எண்ணம் விந்தியாவின் பிடிவாதத்திற்கு முன் நிறைவேறவில்லை. கொஞ்சம் சோகம் கலந்த முகத்தோடு அவர் புறப்படும் நேரத்தில் ஆதித்தியாவின் துறுதுறுப்பு மறைந்து சோகமயமாய் இருப்பதாய் சொன்னார்.

இதைக் கேட்ட மாத்திரத்தில் விந்தியா உணர்ச்சிவசப்பட்டு அவர்களை வழியனுப்பாமல் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டாள். எதையும் தைரியமாய் எதிர்கொள்ளும் விந்தியாவின் நிலைமையும் நேரெதிராய் மாறி இருப்பதை சந்திரகாந்த் கண்ணெதிரே கண்டார்.

இவர்கள் இருவருமே வெகு நாட்களுக்குப் பிரிந்திருக்க மாட்டார்கள் என மாதவிக்குத் தைரியம் சொல்லிவிட்டு புறப்பட்டார். முடிந்த வரை அவர்களைச் சேரவே விடக்கூடாது எனச் சமுத்திரன் எண்ணிக் கொண்டான்.

வனிதா குழப்பத்தோடு வீட்டு வாசலில் இறங்க சிவா தன் அறைக்குள் சென்றான்.

விந்தியாவைப் பற்றி சரோஜாவும் தனசேகரும் விசாரிக்க அவர்களுக்குப் பதில் சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்தாள். சிவா தன் கையிலிருந்த பைலை ஆர்வமாய் புரட்டிக் கொண்டிருக்க வனிதா அவன் முன்னே வந்து,

நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கட்டுமா?” என்றாள்.

ம்என்றான் பக்கங்களைப் புரட்டியபடியே…

நீங்க சண்டை போட்டீங்களா இல்ல நடிச்சீங்களா?என்றாள்.

சிவா அவளை நிமிர்ந்து பார்த்தான்.

சந்தேகமே வேண்டாம்… நடிப்புதான்

வனிதா அப்படியே வாயில் கை வைத்து கொண்டாள்.

நாங்க எல்லாம் எவ்வளவு டென்ஷனாகிட்டோம் தெரியுமா?

நீங்க எங்க டார்கெட் இல்ல… வேற ஒருத்தனுக்காக அந்த நடிப்பு.. நம்மை நாமே பலவீனமாகக் காட்டிக்கிட்டாதான் எதிரியோட பலத்தைக் குறைக்க முடியும்என்றான்.

அப்படின்னா?

ஆமை முயலை எப்படி ஜெயிச்சிதோ அப்படி

வனிதாவிற்கு அப்போதும் புரியவில்லை. அதற்கு மேல் விளக்கம் கேட்காமல் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

சிவா விந்தியாவின் கைப்பேசியில் அழைத்தான். ஆதித்தியாவின் நினைப்பிலிருந்து மனதை தேற்றிக் கொண்டவளாய் அழைப்பை ஏற்றாள்

சொல்லு சிவா… லிஸ்டை செக் பண்ணியா?என்றாள்.

நோ யூஸ்… என்னால கண்டுபிடிக்க முடியல

அப்போ என்ன பண்ணலாம்?

நீ அந்த போட்டோவை கொண்டு வா

அது ஆதித்தியா ரூம்ல இருக்கு

சோ வாட்?

நான் அவன் கூட சண்டை போட்டுட்டு வந்திருக்கேன்

உன்னை யாரு சண்டை போட சொன்னது? கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமில்ல

இதெல்லாம் எனக்கு தேவைதான்என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

நாளைக்கு அந்த போட்டோ எனக்கு வேணும்

முடியாது சிவா. நீ போலிஸ்தானே… நீயே முயற்சி பண்ணி பாரு

ஏற்கனவே உன் புருஷனுக்கு என்னைப் பிடிக்காது… இதை வேற செஞ்சா வேண்டாத வம்பு. நான் ஒரு ஐடியா சொல்றேன்… ஆதித்தியா இல்லாத டைமா பார்த்து தூக்கிட்டு வந்துரு

நீயும் உன் ஐடியாவும்… அவன் கிட்ட மாட்டினா செத்தேன்

என் திங்க்ஸை விட்டுட்டுப் போயிட்டேன்… எடுக்க வந்தேன்னு சொல்லு

என்னை மாட்டி விடறதுக்கு முடிவு பண்ணிட்ட… வேற வழியில்ல… போய் தொலைக்கிறேன்

உன் புருஷனை காப்பாத்த இருக்கிற பெரிய எவிடன்ஸ்… விட்டுராதேஎன்று சொல்லிவிட்டுப் போனை துண்டித்தான் சிவா.

ஆதியின் வேதனையோ கோபமோ இரண்டுமே தனக்கு பாதிப்பை தரக் கூடியதென மனதில் நினைத்து கொண்டாள் விந்தியா.

30

விஸ்வரூபமாய் நிற்கிறாள்

ஆதித்தியா அன்று காலையில் சமுத்திரனின் வீட்டிற்கு வந்திருந்தான். உள்ளே வந்ததும் சுபா அளவில்லா ஆனந்தத்தோடு வரவேற்றாள்.

இப்பதான் வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா அண்ணா?என்று கேட்டாள் சுபா.

இப்ப கூடச் சூழ்நிலையும் சந்தர்ப்பமும்தான் என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்குஎன்றான் ஆதி.

பரவாயில்லண்ணா… ஆனா அண்ணியோடு வந்திருந்தால் ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும்

உங்க அண்ணிக்கு யார் சந்தோஷமா இருந்தாலும் பிடிக்காது… முக்கியமா நான்இப்படி அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே சுபா சமுத்திரன் மகன் மகளான சுபாஷும், சமுத்திராவும் வீட்டைச் சுற்றி விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

சுபா அவர்கள் இருவரையும் ஆதியின் அருகில் அழைத்தாள். ஆதித்தியாவை பார்த்ததும் அந்த வாண்டுகள் ஒன்றும் புரியாமல் விழித்தன.

என் டார்லிங்க்ஸுக்கு மேஜிக்கு பிடிக்குமா?” என்றான்

இருவரையும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு, உங்களுக்கு மேஜிக் தெரியுமா அங்கிள்?”என்றார்கள்.

ம்… உங்க ரெண்டு பேருக்கும் என்ன வேணும்… சாக்லேட்டா பிஸ்கேட்டா?” என்று கேட்டான்.

அவர்கள் இருவருமே சுபாவின் முகத்தைப் பார்த்துவிட்டு அவளின் பாவனைக்கு ஏற்றவாறு, அங்கிள் பிஸ்கேட்என்றனர்.

என் கையில இப்போ ஒண்ணுமில்ல… கம்மான் வாட்ச்”, என்று சொல்லிவிட்டு விரல்களைப் பல விதமாய் அசைத்து பிஸ்கேட் பாக்கெட்டை வரவழைத்தான்.

ரொம்பவும் சிலமணி நேரங்களில் அவர்கள் இருவருமே ஆதித்தியாவிடம் ஒட்டிக் கொண்டனர். சமுத்திரனின் வீட்டில் உள்ள அலுவலகத்திற்கு இருவரையும் அழைத்துச் சென்றான். அவன் உள்ளே நுழைய சமுத்திராவும் சுபாஷும் தெறித்து ஓடினர்.

ஏ வா ஒடிடலாம்… அப்பா அடிப்பாரு

சமுத்திரன் ஏதேதொ சட்ட புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருக்க ஆதித்தியா அங்கே இருந்த சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான்.

ஆதித்தியாவை கவனித்த சமுத்திரன், பரவாயில்லயே… எங்க ஞாபகம் கூட இருக்கா உனக்கு?என்றான்.

ஏன் அப்படி கேட்கிற?” என்று சொல்லியபடி அங்கிருந்த டிவியை ரிமோர்ட்டில் ஆன் செய்தான்.

நீ விந்தியாவைப் பிரிஞ்ச துக்கத்தில் குடிச்சிட்டு  தேவதாஸ் மாதிரி ரோட்டில விழுந்து கிடப்பியோனு…

சமுத்திரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே டி. வி நியூஸில் ஆதித்தியாவை தரைகுறைவாகச் சொல்லிக் கொண்டிருந்தனர். அவன் கேத்ரீனிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததினால்தான் அவள் தவறி விழுந்ததாக தெரியாத உண்மையை மக்களிடம் தெளிவாகச் சேர்த்து கொண்டிருந்தனர்.

இன்னும் ஆங்கில நியூஸ் சேனல்களில் அவனின் போட்டோவை போட்டு செகக்ஷுவல் ஹராஸ்மென்ட் என்று புதுப்புது வார்த்தைகளைப் பொருத்தி நான்கு பேர் நியாயம் பேசிக் கொண்டிருந்தனர்.

இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆதித்தியாவிற்கு கோபத்தைத் தாண்டி வெறி ஏற ரிமோட்டை அடிக்கத் தூக்கினான். அதற்குள் சமுத்திரன் கைகளிலிருந்து ரிமோட்டை பிடுங்கிக் கொண்டான்.

நீ டிவியை உடைச்சிட்டு போயிடுவ… நான்ல என் மாமனாருக்குப் பதில் சொல்லணும்என்றான் சமுத்திரன்.

என்னடா இதெல்லாம்? என்ன மேட்டர்னே தெரியாம அவனுங்க இஷ்டத்துக்கு கதை அளந்துட்டு இருக்கானுங்கஎன்றான் ஆதித்தியா வெறியோடு.

இதுக்கெல்லாம் காரணகர்த்தாவை விட்டுட்டு டிவி மேலயும் சேனல்காரன் மேலேயும் கோபப்படறதுல என்ன யூஸ்?

யார பத்தி பேசற?”

நீ கல்யாணம் பண்ணியே ஒரு உத்தமி… அவள பத்திதான் பேசிட்டிருக்கேன்

நீ இன்னும் அந்த விஷயத்தை விடலியா?

நல்லவனா இருடா… அதுக்காக இவ்வளவு நல்லவனா இருக்காதே

நான் அன்னிக்கு கேத்ரீனை பார்க்க போனதுக்கு அவ என்ன பண்ண முடியும்… எல்லாம் என் விதிஎன்று ஆதி தலையில் கை வைத்துக் கொண்டான்.

விதி இல்லடா… எல்லாம் விந்தியாவோட சதி. தியாகி வேஷம் போட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா… ஹோட்டல் ஆதித்தியாவோட மொத்த அட்மினிஸ்ட்டிரேஷனை தன் கையில வைச்சுகிட்டா…

உனக்கு உரிமையான பணத்தையே கேட்க விடாம, உன்னைப் ப்ரயின் வாஷ் பண்ணி, பேங்கில லோன் அப்ளை பண்ண சொல்லி கடன்காரன் ஆக்கிட்டா… இப்போ அவ முன்னாள் காதலன் மூலமா போலீஸில் உன்னை சிக்கவைச்சிட்டா… நாளைக்கு உன்னை மொத்தமா வெளிய வர விடாம பண்ணி சொத்தை எல்லாம் தான் பேரில மாத்திக்கப் பார்க்கிறா

என்று சமுத்திரன் சொல்லி கொண்டிருக்க ஆதித்தியா கோபத்தில் அவனை வெளிவரவிடாமல் சமுத்திரன் அமர்ந்திருந்த இருக்கையில் கால் வைத்து அவனின் கழுத்தை பிடித்தான்.

“ஃபிரண்டுனு பார்த்தா ரொம்பத்தான் ஓவரா பேசுற நீ. சொத்து மேல ஆசைப்படறவளா என்னை ஒரு நிமிஷத்தில தூக்கி எறிஞ்சிட்டு போனா…

என் பணத்தைப் பாத்து மயங்கி என் காலடியில் விழுந்த நிறைய பொண்ணுங்கள பாத்திருக்கேன்… ஆனா எப்பேர்ப்பட்ட பணத்தையும் பார்த்து மயங்கி தன்னுடைய தன்மானத்தையும் தன்னையும் விட்டு கொடுக்க மாட்டா…

பணம் முக்கியம்னா அந்த தலைவணங்காத திமிரு எதுக்கு… எவன்கிட்ட வேணா படிஞ்சு போயிடலாமே…

தன்னோட சுயநலத்தை முக்கியமா நினைக்கிறவளா குடும்பத்தை இத்தனை வருஷமா சுகதுக்கத்தை மறந்து தாங்கிட்டிருந்தா… எத்தனை கோடியாயிருந்தாலும் அவளின் சம்பாத்தியம் தவிர மற்ற எல்லோருடைய பணமும் அவளுக்கு கால் தூசிக்கு சமானம்…

இப்ப கூட சிவாகிட்ட தப்பு இருக்குமோனு யோசிச்சேனே தவிர விந்தியாகிட்ட தப்பு இருக்கும்னு ஒரு செகண்டு கூட யோசிக்கல…

எப்பேர்பட்டவனாக இருந்தாலும் தப்பா அவள ஒரு பார்வை பார்த்தானா அத்தோட அவன் செத்தான்…

நீ அவ்வளவு பேசியும் உன்னை விட்டு வைச்சிருக்கானா… நீ என் பிரண்டுங்கிற ஒரே காரணத்தாலதான்… என்ன சமுத்திரன் மண்டையில ஏறுச்சா? இனிமே விந்தியா என்ற பேரை கூட நீ சொல்லக் கூடாதுஎன்று அவன் சொல்லி முடித்துக் கழுத்தை விடும் போது சமுத்திரன் விழி பிதுங்கி தொண்டை குழி அமுங்கி சாவின் விளிம்பை தொட்டு விட்டு வந்தான்.

ஆதித்தியா அத்தோடு அந்த அறையை விட்டு கோபத்தோடு வெளியேறினான். சமுத்திரனுக்கு கொஞ்ச நேரத்திற்கு யோசிக்கும் திறமை அற்றவனாய் கிடந்தான். சுயநினைவு வந்த போதுதான் தெரிந்தது விந்தியா அவன் மனதில் வானின் உயரத்திற்கு விஸ்வரூபமாய் நிற்கிறாள் என்று.

விந்தியா கொஞ்சம் பயத்தோடே ஆதித்தியா வீட்டை அடைந்தாள். உள்ளே வேலை பார்த்துக் கொண்டிருந்த சண்முகம் விந்தியாவை நெகிழ்ச்சியோடு வரவேற்றான்.

விந்தியா வந்தவுடன் ஆதித்தியாவை பற்றியும் சந்திரகாந்த்தையும் பற்றியும் முதலில் விசாரித்தாள். இருவருமே வீட்டில் இல்லை என்று தெரிந்ததும் இதுதான் சமயம் என்று மாடி ஏறினாள். சண்முகத்திடம் ஆதித்தியா வந்தால் தான் இங்கிருப்பதாகச் சொல்ல வேண்டாமென சொல்லிவிட்டு போனாள்.

அறைக்குள் நுழைந்ததும் ஆதித்தியாவின் பொருட்கள் இருக்கும் கப்போர்ட்டை திறந்தாள். திறக்க முடியாமல் கதவு பூட்டியிருந்தது.

இத்தனை நாளா திறந்திருக்கும்… இப்ப மட்டும் பூட்டுவானேன்?என்று புலம்பியபடி விந்தியா சாவியைத் தேடினாள்.

விந்தியா ஒருமுறை ஆதித்தியா எதையோ அவனுடைய கப்போர்ட்டில் தேடும்போது அவனுடைய கல்லூரி போட்டோவை தவறவிட்டான். ஆனால் அவள் எடுக்கும் முன் ஆதித்தியாவே மீண்டும் அதை எடுத்து வைத்தான். அந்த போட்டோதான் சிவா விசாரணைக்காகக் கேட்கும் முக்கியமான ஆதாரம்.

கடைசியில் டிராவில் இருந்த சாவி கப்போர்ட்டை திறக்க உதவியது. கலைந்து போயிருந்த அந்தப் பைஃல்களுக்குள் எப்படி கண்டுபிடிப்போம் என விந்தியாவிற்கு மலைப்பாய் இருந்தது.

அந்த சிவா இப்படி வம்புல மாட்டி விட்டுட்டானேஎன்று புலம்பியபடி எல்லாவற்றையும் வரிசையாக திறந்து பார்த்து நொந்து போனாள். கண்டுபிடிக்கவே முடியாதோ என துவண்டு போன போது அந்தக் கப்போர்டின் அடியில் அந்த போட்டோ ஒட்டி கொண்டிருந்ததைப் பார்த்து விந்தியாவின் மனம் நிம்மதி அடைந்தவளாய் அதனை தன் ஹேன்ட் பேக்கில் வைத்தாள்.

அப்பொழுதுதான் விந்தியா அந்த அறையைக் கவனித்தாள். முற்றிலும் அலங்கோலமாய் கிடந்தது. ஷ் டிரே சிகரெட் துண்டுகளால் நிரம்பி இருந்தது. கலங்கிய கண்களோடு அந்த டிரேயில் இருந்தவற்றை குப்பைத்தொட்டியில் கொட்டினாள். அங்கே படுக்கையில் கிடந்த அவளுடைய போட்டோ அவனின் மனம் ந்தப் பிரிவால் எத்தனை வேதனை கொண்டிருக்கும் எனப் புரிய வைத்தது.

இந்த யோசனைகளுக்கு இடையில் ஆதியின் பைக் சத்தம் அவளின் காதில் ஒலித்தது. விந்தியா பால்கனி வழியாக எட்டிப்பார்க்க அவன் காற்றைப் போல வேகத்தில் வந்திறங்கி மின்னலென வீட்டினுள் நுழைந்தான்.

ஏதோ கோபத்தில் வருகிறான் என்பதை அவன் நடையில் புரிந்து கொண்டவள், இந்தச் சமயத்தில் அவன் எதிரே போய் இந்நிலையில் நின்றாள் என்னாகுமோ என்றெண்ணி கப்போர்ட்டுக்கு பின்னாடி இருந்த இடைவெளிக்குள் மறைந்து கொண்டாள்.

ஆதித்தியா கோபத்தோடு அறைக்கதவை திறந்து படாரென மூடினான். அந்தச் சத்தம் விந்தியாவைக் கலங்கடித்தது.

சமுத்திரன் மீதுள்ள கோபத்தால் அறையில் அப்படியும் இப்படியும் நடந்தான். திடீரென அந்த ஷ் டிரேவை பார்த்து குழப்பம் கொண்டவனாய் சுற்றும் முற்றும் பார்த்தான். விந்தியாவிற்குத் தூக்கி வாரிப் போட்டது. ஏன் இப்படி செய்தோம் எனத் தன்னைத் தானே கடிந்து கொண்டாள்.

ஆதித்தியாவின் முகபாவனை மாறி அமைதியாக சோபாவின் மீது சாய்ந்தபடி உட்கார்ந்து கொண்டான். நேரம் கடந்து போக பொறுமை இழந்தவனாய், எவ்வளவு நேரம் கண்ணாமுச்சி விளையாடுவ… வெளிய வா விந்தியாஎன்றான். விந்தியாவிற்கு படபடப்பு அதிகமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content