Solladi sivasakthi-15&16
15
கோபமும் ஏளனமும்
சக்தி செல்வன் சற்றும் குறையாத கம்பீரத்தோடு அறைக்குள் நுழைய அவனை நேர் கொண்டு பார்க்க முடியாமல் சிவசக்தி தயங்கி நின்றாள்.
“உட்காருங்க சக்தி செல்வன்” என்று ஜோதி சார் உரைக்க அவனைப் பார்ப்பதை தவிர்க்க,
“அப்பா நான் கிளாஸுக்கு போறேன்” என்று வெளியே செல்ல யத்தனித்தாள்.
“இரு சக்தி” என்று ஜோதி சார் அவளைப் போகவிடாமல் தடுத்தார்.
அவள் தவிர்க்க முடியாமல் திரும்பி நோக்க அப்போது சக்திசெல்வன் அவன் முகம் தெரியாத வண்ணம் இருக்கையில் அமர்ந்திருந்தான்.
“வந்து நீயும் உட்காரும்மா… ” என்றார்.
எதற்குத் தன்னை அழைக்கிறார் என்று தெரியாமல் சக்தி விருப்பமின்றி இருக்கைக்கு அருகில் வர சக்திசெல்வன் சிவசக்தியை பார்த்த பார்வையில் ஒருவிதமான வெற்றிப் புன்னகை தெரிந்தது. அவள் முதன் முதலில் அவனைச் சந்தித்த போது அவனிடமிருந்த ஆடம்பர தோற்றம் முற்றிலும் இன்று மாறி சாதாரணமான உடையில் காட்சியளித்தான். உடைதான் மாறி இருந்ததே ஒழிய அவனின் தோரணையில் அந்த ஆடம்பரமும் கம்பீரமும் துளி கூட குறையவில்லை.
சக்தி அவன் அருகிலிருந்த இருக்கையில் அமர முடியாமல் நின்றபடி “சொல்லுங்கப்பா” என்று கேட்டாள்.
“முதல்ல நீ உட்காரு” என்று ஜோதி சார் மீண்டும் அழுத்தமாய் உரைக்க, சக்தி மூச்சை இழுத்துவிட்டபடி விருப்பமின்றி அமர்ந்தாள்.
சிவசக்தி அவனருகில் அமர்ந்திருந்தும் பாரா முகமாய் இருந்தபடி “என்ன விஷயம்பா ?” என்று ஜோதி சாரை நோக்கியபடி கேட்டாள்.
“இவர்தான் சக்தி செல்வன்…” என்று ஜோதி சார் கை காண்பிக்க இப்போது அவனைப் பார்த்தே தீர வேண்டிய கட்டாயத்தில் வேறு வழியில்லாமல் இயந்திரத்தனமாய் புன்னகையை உதிர்த்தாள்.
ஜோதி சார் சக்தி செல்வனை நோக்கி “இவங்க பெயர் சிவசக்தி…ஸோசியல் டீச்சர்… என்னோட மகள் மாதிரி” என்றார்.
சக்தி செல்வன் அப்போதுதான் அவளைப் பார்ப்பது போல் “நைஸ் மீட்டிங் யூ சிவசக்தி” என்று அவளை பார்த்து வசீகரமாய் புன்னகையித்தான்.
இப்போது ஜோதி சார் தொண்டையைக் கனைத்துவிட்டு “இத பாருங்க சக்தி செல்வன்… உங்க பயோடேட்டா ரொம்ப இம்பிரஸ்ஸிவ்வா இருக்கு… ஆனா உங்க தகுதிக்கு நீங்க இன்னும் பெட்டரான இடத்தில வேலை செய்யலாம்.. இங்கே ஸேலரி கொஞ்சம் கம்மிதான்… நீங்க யோசிச்சு முடிவெடுங்க” என்றார்.
சக்திசெல்வன் கம்பீரத் தொனியில் “யோசிக்க வேண்டிய அவசியமில்ல… ஸேலரி நாட் அ பிராப்பளம்… நான் இங்க வொர்க்க பண்ண டிசைட் பண்ணிட்டேன்.. இனிமே நீங்கதான் நான் உங்க ஸ்கூல்ல வேலை செய்ய தகுதியானவனான்னு சொல்லனும்” என்றார்.
“தகுதி உங்களுக்கு நாங்க எதிர்பார்த்ததை விட அதிகமாவே இருக்கு… அதுவும் இல்லாம சக்திமா என்ன சொல்றான்னா.. நீங்க இன்னும் பெட்டர் ஜாப் கிடைச்சு பாதியிலேயே நின்னுட்டா… அப்புறம் டுவல்த் ஸ்டன்டட் வேற… எங்களுக்குத்தான் ரிஸ்க்” என்றார்.
சக்தி செல்வன் சிரித்துவிட்டு “அப்படி எல்லாம் எந்த வேலையையும் அறைகுறையாய் பாதியிலேயே விட்டுவிட்டு போற பழக்கம் எனக்கில்லை” என்று சக்தி செல்வன் சொல்லி முடித்து சக்தியை திரும்பிப் பார்த்த பார்வையில் அவன் சொன்னதன் உள்ளர்த்தம் வாசகர்களுக்குப் புரிந்ததோ தெரியவில்லை. ஆனால் சிவசக்திக்கு நன்றாகவே புரிந்தது.
சிவசக்தி ஜோதி சாரை நோக்கி “டுவல்த் ஸ்டான்டை எல்லாம் எக்ஸ்ப்பிரீயன்ஸ் இல்லாம மேனேஜ் பன்றது… ரொம்ப கஷ்டம்” என்றாள்.
“அப்போ என்னால முடியாதுன்னு சொல்றீங்களா சிவசக்தி” என்று அவளிடம் நேரடியாகவே திரும்பி சக்தி செல்வன் கேட்டான்.
சிவசக்தி உடனே அவன் புறம் திரும்பி “நான் யதார்த்தத்தை சொன்னேன்… எக்ஸம்ஸ்ல என்ன கேள்வி வரும்… மார்க் வெயிட்டேஜ்… இப்படி எதாவது தெரியுமா…உங்களுக்கு” என்று கேள்வி எழுப்பினாள்.
“எக்ஸேம் நோக்கத்தில படிச்சா மார்க் வாங்கலாம்… பட் எதிர்காலம் கேள்வி குறியாயிடும்… எக்ஸ்பிரீயன்ஸை விட ஒரு டீச்சர்கிட்ட சப்ஜக்ட் நாலேஜ் இருக்கான்னு பார்க்கனும்… “என்றான்.
“பிளஸ் டூ போஷன்ஸ் ரொம்ப நிறைய இருக்கும்… போன தடவை இருந்த டீச்சர் கம்பிளீட் வேற பண்ணல… எதுவும் தெரியாம இவரால் மேனஜ் பண்ண முடியாதுப்பா” என்று ஜோதி சாரை பார்த்து தீர்க்கமாக உரைத்தாள்.
சிவசக்தி இப்படி ஒருவரை நிராகரிக்க ஆர்வம் காட்டுவதை ஜோதி சாரால் நம்பவே முடியவில்லை. அவள் எதற்காக நிராகரிக்கிறாள் என்பது சக்திசெல்வனுக்கு நன்றாகவே புரிந்தது. ஆனால் அவன் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.
சக்தி செல்வன் எழுந்து நின்றபடி
“முடியாதுங்கிற வார்த்தையே என் அகராதியில் கிடையாது… என் மேல நம்பிக்கை இருந்தா மட்டும் இந்த வேலையை எனக்கு கொடுங்க… ” என்று சக்திசெல்வன் கர்வத்தோடு உரைக்க அவன் பேச்சில் ஜோதி சார் கவர்ந்து இழுக்கப்பட்டார்.
“சக்தி செல்வன்… எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு… ரொம்ப துடிப்பான ஆள் நீங்க… உங்களை மாதிரி ஒருவர் இந்த ஸ்கூலுக்கு தேவை… அப்பாயின்மென்ட் ஆர்டர் எடுத்துட்டு வரச் சொல்றேன்… ஆபிஸ் கேபின்ல வெயிட் பண்ணுங்க” என்று ஜோதி சார் உரைத்தார். சக்திசெல்வன் ஜோதி கிருஷ்ணனிடம் கை குலுக்கிவிட்டு வெளியே சென்றான்.
அவன் சென்ற பிறகு சிவசக்தி மீண்டும் ஜோதி சாரிடம் “டெமோ கிளாஸ் எடுக்க சொல்லுங்கப்பா… அதுக்குள்ள என்ன அவசரம்” என்றாள்.
“சக்தி… நான் பல வருஷமா இந்த ஸ்கூலை நடத்திட்டிருக்கேன்… பல பேரை என் வாழ்கைக்யில பாத்திருக்கேன்… அதனால ஒருத்தரைப் பார்த்ததும் என்னால் நிச்சயம் அவங்க தகுதியானவங்களான்னு தெரிஞ்சிக்க முடியும்… அதுவும் இல்லாம சக்தி செல்வன் பேச்சில் என்ன ஒரு தெளிவு, தைரியம் பார்த்தியா… இத்தனை வருஷ அனுபவத்தில் சொல்றேன்… சக்தி செல்வன் நிச்சயமா ரொம்பவும் தகுதியான பொறுப்பான ஆள்…” என்றார்.
சிவசக்திக்கு என்ன சொல்வதென்றே புரியாமல் “உங்ளுக்கு ஒகேன்னா சரிதான்… நான் கிளாஸுக்கு போறேன்… ” என்று திரும்பியவள் மீண்டும் ஏதோ நினைவு வந்தவளாய் “ஜெயா ஏன் இன்னும் வரலப்பா ?” என்று கேட்டாள்.
“நான் சீக்கிரம் வந்துட்டேன்ல… அதனால அவ தூங்கி எழுந்து லேட்டாதான் வருவா… திருந்தாத ஜென்மம்” என்று ஜோதி சார் சொல்ல சக்தி சிரித்தபடி “ஒகேப்பா” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.
சிவசக்தி கையில் வாட்ச்சை பார்த்துவிட்டு விறுவிறுவென தன் வகுப்பிற்கு விரைந்தாள். அங்கே பெரிய கூச்சலும் குழப்பமும் நடந்திருந்தது. சக்தி உள்ளே வந்த நொடியில் அங்கே நிசப்தம் குடிகொண்டது. மேஜை மேல் இருந்த ரெஜிஸ்டரை புரட்டினாள். அவனைப் பற்றிய ஆயிரம் கேள்விகள் மனதில் சுழற்றிக் கொண்டிருக்க அன்று முழுவதுமே அவளால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.
மாலை நேரம் வேலை எல்லாம் முடிந்து சோர்வோடு கிளம்பும் நேரத்தில்தான் ஜெயாவை பார்க்கவே இல்லையே என்ற எண்ணம் தோன்றியது. நேராக அலுவலகத்திற்குச் சென்றவள் அங்கே ஜெயாவும் சக்திசெல்வனும் ரொம்ப நாள் பழகியவர் போலப் பேசி கொண்டிருந்தனர். ஜெயாவிடம் சக்தி செல்வன் எல்லா விஷயத்தையும் சொல்லி இருக்கக் கூடுமோ என்ற பயந்தபடி நோக்கினாள். ஜெயா சிரித்து கொண்டே சிவசக்தி வாசலில் நிற்பதை பார்த்துவிட்டு உள்ளே வரச் சொல்லி அழைத்தாள்.
சிவசக்தி உள்ளே சென்று அவனைச் சந்திக்க விருப்பமின்றி “நான் கிளம்பனும் ஜெயா… பை” என்று சொல்லிவிட்டு புறப்படப் பார்த்தவளை ஜெயா கையை பிடித்து உள்ளே அழைத்து வந்தாள்.
“விடு ஜெயா… நான் கிளம்பனும்” என்று சக்தி ஜெயாவின் கையை உதறினாள். ஜெயா சிவசக்தியின் தவிப்பைப் புரிந்து கொள்ளாமல் இருவரையும் அறிமுகம் செய்வித்தாள்.
“காலையிலேயே நாங்க அறிமுகமாயிட்டோம்” என்று சக்தி செல்வன் உரைக்க ஜெயா சிவசக்தியினை நிமிர்ந்து பார்த்து “அப்படியா சக்தி ?” என்று கேட்டாள்.
“ஆமாம்” என்று முகத்தை தொங்கப் போட்டபடி நின்றாள்.
“என்னோட பெஸ்ட் பிஃரண்டு” என்று சிவசக்தியின் தோள்களில் கை வைத்து ஜெயா பெருமையோடு சக்தி செல்வனிடம் உரைக்க, அதெல்லாம் அவன் முன்னமே அறிந்த கதைதானே.
“சக்தி… நான் கேட்க வந்ததையே மறந்துட்டேன்… உங்க ஏரியாவில ஏதாச்சும் வீடு வாடகைக்கு இருக்கா ?” என்று சிவசக்தியை நோக்கி ஜெயா கேட்க,
“எதுக்கு கேட்கிற ?” என்று சிவசக்தி வினவினாள்.
“மிஸ்டர். சக்திக்காகத்தான்” என்றாள்.
இப்போது சிவசக்தியின் புருவங்கள் சுருங்க சக்திசெல்வனை நோக்கி பொறுமை இழந்தவளாய் “இத பாருங்க சக்தி… இதுவரைக்கும் நீங்க விளையாடின விளையாட்டெல்லாம் போதும்… இனிமேயும் புதுசா ஏதாச்சும் ஆரம்பிக்காதீங்க… ப்ளீஸ் இங்கிருந்து போயிடுங்களேன்…” என்று கோபத்தோடு உரைக்க ஜெயாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை.
“ஒரு வாடகை வீடு கேட்டது தப்பா” என்று ஜெயா கேட்க “நீ வேற ஜெயா புரியாம ?” என்று சக்தி அலுத்துக் கொண்டாள்.
ஆனால் சக்தி செல்வன் எதுவும் பேசாமல் மௌனம் காத்தான்.
மீண்டும் சிவசக்தி அவனை நோக்கி “அன்னைக்கே நாம பேசி முடிச்சிட்டோம்… இப்போ புதுசா என்ன… உங்க பணக்கார விளையாட்டில எல்லோரையும் முட்டாளாக்க பார்க்காதீங்க…” என்று வெறுப்பைக் காட்டியபடி சொல்லும் போதும் அவன் இயல்பாகவே அமர்ந்திருந்தான். அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல ஆர்வம் காட்டவில்லை. ஏன் அவள் பேசியதை அவன் பொருட்படுத்தவும் இல்லை.
“நான் பேசிறது உங்க காதில விழலயா மிஸ்டர்… ஸே சம்திங்… ” என்று சிவசக்தி சொன்ன போதும் அவன் கவனிக்காதது போலவே அமர்ந்திருந்தான்.
ஒருபுறம் சிவசக்தியின் திடீர் கோபம். மறுபக்கம் ஏளனமான பார்வையோடு திரும்பிக் கூட பார்க்காமல் அமர்ந்திருக்கும் சக்திசெல்வன். இருவரின் நடவடிக்கையும் ஜெயாவை பெரிதும் குழப்பமடையச் செய்தது.
16
நட்பின் தொடக்கம்
ஜெயா சக்தியின் அருகில் வந்து “சக்தி இங்க என்ன நடக்குதுன்னு கொஞ்சம் சொல்றியா ?” என்று கேட்டாள்.
“அத நீ இந்த ஹீரோ சார்கிட்ட கேளு ஜெயா” என்று சொன்னதும் ஜெயாவிற்கு இப்போது ஓரளவிற்கு நடந்தவை விளங்கியது.
அவள் முகத்தில் புன்னகை மலரச் சக்தி செல்வனை நோக்கி “சூப்பர்… அது நீங்கதானா… சொல்லவே இல்லயே…யூ ஆர் ரியலி கிரேட்… சக்திக்கும் உங்களுக்கும் பெயர் பொருத்தம் அமோகம்” என்று சொல்ல சக்திசெல்வன் இதழ்கள் விரிந்தன.
சிவசக்தியோ கோபத்தோடு ஜெயாவை பார்த்து “ஸ்டாப் டாக்கிங் நான்ஸன்ஸ்” என்றாள்.
“நீதான் நான்ஸென்ஸ் மாதிரி பேசிட்டிருக்க… சக்தி சார்கிட்ட என்ன பிரச்சனை உனக்கு … “என்று ஜெயா கோபமாக கேட்டாள்.
இப்படி இரண்டு தோழிகளும் எதிரெதிராய் நின்று முறைத்துக் கொண்டிருந்தனர்.
உடனே சக்தி செல்வன் இம்முறை எழுந்து நின்றபடி “ஜெயா ப்ளீஸ்” என்று அவன் அவளை பேச வேண்டாமென சொல்லாமல் சொல்ல சக்திக்கு கோபம் பீறிட்டுக் கொண்டு வந்தது.
“நாங்க பிரண்டஸ்… நீங்க எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வர வேண்டாம்… அதுவும் இல்லாம நீங்க யாரு… உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் ?” என்றாள்.
“கரெக்ட் சக்தி… ஆனா அந்த கேள்வியை நீ என்கிட்ட கேட்க கூடாது… உன்கிட்டியே கேட்டுக்கோ… நமக்குள்ள என்ன சம்பந்தமுமில்லன்னா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்கிட்ட எதுக்கு கோபப்பட்ட… நான் இங்க வேலைக்கு சேர்ந்தா உனக்கென்ன… உன் வேலையை பாத்துட்டு போ… பிடிக்கலன்னா.. வேலையை விட்டுவிட்டு போ… அதை விட்டுவிட்டு எதுக்கு இந்த குதிகுதிச்சிட்டிருக்க… உன் பிரச்சனையே இதுதான்… கோபம் வந்தா உனக்கு மூளை வேலை செய்ய மாட்டேங்குது… ” என்றான் இயல்பான முகபாவத்தோடு
மேலும் சிவசக்திக்கு வெறுப்பு உண்டாக “போதும் நிறுத்துங்க சக்தி… நீங்க உங்க லிமிட்டை தாண்டி பேசிட்டிருக்கீங்க… என்னைப் பத்தி விமிர்சனம் பண்ண உங்களுக்கு உரிமையே இல்லை”என்று அழுத்தமாய் உரைத்தாள்.
“அதேதான்… நான் எங்க இருக்கனும் இருக்க கூடாதுன்னு சொல்ல உனக்கும் உரிமை இல்லை…” என்று சக்தி இப்போது சினம் மிகுதியால் சொல்லிவிட்டு தன் கூர்மையான விழிகளால் அவளை நோக்கினான்.
“நீங்க எங்கவேன்னா இருந்துட்டு போங்க… என் வழில நீங்க தேவையில்லாம தலையிட்டு தொல்லை கொடுக்கிறீங்க…”
“ஹெலோ… நான் ஒண்ணும் உனக்கு தொல்லை கொடுக்கல… நீதான் இப்போ தேவையில்லாம வந்து எனக்கு தொல்லை கொடுக்கிற”
ஜெயாவிற்கு இவர்கள் சண்டையை எப்படி நிறுத்துவது என வழி தெரியாமல் விழித்தாள்.
“தி கிரேட் மீனாக்ஷி வாசுதேவன் மோகன்ராமுக்கும் பிறந்த ஒரே புத்திரனுக்கு இங்க வந்து வேலை செய்ய வேண்டிய அவசியமென்ன…?”
“நீதான் அதுக்கு காரணம்” என்று சக்திசெல்வன் பளிச்சென்று உரைக்க,
“வாட்?” என்று கேட்டபடி சக்தி அதிர்ச்சியோடு முறைத்தாள்.
“யூ கான்ட் சர்வைவ் வித்அவுட் மனி அன் ஸ்டேட்டஸ்னு சொல்லி என்னை நீ இன்ஸல்ட் பண்ணல…மறந்திட்டியா… இப்போ என்னை பாத்து என்ன அவசியம்னு கேட்கிற ?”
சிவசக்தி இப்போது பேசமுடியாமல் அமைதியானாள்.
‘அப்பாடா… புயல் அடிச்சி ஓய்ந்த மாதிரி இருக்கு’ என்று ஜெயா எண்ணி பெருமூச்சுவிட்டாள்.
அதற்குள் சக்திசெல்வன் சிவசக்தியை நோக்கி “ஏன் ஸைலன்ட் ஆயிட்ட… பதில் சொல்லு சக்தி” என்றான்.
“நான் சொன்ன விஷயத்தை இவ்வளவு சீரியஸா எடுத்துப்பீங்கன்னு நான் நினைக்கல… நான் சொன்னது உங்க மனசை காயப்படுத்தி இருந்தா ஐம் வெரி ஸாரி… நான் அப்படிச் சொன்னது தப்புதான்…பட் ப்ளீஸ் இங்கிருந்து போயிடுங்க… நான் ஜோதி சார்கிட்ட பேசிக்கிறேன்” என்று தன் குரலை தாழ்த்தி சிவசக்தி பொறுமையாக எடுத்துரைத்தாள்.
“ஸில்லியா பேசாதே சக்தி… நீ சொன்ன விஷயம் என்னை டிஸ்டர்ப் பண்ணுச்சு… ஏன்… இந்த மனி ஸ்டேட்டஸ் எல்லாம் இல்லாம என்னால இருக்க முடியாதான்னு தோணுச்சு… ஒய் நாட்… சேலஞ்சிங்கான மேட்டர்… ட்ரை பண்ணலாம்னு நினைச்சேன்… நான் இங்க இருக்கேன்… இப்போதைக்கு ஐ ஹேவ் நத்திங்… சிம்பிள் மேன்… பட் என் மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு… ஐ கேன் மேனேஜ்…” என்றான்.
சிவசக்தி அப்படியே அவன் தன்னம்பிக்கையான பேச்சில் வியந்தபடி வாயடைத்துப் போய் நிற்க ஜெயாவோ புன்னகையோடு “சூப்பர் சக்தி சார்… ரொம்ப கட்ஸ் உங்களுக்கு” என்றாள்.
சிவசக்தி இப்போது அமைதியாய் மெல்லிய புன்முறுவலோடு “உங்க ஹேட்டிட்டியூட் பார்த்து நான் இம்பிரஸ்ஸாயிட்டேன்னு சொல்றதா… இல்ல என் பிடிவாதத்தை பிடிச்சிட்டு தொங்கிறதான்னு எனக்கு தெரியல… ஆனா இப்பவும் சொல்றேன்… காதலுங்கிற வார்த்தை மேல எனக்கு துளி கூட நம்பிக்கை இல்லை… அது சந்தோஷத்தை விட வலியைத்தான் அதிகமாக கொடுக்கும்… அதனாலதான் நான் அன்னைக்கு ஏர்போர்ட்ல நீங்க கேட்டதுக்கு நோன்னு சொன்னேன்” என்றாள்.
“என் மேலையும் தப்பு இருக்கு சக்தி… அன்னைக்கு ஏர்போர்ட்ல நான் அப்படி உன்னை டென்ஷன் பண்ணி… என் லவ்வை சொல்லிருக்கக் கூடாது… அந்த நேரத்தில உன்னால மட்டும் என்ன பண்ணிருக்க முடியும்… நீ யோசிக்கிறதுக்குக் கூட டைம் கொடுக்காம எஸ் ஆர் நோன்னு சொல்ல சொன்னது… நியாயமில்ல… ஆனா இப்போ நான் இங்க இருக்க போகிற இந்தக் கொஞ்ச நாட்கள் நீ என்னை புரிஞ்சிக்கிட்டு என் காதலை ஏத்துக்கலாம்… இல்லன்னா நான் உன் நிலைமையை புரிஞ்சிக்கிட்டு உன்னை விட்டு விலகிப் போகலாம்… அதுவரைக்கும் நாம பிரண்டஸ்ஸா இருப்போமே” என்று சக்தி செல்வன் சொல்ல
ஜெயா சிரித்து கொண்டே “இது நல்ல டெசிஷன்… சக்தி ஒத்துக்கோ” என்றாள்.
சிவசக்தி ரொம்ப நேரம் யோசித்த பிறகு தயக்கத்தோடு தலையாட்டினாள்.
“நீங்க மீனாக்ஷி மேடமோட சன்னா சக்தி சார்” என்று ஜெயா தன் சந்தேகத்தை சக்தி செல்வனிடம் கேட்க “ஆமாம் ஜெயா… ஆனா ப்ளீஸ் சக்தி சார்னு கூப்பிடாதே… கால் மீ சக்தி” என்றான்.
“சக்தின்னு கூப்பிட்டா குழப்பம் வரும்.. அதனால சக்தி ப்ரோன்னு கூப்பிடறேன்” என்று ஜெயா சொல்ல சக்தியும் ஆமோதித்தான்.
மூவரும் ஒருவாறு இயல்பான மனநிலைக்கு வர சிவசக்தி மட்டும் லேசான தவிப்போடு இருந்தாள். ஜெயா சக்தி செல்வனை தன் வீட்டிலேயே தங்கிக்க சொல்ல அதனால் ஜோதி சாருக்கு அவனை பற்றி தெரிந்துவிடும் என மறுத்தான். சக்தி சாத்தியமா என்று விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் நம் நாயகனை தன் வீட்டில் தங்கும்படி சொன்னாள்.
“அதெப்படி முடியும் ?!” என்று ஜெயா அதிர்ந்தாள்.
“நோ.. சக்தி … இட்ஸ் ஒ.கே… நான் பாத்துக்கிறேன்… ” என்று சக்தி செல்வன் சொல்ல
“எங்க வீட்டு மாடில தனியா ஒரு ரூம் இருக்கு… நீங்க அங்க ஸ்டே பண்ணிக்கங்க… எனக்கு நீங்க நிறைய உதவி செஞ்சிருக்கீங்க… நான் செய்யற சின்ன உதவியா இது இருக்கட்டுமே… ப்ளீஸ் டோன்ட் ஸே நோ…” என்றாள்.
சக்தி செல்வன் மௌனமாய் யோசிக்க “அங்கே முழுக்க லேடிஸ்தான்… உங்களுக்கு கம்பெனி கொடுக்க ஒருத்தன் இருக்கான்… பட் அவனுக்கும் மூணு வயசுதான்…” என்று சொல்லி ஜெயா சிரித்தாள்.
ரொம்ப நேரம் தயங்கிய பிறகு சிவசக்தி இல்லத்தில் தங்க சக்திசெல்வன் சம்மதித்தான்.
இங்கே குழப்பம் முடிவடைந்த அதே நேரத்தில் மீனாக்ஷி வாசுதேவன் அறியப் போகும் தகவல் பெரும் குழப்பத்தை அவளுக்குள் ஏற்படுத்தியது. மீனாக்ஷி தன் விசாலமான அலுவலக அறையின் சோபாவில் அமர்ந்தபடி லேப்டாப்பை தட்டிக் கொண்டிருந்தாள். அப்போது கதவு தட்டப்பட மீனாக்ஷி தலையை நிமிராமல் “கம்மின்” என்றார்.
உள்ளே வந்த நபரைப் பார்த்த மீனாக்ஷி ஆர்வத்தோடு நிமிர்ந்து உட்கார்ந்து
“முரளி… உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்”என்றார்.
“குட் ஈவினிங் மேடம்”
“சக்தி எங்க இருக்கான்னு டீடைல்ஸ் தெரிஞ்சிதா… முரளி ?”
“எஸ்… மேடம் ஒரு ஸ்கூல்ல டீச்சரா ஜாயின் பண்ணி இருக்கிறார்” என்றான்.
“கரெக்டா தெரியுமா முரளி” என்று சந்தேகமாய் கேட்டார்.
“நல்லா தெரியும் மேடம்… ” என்றான்.
“எதுக்கு டீச்சரா போய்…அவனோட தகுதிக்கு… ஏன் இப்படி பண்ணிட்டிருக்கான்”
என்று மீனாக்ஷி தனக்குத் தானே குழம்பி கொள்ள, முரளி சற்று தயங்கியபடி “மேடம் இன்னொரு மேட்டர்” என்றான்.
“ம்.. சொல்லுங்க முரளி” என்று மீனாக்ஷி ஆர்வமாய் கேட்க
“சக்தி சார் அவர் லவ் பண்ண பொண்ணுக்காகதான் இப்படி எல்லாம் செய்றாரு… அந்த பொண்ணு அங்க டீச்சரா வேலைப் பார்க்கிறாங்க” என்றான்.
மீனாக்ஷி இல்லை என்பது போல் தலையசைத்து”டோன்ட் ஜோக்… இருக்கவே இருக்காது… நோ சேன்ஸ்” என்று சொல்லிவிட்டு சிரித்தார்.
“மேடம்… உண்மையாகவே சார் அங்கே போனதுக்கு காரணம் அதான்” என்று மீண்டும் அவன் அழுத்தமாய் உரைத்தான்.
“நோ முரளி… நிச்சியமா இருக்காது… ஏதோ தப்பான இன்ஃபர்மேஷன்” மீனாக்ஷி நம்ப மறுத்தாள்.
“இல்ல மேடம்… சார் லவ் விஷயம் உண்மைதான்… நானுமே பல தடவை விசாரிச்சிட்டேன்…” என்று திரும்ப திரும்ப முரளி நம்பகமாய் உரைக்க
இப்போது மீனாக்ஷியின் முகப்பவனை லேசாக மாறி இருந்தது. அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று அவர் மனம் தீர்க்கமாய் சொன்னது. சக்தி மீனாக்ஷியிடம் இயல்பாக எல்லா விஷயத்தையும் பகிர்ந்து கொள்வான். ஆனால் தன்னிடம் மறைத்து ஒரு பெண்ணிற்காக தன் ஆடம்பரங்களை எல்லாம் விட்டுச் சென்றிருப்பது ஒரு விதமான கலக்கத்தை அவருக்குள் ஏற்படுத்தியது.
முரளியின் முகத்தைப் பார்த்து “அந்த பொண்ணோட பேர் என்ன?” என்று கேட்டார்.
“சிவசக்தி… ஸோஸியல் டீச்சரா இருக்காங்க.. அதுவும் இல்லாம எஸ்.எஸ். காலேஜில படிச்ச ஓல்ட் ஸ்டூடண்ட்” என்று முரளி உரைத்தான்.
இந்தத் தகவல் மீனாக்ஷியை நம்புவதற்கான வாய்ப்பு இருக்குமோ என்று தோன்றியது. தன்னையும் பிரிந்து விவரத்தைச் சொல்லாமல் இந்த சிவசக்தியை தேடிப் போயிருக்கிறான். அப்படி என்ன அவளிடம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் சிவசக்தியின் முழுவிவரத்தை போட்டோவோடு கொண்டுவரும்படி முரளியை பணித்தார்.
அதீதமான அன்பு யாரிடம் இருந்தாலும் அதில் உரிமை போராட்டம் தொடங்கிவிடுகிறது. சிவசக்தியை பற்றி தெரிந்து கொள்வதன் மூலமாக மீனாக்ஷியின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சிவசக்தி எந்தத் தைரியத்தில் நம் நாயகனை இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறாளோ? தெரியவில்லை. அவனுக்குமே அங்கே தங்க தயக்கமாய் இருந்தது. இருவருமே பள்ளியிலிருந்து புறப்பட்டு நடந்து வரும் வழியில் விவாதித்துக் கொண்டே வந்தனர்.
“சக்தி உனக்குச் சிரமம் வேண்டாம் நான் பாத்துக்கிறேன்” என்று சக்திசெல்வன் அங்கே தங்க தயங்கினான்.
“நான் ஒண்ணும் உங்க மேல இருக்கிற அக்கறையில இங்க கூட்டிட்டு வரல… ஜஸ்ட் நான் உங்களுக்குச் செலுத்த வேண்டிய நன்றிக் கடனுக்காக … அவ்வளவுதான்”என்று புரியும்படி சிவசக்தி அழுத்தமாய் உரைத்தாள்.
“இப்படி எல்லாம் நீ செய்வதன் மூலமா நமக்குள்ள இருக்கிற நன்றிக்கடன் தீர்ந்திராது” என்று சக்தி செல்வன் சொல்லிவிட்டு சிரித்தான்.
“ஓ… அப்போ நீங்க நல்லெண்ணத்தில உதவல… என்கிட்ட எதையோ எதிர்பார்த்துதான் உதவனிங்க… இல்ல” என்று சந்தேகப் பார்வை பார்த்தாள்.
“யாருக்கு பிரச்சனை வந்தாலும் நான் பதிலுதவி எதிர்பார்க்காம உதவிறது என்னோட வழக்கம் … ஆனால் உன்கிட்ட மட்டும்தான் பிரதிஉபாகாரம் எதிர்பார்க்னும்னு தோணுது சக்தி…”என்று சொல்ல அவள் காதலுக்காக அவன் ஏங்குவது அவன் விழியில் தெரிந்தது.
அதைத் தெளிவாய் கணித்த சிவசக்தி அலட்சிய பார்வையோடு “நீங்க எதிர்பார்க்கிறது எல்லாம் என்னால செய்ய முடியாது… வீடு வந்துருச்சு … உள்ளே என்ன நடந்தாலும் கொஞ்ச நேரத்துக்கு ரியாக்ட் பண்ணிக்காதீங்க”என்று அதிகாரமாய் உரைத்தாள்.
“அப்படின்னா? … என்ன சக்தி ரொம்ப பயம்முறுத்திற?” என்று கேள்வி குறியோடு சக்திசெல்வன் பார்க்க
“கொஞ்சம் அப்படிதான் இருக்கும்” என்று புன்னகையித்தாள்.
“எனக்கு நீ உதவி செய்ய நினைக்கிறியா இல்ல பழி வாங்க நினைக்கிறியா ?” என்று மேலே செல்லாமல் நின்றபடி கேட்டான்.
“இரண்டுமேதான்” என்று உரைத்துவிட்டு முன்னேறி நடந்தபடி சிவசக்தி வீட்டின் வாசலை அடைய அவள் முகம் லேசாய் கலக்கமுற்றது .
சிவசக்திக்கு பிரச்சனையில் வலியச் சிக்கி கொள்வது வழக்கம்தானே. சக்தி செல்வனுக்கும் இங்கே புது அனுபவம் காத்திருக்கிறது.