Solladi Sivasakthi-7&8
7
எதிர்பாராத விபத்து
“என்னாச்சு சக்தி… சத்தத்தையே காணோம்” என்று அமைதியாய் இருந்த சக்தியை அவன் கேட்டான்.
“அப்போ நான் உங்க பேரை கண்டுபிடிச்சாதான்… என் கண் முன்னாடி வருவீங்களா… மிஸ்டர்” என்றாள்.
“என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னு நீ உன் தோல்வியை ஒத்துக்கிட்டா… வருவேன்” என்றான்.
“அதெப்படி… முயற்சியே செய்யாம என்னால தோல்வியை ஒத்துக்க முடியும்… நெவர்” என்றாள் சக்தி தீர்க்கமாக.
“உன்கிட்ட எனக்குப் பிடிச்சதே உன்னோட தன்னம்பிக்கையும் புத்திசாலித்தனமும்தான்… அந்த உன்னோட ஸ்ப்ரிட்க்காக ஒரு க்ளூ தர்றேன்… ஆனா நீ அந்த ரோஸஸ்ஸை வாங்கிக்கனும்”என்றான்.
சக்தி அந்த நபரிடம் இருந்த பூக்களை வேண்டா வெறுப்பாய் வாங்கிக் கொண்டாள். அதில் எப்போதும் போல் வாழ்த்துரையாய் வெல்கம் சக்தி என்றிருந்தது.
“ஒகே… டெல் மீ த க்ளூ ?”என்று சக்தி ஆர்வத்தோடு கேட்டாள்.
“சொல்றேன்… பட் ஆன் ஒன் கன்டிஷன்… நீ என் பெயரை கண்டுபிடிக்கலன்னா… நாம மீட் பண்ணும் போது நான் என்ன சொல்றேனோ… அதை நீ அப்படியே மறுக்காம அக்ஸப்பெட் பண்ணிக்கனும்” என்றான்.
சக்தி உடனே, “நோ… நான் இதுக்கு ஒத்துக்கமாட்டேன்” என்றாள்.
அவன் சிரித்துவிட்டு, “என்ன சக்தி… உன் மேல உனக்கே நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டான்.
இப்போது சக்தியின் ஈ. கோ தூண்டப்பட அவள் சற்று நேரம் யோசித்துவிட்டு,
“சரி மிஸ்டர்… நான் ஒத்துக்கிறேன்… ஆனா நான் உங்க பேரை கண்டுபிடிச்சிட்டேன்னா… நான் என்ன சொன்னாலூம் நீங்க கேட்கனும்” என்றாள் சக்தி அழுத்தமாக.
“ஒகே சக்தி… டன்” என்று அவன் பயமின்றி உரைத்தான்.
“நவ் கிவ் மி த க்ளூ” என்று கேட்டாள்.
“ம்… தர்றேன்… நீ பெங்களூர் மெயில் டிரெயின்ல வந்த சீட் நம்பர் செக் பண்ணியே… ஞாபகம் இருக்கா சக்தி… அதுதான் க்ளூ” என்று அவன் சொல்ல, சக்தியின் முகம் துவண்டு போனது.
“இது க்ளூவா?” என்று சலிப்பாய் கேட்டாள்.
“நல்லா யோசிச்சு பார் சக்தி… யூ வில் கெட் இட்… பட் நீ கெஸ் பண்ணவே கூடாதுன்னு வேண்டிக்கிறேன்” என்றான்.
சக்தி புன்னகையோடு, “நான் நிச்சயம் முயிற்சி செஞ்சி கண்டுபிடிக்கத்தான் போறேன்” என்றாள்.
ஆனால்கொஞ்சம் கூட நினைவில் இல்லாத விஷயத்தை வைத்து எப்படி அவன் பெயரை கண்டுபிடிப்பது என்று மனதளவில் தளர்ந்து போனாலும் அதை அவனிடம் சிவசக்தி காட்டிக் கொள்ளவில்லை.
“எனி வே ஆல் தி பெஸ்ட்… சரி சக்தி நீ எங்க தங்க போற ?” என்று அவன் கேட்க, அவள் தன் தோழி கீதா வீட்டில் தங்கப்போவதாகச் சொன்னாள்.
“ஒகே… நீ போயிட்டு ரிலேக்ஸ் ஆகிட்டு கால் பண்ணு “ என்று அழைப்பை துண்டித்தான்.
நம் நாயகனின் பிரதிநிதியாய் வந்த நபர் அவளுக்காகக் கார் வெயிட் பண்ணுவதாகச் சொல்ல, அவள் தான் டாக்ஸியில் செல்வதாகச் சொல்லி நிராகரித்துவிட்டு விமான நிலையத்தைக் கடந்து அவளின் தோழி கீதா வீட்டை அடைந்தாள்.
கீதாவும் சக்தியும் எப்போதும் கல்லூரியில் எதிர் எதிர் அணியில் இருந்தனர். ஆனால் இப்போது இருவருமே தங்கள் பிரச்சனைகளை மறந்து தோழிகளாய் மாறி இருந்தனர்.
கீதா ஒரு மென்ப்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்க அங்கேயே சில நண்பர்களோடு வீடு எடுத்துத் தங்கி இருந்தாள். கல்லூரி காலம் முடிவுற்ற போதும் இருவருக்கும் இடையிலான நட்பு இன்று வரை தொடர்பிலேயே இருந்தது. சக்தி இப்போது கீதாவின் அறைக்கதவை தட்டினாள்.
சக்தியை பார்த்ததும் கீதா அவளைக் கட்டியணைத்தபடி வரவேற்றாள். அங்கே கீதா தம் தோழிகளுக்கு எல்லாம் சிவசக்தியை அறிமுகம் செய்து பழைய நாட்களை நினைவுகூர்ந்து ஆர்வமாய் விளக்கிக் கொண்டிருந்தாள். முக்கியமாய் அந்தப் பேஃஷன் ஷோவை பற்றிச் சொல்லி சக்தியின் திறமையைப் பறைசாற்றினாள்.
வெகுநாட்களுக்குப் பிறகான அந்தச் சந்திப்பை கீதாவும் சக்தியும் ஆனந்தமாகவே அனுபவித்தனர்.
ஆனால் சக்தியால் முழுமையான அந்தத் தருணத்தை அனுபவிக்க முடியாமல் அவன் சொன்ன அந்த க்ளூவை நினைவுபடுத்திக் கொண்டிருந்தாள்.
கீதா அவளைக் கவனித்து விட்டு, “ஏதாவது பிரச்சனையா சக்தி?” என்று வினவினாள்.
“நத்திங்… ஒரு முக்கியமான ஆளை பார்க்கலாம்னு வந்தேன்… ஆனா பார்க்கிறதுக்கு அபாயின்மன்ட் கிடைக்கல” என்றாள்.
“நான் ஏதாச்சும் ஹெல்ப் பண்ணட்டுமா சக்தி ?” என்று கீதா கேட்க,
“அவசியம் ஏற்பட்டா… நானே கேட்கிறேன் கீதா“ என்று சக்தி தான் வந்த விஷயத்தைக் குறித்துச் சொல்ல தயங்கினாள்.
இரவு சக்திக்கென்று ஒரு படுக்கையை ஒதுக்கித் தந்து விட்டு கீதா வேறொரு பெண்ணோடு படுக்கையைப் பகிர்ந்து கொண்டாள். அவனைப் பற்றிய நினைவு சக்தியை அலைக்கழிக்க அவளுக்கு உறக்கம் வந்தபாடில்லை.
மாறாய் அவன் பெயர் என்னவாயிருக்கும் என்று தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்த போது கல்லூரியில் ஒரு முறை மீண்டும் அவனைப் பார்ப்பதாகச் சொல்லி பிரச்சனையில் தான் சிக்கி கொண்டது சக்திக்கு நினைவுக்கு வந்தது.
அன்று சக்தியின் பிறந்த நாள். காலையிலிருந்து உற்சாகமும் ஆனந்தமுமாய் இருந்தாள் சிவசக்தி. அவள் ஹாஸ்டலில் இருந்ததினால் அன்று அவள் அண்ணன் அருண் நேரிலேயே வந்து செலவுக்குப் பணமெல்லாம் கொடுத்துவிட்டு புது உடை எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டுப் போனான். சிவசக்தி அன்று ஜெயா மற்றும் சில நண்பர்களோடு பெரிய உணவகத்திற்கு வந்திருந்தாள்.
அவர்கள் கலகலவெனச் சந்தோஷமாகவே பேசி உண்டப்பிறகு அவர்கள் சாப்பிட்டதற்கான பணத்தைக் கொடுக்க நினைக்க ரோஜா பூங்கொத்து அவள் அமர்ந்திருந்த மேஜைக்கே வந்தது.
போதாக் குறைக்கு அவர்கள் சாப்பிட்டதற்கான பில் பணம் கட்டப்பட்டதாகச் சொல்ல சிவசக்திக்குக் கோபம் தலைக்கேறியது. அந்த உணவகத்தில் உள்ளவர்களை எல்லாம்,
“எனக்காகப் பணம் கொடுக்க அவன் யார்?” என்று கேட்டு கத்த ஆரம்பித்தாள்.
“சக்தி ப்ளீஸ் இது ஹோட்டல்” என்றாள் ஜெயா.
“நோ ஜெயா… இதை நான் விடுவதாயில்லை… நான் அவனை இப்போ பார்த்தே ஆகனும்” என்றாள் சக்தி கோபமாக!
சிவசக்தி கோபம் குறையாமல் கத்திக் கொண்டிருக்க அந்த உணவகமே ஸ்தம்பித்தது. கடைசியாய் உணவகத்திலிருந்த போஃன் ஒலிக்க,
“மேடம் போன் உங்களுக்குதான்“ என்றார் உணவகத்தின் மேனேஜர்.
“யாரு… நான் எதுக்குப் பேசனும்… அவனை இங்க வர சொல்லுங்க… பேசிறேன்” என்றாள் சக்தி பிடிவாதமாக!
அங்கே இருப்பவர்கள் எல்லோரும் என்ன சொல்வதென்று புரியாமல் நிற்க, ஜெயா மட்டும் சக்தியை பேசச் சொல்லி வற்புறுத்தினாள்.
கடைசியில் அவளின் பிடிவாதத்தை மாற்ற முடியாமல் ஜெயாவே போஃனை வாங்கிப் பேசினாள்.
“நீங்க யாரு ?… ஏன் நேர்ல வரமாட்டிறீங்க… ஏன் சக்தியை இப்படி டென்ஷன் படுத்திறீங்க?!” என்று கேட்க,
மறுபுறத்தில் அவன் “இப்ப நான் வர முடியாது… எப்போ வரனமுன்னு கேட்டு சொல்லுங்க… நான் வர்றேன்” என்று அவன் சொல்ல அப்படியே அதைச் சக்தியிடம் சொன்னாள் ஜெயா.
சக்தி புருவங்கள் சுருங்க, “நைட் பன்னிரெண்டு மணிக்கு ஹாஸ்டல் பின்னாடி வரச் சொல்லு… இல்லாட்டி எப்பவுமே என் லைஃப்ல அவன் வரவே கூடாது” என்று சத்தமாய்ச் சொல்லிவிட்டு ஜெயாவிடம் இருந்த ரிசீவரை பிடுங்கி அவளே கீழே வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள். அவனுக்குப் பேச கூட வாய்ப்புக் கொடுக்காமல் சக்தி அழைப்பைத் துண்டித்தாள்.
ஜெயா சக்தியோடு ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தாள். சக்தியின் செயல் அவளுக்குப் புரியாத புதிராய் இருந்தது.
“லூசா சக்தி நீ… பன்னிரெண்டு மணிக்கு ஹாஸ்டலை விட்டு நீ எப்படி வெளியே போக முடியும்… எனக்குப் புரியல சக்தி… வாட்ஸ் ஆன் யுவர் மைன்ட்” என்றாள்.
“பகல் நேரத்தில நான் எங்க வரச் சொன்னாலும் அவன் கூட்டத்தோட கூட்டமா என்னை ஏமாத்திட்டு போயிட சான்ஸ் இருக்கு… அதுவும் இல்லாம நைட்ல யாரும் இருக்க மாட்டாங்க… அந்த நேரத்தில அவனை ஈஸியா அடையாளம் கண்டுப்பிடிச்சிடலாம்” என்றாள்.
“அந்த நைட்ல நீ எப்படிப் போகப் போற?” என்று கேட்டாள் ஜெயா.
“நான் இல்லமா… நாம… ஹாஸ்டல் சுவறேறி குதிச்சிதான்” என்றாள் சக்தி.
“என்ன விளையாடிறியா சக்தி… என்னை எதுக்கு இதுல மாட்டி விடற” என்றாள்.
“நாம பிரண்ட்ஸ் ஜெயா… எனக்காக இதைக் கூட நீ செய்ய மாட்டியா?” என்றாள் சக்தி.
“சக்தி… நாம மாட்டினா சஸ்பெண்ட எல்லாம் கிடையாது… நேரா டிஸ்மிஸ்தான… அவ்வளவுதான்… எங்கப்பா தோலை உரிச்சிடுவாரு” என்று ஜெயா தன் மனதில் உள்ள பயத்தை வெளிப்படுத்தினாள்.
“பயப்படாதே… நம்ம மாட்டவே மாட்டோம்… அவன்தான் இன்னைக்கு நம்மகிட்ட மாட்டப் போறான்” என்றாள் சக்தி.
ஜெயாவுக்கு சக்தியை பற்றி நன்றாகவே தெரியும். ஆனால் இம்முறை அவளின் அசட்டுத் தைரியம் ஜெயாவை கலங்கடித்தது.
அந்த இரவு நேரத்தில் அவர்கள் அறையில் இருந்த தோழிகளிடம் சொல்லிவிட்டு ஜெயாவும் சக்தியும் உண்மையிலேயே அப்படி ஒரு காரியத்தைச் செய்தனர்.
அவனைப் பார்க்க வேண்டுமென்று ஆர்வத்தில் சக்தி எடுத்த முடிவு கொஞ்சம் அதிகப் பிரசிங்கித்தனம்தான். அந்தச் சுவற்றை அவர்கள் தாண்டிய விதத்திலிருந்து அத்தகைய செயலைஅவர்கள் ஏற்கனவே செய்திருப்பார்கள் போலும்.
ரொம்ப லாவகமாகவே ஏறி இரு தோழிகளும் குதித்தனர். அந்த ஆள் அரவமில்லாத இரவில் ரோட்டில் அவன் வருவானென்று சக்திக்கு இருந்த நம்பிக்கை ஜெயாவுக்குத் துளியும் இல்லை.
ஜெயா புலம்பியபடி இருக்க, அந்த இருளில் வந்த பைக் பெரும் சத்தத்தை எழுப்ப ஜெயா மிரண்டாள. அந்த வண்டியில் வந்த இளைஞன் அவர்களை நோக்கி வந்து நின்று “என்ன ரேட்?” என்றான்.
சக்தி கோபத்தோடு, “என்னடா சொன்ன… பொறிக்கி” என்று செருப்பைக் கழட்ட அவன் பைக்கை அங்கிருந்து நகர்த்தியபடி,
“பெரிய பத்தினி… இந்த நேரத்தில ரோட்டில நிக்கிற… வேற என்ன கேட்பாங்க?” என்று அவன் கத்திக் கொண்டே சென்றான்.
“எருமை… இந்நேரத்தில நின்னா… நீ என்ன வேணா கேட்பியா… போடா ராஸ்கல்… நீ ஏதாச்சும் போஸ்ட்ல முட்டிச் சாகத்தான் போற… பரதேசி” என்று அவள் கோபத்தில் சீறிக் கொண்டிருக்க,
ஜெயா அவளை ஆசுவாசப்படுத்தினாள். அந்தச் சமயத்தில் பயங்கரச் சத்தம் எழ, சக்தியும் ஜெயாவும் ஓடிச் சென்று பார்த்தனர். அந்த இளைஞன் தரையில் ரத்தம் வழிய ரோட்டில் விழுந்து கிடக்க அவன் பைக் தனியே அனாதையாய்க் கிடந்தது.
சக்தி ஓடிச்சென்று அவள் துப்பட்டாவினால் அந்த இளைஞனின் தலையில் வழிந்த குருதியை நிறுத்த முயற்சித்தாள். அந்த நேரத்தில் சுற்றிலும் யாருமே இல்லை.
“இப்ப என்ன பன்றது?” என்று ஜெயா பதட்டோடு கேட்டாள்.
அந்த நேரத்தில் காக்கி உடையில் வந்த செக்யூரட்டி, “என்னாச்சு” என்று விசாரித்தார். அந்தத் தோழிகள் நடந்தவற்றை விளக்கினர்.
அதற்குள் அங்த செக்யூரிட்டி வேகமாய் வந்த காரை நிறுத்தி ஹாஸ்பெட்டில் அழைத்துப் போக அவனை ஏற்ற சக்தியும் வேறுவழியின்றி ஏறிக் கொண்டாள்.
ஜெயா அவளை நோக்கி,
“இதெல்லாம் நமக்குத் தேவையாடி ?“ என்று கேட்டாள்.
“நான் அப்படிச் சொல்லிருக்கக் கூடாது… இவன் நல்லபடியா பிழைச்சிக்கிட்டாதான் எனக்கு நிம்மதி” என்று அவன் தலையில் வழிந்த இரத்தை அழுத்திப் பிடித்தபடி உரைத்தாள்.
“இவன் குடிச்சிட்டு விழுந்தா நீ எப்படிப் பொறுப்பாக முடியும் சக்தி… இப்ப நாம எப்படி ஹாஸ்டல்குள்ள போறது… அதை யோசிச்சியா?!” என்றாள் ஜெயா.
“எல்லாத்துக்கும் அந்த முகம் தெரியாத இடியட்… ராஸ்கல்தான் காரணம்” என்று சக்தி கோபமாய் உரைத்தாள்.
அவர்கள் வந்த அதே காரில்தான் அந்த முகம் தெரியாத இடியட் இருந்தான் என்று சக்திக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
8
அவனின் பெயர்
சக்தி அந்தக் காரை ஓட்டிக் கொண்டு வருவது நம் நாயகனென்று அறியாமல் வழியேற அவனைத் திட்டிக் கொண்டே வந்தாள். கார் மருத்துவமனையின் உள்ளே நுழைய அந்தக் காயம்பட்ட இளைஞன் அவசர சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட, சக்தியும் ஜெயாவும் பின்னோடு சென்றனர்.
ஜெயா அவளருகில் வந்து,
“நாம எப்படி ஹாஸ்டலுக்குப் போவது ?” என்று கேட்க, அதைப் பற்றிக் கவலை இல்லாமல் சக்தி சிகிச்சை அறையைவிட்டு வெளியே வந்த டாக்டரிடம், “அவருக்கு எப்படி இருக்கு டாக்டர்?” என்று கேட்டாள்.
“ஹீ இஸ் இன் சீரியஸ் கண்டீஷன்… நீங்க இனிஷயல் பில் பே பண்ணுங்க… டீரிட்மன்ட் ஸ்டார்ட் பண்ணனும்” என்றார்.
“நாங்க அவரோட ரீலேஷன் இல்ல… ரோட்டில ஆக்ஸ்டென்ட்டாகி இருந்தாரு” என்றாள் சக்தி.
“அப்போ போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு டாக்டர் விறுவிறுவென நடந்து சென்றார்.
ஜெயா சக்தியின் அருகில் வந்து,
“நல்லா மாட்ட வைச்சுட்ட… இப்போ ஹாஸ்டல் போகக் கூடக் கையில காசு இல்ல… அதுவும் இல்லாம போலீஸ் வந்தா நீங்க யாரு… இந்த நேரத்தில எங்க போனிங்கன்னு கேட்டா என்னடி பதில் சொல்றது?” என்று பதட்டத்தோடு உரைத்தாள்.
இவ்வாறு ஜெயா சொன்னதும் சக்தி யோசிக்கத் தொடங்கினாள். அவள் அந்தப் பிரச்சனைக்கான தீர்வைக் குறித்துச் சிந்திக்க ஜெயாவோ,
“போச்சி… செத்தோம்… நீ பரவாயில்ல… உங்க அண்ணனுக்குச் செல்ல தங்கச்சி… எங்க அப்பா என்னை உயிரோட விடமாட்டாரு… அவரு அடிச்சாக்கூடப் பரவாயில்ல… மனுஷன் அட்வைஸ் பண்ணியே கொல்லுவாரே” என்று புலம்ப ஆரம்பித்தாள்.
“போதும் நிறுத்து ஜெயா” என்று சக்தி சொல்லிவிட்டு, ஜெயாவின் கையைப் பிடித்துக் கொண்டு மருத்துவமனை வாசலுக்கு வந்தாள். அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
தான் எத்தனை பெரிய தவறை செய்துட்டோம் என்று சிவசக்தி தாமதமாகவே உணர்ந்தாள். நேரம் கடந்து கொண்டே இருக்க ஜெயாவின் கவலை அதிகரித்துக் கொண்டே இருந்தது.
அந்த நேரத்தில் உள்ளே இருந்து வந்த நர்ஸ்,
“நீங்க அட்மிட் பண்ண பேஷன்ட் பிழைச்சிக்கிட்டார்“ என்றாள்.
சிவசக்தி அந்த இக்கட்டான சூழ்நிலையையும் மறந்து புன்னகை செய்தாள். பின்னர் ஏதோ யோசித்தவளாய்,
“ஏதோ ட்ரீட்மன்ட் பண்ண… பேமன்ட் பண்ணனும்னு டாக்டர் சொன்னாரே?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் கட்டியாச்சே” என்றாள் அந்த நர்ஸ்.
“யாரு… பேஷன்டோட ரிலேஷனா?!”
“இல்லை… உங்க கூட வந்தவர்தான்”
சக்தியும் ஜெயாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க,
“உங்க கிட்ட இந்த விஷயத்தைச் சொல்ல சொல்லி அவர்தான் சொன்னாரு” என்று சொல்லிவிட்டு அந்த நர்ஸு நகர்ந்துவிட்டாள்.
“நம்மல கார்ல கூட்டிட்டு வந்தவரோ?!” என்று கேட்டாள் ஜெயா.
“நிச்சயம் அவனாதான் இருக்கும்” என்று சக்தி யூகித்தாள்.
“அப்படி இருக்குமோ… நான் முகத்தைப் பார்க்கவேயில்லையே சக்தி… நீ பார்த்த ?” என்று ஜெயா கேட்க சக்தி இல்லையெனத் தலையாட்டிவிட்டு,
“சே… மிஸ் பண்ணிட்டேன்” என்று அவதியுற்றாள்.
இத்தனை அருகிலிருந்தும் அவனைப் பார்க்க தவறி விட்டோமே என இரு தோழிகளின் முகத்திலும் ஏமாற்றம் வெளிப்பட்டது.
சட்டென்று சக்தி, “அந்த நர்ஸுக்குத் தெரிஞ்சிருக்கும் இல்ல” என்று சொல்லிவிட்டு, சக்தி மருத்துவமனைக்கு உள்ளே செல்ல ஜெயாவும் பின்னோடு சென்றாள்.
சக்தி அந்த நர்ஸை கேட்ட போது அவள் சுற்றிச்சுற்றி பார்த்துவிட்டு தெரியலயே என்று சுலபமாய்ச் சொல்லிவிட்டாள். அந்த ஒரு வார்த்தை சக்தியை எரிச்சல் அடையச் செய்தது.
ஜெயா சிரித்தபடி, ”ஏன் சக்தி… அந்தக் கார்ல அவன் இருந்திருந்தா… நீ அவனைத் திட்டின திட்டை எல்லாம் கேட்காமலா இருந்திருப்பான்” என்று ஜெயா சொல்லும் போதுதான் சக்திக்கு அவனைத் தான் கன்னாபின்னாவென வாயிற்கு வந்ததை எல்லாம் உரைத்துத் திட்டியது நினைவுக்கு வந்தது.
அந்த யோசனையில் அவள் அமர்ந்திருக்க ஜெயாவை நோக்கி வந்த நபர் ஒரு கடிதத்தை அவளிடம் நீட்டினார். அவள் சக்தியை பார்த்துவிட்டு,
“இந்த லெட்டர் எனகில்ல… அவங்களுக்கு” என்று சக்தியை சுட்டிகாட்டினாள்.
“நீங்கதானே ஜெயா?” என்று அவன் கேட்க ஜெயா புரியாமல், “ம்ம்ம்” என்று தலையசைத்தாள்.
“அப்போ இது உங்களுக்குதான்” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
சக்தியும் ஆச்சர்யத்தோடு பார்க்க ஜெயா குழப்பத்தோடு பிரித்தாள்.
“தோழி ஜெயா,
உங்க ப்ஃரண்டுக்கு என்னைப் பார்க்க, பேச விருப்பமில்லை. அதனாலதான் இந்த லெட்டரை உங்களுக்கு அனுப்பினேன்.
உங்க பிரண்டு சக்திக்கு, கோபம் வந்தா மூளை வேலை செய்யாதோ?” என்று படித்து விட்டு ஜெயா சிரிக்க சக்தி, “இடியட்” என்று சொல்லி அந்தக் கடிதத்தை அவள் பிடுங்க யத்தனிக்க ஜெயா மேலே படித்தாள்.
“இப்படிச் சொன்னா உங்க ப்ஃரண்டுக்குக் கோபம் வரும். பட் என்ன பண்றது. உண்மை அதுதான். இந்த நேரத்தில வர சொன்னதும் இல்லாம நான் என்ன சொல்ல வரன்னு கூட உங்க ப்ஃரண்டு கேட்காம போஃனை கட் பண்ணிட்டாங்க.
அது கூடப் பரவாயில்லை. இந்த நேரத்தில வர சொன்னது உங்க ப்ஃரண்டு. அப்புறம் என்னை இடியட் ராஸ்கல்னு திட்டினா அது என்ன நியாயம். எனக்குப் புரியல.
ஆனா ஒரு விஷயத்தில உங்க ப்ஃரண்டை பாராட்டனும். யாருன்னு தெரியாத ஒருத்தனோட உயிரை காப்பாத்த தன்னோட இக்கட்டான சூழ்நிலையைப் பத்தி கவலைபடாம செயல்பட்டாங்க.
அப்படி ஒரு சூழ்நிலையில் கார்ல ஏறின உங்ககிட்ட நான் என்னை எப்படி அறிமுகம் செய்து கொள்ள முடியும். அதான் நான் அமைதியா இருந்துட்டேன். அதுவும் இல்லாம இப்போதைக்கு சக்திக்கு என்னைப் பார்க்கிற விருப்பமும் ஆர்வமும் இல்லை. கோபம் மட்டும்தான் இருக்கு.
என்னைக்கு சக்தி என்னைப் பார்க்கனும்னு உண்மையிலேயே விருப்பப்படறாங்களோ அப்போ உங்க ப்ஃரண்டுகிட்ட நானே வந்து அறிமுகம் செஞ்சிப்பேன்.
இப்போ வெளியே கார் வெயிட் பண்ணுது. ஹாஸ்டல் போய்ச் சேர்கிற வழியைப் பாருங்க. முக்கியமான விஷயம்.
சுவறேறி குதிக்காம கேட் வழியா போங்க. எந்தப் பிரச்சனையும் வராது” என்று அவனின் புரியாத கையெழுத்தோடு முடிந்திருந்த அந்தக் கடிதத்தைப் படித்து இருவருமே அதிர்ச்சிக்குள்ளாயினர்.
ஜெயா சக்தியின் கையைப் பிடித்து வெளியே நின்றிருந்த கார் வரை அழைத்துச் சென்றாள். சக்தி தயங்கி நிற்க, “நான் காலேஜ்ல இருந்து டிஸ்மிஸ் ஆகனுமா சக்தி ?” என்று மிரட்டி உள்ளே ஏற வைத்தாள்.
அவர்கள் ஹாஸ்டலுக்குள் நுழைய வார்டன் சக்தியையும் ஜெயாவையும் எரித்து விடுவதைப் போல் பார்த்தாள். ஆனால் எதுவும் சொல்லாமல், “கோ டூ யுவர் ரூம்ஸ்” என்று சொல்ல இருவரும் தப்பிப் பிழைத்தோம் என்று அறைக்கு வந்து சேர்ந்தனர்.
அந்தத் தோழிகள் இருவரும் அறைக்குள் வந்து இயல்பான நிலைக்குத் திரும்பிய பின் ஜெயா சக்தியை நோக்கி,
“நீ உன் வாயை வைச்சிட்டு சும்மா இருந்திருந்தால் நாம ஹீரோ சாரை பார்த்திருக்கலாம் சக்தி”
“அதென்னடி ஹீரோ சார்?” என்று சக்தி வியப்பு குறியோடு பார்த்தாள்.
“நம்மை எவ்வளவு பெரிய பிரச்சனையிலிருந்து காப்பாத்தி இருக்காரு… அப்போ அவர் ஹீரோ சார்தானே” என்றாள்.
“எனக்குப் புரிய மாட்டேங்குது ஜெயா… அவன் யார்? நம்ம செய்றதெல்லாம் அவனுக்கு எப்படித் தெரியுது… பெரிய ஷாக்! அவன் எப்படி அந்த லேடி ஹிட்லரை சமாளிச்சான்? அவன் கண்டிப்பா நம்ம காலேஜ் ஸ்டூண்ட் இல்ல… அவன் நிச்சியமா ஏதாவது பெரிய பவர்ல இருக்கும்” என்று சக்தி ஆழமாய் யோசித்தாள்.
“அப்படின்னா நம்ம காலேஜ் கரஸ்பான்டென்டாதான் இருக்கனும்” என்று ஜெயா சொல்ல சக்தி அவளிடம்,
“உளராதே… நம்ம காலேஜ் கரஸ்பான்டென்ட் ஒரு லேடி… அவங்க பேர் மீனாக்ஷி வாசுதேவன்” என்றாள்.
அன்று அவர்களின் வாக்குவாதம் அப்படியே முடிவுற்றது. இன்று சக்திக்கு மீண்டும் அந்தச் சிந்தனை வந்தது. மீனாக்ஷி வாசுதேவனோ இன்று பெரிய அரசியல் புள்ளி.
அவள் கணவனோ வட இந்தியாவைத் தன்வசம் வைத்திருக்கும் தொழில் அதிபர் மோகன் ராம் என்பது அவள் கேள்விப்பட்ட ஒன்று.
இவர்களைப் பற்றிய விவரங்களை சக்தி தன் போஃனில் உள்ள இணையதளத்தில் தேட, அந்தச் சமயத்தில் கீதா எழுந்து அவள் அருகில் வந்தாள். கீதா அந்த நேரத்தில் உறங்காமல் குழப்பத்தோடு இருக்கும் சக்தியை நோக்கி,
“என்ன பிரச்சனை சக்தி? ஏன் தூங்காம இருக்க? என்கிட்ட சொல்ல கூடாதா?” என்று அவளைக் கூர்மையாய் நோக்கினாள்.
சக்தி ஏதேதோ காரணம் சொல்லிச் சமாளிக்க அதைக் கீதா நம்புவதாக இல்லை. இறுதியாய் சக்தி எல்லாவற்றையும் சொல்ல கீதாவின் முகத்தில் வியப்பின் குறி வெளிப்பட்டது.
“செம இன்டிரஸ்ட்டிங்கான ஆளா இருக்கான்”என்றாள் கீதா அதிசயித்தபடி!
“எனக்கு இரிட்டேட்டிங்கா இருக்கு… உனக்கு இன்ட்டிரஸ்ட்டிங்கா இருக்கா?!” என்றாள் சக்தி.
“சரி… இப்போ பேரை கண்டுபிடிச்சியா இல்லயா?” என்று கீதா வினவினாள்.
“ஒரு சின்ன க்ளு… அவன் காலேஜ் கரஸ்பான்டென்டுக்கு ரிலேட்டிவ்வா இருக்கலாம்னு தோணுது கீதா” என்றாள் சக்தி.
“நீ இப்படிச் சொன்ன பிறகு எனக்கு இன்னொரு விஷயம் தோணுது… அந்த மிஸ்டிரியான மேன்… ஏன் மீனாக்ஷி மேடமோட சன்னா இருக்கக் கூடாது” என்று கேட்டுவிட்டு கீதா சக்தியை நோக்க இருவருமே யோசனையில் ஆழ்ந்தனர்.
பின்னர்ச் சக்தி தெளிவுபெறாமல்,
“மீனாக்ஷி வாசுதேவன் சன்னா… உனக்குத் தெரியுமா?” என்று கேட்டுவிட்டு கீதாவின் பதிலை எதிர்நோக்கினாள்.
“நிறையத் தடவை அவர் காலேஜுக்கு வந்திருக்காரு… நம்ம இன்டர் காலேஜ் கல்சுரல்ஸ் பேஷன் ஷோல யாரும் கலந்துக்கப் போறதில்லைனு சொன்ன போது ஹீ இஸ் ஷவுடட் லைக் எனிதிங்…
தோற்றாலும் பரவாயில்ல… யாராச்சும் கலந்துக்கிட்டே ஆகனும்னு ஸ்டிரிட்டிக்கா சொல்லிட்டாரு… அதனாலதான் நான் உன்கிட்ட வந்து கெஞ்ச வேண்டியதா போச்சு… அவர் பார்க்கதான் ஆளு செம ஸ்மார்ட்… ஆனா கோபம் வந்தா பயங்கர அரங்கன்ட்” என்றாள் கீதா.
சக்தி யோசித்துவிட்டு,
“மீனாக்ஷி வாசுதேவன் சன் பேர் என்ன?” என்று கேட்டாள் ஆவலோடு!
“கண்டிப்பா சொல்லனுமா?” என்று குரும்புத்தனமான புன்னகையோடு கேட்டாள் கீதா.
“கீதா… ப்ளீஸ் சொல்லு” என்று கெஞ்சினாள் சக்தி.
“சொல்றேன்… சக்தி” என்று கீதா சொல்ல சக்தி பொறுமை இழந்தவளாய் அவள் கழுத்தை நெறித்து “டென்ஷன் படுத்தாதே சொல்லு” என்றாள்.
“சக்தீ” என்று கீதா இழுக்க,
“உன்னைக் கொல்லப் போறேன்” என்றாள்.
“அய்யோ விடு… அவர் பேரும் சக்திதான்… சக்திசெல்வன்… நம்ம காலேஜ் பேரு… எஸ். எஸ் அவர் பேரோட ஷார்ட் பாஃர்ம்” என்றாள்.
சக்தி அப்படியே திகைத்து போனாள். அப்போது அவன் கொடுத்த க்ளூவை சிந்தித்துப் பார்த்தாள். அன்று பெங்களூர் டிரெயினில் வரிசை பட்டியலை பார்க்கும் போது சக்தி என்றிருந்த அவன் முதல் பெயரை மட்டும் பார்த்து அவள் தன் பெயரோ எனக் குழப்பமடைந்தது நினைவுக்கு வந்தது.
அவன் கொடுத்த கடிதத்தில் இருந்த கையெழுத்தை உற்று பார்த்தாள். எஸ். எஸ் என்று வார்த்தையை அவன் புரியாத வண்ணம் சுழற்றிப் போட்டிருந்தான்.
சக்தி தன் மனதிற்குள் சிரித்தபடி,
“யூ… சக்திசெல்வன்… உன் கேம் ஓவர்… இட்ஸ் மை டர்ன்” என்று சிவசக்தி அவன் பெயரை கண்டுபிடித்துவிட்ட கர்வப் புன்னகையோடு எண்ணிக் கொண்டாள்
இவர்களின் இந்த விளையாட்டில் யார் வெற்றி பெறுவார்களோ என்பது இப்போதைக்கு விடை கணிக்கமுடியாத கேள்வி.
நம் நாயகி சக்தியின் கணிப்புச் சரிதான். இனி நம் நாயகனையும் சக்தி என்று அழைப்போமே எனில் எத்தகைய குழப்பம் விளையுமோ தெரியாது.