You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic thriller

solladi sivasakthi-final

37

சிவசக்தியின் சவால்

மீனாக்ஷி சிவசக்தியை அவளின் மனதை துளைப்பது போல உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிவசக்தியோ சக்தியை சந்திக்க இயலுமா என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தாள். அவர்களுக்கு இடையில் நிலவிய மௌனத்தை அப்போது மீனாக்ஷி கலைத்தார்.

“சிவசக்தி ஐ. எ. ஏஸ்… முதல் முயற்சியிலேயே உன் இலட்சியத்தில் வெற்றி பெற்றதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றார்.

சிவசக்தி அந்தப் பாராட்டினை எப்படி எடுத்துக் கொள்வதென்று புரியாமல், “தேங்க்யூ மேடம்” என்று சொல்லி மெலிதாய் புன்னகையித்தாள்.

“உன் இலட்சியத்தில் போராடி நீ ஜெய்ச்சிருக்கலாம்… ஆனால் நீ உன் காதலில் வெற்றி பெறுவது கஷ்டம்தான்” என்றார் மீனாக்ஷி அலட்சியமாக.

இத்தனை பெரிய காத்திருப்பைத் தாண்டி இப்படி ஒரு வார்த்தையைக் கேட்கவா தான் இங்கே வந்தோம் என்று எண்ணியபடி சிவசக்தி மீனாக்ஷியை பார்த்தாள்.

மேலும் மீனாக்ஷி தொடர்ந்து, “நீ சக்தியை உண்மையா காதலிச்ச என்பதை நான் மறுக்கல… ஆனா யதார்த்தத்தைப் புரிஞ்சிகிட்டு நீ உன் காதலை மறப்பதுதான் உங்க இரண்டு பேருக்கும் நல்லது” என்றார்.

“புரியல மேடம்… அது என்ன யதார்த்தம்?!” என்று சக்தி புரியாமல் கேட்டாள்.

“நீங்க இரண்டு பேரும் திருமணம் பண்ணி ஒன்றா வாழ்வது என்பது சாத்தியமே இல்லை என்பதுதான் யதார்த்தம்” என்று அழுத்தமாய் மீனாக்ஷி உரைக்க அவர் சொன்னது சக்தியின் மனதை இரண்டாய்ப் பிளப்பது போன்ற உணர்வைத் தோற்றுவித்தது.

எனினும் அவள் தன் மனதைரியத்தை விட்டுவிடாமல் இன்னும் அழுத்தமாக,

“ஏன் நாங்க இரண்டு பேரும் ஒண்ணா வாழ முடியாது?” என்று கேள்வி எழுப்பினாள்.

“எப்படி முடியும்… நீ ஐ. ஏ. எஸ் முடிச்சிருக்க… உனக்குப் போஸ்ட்டிங் எங்க போட்டிருக்காங்களோ அங்கதான் நீ வேலை செஞ்சாகனும்… அங்கயே இருந்தாங்கனும்… என் பையன் அவங்க அப்பாவோட பிஸ்னஸ்ஸை பாத்துக்கனும்… அவன் உலகம் பூரா சுத்துவான்… இந்தியாவில் இருக்கும் போது கூட அவன் உன் கூட நீ வேலை செய்ற இடத்தில வந்து இருக்க முடியாது… அவன் இருக்கிற இடத்தில உன்னாலையும் இருக்க முடியாது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணி உங்க வாழ்க்கையில் என்ன சந்தோஷம் இருக்கப் போகுது… இந்த யதார்த்தம் உங்க திருமணத்திற்குப் பிறகான காதலை காணாமல் போக வைச்சிடும்… அதுக்கு நீங்க இப்பவே பிரிஞ்சிட்டா பெட்டர்… இல்லயா ?” என்று மீனாக்ஷி தெளிவாய் நிலைமையை விளக்கினார்.

சிவசக்தியின் முகத்தில் இதைக் கேட்டுக் கலக்கம் உண்டாகும் என்று மீனாக்ஷி நினைத்தார். ஆனால் சிவசக்தி இயல்பாய் புன்னகைப் புரிந்து விட்டு,

“நீங்க சொல்ற யதார்த்தை நானும் ஏத்துக்கிறேன்… அது மறுக்க முடியாத உண்மையும் கூட… நாங்க இரண்டு பேரும் திருமணம் பண்ணி ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிறது கூடக் கொஞ்சம் சவாலான காரியம்தான்.

என் காதலை காப்பாற்ற எந்தச் சவாலையும் சமாளிக்கிற மனதைரியம் எங்களுக்கு இருக்கு மேடம்… இந்தக் காரணங்களுக்காக எல்லாம் பயந்து எங்க காதலை நாங்க விட்டுக் கொடுக்கவே முடியாது…” என்று அழுத்தம் திருத்தமாக உரைத்தாள்.

“இன்னைக்கு விட்டு கொடுக்கலன்னா நாளைக்கு அந்தக் காதல் இல்லாமலே போயிடலாம்… இப்போ பிரிஞ்சிட்டா அது வெறும் காதல் தோல்வி… திருமணத்திற்குப் பிறகு பிரிவு ஏற்பட்டா உங்க வாழ்க்கையே தோல்வி… எது பெட்டர் ஆப்ஷன்னு நீயே யோசிச்சு பாரு” என்றார் மீனாக்ஷி.

சிவசக்தி மீண்டும் புன்னகைப் புரிந்துவிட்டு,

“எங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கலன்னு யார் சொன்னது?!” என்று கேட்க மீனாக்ஷி அப்படியே அதிர்ந்து போய்

“நீ என்ன சொல்ற?” என்று சிவசக்தியை கேட்டாள்.

“எப்போ நான் சக்தியோட காதலை புரிஞ்சிக்கிட்டு மனதளவில் காதலிக்க ஆரம்பிச்சேனோ அப்பவே நான் சக்தியை என்னோட கணவராதான் பார்க்கிறேன்… இனிமே நடக்கப் போகிற திருமணம் ஊருக்கு எங்க உறவை அறிவிக்கிற சடங்கு மட்டும்தான் “ என்று பதில் உரைத்தாள்.

இதைக் கேட்ட மீனாக்ஷியின் உறுதி தளர்ந்தது. ஒருவரை ஒருவர் சந்திக்காமல் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் சிவசக்தியின் காதலும் அவளின் உறுதியும் மீனாக்ஷியை நெகிழச் செய்தது.

“சக்தியும் நீயும் கடைசியா எப்போ போஃன்ல பேசிக்கிட்டீங்க” என்று மீனாக்ஷி வினவ,

“கடைசியா ஆறு மாசம் இருக்கும்… டிரெய்னிங் ரொம்பச் சீரியஸா போயிட்டிருந்தது… அவரும் ரொம்பப் பிஸியா இருந்ததால்… பேசிக்க வேண்டாம்னு முடிவு பண்ணிக்கிட்டோம்” என்றாள்.

“நீ இப்போ சக்தியை மீட் பண்ணும் போது அவன் வேற ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி இருந்தா நீ என்ன பண்ணுவ?!” என்று மீனாக்ஷி சொல்லிவிட்டு வேறுவிதமான உணர்ச்சிகளைச் சிவசக்தியிடம் எதிர்பார்த்தாள்.

ஆனால் அவள் முகத்தில் சிறு சலனமும் கூடத் தென்படவில்லை. அவள் புன்னகையோடு,

“சக்தி வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணுவாருங்கிற பேச்சுக்கே இடமில்லை… அப்படி ஒண்ணு சாத்தியமே இல்லை” என்று தீர்க்கமாய் உரைத்தாள்.

“சாத்தியம் இல்லைங்கிறது அப்புறம்… அப்படி ஒரு சூழ்நிலை வந்தா என்ன பண்ணுவ?”

“அப்படி ஒரு சூழ்நிலை வராதுன்னு போது அந்தக் கேள்விக்கு நான் ஏன் பதில் சொல்லனும்… நீங்க இல்லை… சக்தியே நேரடியா வந்து நான் வேற ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு சொன்னா கூட நான் நம்பமாட்டேன்… அதுவும் நிச்சயம் பொய்யாகத்தான் இருக்கும்” என்று சக்தி சொல்ல மீனாக்ஷி தன் மகன் மீதான அவளின் ஆழமான நம்பிக்கையைக் கண்டு வியந்து மௌனமாகி விட,

அந்தச் சமயத்தில் சிவசக்தியை நோக்கி வேறொரு குரல்,

“நானே சொன்னாலும் நம்பமாட்டியா சக்தி?” என்றது.

அந்தக் குரல் சக்திசெல்வனுடையது என்று அறிந்து கொண்ட மறுகணம் காரின் முன்புறத்தில் அமர்ந்து அவன் வண்டி ஓட்டிக் கொண்டிருப்பதை அப்போதுதான் பார்த்தாள். ஆச்சரியப்படுத்துவதிலும் அதிர்ச்சி தருவதிலும் அவனுக்கு நிகர் அவனே.

எத்தனை நாளுக்குப் பிறகு இப்படி ஒரு சந்திப்பு நிகழ்கிறது. இத்தனை நேரம் உறுதியோடு மீனாக்ஷியின் கேள்விக்கெல்லாம் பதில் உரைத்துக் கொண்டிருந்த சிவசக்தியின் விழிகளின் வழியே ஆனந்தத்தினால் வெளிப்படும் அந்த நீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அவள் தன் முகத்தை மூடிக்கொண்டாள்.

அவளின் அமைதியும் வெளிப்படும் அழுகையும் சக்திசெல்வனையும் கலங்கடிக்க, “சக்தி… என்னாச்சு?” என்று பதறினான்.

இன்னும் மீனாக்ஷியால் அவர்களின் உண்மையான காதலை புரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா என்ன? மீனாக்ஷி சிவசக்தியின் நிலையைப் புரிந்து கொண்டவாறு அவள் தோள்களை ஆறுதலாய் தடவி,

“சிவசக்தி ரிலாக்ஸ்… என் மகனுக்கு உன்னை விடப் பொருத்தமான வேறு ஒரு பெண்ணை என்னால் நிச்சயம் கொண்டு வரவே முடியாது… அவனின் காதலை நீ உதாசீனப்படுத்திறியோன்னு நான் உன் மேல கோபப்பட்டேன்…

ஆனா நீ பேசினதைக் கேட்ட பிறகு எனக்கு நல்லா புரியுது… நீயும் சக்தியை எந்தளவுக்குக் காதலிக்கிறன்னு… அதுவுமில்லாம அவன் மேல நீ வைச்சிருக்கிற நம்பிக்கையைப் பார்க்கும் போது எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல… ஐ ஹேவ் நோ வார்ட்ஸ் டூ ஸே… நீதான் சிவசக்தி என் மருமகள்… நான் முடிவே பண்ணிட்டேன்…” என்று சொல்லிவிட்டு மீனாக்ஷி தன் மகனின் புறம் திரும்பி,

“உன் டெசிஷன்தான் கரெக்ட் சக்தி… நான்தான் சிவசக்தியை தப்பா புரிஞ்சிக்கிட்டேன்… இப்போ நீ ஹேப்பிதானே” என்று மீனாக்ஷி கேட்டுக் கொண்டிருந்த சமயத்தில் சக்திசெல்வன் காரை நிறுத்தினான்.

மீனாக்ஷியின் வார்த்தைகளைக் கேட்டு சிவசக்தி இப்போது முகத்தைத் துடைத்துக் கொண்டு தெளிவுப்பெற்றிருந்தாள்.

சக்திசெல்வன், “தேங்க்யூ மாம்… தேங்க்யூ சோ மச்… ஐம் வெரி ஹேப்பி” என்று ஆனந்தத்தின் மிகுதியால் வார்த்தை வராமல் அவன் தத்தளிக்க,

சிவசக்தி கொஞ்சம் குழப்பத்தோடு நடந்த நாடகமெல்லாம் என்னவென்று புரியாமல் இருவரையும் நோக்க மீனாக்ஷி நடந்தவற்றை அவளிடம் விவரித்தாள்.

“சக்தி துபாயில் இருந்து வந்த பிறகு உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பிடிவாதமா இருந்தான்… என்னாலயும் என் முடிவை விட்டுக் கொடுக்க முடியல… கடைசியா அவன் என்கிட்ட… நீங்க சிவசக்திக்கிட்ட ஒருதடவை பேசுங்க… அப்படி உங்களுக்குப் பிடிக்கலங்கிற பட்சத்தில் நீங்க பார்க்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னான்” என்று மீனாக்ஷி உரைக்கச் சிவசக்தி விவரிக்க முடியாத கோபத்தோடு அவனை முறைத்தாள்.

அவள் பார்வையின் தாக்கத்தைத் தாங்க முடியாமல்

“என்ன மாம் நீங்க இப்படிப் போட்டு கொடுத்திட்டீங்க?” என்று மீனாக்ஷியிடம் கேட்க,

அவள் சிரித்தபடி, “நீ சொன்னதைத்தான் சொன்னேன் சக்தி… இதுல என் தப்பு என்ன?” என்று உரைத்த மறுகணம் “மாம்” என்று சக்திசெல்வன் முகத்தைச் சுருக்கினான்.

“சரி சிவசக்தி… நான் கோவிலுக்குப் போறேன்… நீங்க இரண்டு பேரும் பேசிட்டுச் சீக்கிரம் வந்து சேருங்க…” என்று காரை விட்டு மீனாக்ஷி உத்தர சுவாமிமலை கோவிலை நோக்கி நடந்து சென்றாள்.

அப்போதுதான் சிவசக்தி கார் நின்றிருப்பது கோவில் வாசலில் என்பதைக் கவனித்தாள். சக்திசெல்வன் தன் இருக்கையில் இருந்து இறங்கி சிவசக்தியின் அருகில் வந்து அமர அவள் கோபத்தோடு முறைத்துக் கொண்டிருந்தாள்.

“இப்போ எதுக்குடி முறைக்கிற… என் மேல உனக்கு இருக்கிற அதே நம்பிக்கை எனக்கு உன் மேல இருக்காதா என்ன? அதனாலதான் அவங்களை உன்கிட்ட பேச வைக்க அப்படிச் சும்மா சொன்னேன்” என்றான்.

“வேறு ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சும்மா கூடச் சொல்வாங்களா… உங்க அம்மா என்கிட்ட பேசிட்டு பிடிக்கலன்னு சொல்லி இருந்தா?”

“அதெப்படி சொல்லுவாங்க… நீ எங்கம்மாவை நிச்சயம் கன்வின்ஸ் பண்ணிடுவேன்னு எனக்கு நிறைய நம்பிக்கை இருந்துச்சு… அப்படிச் சொன்னாதான் அவங்களை உன்கிட்ட பேச வைக்க முடியும்னு தோணுச்சு… நான் நினைச்ச மாதிரியே நீதான் அவங்க மருமகன்னு சொல்ல வைச்சிட்டியே சக்தி… யூ ஆர் கிரேட்.

ஆனா என்ன… நீ அம்மாகிட்ட பேசும் போது நமக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னதும் பயந்துட்டேன்… எங்க செய்யினை எடுத்து காண்பிச்சிருவியோன்னு… அப்புறம் மாம் எனக்குத் தெரியாம இது எப்போன்னு கேட்டு டென்ஷனாயிருப்பாங்க” என்றுசொல்லி சிரித்தான்.

சிவசக்தி மெல்லிய புன்னகையோடு, “அதெப்படி காட்டுவேன்? எனக்கு அந்தளவுக்குக் கூட அறிவில்லையா என்ன?!” என்றாள்.

“அட்லாஸ்ட் இவ்வளவு போராட்டத்துக்குப் பிறகு நாம நினைச்சது நடந்திடுச்சு… அதுவும் என்னாலயே கன்வின்ஸ் பண்ண முடியாத எங்க மாமை நீ கன்வின்ஸ் பண்ணிட்ட சக்தி” என்று சொல்லியபடி பெருமிதத்தோடு அவள் முகத்தை அவன் புறம் திருப்பித் தன் கரங்களால் தழுவ, அவனின் தொடுகை வெகுநாளின் தவிப்பையும் ஏக்கத்தையும் போக்க விழிகளை மூடி அவள் அவனின் தீண்டலை ரசித்தாள்.

எத்தனை நீண்டதொரு பிரிவிற்குப் பின் இருவரும் நேரெதிரே சந்தித்துக் கொள்ள, அவளின் அழகோடு கூடிய கம்பீரம் அவன் மனதை வெகுவாய்ச் சலனப்படுத்தியது.

அவளின் மௌனத்தையும் மூடியிருந்த விழிகளையும் சிவசக்தியின் சம்மதமாகக் கருதி அவனின் வெகுநாளான காதல் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள அவளின் இதழை தன் இதழ்களோடு பிணைத்துக் கொண்டான்.

வறட்சியால் தவித்த பூமியை வானவன் தன் மழைக்கரத்தால் நனைத்து உயிர்ப்பிப்பது போல அவனின் பிரிவால் வறட்சியுற்றிருந்த அவளின் உதடுகளை நனைத்து அவன் அப்போது உயிர்ப்பிக்க அவளுமே சிறிது நேரம் அவனின் முத்தத்தில் மெய்மறந்து போனாள்.

சட்டென்று தன்னிலைக்குத் திரும்பியவள் அவனை விலக்கிவிட்டு,

“இடியட்… இது கோவில் வாசல்” என்றாள்.

“இவ்வளவு நேரம் கழிச்சுதான் தெரிஞ்சிதா மேடம்… இது கோவில் வாசல்னு” என்று சொல்லி சிரித்தான்.

சிவசக்தி தன் முகத்தைக் கார் முன்னே கண்ணாடியில் பார்த்துச் சரி செய்து கொள்ள சக்திசெல்வன், “இப்போ என்ன பண்ணிட்டேன்னு… இவ்வளவு சீன்?” என்றான்.

“கார்ல போய்… அதுவும் கோவில் முன்னாடி… உங்களுக்குக் கொஞ்சங் கூட விவஸ்த்தையே இல்லயா?” என்று அவனை மீண்டும் கடிந்து கொண்டாள்.

சக்திசெல்வன் சிரித்தபடி, “இது முருகன் கோவில்… துரத்தித் துரத்தி வள்ளியை காதலிச்சுத் திருமணம் பண்ண காதல் கடவுள்… என் காதலுக்கும் அவரே முன்னோடி… அவருக்கு என் உணர்வுகள் நல்லா புரியும்… தப்பா ஒண்ணும் நினைச்சிக்க மாட்டாரு” என்றான்.

“எல்லாத்துக்கும் ஒரு காரணம் வைச்சிருக்கீங்க… நல்லா” என்று சிவசக்தி உரைக்க அவன் அவள் கோபத்தோடு கூடிய அழகை அமைதியாய் ரசித்துக் கொண்டிருந்தான்.

அவள் மேலும், “காதலுக்கு மட்டும் முன்னோடியா முருகன் இருக்கட்டும்… மத்தபடி இராமனை பின்பற்றுங்க… போதும்” என்றாள்.

சக்திசெல்வன் அவளின் கைகளைப் பிடித்தபடி “என் சிவசக்தியை தவிர வேறொரு பெண்ணைச் சிந்தையாலும் தொடேன்… ப்ராமிஸ்” என்று கம்பராமாயணத்தில் இராமனின் சபதத்தை சக்திசெல்வன் தனக்கு ஏற்றவாறு மாற்றிச் சொல்ல சிவசக்தி புன்னகையோடு, “தேங்க்யூ” என்று சொல்லி அவன் தோளில் ஆதரவாய் சாய்ந்து கொண்டாள்.

“இப்போ இது கோவில் வாசல் இல்லையா சக்தி ?” என்று சிவசக்தியை நோக்கி சக்திசெல்வன் கேட்க, “ஆமாம் இல்ல” என்று சொல்லியபடி அவள் எழுந்து கொண்டு, “வாங்க கோவிலுக்குப் போகலாம்” என்றாள்.

இருவரும் காரை விட்டு இறங்கி கோவிலை நோக்கி நடந்தனர்.

சக்திசெல்வனும் சிவசக்தியிடம் கோவில் படிகெட்டுகளை ஏறியபடி,

“இந்தக் கோவிலில்தானே என்னை நீ முதலில் பார்த்தல்ல?!” என்று வினவினான்.

“ம்… ஞாபகம் இருக்கு… நீங்க காரிலிருந்து இறங்கி விறுவிறுன்னு கோவில் படிகெட்டு ஏறிப் போனீங்களே” என்று சொல்லிவிட்டு மீண்டும் ஏதோ நினைவு வந்தவளாய்,

“அது சரி… அன்னைக்கு ப்ஃளைட் டிக்கெட் எப்படி உங்க கைக்கு வந்துச்சு” என்றாள்.

“எப்படியோ… இப்ப அத பத்தி என்ன?!” என்று சக்தி சொல்ல சிவசக்தி அப்படியே அசையாமல் நின்ற இடத்திலேயே நின்று அவனை முறைத்தாள்.

“சரி வாடி… சொல்றேன்” என்று சக்திசெல்வன் அவள் கோபத்தை உணர்ந்தவனாய் அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான்.

“இப்போ சொல்லப் போறீங்களா இல்லையா?” என்று சிவசக்தி அழுத்தமாய்க் கேட்க,

“நான் பேஸஞ்சர் லிஸ்ட்டை செக் பண்ணேன்… அப்போதான் நீ டிக்கெட் புக் பண்ணி இருக்கேன்னு தெரிஞ்சது… உடனே கீதாவை கான்டெக்ட் பண்ணேன்”

அவன் முழுவதுமாய்ச் சொல்லி முடிக்கும் முன்னரே சிவசக்தி என்ன நடந்திருக்கும் எனக் கணித்துவிட்டு அதிர்ச்சி அடைந்தவளாய்,“அப்போ கீதாவா?” என்றாள்.

“இப்போ எதுக்கு ஷாக்காகிற… நான்தான் அவளைக் கம்பெல் பண்ணி எடுத்துக் கொடுக்கச் சொன்னேன்… அவளும் எவ்வளவோ உன்னைக் கோவில்லையே என்னை மீட் பண்ண வைக்கக் கம்பிரமைஸ் பண்ணா… நீ தேவையில்லாம பிடிவாதம் பிடிச்சா… அவ என்ன பண்ணுவா பாவம்” என்றான்.

“அவளை!” என்று சொல்லி போஃனை கைகளில் எடுத்து கீதாவுக்கு டயல் செய்ய சக்தி அவள் கையில் இருந்த மொபைலை பறித்துக் கொண்டான்.

“இந்த அவசர புத்திதானே வேணாங்கிறது” என்றான் சிவசக்தியை மிரட்டியபடி.

அவள் வேகமாய் முன்னேறிச் சென்று, “என்னை ஏமாத்திறதே உங்களுக்கு வேலையா போச்சு” என்றாள்.

படிகெட்டுகளை ஏறி அவளை முந்தியடித்து நின்ற சக்திசெல்வன் சிரித்தபடி, “ஏமாத்திறவங்களை விட ஏமாறவங்க மேலதான் தப்பு மிஸ். சக்தி” என்றான்.

“ஓ… அப்போ என் மேலதான் தப்பா?”

“புரிஞ்சா சரி” என்றான்.

சிவசக்தி கையைக் கட்டி நின்றபடி, “நீங்க ஏமாத்தி என்னை டென்ஷன் பண்ண மாதிரி நானும் உங்களை ஏமாத்தி டென்ஷனாக்கல… என் பேர் சிவசக்தி இல்ல” என்றாள்.

“அது உன்னால முடியாது… அதுவுமில்லாம இந்தப் பேரை விட வேற பேர் உனக்குப் பொருத்தமாவும் இருக்காது டியர்” என்றான் ஏளனமான புன்னகையோடு.

“முயற்சி செய்யாம நான் தோல்வியை ஒத்துக்கவே மாட்டேன்”

“ட்ரை பண்ணு சக்தி… பட் யூ கான்ட்” என்று விரல்களை அசைத்தான்.

“ஐ கேன்… இட்ஸ் அச் சேலஞ்ச்” என்றாள்.

“இந்தச் சக்திசெல்வனுக்கே சவாலா?” என்று திமிரான தோரணையில் அவன் அவளைப் பார்க்க,

அவளும் துளியளவும் விட்டுக் கொடுக்காமல் அதே தொனியில்,

“சவால்தான்… இந்தத் தடவை ஏமாறப் போறது நீங்கதான் மிஸ்டர். சக்திசெல்வன்” என்றாள்.

இப்படியே இருவரும் பேசியபடி படிகெட்டு ஏறிக் கோவில் பிரகாரத்தில் நுழைய உள்ளே மீனாக்ஷி நின்றிருந்தாள். இருவரும் தங்கள் விவாதத்தை வேறுவழியின்றி நிறுத்திவிட்டு அமைதியாயினர்.

எப்போதும் இவர்கள் காதலுக்கு இடையில் ஒரு போட்டி நிலவியபடியே இருந்தது.

அவனை அவள் ஏமாற்றுவது கொஞ்சம் கடினம்தான் எனினும் சிவசக்திக்கு அத்தகைய புத்திக்கூர்மையும் தைரியமும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

அந்த அழகிய காதல் ஜோடிகள் அவர்கள் காதல் பயணத்தை முடித்துக் கொண்டு திருமணப் பந்தத்தில் இணைவதற்கான ஏற்பாடுகளை மீனாக்ஷி தாமதமின்றி விரைவாய்ச் செய்யத் தொடங்கினாள். எல்லோருமே எதிர்பார்த்திருந்த அந்த அழகிய தருணம் பெரும் போராட்டம் பிரிவுகளைக் கடந்து வந்தடைந்தது.

38

திருமணப் பந்தம்

அன்று இரவு சிவசக்திக்கும் சக்தி செல்வனுக்கும் ஆடம்பரமான திருமண மஹாலில் பார்ப்பவர் பிரமிக்கும் வண்ணம் வரவேற்பு நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒருவருக்கு ஒருவர் எனப் படைக்கப்பட்டதாய் எல்லோரும் வியந்து பாராட்டிக் கொண்டிருந்தனர்.

அவர்களின் பொருத்தம் அந்தளவுக்குச் சிறப்பாக அமைந்திருந்தது. மீனாக்ஷி எந்தப் பெண் தன் மகனைத் திருமணம் செய்யத் தகுதியற்றவள் என்று உரைத்தாளோ இப்போது எல்லா விருந்தாளிகளிடமும் சிவசக்தியை குறித்து ஓயாமல் புகழுரையைப் பாடியபடி இருந்தாள்.

சிவசக்தி ஆடம்பரமான திருமணத்திற்கு மறுத்த போதும் மீனாக்ஷியால் அந்த ஆடம்பரங்களைத் தவிர்க்க முடியவில்லை. பெரிய பெரிய அரசியல் பிரமுகர்கள் அதிகாரிகள் என அரங்கம் நிறைந்திருந்தது.

அதே நேரத்தில் சிவசக்தி தன் உறவினர்கள் எனக் கருதும் சிவசக்தி இல்லத்தில் உள்ளவர்களும் அங்கே பெண்வீட்டார் சார்பில் அவளுடன் நின்றனர்.

பார்வதிம்மா, கமலா, மரியாவும் இருந்தனர். அதிலும் ஆனந்தியோ பார்க்க அவளின் வெகுளித்தனம் குறைந்து இளமையோடும் அழகோடும் காட்சியளித்தாள். திவ்யா சிவசக்தி அருகிலேயே மணமேடையில் துணையாய் நின்றிருந்தாள்.

வனிதாவும் தன் கணவனோடு வந்திருந்தாள். அவள் மகன் கண்ணன் முன்னை விடக் கொஞ்சம் உயரமாய் வளர்ந்திருந்தான். ஜெயா ராமோடு வந்திருந்தாள். என்ன, இம்முறை அவளின் மகன் அஜயுடன் வந்திருந்தாள். ராம் பெண் பார்க்கும் போது சொன்னது போலவே மகனுக்குப் பெயர் வைக்கும் சுதந்திரத்தை ஜெயாவிடமே விட்டிருந்தான்.

கீதாவை சக்தி விடாமல் டிக்கெட்டை எடுத்துக் கொடுத்ததிற்காகத் தன் கோபத்தைச் சண்டையிட்டு தீர்த்த பின்னே அவளிடம் சமாதானமாகினாள். கீதாவும் தன் கணவனோடும் அவளின் வடநாட்டுச் சாயலில் உள்ள மகளுடன் வந்திருந்தாள். இவர்களோடு ஜோதி சாரும் அவருடன் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் வந்திருந்தனர்.

மீனாக்ஷியும் மோகனும் விருந்தினர்களை ரொம்பவும் மரியாதையோடு வரவேற்றனர். எல்லாம் ரொம்பவும் சரியான திட்டமிடலோடு அழகாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றது.

வரவேற்பு நிகழ்வு முடிந்து அந்த ரம்மியமான காலைப் பொழுதில் திருமணச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்க சக்திசெல்வன் சிவசக்தியின் கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டும் போது இருவரும் அவர்களுக்குள் ஏற்கனவே நடைபெற்றுவிட்ட கந்தர்வ திருமணத்தை எண்ணிப் புன்னகைப் புரிந்து கொண்டனர்.

அந்த நிகழ்வு அவர்கள் இருவர் மட்டுமே அறிந்த ரகசியம். அவர்களைப் பொறுத்த வரையில் இரண்டு வருடம் முன்பே அவர்களுக்குத் திருமணம் முடிந்துவிட்ட நிலையில் இது வெறும் ஊருக்கு அவர்கள் உறவை அறிவுறுத்தும் சடங்கு மட்டும்தான். அந்தச் சடங்கு இனிதே முடிவடைந்தது.

சக்தியும் சிவசக்தியும் பேசுவதற்குக் கூட நேரம் கிட்டாத அளவுக்கு உறவினர்களும் விருந்தினர்களும் அவர்களைச் சூழ்ந்தபடியே இருந்தனர்.

இறுதியாய் அவர்கள் உறவோடு இணைந்திடப் போகும் அந்த இரவு நட்சத்திரப் பட்டாளங்களை அழைத்தபடி வந்து சேர்ந்துவிட்டன.

அன்று இரவு சக்திசெல்வன் அந்தப் பிரமாண்டமான வீட்டில் அவன் படுக்கை அறைக்குள் சிவசக்தியை எதிர்பார்த்துக் காதல் நிரம்பிய ஆசையோடு நுழைய அவனுக்கு ஏமாற்றம் காத்திருந்தது.

பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மெத்தையில் அழகிய ரோஜாப் பூங்கொத்து வைக்கப்பட்டிருக்க அதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்தப் பூங்கொத்தை கையில் எடுத்துப் பார்த்த போது அதில் இருந்த அட்டையில், “சவால் நினைவிருக்கிறதா?” என்று எழுதியிருந்தது.

கோவிலில் அன்று அவள் விடுத்த சவாலை தான் மறந்து போய்விட்டோம். ஆனால் அவள் அதை மறக்காமல் அதற்கான சந்தர்ப்பத்தைச் சரியாகவே பயன்படுத்திக் கொண்டாள் என்பதை உணர்ந்து கொண்டான்.

என்ன எண்ணம் கொண்டு இவ்வாறு செய்கிறாள் எனச் சிந்தனை எழ அவன் உண்மையிலேயே ரொம்பவும் கோபமடைந்திருந்தான். அவளை எங்கே என்று தேடுவது.

இந்தப் பிரமாண்டமான வீட்டில் அவர்களுக்கு மட்டும் தனியாக முதலிரவுக்குத் திட்டம் போட்டது அவன். ஆனால் அந்தச் சூழ்நிலையை அவள் பயன்படுத்திக் கொண்டுவிட்டாள். இந்த வீட்டைச் சுற்றி எல்லா அறையிலும் தேடுவதற்கான பொறுமை அப்போது அவனிடம் இல்லை.

இறுதியில் சக்திசெல்வன் தன் கைப்பேசியை எடுத்து சிவசக்தியை அழைத்தான். ரொம்ப நேரம் அடித்துக் கொண்டிருந்த அழைப்பு மணிச் சத்தம் தடைப்பட்டுச் சிவசக்தியின் குரல் ஒலித்தது.

“என்ன மிஸ்டர். எஸ். எஸ்… டென்ஷனா இருக்கீங்களா?” என்று குறும்புத்தனமாய் அவள் குரல் ஒலிக்க,

“எங்கடி இருக்க?… இதான் உனக்கு விளையாடற நேரமா?” என்று சக்திசெல்வன் அந்த எதிர்பாராத ஏமாற்றத்தால் கோபமாய் வினவினான்.

ஆனால் அவள் சிறிதும் அவன் கோபத்தைப் பொருட்படுத்தாமல் பொறுமையாக,

 “எஸ் மிஸ்டர். எஸ். எஸ்… இது நான் உங்களுக்கு விளையாட்டு காட்டிற நேரம்…” என்றாள்.

அவள் அவ்விதம் உரைக்க அவனுக்குக் கோபம் தலைக்கேறியது.

“திஸ் இஸ் யுவர் லிமிட் சக்தி… ஒழுங்கா வந்திடு” என்றான்.

“இது சக்திசெல்வனோட ஆட்டிடியுட் இல்ல… சவாலான விஷயம்னா உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்தானே… கம்மான் சக்தி என்னைக் கண்டுபிடிங்க” என்றாள்.

அவளின் குரலில் தெரிந்த விளையாட்டுத்தனம் சக்திசெல்வனுக்கு மேலும் எரிச்சல் மூட்டும் விதமாய் இருக்க,

“இப்படி எல்லாம் பண்றதுக்கு நீ ரொம்ப அனுபவிப்ப… வேண்டாம்” என்று அழுத்தமாய் எச்சரித்தான்.

அவள் சிறிதும் அச்சம் கொள்ளாமல், ”என்ன பயமுறுத்திறீங்களா… நான் இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயப்படமாட்டேன்… யூ நோ மீ வெரி வெல்… ரைட்” என்று கேட்டாள்.

இப்போது அவன் தன் அறையை விட்டு வெளியே வந்து,

“பைஃவ் மினிட்ஸ்ல நீயா இப்போ என் முன்னாடி வர” என்று அதிகாரமாய் உரைத்தான்.

சிவசக்தி கொஞ்சம் கூட அவன் அதிகாரத்திற்கு அசைந்து கொடுக்காமல், “முடியாது… என்ன பண்ணுவீங்க சக்தி” என்றாள்.

அவளிடமிருந்த பிடிவாதம் கொஞ்சங் கூட மாறவே இல்லை என்று சக்திசெல்வன் எண்ணிக் கொண்டபடி வேறு வழியின்றித் தானே இறங்கி வந்தான்.

“சரிடி… எங்க இருக்க… க்ளுவாச்சும் கொடுத்துத் தொலை” என்றான் வெறுப்பாக.

“நீ பார்க்கும் இடமெல்லாம் நான் இருப்பதாய் தோன்றலாம்… அது என் பிம்பம் மட்டுமே” என்று தூய தமிழில் உரைக்க அவனுக்குள் மேலும் கோபம் வளர்ந்தது.

“நான் ஸீரியஸா கேட்டிட்டு இருக்கேன்… நீ இலக்கியமா பேசிட்டிருக்கியா… என் கையில சிக்கின…”

“காணும் இடமெல்லாம் நான் இருப்பேன். ஆனால் கைகளில் மட்டும் சிக்கிக் கொள்ள மாட்டேன்” என்றாள் மீண்டும் அதே இலக்கியத் தொனியில் பேசினாள்.

“சக்தி உன் கூட எனக்கு முடியல… படுத்தறடி”

சிவசக்தி மீண்டும், ”முடிவில்லாத என்னை நீ முடிவில்லாமல் தேடிக் கொண்டே இரு” என்றாள்.

இப்போது எதிர்புறத்தில் சக்திசெல்வன் அழைப்பைத் துண்டிக்கச் சிவசக்தி குழப்பமடைந்து, “கண்டுபிடிச்சிட்டாரா?” என்று யோசனையில் ஆழ்ந்தாள்.

இப்போது சக்தி செல்வனின் குரல் நேரடியாய் அவள் அருகிலேயே ஒலித்தது.

“சொல்லடி சிவசக்தி… என்னைச் சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்” என்று மேல் மாடியில் நட்சத்திர கூட்டங்களுக்கு இடையில் அழகாய் தேவதை என நின்றிருந்தவளை பார்த்துப் பாடினான்.

அவனைப் பார்த்து அவள் திகைப்புறவில்லை. மாறாய் புன்னகையோடு நின்றிருந்தாள்.

அவன் கண்டுபிடித்து விடுவான் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் அவனை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஒருவாறு ஈடேறிவிட்ட பெருமிதம் அவள் முகத்தில் தென்பட்டது.

“உனக்கு இவ்வளவு திமிரு ஆகாதுடி… சவாலை மனசில வைச்சிட்டுக் கரெக்டான சமயம் பார்த்து ஏமாத்திட்ட இல்ல” என்றான்.

“அதுதான் சிவசக்தி” என்று கர்வமாய் உரைத்தாள்.

“நீ கொடுத்த க்ளூவை வைச்சு நான் கரெக்டா கெஸ் பண்ணிட்டேன்… பார்த்தியா?” என்று சக்திசெல்வன் சட்டைக் காலரைத் தூக்கி தன்னைத் தானே மெச்சி கொண்டான்.

“அப்போ நான் கொடுத்த க்ளூவை புரிஞ்சிக்கிட்டீங்களா?” என்று ஆர்வமாய்க் கேட்டாள்.

“ம்ம்ம்… நீ கொடுத்த மூணு க்ளூவுக்கும் அன்ஸர் வானம்… அப்போ மாடி இல்லன்னா கார்டன்ல இருக்கனும்… நம்ம நிறைய உங்க வீட்டு மாடிலதானே மீட் பண்ணி இருக்கோம்… பேசி இருக்கோம்… சண்டை போட்டிருக்கோம்… காதலிச்சிருக்கோம்… ஸோ நீ மாடிலதான் இருப்பன்னு கெஸ் பண்ணேன்… எப்படி?”

“குட் கெஸ்… பட் சவாலில் தோத்திட்டீங்களே சக்தி” என்று பாவமாய் முகத்தை வைத்துப் பரிகசித்தாள்.

“என்னை ஏமாத்திட்டன்னு ரொம்பச் சந்தோஷ பட்டுக்காதே… திஸ் டைம் லக்கிலி யூ வொன்… நாட் ஆல்வேஸ்” என்றான் ஆணவமான பார்வையோடு,

“ஹெலோ மிஸ்டர். சக்தி நான் உங்களை ஏமாத்திறது இது ஒண்ணும் முதல் தடவை இல்ல” என்று அவள் சொல்ல,

அவன் அவள் கரத்தை பற்றித் தன்னருகில் இழுத்தவன் “அப்படின்னா?” என்று புரியாமல் கேட்டான்.

அவள் புன்னகையோடு, “நம்மோட முதல் சந்திப்பில” என்றாள்.

அவன் இயல்பாகச் சிரித்தபடி, “அது பொயின்னு… எனக்கு அப்பவே தெரியும்… என்னை ஏமாத்திறதா நினைச்சிட்டு உன்னை நீயே ஏமாத்திக்கிட்ட” என்றான்.

“ஓ… எல்லாம் தெரிஞ்ச நீங்க எதுக்குச் சார்… டிக்ட்டை எடுத்து கொடுத்தீங்க?” என்றாள்.

“பிகாஸ் நீ என் மேல வைச்சிருந்த காதலை விட உன் பிடிவாதமும் ஈகோவும்தான் அதிகாம இருந்துச்சு… ஸோ கொஞ்சம் விட்டு பிடிக்கலாம்னுதான்… அப்போதைக்கு உன்னைப் பறக்க விட்டேன்… இப்போ நீயா வந்து என் கையில சிக்கிட்ட இல்ல… நவ் இட்ஸ் மை டர்ன் பேபி… லெட் மீ பிளே” என்று சொல்லி அவளைத் தன் இரு கரங்களால் தூக்கிக் கொள்ள சிவசக்தி அதிர்ந்தபடி,

 “சக்தி விடுங்க… பயமா இருக்கு” என்றாள்.

“அன்னைக்குப் போதையில தூக்கிட்டு போகும் போது பயமா இல்லயா?”

“இப்ப அது ரொம்ப முக்கியம்… கீழே போட்டுட போறீங்க”

“என் மேல நம்பிக்கை இருக்கு இல்ல… வாயை மூடிட்டு வா” என்று அவன் சொல்ல,

சிவசக்தி அப்போது அவன் கழுத்தை கோர்த்தபடி, “ஹீரோ சார் மேல நம்பிக்கை இல்லாமலா?” என்றாள்.

“என்ன… என்னன்னு கூப்பிட்ட… கம் அகையின்” என்று ஆச்சர்யமாக வினவினான்.

அவளும் புன்னகையோடு, “ஹீரோ சார்ன்னு கூப்பிட்டேன்” என்றாள்.

“என்னை ஜீரோன்னு சொன்ன இதே உதடு இப்போ என்னை ஹீரோன்னு சொல்லுது… நான் அந்த லிப்ஸுக்கு ஏதாச்சும் கொடுக்கனுமே” என்று சொல்லியபடி அவன் அவளைத் தன் அறையின் பூக்கள் தூவியிருந்த மெத்தையில் படுக்க வைத்தான்.

சக்திசெல்வன் அவளின் ரம்மியமான அழகில் மெய்மறந்தபடி சிவசக்தியின் இதழ்களைத் தன் இதழ்களால் மூட வர அவள் தன் கரத்தால் அவன் உதடுகளை மூடி அவனின் விருப்பத்திற்குத் தடைப் போட்டாள்.

அவன் அவளின் செயலை எதிர்பாராமல் ஏமாற்றத்தோடு, “வாட் சக்தி?” என்று அவன் கேட்க,

“என்ன அவசரம்… கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாமே?” என்றவளை பார்த்து முறைத்தபடி,

“ரெண்டு வருஷமா கிட்டதட்ட பேசிட்டுதானேடி இருந்தோம்” என்றான்.

“அப்போ சூழ்நிலை வேற… இப்போ இது வேற இல்லயா… நம்ம எதிர்காலத்தைப் பத்தி பேச வேண்டாமா…” என்று சொல்லி அவன் விருப்பம் புரிந்தும் அவனை வெறுப்பாக்கிப் பார்த்தவளை,

அவன் புன்னகையோடு, “கரெக்ட் சக்தி… நிறையப் பேசுவோம்… ஆனா வார்த்தைகளால இல்ல… கொஞ்சம் உணர்வுபூர்வமா” என்றான்.

சிவசக்தி அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அதே நேரத்தில் சக்திசெல்வன் அவள் கரத்தை தன் கரத்தோடு கோர்த்தபடி, “இப்போ எப்படித் தடுக்கறன்னு பார்க்கிறேன்” என்று சொல்ல

அவள் தன் கரங்களை விடுவிக்க முடியாமல் இயலாமையோடு,

“சக்தி லீவ் மீ” என்றவளை பேச்சற்று போகும் விதமாய்த் தன் முத்தங்களால் மூழ்கடித்தான்.

பின்னர் அவளின் இதழ்களைத் தன் இதழ்களால் இணைத்துக் கொள்ள இம்முறை அந்தத் தருணம் அவர்களுக்கே உரியதாக மாறிவிட யாருமே அவர்களை இடையூறு செய்யாத காரணத்தால் வெகுநேரம் அந்த இதழ்களுக்குப் பிரிய மனம் வரவில்லை.

அவனின் தேகம் அவளை மொத்தமாய் ஆட்கொள்ளத் தன் வன்மையான கரங்களால் அவளின் மென்மையான தேகத்தைச் சிறைப்படுத்திக் கொண்டான்.

காத்திருப்பிற்குப் பின் தோன்றும் காதலும்… அதன் ஊடலும்… பின் ஏற்படும் கூடலும் அவர்களைக் காதல் கடலில் மூழ்கி இன்புறச் செய்திருக்க அந்த முதல் இரவு அவர்களின் முதல் உன்னத உறவை ஏற்படுத்தியது.

இத்தனை நேரம் அவனின் கைச் சிறைக்குள் பிணைத்திருந்தவளை அவன் விடுவித்துச் சென்றுவிட அப்போது சிவசக்தி விழித்தெழுந்து அவனைத் தேடினாள். அவனோ தன்னை விடுத்து கைப்பேசியைக் கரத்தில் கொண்டிருந்ததைக் கவனித்தவள் அவனை நெருங்கி அந்தப் போஃனை அவனிடமிருந்து பறித்து அணைத்து வைத்தாள்.

“சாரி சக்தி… ஒரு முக்கியமான கால்” என்றான்.

“இத பாருங்க சக்தி… எனக்கும் நிறைய முக்கியமான வேலை இருக்குதான்… ஆனா அதுக்கான நேரம் இது இல்லை… நான் உங்க பக்கத்தில் இருக்கும் போது என்னைத் தவிர வேறெதுவும் உங்களுக்கு முக்கியமா இருக்கக் கூடாது…

நாளைக்கே உங்களுக்கு வேலை எதாச்சும் வந்த துபாய் லண்டன்னு எங்க வேணா போவீங்க… நானும் என் வேலையை விட்டுட்டு உங்க கூட வர முடியாது… எப்போ வருவீங்கன்னும் தெரியாது…

அப்படி நாம அபூர்வமா சந்திச்சிக்கும் போது நாம நம்மைத் தவிர வேற எதைப் பத்தியும் யோசிக்கக் கூடாது” என்று அதிகார தொனியில் சொல்ல அவளின் காதலும் அந்த உரிமையான கோபமும் சக்தி செல்வனுக்கு நன்கு புரிந்தது.

அவன் உடனே அவளை அருகில் இழுத்து இறுக அணைத்துக் கொண்டு,

“ஒகே கலெக்டர் மேடம்… நீங்க சொல்றபடியே செஞ்சிடலாம்” என்று சொல்லிவிட்டு அவள் நெற்றியினை வருடி முத்தமிட்டான்.

இங்கே அவர்களின் திருமணப் பந்தம் இனிதே தொடங்கிவிட்ட நிலையில் இனி அவர்கள் சந்திக்கும் எந்தப் பெரிய பிரிவும் அவர்கள் காதலை கரைத்துவிட முடியாது.

இனி வரும் அவர்கள் பயணம் இனிதே தொடரும்…

முடிவுரை

வேண்டுமடி ஒருவன்

இரும்பினை ஒத்த கைகளால்

எனக்காகப் பூங்கொத்தினை ஏந்திட வேண்டுமடி!

பாறையான மார்பகத்தில்

பளிங்கினை போன்ற இதயம் வேண்டுமடி!

பார்வதியின் பதி போலப் பாதியாக

அவனுள் நான் வேண்டுமடி!

கண்களாலும் பிற பெண்களைத் தீண்டிடாத உள்ளம் வேண்டுமடி!

பறவையாய் நானிருக்க அவன்

வானமாய் விரிந்திட வேண்டுமடி!

ஆசையானாலும் மீசையானாலும் அதில்

ஒரு அழகான நேர்த்தி வேண்டுமடி!

கடலென நிரம்பிய நம்பிக்கையும் அதில்

ஓயாத அலையென மோதிடும் அன்பும் வேண்டுமடி!

நிறத்தில் கண்ணனாகவும் என்னை மட்டும் சுற்றும் கள்வனாக வேண்டுமடி!

இராச்சியங்கள் மாறி பூஜ்ஜியங்களாய்

போனாலும் புன்னகை செய்திட வேண்டுமடி!

தங்க ஆபரணங்கள் வேண்டாத

சொக்கத் தங்கமாய் ஒருவன் வேண்டுமடி!

என் முதல் காதலான தமிழின் மீது

அவனுக்கும் தீராத பற்றுதல் வேண்டுமடி!

அருமையோ, வெறுமையோ என் கவிதைகளைப் படித்துக் குறை சொல்ல வேண்டும் சற்று ஆர்வமும், பொறுமையும் வேண்டுமடி!

இந்தக் கதை நாயகன் நாயகியின் பெயருக்குள் என் அம்மா அப்பாவின் பெயர் ஒளிந்துள்ளது. சக்தியை நீக்கிவிட்டால்

சிவகாமி சிவசக்தி

செல்வராஜ் சக்தி செல்வன்

என்னை வியக்க வைத்த உண்மையான காதலர்கள் என் அம்மா அப்பாதான். ஆதலாலேயே இந்தப் பெயரை சூட்டினேன்.

நன்றியுடன்

மோனிஷா

2 thoughts on “solladi sivasakthi-final

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content