You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic thriller

Solladi sivaskathi-17&18

17

மஞ்சள்வெயில்மாலையிலே

சிவசக்தி எப்படி எல்லாரிடமும் பேசி சக்திசெல்வனைப் பற்றிச் சொல்லி இங்கே தங்க வைப்பது என்றெண்ணிக் கொண்டே திறந்திருந்த கதவிற்குள் நுழைந்தாள்.

சிவசக்தி சக்திசெல்வனின் புறம் திரும்பி உள்ளே வரச் சொல்லி மௌனமாகத் தலையசைத்தாள்.

கண்ணன் வீட்டை வளைய வந்தபடி விளையாடிக் கொண்டிருந்தான். உள்ளே வந்த சக்தியை பார்த்ததும் அருகில் ஓடி வந்து அவள் புடவையை இழுத்தான்.

“என்ன கண்ணா!” என்று அவன் உயரத்திற்குக் குனிந்து அவள் கேட்க

“சக்தி… சாக்லேட் கொடு” என்றான் அதிகாரமாக!

“எப்ப பாரு சாக்லேட்… ஓடிப் போயிடு” என்று அதட்டினாள்.

அதற்குள் சக்திசெல்வன் தன் பேக்கடில் இருந்த சாக்லேட்ஸை கைகளில் காண்பிக்கக் கண்ணன் ஓடிவந்து அதை எடுத்துக் கொண்டான். கண்ணனை சக்திசெல்வன் தூக்கிக் கொள்ள வீட்டில் உள்ளவர்கள் எங்கே என்று சக்தி யோசித்துக் கொண்டிருந்தாள்.

சமையலறையிலிருந்து கமலா வெளியே வந்து சக்திசெல்வனைப் பார்த்தபடி சிவசக்தியிடம் அதிர்ச்சியோடு,

“யாரு பாப்பா இது?” என்று வினவினாள்.

“தெரிஞ்சவருக்கா” என்றாள் சிவசக்தி.

அவள் மேலும் சக்திசெல்வனை ஆச்சர்யமாகப் பார்க்கும் கமலத்தை நோக்கி,

“சரிக்கா… எங்கே யாரையும் வீட்டில காணோம் ?” என்று கேட்க,

“கோவிலுக்குப் போயிருக்காங்க…” என்று பதிலுரைத்தாள்.

“நீங்க போலயா?”

“நீயும் ஆனந்தியும் ஸ்கூல்ல இருந்து வர நேரமாச்சே… போதாக் குறைக்கு இந்தக் கண்ணன் தூங்கிட்டிருந்தான்… அதான் நான் போகல… சரி நான் போய் உங்களுக்குக் காபி எடுத்துட்டு வர்றேன் பாப்பா” என்று கமலா சிந்தனையோடு உள்ளே சென்றாள்.

சக்திசெல்வன் சிரித்தபடி, “பாப்பாவா!” என்றான்

“உங்களுக்கு அது ரொம்ப முக்கியமா?” என்றாள் சிவசக்தி கண்களை உருட்டியபடி!

“ஏன் தெரிஞ்சவருன்னு சொன்ன… ப்ஃரண்டுன்னு சொல்லிருக்கலாம் இல்ல” என்றான்.

“லிஸன் மிஸ்டர். சக்தி… நாம ப்ஃரண்டஸ் எல்லாம் இல்ல… ஸ்கூல்ல அந்த ஜெயா சண்டைக்கு வருவான்னு நீங்க சொன்னதுக்குத் தலையாட்டினேன்… புரிஞ்சிதா?” என்று இறுக்கமான முகத்தோடு உரைத்தாள்.

சக்தி புருவத்தை உயர்த்தியபடி பதில் ஏதும் பேசாமல் சிரித்தான். ஆனால் அவன் மனதில்

‘என்னை ப்ஃரண்டுன்னு சொல்ல உனக்கு அவ்வளவு தயக்கமா இருக்கா?’ என்று எண்ணிக் கொண்டான்.

சிவசக்தி அவனைச் சோபாவில் அமரச் சொல்லிவிட்டு அவள் சமையலறைக்குள் செல்ல சக்தி செல்வன் கண்ணனை மடியில் அமர்த்தியபடி,

“உங்க பேரு கண்ணனா?” என்று தலையை அசைத்துக் கேட்க, “ம்” என்று சாக்லேட்டை ருசித்தபடியே தலையாட்டினான்.

“உனக்குச் சாக்லேட்ஸ்தான் ரொம்பப் பிடிக்குமா?” என்று வினவினான்.

“ஆமாம்… ஆனா எனக்குச் சக்தியை பிடிக்காது” என்று கண்ணன் சொன்னதைக் கேட்டு சக்தி செல்வன் தன்னை அறியாமல் சிரித்தான். பிறகு புன்னகையோடு, “ஏன் பிடிக்காது?” என்று கேட்டான்.

“சக்தி சாக்லேட்ஸே வாங்கித் தரமாட்டா… சண்டைதான் போடுவா” என்றான்.

“உன்கிட்டயுமா?… என் கிட்டயும் சக்தி சண்டைதான் போடிறா” என்றான்.

“எதுக்கு?” என்று கண்ணன் சக்திசெல்வனைக் கேட்க,

“நம்ம இரண்டு பேரும் ஒரே இனம்… அதான்” என்று தோள்களைக் குலுக்க, அந்தப் பதில் கண்ணனுக்குப் புரியவில்லை என்றாலும் சமையலறையில் இருந்து காபியோடு வந்த சிவசக்திக்கு புரிந்து போனது. அவள் தலையைத் தூக்கியபடி முறைத்துக் கொண்டு நின்றாள்.

“இப்ப ஏன் முறைக்கிற… உண்மையைதானே சொன்னேன்” என்றான் சக்திசெல்வன்.

காபியை நீட்டியபடி, “எல்லோரும் வந்தா எப்படிப் பேசிறதுன்னு நானே டென்ஷன்ல இருக்கேன்… இப்போ என்னைப் பத்தி கமன்ட் அடிக்கிறது உங்களுக்கு ரொம்ப முக்கியமா?!” என்றாள்.

“நன்றி கடனை தீர்க்கிறன்னு… நீதானே என்னை இங்க கூட்டிட்டு வந்த… இப்போ சமாளி” என்றான்.

“சமாளிச்சு தொலையறேன்… உனக்கு எப்பவும் இதே வேலை சக்தி” என்று தன்னைத்தானே சிவசக்தி கடிந்து கொள்ள, “என்ன சொன்ன?” என்று சக்திசெல்வன் கேட்டான்.

“எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்” என்று சலித்துக் கொண்டே வாசல் கதவோரம் போய் நின்றபடி அவர்களின் வருகைக்காகக் காத்திருந்தாள்.

சில நிமிட காத்திருப்புக்குப் பிறகு பார்வதியம்மாவுடன் மற்ற பெண்களும் வந்தனர். சிவசக்தியை பார்த்து அவர்கள் புன்னகையோடு வர அவள் அப்போதைக்குச் சிரிக்கும் நிலையில் இல்லை.

“ஏன் சக்தி வாசலில் நிக்கிற” என்று மரியா சொல்லி அவள் தோள்களைப் பற்றி உள்ளே அழைத்து வந்தாள். சோபாவில் அமர்ந்திருக்கும் சக்தி செல்வனைப் பார்த்து மரியாவும் ஞானசரஸ்வதியும் அதிர்ச்சியாகப் பார்க்க அவன் தயக்கமாய் எழுந்து நின்று கொண்டான். பார்வதி கண்களாலேயே சக்தியை பார்த்து யாரென அதட்டலாய் வினவினாள்.

“ஸ்கூல்ல புதுசா ஜாயின் பண்ணி இருக்கிற மேக்ஸ் டீச்சர்… பெயர் சக்தி செல்வன்… ரொம்பத் தெரிஞ்சவரு… நம்பிக்கையானவர்… கொஞ்ச நாளைக்கு மாடில இருக்கிற ரூம்ல ஸ்டே பண்ணிக்கட்டுமே” என்று தயங்கி தயங்கிச் சொல்ல பார்வதி பதில் ஏதும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டாள்.

மற்ற பெண்களும் சக்தியின் செயலை குறித்து லேசான குழப்பத்தோடு நோக்க சிவசக்தி சக்திசெல்வனைப் பார்த்து, “வெயிட் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு பார்வதியின் அறைக்குள் நுழைந்தாள்.

அவளின் நுழைவைப் பார்த்த மரியா அருகில் வந்து,

“சக்தி இதென்ன புதுப் பழக்கம்?… ஆம்பளைங்கல இல்லத்தில் தங்க வைக்கிறது” என்று அதட்டல் தொனியில் கேட்டார்.

வீட்டில் உள்ள மற்றவர்களை விட ஆண்களை மரியா அதிகம் வெறுத்தாள். சிறுவயதில் நிகழ்ந்த ஏமாற்றம் ஆறாத காயமாய் இன்னும் அவள் மனதில் பதிந்திருந்தது.

“ஒண்ணும் பிரச்சனை வராது… கொஞ்சம் நாளைக்குதான்” என்றாள் சக்தி.

பார்வதியின் முகத்தில் கோபம் தாண்டவமாட,

“என்ன ஏதுன்னு யார்க்கிட்டயும் ஒரு வார்த்தை கூடச் சொல்லாம ஒருத்தரை கூட்டிட்டு வீட்டுக்கு வந்து நின்னிட்டிருக்க… உனக்குத் தெரிஞ்சவர் சரி… ஆனா இல்லத்தில் இருக்கிறவங்களைப் பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சியா… இத்தனை பெண்கள் இருக்கிற இடத்தில எப்படிச் சக்தி?!” என்று சொல்லி பார்வதி திட்டவட்டமாய் மறுத்தார்.

“மேலே ரூம் தனியாதானே இருக்கு… அதனால எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்காதும்மா” என்றாள்.

மரியா எரிச்சலோடு, “நீ பேசிறது எனக்கு ஒண்ணும் சரியா படல சக்தி” என்றாள்.

“எனக்கு முக்கியமான நேரத்தில உதவி செஞ்சிருக்காரு… இன்னைக்கு அவருக்கு உதவி தேவைப்படும் போது நான் செய்யனும் இல்லயா” என்று சிவசக்தி கெஞ்சலாய் கேட்க,

“நீ உதவி செய்றன்னு எல்லாருக்கும் உபத்திரவம் பண்ற” என்று மரியா சொல்ல பார்வதியும்,

“அவ சொல்றது சரிதான்” என்று ஆமோதித்தார்.

“நான் பெங்களூர் டிரெயின்ல இருந்து விழுந்து அடிப்பட்ட போது மிஸ்டர். சக்தி செல்வன்தான் என்னைக் காப்பாத்தினாரு… அவர் இல்லன்னா… நான் இப்போ இல்லை… ஸோ ப்ளீஸ்ம்மா… யோசிச்சு பாருங்களேன்” என்று மீண்டும் தவிப்போடு அனுமதி கேட்டாள்.

மரியாவும் பார்வதியும் இதைக் கேட்டு வியந்தனர். இப்பொழுது பார்வதிக்கு மறுக்க மனம் வரவில்லை. அவள் சிறிது நேரம் நன்றாக யோசித்த பின் அந்த அறைக் கதவின் சாவியை சக்தியிடம் நீட்டியபடி,

“சரி சக்தி… இருக்கச் சொல்லு… ஆனா கீழே எல்லாம் வரக் கூடாது… மேலே ரூம்லதான் இருக்கனும்… யாருக்கும் டிஸ்டப்பன்ஸா இருக்கக் கூடாது” என்றார்.

மரியா வெளிப்படையாக மறுப்பு தெரிவிக்கவில்லை எனினும் அவளுக்கு இந்த முடிவில் உடன்பாடில்லை.

சக்தி சாவியோடு வெளியே வந்த போது ஆனந்தி பள்ளியிலிருந்து வந்திருந்தாள். காலையில் சக்திசெல்வன் பாடம் எடுத்த விதம் பிடித்துப் போக ஆனந்தி அவனிடம் ஆர்வமாய்ப் பேசிக் கொண்டிருந்தாள். ஆனந்தியின் செயலை பார்த்து மரியா மகளை அதட்டலாய் உள்ளே அழைத்தாள்.

சக்திசெல்வனை எல்லோரும் வித்தியாசமாய்ப் பார்த்தனர். சிலர் வெறுப்பாய், சிலர் ஆச்சர்யமாய், சிலர் கோபமாய் என்று ஆளுக்கொரு பாவனையில் பார்க்கத் தன்னைச் சிவசக்தி நன்றாய் பழிவாங்கிவிட்டால் என்றே அவனுக்குத் தோன்றியது. அவன் இங்கே தங்கக் கூடாது என்று நினைக்கையில் சிவசக்தி சாவியுடன் வந்து மாடியறைக்கு அழைத்தாள்.

சிவசக்தியின் வார்த்தையை மறுக்க முடியாமல் அவனும் பின்னோடு சென்றான்.

மேல் மாடியில் பூச்செடிகள் வழியேற அழகாய் பூக்களோடு சிரித்த வண்ணம் இருக்க ஒரு ஓரமாய்ச் சிறு அறை தனித்து இருந்தது. அந்த அறை ஒரு அலுவலக பாணியில் இருக்கச் சிவசக்தி அவன் புறம் திரும்பி, “இந்த ரூம் ஓகேதானே ?” என்றாள்.

அவன் அந்த அறையைச் சுற்றி பார்த்துக் கொண்டிருக்க அங்கே பெரிய பெரிய சட்டப் புத்தகங்கள் நிறைய இருந்தன. ஒரு கப்போர்ட்டில் இருந்த புத்தகத்தைக் காலி செய்து தூக்கி மேலே அடுக்கியபடி,

அவனிடம்,“இந்த ரூம் எங்கம்மா ஆபிஸா யூஸ் பண்ணது… அவங்க போன பிறகு இந்த ரூமை நாங்க யாராச்சும் கெஸ்ட் வந்தா யூஸ் பண்ண வைச்சிருந்தோம்” என்றாள்.

சக்திசெல்வன் அவளின் செயல்களைக் கவனித்தபடி,

“எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணி என்னை ஏன் நீ இங்க தங்க வைக்கனும்… இது வெறும் நன்றிக்கடன்தானா?” என்று கேட்டு அவள் மன எண்ணத்தை அறிய நினைத்தான்.

“ஆமாம்… வேறு ஒண்ணுமில்லயே… அப்படி ஏதாவது இருந்து… நான் அதை மறைக்கனும்னு நினைச்சா… ஏன் தைரியமா உங்களை இங்க கூட்டிட்டு வந்து தங்க வைக்கனும்… என் மனசுல நீங்க நினைக்கிற மாதிரியான எண்ணம் துளி கூட இல்லை” என்று சிவசக்தி சொல்லிக் கொண்டிருக்க,

அந்தச் சமயத்தில் அவசரத்தில் அடுக்கி வைத்த புத்தகங்கள் சரியாக நிற்காமல் நிலைதடுமாறி அவை மீண்டும் அவள் மீதே சரிந்து விழப்பார்த்தது.

“அய்யோ” என்று நகராமல் தலையைக் கவிழ்ந்து கொள்ளப் புத்தகங்கள் மடமடவெனச் சரிந்தன. தன் மேல் எதுவும் விழவில்லையே என்று சிவசக்தி நிமிர்ந்து நோக்க சக்திசெல்வன் அவள் மீது விழாமல் தடுத்து தானே அவற்றைத் தாங்கிக் கொண்டான்.

பின்பு சக்தி செல்வன் தலையைத் தேய்த்தபடி,

“இப்படிதான் அடுக்குவாங்களா… அட்லீஸ்ட் விழப் போறது தெரிஞ்சி நகர்ந்திருக்கலாமே ?” என்றான்.

“என்மேல விழுந்தா விழுந்திட்டுப் போது… நீங்க ஏன் நடுவில வந்தீங்க”என்றாள்.

“உனக்கு என்னைப் பிடிக்கலனாலும் சரி… உனக்கொரு பிரச்சனைன்னா என்னால நின்னுட்டு வேடிக்கை பார்க்க முடியாது… என்னன்னு தெரியல… நீ அவசரத்தில செய்யற எல்லாம் காரியமும் என் தலையிலதான் வந்து விடியுது” என்று சொல்லிக் கொண்டே அவன் அறையை விட்டு வெளியேறினான்.

அவன் ஒவ்வொரு முறை தனக்கு நேரும் விபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றுகிறான். ஆனால் தான் ஒருமுறை கூட அவனிடம் சரியாக நன்றி கூடச் சொன்னதில்லையே. மாறாகக் கோபத்தையே காட்டிக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் சிவசக்திக்கு வர அவளுக்குள் குற்றவுணர்வு அழுத்தியது.

சிவசக்தி அறைக்கு வெளியே வந்து அவனை நோக்கி, “தேங்க்ஸ்” என்றாள்.

“இவ்வளவு யோசிச்சி சொல்ற தேங்க்ஸ் எனக்கு ஒண்ணும் தேவையில்லை” என்று சக்திசெல்வன் பாராமுகமாய் நிற்க சிவசக்தி தன் தவறை உணர்ந்தவளாய் மௌனமானாள்.

இருவரும் சில நேரங்கள் அமைதியாக யோசனையில் ஆழ்ந்தனர்.

அந்தத் தருணத்தில் அந்தி சாய்வதை அறிவிக்கச் சூரியன் தன் செந்நிறத் துகள்களை வீசி வானில் ஓவியம் படைத்துவிட்டு பிரியா விடைப் பெற்றுக் கொள்ள, அந்த அபரிமிதமான அழகிய காட்சியை சக்திசெல்வன் தலைதூக்கிப் பார்த்தபடி நின்றான்.

அவனின் செயலை சிவசக்தி கவனித்தவளாய்,

“ஹெலோ மிஸ்டர்.சக்தி என்னாச்சு?” என்று கேட்டாள்.

“தேங்க்ஸ் சக்தி” என்றான்.

“எதுக்கு?”

“ஏசி ரூம்லேயே இருந்துட்டு… எப்பவுமே ஆபிஸ் வொர்க்… மீட்டிங்… பிஸின்ஸ் பத்தி யோசிச்சிட்டு… எப்பவுமே கார்லயே டிராவல் பண்ணிட்டு… என்ன வாழ்கை… நிறைய விஷயத்தை மிஸ் பண்ணிட்டேன்னு தோணுது… ரிலேக்ஸ்டா…

இந்த மாதிரி நிதமானமா ஒரே ஒரு மாலை நேரம் கூட இருந்ததில்ல… நீ அன்னைக்கு அப்படிப் பேசாலன்னா… ரியலி இன்னைக்கு நான் இப்படி ஒரு அழகான தருணத்தை ரசிக்க முடிஞ்சிருக்காது “ என்றான்.

சிவசக்தி அவன் பேசியதை கேட்டு ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் உணர்ச்சிவசப்படும் அளவிற்கு என்ன நேர்ந்துவிட்டது என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

தன்னுடைய இயந்திரத்தனமான வாழ்க்கையை விடுத்து மேல்மாடியில் சாவகாசமாய் நின்று கொண்டு அழகான அந்த மஞ்சள் வெயில் மாலைப் பொழுதை தன் காதலியுடன் நின்று ரசிப்பது அவனுக்கு உண்மையிலேயே அதுவரை கிடைத்திராத அரிய அனுபவம். அதன் அழகை நம் நாயகனால் மட்டுமே உணர முடியும்.

18

பிடிவாதம்

மீனாக்ஷி தன் மகனின் அறைக்குள் அவனின்றி இதுவரை நுழைந்ததே இல்லை. அது நாகரிகமற்ற செயல் என்பது அவருடைய எண்ணம். ஆனால் இம்முறை அத்தகைய செயலை மீனாக்ஷி செய்தார்.

மீனாக்ஷி தன்னந்தனியே பெரும் அரசியல் கட்சியை நிர்வகிக்கும் அசாத்தியமான பெண்மணியாக இருப்பினும் மகன் என்ற உறவு அவரைச் சாதாரணப் பெண்மணி போலக் கொஞ்சம் சுயநலமாய்ச் சிந்திக்க வைத்தது. அதற்குக் காரணமும் இருந்தது.

எத்தனை வேலையிலும் தன் மகனின் தேவைகளைப் பூர்த்திச் செய்வதில் அவர் தவறியதில்லை. சக்திசெல்வன் எந்த ஒளிவுமறைவுமின்றி எல்லா விஷயத்தையும் மீனாக்ஷியிடம் பகிர்ந்து கொள்வான்.

மீனாக்ஷி பலமுறை தன் மகனிடம்,

“நீ யாரையாச்சும் காதலிக்கிறியா சக்தி?!” என்று கேட்ட போதெல்லாம்,

“உங்களை மாதிரி ஒரு தைரியமான பொண்ணைச் சந்திச்சா பார்க்கலாம்” என்று ஆர்வமின்றிப் பதிலுரைப்பான்.

இன்று ஒரு பெண்ணின் மீதான காதலுக்காகத் தன்னையும் விட்டு அவன் சென்றிருக்கிறான் என்பதை இப்பொழுதும் மீனாக்ஷியின் மனம் நம்ப மறுத்தது.

சக்திசெல்வனின் கப்போர்ட்டை மீனாக்ஷி திறந்து அவன் பொருட்களை உற்றுப் பார்த்தபடி இருக்க, அதிலிருந்த புத்தகம் ஒன்று ரொம்பவும் வித்தியாசமாய்த் தோன்றியது.

அதனை எடுத்துப் பார்த்தார். அந்தக் கவிதை நிரம்பிய பக்கங்கள் கொண்ட புத்தகத்தின் அட்டையில் இருந்த சிவசக்தி என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்க யோசனையோடு மீண்டும் அந்தப் புத்தகத்தை இருந்த இடத்தில் வைத்துவிட்டுக் கப்போர்ட் கதவை மூடினார்.

மீண்டும் அந்த அறையைச் சுற்றிப் பார்த்த போது சக்திசெல்வனின் கைப்பேசி அவர் கண்ணில் பட்டது. அதைத் திறக்க முயற்சிக்கப் பாஸ்வார்ட் கேட்டது. எப்போதுமே அவன் பயன்படுத்தும் வார்த்தைகளால் அவனின் கைப்பேசியைத் திறக்க முடியவில்லை.

கடைசியான முயற்சியாய் சிவசக்தி என்ற பெயரை முயற்சி செய்ய சக்திசெல்வனின் கைப்பேசி திறந்து கொண்டது. சிவசக்தி தன் மகனின் மனதில் எந்தளவுக்கு ஆழமாய் இடம்பிடித்திருக்கிறாள் என்பதை மீனாக்ஷி உணர்ந்து கொண்டார். அந்தக் கைப்பேசியில் இருந்த புகைப்படங்களில் ஒரே ஒரு பெண்ணின் படம் இருந்தது. அந்தப் படத்தில் தோன்றிய சிவசக்தியின் அழகோ அல்லது அவளின் நிமிர்ந்த தோற்றமோ மீனாக்ஷியை கவரவில்லை. மாறாய் ஏன் என்று தெரியாத வெறுப்பை ஏற்படுத்தியது.

இதெல்லாம் ஒரு புறமிருக்க முரளி சிவசக்தியை குறித்த செய்திகளை விவரித்தான். அவள் குடும்பமின்றித் தன் அம்மா நடத்திய இல்லத்தில் இருக்கிறாள். எஸ். எஸ் கல்லூரியில் சிவசக்தியை பார்த்து அவள் மீது காதல் கொண்டு சக்திசெல்வன் செய்த எல்லாக் காரியங்களைப் பற்றி முரளி விவரமாய் உரைத்தான்.

டெல்லிக்கு வருவதற்கு முன்பு சிவசக்திக்கு டிரெயினில் நடைபெற்ற விபத்தையும் அவளைக் காப்பாற்ற சக்திசெல்வன் போராடியதைக் குறித்தும் தெரியப்படுத்தினான். இவற்றை எல்லாம் பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்த மீனாக்ஷிக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்திய விஷயம் என்னவெனில் சக்திசெல்வன் அவளுக்காக இத்தனையும் செய்த பிறகும் அவனைச் சிவசக்தி நிராகரித்தது.

சக்திசெல்வனை நிராகரிக்கும் அளவிற்கு அவள் திமிர் பிடித்தவளோ என்று மீனாக்ஷிக்கு நினைக்கத் தோன்றியது. இப்படிப்பட்ட பெண்ணுக்கு தன் காதலை உணர்த்த அத்தனை தூரம் சென்றிருக்கிறான் என்பது மனதளவில் சிவசக்தியின் மீதான துவேஷத்தை மீனாக்ஷிக்கு வளரச் செய்தது. ஆனால் இப்போதைக்குத் தன் மகனுக்காக அமைதிக் காப்பதென்று மீனாக்ஷி முடிவெடுத்தார்.

சக்திசெல்வனுக்கு அந்த வீட்டில் ரொம்பவும் நெருக்கமாய் இருந்தது ஆனந்தியும் கண்ணனுமே. பள்ளியில் ஜெயா அவனிடம் உற்றத் தோழியாக இருந்தாள். ஆனால் இத்தனை அருகாமையில் இருந்தும் சிவசக்தி அவனிடம் இயல்பாய்ப் பழகாமல் விலகியே நின்றாள். ஆசிரியர் தொழிலுக்கு சக்திசெல்வன் அனுபவமே இல்லாதவன், எனினும் அவன் முழு முயற்சியோடும் ஈடுபாட்டோடும் மாணவர்களைத் தன் திறமையால் புத்திக்கூர்மையால் கவர்ந்திழுத்தான்.

அவனின் திறமையைக் கண்ட ஜோதி சார் வாய் ஓயாமல் பாராட்டிக் கொண்டிருந்தார். எல்லோருமே அவரிடம் பாராட்டைச் சுலபத்தில் பெற்றுவிட முடியாது. அது சிவசக்தி உட்பட எல்லா ஆசிரியர்களுக்கும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது.

பள்ளியில் இருக்கும் நேரம் போக சக்திசெல்வனுக்கு அந்த அறை தனிமைச் சிறையாகவே தோன்றியது. சிவசக்தி இரவில் கடமைக்கென்று உணவு கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றுவிடுவாள். நாளுக்கு நாள் அவளின் பிடிவாதம் அதிகரித்தது போலவே அவன் உணர்ந்தான்.

அன்று சக்திசெல்வன் கைகளில் எழுதுகோலோடு முக்கியமான குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் இரவு உணவை எடுத்துக் கொண்டு சிவசக்தி அவனின் அறைக்கு வந்தாள்.

கதவைத் தட்டி அவனின் அழைப்பிற்கு ஏற்ப உள்ளே வந்து உணவை வைத்துவிட்டு வெளியே செல்லும் போது சக்தி செல்வன் தவிப்போடு

“அதுக்குள்ள என்ன அவசரம்… சாப்பிடற வரைக்குமாவது கூடப் பேசிட்டிருக்கக் கூடாதா?” என்று கேட்க சிவசக்தி மறுப்பேதும் சொல்லாமல் அமைதியாய் நின்றாள்.

சிவசக்தி ஆர்வமாய் எழுதிக் கொண்டிருக்கும் அவனை நோக்கி,

“ஏன் மிஸ்டர். சக்தி… உங்க வசதி எல்லாம் விட்டுட்டு இப்படி இருக்கிறது உங்களுக்குக் கஷ்டமா இல்லையா?” என்று கேட்டாள்.

சக்தி செல்வன் குறிப்பு எடுப்பதை நிறுத்தி விட்டு,

“அந்த அளவுக்குக் கஷ்டமா இல்ல… ஆனா எங்க மாமைதான் நான் ரொம்ப மிஸ் பன்றேன்… அதுவும் இல்லாம நான் எங்கம்மாக்கிட்ட எதையுமே மறைச்சதில்லை… ஆனா உன்னைப் பத்தி மட்டும் சொல்லல” என்று சொல்லும் போதே அவனுக்கு அவன் தாயின் மீதான அன்பு தெளிவாய்த் தெரிந்தது.

சிவசக்தி அவன் சொன்னவற்றைப் புரியாமல் பார்க்க சக்திசெல்வன் மீண்டும்,

“நான் உன்னைக் காதலிக்கறேன்னு சொல்லி இருந்தா… ஒண்ணு உன்கிட்ட சம்மதம் வாங்க முயற்சி பண்ணுவாங்க… இல்லைன்னா நீ என்னை நிராகரிக்கிறது தெரிஞ்சு உன் மேல அவங்களுக்குக் கோபம் வரலாம்… இது இரண்டுமே நடக்கிறதை நான் விரும்பல” என்றான்

சிவசக்தி லேசாய் புன்னகைத்தபடி,

“நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா?” என்று கேட்டாள்.

“ம்… சொல்லு” என்று சக்தி செல்வன் நிமர்ந்து அவளை நோக்க,

“நீங்க இங்க தங்க போற நாட்களில் நீங்க நினைச்ச மாதிரி எனக்கு உங்க மேல காதல் வரலன்னா நீங்க மனசு கஷ்டப்படக் கூடாது… ஒகேவா” என்றாள்.

சக்திசெல்வன் உடனே புன்னகையோடு,

“அப்படி உனக்கு என் மேல காதல் வந்துட்டா மறுக்காம சொல்லிடனும் ஒகேவா” என்றான்.

சிவசக்தி அவனுக்குத் தான் புரிய வைப்பது சிரமம் என்ற தொனியில் தலையசைத்து விட்டு,

“நீங்க சாப்பிடுங்க… கீழே மரியக்கா தேடுவாங்க” என்று சொல்லிவிட்டு சிவசக்தி புறப்பட ‘ஏதாச்சும் சொன்னா உடனே ஓடிடுவா’ என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

சிவசக்தி அந்த அறையை விட்டு வெளியே போக அங்கே இருந்த சக்திசெல்வனுடைய பொருட்களோடு இருந்த டைரி அவளை அப்படியே அசையாமல் நிற்க வைத்தது.

சிவசக்தி அந்த டைரியை கவனிப்பதை சக்திசெல்வனும் கவனித்தான்.

சிவசக்தி டைரியை தன் கைகளில் எடுப்பதற்கு முன்பாக சக்திசெல்வன் ஒரெட்டில் அதனைத் தன் கையால் எடுத்துக் கொண்டான்.

“ஏய் அது என்னோட டைரிதானே ?” என்று சிவசக்தி கேட்க,

“ஆமாம்… இப்போ அதுக்கென்ன?” என்றான் சக்தி செல்வன்.

“அந்த டைரியை கொடுங்க” என்று சிவசக்தி கைகளை நீட்டிக் கொண்டு நின்றாள்.

“அதெல்லாம் கொடுக்க முடியாது… உன்னைக் கீழே மரியக்கா தேடுவாங்க போ” என்றான்.

“அது என்னோட டைரி” என்றாள் சிவசக்தி அடாவடியாய் நின்றபடி!

“அதெல்லாம் ரொம்ப நாளைக்கு முன்னாடி… இந்த டைரி எப்போ என் கைக்கு வந்ததோ அதுல இருந்து இது என்னோடது சக்தி… நீ கெஞ்சினாலும் சரி கோபப்பட்டாலும் சரி… கிடைக்காது” என்றான்.

“நீங்க பேசிறது நியாயமே இல்லை… என்னோட டைரியை எடுத்து வைச்சுகிட்டு… நீங்க எப்படிச் சொந்தம் கொண்டாடலாம்” என்றாள்.

“நீயும் சரி… உன் டைரியும் சரி… எனக்குச் சொந்தமானதுதான்… யாருக்காகவும் எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்கவே மாட்டேன்” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு சக்தி அப்படியே மலைத்தபடி நிற்க அவன் டைரியை தன் பேகில் வைத்து மூடினான்.

“நீங்க பேசிறது கொஞ்சம் கூடச் சரியில்லை… இடத்தைக் கொடுத்தா மடத்தைப் பிடிக்கிறீங்க” என்றாள் அதிர்ச்சியோடு!

“நான் உன்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கேன்னா… உன் மனசில என்ன இருக்கன்னு தெரியாம இல்ல ?” என்று அழுத்தமாய் சக்திசெல்வன் சொன்னான்.

சிவசக்தி சிரித்துவிட்டு,

“ரொம்பக் கற்பனை பண்ணாதீங்க மிஸ்டர்… எனக்கு உங்க மேல வெறுப்போ கோபமோ இல்ல… அட் தி சேம் டைம் அது காதலும் இல்லை… என் டைரியை நீங்க சொந்த கொண்டாடலும்… ஆனா என்னை முடியாது… நெவர்… கனவில கூட முடியாது…” என்றாள்.

“நான் இது வரைக்கும் முயற்சி செஞ்ச எதிலயுமே தோற்றதே இல்லை சக்தி” என்றான்

“ஓ… இஸ் இட்… அப்போ என் விஷயத்தில உங்க முதல் தோல்வியை நீங்க சந்திக்கப் போறீங்க மிஸ்டர். சக்தி” என்று சொல்லிவிட்டு விறுவிறுவெனச் சிவசக்தி அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

சக்திசெல்வனுக்கு அங்கே இருந்த உணவை உண்ண மனம் வராமல் சலிப்புடன் படுக்கையில் சாய்ந்தான். “நான் நினைச்சதை விடவும் உன் பிடிவாதம் ரொம்பவே அதிகமா இருக்கு சக்தி… இப்படியே நான் அமைதியா பேசிட்டிருந்தா சத்தியமா உனக்குப் புரியப் போறதில்லை… வேற மாதிரிதான் உன்னை டீல் பண்ணனும்” என்று தனக்குத்தானே சொல்லி கொண்டு தீவரமாய் சக்திசெல்வன் யோசிக்கலானான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content