vilakilla vithigal ‘AVAN’ – 14
14
சென்னை மாநகரின் மிகப் பிரபலமான தனியார் மருத்துவமனை!
வாயிலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரசியல் வெள்ளை வேட்டிகள் தலை!
முதலமைச்சர் அறிவழகன் உடல் நிலை சரியில்லாமல் அங்கே அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து இப்படி வெள்ளை வேட்டிகள் நிறைய அங்கே சுற்றி வருவது வழக்கமான ஒன்றாக மாறியிருந்தது.
காலை எட்டு மணி வரை எந்த பரபரப்பும் இல்லாமல் அந்த மருத்துவமனையின் உள்ளும் புறமும் இயங்கிக் கொண்டிருக்க, திடீரென்று கிருஷ்ணன் கடத்தப்பட்ட செய்தி தீபம் சேனல் மூலமாகக் காட்டுத் தீயாகப் பரவியதில் அங்கிருந்த வெள்ளை வேட்டிகள் தலை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போகத் தொடங்கின.
அனைவரும் என்னவோ ஏதோ என்ற பரபரப்போடு கட்சி அலுவலகத்தை நோக்கிப் படையெடுக்க, மருத்துவமனையின் உள்ளே தன் தமையனைக் கவனித்திருந்த மதியழகியும் மகனைக் கடத்திய செய்தியைக் கேட்டதில் மயங்கி சரிந்தார்.
இரத்த கொதிப்பு, சர்க்கரை என பல இத்யாதி இத்யாதி நோய்கள் அவர் உடலில் எக்கச்சக்கமாக வாசம் செய்ததில் அவர் எழுந்திருக்கும் நிலைமையிலும் இல்லை. அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியிருந்தனர்.
கிருஷ்ணன் அவருக்கு மிகவும் செல்ல மகன். இந்தளவாவது அவருக்கு அதிர்ச்சி இருக்கத்தானே வேண்டும். அதுவுமில்லாமல் அவருடன் இப்போது துணைக்கு சேஷாத்ரியும் முகுந்தனும் கூட இல்லை. அவர்களோ காணாமல் போன கிருஷ்ணனை தேடுவதில் மும்முரமாக இருந்தனர்.
அவர்கள் தங்கள் தேடல் படலத்தை ரகசியமாகச் செய்த போதும் அது செய்தி சேனல் வரை வந்திருப்பது நந்தினியின் திருவிளையாடல்தான் என்பதும் முகுந்தனுக்கு தெரிந்திருந்தது.
இங்கே இத்தகைய பதட்டமான சூழ்நிலையில் எப்போதும் ஞாயிற்றுக் கிழமைகளில் பத்து மணிக்கு மேல் சாவகாசமாக வரும் விஸ்வநாதன் அன்று வெகு விரைவாகவே வந்திருந்தார்.
அதோடு அவர் மருத்துவமனை சிசிடிவி கட்டுப்பாடுகள் உள்ள அலுவலகத்தின் ரகசிய அறையில் நுழைந்து சில குளறுபடிகளைச் செய்தார்.
பதிவாகும் முக்கிய கணினி இணைப்பைத் துண்டித்து அந்த அறையில் மின்கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிவது போல செய்துவிட்டு வெளியே வந்தார்.
சில நொடிகளில் தீ பற்றிய விஷயம் தெரிந்து மருத்துவமனை முழுவதும் களேபரமாகிப் போனது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு ‘பி’ ப்ளாக் வழியாக மருத்துவர் மற்றும் செவிலியர் மாறு வேடத்தில் நுழைந்த இருவர் மூன்றாம் தளம் நோக்கிச் சென்றனர்.
அந்த தளத்தில் அறிவழகனைத் தவிர வேறு எந்த நோயாளிகளையும் வைக்காததால் அங்கே பெரிதாக கூட்டமும் இல்லை.
அதேநேரம் பணியிலிருந்த இரண்டு செவிலியர்களை வேறு இடத்திற்கு அவசரமாக மாற்றினர். அங்கிருந்த மருத்துவர் ஒருவரை விஸ்வநாதன் அழைத்ததாக வந்த தகவலில் அவனும் அவ்விடம் விட்டு அகலவும் மாறுவேடத்திலிருந்த மருத்துவர் அங்கே வரவும் சரியாக இருந்தது.
பாதுகாப்பிலிருந்த இரண்டு காவலாளிகளில் ஒருவன் தீ பற்றிய செய்தி கேட்டு விரைந்துவிட ஒருவன் மட்டுமே அப்போது மிச்சமிருந்தான்.
நடக்கும் எதிலும் அந்த காக்கியின் கவனம் இல்லை. ரொம்பவும் ஆர்வமாக தன் கைப்பேசியில் அவர் மூழ்கியிருந்தார். சில நிமிட நேரங்களில் தீ அணைப்பான் உபகரணம் கொண்டு அந்த அறையில் பரவிய தீ அணைக்கப்பட்டதில் மருத்துவமனை இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. ஆனால் அவ்விடத்தில் ஏற்பட்ட சேதாரத்தில் சிசிடிவி காணொளிகள் எதுவும் அன்றைய நிகழ்வுகளை பதிவு செய்ய இயலாமல் ஸ்தம்பித்தன.
சரியாக அதேநேரம் மாறுவேடத்திலிருந்த இருவரும் ஸ்டரச்சருடன் தரைதளத்தில் அவர்களுக்காகக் காத்திருந்த அம்புலன்ஸ் வாகனத்தில் ஏறி விரைந்தனர். அந்த வாகனம் வெளியேறியதை அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக யாரும் கருதவும் இல்லை. கவனிக்கவும் இல்லை.
தன்னுடைய அறையின் ஜன்னல் வழியாக அக்காட்சியைப் பார்த்த டாக்டர் விஸ்வநாதனுக்கு நடக்க போகும் விளைவுகளை எண்ணி ஏசியின் குளுகுளு தன்மையிலும் உடல் முழுக்கவும் வியர்த்துக் கொட்டி நடுங்கியது.
“ப்ளேன் சக்ஸஸ்” என்ற ஒரு குறுந்தகவல் நந்தினியின் அந்த பழைய ரக பேசிக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் அதைப் பார்க்கும் சூழ்நிலையிலும் மனநிலையிலும் அவள் இல்லை. பாரதி இப்படி திடுதிப்பென்று கோபித்து கொண்டு வெளியேறுவான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“இந்த விஷயத்தை நீ முன்னாடியே சொல்லி இருந்தன்னா நான் இங்கே தங்கணும்னு யோசிச்சிருக்க கூட மாட்டேன்” என்று அவன் உக்கிரமாக,
“பாரதி தயவு செய்து நான் சொல்றதை கேளு” என்றவள் பேச ஆரம்பிக்கும் போதே அவளை கை காட்டி நிறுத்தியவன்,
“வேண்டாம் நந்தினி…. இத்தனை நாளா நீ யாரோ நான் யாரோவா இருந்தும்… இனிமேவும் அப்படியே இருப்போம்… நீங்க… உங்க குடும்ப… உங்க உறவு எதுவும் எனக்கு வேண்டாம்” என்றவன் பிடிவாதமாகக் கூறியதில் அவளால் எதுவுமே பேச முடியவில்லை.
“எனக்கு என்னை பார்த்துக்க தெரியும்… உன் தயவும் பாதுகாப்பும் எனக்கு வேண்டாம்… ப்ளீஸ் என்னை விட்டுடு”
“உன் ஆளுங்களை கூப்பிட்டு என்னை தடுக்கனும்னு முயற்சி செஞ்சன்னா… நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்று எச்சரித்துவிட்டுச் சென்றான்.
நந்தினி காவலாளிகள் யாரிடமும் அவனைத் தடுக்க வேண்டாமென்று கண்ணசைத்துச் சொல்லிய போதும் பாதுகாவலர்கள் இருவரிடம் மட்டும் அவனைப் பின்தொடரும்படி சமிஞ்சை செய்தாள்.
அவன் கேட்டை தாண்டி வெளியேறிய நொடிகளில் அவள் உடைந்து அமர்ந்தாள். கத்தி அழ வேண்டும் போலிருந்தது.
அவன் மீது கொண்டிருந்த காதல் அவளைப் பலவீனமாக்கியது.
எத்தனையோ பிரச்சனைகளைத் தைரியமாக எதிர்கொண்ட அவள் மனம் அவன் விஷயத்தில் மட்டும் எளிதாக உடைந்து விடும் கண்ணாடிகளாகச் சிதறிவிடுகின்றன.
அவனைப் புரிந்து கொள்ள அவள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெறும் பூஜ்ஜியத்தின் அளவில்தான் நின்றது.
நேரங்கள் கடந்து செல்ல அவள் மனம் சமன்ப்பட தொடங்கியதும், ‘பாரதி எங்கே?’ என்று கேட்டு தம் பாதுகாவலர்களுக்கு ஒரு குறுந்தகவலை தட்டிவிட்டாள்.
“இங்கதான் மேடம்… பக்கத்துல இருக்க மீனவ குப்பத்துல கடலை பார்த்துட்டு தனியா உட்கார்ந்திட்டு இருக்காரு” என்றவன் தகவல் சொன்னதுதான் தாமதம்.
கார் சாவியை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தன் நீலாங்கரை பங்களாவை விட்டு வெளியேறியவள், மீன் பிடி கப்பல்கள் நிறைந்த அந்த கடற்கரை மணலில் ஓட முடியாமல் ஓடி அவன் அருகில் சென்று நின்றாள்.
“பாரதி எழுந்திரு… வா வீட்டுக்கு போலாம்” என்றவள் அவன் கையை பிடித்து இழுக்கச் சற்றே திடுக்கிட்டவன்,
‘இவளுக்கு என்ன பைத்தியமா?’ என்று எண்ணி தலையிடித்து கொண்டதோடு,
“இங்கேயும் வந்துட்டியா? என்னை நிம்மதியா இருக்கவே விட மாட்டியா?” என்று கடுப்பானான்.
“விட மாட்டேன்” என்று தடாலடியாகப் பதில் கூறியவள்,
“இங்கே நான் உன்னை நினைச்சு நினைச்சு நிம்மதியில்லாம தவிச்சிட்டு இருக்கேன்… உனக்கு மட்டும் நிம்மிதியா இருக்கணுமோ… அப்படி எல்லாம் உன்னை நிம்மதியா என்னால விட முடியாது… நீ என் கூட வந்துதான் ஆகணும்” என்றவள் கறாராகப் பேச அவனுக்கு எரிச்சலானது.
“வர முடியாது போடி” என்றவன் கடுகடுத்துவிட்டு எழுந்து செல்ல,
“இப்ப எங்க போக போற நீ… கையில ஒரு ரூபாய் காசு இருக்கா… இல்ல ஒரு செல்போனாச்சும் இருக்கா… சரி அதை கூட விடு… போக போக்கிடமாச்சும் இருக்காடா உனக்கு?” என்றவள் கேட்ட தொனியில் அவனுக்கு பற்றி கொண்டு வந்தது.
“பிச்சை எடுக்குறேன்… இல்ல எங்கேயோ போய் சாகுறேன்? உனக்கென்னடி?” என்றவன் வெடிக்க,
“ஏன் எங்கேயோ போய் சாகுற? இந்தா பெரிய கடல் இருக்கு இல்ல… போய் குதி… சாவு” என்று அலட்சியமாக கடலை காட்டி சொன்னவளை உஷ்ணமாகப் பார்த்தான்.
“சும்மா முறைக்காதே… சாகனும்னு முடிவெடுத்துட்டா… இப்பவே செத்துடு… ஏன் னா இனிமே நீ வாழ போற ஒவ்வொரு நாளும் உனக்கு நரகமாகத்தான் இருக்கும்…
நீ ஜெயில வாழ்ந்த வாழ்க்கை எல்லாம் ஒன்னுமே இல்ல… ஒரு வகையில நீ ஜெயில இருந்ததால இத்தனை நாள் நீ தப்பிச்சுக்கிட்ட… இல்லாட்டி எப்பவோ உன்னை கொன்னு அடையாளம் தெரியாம சிதைச்சு இருப்பானுங்க… பிணம் தின்னி பசங்க“ என்று பொருமியவளைக் குழப்பமாக நோக்கியவன்,
“யார் என்னை கொலை பண்ண முயற்சி பண்றாங்க? முதல அதை சொல்லு” என்றான்.
“ஹ்ம்ம்… கல்வி அமைச்சர் முகுந்தன்” என்றவள் சொன்ன நொடி அவன் அதிர்ந்து நிற்க அவள் மேலும்,
“அவன் உன்னை மட்டும் இல்ல… உங்க அம்மாவை ஏன்? துர்காவை கொன்னது கூட அவன்தான்” என்று சொல்லி அவன் தலையில் இடியை இறக்கினாள்.
“உண்மையாவா சொல்ற?” என்றவன் குழம்பி நிற்க, “பின்ன” என்று கை கட்டி நின்று அவனை பார்த்தவளிடம், “நீ சொல்றதை என்னால நம்ப முடியல” என்றான்.
“நம்பறதும் நம்பாததும் உன் இஷ்டம்… சொல்லணும்னு தோனுச்சு சொல்லிட்டேன்” என்று அலட்சியமாக உரைத்தவள்,
“உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லன்னு நீ சொல்லலாம்… ஆனா எனக்கும் என் அத்தைக்கும் இருக்க உறவை என்னால விட்டு கொடுக்க முடியாது… அவங்க எனக்கு அத்தை மட்டும் இல்ல… அவங்கதான் எனக்கு எல்லாமே…
அந்த நன்றிக்காகதான் உன்னை அவன்கிட்ட இருந்து காப்பாத்தணும்னு நான் போராடிட்டு இருக்கேன்… மத்தபடி நான் உன் மேல வைச்சிருந்த காதல் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா எல்லாம் நீ துர்கான்னு ஒருத்தியை காதலிக்கிறன்னு போதே உடைஞ்சு நொறுங்கி போச்சு” என்றவள் சொன்னதை கேட்ட நொடி,
“திரும்ப திரும்ப இப்படி எதாவது சொல்லி என் உணர்ச்சியோட விளையாடி பார்க்காதே… எனக்கு நீ சொல்றது எதுவும் நம்பற மாதிரி இல்ல… அப்படியே நீ சொல்றது உண்மைன்னாலும் அதை நானே விசாரிச்சு தெரிஞ்சிக்கிறேன்” என்றவன் முடிவாக அவ்விடம்விட்டு நகர்ந்தான்.
அவனுக்கு இருக்கும் ஆபத்தை எப்படிப் புரிய வைப்பதென்ற இயலாமையோடு குழம்பிக் கொண்டு அவள் நின்றிருக்கும் தருவாயில் அவளின் செல்பேசி சிணுங்க, அதிலிருந்த தன்னுடைய பாதுகாவலனின் குறுந்தகவலை பார்த்து அவள் அதிர்ந்து திரும்பினாள்.
தூரத்தில் பத்து பேர் கொண்ட கும்பலுடன் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
‘இங்கிருந்து போயிடுங்க மேடம்’ என்று ஒருவன் அவளிடம் கையசைவால் சிக்னல் காட்டினான்.
அந்த ரௌடி கும்பலின் கைகளிலிருந்த அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்களைப் பார்த்த நொடி அவள் சுதாரித்துக் கொண்டாள்.
அதேசமயம் அந்த முரட்டுக் கும்பலைச் சமாளிக்க இயலாமல் அவளது பாதுகாவலரில் ஒருவன் காயத்தோடு தரையில் சரிய அவள் பதறிப் போனாள்.
“பாரதி பாரதி” என்று கத்திக் கொண்டே அவள் ஓட, அவன் அவள் குரல் கேட்டும் கண்டும் காணாமல் நடந்தான்.
அவள் மூச்சு வாங்கிக் கொண்டே ஓடி வந்து அவன் கரத்தை பற்றி, “பாரதி பின்னாடி ரௌடி பசங்க வராங்க… வா சீக்கிரம்” என்றாள்.
திரும்பிப் பார்த்தவன் அவளையும் அந்த கும்பலையும் குழப்பமாக பார்த்து கொண்டு நிற்க,
“ஐயோ! பாரதி… நின்னு யோசிக்க எல்லாம் நேரம் இல்ல… வா” என்று அவன் கையை பிடித்து இழுத்து கொண்டு ஓட, அவளின் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டி அவன் பாதங்களும் அனிச்சை செயலாக அவளுடன் ஓடியது.
“என் கையை விடுறி” என்றவன் கதறியதை அவள் கேட்டதாகக் கூட தெரியவில்லை.
அவள் அவனை தன் காரருகில் இழுத்து வந்து கதவைத் திறந்து,
“ஏறு பாரதி” என்றதும் அவளை முறைத்தவன்,
“நான் உன் கூட வரமாட்டேன்” என்க,
”பாரதி… நாம முதல இந்த பிரச்சனையிலிருந்து தப்பிப்போம்… அப்புறம் அதைப் பத்தி பேசிக்கலாம்” என்ற போதும் அவன் தயங்கினான்.
அந்த கும்பல் அவர்களை நோக்கி மிகத் துரிதமாக நெருங்கி வருவதைப் பார்த்து, “பாரதி ப்ளீஸ்ஸ்ஸ்” என்று அவள் கெஞ்சிய போதும் அவன் அசைந்து கொடுக்கவில்லை.
“அவங்க என்னை கொன்னுடுவாங்க ன்னா அதைச் செஞ்சிட்டு போகட்டும்… உன் வேலையை பார்த்துட்டு போடி” என்று அவன் அலட்டிக் கொள்ளாமல் சொல்லிவிட்டுத் திரும்பி நடக்கும் போதே அந்த கும்பல் அவர்களை நெருங்கியது.
நந்தினி அவர்களை பாரதியிடம் செல்லவிடாமல் மறித்து நின்று, “உங்களுக்கு எவ்வளவு பணம் வேணாலும் தரேன்… பாரதியை விட்டுடுங்க ப்ளீஸ்” என்று வேண்டினாள்.
“பாரதியா… அது யாரு? எங்களுக்கு அவன் எல்லாம் வேண்டாம்… நீதான் வேணும்… கிளம்பு… நீயா வர்றியா… இல்ல உன்னை கட்டி தூக்கிட்டுப் போகவா” என்று நொடியில் அந்த கும்பலின் தலைவன் நந்தினியின் கழுத்தில் கத்தியை வைத்திருந்தான்.
Nice update