You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic thriller

Vilakilla vithigal ‘AVAN’- 18

18

டில்லியிலிருந்து முகுந்தன் சென்னை வந்து சேர்ந்திருந்தான். பாதுகாப்புப் படைச் சூழ அவன் வந்திறங்கியதில் சென்னை விமான நிலையமே உச்சபட்ச பரபரப்பை எட்டியிருந்தது.

அந்த நடுநிசி வேளையிலும் கேமராக்களும் மீடியாக்களும் புற்றீசல் போல அவனைச் சூழ்ந்து கொண்டன. அவன் தம்பி கிருஷ் கடத்தப்பட்ட செய்திதான் தற்சமயம் அனைத்து மீடியாக்களின் ஹாட் டாபிக்!

அவனிருந்த மனநிலைக்கு அவர்கள் எல்லோரையும் விலக்கித் தள்ளிவிட்டு ஓடிவிட வேண்டுமென்று  தோன்றினாலும் தன்னுடைய அரசியல் இமேஜை கருத்தில் கொண்டு,

“என்னுடைய தம்பி கிருஷ்ணன் கடத்தப்படல… அது ஒரு தவறான செய்தி” என்றவன் அவர்களுக்குப் பொறுமையாக எடுத்துரைத்து அந்த சர்ச்சைக்கு ஒருவாறு முற்றுப்புள்ளி வைத்துவிட எண்ணினான்.

“கடத்தப்பட்ட செய்தி பொய்யின்னா நீங்க அதை முதலேயே அறிவிச்சு இருக்கலாமே” என்று ஒரு சேனல்காரன் கேட்க,

“தம்பி கடத்தபடலன்னா அப்போ நீங்க அவசரம் அவசரமா டில்லிக்கு எதுக்கு போனீங்க?”

“டில்லிக்கு போய் நீங்க துணை பிரதமரை சந்திச்சிட்டு வந்தீங்களாமே… அப்படியா?” என்று அடுத்தடுத்தவர்கள் நூல் பிடித்து கேள்விகளை அடுக்க, முகுந்தனின் முகம் இறுகியது.

“எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லிட்டிருக்க முடியாதுங்க… நிறைய முக்கிய பணிகள்” என்று கடுப்பான மறுகணம்  தன் பாதுகாப்புப் படையினரை அவன் ஒரு பார்வை பார்த்தான்.

அடுத்த நொடி பத்திரிக்கை கூட்டங்கள் கலைக்கப்பட்டு அவன் புறப்பட வழி செய்தனர்.

காரில் ஏறி அமர்ந்தவனின் முகத்தில் வெறி… கோபம்… கொந்தளிப்பு…

சிம்லாவிலுள்ள மருத்துவமனையில் கிருஷ்ணனை பார்த்ததிலிருந்து தீப்பிழம்பாக அவன் உள்ளம் திகுதிகுவென எரியத் துவங்கியது.

அவனுக்கு தம்பி கிடைத்துவிட்ட சந்தோஷமெல்லாம் துளி கூட இல்லை. எரிச்சலும் கோபமும்தான்!

தன்னை இப்படி சுற்றலில் விட்டுவிட்டானே என்ற கடுப்பில் முகுந்தனின் கிருஷ்ணனை அடிக்க கை ஓங்க,  

 “இந்த அடிக்குற வேலை எல்லாம் வேண்டாம் ண்ணா” என்று எடுத்தெறிந்து பேசி அவன் கையை விலக்கித் தள்ளினான்.

“நீ செஞ்ச காரியத்துக்கு உன்னை அடிக்காம கொஞ்சுவாங்களா டா?”

“அப்படி என்ன இப்போ நான் செஞ்சுட்டேன்”

“என்ன செஞ்சுட்டியா? டூர் வந்தவன் ஊரை சுத்திட்டு வீட்டுக்கு வந்து சேர்றதை விட்டு ஒரு பொண்ணை பார்த்த்தும் ஈஈன்னு இளிச்சுட்டு அவ எவளோ அவ பின்னாடி போயிட்ட… நம்ம குடும்ப கௌரவம் மானம் இதைப் பத்தி எல்லாம் கொஞ்சம் கூட கவலை இல்லையா உனக்கு” என்று அவன் சரமாரியாக திட்ட,

“இவர் ரொம்ப ஒழுங்கு…  நம்மல சொல்ல வந்துட்டாரு” என்று கிருஷ்ணன் வாயிற்குள் முனக,

“இப்ப என்னடா சொன்ன? சத்தமா சொல்லு” என்று முகுந்தன் சீறினான்.

“நீ மட்டும் ஒழுங்கான்னு கேட்டேன்… அண்ணி இருக்கும் போதே ஒரு ஐட்டத்தை தனியா செட் டப் பண்ணி வைச்சு இருக்கவன்தானே நீ” என்றான்.

முகுந்தன் அதிர்ந்து நின்றுவிட்டான். கிருஷ்ணன் அவனை விட மூன்று வயது இளையவன். சிறுவயதிலிருந்து அவனை அதட்டி உருட்டி முகுந்தன் மிரட்டியே வைத்திருந்ததால் கிருஷ்ணனுக்கு அண்ணன் மீது பாசத்தை விட பயம் அதிகம் இருந்தது.

பெரும்பாலும் தனக்குக் கீழ்தான் யாராக இருந்தாலும் என்பது முகுந்தனின் எண்ணம். தம்பி இப்படி எடுத்தெறிந்து பேசுவது முகுந்தனுக்கு ரொம்பவும் விசித்திரமாக இருந்தது.

“என்னடா ரொம்ப ஓவரா பேசற? யார் கொடுத்த தைரியம்?” என்றவன் அவனை முறைத்துப் பார்த்து,

“உன்னை தேடி பைத்தியக்காரன் மாதிரி எங்கெல்லாம் அலைஞ்சு திரிஞ்சிட்டு வரேன் தெரியுமாடா” என்றான். 

“உன்னை யார் தேட சொன்னது… நான் எங்கே போயிட்டேன்” என்றவன் மீண்டும் எடுத்தெறிந்து பேச, முகுந்தனின் முகம் வாடிவிட்டது. இப்படியெல்லாம் பேசும் ரகம் இல்லையே. அவனுக்கு குழப்பமாக இருந்தது.

“நீ ஏன் இப்படி பேசறன்னு எனக்கு புரியல… ஆனா இங்கே என்னவெல்லாம் நடக்குதுன்னு தெரியுமாடா உனக்கு… அந்த நந்தினி என்னவெல்லாம் செஞ்சு வைச்சு இருக்கா தெரியுமா? நம்ம தீபம் சேனலோட மெஜாரிட்டி ஷார்ஸ் அவ பேருக்கு மாத்திக்கிட்டா? அதுவும் உன் ஷாரையும் சேர்த்து” என்றவன் பரபரப்பாகச் சொல்லிக் கொண்டிருக்க,  கிருஷ்ணன் அமைதியாகக் கேட்டிருந்தான். அவனிடம் எந்தவித படபடப்பும் இல்லை. அதிர்ச்சியும் இல்லை.

“என்னடா? நான் இவ்வளவு பெரிய விஷயம் சொல்லிட்டு இருக்கேன்… நீ எந்த ரியாக்ஷனும் இல்லாம இருக்க… அப்போ உன் ஷார் அவ பேருக்கு மாத்தினது” என்றவன் சந்தேகமாக இழுத்து,

“அப்போ உனக்கு தெரிஞ்சுதான்” என்று முகுந்தன் கூர்மையாகப் பார்க்க,

அவன் தலையை கவிழ்ந்து கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான்.  

“டேய் சொல்லுடா” என்றவன் சட்டையை இழுத்து பிடிக்க,

“கையை எடு அண்ணா… இப்ப என்ன? என் பேர்ல இருந்த ஷாரைதானே எழுதி கொடுத்தேன்” என்று அவன் சாதாரணமாகச் சொன்னதில் முகுந்தன் ஷாக்கடித்தது போல நின்றுவிட்டான்.

கிருஷ்ணன் மேலும் தொடர்ந்தான்.

“நான்தான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னேன் இல்ல… என் பிரெண்டோட  அண்ணன் டிரைக்டர்… என்னை ஹீரோவை வைச்சு படம் பண்றன்னு சொன்னாருன்னு ப்ரொடக்ஷனுக்கு பணம் கேட்டேனே… நீ கொடுத்தியா? நான் கேட்ட பணத்தை அக்காதான் கொடுத்தாங்க… அதான் அவங்க கேட்டதை நான் செஞ்சேன்” என்ற நொடி முகுந்தனின் கோபம் உச்சத்திலேறியது.

“அக்காவுக்கு கொடுத்தியா? அடிங்க உன்னை” என்று அவனை அடிக்க எகிறி கொண்டு வந்த சமயத்தில் பதட்டமாக உள்ளே நுழைந்த சேஷாத்ரி மகனை தடுத்துவிட்டார்.

“அவனே தலையில அடிப்பட்டு இருக்கான்… அவனை போய் அடிக்க போற” என்றவர் முகுந்தனை கண்டிக்க,

“அவன் என்ன பண்ணி வைச்சு இருக்கான் தெரியுமா ப்பா?” என்றவன் நடந்ததை ஒப்புவிக்க சேஷாத்ரி கிருஷ்ணனை முறைத்து பார்த்தார். அவனோ தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது போல அலட்சியமாக முகத்தை திருப்பிக் கொண்டிருந்தான்.

“அவளுக்கு ஷாரை எழுதி கொடுத்தது கூட பரவாயில்ல…  ஆனா அவளை போய் அக்கான்னு” என்று பொறுமியபடி தன் கை முஷ்டிகளை இறுக்க, சேஷாத்ரி அவனை அந்த அறையின் ஓரமாக இழுத்து வந்தார்.

“அவனை அப்புறம் பார்த்துக்கலாம் முகுந்த்…  இப்போ அதை விட பெரிய பிரச்சனை ஒன்னு நடந்திருக்கு” என்று படபடப்பாக சொல்ல அவன் குழப்பமாக அவரை ஏறிட்டான்.

“என்ன பிரச்சனை?”

“உங்க மாமாவை ஹாஸ்பெட்டில இருந்து கடத்திட்டாங்க” என்றவர் சொன்னதுதான் தாமதம். அவன் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

“என்ன.. ன்ன ப்பா சொல்றீங்க?” வார்த்தைகள் வராமல் அவன் தடுமாற,

“நிஜாமாதான்… இப்பதான் விஷயம் தெரிஞ்சுது” என்றார்.

“எப்படி ப்பா… எப்படி… டாக்டர் விஸ்வநாதன்கிட்ட பேசுனீங்களா?” என்றவன் பதட்டமாக,

“இல்ல” என்று முகத்தை தொங்க போட்டவர், “இன்னைக்கு மதியம் டாக்டர் அவரோட கேபின்ல தற்கொலை பண்ணிக்கிட்டாருன்னு இப்பதான் நியூஸ் வந்துது” என்று சொல்லி முடிக்க, முகுந்தனுக்குப் பேச்சே வரவில்லை.

தலை முடியை அழுத்தி கோதியவன் முகத்தில் இரத்தம் வற்றி போனது.

“நந்தினிஈஈஈ” என்று சீற்றமாக அவள் பெயரை உச்சரிக்க,

“அவசரப்படாதே முகுந்த்… பொறுமையாதான் இந்த விஷயத்தை டீல் பண்ணணும்… அவ ரொம்ப புத்திசாலித்தனமா நம்ம எல்லோரையும் டைவர்ட் பண்ணி இப்படி ஒரு வேலையை செஞ்சு முடிச்சு இருக்கா” என்று தன் தந்தை சொன்னதை கேட்டு முறைப்பாக பாரத்த முகுந்தன்,

“அவளை அப்பவே கொன்னு புதைச்சிருந்தா… இப்ப நமக்கு இந்த டென்ஷன் இருந்திருக்காது இல்ல” என்று உறுமினான்.

“இப்ப அதெல்லாம் பேசி ஒன்னும் ஆக போறதில்ல… நீ உடனே சென்னைக்கு போ… நந்தினிக்கிட்ட பேசு… அவளுக்கு என்னதான் வேணும்னு கேளு” என்று அவர் சொன்ன நொடி எரிப்பது போல அவரை நோக்க,

“இப்போ என்னால அங்கே வர முடியாது… நீதான் போகணும்… புரிஞ்சிக்கோ” என்றார்.

சில நொடிகள் அமைதியாக யோசித்தவன், “சரி… நான் பார்த்துக்கிறேன்” என்று புறப்பட்டவன் தம்பியை தீவிரமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அகன்றான்.

“கொஞ்சம் பொறுமையா டீல் பண்ணு… அவசரப்படாதே” என்று மகனுடன் வாசல் வரை சென்று அவனுக்கு அறிவுரை கூறி வழியனுப்பி வைத்தார் சேஷாத்ரி.  

 காலையிலிருந்து நிறுத்தாமல் ஓடும் இந்த ஓட்டத்தில் அவனுக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது.

பொறுமையாக நடந்தவற்றை அனைத்தையும் யோசித்துப் பார்த்தான்.

தன்னுடைய தம்பி, மனைவி என்று எல்லோரையும் அவனுக்கு எதிராகத் திருப்பி இருக்கிறாள். அவர்களின் பலவீனத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டிருக்கிறாள்.

 மேலும் டாக்டர் விஸ்வநாதன், அமைச்சர் வேதநாயகம் என்று பெரும் புள்ளிகளைத் தற்கொலை செய்யுமளவுக்குத் தூண்டியவள், ஒரு மாநில முதலமைச்சரை கடத்தியிருக்கிறாள்.

‘மாஸ்டர் ப்ளான்’ 

அவள் திட்டமிட்டு ஒவ்வொன்றையும் நடத்தியிருக்க்கிறாள்.

அடிப்பட்ட புலி வஞ்சம் தீர்ப்பதைப் போல துரத்தித் துரத்தி வேட்டையாடுகிறாள். அவளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அவன் திக்கித் திணறுகிறான்.

இத்தனை குழப்பங்களுக்கு இடையில் அவன் மூளையின் ஓரத்தில் மின்னலடித்தது போல ஒரு ஒளி.

பாரதி. நந்தினியின் ஒரே பலவீனம். மாயமந்திர கதைகளில் வருவது போல அவளின் உயிர் அவன் உயிர் கூட்டிற்குள் ஒளிந்திருந்தது. 

ஆனால் நிலைமைக்கு மாறாய் பாரதியின் உயிர் வேறொருவளிடம் இருந்ததே!

துர்கா… அவன் நினைவுகள் முழுக்க அவள் மட்டுமே ஆக்கிரமித்திருந்தாள். அவனை பொறுத்தவரை அவள் கள்ளங்கபடமில்லா குழந்தை போலத்தான். அவள் தனக்குத் துரோகம் செய்தாள் என்று சொன்னால் எப்படி நம்ப முடியும்.

நிச்சயம் முடியாது. யார் சொன்னாலும் அதனை அவனால் நம்பவும் முடியாது. ஏற்கவும் முடியாது.

எதிர்பாராத அதிர்ச்சியாக ஏற்பட்ட அவன் அம்மா வித்யா மரணித்தது அவனை நிலைகுலையச் செய்துவிட்டது.    

ஒரே நாளில் எல்லாமே முடிந்துவிட்டது. பள்ளியிலிருந்து வந்தவர்கள் அக்கம்பக்கத்தினர்  என்று இறப்பிற்கு  வந்தவர்கள் எல்லாம்  களைந்து செல்ல அவன் நண்பர்களும் தியாகுவும் மட்டுமே அவனுடன் நின்றனர்.    

“நீ இங்க இருக்க வேண்டாம்… வா நம்ம வீட்டுக்கு போலாம்” என்று ஜமால் அவன் கரத்தை பற்றி அழைக்க,

“நான் பாரதியோட இங்க இருக்கேன்… நீங்கெல்லாம் கிளம்புங்க” என்று தியாகு கூற அவன் அமைதியாக அவர்கள் முகத்தை நிமிர்ந்து பார்த்தவன்,

“எனக்கு ஒன்னும் இல்ல… நான் பார்த்துக்கிறேன்… நீங்கெல்லாம் கிளம்புங்க” என்றான்.

அப்போதும் அவர்கள் அவனை விட்டு செல்ல தயங்கிய போதும் பாரதி அவர்கள் எல்லோரையும் வலிந்து அனுப்பிவிட்டான்.

இப்படியொரு நாள் தன் மகன் வாழ்வில் வருமென்று முன்னமே வித்யா கணித்திருந்தார்.

“ஒரு வேளை நான் இல்லாம போயிட்டா நீ என்ன பண்ணுவ பாரதி” என்றவர் வினவிய போது,

“என்ன ம்மா பேசுறீங்க? இப்படியெல்லாம் எப்பவுமே பேசாதீங்க” என்றவன் கோபித்து கொண்டான்.

“நெருப்புன்னு சொன்னா வாய் சுட்டுடுமா? அப்படியெல்லாம் இல்லடா… ஆனா நடக்க போற விஷயங்களை யாரும் மாத்த முடியாது… எது எப்போ நடக்கும்னு யாருக்கும் தெரியாது…

ஒரு வேளை நான் சொன்னது நடந்தா… நீ நான் இல்லன்னு அழுது வடிஞ்சுட்டு எல்லாம் இருக்க கூடாது… அடுத்த என்னன்னு உன் வாழ்க்கை லட்சியத்தை நோக்கி முன்னேறனும்… எல்லாத்தையும் கடந்து போகனும்” என்று வித்யா முன்னமொரு முறை அவனிடம் சொன்னது அவன் நினைவுக்கு வர,  தன்னை தைரியப்படுத்தி கொண்டான்.

அவன் என்றுமே தன் தேவைக்கும் வேலைக்கும் யாரையும் சார்ந்ததில்லை. வித்யா அவனை அப்படிதான் வளர்த்திருந்தார். ஆதலால் அவன் அந்த தனிமையை ஒருவாறு பழக்கிக் கொண்டான்.

வித்யாவின் மரணத்தில் அவன் மட்டும் அல்ல. அவர்கள் காலனியே மொத்தமாக சோகத்தில் மூழ்கி போயிருந்தது.

ஒரு வாரம் கழித்து மெல்லச் சூழ்நிலை மாறியது. பாரதியும் ஒருவாறு அந்த சோகத்திலிருந்து தன்னை மீட்டுக் கொண்டு அன்று மாலை எப்போதும் போல் கச்சேரிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்த போது அவன் வீட்டு வாயிலில் வந்து நின்ற அந்த புது நபர், “நீங்க பாரதிதானே” என்று வினவும்,

“ஆமா… நீங்க யாரு?” என்று கேட்டான்.

“நான் சி எம்மோட பெர்சனல் செகரெட்டரி” என்று உரைத்த நொடி அவன் புருவங்கள் நெரிந்தன.

“உள்ளே வரலாமா?” என்றவர் யோசனையாக அவனை பார்க்கவும்,

“வாங்க” என்று அவரை உள்ளே அழைத்து அமர வைத்தான்.

“ஐயா உங்களை பார்க்கனும்னு சொன்னாரு… நீங்க இப்ப என் கூட வர முடியுமா?” என்றவர் கேட்க,

“சாரி… எனக்கு இப்போ ஒரு கச்சேரி இருக்கு போகணும்” என்றவன் கூறிவிட்டு புறப்பட ஆயத்தமானான்.

அவனை குழப்பமாக பார்த்தவர் பின் மெல்ல, “சரி இன்னைக்கு முடியாதுன்னா நாளைக்காச்சும்” என்று அவர் இழுக்க,

“சாரி சார்… முடியாது… இப்ப இல்ல எப்பவுமே அவரை நான் பார்க்க விருப்பப்படல… நீங்க கிளம்புங்க” என்றவன் முடிவாக சொல்லிவிட அவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

“இல்ல தம்பி… ஐயா உங்களை பார்த்து பேசணும்னு” என்றவர் அவனுக்கு புரிய வைக்க முற்பட,

“கிளம்புங்க சார்… எனக்கும் வெளிய போற வேலை இருக்கு… நான் புறப்படணும்” என்று சொல்லி அவருக்கு பேசவும் வாய்ப்பு கொடுக்காமல் துரத்திவிட்டான்.  

அதற்கு பிறகும் கூட அவனைத் தேடி அவர் இரண்டொரு முறை தூது வந்தார். ஆனாலும் அவர் சொல்லும் எதற்கும் அவன் துளியும் செவி சாய்க்கவில்லை.

மனைவியின் இறப்பிற்குக் கூட வராமல் சாவகாசமாக ஒரு வாரம் கழித்து மகனுக்கு தூது அனுப்பும் மனிதரை எந்த வகையில் சேர்ப்பது.

இப்படியொருவரை  தன்னுடைய அப்பா என்று யோசிக்க கூட அவனுக்கு அருவருப்பாக இருந்தது. எந்நிலையிலும் அவரை பார்ப்பதை கூட அவன் விரும்பவில்லை. 

நாட்கள் மெல்ல நகர்ந்தது. இருப்பினும் வித்யாவின் இழப்பிலிருந்து அத்தனை சுலபமாக யாராலும் மீண்டு வர முடியவில்லை.

துக்கத்தின் சாயல் அவர்கள் காலனி முழுக்கவும் படிந்திருந்தது.

அன்று வசுமதிக்குப் பிறந்த நாள். அவள் சோகமாய் படுத்திருந்ததைப் பார்த்து பாரதிதான் அவளை வற்புறுத்தி இனிப்புகளை வாங்கி தந்து காலனி முழுக்க அவளைக் கொடுக்கவும் சொன்னான். அவளும் அவன் வார்த்தைகள் தட்டாமல் அனைவருக்கும் இனிப்பு தந்தவள்

“அண்ணா… துர்காவுக்கும் ஸ்வீட்ஸ் எடுத்துட்டு போய் கொடுக்கலாமா?” என்று கேட்க, அவன் அமைதியானான்.

 துர்காவை காப்பகத்தில் சேர்த்து ஒரு மாதம் கழித்து அவன் வித்யாவிடம், “துர்காவை போய் நம்ம பார்த்துவிட்டு வரலாமா ம்மா” என்று கேட்ட போது,

“நானே நினைச்சேன் பாரதி… போய் பார்த்துட்டு வரணும்னு… ஆனா நான் மட்டும் போயிட்டு வரேன்… நீ என்கூட வர வேண்டாம்” என்றார்.

“ஏன் ம்மா?”

“இல்ல டா… அந்த பொண்ணுக்கு உன் மேல ஒரு மாதிரி ஈர்ப்பு இருக்கு… என்னத்த சொல்ல… அவ வயசு அந்த மாதிரி… அப்படியிருக்கும் போது நீ அவளை வந்து பார்த்தா அவ மனசுல உன் மேல் இருக்க விருப்பம் இன்னும் அதிகமாகலாம்” என்று அவர் கூறியதை அவனுக்கு இப்போது நினைவுக்கு வந்தது.  

துர்காவைப் பார்க்க வேண்டுமென்று வசுமதி அவனிடம் ரொம்பவும்` இறங்கிக் கேட்க, அவன் மறுக்க மனமில்லாமல் அந்த காப்பகத்திற்கு அவளை அழைத்துச் சென்றான். 

ஆனால் காப்பகத்தின் பெண் நிர்வாகி துர்காவைப் பார்க்க அவர்களை அனுமதிக்கவில்லை.

“இப்படி எல்லாம் கண்ட நேரத்துல எல்லாம் காப்பகத்துல இருக்க பொண்ணை பார்க்க அனுமதிக்க முடியாது” என்றவர் கறாராக கூற,

“இல்ல மேடம்… எங்க அம்மாதான் துர்காவை இந்த காப்பகத்துல சேர்த்ததே” என்றான்.

“இருக்கட்டுமே… நீங்க அந்த பொண்ணுக்கு எந்த வகையிலாவது சொந்தமா?” என்றவர் கேட்ட கேள்விக்கு அவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. 

“வசுமதியை மட்டுமாச்சும் துர்காவை பார்க்க அனுமதிங்க மேடம்… பிறந்த நாளுக்கு ஸ்வீட் கொடுக்கணும்னு வந்திருக்கா” என்றவன் அப்படியாவது துர்காவை பார்க்க அனுமதிப்பார்களா என்று கேட்டு பார்த்தான். ஆனால் அந்த பெண்மணி கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை.

வசுமதி முகத்தை தொங்க போட்டு கொண்டு வருத்தமாக  வருவதை பார்த்து, “கவலைப்படாதே வசு… துர்காவை பார்க்க வேறதாச்சும் வழில ட்ரை பண்ணலாம்… இந்த மாதிரி காப்பகத்துல இப்படி ஸ்ட்ரிக்டாதான் இருப்பாங்க” என்றவன் சொன்னதைக் கேட்டு வசுமதி சமாதானமானதாக தெரியவில்லை.

வீட்டிற்கு வரும் வரை கூட அவள் வருத்தமாகவே இருந்தாள். அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்றவன் யோசித்திருக்கும் போது அவன் கைப்பேசி ரீங்காரமிட்டது.

அவன் நண்பன் யசோதரன்தான் அழைத்திருந்தான்.

“பாரதி… நான் இங்கே அந்த பொண்ணை பார்த்தேன்”  என்றவன் பதட்டமாகப் பேச,

“எந்த பொண்ணு? தலையும் புரியாம வாலும் புரியாம பொண்ணை பார்த்தேங்குற” என்று பாரதி வினவ,

“அதான் உன் வீட்டுல கொஞ்ச நாள் தங்கி இருந்துச்சே” என்றான்.

“துர்காவா… என்னடா சொல்ற… நானும் வசுவும் இங்கே துர்காவை பார்க்க காப்பகதுக்கு போனோம்”

“அங்கே துர்கா இருந்தாளா? நீங்க பார்த்தீங்களா?”

“இல்லடா… எங்களுக்கு பார்க்க பெர்மிஷன் கிடைக்கல”   

“அப்படியா?” என்றவன் பதில் பேசாமல் குழம்பி நிற்க,

“ஆமா நீ இப்போ எங்க இருக்க… நீ எப்படி துர்காவை பார்த்த” என்று பாரதி விசாரிக்க,

“இல்ல… நான் ஆபிஸ்ல இருந்து வெளியே வந்த போது ஒரு கார் பஞ்சராகி நின்னு இருந்துது… அப்போ அந்த கார் பக்கத்துல வேறு ஒரு கார் வந்து நின்னுச்சு… எதாச்சையாதான் கவனிச்சேன்…  அந்த கார்ல இருந்து வலுக்காட்டாயமா ஒரு பொண்ணை இழுத்து இந்த கார்ல ஏத்துனாங்க… அப்படியே அந்த பொண்ணு பார்க்க அச்சு அசல் துர்கா மாதிரியே இருந்துச்சு” என்றான்.

பாரதி அதிர்ந்துவிட்டு, “என்னடா சொல்ற? வண்டி நம்பர் நோட் பண்ணியா? உடனே போலிஸ்ல சொல்லணும்” என்றவன் பரபரப்பாக பேச, 

“போலிஸ்ல சொல்லணும்தான்… ஆனா அந்த ஆளுங்கல எல்லாம் பார்த்தா ஏதோ பெரிய ரவுடி கூட்டம் மாதிரி இருக்கு பாரதி” என்றான்.

“யாரா வேணா இருக்கட்டும்…. முதல போலிஸ் ஸ்டேஷன் போய் சொல்லு… நானும் வரேன்” என்றவன் பேசியை துண்டித்துவிட்டு தீவிரமாக யோசித்தான்.

முதலில் காப்பகத்தில் துர்கா இருக்கிறாளா என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்று எண்ணி மீண்டும் காப்பகத்திற்குப் புறப்பட்டான்.

அதே சமயத்தில் காப்பகத்திலிருந்த அந்த நிர்வாக பெண்மணி தன் தொலைப்பேசியில் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்.

“அந்த பொண்ணு வேண்டாம்னு சொன்னேனே கேட்டீங்களா? இன்னைக்கு அந்த பொண்ணை தேடிட்டு ஒருத்தன் வந்துட்டான்” என்றவர் சொல்ல,

“தலைவருக்கு அந்த பொண்ணைத்தான் பிடிச்சிருக்கான்… நான் என்ன பண்ண?” என்று எதிர்புறத்தில் இருந்தவன் அலட்டி கொள்ளாமல் பதில் கூறினான்.

“இல்ல சங்கர்… எனக்கு ஏதோ சரியாப்படல”

“அதெல்லாம் சரியா வரும்… நாளிக்கு காலையில விடியாங்காட்டியும் அந்த பொண்ணு காப்பகத்துல இருப்பா சரிதானா? இப்ப போனை வை” என்று உரையாடலைத் துண்டித்தான் வடசென்னையின் மிகப் பெரிய ரவுடியான வியாசர்பாடி சங்கர். 

One thought on “Vilakilla vithigal ‘AVAN’- 18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content