Vilakilla vithigal ‘AVAN’ – 28
28
மணி 4.15 தாண்டியிருந்தது. அந்த சமயத்தில் காட்டுக்குள் இருந்து சங்கேத ஒலி கேட்க, லெனின் அவசர அவசரமாகச் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினான்.
யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
பாரதி அந்த நொடி நந்தினியைப் பார்த்து, “உங்க ப்ளேன்தான் என்ன? ஏன் இவரை நீங்க கடத்தி வைச்சு இருக்கீங்க” என்று வினவவும்,
“முகுந்தன் முதலமைச்சராகவிடக் கூடாது… அதுக்காகதான்” என்றாள் சுருக்கமாக.
“முகுந்தன் மேல இருக்க உன் சொந்த பகையை தீர்த்துக்கவா இப்படியெல்லாம் நீ பண்ணிட்டு இருக்க”
“ஆமா… என் சொந்த பகைதான்… அவனைப் பழிக்கு பழி வாங்கணும்னு வெறி… துண்டு துண்டா அவனை வெட்டி போடுறளவுக்கு கோபம்… ஆனா அது மட்டுமே இந்த கடத்தலுக்குக் காரணமல்ல… வேறு சில காரணமும் இருக்கு” என்றவள் சொல்லி கொண்டிருக்கும் போதே லெனின் திரும்பி வந்தான்.
“நம்ம திட்டம் முழுசா க்ளோஸ்… சுத்திலும் போலிஸ் ரவுண்ட் அப் பண்ணிட்டாங்க… சீக்கிரமே நம்மல ட்ரேஸ் பண்ணி வந்திருவாங்க… நம்மெல்லாம் வகையா மாட்டிக்கிட்டோம்” அவன் பரபரப்பாகக் கூற,
“எப்படி நான்… நான் ஃசேபாதான் வந்தேன்” என்று நந்தினி குழப்பமானாள்.
“நான்தான் அப்பவே சொன்னேன் இல்ல… இவன் நம்ம லொகேஷனை காட்டி கொடுத்து இருப்பான்னு” என்று பாரதியை லெனின் காட்டமாக சுட்டிக்காட்டி பேச,
“ஆமா நான்தான் சொன்னேன்” என்று அலட்டி கொள்ளாமல் அவனும் ஆமோதித்தான்.
“ஏன் பாரதி?” என்று நந்தினி அதிர்ச்சியோடு அவன் முகம் பார்த்தாள்.
பாரதி தன் பேக்கெட்டிலிருந்த செல்பேசியை எடுத்துக் காண்பித்துவிட்டு, “கருணா என்னை முகுந்தன்கிட்ட அழைச்சிட்டு போன போது எனக்கு ரொம்ப குழப்பமா இருந்தது… சரி என்னதான் பேசறன்னு பார்க்கலாம்னுதான் போனேன்
ஆனா முகுந்தன் என்னை துர்காகிட்ட வீடியோ கால் மூலமா பேச வைச்சான்… எனக்கு அவளைப் பார்த்ததும் சந்தோசத்துல வார்த்தையே வரல… அவளுக்கும்தான்
நான் முகுந்தன் கிட்ட உடனே துர்காவை பார்க்கணும்னு சொன்னேன்… ஆனா அவன் என்ன சொன்னான்னு தெரியுமா… துர்கா உயிரோட இருக்கிறது தெரிஞ்சா நந்தினி அவளை உயிரோட விட மாட்டான்னு சொன்னான்
நான் நம்பல… நீ சி எம்மை கடத்தி வைச்சிருக்கிற விஷயத்தையும் அப்பதான் சொன்னான்… ஆனா அப்ப கூட நான் நம்பல… அப்படி எல்லாம் இருக்காதுன்னுதான் யோசிச்சேன்…
முகுந்தனை கோபமா திட்டினேன்… ஆனா அவன் துர்காவை பார்க்கணும்னா நான் சொல்ற மாதிரி நந்தினிகிட்ட சொல்லணும்னு சொன்னான்… என் பேகை எடுக்கப் போகும் போது இந்த ஃபோனை கொடுத்தான்
எனக்கு வேற வழி தெரியல… அப்ப கூட உன்கிட்ட விஷயத்தை சொல்லிடணும்னுதான் நினைச்சேன்… ஆனா நீ முகுந்தன் கிட்ட பேசுன டீலை ஸ்கரீன் ஷாட் எடுத்து அவன் அனுப்பின போது” என்று பாரதி நிறுத்தி நந்தினியை பார்த்து பல்லைக் கடித்தான்.
அவன் உள்ளத்திலிருந்த கோபம் அப்பட்டமாக வெளிப்பட்டுவிட்டது.
அவன் பார்த்த பார்வையில் அவள் குற்றவுணர்வோடு தலை கவிழ்ந்து கொள்ள,
“நீ என்னதான் பண்றன்னு பார்க்கலாம்னுதான் உன் கூட அமைதியா வந்தேன்… ஆனா அப்ப கூட என் கோபத்தை என்னால மறைக்க முடியல” என்று பாரதி முடித்த போது அவள் மனதளவில் உடைந்து நொறுங்கிவிட்டாள்.
முகுந்தன் வார்த்தையை நம்பியது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்று தற்சமயம் உரைத்தது அவளுக்கு. பாரதியின் மீதான காதல் அவள் கண்களை மறைத்துவிட்டது. முட்டாளாக்கிவிட்டது.
“என்ன ஊமை மாதிரி நிற்குற? பதில் சொல்லு நந்தினி… ஏன் இப்படியெல்லாம் செஞ்ச… சி எமை கடத்தி வைச்சு இருக்கிறது எவ்வளவு பெரிய கிரிமினல் அஃபன்ஸ்னு தெரியாதா உனக்கு… மக்களுக்கு எவ்வளவு பிரச்சனை ஏற்படும்?” என்றவன் மீண்டும் நந்தினியிடம் சீற,
“எல்லாம் தெரியும்… தெரிஞ்சுதான் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்கோம்” என்றான் லெனின்.
பாரதி லெனினைப் புரியாமல் பார்க்க,
“ஆமா என்ன சொன்ன நீ? சி எம்மை கடத்தறது கிரிமினல் அஃபன்ஸா… அப்போ நீதி கேட்டு போராடுற சாமான்ய மக்களை நாயை சுடுற மாதிரி சுட்டு கொல்றது அஃபன்ஸ் இல்லையா? சட்டமும் நீதியும் அரசியல்வாதிகளுக்கு மட்டும்தானா? சாதாரண மக்களுக்கு கிடையாதா?
இந்த ஆளை கடத்துனதால மக்களுக்கு பிரச்சனை இல்லை… இந்த ஆளோட ஆட்சியாலதான் மக்களுக்குப் பிரச்சனை” என்று லெனின் ஆக்ரோஷமாக அடுக்கி கொண்டே போக,
“புரட்சிங்குற பெயர்ல என்ன வேணா செய்யலாமா? கொலையும் கடத்தலும் வன்முறையும் எதுக்குமே தீர்வாகாது” என்று பாரதி காட்டமாக உரைக்க, லெனின் சத்தமாகச் சிரித்துவிட்டு,
“அதை நீ சொல்றியா? ஒரு கொலை செஞ்சு பத்து வருஷ ஜெயில் தண்டனை அனுபவிச்சவன்தானே நீ” என்றான்.
அவன் வீசிய வார்த்தைகள் பாரதியை விடவும் நந்தினியை ஆழமாகத் தாக்கிவிட,
“ஷட் அப் லெனின்… பாரதிகிட்ட இப்படியெல்லாம் பேசாதே” என்றாள் கண்டனமாக!
“நீ முதல பேசாதே… இப்போ நீ செஞ்சு வைச்சிருக்க காரியத்துக்கு உன்னைக் கொலையே பண்ணிடுவேன்”
“நான் இப்போ என்ன பண்ணிட்டேன்னு நீ இவ்வளவு கோபப்படுற”
“என்ன பண்ணிட்டியா? இவனை எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்த… இவனால நம்ம இருக்க லொகேஷன் முகுந்தனுக்கு தெரிஞ்சு போச்சு… நம்ம திட்டமெல்லாம் நாசமா போச்சு… எல்லாத்துக்கும் உன் முட்டாள்தனமான காதல்தான் காரணம்” என்று லெனின் நந்தினியை கடுமையாகச் சாடினான்.
அப்போது அவர்கள் இடையில் வந்து நின்ற பாரதி, “போதும்… இரண்டு பேரும் சண்டையை நிறுத்துறீங்களா? ஒழுங்கா போலிஸ் வந்தா சரண்டர் ஆகிடுங்க… அதான் உங்களுக்கு நல்லது” என்றவன் சொன்ன நொடி லெனினுக்கு சுரீரென்று கோபமேறத் துப்பாக்கியை எடுத்து நீட்டினான்.
“லெனின் துப்பாக்கியை உள்ளே வை” என்று நந்தினி பதற, பாரதி சற்றும் அலட்டிக் கொள்ளவில்லை.
“நான் இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன்… தப்புன்னா தப்புதான்… நீங்க போலிஸ்ல சரண்டர் ஆகித்தான் ஆகணும்” என்று பாரதி உறுதியாகச் சொல்ல,
“என்னடா? எங்க திட்டத்தை எல்லாம் மொத்தமா ஸ்பாயில் பண்ணிட்டு உன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்க… உன்னை உயிரோட விட்டத்தானே” என்று சீற்றமான லெனின் ட்ரிகரை அழுத்த வரவும்,
“லெனின் வேண்டாம்” என்று பாரதியின் முன்னே வந்து நின்றாள் நந்தினி.
“நீ விலகி போ நந்தினி”
“மாட்டேன்… நீ முதல துப்பாக்கியை உள்ளே வை”
“முடியாது”
“அப்போ என்னை முதல சுடு லெனின்” என்று நந்தினி அழுத்திச் சொல்ல லெனின் குழம்பிய அதேநேரம் பாரதி அவளை தள்ளிவிட்டு,
“போதும் உன் டிராமாவை நிறுத்துறியா… எனக்கு புரியல… யாருக்காக இந்த டிராமாவை நீ நடத்திட்டு இருக்கன்னு எனக்கு சத்தியமா புரியல” என்றான்.
“நான் டிராமா பண்றேனா பாரதி?” நந்தினி வேதனையோடு கேட்ட போது பாரதி எதுவும் பேசவில்லை.
லெனின் தன் துப்பாக்கியை உள்ளே சொருகிவிட்டு நந்தினியை அருகில் இழுத்து ரகசியமாக உறையாடினான்.
“யாருக்கு இவ்வளவெல்லாம் செஞ்சியோ அவனே உன்னை காட்டி கொடுத்துட்டான்… இதெல்லாம் தேவையா உனக்கு… அப்பவே சொன்னான்… இந்த முட்டாள்தனமான காதல் வேண்டாம்னு” என்றவன் சொன்ன மறுகணம் நந்தினி அவனை முறைக்கவும்,
“சரி போனது போகட்டும்… நீ கிளம்பு… நம்ம இங்கிருந்து போயிடலாம்… இனிமே நம்ம இங்க இருக்கிறது பாதுக்காப்பு இல்ல” என்றான்.
“நான் மட்டுமா? பாரதியையும் அழைச்சிட்டு போலாம்” என்றவள் சொல்ல,
“பைத்தியமா உனக்கு… அவன் உன்னை காட்டி கொடுத்திருக்கான்”
“பாரதிக்கு நம்ம ஏன் இதெல்லாம் பண்றோம்னு தெரியல லெனின்… நம்ம பொறுமையா சொல்லி புரிய வைப்போம்… நான் பாரதிகிட்ட பேசுறேன்” என்றாள்.
“பொறுமையா சொல்லிப் புரிய வைக்க எல்லாம் இப்ப டைம் இருக்கா” என்ற லெனின் சொன்னதை நந்தினி காது கொடுத்து கூட கேட்கவில்லை. பாரதியிடம் எப்படியாவது புரிய வைத்து அவனையும் அழைத்துச் சென்றுவிட வேண்டுமென்ற முடிவில் இருந்தாள்.
இவர்கள் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் குடிலுக்குள் நுழைந்தான். அறிவழகன் இயலாமையோடு விட்டத்தை பார்ததபடி படுத்திருக்க பாரதி அவர் முன்னே வந்து நின்றான்.
எதிர்பாரா இன்ப அதிர்ச்சி. இத்தனை வருட காலமாக மகனைப் பார்க்க வேண்டுமென்று அவர் தவியாய் தவித்த தவிப்பிற்கெல்லாம் அன்று ஒரு முடிவு ஏற்பட்டுவிட்டது போலத் தோன்றியது.
பாரதியை அவர் திகைப்படங்காமல் பார்த்தார். ஒரு வேளை இந்த காட்சி தன்னுடைய கற்பனையா என்று கூட அவருக்குத் தோன்றியது.
பாரதியும் அவரை திகைப்பாகத்தான் பார்த்தான். அவர் மீது அப்பா என்ற எந்தவித பாசமும் பிணைப்பும் இல்லாவிட்டாலும் வயதான ஒரு மனிதனாக அவர் மீது கரிசனம் உண்டானது.
“நீங்க எப்படி இருக்கீங்க?” என்றவன் கேட்ட போதுதான் இது எதுவும் கற்பனை இல்லை என்று புரிந்தது.
தன் மகன் தன்னை தேடி வந்துவிட்டான் என்ற நெகிழ்ந்தவர்,
“அ ரு ள்… நீ நீ” என்று கண்ணீர் சொரிந்தார். அவன் கைகளைப் பற்றிக் கொள்ள அவர் விழைந்த போதும் அது அவரால் முடியவில்லை. கழுத்திற்கு கீழாக இருக்கும் அனைத்து பாகங்களும் அவருக்குச் செயலிழந்து இருந்தனவே!
“என் பேர் அருள் இல்ல… பாரதி” என்று பட்டென்று சொன்னவன்,
“உங்களுக்கு ஒன்னும் இல்ல இல்ல… நீங்க நல்லா இருக்கீங்கதானே” என்று அக்கறையோடு விசாரிக்கவும் செய்தான்.
“சரி நான் அப்படி கூப்பிடல… ஆனா நீ நீ என்னைத் தேடி வந்தியா?” சந்தோஷத்தில் அவருக்குத் தொண்டையை அடைத்தது.
அப்போது நந்தினி பரபரப்பாக உள்ளே நுழைந்து, “பாரதி… நம்ம இங்கே இனிமே இருக்க வேண்டாம்… ரிஸ்க்… நம்ம போயிடலாம்” என்று அவன் கரத்தை பிடித்து இழுத்தாள்.
“நான் எங்கயும் வரல… நீ வேணா உன் ஆளுங்களோட போ” என்றபடி அவள் கையை கோபமாக உதறிவிட்டான்.
“புரிஞ்சிக்காம நடந்துக்காதே… வா” என்றவள் மீண்டும் அவன் கையை பிடிக்க வரவும், “நான் எதுக்கு உன் கூட வரணும்… நான் என்ன தப்பு செஞ்சேன்… கடத்துனது நீங்க… நீங்க பயப்படணும்… உங்க கிரிமினல் வேலைக்கு என்னைக் கூட்டாளியாக்க பார்க்குறீங்களாக்கும்” என்று கூற,
“என்ன நீ… சும்மா சும்மா கிரிமினல் கிரிமனல்னு சொல்ற… நாங்க மட்டும் மாமாவை கடத்துலன்னா இந்த நேரத்துக்கு அந்த முகுந்தன் இவரை கொன்னுட்டு தமிழ்நாட்டு முதலமைச்சராகி இருப்பான்… உண்மையிலேயே மாமாவை காப்பாத்தாதான் இந்த கடத்தலை பண்ணோம்… இன்னும் கேட்டா தமிழ் நாட்டு மக்களை காப்பாத்தறதுக்கும்தான்” என்றவள் சொன்னதை அவன் நம்பாமல் பார்த்தான்.
“என்ன? நீ செஞ்சதை நியாயப்படுத்த பார்க்குறியா?”
“உனக்கு தெரியாது பாரதி… மாமா படுத்தை படுக்கையா இருக்கவே அந்த முகுந்தன்தான் காரணம்… அவருக்கு ஸ்லோ பாய்ஸன் கொடுத்து இப்படி ஆக்கினதே அவன்தான்… தெரியுமா?” என்றவள் சொன்னதை கேட்டு பாரதி அதிர்ச்சியாக,
“மாமா நீங்க சொல்லுங்க மாமா… அந்த முகுந்தனை பத்தி சொல்லுங்க… அவன் எவ்வளவு மோசமானவன்னு சொல்லுங்க” அப்போதைய நிலைமையின் தீவிரத்தை பாரதிக்குப் புரிய வைத்துவிட வேண்டுமென்ற தவிப்பில் நந்தினி அறிவழகனிடம் கெஞ்சி கொண்டிருந்தாள்.
“எனக்கு யாரும் எதுவும் சொல்லி புரிய வைக்க வேண்டாம்… எனக்கு உங்க பிரச்சனையே வேண்டாம்… என்னை இதுக்குள்ள இழுக்காதீங்க… என்னை விட்டுடுங்க” என்று பாரதி அப்போதும் நந்தினியை முழுமையாக நம்ப தயாராக இல்லை.
“நீ நினைச்சாலும் இந்த பிரச்சனையில இருந்து ஒதுங்க முடியாது பாரதி” என்ற நந்தினியின் வார்த்தையை அறிவழகனும் ஆமோதித்தார். அது எந்தளவு உண்மையான வாக்கியம் என்பது அவனுக்கு விரைவில் புரிய நேரிடும்.
“நந்தினி சொல்றது உண்மைதான்… முகுந்தன் ரொம்ப மோசமானவன்… உன்னை அவன்கிட்ட இருந்து காப்பாத்த நந்தினியாலதான் முடியும்” என்றார்.
“என்னை யாரும் காப்பாத்த வேண்டாம்… எனக்கு உங்க யார் முகத்தையும் பார்க்க கூட பிடிக்கல… முக்கியமா உங்களை” என்று அறிவழகனை சுட்டி காட்டியவன்,
“நான் துர்காவுக்காகதான் இங்க வந்தேன்… அவ பாவம் என்ன நிலைமைல இருக்காளோ… யார்கிட்ட மாட்டி என்ன பாடு படுறாளோ” என்று வருந்திய அதேநேரம் அவர்கள் இருவர் முகத்தையும் பார்த்து,
“உங்க அரசியல் விளையாட்டுல ஏன் அந்த அப்பாவி பொண்ணோட வாழ்க்கையில விளையாடுறீங்க?” என்றவன் உணர்ச்சி பொங்க கத்தினான்.
நந்தினி மௌனமாக நிற்க பாரதி குடிலில் வாயிலில் சென்று அமர்ந்துவிட்டான். அவன் கண்களில் நீர் தளும்பியது. தன் கண்ணீரை அவர்கள் முன்னே காட்ட அவன் விழையவில்லை.
நந்தினியின் பிரச்சனையோ பாரதியை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று குழம்பி நிற்க அறிவழகன் அந்த நொடி, “இன்னும் அருள் அந்த துர்காவை நேசிக்கிறானா?” என்று வினவ, அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
ஏற்கனவே பலமாகக் காயப்பட்டு வலியில் துடிப்பவளின் அதே காயத்தின் மீது ஈட்டியைப் பாய்ச்சியது போலிருந்தது அவர் கேள்வி!
இவர்களின் உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்த அதேநேரம் வெளியே நின்றிருந்த லெனினிடம் விஜ்ஜு அப்பாவியாக கேட்டான்.
“இங்க போலிஸ் வந்திட்டா நம்ம என்ன ண்ணா பண்றது?”
“சுத்திலும் இப்பவே லோகல் போலிஸ் நிற்குறாங்க… அவங்க உள்ள வர மாட்டாங்க… கண்டிப்பா ரெஸ்கியு டீம் வந்தாதான் அவங்க உள்ளுக்குள் நுழைய்வாங்க… ஃபாரஸ்ட் ஆபிஸர் இரண்டு பேர் நம்ம ஆளுங்க… அவங்க ஹெல்ப் மூலமா நம்ம வெளிய போயிடலாம்” என்று அவன் விளக்க,
“அப்போ எதுக்கு அண்ணா இங்க இருக்கிறது… வாங்க தப்பிச்சு போயிடலாம்” என்றான்.
“இல்ல… நந்தினியை விட்டுட்டு” என்று லெனின் தயங்க,
“அவளாலதான் இவ்வளவு பிரச்சனையும்… அவ ஒரு சுயநலாவதி ண்ணா… அவளுக்காக நீங்க இரக்கப்படாதீங்க… அவளை அவ காப்பத்திக்கட்டும்”
“இத்தனை நாள் அவ நம்ம கூட இருந்திருக்கா விஜ்ஜு… நமக்கு எவ்வளவோ செஞ்சு இருக்கா”
“நீங்க மட்டும் என்ன? அவ உயிரை காப்பாத்தல… அன்னைக்கு அவ உயிரை நீங்க காப்பாத்தலன்னா இன்னைக்கு அவ உயிரோடவே இருந்திருக்க மாட்டா” என்று விஜ்ஜு வெறுப்பாகக் கூறிய போதும் லெனின் மனம் சமாதானம் அடையவில்லை.
நந்தினியைப் பிரச்சனையில் விட்டு செல்ல அவனுக்கு மனம் வரவில்லை.
லெனின் தயங்கியதில் விஜ்ஜுவின் பதட்டமேறி கொண்டே போனது.
“நீதான் ண்ணா அவளைப் பத்தி கவலை படுற… ஆனா அவ உன்னை பத்தி கொஞ்சம் கூட கவலைபடுறாளா பார்த்தியா?” என்று அவன் கடுப்பாக காட்டிய திசையில் நந்தினி பாரதியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
ஆனால் பாரதி கொஞ்சமும் அசைந்து கொடுக்கவே இல்லை.
“நந்தினி ஒரு நிமஷம்” என்று லெனின் வந்து நின்று அவளைத் தனியே வரும்படி செய்கை செய்தான்.
கைகளைப் பிசைந்தபடி நந்தினி அவன் அருகே வரவும்,
“இதுவரைக்கு நடந்தது எல்லாம் போகட்டும்… இப்போ நம்ம உடனே இங்கிருந்து தப்பிச்சாகணும்… இந்த பக்கத்துல கொஞ்ச தூரம் நடந்தா பள்ளத்தாக்கு மாதிரி சரிவா ஒரு பாதை வரும்… அந்த வழியா இறங்கினா… நமக்கு தப்பிக்க ஈசியா ஒரு வழி இருக்கு… இப்பவே கிளம்புனாதான் நம்ம தப்பிக்க முடியும்… போலிஸ் டீம் உள்ள நுழைஞ்சிட்டா அப்புறம் தப்பிக்கிறது ரொம்ப கஷ்டம்” அவளுக்கு பொறுமையாக விவரித்தான்.
“ஆனா பாரதி நான் சொல்றதை கேட்கவே மாட்டிறான் லெனின்… அவனுக்கு எப்படிப் புரிய வைச்சு இங்க இருந்து கூட்டிட்டு போறதுன்னே தெரியல” என்றவள் வருத்தமாகச் சொல்ல,
“அவனை விட்டுட்டு வா… அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு… அவன் எப்படியோ போகட்டும்” என்று லெனின் கூற நந்தினியின் கோபம் உச்சத்திலேறியது.
“பாரதியை நான் விட்டுட்டு வர முடியாது… நீ போறதுன்னா போ… என் கண்முன்னாடியே நிற்காதே… இங்கிருந்து போயிடு… போ” என்றவள் ஆவேசமாக கத்த லெனின் அதிர்ந்து நின்றான்.
விஜ்ஜு இந்த காட்சியைப் பார்த்து, “நான்தான் அப்பவே சொன்னேன் இல்ல ண்ணா… இந்த பிசாசுக்கெல்லாம் பரிதாப்படாதன்னு… அவ எப்படியோ போகட்டும்… நீ வா அண்ணா நம்ம போலாம்” என்று லெனின் கையை பற்றி இழுத்துக் கொண்டு போனான்.
லெனினும் மறுப்பேதும் சொல்லாமல் அவனுடன் நடந்தான். அவர்கள் தூரமாகச் செல்ல செல்ல நந்தினியின் படபடப்பு அதிகரித்தது.
மணி 5.15. அவர்கள் அங்கே வந்து சேர்ந்து ஒரு மணி நேரம் கடந்திருந்தது.
“பாரதி நம்மளும் போயிடுவோம் வா” என்ற நந்தினி மீண்டும் பாரதி முன்னே அமர்ந்து கெஞ்ச அவள் சொல்வதைக் கேட்கவே கூடாது என்று அவன் எழுந்து உள்ளே சென்றுவிட்டான்.
அப்போது குடிலினுள் அறிவழகன் மூச்சு திணறலில் அவதியுற்றுக் கொண்டிருந்தார்.
“என்னாச்சு?” அவன் அமர்ந்து அவர் கரத்தை பிடிக்க,
“தண்ணி தண்ணி” என்றவர் தவிப்போடு கூற அவசரமாக வெளியே சென்று பார்த்தான். நந்தினி அவன் அழைக்கும் தூரத்தில் இல்லை.
“அ ரு ள்” உணர்ச்சிவசப்பட்டதால் இன்னும் அவர் குரலில் தடுமாற்றம் உண்டானது.
அவனுக்கு அவர் சொல்வது ஒன்றும் புரியவில்லை. அருகிலேயே பிளேஸ்கில் சுடு தண்ணீர் இருந்தது. அதனை வெதுவெதுப்பாக ஆற்றி அவருக்குப் பொறுமையாகக் குடிக்கக் கொடுத்தான்.
தண்ணீரைப் பருகிய பின் அவர் கொஞ்சம் ஆசுவாசப்பட்டது போலத் தோன்றியது. “என்னை அப்பான்னு கூப்புடுறியா அருள்?” என்று அவர் ஆதங்கத்தோடு வினவ அவனால் பதில் சொல்ல முடியவில்லை.
உடல் நிலை சரியில்லாமல் கிடக்கும் இவரிடம் தன் பழியுணர்வை காட்டுவது சரியில்லை என்று அவன் யோசித்த போதும் அவன் வாழ்வில் மறந்து போன ‘அப்பா’ என்ற வார்த்தையை உச்சரிப்பது சுலபமான காரியமாக இல்லை.
அந்த சில நொடிகளில் மீண்டுமே அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் துடிக்கத் தொடங்க தன்னையும் மீறி, “அப்பா” என்று அழைத்தான். மறுகணம் அவர் மூச்சுத் திணறல் நின்றது. மூச்சும் நின்றது.
பாரதி பதட்டத்தோடு அவர் மூக்கை தொட்டு பார்த்து தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.
அடர்ந்த அந்த காட்டின் மௌனம் அந்த நொடி அவனையும் சேர்த்து விழுங்கி விட்டது போன்ற பயங்கர நிசப்தத்தில் அவன் ஆழ்ந்துவிட நேரம் கடந்து கொண்டே போனது.
5.36 நந்தினி பதட்டமாக குடிலுக்குள் நுழைந்தாள்.
“பாரதி… போலிஸ் சுத்தி வளைச்சிட்ட மாதிரி தெரியுது… நீ என்னடா இப்படி உட்காரந்துட்டு இருக்க” என்றவள் வினவ,
பாரதி அறிவழகனை சுட்டி காட்டி, “அவரு செத்துட்டாரு நந்தினி” என்றான்.
“வாட்?” என்று அதிர்ந்தவள் அவரருகே சென்று சோதித்து பார்த்து மிரண்டு போனாள்.
“மை காட்”
அவளும் இப்படியொரு அசாம்பாவிதம் நேரும் என்று எதிர்பார்க்கவில்லை. நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகி போனது. இதற்கெல்லாம் தான் தான் காரணமோ என்ற குற்றவுணர்வு அவளை அழுத்தியது.
“உஹும்… இனிமே நாம இங்க இருக்கவே கூடாது” என்று பாரதியைக் கையை பிடித்து இழுத்தாள்.
“உன்னோட கோபத்தை எல்லாம் அப்புறம் காட்டு… இப்போ இங்கிருந்து தப்பிச்சே ஆகணும்”
“என்ன மனுஷிடி நீ… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லயா உனக்கு… அவரு செத்துட்டாருன்னு சொல்றேன்… நீ பாட்டுக்கு நம்ம தப்பிச்சு போகலாம்னு சொல்லிட்டு இருக்க”
“அவர் செத்துட்டாருங்குறதுக்காக நம்ம இரண்டு பேரும் சேர்ந்து ஒப்பாரியா வைக்க முடியும்… அதுக்கெல்லாம் இப்போ நேரம் இல்ல… வா போலாம்” என்றவள் பரபரக்க பாரதி சற்றும் அசையாமல் அவளை முறைத்துக் கொண்டு நின்றான்.
“ஐயோ! எனக்கு உன் வருத்தம் புரியுது… ஆனா உனக்குத்தான் நம்ம மாட்டிக்கிட்டு இருக்க இக்கட்டான சூழ்நிலை புரிய மாட்டேங்குது”
“உன் சுயநலமும் பழியுணர்ச்சியும் ஒருத்தரோட உயிரை காவு வாங்கி இருக்கு… அதோட குற்றவுணர்வு கொஞ்சம் கூட இல்லாம பேசற நீ”
“அவரை ஹாஸ்பெட்டில விட்டிருந்தாலும் அவர் இந்நேரத்துக்கு செத்துதான் போயிருப்பாரு… அவரா சாகலன்னா முகுந்தன் அவரை கொன்னு இருப்பான்… இதான் நடந்திருக்கும்… ஒரு வகையில அவர் இங்க செத்தது கூட நல்லதுக்குத்தான்
இல்லாட்டி உன்னை பார்த்து பேசற வாய்ப்பு அவருக்குக் கிடைக்காமலே போயிருக்கும்… சாகும் போது நினைச்சது நடக்காம வேதனைப்பட்டுச் செத்து போயிருப்பாரு… ஆனா இப்ப உன்னை பார்த்து பேசுனதால அவர் ஆத்மா நிச்சயம் சாந்தி அடைஞ்சிருக்கும்”
“என்னதான் நீ பேசி சமாளிச்சாலும் நீ செஞ்சது பெரிய குற்றம்”
“அதுக்கு இப்ப என்ன பண்ணலாம்கிற… நான் வேணா செத்து போயிடட்டுமா… உனக்கு அதுதான் வேணுமா?” என்றவள் கடுமையாக கேட்க பாரதி திகைத்து நின்றுவிட்டான்.
“போதும்… என்னால இதுக்கு மேல போராட முடியாது… ஐ ல் கில் மை செல்ப்… இனிமே நான் உயிர் வாழறதுல அர்த்தமே இல்ல… இந்த உலகத்துலயே நான் நேசிச்சது உன்னை மட்டும்தான்… ஆனா நீயே என்னை புரிஞ்சிக்கல… நம்பல… இனிமே நான் உயிரோட இருக்க கூடாது… இருக்க மாட்டேன்” என்று ஆவேசமாகச் சொல்லிக் கொண்டே நந்தினி குடிலை விட்டு வெளியே ஓடினாள்.
பாரதிக்கு அந்த நொடி நந்தினி என்ன செய்துவிடுவாளோ என்று பயம் உண்டானது. அவள் தன் எதிரியா துரோகியா என்ற சிந்தனையெல்லாம் அவனுக்கு அப்போது இல்லை.
அவனும் பதட்டமாக வெளியே வந்து பார்க்க அவள் பித்துப் பிடித்தவள் போலக் காட்டுப் பாதையில் உக்கிரமாக ஓடிக் கொண்டிருந்தாள்.
“நந்தினி சாரி” என்றபடி அவளை பின்தொடர்ந்து அவனும் ஓடினான். அப்போது அவள் ஷூவிற்குள் ஆழமாக ஒரு நெடிய முள் தைத்ததில் அவள் தேங்கி நின்றுவிட, பாரதி மூச்சு வாங்கியபடி அவளை நெருங்கி வந்து,
“பைத்தியமாடி உனக்கு” என்று கடிந்து கொண்டான்.
“சாரி பாரதி” என்றபடி பின்னோடு நகர்ந்தவள் ஏதோ குதர்க்கமாகச் சிந்திக்கிறாள் என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது. அவள் நகர்ந்த சென்ற திசையில் ஆழமான சரிவு ஒன்று தென்பட,
“நந்தினி பின்னாடி போகாதே… விழுந்துடுவ” என்று பாரதி சொல்லி முடிக்கும் முன்னர் அந்த சரிவில் அவனை இழுத்து தள்ளிவிட்டாள்.
அவன் கால் இடறி கட்டுப்பாடில்லாமல் உருண்டபடி கீழே சென்றான்.
“ஐம் சாரி பாரதி… உன்னை காப்பாத்த வேற வழி தெரியல” என்றபடி கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் அமர்ந்து ஷூவை கழற்றி முள்ளை எடுத்து விட்டாள்.
அதேசமயம் விடுவிடுவென பூட்ஸ் கால்கள் அவ்விடத்தை சூழும் சத்தம் கேட்டது. அந்த நொடி தப்பிக்க தானுமே குதித்துவிட வேண்டும் என்றவள் எண்ணிய போது அவள் காதருகே மிக நெருக்கமாகத் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சென்றதில் அவள் மிரட்சியுற்று திரும்ப எத்தனிக்க, அவள் பின்னந்தலையில் துப்பாக்கியை வைத்து ஒருவன் அழுத்திப் பிடித்திருந்தான்.
மணி 6.10 முகுந்தனும் அவனுடன் வந்த காவலர்கள் குழுவும் காட்டுக்குள் நுழைந்தனர். முதலில் அவர்கள் காதை எட்டியது குடிலுக்குள் முதலமைச்சர் இறந்துவிட்ட செய்தி. அடுத்ததாக அந்த நடுக்காட்டில் தனியே சிக்கிக் கொண்ட நந்தினி.
அருமை 👌.
Pls let me know wr is vilkilla vidhikal avan epi 29 n the rest
Removed from site and its available in kindle ma
Nice update
Enna nadandrukum
Sorry for very very very very delay to your story. Nice ending of episode…
Very sorry to delay to read your story .
Mam, next episode please and rest of story
இந்த கதைகள் அனைத்தும் தளத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. புத்தகமாக வெளிவந்த பிறகு முழு நாவல் வெளிவரும். நீங்க படிக்கனும்னா amazon kindle appல் படிக்கலாம்
இதன் அடுத்த கட்டம் எங்கே?? 28 வ
ரை தான் உள்ளது.