You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic thriller

Vilakkila vithigal AVAN-5

5

விஷயமறிந்த மறுகணமே முகுந்தன் கடுங்கோபத்தோடு தன் மனைவி விஷாலி வீட்டுக்கு படையெடுத்தான்.

காரில் பயணிக்கும் வழியில் இந்த விஷயத்தை தெரிவிக்க தன் தந்தையை தொடர்பு கொள்ள முயற்சி செய்தான். ஆனால் அவனுக்கு இணைப்பு கிடைக்கவில்லை. இந்த தகவல் வருவதற்கு முன்பாகவே அவர் டில்லிக்கு புறபட்டிருந்தார். ஒரு வேளை அவர் விமானத்தில் ஏறியிருக்கலாம் என்று எண்ணியவன் அடுத்ததாகச் சிம்லாவிற்கு நண்பர்களோடு சுற்றுலா சென்றிருந்த தன் தம்பி கிருஷ்ணாவை அழைத்தான். அவனுக்கும் இணைப்பு கிடைக்காததில் மேலும் எரிச்சலடைந்தான்.

விஷாலியின் வீட்டில் காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தவன், 

“வாங்க மாப்பிள்ளை” என்று மாமியார் வரவேற்பைக் காதில் கூட வாங்காமல் வேக வேகமாக விஷாலி அறை நோக்கி விரைந்தான்.

கண்ணாடி முன்பு குளித்து முடித்து தலையைத் துவட்டியபடி அமர்ந்திருந்தாள். கதவு திறந்திருந்தபடியால் தடலாடியாக எட்டி உதைத்தபடி அவன் உள்ளே நுழைய, அவள் சிறிதும் பதட்டமில்லாமல் கண்ணாடியில் தெரிந்த அவன் பிம்பத்தை பார்த்தாள்.

 அப்போதும் அவள் திரும்பி நோக்காமல் மீண்டும் தன் கூந்தலைத் துடைக்கும் பணியில் மும்முரமாக இருக்க, முகுந்தன் கோபம் கட்டுக்கடங்காமல் பொங்கிப் பெருகியது.

கதவை மூடிவிட்டு அவளை நெருங்கியவன் அவளின்  கூந்தலைக் கொத்தாகப் பிடிக்க, “ஆ அம்மா” என்றவள் வலியால் கதறினாள்.

 “உன் பேர்ல் நான் எழுதி வைச்ச தீபம் ஷேர்ஸ் எல்லாம் நந்தினியோட பேருக்கு மாத்தி கொடுத்தியாடி” என்று அவன் ஆக்ரோஷமாகக் கேட்க,

“ஆமா… கொடுத்தேன்” அவள் வெகு சாதாரணமாகப் பதிலளித்ததில் அவன் உள்ளம் கொதித்தது.

“என்னடி சொல்ற?” உஷ்ணமேறிய பார்வையோடு அவள் கூந்தலை இன்னும் அழுத்தமாகப் பற்றி இழுத்தான்.

“வலிக்குது… முடியை விடுங்க… இப்ப விட போறீங்களா? இல்ல நான் கத்தி கூப்பாடு போடட்டுமா?” என்றவள் சொன்ன நொடி அவளை வேகமாக தள்ளிவிட்டு

“யாரை கேட்டு டி ஷேர்ஸ் எழுதி தந்த” அவன் கர்ஜித்தான்.

தரையில் விழுந்தவள் மெல்ல எழுந்து நின்று, “யாரை கேட்கணும்?” என்று சொல்லி அலட்சியமாக ஒரு பார்த்தாள்.

“யாரை கேட்கணுமா? என்னை கேட்கணும்டி… என்னை கேட்கணும்… அது என்னோட ஷேர்ஸ்… அதை நான் டெம்பரரியாதான் உன் பேருக்கு மாத்தி கொடுத்தேன்” அவன் ஆக்ரோஷமாக வெறி பிடித்தவன் போல் கத்த தொடங்கினான்.

“கொஞ்சம் அமைதியா பேசுறீங்களா? இல்லன்னா உங்க அரசியல் இமேஜூக்குதான் பிரச்சனை” என்றவள் சொன்ன நொடி அவனுடையும் வெறியும் கோபமும் இன்னும் இன்னும் அதிகமாகி ஏறிக் கொண்டே போனது.

ஆனால் அவளோ மிகவும் அமைதியாக.

“ஷேர்ஸ் விற்குறதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட கேட்டிருக்கணும்” என்று கேட்டவள் அவனை ஆழமாகப் பார்த்து,

“ஆனா நீங்க கேட்டீங்களா? கல்யாணம்கிற பேர்ல என் வாழ்க்கையை என் கனவை… அழிச்சீங்களே… அப்போ என் சம்மதத்தை கேட்டு செஞ்சீங்களா?”

“செய்றது எல்லாம் செஞ்சிட்டு என்னடி சம்பந்தா சம்பந்தமில்லாம பேசிட்டு இருக்க”

“ஆமா… என் வாழ்க்கை அழிஞ்சு போனது உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயம்தான்… ஏன் னா அது என் வாழ்க்கை இல்லையா?”

“ஏன் டி ஷேரை அவ பேருக்கு மாத்தி கொடுத்தன்னு கேட்டா என்னடி திமிரா பேசிட்டு இருக்க”

“ஆமா அப்படிதான் பேசுவேன்… என்னை என்ன பண்ண முடியும் உங்களால… எங்க அப்பா அவரோட கெளரத்தை வைச்சு ப்ளேக் மெயில் பண்ணி உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தாரு…  

இப்போ அவரே இல்லயே… நான் யாருக்காக பயப்படணும்” என்றவள் கேட்ட கேள்வியில் முகுந்தன் அதிர்ந்து போனான்.

“யாருடி உன்னை இப்படியெல்லாம் தூண்டி விட்டுப் பேச வைக்கிறது… அந்த நந்தினியா?”

“நீதான் என்னை இப்படியெல்லாம் பேச வைச்ச… ஒரு வேளை உன் கூட வாழ்ந்த இந்த ஆறு மாசத்தில உனக்கும் எனக்கும் ஏதாச்சும் இமோஷனல் பான்டிங் உருவாகி இருந்தாலோ இல்ல ஏதாவது சந்தர்ப்பத்துல குறைஞ்ச பட்சம் மனுஷியா நீ என்னை மதிச்சு இருந்தாலோ நான் உன்கிட்ட இப்படியெல்லாம் பேசி கொஞ்சமாச்சும் யோசிச்சிருப்பேன்”

முகுந்தன் விக்கித்து போய் நின்றான். விஷாலி இப்படியெல்லாம் பேச கூடியவள் அல்ல. இவை அனைத்தும் நந்தினியின் சூட்சமம்தான். தன் விரலை வைத்தே தன் கண்களைக் குத்திவிட்டாள். 

விஷாலியிடம் இனி பேசுவது வியர்த்தம் என்று புரிந்தவன்,

“அந்த நந்தினி எல்லாம் ஒரு ஆளுன்னு அவளை நம்பி பெரிய தப்பு செஞ்சிட்ட விஷாலி… இதுக்கெல்லாம் அனுபவிப்ப… பார்த்துக்கிட்டே இரு… என் காலில விழுந்து உன்னைக் கதற வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சென்றான். அவன் சென்ற சில நொடிகளில் விஷாலி முகத்தை மூடி அழ தொடங்கினாள்.

அவள் கனவு மண்ணோடு மண்ணாகி போனதை எண்ணி இப்போது அவள் விழிகள் கண்ணீர் உதிர்த்துக் கொண்டிருந்தன. அவரவர்களுக்கு அவரவர்களின் இலட்சியங்கள். கனவுகள். ஆனால் ஒருவரின் கனவுக்காக மற்றவரின் கனவைப் பலியிடுவது எந்தவிதத்திலும் நியாயமாக இருக்க முடியாது.

“உலக சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில நடக்க போகுது… நீ கண்டிப்பா அதுல கலந்துக்கனும் விஷாலி… உன்னால நிச்சயமா புது ரெகார்டை உருவாக்க முடியும்” என்று பயிற்சியாளர் நவீன் சொன்னதை கேட்டு விஷாலி துள்ளிக் குதித்து ஆனந்தமாகத் தந்தையிடம் கூற எத்தனித்த போதுதான் வேதநாயகம் அவள் விருப்பத்தைக் கேட்காமல் திருமணம் பேசி முடித்துவிட்டிருந்தார்.

“டேட் ப்ளீஸ் எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம்… நான் பெருசா சாதிக்கணும்னு நினைக்கிறேன்”

“சாதிக்கிறேன் அது இதுன்னு சொல்லி சும்மா என் காதுல பூ சுத்தாதே… நீ அந்த ட்ரைனி நவீனை காதிலிகிறதானே”

“நோ டேட்…. நவீன் என்னோட ட்ரைனி மட்டும்தான்”

“எனக்கு எல்லாம் தெரியும் விஷாலி… நீ பொய் சொல்லி என்னை ஏமாத்த பார்க்காதே”

“நீங்க நினைக்குற மாதிரி இல்ல டேட்” என்று அவள் எவ்வளவோ விளக்கம் கொடுத்தும் அதனை அவர் ஏற்பதாக இல்லை.

“நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டுதான் ஆகணும்” என்று வேதநாயகம் அவளுக்கு முகுந்தனை திருமணம் முடித்து வைப்பதில் மிக தீவிரமாக இருந்தது.

“இல்ல எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்… நான் காம்பட்டீஷன் போகணும்” அவளும் பிடிவாதமாக நிற்க,

“நான் பேசி முடிச்சிட்டேன்… இனிமே என்னால பின்வாங்க முடியாது… ஒன்னு நீ கல்யாணம் பண்ணிக்கணும் இல்ல நான் சாகணும்” என்றவர் வேகமாக தன்னிடமிருந்த ரிவால்வரை கையில் எடுத்துக் கொண்டார்.

அந்த நாடகத்தனமான மிரட்டல்களைப் பார்த்து அவளுக்குக் கோபம் வந்த போதும் அவளால் எதுவும் செய்ய இயலவில்லை. பின்னாளில் அதே ரிவால்வரை கொண்டு அவர் தன்னை சுட்டுக் கொண்டு இறந்துவிட்டார்.

திருமணம் நடந்து முடிந்தது.

கணவனாக வருபவன் தன்னை புரிந்து கொள்வான் என்று பெண்ணவள் எதிர்பார்த்தாள்.

“நீ ஸ்விமிங் சூட் போட்டு காமப்பிடீஷன்ல் கலந்துக்கிட்டா என் மானம் என்னடி ஆகுறது” என்றவன் மொத்தமாக அவள் லட்சியத்தை தகனம் செய்துவிட்டான்.

தன் மனதை தேற்றிக் கொண்டு தாம்பத்திய வாழ்க்கையை ஏற்கவும் சித்தமாக இருந்தாள். ஆனால் அவன் மனைவி என்ற உறவை வீட்டிலிருக்கும் அலங்கார பொருளாகத்தான் பாவித்தான்.

அவனுக்கு தன்னுடைய அரசியல் கனவு மட்டுமே முக்கியமாகப்பட்டது. அவளை மனைவியாக அல்ல… உயிருள்ள மனுஷியாக கூட மதிக்கவில்லை என்பதுதான் வேதனை!

இதெல்லாம் கூட பரவாயில்லை. அவளால் சகித்துக் கொள்ள முடியாத ஒன்று அவனுக்கு வேறு சில பெண்களுக்கும் தொடர்பு இருந்தது என்று தெரிய வந்த போதுதான். அது பற்றி அவள் தன் தந்தையிடம் முறையிட்ட போது,

“அரசியல இருக்கிறவனுக்கு ஆயிரம் பெண்களோட பழக்கம் இருக்கும் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?” என்று அவன் தப்பிற்கு அவர் சப்பை கட்டிய போது அவள் மொத்தமாக நொறுங்கிப் போனாள்.

அந்த நொடி விஷாலி மனதில் கொழுந்து விட தொடங்கிய வேதனைத்தீயை நந்தினி கொஞ்சம் கொஞ்சமாகத் தூண்டிவிட்டு பெரும் கோபத்தீயாக மாற்றி முகுந்தனை வீழ்த்தவும் அவள் தந்தையை கொல்லவும் பயன்படுத்திக் கொண்டாள்.

அதுதான் நந்தினி ஸ்டைல்!

எதிராளியை வெளியே இருந்து தாக்குவதை விட உள்ளே இருந்தே அவனுடைய பலவீனத்தைக் கண்டறிந்து அதன் மூலமாகவே அவனை வீழ்த்துவது.

முகுந்தன் முதல் அடியிலேயே நிலைகுலைந்து போனான்.

தன் தந்தையிடம் அவன் நடந்தவற்றை சொல்லி முடித்துவிட்டு, “ஒருபக்கம் அந்த விஷாலி… துரோகம் செஞ்சுட்டான்னா… இன்னொரு பக்கம் தம்பி எங்க இருக்கான்னே தெரியல ப்பா” என்று கவலையோடு பேசியவன்,

“அந்த நந்தினியை கொலையே பண்றளவுக்கு கோபம் வருதுப்பா” என்று பொறுமினான்.

“பொறுமையா இரு முகுந்த்… முதல தம்பி எங்க இருக்கான்னு விசாரிக்க சொல்றேன்”

“பொறுமையா இரு பொறுமையா இரு… பொறுமையா இரு… ஏன் ப்பா ஏன்… அந்த நந்தினியை கருவிலேயே அழிச்சு இருந்தா… இன்னைக்கு அவ இப்படியெல்லாம் செஞ்சு இருப்பாளா? அவளை துடிக்க துடிக்க என் கையால கொல்லணும்” முகுந்தனின் கோபம் எல்லையை மீறி கொண்டிருப்பதை உணர்ந்த சேஷாத்ரி,

“நீ அங்க இருக்க வேண்டாம்… டில்லிக்கு வா… என்ன பண்றதுன்னு நான் சொல்றேன்” என்றவர் மேலும்,

“முகுந்த என்னை கேட்காம எதுவும் பண்ணாதே” என்றார் கண்டிப்புடன்.

“நான் டில்லிக்கு வந்துட்டா… இங்க அறிவு மாமாவை” என்றவன் இழுக்கவும்,

“உங்க அம்மாகிட்ட சொல்லிட்டு வா… நம்மல கேட்காம வேற யாரையும் அவரை பார்க்க அலோவ் பண்ண வேண்டாம்னு சொல்லிடு” என்றார்.

இவர்கள் விவாதம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தீபம் சேனல் நிர்வாகம் கைமாறி விட்ட தகவல் அலுவலகம் முழுக்க காட்டு தீயாக பரவியது. எல்லோரும் உச்சபட்ச பரபரப்பு நிலையை எட்டியிருந்தனர்.

அலுவலகம் முழுக்க, “யார் இந்த நந்தினி?” என்பதுதான் பில்லியின் டாலர் கேள்வி!

வெகுகாலமாக சேஷாத்ரிக்கு சட்ட ஆலோசகரான குப்தாவிற்கு அந்த கேள்விக்கான விடை தெரியும். சேஷாத்ரியின் குடும்ப சொத்துக்களின் விவரங்கள் மட்டுமல்ல. அவர்கள் குடும்ப ரகசியமும் அவர் அறிந்து வைத்திருந்தார்.

நந்தினி தற்சமயம் தொழிலதிபராக வளர்ந்து வரும் கதையெல்லாம் அவர் அறிந்ததுதான். ஆனால் அவள் திடீரென்று தீபம் தொலைக்காட்சி நிர்வாகத்தை கைப்பற்றுவாள் என்று அவரும் எதிர்பார்க்கவில்லை.

சேர்மன் இருக்கையில் தோரணையாக அமர்ந்திருந்த நந்தினி, “என்ன குப்தா சார்? டாகுமென்ட்ஸ் எல்லாம் சரியா இருக்குதானே… அப்புறம் என்ன? கிளம்புங்க” என்றவள் சொன்ன பிறகு அவரால் என்ன செய்ய முடியும்.

அவளிடம் அதற்கு மேல் பேசி எந்த பயனும் இல்லை என்று புரிந்தவர் எழுந்து சென்ற சில நொடிகளில் தீபம் சேனலின் முக்கிய பொறுப்பாளர்கள் சிலரை வேலையை விட்டு நீக்கிவிட்டு உடனடியாக ஊழியர்கள் எல்லோரையும் சந்திக்க ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்தாள்.

அவர்கள் முன்பு வந்த நந்தினி முற்றிலும் மாறுபட்ட தோற்றத்திலிருந்தாள். துபாய் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பார்த்த வசீகரம் இல்லை. மயக்கும் புன்னகை இல்லை.

காந்தமாகக் கட்டி இழுக்கும் அவளின் அழகு அதிகாரத்துவ முகம் தரித்துக் கொண்டது. தோளில் தவழ்ந்த சேலையும் இழுத்து கொண்டையிட்ட கூந்தலும் அவளுக்கு தன்கம்பீரத்தைத் தந்திருந்தது,

“நம்ம சேனல் இனிமே எந்த கட்சியோட சார்பாகவும் செயல்படாது… சுதந்திரமான கருத்தை உண்மையான விஷயத்தை உள்ளது உள்ளபடி சொல்லலாம்… உங்களுக்கு அட்மின்ஸ்ட்ரெஷன் இல்ல வேற விதமா என்ன பிரச்சனை இருந்தாலும் நீங்க நேரடியா நாம் அட்மின் டீம் அப்ரோச் செய்யலாம்” என்றவள் சுருக்கமாக பேசிவிட்டு தனக்கு விசுவாசியான சில நபர்களை நிர்வாக குழுவினராக நியமித்தாள்.

பிறகு அந்த நிர்வாக குழுவினரை தனிப்பட்ட முறையில் சந்தித்து, “ஸ்டாப்ஸ்குள்ள எந்த குழப்பமும் சலசலப்பும் வராம பார்த்துக்கோங்க… முதல அவங்க நம்பிக்கையை நாம பெறணும்…” என்று தீர்க்கமாக உரைத்தவள்,

“இப்போதைக்கு ப்ரோக்ராம் லிஸ்ட்ல எந்த மாற்றமும் செய்ய வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

அவள் தன் காரில் புறப்பட்ட பிறகு தன் காரியதரிசி உதயிடம், “இப்போ பாரதி எங்க ஸ்டே பண்ணி இருக்கான்” என்று விசாரிக்க,

“அவரோட ப்ரெண்ட் ஜமால் வீட்டுல இருக்காரு மேடம்” என்றான்.

“அப்போ துர்கா இறந்த விஷயம் பாரதிக்கு இந்நேரத்துக்கு தெரிஞ்சிருக்கும் இல்ல”

“தெரிஞ்சிருக்கும்னுதான் நினைக்கிறேன்” என்றான்.

இங்கே இவர்களுக்கு இடையில் துர்காவை பற்றிய விவாதம் நடந்து கொண்டிருந்த அதேசமயத்தில் சந்தியா ஜமாலுக்கும் இடையில் அதே போன்ற ஒரு விவாதம்தான் நிகழ்ந்து கொண்டிருந்தது.

“பாரதிகிட்ட நீ பொய் சொன்னது தப்பு ஜமால்… நீ துர்கா இறந்த விஷயத்தை சொல்லி இருக்கணும்”

“நான் எங்க சொல்ல கூடாதுன்னா நினைச்சேன்… என்னால அவன்கிட்ட சொல்ல முடியலடி… அவன் தாங்க மாட்டான்… இப்பதான் அவன் ஜெயில இருந்து வந்திருக்கான்… இந்த நேரத்துல போய் துர்கா இறந்துட்டான்னு சொன்னா அவன் எப்படிடி தாங்குவான்… நேரம் பார்த்து பொறுமையா சொல்றேன்” என்று ஜமால் வேதனையோடு விளக்கம் தர, கணவனின் மனநிலையை அவளால் புரிந்து கொள்ள முடிந்ததால் அவள் மேலே எதுவும் பேசவில்லை.

“சரி சந்தியா… இன்னைக்கு நான் பாரதி கூட படுத்துக்கிறேன்”

“ஹ்ம்ம் சரி… அமீரும் பாரதியும் அண்ணா கூட விளையாடிட்டு இருக்காங்க… அவங்கள கொண்டு வந்து இங்க விட்டுடுங்க… அவங்க தூங்க விடாம தொல்லை பண்ணுவாங்க”

“சரி கூட்டிட்டு வந்து விடுறேன்” என்று சொல்லிவிட்டு தன் தலையணையை எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது ஜாமலின் மகன்கள் இருவரையும் அழைத்து வந்த பாரதி அப்படியே சிலையாக நின்றுவிட்டான்.

“மாமா சூப்பரா பாரதியார் பாட்டு பாடுனாரு ப்பா” என்று சின்ன பாரதி குதுகலமாகச் சொல்லிக் கொண்டிருக்க, அமீரும் தமையன் சொன்னதை அப்படியே திரும்ப உரைத்தான்.

“சரி சரி உள்ளே போங்க” என்று மகன்களை உள்ளே அனுப்பியவன், சலனமற்று நின்றிருந்த நண்பன் அருகில் வந்து அவன் தோளைத் தொட,

“துர்காவுக்கு என்னாச்சு?” என்று அவன் உணர்வற்று பார்வையோடு கேட்க,

“பாரதி” என்றவன் அதிர்ச்சியாக பார்த்தான்.

“ஏன் டா என்கிட்ட உண்மையை மறைச்ச” அவன் பார்வை நண்பனை துளைத்து எடுத்தது.

“சாரி பாரதி… என்னால உன்கிட்ட உண்மையை சொல்ல முடியலடா” என்று நண்பனை கட்டிக் கொண்டு கதறி அழுதான் ஜமால். ஆனால் பாரதி அழவில்லை. அவன் உணர்வுகள் முழுவதும் மறுத்துவிட்ட நிலையில் நின்றிருந்தான்.

பின் மண்டையில் யாரோ பலமாகத் தாக்கியது போல பயங்கர வலி. சில நொடிகளில் சுயநினைவிழந்து தரையில் சரிந்தான்.

2 thoughts on “Vilakkila vithigal AVAN-5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content