You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic thriller

Villakila vithigal AVAN-4

4

திக்கு தெரியா கானகத்தில் சிக்கி தவித்தது போலிருந்த பாரதியின் மனநிலை நட்புணர்வோடு கட்டி தழுவிய ஜமாலை பார்த்த நொடி தெளிவுபெற்றது. தலையே வெடித்துவிடும் போலிருந்த வலி கொஞ்சம் மட்டுப்பட்டது.

விழிகளில் நீர் தளும்பி நின்றது.

“ஜமால்” என்று பாரதி நண்பனை இறுகத் தழுவி கொண்டான்.  

“நீ இன்னும் இங்கதான் இருக்கியா ஜமால்? எல்லோரும் எங்கேயோ போயிட்டாங்க… நம்ம வீட்டையே காணோம்… எனக்கு ஒண்ணுமே புரியல… யாருமே இல்லன்னு நினைச்சேன்டா… உன்னை பார்த்த பிறகுதான் உயிரே வந்துது”

“நீ முதல வீட்டுக்கு வா… எல்லாம் அங்க போய் பேசிக்கலாம்”

 “வாபப்பா… உம்மா… யாரு வந்திருக்காங்கன்னு பாருங்க?” மகனின் உற்சாக குரல் கேட்டு வெளியே வந்த அவர்கள் இருவரின் முகமும் பிரகாசித்தது.

“பாரதி… நீ ரிலீஸாகிட்டியா?” என்று ஜாமலின் அப்பாவும்,  .

“யா அல்லாஹ்ஹா” என்று ஜமாலின் அம்மா இறைவனுக்கு மனதார நன்றி சொல்லியபடி பாரதியை சந்தோஷ பூரிப்போடு அணைத்துக் கொண்டார்.

“எப்படி இருக்க பாரதி? ஜெயில என்ன மாதிரி கஷ்டமெல்லாம் பட்டியோ?” என்று கண்ணீர் பொங்க அக்கறையோடு விசாரித்த அவர்களின் அன்பு கண்டு அவன் உள்ளம் நெகிழ்ந்தான்.

ஜமீலா அவனையும் பெறாத பிள்ளையாகத்தான் பார்த்தார். தாய்மை என்பது மதம், இனம், மொழி என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டது.

பத்து மாதம் அவர் அவனை சுமந்திருக்கவில்லை. எனினும் அவர் மகனோடு அவன் வளர்ந்த காலத்தில் அவனையும் தன் மகனாகவே பாவித்தார். அந்த சுயநலமற்ற அன்பும் பாசமும் இப்போதும் மாறவில்லை.

கால நிலைகளின் மாற்றங்கள் பூமியிலும் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் தாயன்பு என்பது என்றும் மாறாத ஒன்றாக இருக்கிறது.

அந்தச் சில நொடிகளில் அவரின் அன்பிலும் பாசத்திலும் அவன் தன் வேதனைகள் அனைத்திலும் இருந்து விடுபட்டிருந்தான்.

அவர்கள் உரையாடலோடும் அன்பின் பரிமாறலோடும் வந்து தன்னை இணைத்துக் கொண்டாள் ஜாமாலின் காதல் மனைவி சந்தியா.

ஜமால் சந்தியா காதலுக்கு நிறைய எதிர்ப்புகள் பிரச்சனைகளை வந்த போதும் பாரதிதான் அவற்றையெல்லாம் சமாளித்து அவர்களுக்குப் பதிவு திருமணம் செய்து வைத்து பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தான்.  

அந்த நன்றியும் அன்பும் எப்போதும் சந்தியாவிற்கு பாரதி மீது உண்டு.

“எப்படி இருக்கீங்க அண்ணா” என்று இயல்பான விசாரிப்புகளோடு தொடங்கியவள், தன் மகளையும் மகனையும் அழைத்து அவனுக்கு அறிமுகமும் செய்து வைத்தாள்.    

“சின்னவன் பேர் அமீர்… பெரியவன் பேர் பாரதி… உங்க பேர்தான்” என்று சொன்ன நொடி பாரதியின் விழிகள் நீரால் நிறைந்தன.

“என்னடா? என் பெயரை போய்… அப்பா பேர் வைச்சிருக்காலம் இல்ல” என்றவன் நண்பனை கேட்க,

“இது அவங்களோட விருப்பம்தான்… அதுவும் இல்லாம நீ இல்லன்னா… இன்னைக்கு நானும் சந்தியாவும் சேர்ந்திருக்கவே முடியாது” என்று ஜமால் சொல்ல சந்தியாவும் ஆமோதித்தாள்.

ஜமால் குடும்பத்தினர் தன்னிடம் அன்பை பொழிந்ததை பார்த்த பேச்சற்று போனான்.  

அதுமட்டுமல்லாது சந்தியாவும் ஜமீலாவும் மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல், பொடிமாஸ் என்று வகை வகையாக உணவுகளை சமைத்து பாரதியை திக்குமுக்காடச் செய்துவிட்டனர்.

அதேநேரம் அவன் மனம் முழுவதுமாக அவர்கள் அன்பில் திளைத்துவிட முடியாது தவித்தது. தன் அன்பிற்குரியவளான துர்கா எங்கே இருக்கிறாள் என்று தெரியாமல் அவன் மனம் ஏங்கிக் கொண்டிருந்தது.

அதற்கு மேல் பொறுக்க முடியாமல், “துர்கா இப்போ எங்க இருக்கா… நான் அவளை பார்க்கணும்” என்று கேட்டு விட, அவர்கள் முகத்திலிருந்து புன்னகை மறைந்திருந்தது.

எல்லோருமே மௌனம் சாதிக்க, “துர்காவுக்கு ஏதாச்சும் பிரச்சனையா? ஜமீலா ம்மா நீங்க சொல்லுங்க” என்ற பாரதியின் தவிப்பிற்கும் கேள்விக்கும் அவர் பதில் சொல்ல முடியாமல் தடுமாற,

“எங்களுக்கு தெரியாது பாரதி… அவங்க எங்க போனாங்க… என்ன ஆனாங்க எதுவும் தெரியாது?” என்று ஜமால் அப்பட்டமாக ஒரு பொய்யை உரைத்தான். எல்லோரும் அவனை அதிர்ச்சியாகப் பார்க்க பாரதி குழப்பமாக பார்த்தான்.

“அதெப்படி தெரியாம போகும்… தியாகு மாமா வீட்டை விற்கும் போது உங்ககிட்ட சொல்லலையா? துர்காவையும் அவங்கதானே அழைச்சுட்டு போயிருக்கனும்… ரெண்டு மாசம் முன்னாடி கூட தியாகு மாமா என்னை பார்க்க ஜெயிலுக்கு வந்தாரே”

அப்படியே தலையை தாங்கி பிடித்தபடி அவன் அமர்ந்துவிட, “நீ என்னோட வா” என்று நண்பனை அழைத்து கொண்டு வெளியே வந்தான்.

“என்னை மன்னிச்சிடு பாரதி… நீ இப்படி ஒரு பிரச்சனைல சிக்குன விஷயம் கூட எனக்கு தெரியாது…

சந்தியாவை நான் கல்யாணம் பண்ண பிறகு அவங்க குடும்பத்துல என்னை கொலை வெரில தேடிட்டு இருந்தது வாப்பா உம்மா ஹைத்ராபாத்ல சித்தி வீட்டுக்கு அனுப்பி வைச்சது எல்லாம் உனக்கும் தெரியும்…

உன்னோட சப்போர்ட் இருந்த வரைக்கும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமதான் இருந்துச்சு… ஆனா ஒரு வருஷத்துல எல்லாம் தலை கீழா மாறிடுச்சு

சந்தியாவோட அண்ணன் நாங்க இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சி எங்களை கொல்ல வந்துட்டான்… நாங்க அவன்கிட்ட இருந்து தப்பிச்சு ஊர் ஊரா ஓடிட்டு இருந்தோம்..

இதற்கிடையில சந்தியா வேற கர்ப்பமாகிட்டா… அதுக்கு மேல ஓட முடியாம சந்தியா வீட்டுக்கே போய் மன்னிப்பு கேட்டோம்… ஒன்னு எங்களை வாழ விடுங்க இல்ல கொன்னுடுங்கன்னு சொன்னோம்

அப்புறம்தான் எல்லாம் பிரச்சனை முடிஞ்சுது… அதுவும் சந்தியாவோட அம்மா கொஞ்சம் நல்ல மாதிரி இருந்ததால நாங்க உயிரோட தப்பிச்சோம்

அதுக்கு பிறகுதான் திரும்பவும் நாங்க பழையபடி இங்க வந்தோம்… அப்பதான் இங்கே நடந்த விஷயமே தெரியும்… தியாகு மாமா வீட்டை வித்திட்டு போனதும் தெரியும்… உன்னை வந்து பார்க்கலாம்னா நீ எந்த ஜெயில இருக்க… உன்னை எப்படி வந்து பார்க்கிறதுன்னு கூட எனக்கு தெரியல டா

ஆனா நான் தப்பு செஞ்சிட்டேன் டா… நான் எப்படியாச்சும் உன்னை வந்து பார்த்திருக்கணும்… நான் சுயநலமா இருந்துட்டேன்… என் குடும்பம் என் பிரச்சனைன்னு இருந்துட்டேன்… என்னை மன்னிச்சிடுறா?” என்று ஜமால் நண்பனின் கரங்களைப் பற்றி அழத் தொடங்கினான். ஆனால் பாரதி உணர்வற்று அமர்ந்திருந்தான்.

  அவனால் எதுவும் பேச முடியவில்லை. உள்ளம் முழுவதும் ஏமாற்ற உணர்வு படர்ந்தது.

ஜெயிலில் இருந்த போது இரண்டு முறை துர்கா அவனைப் பார்க்க வந்து சென்றாள். ஆனால் அதுதான் கடைசி… அதற்கு பிறகு அவள் வரவில்லை. தியாகு மாமாதான் வந்து சென்றார்.

அவளை பார்க்க வேண்டுமென்ற ஆசை மனம் முழுக்க வியாபித்திருந்தாலும் அவள் தனக்காக சிறைக்கு வந்து போவதை அவனே விரும்பாததால் தன் விருப்பங்களை அவன் முயன்று கட்டுப்படுத்திக் கொண்டான்.

தியாகு மாமாவிடம் கூட, “நீங்க எதுக்கு அலைச்சல் பட்டுட்டு இங்க வந்துட்டு போயிட்டு இருக்கீங்க” என்று அவன் பலமுறை அவரிடம் சொல்லி இருக்கிறான். ஆனால் அவரோ அவன் சொல்வதை கேட்டதில்லை. மாதம் ஒரு முறையாவது வந்துவிடுவார்.

மனு பார்க்கும் நாள் அன்று கைதிகள் கூட்டத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசுவதே கேட்காது.

 “துர்கா நல்லா இருக்கா” என்று காதில் விழும் அந்த ஒற்றை வாக்கியத்தைக் கேட்கவே அவன் பெரும்பாடு பட வேண்டியிருக்கும்.

ரத்தபந்தம் கூட இல்லாத அவர் தன்னை தேடி வந்து அப்படியொரு பொய்யை உரைக்க வேண்டிய அவசியமென்ன இருக்க முடியும்.

அவர் மட்டுமில்லை. அவன் வாழ்வில் அன்பும் பரிவும் காட்டிய யாரும் ரத்தபந்தம் கொண்டவர்கள் அல்ல. துர்காவும் கூட இதில் அடக்கம். ஆனால் தன் உயிரில் கலந்து உறவாக மாறியவள் அல்லவா அவள்?

எங்கு சுற்றினாலும் அவன் மனம் முடிவில் வந்து நிற்கும் புள்ளி துர்காதான்.

தன் யோசனைகளோடும் கேள்விகளோடும் பயணித்த நண்பனின் தோள் பற்றிய ஜமால், “என்னடா நான் பேசிட்டே இருக்கேன்… நீ பேசவே மாட்டுற… ப்ளீஸ் டா என்னை மன்னிச்சிடுடா” என்றான்.

“என்ன பேசற நீ… நண்பர்களுக்குள்ள மன்னிப்பு எல்லாம் கேட்கலாமா? அறைஞ்சிடுவேன் பார்த்துக்கோ” என்றவன் தன் நண்பன் கைகளை அழுந்த பற்றினான்.

“எனக்கு உன் நிலைமை புரியுது… இதுவரைக்கும் நடந்தது எல்லாம் போகட்டும்… அடுத்து என்ன பண்றதுன்னு யோசிப்போம்… தியாகு மாமா வீட்டை கண்டுபிடிக்கணும்… துர்காவை போய் பார்க்கணும்… இனிமே அவளை தவிர என் வாழ்க்கையில எதுவும் இல்ல… அவ இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்ல ஜமால்” என்ற நண்பன் சொல் கேட்டு விக்கித்து போனான்.

“நம்ம ஏரியால விசாரிச்சா கண்டிப்பா தெரிஞ்சிடும் இல்ல” என்று பாரதி மேலும் நம்பிக்கையோடு சொல்ல,

“இங்க யாருக்கும் தெரியல… நான் ஏற்கனவே விசாரிச்சுட்டேன்… நம்ம வேற மாதிரிதான் ஏதாச்சும் வழிமுறையிலதான் விசாரிக்கணும்” என்று அவனுக்கு பதிலளித்த ஜமால்,

“நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு… மத்ததெல்லாம் நாம அப்புறம் பேசிக்கலாம்” என்று அவன் வீட்டின் மாடியிலிருந்து சிறிய அறையை அவனுக்கு ஒதுக்கி கொடுத்தான்.

பலநேரங்களில் தனிமையும் இசையும்தான் பாரதிக்கு துணையாக இருந்திருக்கிறது. இன்றும் அவன் ஏக்கத்திற்கும் காதலுக்கும் அவன் தன் பாடலையும் கண்ணீரையுமே துணையாக்கிக் கொண்டான். அவள் குரலும் மனமும் அப்பாடலில் கசிந்துருகியது. 

“கண்ணுக்கொரு வண்ணகக்கிளி

காதுக்கொரு கானக்குயில்

நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா

தத்தி தவழும் தங்கச் சிமிழே

பொங்கிப் பெருகும் சங்கத்தமிழே

முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்

யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு

நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு

வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே

ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போல் ஆடுது

பொழுதாகி போச்சு விளக்கேத்தியாச்சு

பொன் மானே உன்னை தே…” அதற்கு மேல் வாரத்தை வாராமல் தொண்டையை அடைத்து கண்ணீர் பொங்கியது. சுவற்றில் சாய்ந்தபடி துர்காவின் நினைவுகளில் அவன் தொலைந்து போயிருந்த அதேசமயத்தில் முகுந்தன் நந்தினியை எண்ணி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தான்.

நந்தினி நடந்து கொண்ட விதமும் அவள் பேசிய பேச்சுக்களும் அவன் காதில் ஒலித்து கொண்டேயிருந்தன. இரவு முழுக்க அவன் உறக்கம் வராமல் தவிக்கலானான்.

காலை எழுந்ததும் அவனுக்குப் பருக காபி எடுத்து வந்த ஏழுமலை, “நந்தினி அம்மா கிளம்பி போயிட்டாங்க” என்று அவன் சொல்ல கேட்டு, 

“அப்பாடா போய் தொலைஞ்சா” என்று அவன் மூச்சை இழுத்துவிட்டு ஆசுவாசப்பட்டு கொண்டான். ஆனால் அவன் துரதிஷ்டம். அந்த நிம்மதி ஒருமணி நேரம் கூட நீடிக்கவில்லை. அவனைக் கொஞ்ச நேரம் கூட நிம்மதியாக இருக்க விட கூடாது என்றவள் கங்கணம் கட்டி கொண்டிருக்கிறாள் போல!

அலைபேசியில் வந்த தகவலில் அவன் அதிர்ந்து போயிருந்தான். தீபம் சேனலின் நிர்வாகத்தை நந்தினி கைபற்றினான்

 தீபம் சேனல் அவர்கள் கட்சிக்கான சேனல் என்றாலும் முற்றிலும் அது அவர்களின் குடும்ப சொத்து.

இருபத்து ஐந்து வருடம் முன்பு ஆரம்பிக்கப்பட்ட அந்த தீபம் குழுமம் தமிழக மக்களின் குடும்பத்தில் ஒரு அங்கமாகவே மாறியிருந்தது. ஆனால் அந்த சேனலின் நிர்வாகம் தங்கள் கைவிட்டுப் போகும் என்று அவனால் நம்பவே முடியவில்லை.

அந்த தகவல் மிக பெரிய அதிர்வலைகளை அவனுக்குள் உண்டாக்கியிருந்தது.  

“என்ன சொல்றீங்க குப்தா?”

“அது… வந்து… நந்தினி மேடம்தான் மெஜாரிட்டி ஷேர் ஹோல்டர்”

“என்ன உளறீங்க? அது எப்படி?”

“உண்மையாதான் சொல்றேன்… உங்க வொய்ப் விஷாலி மேடம்… தம்பி கிருஷ் எல்லாம் அவங்க ஷேரை நந்தினி மேடம் பேருக்கு எழுதி கொடுத்திட்டாங்க”

“வாட்?” அதிர்ந்து வாயடைத்து போய் நின்றவன் பின் தன்னை ஒருவாறு மீட்டு கொண்டு,

“இல்ல அவ ஏதோ கோல் மால் பண்ணி இருக்கா?” என்றவன் வேகமாக, “நான் அவளை“ என்று அவன் கொந்தளிக்க,

“சார் அப்புறம் இன்னொரு விஷயம்… நம்ம அறிவு ஐயாவோட ஷேரும்” என்று அவர் இழுத்ததில் அவன் தலையில் இடியே விழுந்தார் போலானது.

தீபம் சேனலின் நிர்வாக பொறுப்பை ஏற்று கொண்ட முதல் நாளே அதிரடியாக முகுந்தனின் விசுவாசிகளான முக்கிய பொறுப்பிலிருந்தவர்களை வேலையை விட்டு தூக்கியிருந்தாள். தீபம் சேனல் ஊழியர்கள் எல்லோரையும் அதிர்ச்சியிலும் மிரட்சியிலும் ஆழ்த்தியிருந்தாள்.

அன்பும் பணிவும் நந்தினியின் அகராதியிலும் கிடையாது.  அதிகாரம் என்ற ஆயுதம் கொண்டே எல்லோரையும் வீழ்த்த முடியும் என்பதை அவள் நன்கறிந்து கொண்டிருந்தாள்.

ஆனால் அவள் இதெல்லாம் எப்படி செய்கிறாள்? எதன் மூலமாகச் செய்கிறாள்? அடுத்த என்ன செய்யப் போகிறாள்?

முகுந்தனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் நந்தினி அனைத்தையும் தெரிந்தே செய்கிறாள். எங்கே அடித்தால் தீபச்சுடரின் ஆணிவேரையே அசைத்துப் பார்க்க முடியும் என்று மிக பெரிய திட்டமிடலோடே செய்கிறாள்.

அவனிடம் உன் கனவைச் சிதைக்கிறேன் என்று அவள் ஏதோ ஆவேசத்திலோ கோபத்திலோ சொல்லவில்லை. ஒவ்வொரு செங்கல்லாக அவன் கனவு கோட்டையை அவள் தகர்க்க தொடங்கியிருக்கிறாள்.

2 thoughts on “Villakila vithigal AVAN-4

  • யார் ங்க நந்தினி , .. இப்படி ஓரு கேரக்டரை நான் இதற்கு முன்பு எழுத்தாளர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலில் தான் படித்து இருக்கிறேன் ., ஆமாம் துர்கா எங்கே என்ன செய்து கொண்டு உள்ளார் எழுத்தாளர் ??

    Reply
  • Lovely dear
    Nandhini oh god
    Durga enge
    Jamal ku Edo trium pola
    Barathi adutha mv enna

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content