You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic comedy

virus 143-6

அட்டாக்-6


மேனகா, தான் கனவில் பார்த்த இடத்தை நேரில், அதுவும் அப்படியே பார்த்ததில் வியப்பின் விளிம்பிற்கே சென்றிருந்தாள்.

அவளால் இதை நம்பவே முடியவில்லை. முதலில் அதிர்ந்தாலும் நிதானமாக எண்ணிப்பார்க்க, அவள் விழப் போனதும் ஒரு சாமியார் வந்து அவளைத் தாங்கி பிடித்தது அவளுக்குச் சிரிப்பையே வரவழைத்தது.

ஆண் வேடத்தில் இருப்பதையும் மறந்து அவன் எங்கே தன்னை முத்தமிட்டு விடுவானோ என்ற அச்சப்பட்டதில் அசடு வழியச் சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு விலகி நடந்தவளுக்கு அப்பொழுதுதான் தான் நாயகியைத் தேடி வந்ததே நினைவுக்கு வந்தது.

‘ஐயோ இந்த தொல்ல எங்க போயிருக்கும்’ என்றவள் எண்ணிக்கொண்டு, அங்கேயும் இங்கேயுமாக பார்த்துக்கொண்டே, “நாயகி… ஏய் நாயக்… கீ” எனக் குரல்கொடுத்துக்கொண்டு அவள் நடக்க, அவளைப் பார்த்து, உஷரான நாயகி, கொஞ்ச தூரத்தில் ஒளிந்து மறைந்து திருட்டுத்தனமாக நடந்து போக, அதைக் கண்டு கொண்டாள் மேனகா.

உடனே ஓடிச் சென்று அவளை வழிமறித்த மேனகா, “எங்க போயிட்டிருக்க நீ?!” என்று கேட்டு நாயகியின் கரத்தை பிடித்து இழுக்க,

“இன்னா ம்மா நீ… இம்மாந்தூரம் வந்துட்டு சாமியை பார்க்காம எப்புடி” என்று முரண்டு பிடித்தாள் நாயகி!

“எது? சாமியை பார்க்கணுமா? ஏன் சுண்டல் சக்கரை பொங்கல் எல்லாம் வாங்கி சாப்பிட்டு போகலாம்னு சொல்லேன்” என்று கடுகடுத்த மேனகா,

“நம்ம வந்த வேலை என்ன? நீ செய்ற வேலை என்ன? ஒழுங்கா என்னை டென்ஷன்படுத்தாம வா” என்று கண்டிப்போடு சொல்லி நாயகியை தரதரவென இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தினாள்.

சந்திரமௌலி மேனகாவை முறைத்துப் பார்த்து, “எங்க போனீங்க?” என்று கேட்கவும்,

“இங்க பக்கத்துலதான்… சாரி சார்” என்று நாயகி செய்த வேலைக்கு மேனகா சமாளிக்க, சந்திரமௌலி முகத்தில் அந்தளவு எரிச்சல்!

‘தெரியாம இந்த லூசுங்களை கூட்டிட்டு வந்துட்டோமோ? நம்ம நினைச்ச காரியம் நடக்குமா?!’ என்று சந்தேகத்தோடு தன் மடிக்கணினியைப் பார்க்க அவர் மகன் அதில் காட்சி அளித்தான்.

மௌலி உற்சாகமாக, “இவன்தான்” என்று சுட்டிக்காட்ட மேனகா உடனடியாக திரையில் ஒளிர்ந்த முகத்தைப் பார்த்து அதிர்ந்தாள்.

அதே நேரம் சந்திரமௌலியின் பார்வை அவரை சுற்றியிருந்த அவரது பாதுகாவலர்களிடம் செல்ல, இங்கிதமாக அவர்களை அங்கிருந்து சென்றுவிட, மேனகாவும் மட்டும் உடனிருந்தாள் அந்த ரசாயனத்தை நேரம் பார்த்து விஷ்வாவின் மேல் ஸ்ப்ரே செய்வதற்காக.

இந்த இங்கிதம் சங்கீதம் இதெல்லாம் அறியாத நாயகியோ ‘போ’ என மேனகா ஜாடை செய்ததையும் லட்சியம் செய்யாமல் அவளை ஓட்டிக்கொண்டே நிற்க அவர் கவனம் மொத்தமும் மகன் மீதே இருக்க அவளைக் கண்டுகொள்ளவில்லை சந்ரு.

ஆனால் அந்த கேமராவின் கோணம் வேறு திசையிலிருக்க அவனுடைய பிம்பம் தெளிவாகத் தெரியாமலிருக்கவே, அருகே வந்த மேனகா, முன்னூற்றி அறுபது டிகிரி சுற்றும் அந்த கேமராவின் கோணத்தை அங்கிருந்தபடியே சரி செய்ய, முழுமையாகக் காட்சியளித்த விஷ்வாவை பார்த்து விழி விரித்தாள் அவள்.

சற்று முன் பார்த்த சாமியார்தான் அவன். ஆனால் அப்பொழுது அணிந்திருந்த முழு அங்கி இல்லை, காவி வேட்டி அணிந்து இடையில் பெல்ட் போல ஒரு துண்டை சுற்றியிருந்தான்.

அவனது திரண்ட தோள்களையும் அவனது பரந்த மார்பையும் பார்த்தவளால், ‘இந்த சாமியாருக்கு உள்ளுக்குள்ள இப்படி ஒரு மிஸ்டர் இண்டியா வா?’ என்று வியக்காமல் இருக்கமுடியவில்லை.

பூஜை மணியின் ஓசையுடன் சில வாத்தியங்கள் ஒலிக்க, மந்திரங்களை உச்சரித்தவாறே அங்கிருந்த சிவலிங்கத்துக்குப் பூஜை செய்யத் துவங்கினான் விஸ்வா!

அதில் பக்தி பெருக்கெடுக்க, நாயகி கன்னத்தில் போட்டுக்கொண்டு, “சிவ… சிவ… சிவ… சிவ…” என முணுமுணுக்க, மற்ற இருவரும் அதை கவனிக்க நேரம் கொடுக்காமல் அந்த பழங்களை நெய்வேத்தியம் செய்வதற்காக அவன் கைகளில் எடுத்தான் அவன்.

என்னதான் அவனால் அவளது கவனம் சிதறியிருந்தாலும் அந்த நொடி மேனகாவின் மூளை சுறுசுறுப்படைய தன் கையில் வைத்திருந்த ரிமோட்டை அழுத்தி ஸ்பெரேவை அவன் முகத்தில் அடிக்க தவறவில்லை அவள்.

சில நொடிக்குள் அந்த வாசம் சரியாக விஸ்வாவின் நாசியைத் துளைக்க, அடுத்த சில நிமிடங்களுக்குள் அவன் சந்திரமௌலி இருந்த இடத்திற்கு வந்திருந்தான் அந்த பழக் கூடையை கையில் ஏந்திக்கொண்டே.

ஆனால் நேராக அவன் வந்து நின்றது மேனகாவின் முன்னிலையில்தான்!

தாடியும் கொண்டையுமாக அவன் சாமியார் வேடத்தில் இருந்தாலும் அந்த கண்கள் அவளைக் கனவில் தாங்கி நின்ற அந்த கள்வனை ஒத்து இருந்ததை அவள் வியப்பாகப் பார்த்திருக்க,

விஸ்வா அந்த சர்தாஜியை மேலும் கீழுமாகக் குழப்பமாக நோக்கியவாறு அந்த பழக் கூடையை கீழே வைத்துவிட்டு, ‘நான் ஏன் இங்க வந்தேன்’ என்று யோசிக்கத் தொடங்கினான்.

“நீங்கதான கொஞ்ச நேரத்துக்கு முன்னால அந்த ஓடை கிட்ட நின்னுட்டு இருந்தது ஐ மீன் நியர் தட் ஸ்ட்ரீம்” என மேனகாவிடம் கேட்டவன், “ஐ ஆம் சாரி! தமிழ் தெரியும் ல…” என்று கேட்க, நன்றாகத் தலையை ஆட்டி வைத்தாள் அவள்.

அதற்குள், “ஐயோ! சின்ன சாமி!” என்றவாறு அவனது கால்களில் விழப்போன நாயகியை வேறு தடுத்துநிறுத்த வேண்டிய நிர்பந்தம் உண்டானது அவளுக்கு.

அவர்களை அதிசய ஜந்துவைப் பார்ப்பதுபோல பார்த்துவைத்தவன், “சிவ சிவ…” என்று தன்னை சமன்படுத்திக்கொண்டு, “ஆமாம் உங்க பேர் என்ன?” என்று அவன் கேட்க, “என் பேரு நாயகி சாமி” என முந்திக்கொண்டு பதில் சொன்னாள் நாயகி.

அவன் விசித்திரமாக அவளைப் பார்க்க, “நாயக்… நாயக் சிங்” என மேனகா சமாளிக்க, அதற்குள், “அது மேனகா” என அடுத்த சொதப்பலில் இறங்கிய நாயகி அதை உணர்ந்து தலையில் கை வைத்துக்கொள்ள, திடீரென்று நாயக் சிங்..காக மாறியிருந்த நாயகியை ஒரு கேவலமான பார்வை பார்த்துவைத்தான் விஸ்வா.

“நாஹீ… மேரா நாம் மில்கா… மில்கா சிங் ஹு மே” எனப் பதட்டத்துடன் மொழிந்த மேனகா, “நாங்கோ சந்திரமௌலி சாரோட பாடிகார்ட்ஸ்” என ஒருவாறு சொல்லிக்கொண்டே மில்கா சிங்காக மாறியிருந்த மேனகாவின் பார்வை தயக்கத்துடன் அவரிடம் செல்ல, அப்பொழுதுதான் அவனுடைய அப்பா அங்கே இருப்பதையே பார்த்தான் விஸ்வா!

உணர்ச்சி துடைத்த முகத்துடன், “நான்தான் உங்கள இங்க வரவேண்டாம்னு சொல்லிட்டேனே!

அது உங்களுக்குத்தான் அதிக வலி கொடுக்கும்! அதனாலதான் நான் உங்களை அவாய்ட் பண்றது.

மறுபடி மறுபடி என் இங்க வந்து துன்பப்படறீங்க!

உங்களை மறுபடியும் பார்க்க வேணாம்னு நினைச்சேன்!

ஏதோ ஒரு சக்தி என்னை இங்க வழிநடத்தி கூட்டிட்டு வந்துடுச்சு” என அவன் சொல்லிக்கொண்டே போக,

“அது ஏதோ ஒரு சக்தி இல்ல ராஜா!

அதுக்கு பேருதான் உண்மையான பாசம்!

நான் உன் மேல வெச்சிருக்கிற பாசம்தான் உன்னை இங்க இழுத்துட்டு வந்திருக்கு” சந்ரு அப்படி சொல்லவும்,

“பாப்பா! பெரிய மன்ஷனா இந்த ஆளு! இன்னாம்மா அள்ந்து உட்றார் பாரேன்!

நீ ஏதோ சொக்குபொடி தூவினியாங்கட்டியும் அந்த சின்ன சாமி இங்க வந்துது!” என மேனகாவின் காதில் கிசுகிசுத்தவள், அதைச் சத்தமாக சொல்லும் நோக்கத்துடன் வாயைத் திறக்க, அப்படியே அவளை அடக்கினாள் மேனகா.

“நான் ஆசாபாசங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன்! அதெல்லாம் சொல்லிட்டு இங்க வராதீங்க!

நீங்க என்ன மீட் பண்ண முயற்சி செய்யறது இதுவே கடைசியா இருக்கட்டும்” இரக்கமின்றி சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து செல்ல எத்தனிக்க, “அப்படினா உன்னோட அம்மா!

அவ எந்த ஒரு நிலைமையில இருக்கா தெரியுமா!

அவளால உன்னைப் பார்க்க இங்க வர முடியாது விஸ்வா!

அதான் அவ சார்பா நான் வந்திருக்கேன்!” அடுத்த ஆயுதத்தை அவர் கையிலெடுக்க,

“இதையெல்லாம் சொல்லி என் மனச உங்களால மாத்த முடியாது.

கவலை படாதீங்க; அவங்களை என் அப்பன் சிவன் பார்த்துப்பான்!”

அவன் சொல்லிவிட்டுத் திரும்ப, “இல்ல விஸ்வா! இந்த பண்டாரம் மாதிரி இருக்கறத விட்டுட்டு நீ என் கூட வந்துதான் ஆகணும்!”

கொஞ்சம் கடுமையுடன் சந்ரு அப்படிச் சொல்லவும், ஒரு துறவிக்கே உரித்தான பொறுமையை விஸ்வா கடைப்பிடிக்க, ஒரு ஆவேசம் வந்தவளை போல, “எங்க சின்ன சாமிய பார்த்து இன்னா சொல்லிட்ட சாரு!

அவரு பண்டாரம் இல்ல; சாமி! எங்க சின்ன சாமி!

அவருக்கு புடிக்கலன்னா உட்டுற வேண்டீது தான!

எங்க சாமிய பத்தி உனக்கு இன்னா தெரியும்… இன்னா தெரியுன்னு கேக்கறேன் அஆங்”
நாயகிதான் பேசிக்கொண்டே போனாள்.

“ஏய்! நீ நடுவுல பூந்து தொல்லை பண்ணாத”

மேனகா அவளை அடக்கவும்,

“யார பார்த்து தொல்லன்ன!

இந்த சாருதான் எங்க சாமிக்கு தொல்ல!

உனக்கு காயா மாயான்னா இன்னான்னு தெரிமாமே?

இந்த ஒடம்பு கீதுல்ல… அது ஒரு மாய…

அது சிவன் சாமியோட நெழலாங்காட்டியும்!

அது என்னவோ சொல்லுங்களே… அந்தரம்… ஆங்… நிந்தரம்…

ஐயோ தொண்ட குழில நிக்குது… வெளிய வர மாட்டேங்குதே!

சாமி நீயே சொல்லு” என அவள் விஸ்வாவை இழுக்க.. புரியாமல் அவளை ஒரு பார்வை பார்த்தவன், “என்ன நிரந்தரமா” என்று கேட்க, “அஆங்… நிந்ரரம்! நிந்ரரம் இல்ல!” அவள் உளறிக்கொட்ட, “ஏய்! இத இழுத்துட்டு போ” எனக் கத்தியேவிட்டார் சந்திரமௌலி.

நாயகி அலறி அடித்துக்கொண்டு வெளியே சென்றுவிட, “என்னை ஒரு கூட்டுக்குள்ள அடைச்சுவெக்க ட்ரை பண்ணாதீங்க!

என் பாதை சிவனின் பாதை!

பூஜையை பாதில விட்டுட்டு வந்துட்டேன்…

நான் அதை தொடரணும்!

நீங்க கிளம்புங்க” உணர்ச்சியற்ற குரலில் சொல்லிவிட்டு ஒரு நொடி கூட நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டான் அவன்.

அவர் அப்படியே தொய்ந்து போய் தரையில் மண்டியிட்டு அமர்ந்துவிட, கரகரவென அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது.

அவ்வளவு உயரத்திலிருந்தாலும் அந்த நொடி தேற்றுவாரில்லாமல் அவர் உடைந்துபோயிருப்பதைப் பார்த்தவள் மனது தாங்காமல், “கவலை படாதீங்க சார்! அவர் மனசை மாத்த நாம வேற எதாவது மெத்தட் ட்ரை பண்ணலாம்”

மேனகா மென்மையாகச் சொன்ன விதத்தில் மேலும் இளகியவர், “உனக்கு தெரியாதும்மா… அவன் டாட்.. டாட்… டாட்னு ஒரு நாளைக்கு நூறு டாட் சொல்லுவான்மா!

ரொம்ப ஹாப்பியா இருந்தா மட்டும் அப்பான்னு கூப்பிடுவான்!

நான்னா அவனுக்கு அவ்வளவு உயிர் தெரியுமா!

ஆனா இன்னைக்கு ஒரு ஸ்ட்ரேஞ்சர் மாதிரி என்னை ட்ரீட் பண்றான் பார்த்தியா?

மறந்துபோய் கூட என்னை டாட்ன்னு கூப்பிடலியே?” தன்னை மறந்து தன மனதைத் திறந்தார் அவர்.

என்ன இந்த சாமியார் இவரோட சன்னா!” என அவள் அதிர, வேகமாக எழுந்தவர் தன் மடிக்கணினியைத் தட்டி அவனுடைய சில படங்களை ‘ஸ்லைட் ஷோ’வாக ஓடவிட, கச்சிதமாகத் திருத்தப்பட்ட கேசம் அலைபோல் பறக்க, விதவிதமான உடைகளில் கம்பீர தோற்றத்துடன் அதில் காட்சியளித்தவள் சாட்ஷாத் அவளுடைய கனவு நாயகனேதான்.

‘அடப்பாவி! அந்த சாமியார் நீதானா?! அதான் கனவுல வந்து என் உயிரை வாங்கறியா?’ என அதிர்ந்தவள், ‘ஹேய் சாமியார்! நீயெல்லாம் இப்படி இருக்கவேண்டிய ஆளே இல்ல!

மிஸ்டர் சந்திரமௌலியே உன்னை விட்டா கூட நான் உன்னை இப்படி இருக்க விட மாட்டேன்டா!’ என தன் மனதிற்குள் சூளுரைத்தாள் மேனகா!

2 thoughts on “virus 143-6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content