Virus attack-11(2)
காதல் அட்டாக்-11(2)
அவனுடைய வயதிற்குத் தகுந்தபடி ஆட்டம் பாட்டம் கேளிக்கை கொண்டாட்டம் என இருந்தவன்தான் விஸ்வா. அதவும் பல தலைமுறைகளாகத் திரட்டி வைத்திருக்கும் செல்வம் வாழ்க்கையின் எல்லா வண்ண பக்கங்களையும் அவனுக்கு காண்பித்துக் கொடுத்தது.
துன்பம் கவலை என எதையுமே அறியாததாகத்தான் இருந்தான் அவன் வாழ்க்கையின் மற்றொரு இருண்ட பக்கத்தையும் காணும் வரை. அதாவது உடல்நலமும் மனநலமும் பதிக்கப்பட்டு அவனுடைய அம்மா படுக்கையில் விழும் வரை.
அப்பொழுது அவர் அவனுக்கு உணர்த்திய உண்மைதான் அவனை வேறு விதமான ஒரு தேடலுக்கு இட்டுச்சென்றது எனலாம்.
அந்த சமயத்தில்தான் ஒரு விமான பயணத்தில் அவனுக்கு அறிமுகமானார் நிர்மலானந்தா.
அவன் யார் என்று யாருமே சொல்லாமலேயே அவருக்குத் தெரிந்திருக்க, அவருடைய ரிஷிமூலத்தை அறியும் சாத்திய கூறு விஷ்வாவுக்கு மட்டுமல்ல வேறு யாருக்குமே இல்லை என்ற காரணத்தை அவர் நன்றாகவே உணர்ந்திருக்க, அவனிடம் சில நிமிடங்கள் பேசியதிலேயே அவனுடைய தேடலைப் புரிந்துகொண்டவர், அந்த தேடலை தன் பழி உணர்ச்சிக்கு வாகாக பயன்படுத்திக்கொண்டார் நிர்மலானந்தா.
நம் மனம் அடையும் இன்பமும் சரி துன்பமும் சரி அவற்றின் காரிய கர்த்தா நாம் மட்டுமே.
நம்மை நாமே விரும்பவும், நம்மை நாமே வெறுக்கவும், நம் மீது நாமே நம்பிக்கை வைக்கவும், தன்னம்பிக்கை இழந்து வாழ்க்கையின் விளிம்பு வரை ஓடி ஒளியவும் ஏதோ ஒரு கண்ணுக்குப் புலப்படாத கருவி காரணம் இல்லை. நம்மைத் தீர்மானிக்கும் அந்த சக்தி நம் அறிவு மட்டுமே.
நம் அறிவை நம் கட்டுப்பாட்டுக்குள் நாம் வைக்காமல் போனால் அதை சுலபமாக கைப்பற்றி யார் வேண்டுமானாலும் அவர்கள் விரல் நுனியில் நம்மை அவருடைய கைப்பாவையாக ஆட்டி வைக்க முடியும்.
மிகத் துளி அளவு அடுத்தவரின் மனப்போக்கை கணிக்கத் தெரிந்தாலே போதும், ஒருவருடைய அறிவை மழுங்க அடித்து அவரை கட்டுப்படுத்த இயலும் என்றால் கூடவே மதி மயக்கும் சொல்லாடல்களையும் அழகான கட்டுக்கதைகளையும் பிரயோகித்து கண்ணை மூடிக் கொண்டு தன்னை நம்ப வைக்கும் கலையை நன்கு வசப்படுத்திவிட்ட நிர்மலானந்தாவுக்கு விஸ்வாவை வசப்படுத்துவது ஒன்றும் அவ்வளவு கடினமாக இல்லை.
விமானத்தை விட்டு இறங்கியவன், பைட் பைப்பர் கதையில் வரும் எலிகளைப் போல அவருடைய பின்னாலேயே வந்துவிட்டான் விஸ்வா.
அதன் பின் அவரை விட்டு விலகவே இல்லை, அவருடைய கண்களின் அசைவுக்கு அடிக்கொண்டிருதான் அவன்.
அவரைப் பொறுத்த வரைக்கும் விஷ்வா அவருடைய பொக்கிஷம். அந்த பொக்கிஷம் கை நழுவிப் போன ஏமாற்றத்தில் அவரது ஆசிரமத்தில் நிர்மலானந்தா கொதித்துக் கொண்டிருக்க அடித்துப் பிடித்து மகனைக் காண ஓடி வந்திருந்தார் சந்திரமௌலி.
அப்பொழுதுதான் கண்விழித்து எழுந்து உட்கார்ந்திருந்தான் விஷ்வா. ஆனாலும் இன்னும் கூட சுயநினைவு முழுவதாக வரவில்லை அவனுக்கு. நம்பிக்கைக்குரிய சில பணியாளர்களுடன் ரீமா விஷ்வாவை கவனித்துக் கொண்டிருக்க வீட்டு வரவேற்பறையில் உட்கார்ந்துகொண்டு சந்திரமௌலிக்காக காத்திருந்தாள் மேனகா.
அப்பொழுது அவர் புயலென உள்ளே நுழையவும், வரவேற்கும் விதமாக சிறு புன்னகையுடன் அவரைப் பார்த்துத் தலையசைத்தவள், “ஹவ் ஆர் யூ சார்” என இயல்பாக விசாரிக்க, “ஹான்… ஃபைன்மா” என்றவர், “என்னால விஸ்வா என் கிட்ட வந்துட்டான்னு நம்பவே முடியல… தேங்க்ஸ்மா” என தழுதழுத்தார் மௌலி.
அதைப் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டவள், “ம்ம்… ஆனாலும் அந்த கெமிக்கலோட எஃபக்ட் இன்னும் கூட அவருக்கு இருக்கு. இன்னைக்கு நைட் இல்லன்னா நாளைக்கு காலைல சரியாகிடும்… இல்லன்னா என்கிட்ட சொல்ல சொல்லியிருக்கேன்” என சிறு விளக்கம் கொடுத்துவிட்டு, “நான் சொன்ன மாதிரி உங்க பிள்ளையை அந்த ஆசிரமத்துல இருந்து வெளியில கொண்டு வந்துட்டேன். இனிமேல் அவரை உங்க கூட தக்க வச்சுக்கறது உங்களோட சாமர்த்தியம். நான் இப்ப கிளம்புறேன். ஏற்கனவே சொன்ன மாதிரி என்னோட ரிசர்ச்க்கு நீங்க ஹெல்ப் பண்ணுவீங்கன்னு நம்பறேன்” என்று அவள் அடுக்கடுக்காக சொல்ல, மகனை நேரில் காணும் ஆவலிலிருந்தவருக்கு அவளுடைய பேச்சு செவியிலேயே ஏறவில்லை. தோராயமாகத் தலையாட்டிவிட்டு மகனைத் தேடிச் சென்று விட்டார் அவர். இனிமேல் அங்கே தனக்கு வேலை இல்லை என எண்ணியவள், உடனே அங்கிருந்து கிளம்பினாள் மேனகா.
விஸ்வாவை குறி வைத்துத் தூக்கும் முனைப்பிலிருந்தவளுக்கு கிட்டத்தட்ட ஒரு வாரமாகவே சரியான தூக்கம் இல்லை.
அன்று மாலை வீட்டிற்கு வந்து படுக்கையில் விழுந்தவள்தான் அடுத்த நாள் காலை சூரியன் சுட்டெரிக்கும் நேரம் வரை கண் விழிக்கவில்லை.
மில்லி கூட அவளுடைய கட்டிலிலேயே ஒரு மூலையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தது.
ஆழ்ந்த உறக்கத்திலிருத்தவளுக்கு கலகலவென கண்ணாடி விழுந்து நொறுங்கும் ஒலி எங்கோ வெகு தூரத்தில் கேட்க, சில நொடி இடைவேளையில் அவள் காதின் அருகில் மில்லியன் குரல் கேட்டது.
அதில் திடுக்கிட்டு அவள் எழ, மறுபடியும் கண்ணாடி குவளை நொறுக்கும் ஒலி அவளுடைய படுக்கை அறைக்கு வெளியில் கேட்க, அதில் இன்னும் அதிகமாகக் கத்தியது மில்லி.
“ஷட் அப் மில்லி” என மில்லியை அடக்கியவள் வேகமாக வெளியில் வந்து பார்க்க, வீட்டைச் சுத்தம் செய்கிறேன் பேர்வழியே என அன்றைய கோட்டாவாக இரண்டு பீக்கரை நொறுக்கியிருந்தாள் தொல்லைநாயகி.
“தொ…ல்லை… லை… லை” எனக் கத்தியவள், இந்த மாசம் உனக்குச் சம்பளமே கிடையாது” என்றாள் மேனகா கடுப்புடன். அதற்குக் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் அசாதாரணமாக அவளை ஒரு பார்வை பார்த்து, “அஆங்… சொல்லமாட்ட யாமா நீயி” என நொடித்தவள், விரலை ஆட்டி ஆட்டி முணுமுணுப்பாக எதையோ கணக்குப் போட்டு, “உன்னோட அந்த மில்லி பெர்ச்சளியை உட்டு தொரத்த உட்டத்துக்கு ஒரு ஆயிரம், பொறவு மூன்னாளு என்னை மயக்கி வெச்சிருந்த இல்ல அதுக்கு மூவாயிரம், பொறவு தலீவர் பட டிக்கெட்டுக்கு ஆயிரம், பொறவு எங்க சாமி சொப்புளுவுக்கு உன்னை இட்டுக்கினு போனதுக்கு… அதுக்கு என் பக்கத்து வூட்டுக்காரி கிட்ட சீட்டு ஆட்டையபோட்டு குட்ததுக்கு எல்லாத்துக்கும் மொத்தமா” எனச் சொல்லிவிட்டு கன்னத்தை தட்டி யோசித்தவள், ஒரு மூவாயிரம்… ஹாங் அல்லாமா சேத்து” என விரலை விட்டு எண்ணியவன், “ஆறாயிரம்… மொத்தமா எண்ணி வெய்யி. இல்லனா ஜீ பேயில டேங்கர் பண்ணு” என்றாள் நாயகி கெத்தாக.
அவள் சொன்ன ‘மயக்கி வெச்சிருந்த’ ‘சொப்புளுவு’ ‘ஜீ பேயில டேங்கர் பண்ணு’ என்ற வார்த்தைகளிலும் அவளுடைய பாவனையிலும் வாய் விட்டு சிரித்தவள், ‘நல்லவேள, அந்த கெமிக்கலை இவ மேல டெஸ்ட் பண்ணது இவளுக்குத் தெரியாது. இல்லனா அதுக்கும் சார்ஜ் பண்ணியிருப்பா” என எண்ணியவாறு, “நாயகி செமையா தேறிட்ட போ” என அவளைப் புகழ்வது போல் கிண்டலாக சொன்னவள், “போனா போகுது… உன் பழைய கணக்குல கழிச்சிக்கோ. ஆனா இந்த மாச சம்பளம் கட்னா கட்தான்” என்று கறாராகச் சொல்லி, யம்மா… யம்மா… என அன்று முழுவதும் நாயகியைக் கெஞ்ச வைத்தாள் மேனகா.
அடுத்த மூன்று தினங்கள் வழக்கமாக அவளுடைய கல்லூரிக்குச் சென்றுவந்தாள் மேனகா.
தினமும், சந்திரமௌலி அவளை அழைப்பர் என அவள் எதிர்பார்த்து ஏமாந்துதான் மிச்சமாக இருந்தது அவளுக்கு.
ஆனால் நான்காவது நாள் அதிகாலையிலேயே அவளை அழைத்த ரீமா, “மௌலி சார் உன்னை உடனே வரச் சொன்னார். கார் அனுப்பியிருக்கேன். கிளம்பி வா” எனச் சொல்ல, அவள் குரலில் தொனித்த கட்டளையில் அப்படியே பற்றிக்கொண்டு வந்தது மேனகாவுக்கு. இருந்தாலும் அவள் இருந்த நிலையில் தன கோபத்தைக் காண்பிக்க இயலாமல் “சரி” என்று மட்டுமே சொல்ல முடிந்தது அவளால்.
அவள் உடனே கிளம்பி சந்திரமௌலியின் விருந்தினர் மாளிகைக்கு வர, வரவேற்பறையிலேயே தலையில் முட்டுக்கொடுத்து அமர்ந்தவண்ணம் சோக சிற்பமாக அவளுக்காகக் காத்திருந்தார் அவர்.
அவருடைய அந்த தோற்றம் அவளுக்குக் குழப்பத்தைக் கொடுக்க, “குட் மார்னிங் சார்” என்றவாறு அவரை நோக்கி வந்தாள் மேனகா.
அவருக்கு எதிரில் இருந்த இருக்கையை கையால் காண்பித்து ‘உட்கார்’ என்பதுபோல் அவர் ஜாடை செய்ய, அவர் பார்த்த ஒரு பார்வையில் அங்கே நின்றிருந்த ரீமா மற்றும் அவருடைய பாதுகாவலர்கள் அனைவரும் அங்கிருந்து அகன்றனர்.
“என்ன சார்… என்ன நடந்தது?” என அவள் கலவரத்துடன் கேட்க, “அவன் மறுபடியும் அங்கேயே போயிட்டான் மா” என்றார் அவர்.
எவ்வளவு அரும்பாடு பட்டு அவனை அங்கிருந்து மீட்டு வந்தாள் அவள். இவர் வெகு சாதாரணமாக அப்படிச் சொல்லவும், “என்ன?” எனக் கடுமையாகக் கேட்க வந்து அந்த தொனி சற்று இறங்கி அவள் கேட்ட விதத்தில், “என்னால அவனை கண்ட்ரோல் பண்ண முடியல. சுயநினைவு வந்ததும் ரொம்பவே கலாட்டா பண்ணிட்டான்” என பரிதாபமாகச் சொன்னவர், “எனக்கு உன்னை விட்டா வேற ஆப்ஷன் இல்ல. அதனால உன்கிட்ட கேக்கறேன். என் பையனை மறுபடியும் நீதான் இங்க கொண்டுவரனும்” என்றார் அவர் வெகு எதார்த்தமாக.
“இன்னா சார்… வெள்ளாட்றியா” எனப் பதறியவள், “அது ஒண்ணும் அவ்வளவு ஈஸி இல்லாங்காட்டியும் தெரிமா? அவங்க படா உஷாராயிருப்பாங்க அஆங்…” என்றாள் அவள். பதட்டத்தில் நாயகியின் பாஷையும் அவளுடைய உடல்மொழியும் அப்படியே வந்திருந்தது அவளுக்கு.
அவளை ஒரு விசித்திர பார்வை பார்த்தவர், “அதெல்லாம் இல்ல… உன்னால முடியும்… நீ செஞ்சுதான் ஆகணும்… அப்பத்தான் உன்னோட ரிசர்ச்சுக்கு ஸ்பான்ஸர் பண்ணுவேன்” என்றார் அவர் பக்கா வியாபாரியாக.
‘ஐயோ… கோட்ட மொதல்ல இருந்து போடசொல்லுதே இந்த பெரிசு’ என்ற எண்ணம் தோன்ற, பேச்சற்று நின்றாள் மேனகா
Ha ha super
Ipa game mouli ah enga poi mudiumo