You don't have javascript enabled
Monisha NovelsRomantic thriller

Virus Attack – 12

காதல் அட்டாக் -12

தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா என மூன்று மாநிலங்களின் எல்லைகளையும் பகிர்ந்துகொண்டு நீள நெடுகிலும் பரந்துவிரித்திருந்த மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு அடர் காட்டுப் பகுதியில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிர்மலானந்தாவின் ஆசிரம கிளை மய்யம் அது.

மிக அதிக பரப்பளவு நிலங்களை கையகப்படுத்தி அந்த ஆசிரமத்தை ஏற்படுத்தியிருந்தார்கள்.

குறிப்பிட்ட அளவு இடைவெளிகள் விட்டு ரிசார்ட் பாணியில் மரங்களும் களிமண்ணும் கொண்டு  வரிசையாக அமைக்கப்பட்டிருந்த ஓலை குடில்கள், பார்க்க  அவ்வளவு நேர்த்தியுடன் இருந்தன.

இடையிடையே பூத்துக் குலுங்கும் மலர்ச் செடிகள் வேறு கண்ணை பறிக்க, அவ்வளவு ரசனையுடன் உருவாக்கப்பட்டிருந்தது அந்த ஆசிரமம்.

தோலுடா, வெஜ்ஜே தும்பே வாலி தார்,

சூடே தில் தே புக்கர்… ஆஜா கர்லே யே ப்யார்…

தோலுடா, வெஜ்ஜே தும்பே வாலி தார்,

சூடே தில் தே புக்கர்… ஆஜா கர்லே யே ப்யார்…

தோலுடா… ஆஆஆஆ…

துணுக் துணுக் துன்… துணுக் துணுக் துன்…

துணுக் துணுக் துன் தா… தா… தா…

துணுக் துணுக் துன்… துணுக் துணுக் துன்…

துணுக் துணுக் துன் தா… தா… னா…

எனப் பின்னி பெடலெடுக்கும் பின்னணி இசை கேட்கவில்லையே தவிர… மற்றபடி அவ்வளவு ஆர்ப்பாட்டமாக அந்த ஆசிரமத்தின் உள்ளே நுழைந்தனர் அந்த சர்தார்ஜி…க்கள் இருவரும்.

அந்த காட்டின் எல்லை வரை பேருந்தில் பயணம் செய்து வந்தவர்கள் அதன் பிறகு, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாவண்ணம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த ஒரு சொகுசு காரில் வெகு சொகுசாகப் பயணம் செய்து அந்த இடத்தில் வந்து இறங்கியிருந்தனர் அந்த இருவரும்.

அடுத்த நொடி அவர்களை வரவேற்று அழைத்துச்செல்ல ஓடிவந்தார் அங்கே பொறுப்பிலிருக்கும் சிஷ்யர் ஒருவர்.

“நீங்க அவதார் சிங்க்” என நெடியவனையும், “நீங்க பல்பீர் சிங்” எனக் கொஞ்சம் கட்டையாக இருந்தவனையும் பார்த்துச் சொன்னவர், “என்ன நான் சரியா கண்டுபிடிச்சிட்டேனா?” என கேட்டு பெரிய சாதனை செய்துவிட்டவர் போலச் சிரித்தார் அவர்.

அதற்கு அந்த சர்தார்ஜிகள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து ஒரு சிறு விஷமப் புன்னகையை பரிமாறிக்கொள்ள, “பல்லே… பல்லே… சரியா சொன்னீங்கோ ஸ்வாமிஜி… சரியா சொன்னீங்கோ” என்றார் அவதார் சிங் என அவரால் அடையாளம்காணப்பட்டவர்.

பல்பீர் சிங் என்றழைக்கப்பட்டவர் மறுபடியும் நக்கலாகச் சிரித்துவைக்க, தாடி மீசைக்குள் ஒளிந்திருந்தாலும் அந்த சிரிப்பைக் கண்டுகொண்ட அவதார் அவரை முறைக்க, தன் பார்வையைத் தழைத்துக்கொண்டார் அவர்.

இதையெல்லாம் கவனிக்காமல், “உங்க ரெண்டுபேருக்கும் ஸ்பெஷலா ஒரு குடிலை ஒதுக்க சொல்லி பெரிய ஸ்வாமிஜியோட கட்டளை. உள்ளேயே எல்லா வசதியும் இருக்கு” என அவர் சொல்ல, “பஹுத் சுக்ரியா” என்றார் அவதார் சிங்.

அதற்கு புன்னகைத்தவர், “இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைல இருந்து உங்க வேலையை ஆரம்பிக்க சொல்லியிருக்கார் ஸ்வாமிஜி” என்று சொல்லிவிட்டு, “உங்க ஆளுங்கள்லாம் இன்னைக்கு நைட்டு வந்துருவாங்க இல்ல?” என்று கேட்க, “வந்துவாங்கோ… நீங்கோ கவலையே படவேணாம்” என்றார் அவதார்.

தானும் எதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக, “பகுத்து அச்சா… பகுத்து அச்சா” என்ற பல்பீர் மறுபடியும் ஒரு முறைப்பை அவதாரிடம் பெற்றுக்கொண்டு அடக்கினார்.

பேசிக்கொண்டே அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த குடிலை நோக்கி அந்த சிஷ்யர் போக அவரை தொடர்ந்தனர் மற்ற இருவரும்.

அந்த இடம் முழுவதிலும் பார்வையைச் சுழற்றியவாறே நடந்தபடி, “இன்னா மேன்காமா இது… இந்த எடத்த கண்டுக்கினா சாமியார் ஆஜரமம் மாதிரியே தெர்லியே. நம்ம ஊரு எமெலியேங்கள கொத்தோட தூக்கினு போயி அட்ச்சு வச்சிருந்தானுங்களே அந்த கூவத்தூரு ரெஜார்ட்டு கணக்கால்ல கீது! இங்க இந்த நீச்சல் கோலம் கீச்சல் கோளமெல்லா இருக்குமா குஜாலா கும்சா பண்ண?” என தன் தலையாய சந்தேகத்தைக் கேட்டாள் சர்தார்ஜி தோற்றத்திலிருந்த நம் தொல்லை, கிசுகிசுப்பான குரலில்.

இதுல உனக்கென்ன இவ்வளவு சந்தேகம். நம்ம அரசியல்வாதிங்க சாமியாருங்க எல்லாருமே குஜாலா கும்சா செய்யறவங்கதான? நீச்சல் குளமெல்லாம் கூட இருந்தாலும் இருக்கும். நீ போய் நீர்யானை மாதிரி குதி” என மற்றொரு சர்தார்ஜியாகியிருந்த மேனகா நொடித்துக்கொள்ள,

தன்னைப் பற்றிச் சொன்னதைக்கூட விட்டுவிட்டாள். ஆனால் மறைமுகமாக மேனகா நிர்மலானந்தாவை போட்டுத் தாக்கியதில் கடுப்பாகி, “யம்மா எங்க நிம்மி சாமி ஒண்ணும் அப்புடி இல்ல தெரிஞ்சிக்க. அவர பத்தி தப்பா பேசினா நாக்கு அழுவி பூடும் சாக்ரத… அஆங்” என தொல்லைநாயகி பாய்ந்துகொண்டு வரவும், ஏற்கனவே நாயகியின் பேச்சு அவளுக்குக் கொடுக்கும் தொல்லை போதாதென்று அவளுடைய அந்த கர்ண கடூரமான குரல் வேறு அவளை தாறுமாறாக எரிச்சல் படுத்த,  “போதும் அடங்கு! உன்னை மாதிரி ஆளுங்களாலதான் நாடு கேட்டு குட்டிச்சுவரா போகுது” என எரிந்து விழுந்தாள் மேனகா அப்பட்டமான ஆண் குரலில். அதில் கப்சிப் என வாயை மூடிக்கொண்டாள் நாயகி.

தலைக்கு மேலிருந்த டர்பன் பாதி நெற்றிவரை மூடி மறைத்திருக்க,  அடர் மீசை-தாடிக்குள் மறைந்து, மூக்கும் முழியும், கொஞ்சமே கொஞ்சம் முகமும் மட்டும்  மற்றவர்களுக்கு காட்சி கொடுக்க, மேனகா கண்டுபிடித்து வைத்திருந்த திரவத்தின் உபயத்தில் அவர்களுடைய குரலும் ஆண் குரலாக மாறியிருக்க, அவர்களே வாய் திறந்து சொன்னால் கூட அவர்கள் பெண்கள் என நம்ப மாட்டார்கள் யாரும் எனும் அளவுக்கு மாறிப்போயிருந்தனர் இருவரும்.

ஆனால் மண்டையை மறைத்தாலும் கொண்டையை மறக்கவில்லை எனக் காட்டும் விதமாக,  நம் தொல்லைநாயகியின் கையில் ஒரு கூண்டு இருக்க, அதில் கிரீச்சிட்டுக்கொண்டிருந்தது மில்லி.

நிர்மலானந்தரின் அந்த சிஷ்யர் மில்லியை வினோதமானஒரு பார்வை பார்த்துக்கொண்டே ஒரு குடிலுக்குள் நுழைய, அவரை பின் தொடர்ந்து மேனகாவும் நாயகியும் உள்ளே நுழைந்தனர்.

இப்படியே பேக் டோர ஓபன் பண்ணா வாஷ் ரூம் இருக்கு. ரெப்ரெஷ் பண்ணிட்டு வெயிட் பண்ணுங்க சாப்பாடு அனுப்பறேன்” என்று சொல்லவிட்டு அவர் சென்றுவிட, தரையிலேயே போடப்பட்டிருந்த மெத்தையில் போய் ஆயாசமாக உட்கார்ந்தாள் அவதார் சிங் வடிவிலிருந்த மேனகா.

அதற்குள் பணியாளர் ஒருவர் அவர்களுடைய பயண பெட்டிகளைக் கொண்டுவந்து வைத்துவிட்டுச் செல்ல, மில்லியின் கூண்டை ஒரு ஓரமாக வைத்துவிட்டு கவனமாகக் கதவை தாளிட்டு வந்த நாயகி, “இந்த தாடி… மீச… வெங்காய கோணி கணக்கா இந்த கோட்டு எல்லாம் படா பேஜாராகீது. இந்த கருமத்தையெல்லாம் எப்ப கழட்டி கடாசலாம்” என படபடவென பொரிந்தாள் நாயகி.

அவள் இவ்வளவு நேரம் அடக்கி வாசித்ததே பெரிய விஷயம் என்பது புரிந்தாலும், “இதோ பாரு நாயகி! நான் ஒண்ணும் இங்க வரச்சொல்லி உன்னைக் கம்பல் பண்ணி கூட்டிட்டு வரல. உன் சாமிய சைட் அடிக்கணும்னு நீதான் என்னை கெஞ்சி கேட்டு இங்க வந்திருக்க. இப்படி புலம்பறதா இருந்தா இப்பவே இங்க இருந்து கிளம்பு” எனக் கறாராக மேனகா சொல்ல, “பரவால்ல… பரவால்ல… நான் அடுசஸ்ட் செஞ்சுக்கறேன். நீ காண்டாயி சாமிய சைட்டு அடிக்கறேன் அது இதுன்னு கேவலமா பேசாத அஆங்” என இறங்கி வந்தாள் நாயகி.

பின் தங்களைச் சுத்தப்படுத்திக்கொண்டு மறுபடியும் அவர்களுடைய அந்த ஒப்பனையை சரிபார்த்துக்கொண்டு ஓய்வாக வந்து அவர்கள் உட்காரவும் அவர்களுக்கான உணவு வரவும் சரியாக இருந்தது.

இருந்த பசிக்கு அதை ஒரு கட்டுக் கட்டிவிட்டு, மில்லிக்கும் இலை தழைகளை சாப்பிட கொடுத்துவிட்டு  படுக்கையில் சரிந்தனர் இருவரும்.

பல மணிநேர பயணம் கொடுத்த களைப்பில் உறக்கம் அப்படியே ஆட்கொண்டது அவர்கள் இருவரையும்.

*

சந்திரமௌலி மேனகா விடம் மறுபடியும் விஷ்வாவை அழைத்துவரச் சொன்னதற்கும் அவள் இந்த ஆசிரமத்திற்கு வந்ததற்கும் இடைப்பட்ட மூன்று மாத காலத்திற்குள்  ஒரு பெரிய ஃபிளாஷ்பேக்கே நடந்து முடிந்திருந்தது மேனகாவின் வாழ்க்கையில்.

விஸ்வா கடத்தப்பட்டு, சுயநினைவுக்கு வந்து, அவன் மறுபடியும் அந்த ஆசிரமத்திற்குத் திரும்பிய பிறகு, அங்கே கெடுபிடி அதிகமாகிப்போயிருக்க, மறுபடியும் அதன் உள்ளே நுழைவதென்பது ஒன்றும் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை அவளுக்கு.

இதில் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் தான் எப்படிக் கடத்தப்பட்டோம் என்பது ஒரு துளி அளவேனும் கூட விஸ்வாவுக்கு தெரிந்திருக்கவில்லை.

அதனால் ஆசிரமவாசிகளின் கவனம் மொத்தமும் சந்திரமௌலியிடம் மட்டுமே இருக்க, மேனகா என்ற ஒருத்தி அங்கே எந்த இடத்திலும் வரவே இல்லை.

அந்த காலத்து மாயாஜால கதைகளில் வருவதுபோல, ஏழு மலை ஏழு கடல் கடந்து மறைத்து வைக்கப்பட்டிருக்கும் புதையலைப் போல யாருமே அணுக முடியாத படி நிர்மலானந்தாவால் ஒரு ரகசிய இடத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்தான் விஸ்வா.

முன்பாவது விஸ்வா எங்கே இருக்கிறான் என்ற தகவலாவது சந்துருவை எட்டிவிடும். ஆனால் இப்பொழுது அதற்கும் வழி இல்லாமல் போனது.

தவியாய் தவித்துத்தான் போனார் மனிதர். தான்தான் தவித்தார் என்றால் மேனகாவையும் பாடாய் படுத்திக்கொண்டிருந்தார் அவர்.

அவ்வளவு பண பலம் ஆள் பலம் கொண்ட அவராலேயே முடியவில்லை என்றால் எங்கே என்று போய் தேடுவாள் அவள். அவனைக் கண்டுபிடித்து அழைத்துவரவில்லை என்றால் அவளுடைய ஆராய்ச்சிக்கு அவர் உதவ மாட்டார் என்ற நிலை போய் அவளுடைய படிப்பிற்கும் பங்கம் வரும் என்கிற நிலை உருவாகிவிட்டது அவளுக்கு.

அதாவது அவள் அவனை அழைத்துவரவில்லை என்றாள் அவளுடைய படிப்பைக் கைவிடவேண்டிய நிலையை உருவாகிவிடுவேன் என அவளை நேரடியாகவே மிரட்ட ஆரம்பித்திருந்தார் சந்திரமௌலி.

விஸ்வா எங்கே இருக்கிறான் என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னால் அவனை மறுபடி அழைத்துவர முயற்சி செய்கிறேன் என்ற வாக்குறுதியை அவள் கொடுத்தபின்தான் சற்று அடக்கினார் சந்துரு. அதுவும் தாற்காலிகமாகத்தான்.

அவளுக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை அவ்வளவுதான். ஆனால் கிட்டத்தட்ட அந்த நிலையில்தான் இருந்தாள் மேனகா.

அப்பொழுதுதான் ‘விஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப்  பயோ மெடிக்கல் ரிசர்ச்’ ஆராய்ச்சி கூடத்தின் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டார் அந்த பெண்மணி – சகுந்தலா.

ரஷ்யாவில் உள்ள ஒரு பிரபல மரபியல் ஆய்வகத்தில் பணியிலிருந்தவர், அவருடைய தகுதி மற்றும் முன்னனுபவம் காரணமாக அங்கே வேலையில் அமர்த்தப்பட்டிருந்தார்.

ஒரு வியப்பு என்னவென்றால் மற்ற பேராசிரியர்கள் எல்லாம் பதில் கொடுக்க இயலாமல் தெறித்து ஓடும்படி மேனகா கேட்கும் பல கேள்விகளுக்கு சகுந்தலாவிடம்தான் பதிலிருந்தது.

எல்லோரும் அவளை ‘லூசு’ என தூரத்தில் நிறுத்திவைப்பதற்குத் தகுந்தாற்போல அவள் அணியும் கோமாளித்தனமான உடைகளும் அவளுடைய தோற்றமும் ஏதோ ஒரு உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருப்பதுபோல் அவள் நடந்துகொள்ளும் விதமும் முதலில் அவளை உன்னிப்பாக கவனிக்க வைத்தாலும் அறிவு பொங்கி வழியும் படி அவள் கேட்கும் கேள்விகள், வியப்புடன் சகுந்தலா, மேனகாவை பார்க்கும்படி செய்தது.

ஒரு சில நாட்களுக்குள்ளேயே இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் உருவாகிவிட்டிருந்தது.

அது மேனகாவை சகுந்தலாவின் வீடுவரை செல்லவைத்தது. பதினான்கு வயதே ஆன அவருடைய மகன் பரத்துடன் அன்புடன் பழகவும் வைத்தது.

நாயகியைத் தவிர மனதிற்கு நெருக்கமான ஒருவர்கூட இல்லாத மேனகாவுக்கு நட்பாக சகுந்தலாவும் பரத்தும் கிடைத்தார்கள் என்றால் அது மிகையில்லை.

சகுந்தலாவின் கணவர் குரு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியில் இருக்கிறார் என்று மட்டும் தெரியும் அவளுக்கு. அவரை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் அவளுக்கு அமையவில்லை.

இது அனைத்தையும் விட சகுந்தலாவைப் பற்றி அவள் அறிந்துகொண்டது என்னவென்றால் அவர் ‘குளோனிங்’ பற்றிய ஆராய்ச்சியில் பல வருடங்களாக ஈடுபட்டிருக்கிறார் என்பதுதான்.

ஆனால் தன்னை பற்றிய எதையும் அவளுடைய தனிப்பட்ட ஆராய்ச்சி உட்பட சகுந்தலாவிடம் இதுவரை சொன்னதில்லை அவள் .

ஒருபக்கம் இப்படிச் சென்றுகொண்டிருக்க, மற்றொருபுறம் விஸ்வா எங்கே இருக்கிறான் எனத் தேடித் தேடி அலுத்துப்போனார் சந்திரமௌலி.

அந்த சந்தர்ப்பத்தில்தான் இப்படி ஒரு புதிய ஆசிரமத்தை அவர்கள் கட்டமைத்துக்கொண்டிருப்பது நாயகி மூலம் தெரியவந்தது மேனகாவுக்கு.

ஒருவேளை விஸ்வா அங்கே இருக்கக்கூடுமோ என்ற வலுவான சந்தேகம் எழ, அவனை சீக்கிரம் கண்டுபிடித்துக் கொடுத்துத் தொலைத்தால் அவளுடைய ஆராய்ச்சியை சீக்கிரம் தொடங்கலாம் என்ற நப்பாசையில் அதன் உள்ளே நுழையத் தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அவள்.

அப்பொழுதுதான் எதிர்பாரா விதமாக சந்திரமவுலிக்குச் சொந்தமான வீ.என் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார் தர்மானந்தா. அதாவது நிர்மலானந்தாவின் அந்த குண்டு சிஷ்யர்.

*

அன்றைக்கென்று பார்த்து அடுக்களையில் எதையோ செய்யப்போய், மேனகாவின் கவனம் அடுப்பில் காய்ந்துகொண்டிருக்கும் பாலிலிருந்து மாறி அவளுடைய கனவு ஆராய்ச்சியின்பால் சென்றுவிட,  கூடவே சந்திரமௌலி விஸ்வா போன்றவர்கள் பற்றிய எண்ணங்கள் வேறு அணிவகுத்து நிற்க, இப்படி  அவளுடைய சிந்தனைகள் ஒன்றோடொன்று தங்களுக்குள்ளேயே நடத்திக்கொண்டு தாக்குதலில் கடைசியில் காயம்பட்டதென்னவோ மேனகாவுக்குத்தான். அதாகப்பட்டது சூடான பாத்திரத்தை  வெறும் கையால் அப்படியே தொட்டு தன் விரல்களைத் தீய்த்துக்கொண்டாள் அவள்.

கல்லூரிக்கு வந்த பிறகும் வேலையில் கவனம் செலுத்த இயலாமல் எரிச்சலும் வலியும் அவளைப் பாடாய்ப் படுத்த, அதற்கு மருத்துவம் செய்துகொள்ளும்படி அவளை வற்புறுத்தி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார் சகுந்தலா.

அப்பொழுது அங்கே சிறு காவிக் கூட்டம் கண்ணில் படவும் அவளுடைய பார்வை கூர்மை அடைய,  அதிர்ஷ்ட வசமாக தர்மானந்தாவை அவள் பார்க்க நேர்ந்தது. ஒரு விபத்தில் காயம் பட்டு அவசர சிகிச்சைக்காக அங்கே அழைத்துவரப்பட்டிருக்கிறார் அவர் என்பதும் புரிந்தது. அதிக பாதிப்பு இல்லை போலும், காலில் மட்டும் சிறு அடிபட்டிருக்க தெளிவாகத்தான் இருந்தார் அவர்.

இப்படியே போய் அவரிடம் பேச்சுக்கொடுக்கலாம் என்று பார்த்தால், அதற்கு வாய்ப்பே இல்லை, காரணம் நிர்மலானந்தாவின் கொள்கை படி அவர் சகஜமாகப் பெண்களிடம் பேசமாட்டார் என்பது விளங்க, அவரிடம் பேச வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற முடிவுக்கு வந்தவள் சந்துருவிடம் பேசி சில ஏற்பாடுகளைச் செய்துமுடித்தாள்.

அதன்படி ஏதேதோ காரணங்கள் சொல்லி அங்கேயே தங்கவைக்கப்பட்டார் தர்மானந்தா. மயிரிழை அளவுக்கு அவருடைய காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்க அதற்காகத் தலையில் எம்.ஆர்.ஐ எடுக்கவேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டிருந்ததால், உயிர் பயத்துடன் அந்த பரிசோதனை பிரிவில் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு அதற்காகக் காத்திருந்தார் அவர்.

அப்பொழுதுதான் அவருக்கு அருகில் மற்றொரு சக்கர நாற்காலி வந்து நின்றது. அதில் அமர்ந்திருந்தார் அவதார் சிங். இல்லையில்லை அந்த வேடத்திலிருந்த மேனகா.

அந்த சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு வந்த, அந்த மருத்துவனைச் சீருடையிலிருந்த ஆயாதான் ஆனாலும் கொஞ்சம் அதிக கோபத்துடன் காணப்பட்டார்.

காரணம்,  ‘வீல் சேர டாக்டர்ஸ் தள்ளமாட்டாங்க. ஆயாம்மாதான் தள்ளுவாங்க. அதோட நீ பேசற ஸ்லாங்குக்கு டாக்டர்னு சொன்னா ஒருத்தனும் நம்ப மாட்டான்’ என்று ஏதோ ஒன்றைச் சொல்லித் தட்டிக்கழித்து  அவள் அதிகம் ஆசைப்பட்டுக் கேட்ட மருத்துவர் கதாபாத்திரத்தை அவளுக்கு கொடுக்காமல், இப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தைக் கையில் கொடுத்ததற்குத்தான் அந்த கோபம்.

ஆம் நம் தொல்லை நாயகிதான் அந்த ஆயா!

அப்பொழுது இயல்பாக ஆரம்பித்த அறிமுகம், பின்பு ஓரிரு நாட்களுக்குள்ளாகவே நட்பாகி, வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் நிலைக்கு வந்து நின்றது.

சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், அவதார் வேடத்திலிருந்த மேனகா நிர்மலானந்தாவை புகழோ புகழென்று புகழ்ந்து தள்ளி, “நிர்மலா ஸ்வாமிஜி இவ்ளோ பவர்ஃபுல்லா இருக்கோ உங்ளே மாதீரி டிசைப்பிள்தான் காரணம்ஜீ” என்று வஞ்சனையில்லாமல் ஐஸ் வைக்க. உச்சி குளிர்ந்தே போனார் தர்மா.

ஆனாலும், அந்த ஆசிரமத்தில் பிரபலமாக இருப்பவன் என்ற முறையில் விஸ்வாவை பற்றிய பேச்சை எடுத்தால் மட்டும் அவர் வாய் பூட்டுப் போட்டுக்கொள்ளும்.

விஸ்வா காணாமல் போன சமயம் நிம்மியிடம் அவர் வாங்கி கட்டிக்கொண்டது அப்படி.

ஆனால் புதிய ஆசிரமத்தைப் பற்றிய தகவல்களை சரளமாக கொடுத்தார் அவர். அதன்படி, அந்த புதிய ஆசிரமம் முழுவதிலும் கண்காணிப்பு கேமராக்களை பதிக்கும் ஒப்பந்தத்தைக் கைப்பற்றினாள் மேனகா. அதாவது அவதார் சிங்.

ஒருவார காலத்திற்குள் அதற்காகவே ஒரு சிறிய நிறுவனத்தை விலைக்கே வாங்கினார் மகனுக்காக எதையும் செய்யும் மனநிலையில் இருக்கும் சந்திரமௌலி.

ஒரு நாள் கூத்தென்று அவள் போட்ட அந்த சிங் வேடத்தைத் தொடர வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிப்போனது மேனகாவுக்கு.

விஸ்வாவை தேடி மேனகாவின் வேட்டை தொடரும்..

One thought on “Virus Attack – 12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content