You don't have javascript enabled
Romancesivaranjani novels

Vithai 8 & 9



விதை 8

       அவர்கள் புறப்பட்டு  போகும் பொழுது, வந்தனா கேட்டாள்.

     “அதிதியும் அமர் சாரும்  என்ன செய்றாங்க? அவ கூட பேசியே ரொம்ப நாள் ஆச்சு.உன் கூடவே கடலை போட்டுட்டு சுத்தறேன். அவங்கலாம் மெச்சூர்ல. நம்மள போலலாம் அலப்பறை செய்ய மாட்டாங்க ”  என்றாள்.

     அவனோ, “ம்க்கும்! நம்ம எவ்ளவோ தேவலாம்.அவங்க பண்ற சின்ன புள்ளத்தனம்லாம் பார்த்தா உன் வாயில வாடிகன்  சிட்டியே போற அளவு வாய பொளந்திருவ”  என்று சலித்துக்கொண்டான்.

      அவள் அதிர்ச்சியாய்  மலர்ச்சியாய் விழியும் இதழும்  விரித்தவள்,அப்டி என்னடா பண்றங்க என்றாள்.

    “ம்ம்ம்ம்!  அக்கட  சூடு”  என்றான். அங்கே அதிதியும் அமரும் ஒரு டேபிளில்  ஒருவரை ஒருவர் பார்த்தவாறே அமர்ந்திருந்தனர். இடையில் எத்தனை கேண்டில் வேண்டுமானாலும்  பற்றவைத்துக்கொள்ளலாம்  என்ற அளவில் இருந்தது அவர்களின் பார்வை உரசலின் வீச்சு.

     அவள் ஆச்சர்யமாகப் பார்த்து சிரிக்கவே,”இதெல்லாம் ஒண்ணுமே இல்ல, இவங்க ஓட்ற ரோமேன்ஸ்லாம் ஓவராவும் இருக்கு, ஓல்டாவும்  இருக்கு.”

     “ரியலி? நம்பவே முடில”

  “அவங்க கண்ல இருந்து அணுகுண்டு தயாரிக்கட்டும். நம்ம போலாம் வா”  என்று கூறி அழைத்துச் சென்றான். அவர்கள் செய்யும்  அலப்பறைகளையும் கூறினான்.

     ஒருநாள் அதிதியின் கூந்தல் காற்றில் அலைபாய்ந்து இறுதியில் அமரின் சட்டையில்  அலைபாய்ந்து பட்டனில் மாட்டிக் கொண்டது .

அது தெரியாமல் அவள் நகரவே  சிறிது கூந்தல் அவன் சட்டையுடன்  மாட்டிக்கொண்டது. அதனை எடுத்து பத்திரப்படுத்தி  வைத்திருந்தான்.

     அதோடு நில்லாமல், தினமும் காலையில்  அவளுக்கு ரோஜா தருவது, மாலையில் வாடிய ரோஜாவைத்  திரும்ப பெறுவது  என்றிருந்தான். காலையில் கண்டிப்பாக ACC வந்துவிட்டுத்தான் அவன் அலுவலைப்பார்க்கச் செல்வான். மாலையில் வந்து வாடிய ரோஜாவைப் பெற்றுக்கொண்டே செல்வான்.

      அவனால் வர இயலாமல் போகும் என்றறிந்தால்  மொத்தமாக  ரோஜா வாங்கித்தந்துவிடுவான். அவளிடமும் வாடிய பூக்களை மொத்தமாக பெற்றுக்கொள்வான்.சில நாட்கள் மல்லியும்  இருக்கும்.

        அவள் கூந்தலையும், அவள் சூடிக்கொடுத்த மலரிதழ்களையும், நூலினையும்  வைத்துப் பள்ளி, கல்லூரியில்  கற்ற மொத்த  வித்தையும் இறக்கி, அவள் உருவத்தை  ஒத்த  ஒரு அழகான   கொலேஜ் செய்து அவன் அறையில்  பிரேம்  செய்து மாட்டினான்.

       அவள் ஜீன்ஸ் படத்தை  ஓவர் டோஸில் பார்த்திருப்பாள் போலும். அவன் உபயோகித்துத்  தூக்கி எரியும் எதையும் விட்டு வைக்காமல்  அள்ளிச் சென்று அவளும் தன் கைவரிசையைக் காட்டி நிறைய கைவினைப்பொருட்கள்  செய்து வைத்திருந்தாள்.

       அவளை ஊஞ்சலில் அமர வைத்து ஊஞ்சல் ஆட்டி விடுவது, இருவரும் அமர்ந்தே  ஆடுவது, அவள் உடைக்கவென காற்றுக்குமிழ்களை  ஊதுவது, அதற்கிடையில்  புகைப்படம், பலூன்  ஊதித்  தரச் சொல்லி, அக்காற்றினை  முகத்தில் விட்டுக்கொள்வது, பலூனில்  மலர்கள் போட்டு அதனை ஊதி அவள் தலைக்கு மேல் உடைத்து  மலர்களால்  அர்ச்சிப்பது, இதற்கெல்லாம் கவிதை வடிப்பது என்று அவர்களின் காதல் அலப்பறைகள்  ஏராளம்.

        விதியின் சதியோ என்னவோ,இவர்கள் எது  செய்தாலும், யார் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு செய்தாலும் வர்ஷனிடம்  வசமாக  மாட்டிக்கொண்டு  அசடு வழிவார்கள்.

  இதெல்லாம் கேட்டு வந்தனா விழுந்து விழுந்து  சிரித்தாள்.

      “உன் ப்ரண்ட், அவன் போட்ட கருவேப்பிலையத்தான்  விட்ருக்காங்க. விட்டா அதையும்  கழுவி எடுத்துட்டு  போனாலும்  போவாங்க.”

“நோ நோ கழுவாம, கழுவிட்டா பீல் போயிறுமே”

    “டேய்!  ஓவரா கிண்டல் பண்ணாத”

   “இல்லடி!  எனக்கு ஆச்சர்யம் தாங்கல. மத்த டைம்லலாம்  கில்லி போல இருக்காங்க, அமரைப் பார்த்துட்டா  கள்ளி ஆயிட்றாங்க. அவனும் அதே போலதான் இருக்கான்.”

    “காதல் யாரையும் எப்படியும்  மாத்தும்  போல” என்றாள், மகிழ்வுடன்.

ஆனால் பாவம் இவர்கள் மகிழ்ச்சியெல்லாம் வெகு விரைவில் கரைந்து காற்றில் காணாமல் போகப் போகப் போவதை  அவர்கள் யாரும் அறியார்.

     அதிதியும் அமரும் வீட்டில்  பேசி சம்மதம் வாங்கிவிட்டார்களே தவிர, இன்னும் இரு குடும்பமும்  நேரில் சந்தித்து  பேசிக்கொள்ளவில்லை. எனவே அமர் வீட்டினர்  அதிதி வீட்டில் சென்று பேசி திருமணம் குறித்து முடிவு செய்யலாம் என்று முடிவெடுத்தனர்.

     எனவே அமர் தன் பெற்றோருடன் அதிதி வீட்டிற்குச்  சென்றான். அங்கே அதிதியின் பெற்றோரைப்  பார்த்ததுமே  அமரின் அன்னைக்கு ஏதேதோ தோன்ற புது விதமாக உணர்ந்தார். தலை சுற்றுவது  போல் இருந்தது.

          சுதாரித்துக்  கொண்டிருந்தவர்  அதிதியைப்  பார்த்த உடன் மயங்கிவிட்டார். அனைவரும் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகினர். அவரைப்  பரிசோதித்த  அமரின் தந்தை, ஏதோ பெரிய ஷாக் போல தோணுது.பட் அப்டி ஒன்னும் நடக்கலையே  என்று வியந்தார்.அனைவரும் குழம்பி தவித்திருக்கயில்  விழித்தார்  அமரின் அன்னை.

        அதிதியைப் பார்த்தவர், கதறி அழுதார். அவள் கன்னம் தடவி  ஆச்சர்யத்துடன்!

  “அமரா  உனக்கு ஒன்னும் ஆகலையா? என்னமா இப்படி பண்ணிட்ட. எங்களலாம் விட்டுட்டு  போக உனக்கு எப்டிம்மா  மனசு வந்துச்சு” என்று சம்பந்தம் இல்லாமல் புலம்பி  கதறி அழுதார். அமரைப் பார்த்தவர்,

     “ஆதி உனக்கும்  ஒன்னும் ஆகலையா? ஏம்பா  இப்டி செஞ்ச.நாங்க உங்களுக்கு என்ன குறை  வச்சோம். ஏன் இப்டி செஞ்சீங்க”  என்று அரற்றியவாறே  மீண்டும் மயங்கினார்.

       அனைவரும் குழப்பத்தின் உச்சிக்கே  சென்றனர். அதிதி மிகுந்த கவலையுற்றாள்.

   “ஏதோ ரொம்ப  அபநார்மலா தோணுது அமர்.அவங்க என்னை பார்த்தப்பறம்தான் அப்டி ரியாக்ட் செஞ்சாங்க. திரும்ப என்னை பார்க்க வேண்டாம்.ஃபிசிக்கலி எந்த ப்ராப்லமும்  இல்ல.சோ நீங்க வீட்டுக்கு போய்டுங்க. அவங்க கொஞ்சம் ஸ்டேபிள் ஆனதும்  என்னனு பார்ப்போம்” என்றாள்.

      அதுவே  அனைவருக்கும் சரியாகத் தோன்ற,அவர் மயக்கம் தெளிவதற்குள் அவரைத்  தூக்கி காரில் ஏற்றிக்கொண்டு  புறப்பட்டுவிட்டனர். அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும்.

       ஆனால் மேலும் தாங்க முடியாத அதிர்ச்சியும் கவலைகளும்  காத்திருந்தன  அவர்களுக்காக.

       மீண்டும் விழிப்பு வந்த உடன் அமரின் அன்னை, “அமரா அமரா”  என்று அரற்ற  ஆரம்பித்தார்.

       அவரருகில்  சென்ற அமர், “என்ன வேணும் மா” என்றான்.

       “ஆதி, அமரா எங்க, அவ நல்லா இருக்காளா? இப்போ பார்த்தேனே, அதுக்குள்ள எங்க போய்ட்டா?நான் அவளைப்  பார்க்கணும்” என்று கத்த ஆரம்பித்தார்.

     அவரைக்  கட்டுப்படுத்தவே இயலவில்லை. அமராவைப்  பார்க்கணும் என்று தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்தார். இவர்கள் கூறுவது  எதுவும் அவர் காதில்  விழுந்ததாகவே  தெரியவில்லை.

      அவர் அதிதியைத்தான் அமரா என்று அழைக்கிறார்  என்று புரிந்து, இங்கதான்  பக்கத்துல போயிருக்கா,இப்போ வந்திருவா  என்று அவரை  ஒரு வழியாக அமைதிப்படுத்தி  அதிதியை அழைத்தான்.

      அதிதி உடனே விரைந்து  சென்றாள்.அவரின்  கை பற்றி அவரைக் கவலையுடன் நோக்கினாள். அவரும் எதுவும் பேசாமல் அவள் கண்களையே  பார்த்தவர், மீண்டும் மயங்கினார்.

      “அமர் சம்திங்  அப்நார்மல் அண்ட் வெரி சீரியஸ். கொஞ்சம் சைக்காலாஜிகலாதான்  ட்ரீட் செய்னும்” என்று கூறினாள்.

      அவர் மீண்டும் மயக்கம் தெளிந்து லேசாக  முனரும் பொழுதே, அவரை மடியில் சாய்த்துக்கொண்டு  அவர் அவளைக் காணாதவாறு அமர்ந்து கொண்டாள்.அவர் விழித்ததும்,

     “அமராவும் ஆதியும் நல்லா இருக்காங்க.அவங்க இனிமேலும்  நல்லா இருக்கணும்னா  நான் சொல்றதை அப்டியே கேளுங்க” என்று  அவரை  சைக்கலாஜிக்கல் முறைப்படி ஆழ்நிலை  உறக்கத்திற்குக் கொண்டு சென்று பேசினாள்.அப்போது அவர் கூறிய தகவல்களில்  புரிந்த விஷயங்கள் கண்டு அனைவரும் விக்கித்து  நின்றனர்.

விதை 9

      1945: சாரதா சபரீஷ் தம்பதிகளின் மகன்  ஆதித்யா. இவர்கள் இந்து மதத்தினைப்  பின்பற்றுவோர்.

சாரா  சாபிர்  தம்பதிகளின் மகள் அமரா.இவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள் .இரு குடும்பமும் அண்டை  வீட்டினர்.இரு குடும்பமும் நட்புடன்  பழகி வந்தனர். சாபிர், சபரீஷ் இருவரும் ஒன்றாக  கதர் கடை  வைத்து நடத்தி வந்தனர்.

  அவ்வப்பொழுது  அந்நிய  ஆடை எதிர்ப்புப் போராட்டத்திலும்  ஈடுபட்டு  வந்தனர்.

      ஆதிக்குப்  பத்து வயது இருக்கும்பொழுது அமராவிற்கு  ஐந்து  வயது. வேண்டாம் வேண்டாம் என்று எவ்வளவு கூறியும் அடமாக சேற்றில் விளையாடிக் கொண்டிருந்த அமராவை ஆதி கோபத்தில் அடித்து  விட்டான். அதிகமாக  சேற்றில்  விளையாடினால் அவளுக்கு புண்  வந்துவிடுகிறது. அதனால் அவளை அகற்றும்  வழி அறியாமல் அடித்துவிட்டான்.

     அமரா  அழுது அமளி செய்துவிட்டாள். ஆதி அம்மாவிடம்  சென்று ஓவென்று அழுது ஆர்ப்பாட்டம்  செய்தாள். ஆதி அம்மாவிற்கு  அமரா செல்லம். அமரா அம்மாவிற்கு ஆதி செல்லம். ஏனோ, நிறைய குழந்தைகள் பிறக்கும் அக்காலத்திலும்  இருவருக்கும் ஒரு குழந்தைக்கு  மேல் பிறக்கவில்லை.

       ஆதி அம்மா ஆதியைக் கூப்பிட்டுக்  கண்டித்தார். “என்னடா பெண் பிள்ளையை  அடிக்கும் பழக்கம். இனி அவ அழுதா உன்னதான் அடிப்பேன். அவள் அழாமல் பார்த்துக்கறது உன்னோட பொறுப்பு” என்றார்.

      அது ஆதி மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அன்றிலிருந்து அமராவை அவன் எதற்கும்  அழ விட்டதில்லை.அதுவே இருவருக்கும் இடையில் ஆழ்ந்த பாசமாக  மாறியது.

      மரத்தில்  ஊஞ்சல் கட்டி,அமராவை ஆட்டிவிடுவது, மரத்தை உலுக்கி  பூக்கள்  கொட்ட  வைப்பது, இருவருக்கும் மிகவும் பிடிக்கும்.அமராவிற்கு ஆதி தலை பின்னி விடுவான். அவன் மென்மையாக  பின்னுவது  அமராவிற்கும், அவள் கூந்தலின்  மென்மை ஆதிக்கும்  மிகவும் பிடிக்கும்.

    அமராவின்  பெற்றோரை  ஆதியும்,ஆதியின் பெற்றோரை அமராவும் அத்தை மாமா  என்றே அழைப்பர்.அதனாலோ  இல்லை எதனாலோ, அவர்களின் பாசம் காதலாக  மாறியது.

     பால்ய  விவாகம் மலிந்திருந்த காலம் அது.ஆண் பெண் நட்பெல்லாம்  சிறு பிள்ளைகளுக்கும்  அனுமதிக்காத காலம்தான்  அது. சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபடும்  குடும்பங்கள் என்பதாலோ  என்னவோ, சற்றே முற்போக்கு  சிந்தனையுடன்  இருந்தனர்.பால்ய விவாகத்தில் உடன்பாடு இல்லாதிருந்தனர்.

  எனவே அமரா பருவமெய்தும்  வரையிலுமே இருவரும் பழகுவதை இரு பெற்றோரும் தடுக்கவில்லை. இரு குடும்பங்களும் ஒரு குடும்பம் போல் பழகியதும், பிடிவாதம் பிடிக்கும் அமராவை ஆதியால்தான் கட்டுப்படுத்த முடியும் என்பதும்  இதர  காரணங்கள்.

அதன் பின் இருவரையுமே  கட்டுப்படுத்த, அதுவே  ஏக்கமாக  மாறியது.

அவ்வப்பொழுது பெற்றோருக்குத் தெரியாமல் பேச ஆரம்பித்தனர். ஒருவரை விட்டு ஒருவரால்  இருக்க முடியவில்லை.திருமணம் செய்து கொண்டால் மட்டுமே இருவரும் இறுதிவரை  ஒன்றாக இருக்க முடியும் என்று தோன்ற,அந்த எண்ணமே  அவர்கள் காதலை வளரச் செய்தது. இவ்வாறே  வருடங்கள் ஓடின.

     அமராவிற்கு வீட்டில் மாப்பிள்ளை  பார்க்கவே, இருவரும் வேறு வழியின்றி  தங்கள் காதலை வெளியிட்டனர். இரு குடும்பமும்

அதிர்ந்தார்கள் என்று கூறுவதெல்லாம் மிகக் குறைவான வார்த்தை.

இரு குடும்பமும் திட்டவட்டமாக  அவர்கள் காதலை மறுத்துவிட்டனர்.

என்னதான் பிற விஷயங்களில் முற்போக்காக இருந்தாலும் திருமணம் என்று வந்த பொழுது, அதனை இரு குடும்பங்களும் ஏற்க தயாராய்  இல்லை.

    இரு குடும்பமும் அடித்துக்கொள்ளவில்லை. ஆனால் அதன்பிறகு  பேசிக்கொள்ளவும்  இல்லை.அமராவின் குடும்பம் வேறு ஊரிற்குச்  சென்றுவிட்டனர்.

அமரா கிளம்பும்  முன் இவர்கள் வீட்டிற்கு  வந்து ஆதியின் அம்மாவிடம்  கெஞ்சி கதறி அழுது பார்த்தாள். அவரும் மௌனமாக  அழுதார். அதற்குள் அமராவின் அம்மா வந்து அழைத்துச் சென்றுவிட்டார். அமரா ஆதியையும், அவன் அன்னையையும்  மாறி மாறிப்  பார்த்து, கண்களில் நீர் மல்க  ஏக்கத்துடனே சென்றுவிட்டாள்.

    ஆதியும் அனைவரிடமும் எவ்வளவோ பேசிப் பார்த்தான். ஒருவரும்  மசியவில்லை. அமராவின் அழுகையும்  அவள் கண்ணீர் நிறைந்த ஏக்கம் மிகு  கண்களும்  அவன் மனக்கண்ணில்  வந்து வந்து அவனைப் பிசைந்து எடுத்தது.

        ஆதியின் பிரிவில்  உழன்று  கொண்டிருந்த அமராவிற்கு, திருமணம் முடிவு செய்தது, இதயத்தில்  இடியென இறங்கியது. அவளும் எவ்வளவோ போராடிப் பார்த்தாள்.குறைந்தபடணம் வேண்டாம் என்று கதறிப் பார்த்தாள்.எதற்கும் அவர்கள் மசியவில்லை.அவளால் வேறு ஒரு ஆடவன்  அருகில் நிற்கக்கூட  இயலும் என்று தோன்றவில்லை.

அரளி  விதையை  துணைக்கு  அழைத்தாள். அது மறுக்காமல்  அவள் வேண்டுகோளை  ஏற்று,அவள் உயிரிற்கு  விடுதலை அளித்தது. இறக்கும்  தருவாயில், சாராவின்  மடியிலிருந்த அமரா,சாராவின்  கண்களைப் பார்த்துக்கொண்டே,

“அடுத்த ஜென்மம்  என்ற ஒன்று இருந்தால், அதிலேனும்  இந்துவாகப்  பிறந்து ஆதியை மணப்பேன்” என்று கூறி இறைவனிடம்   சேர்ந்தாள்.

      இந்த செய்தி  ஆதியின் செவிகளுக்கு  எட்டியது. ஏற்கனவே அரை உயிராக  இருந்த ஆதி,இதனைக் கேள்வியுற்று  முழு உயிரையும் நீக்கிக்  கொள்ள  அதே அரளி  விதையுடன்  கைகோர்த்தான்.அது இவனது கோரிக்கையையும்  ஏற்றது.

ஆதியும் இறக்கும் தருவாயில், “அடுத்த ஜென்மம் என்ற ஒன்று உண்டானால், அதிலேனும் இஸ்லாம் குடும்பத்தில்  பிறந்து அமராவை மணப்பேன்”  என்று கூறி இறைவனிடம் அடைக்கலமானான்.

       நடை பிணமாக  வாழ்ந்து கொண்டிருந்த இரு பெற்றோரும் நாடு  பிரிக்கப்பட்டபோது  நடந்த கலவரத்தில்  இறந்துவிட்டனர் .

      இந்தப் பிறவியில், அமரா,அதிதியாக  ஆதியின் பெற்றோருக்கும், ஆதி, அமராக அமராவின் பெற்றோருக்கும் பிறந்துள்ளனர்.அவர்கள் இறக்கும் தருவாயில் ஆசைப்பட்டது  போலவே ஆதி முஸ்லிமாகவும்., அமரா இந்துவாகவும் மறு பிறவி  எடுத்துள்ளனர். ஆனால் அதிலும் ஒரு சிக்கல்  முளைத்து  அவர்கள் காதலுக்கு வில்லனாக  நிற்கப்  போகிறது.

இந்த கதையைக் கேட்ட  அதிதியால் தான் கேட்டதை நம்பவும்  முடியவில்லை.நம்பாமலும் இருக்க முடியவில்லை.பேரதிர்ச்சி என்பதெல்லாம் மிகக் குறைவான வார்த்தை.

அவளுக்கோ  அம்ரிற்கோ  அவர்களின் குடும்பத்திலுள்ள யாருக்குமே கூட இதிலெல்லாம்  துளியும் நம்பிக்கை இல்லை. ஆனால், அந்தக் கதையில் வரும் சம்பவங்கள் தற்காலத்தில் இவர்களுடைய நடவடிக்கைகள்  இவற்றிற்கு இடையில்  தொடர்பு இருப்பதாகவே தோன்றியது.

பார்த்த உடன் 

ஈர்ப்பு, நம்பிக்கை, காதலையும் தாண்டிய ஒரு ஆத்மார்த்த  உணர்வு, எப்போதும் தொடரும்  ஒரு இனம் புரியா மெல்லிய வலி, பரிதவிப்பு,அமரிற்கு தற்கொலைகளை தடுப்பதில் உள்ள தாகம் இதனை இணைத்துப்  பார்த்தால் நம்பும்படியாகவே  இருந்தது.

எது எப்படியோ, அவரின்  பிரச்சினை என்னவென்று  தெரிந்துவிட்டது. இனி மருந்து மாத்திரைகள் மற்றும் முறையான  கவுன்சிலிங் உதவியுடன்  அவர் குழப்பத்தை  நீக்கிவிடலாம்  என்று எண்ணினாள்.

ஆனால் உண்மையான  பிரச்சனையே அதன் பின்னர்தான்  என்று அறியவில்லை  பாவம்.

மருத்துவத்தின் உதவியால் அவரின் உடல்நிலையும் மனநிலையும்  சமன்பட்டுவிட்டதே  தவிர, புதிதாய்  ஒரு குழப்பம் முளைத்தது  அவர் மனதில்.போன பிறவியில் அதிதி என் மகள்,இப்பிறவியில்  அமர் என் மகன்,எனவே திருமணம் செய்வதில்  எனக்கு உடன்பாடு  இல்லை என்றொரு  பெரிய குண்டைத்  தூக்கிப் போட்டார்.

அனைவரும் அதிர்ந்து போனார்கள்  என்றால்,அமரும் அதிதியும் நொறுங்கிவிட்டார்கள்.இப்படி ஒரு பிரச்சினையை சர்வ நிச்சயமாக யாரும் எதிர்பார்க்கவில்லை.இந்த உணர்வு ரீதியான  பிரச்சினைக்குத் தீர்வு  கண்டறியும்  வழி அறியாமல் அனைவரும் விழி பிதுங்கி நின்றனர்.

உடல் ரீதியாக, உளவியல் ரீதியாக, அறிவியல் ரீதியாக என்று எத்தனையோ வகையான  லாஜிக் சொல்லி,இந்தத் திருமணத்தில் தவறில்லை என்று அனைவரும் அவரை சமாதானப்  படுத்தினாலும்,ஏதோ நெருடலாகவே  உள்ளது என்றுகூறி  இதற்கு உடன்பட  மறுத்தார்.

நாட்கள் இவ்வாறு உருண்டோடிக் கொண்டிருக்க, இத்தகைய ஒரு சூழலில் திருமணம் வேண்டாம், நிலைமை சீரான  பின் திருமணம் செய்து கொள்கிறோம்  என்று வர்ஷன்னும் வந்தனாவுக்கு உறுதியாகக் கூறிவிட்டனர். அனைவரும் எவ்வளவு எடுத்துக் கூறியும் கேட்காமல் உறுதியாக நின்றனர்.

  அனைத்தையும் யோசித்து  குழம்பி தவித்து,அமர் பாதியாக  மெலிந்துவிட்டான். சரியாக உண்ணுவதில்லை உறங்குவதில்லை. யாருடனும்  பேசாத அளவிற்கு தீவிர மன அழுத்தத்திற்கு  உள்ளாகிவிட்டான்.

அதிதியும் மிகவும் நொறுக்கிப் போயிருந்தாலும்,அவள் படித்த  மருத்தவத்தின் உதவியோ  என்னவோ,அமர் அளவிற்கு கடுமையாக  பாதிக்கப்படவில்லை.சுதாரித்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் அமரின் இந்த நிலையைக்  கண்டு தாழ முடியாமல் கதறினாள்.அவனை மீட்டெடுக்க  வேண்டும் என்று உறுதி பூண்டவளாய், தனியாகச் சென்று அழுது தீர்த்துவிட்டு  கோவிலுக்குச்  சென்று மனமுருகி வேண்டிவிட்டு, அவனுக்கு அவளே கவுன்சலிங்  கொடுக்க ஆரம்பித்தாள்.

அமரிற்கு வேறோரு சைகார்டிஸ்ட் மூலம் இதனைச்  செய்யலாம் என்று அனைவரும் கூற,இந்தப் பிரச்சினையும்  அவரையும்  முழுதாக  உணர்த்த  தான் இதனை செய்தால்தான்  சரியாக இருக்கும் என்று கூறி,தான் பார்த்துக்கொள்வதாகக்  கூறி அவளே செய்தாள்.

தான் படித்த மருத்துவம்  இப்படி ஒரு சூழலில் பயன்படுத்த நேரிட்டதை  எண்ணி, சில நேரம் வருந்தி  சில நேரம் தேற்றிக்கொண்டு  உள்ளுக்குள்  புழுங்கிக்  கொண்டுதான் இருந்தாள்.

அமரின் இந்த நிலையைக் கண்ட அவன் தாய்,திருமணத்திற்கு சம்மதம் கூற, அவர் நெருடல் இல்லாமல் முழு மனதுடன் சம்மதித்தால் மட்டுமே, திருமணம் செய்து கொள்வோம்  என்று கூறிவிட்டனர் இருவரும்.

அவரும் மிகவும் நொந்து போய்,தொழுகை செய்யும்  வேளைகளிலெல்லாம் மனமுருகி இறைவனிடம் இந்த பிரச்சினையைத் தீர்க்கும் மார்க்கம் காட்டுமாறு முறையிடுவார்.

சதா சர்வ காலமும் இதனையே சிந்தித்து குழம்பிக்  கொண்டிருந்தவர்,ஒரு நாள்,சரியாக கவனிக்காமல் சென்று வாசல் படிகளில்  கால் தவறி விழுந்தார்.

தலையில் அடிபட்டு மயங்கியநிலையில் மருத்துவமனில் அனுமதிக்கப்பட்டார்.

அடி மேல் அடி விழுவதாய் அனைவரும் அரற்றிக்கொண்டிருந்தனர். ஆனால் ஆனந்தம் காத்திருந்தது அவர்களுக்கு.ஸ்கேன்  எல்லாம் எடுத்து பார்த்துவிட்டு ஒன்றும் பிரச்சினை இல்லை என்று கூறிவிட்டனர். அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

  கண்விழித்தவர்  கூறியதைக்  கேட்டுத்தான் அனைவரும் இன்ப அதிர்ச்சிக்கு  உள்ளாகினர். அவரிற்கு அதிதி வீட்டில் மயங்கி விழுந்தது  வரையில் தான் நினைவில்  இருந்தது.அதன் பின் நடந்த எதுவும் நினைவில் இல்லை.அவர்  பேசியதிலும்  அவரைப் பரிசோதித்ததிலும் தெரிய வந்த விஷயம் இது.

  ‘ நடுவுல கொஞ்சம் பக்கத்த  காணோம்’ என்பது போல் ஆகிவிட்டது கதை. இதனைக் கேள்வியுற்றதுமே அமர் பெருமளவு  தெளிந்துவிட்டான். இடையில் நிகழ்ந்த எதனையும்  அவருக்கு  கூறாமல்,எதையாவது  கூறி சமாளித்தனர்.அவர் இவர்களின்  திருமணம் குறித்து கேட்கவே அவரின் உடல்நிலை கருதி  தள்ளி வைத்திருப்பதாக  கூறி சமாளித்தனர்.

  அவர் இதற்கு மேலும் தாமதப்படுத்தாமல்  விரைவில் திருமணம் செய்துவிடக்  கூறியதால் ஒரு மாதத்தில் வர்ஷன் வந்தனாவிற்கும்,அதன் பின் 15 நாட்களில் அமர் அதிதிக்கும் திருமணம் செய்வது என்று முடிவாகியது.

  அமரிற்கும் அதிதிக்கும், இத்தனை அசாதாரண குழப்பங்களுக்கும், அது தீர்ந்த  அசாதாரண  முறைக்கும் பின்னால் ஏதோ ஒரு காரணம் இருப்பதாகத் தோன்றியது. அது என்னவென்றும்  புரிந்து போனது. திருமணத்திற்குப்பின் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றதொரு  தெளிவான முடிவிற்கு  வந்தனர்.எல்லாம் நன்மைக்கே  என்று தோன்றியது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content