En iniya pynthamizhe – 7
7
அந்த வகுப்பறையில் விரிவுரையாளர் காமராஜ் இயல்பாக தம் உரையாடலைத் தொடங்கி தன்னை பற்றி அறிமுகப்படுத்திக் கொண்ட பின்னர்,
“எல்லோரும் உங்களைப் பத்தி அறிமுகப்படுத்திக்கோங்க… யூஸ்வலா சொல்ற மாதிரி பேர் ஊருன்னு சொல்லாம உங்க விருப்பங்கள் எண்ணங்கள்னு புதுசா சுவாரசியமா ஏதாச்சும் சொல்லுங்க… ஆர்டர் வைஸா வேண்டாம்… வாலண்டியரா எழுந்து பேசினா நல்லா இருக்கும்” என்க, முதலில் தயக்கத்தோடு தொடங்கிய அறிமுக படலம் பின் மிகச் சுவராசியமாகவும் கலகலப்பாகவும் நகர்ந்தது.
மஞ்சுவும் வெகுஆர்வமாக ரசித்துக் கொண்டே தோழியிடம், “அடுத்து நீ இன்ட்ரோ கொடு… அப்புறம் நான்” என்ற போது,
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் வாயை மூடிட்டு கிட” என்றாள் தமிழ் தலையைத் தாழ்த்தியபடியே!
“ஏன்?” என்று கேட்டபடி தோழியின் புறம் திரும்பிய மஞ்சுளா,
“ஏய் என்னாச்சு… நீ ஏன் இப்படி பெஞ்சுக்குள்ள தலையை விட்டுட்டு உட்கார்ந்திருக்க?” என்று வினவினாள்.
“அது ஒரு பெரிய கதை” என்றவள் அந்தச் சோக கதையை தோழியிடம் சொல்லி முடிக்க,
“அட லூசு… உனக்கு லெக்சரருக்கும் ஸ்டூடன்ட்ஸுக்கும் வித்தியாசம் தெரியலயா?” என்றவள் தோழியின் தலையில் பலமாகத் தட்டினாள்.
“அவரை பார்த்தா லெக்சரர் மாதிரி தெரியல… அதான் யாருன்னு தெரியாம அப்படியெல்லாம் பேசி போட்டேன்” என்று அஞ்சிய தோரணையில் தோழியைப் பார்த்தவள்,
“ஒரு வேளை நான் பேசுனதை மனசுல வைச்சுக்கிட்டு என் படிப்புல எதுவும் பண்ணிடுவாரோ?” என்று பயபக்தியோடு வினவினாள்.
“ஆளைப் பார்த்தா அப்படி தெரியல… ஆனா சொல்ல முடியாது” என்று இரண்டு விதமாகவும் பேசி தெளிவாகத் தோழியை குழப்பியவள், “எதுக்கும் நீ தலை மறைவாவே இரு” என்று அவளை எச்சரிக்கைச் செய்யத் தமிழ் பீதியடைந்தாள்.
இவர்கள் பேசிக் கொண்டிருந்த இடைவெளியில் அறிமுக படலம் செவ்வனே நடந்து முடிந்திருக்க, மஞ்சுவும் தமிழும் மட்டும் எஞ்சி இருந்தனர்.
“எல்லோரும் இன்ட்ரோ பண்ணிக்கிடீங்களா?” என்றவர் இயல்பாகக் கேட்கவும், “எஸ் சார்” என்று கோரஸாக வந்த குரலில், “நோ சார்” என்ற மஞ்சுவின் குரல் உள்ளே அமிழ்ந்து போனது.
“நீ இப்போ இன்ட்ரோ பண்ணி ஒன்னும் கிழிக்க வேண்டாம்… சும்மா கிட” என்றவள் கரத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் தமிழ்.
“குரங்கு தான் கெட்டதும் இல்லாம வனத்தையும் சேர்த்து கெடுத்துதாம்” என்ற மஞ்சுளா கடுப்பாக முறைக்க, “நீ இப்போ சும்மா இருந்தேன்னா கேன்டீன்ல சமோசா வாங்கி தருவேனாக்கும்” என்றாள் தமிழ்!
“பத்து ரூபாயை பத்து நாளா வைச்சு செலவு பண்ற ஆளு நீ… எனக்கு நீ சமோசா வாங்கி தர போறியா?… ம்ம்கும்” என்றவள் நொடித்துக் கொள்ள,
“ஒன்ற மேல சத்தியமா வாங்கி தரேன்… இன்னும் அஞ்சு நிமிஷம்தான் க்ளேஸ் முடிஞ்சுரும்… அதுவரைக்கும் செத்த சும்மா இரு” என்றவள் தோழியை அடக்கிவிட்டதில் ஒரு வழியாக அந்த வகுப்பும் முடிந்திருந்தது.
வேறுவழியில்லாமல் அன்று மதிய உணவு இடைவேளையில் தோழிக்கு சாமோசா வாங்கி தந்திருந்தாள் தமிழ், அதுவும் ஒன்றே ஒன்று!
“உன்னைய மாதிரி ஒரு கஞ்ச பிசினாரியை பார்த்ததே இல்ல.. வாங்குறதுதான் வாங்கி தர… ஒரு ரெண்டு இல்ல மூணாவது வாங்கி தரலாம்ல” என்று மஞ்சு குறைபட்டுக் கொள்ள,
“காசை பிடிமானமா வைச்சு செலவு பண்னோணும்னு அம்மா சொல்லி அனுப்பியிருக்காங்க” என்று சொல்லிக் கொண்டே நடந்தவள் எதிரே வந்து நின்ற காமராஜை பார்த்து பேச்சற்று நின்றுவிடச் சாப்பிட்டுக் கொண்டிருந்த மஞ்சுவிற்கு தொண்டை அடைத்து விக்கியது.
“தண்ணியை குடிங்க” என்றவன் சொன்ன நொடி வேகமாக தன் கையிலிருந்த தண்ணீரை வாயில் சரித்துக் கொண்டாள்.
தமிழ் பேந்த பேந்த விழிக்க காமராஜ் மஞ்சுவை பார்த்து, “குடிச்சிட்டீங்ளா?” என்றதும் அவள் வேகமாகத் தலையசைத்து, “ஆச்சு சார்” என்றாள்.
“ம்ம்ம்… ஏன் என் பீரியட்ல நீங்க இரண்டு பேரும் மட்டும் இன்ட்ரோ பண்ணிக்கல?” என்றவன் கேட்ட நொடி, இருவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
தமிழ் திக்கித் திணற, மஞ்சு இடைபுகுந்து தோழியைக் காப்பாற்றுகிறேன் பேர் வழியென்று, “அதுக்குள்ள பீரியட் முடிஞ்சு போச்சு சார்” என்று சமாளிக்க, “அப்படியாங்க?” என்றவன் பார்வை தமிழை ஆழமாக முற்றுகையிட்டது.
அவன் பார்வையிலேயே இருவருக்கும் தெள்ளத்தெளிவாகப் புரிந்து போனது. அவர்கள் அவனிடம் வகையாகச் சிக்கிக் கொண்டது. இனி சமாளித்து ஒன்றும் பயனில்லை என்று எண்ணியவள்,
“இல்லீங்க சார்… நான்தான் அவளை இன்ட்ரோ கொடுக்க வேணாம்ட்டு சொன்னேன்…. எல்லாம் என்ற தப்புதான்” என்று தமிழ் தன் தவறை ஒப்பு கொண்டுவிட,
“அன்னைக்கு ட்ரைன்ல நான் யாரு என்னன்னு தெரியாததால உங்க ஊர் பேரெல்லாம் நீங்க சொல்லைங்க… அதுல ஒரு நியாயாம் இருக்குங்க… ஆனா இன்னைக்கு சொல்றதுல என்னங்க உங்களுக்கு பிரச்சனை?” என்றவன் அவளை கலாய்க்கும் தொனியில் கேட்டதில் மஞ்சுவிற்கு சிரிப்பு வந்தது என்றால் தமிழின் முகம் சிறுத்துப் போனது.
“இல்லீங்க சார்… நான் பேசுனதை மனசுல வைச்சுகிட்டு கோபப்படுவீங்களோன்னு?” என்றவள் தயங்கவும்,
“அதுல கோபம் பட என்ன இருக்கு… அன்னைக்கு நான் யார் என்னன்னு தெரியாததால நீங்க உங்க ஊர் பேரெல்லாம் சொல்லல… ஆனா இன்னைக்கு செஞ்சது அப்படி இல்ல… பெரிய தப்பு” என்று கண்டிப்போடு சொல்லியவன்,
“நாளைக்கு இரண்டு பேரும் கிளேஸ் முன்னாடி வந்து நின்னு உங்களை அறிமுகப்படுத்திக்கணும்” என்று ஆணையாகச் சொல்லிவிட்டு அவன் நடந்து சென்றுவிட, மஞ்சுவிற்கு மீண்டும் தொண்டையை அடைத்தது.
ஒரு சமோசாவிற்கு ஆசைப்பட்டு இப்படியாகிவிட்டதே என்றவள் வருத்தத்தில் அப்படியே நின்றுவிட்டாள்.
ஆனால் தமிழ் அவன் பின்னோடு ஓடிச் சென்று, “சார் சார்… நான் செஞ்சது தப்புதானுங்க… ஆனா கிளேஸ் முன்னாடி வந்து நின்னு பேசறது மட்டும் வேண்டாமுங்க” என்று கெஞ்சினாள்.
“அன்னைக்கு யார் என்னன்னு தெரியாம என்ற கிட்ட அவ்வளவு பேசுனீங்க… இது என்ன? உங்க கிளேஸ்தானே… அதுவும் எல்லோரும் ஒரு வருஷமா உங்களுக்கு ரொம்ப பழக்கமானவங்க”
“ஐயோ! இல்லீங்க சார்… யாரும் எங்க கூட பழகுறதே இல்லைங்க… நானும் அவங்க யார் கூடயும் பழகுறது இல்லிங்க” என்ற நொடி துணுக்குற்று அவள் புறம் திரும்பியவன், “ஏன் அப்படி?” என்று கேட்கவும்,
“நான் பேசும் போது என்ற ஊர் வாடை அடிக்கிறதால என்னைய நாட்டு புறம்னு எல்லோரும் கேலி செய்றாங்க… கூடவே நான் பார்க்க கருப்பாவும்… அவ குண்டாவும் இருக்குறதால எங்க கூட யாரும் பழகுறதில்லங்க”
“ஒ! அதனால நீங்களும் அவங்க யார் கூடயும் பேசறதில்லை”
“நம்ம கூட பேசாதவங்க கிட்ட நாம மட்டும் ஏனுங்க பேசோனோம்?”
“நீங்க அப்படி விலகி போறது உங்க தாழ்வுமனப்பான்மையைத்தான் காட்டுது… இந்த மாதிரி மனுஷங்க காலேஜ்ல மட்டும் இருக்க மாட்டாங்க… நாளைக்கு நீங்க வேலைக்கு போற இடத்திலயும் இருப்பாங்க… அப்போ என்ன பண்ணுவீங்க… யார் கூடவும் கலந்து பழகாம இருந்துடுவீங்களா இல்ல அப்படி இருந்துடதான் முடியுமா?” என்றவன் கேட்க அவளால் எதுவும் பதில் பேச முடியவில்லை.
அவன் மேலும், “முதல உங்க தாழ்வுமனப்பான்மையை உடைச்சு போடுங்க… உங்ககிட்ட பேசாத எல்லோரையும் உங்களைத் திரும்பி பார்க்க வையுங்க… உங்களை அவங்களே தேடி வந்து பேசற மாதிரி செய்யுங்க… அதுதான் புத்திசாலித்தனம்
ஒதுங்கி போறது முட்டாள்தனம்… உங்க தோல்வியை நீங்க ஒதுக்கிட்டு ஒதுங்கி போக போறீங்களா இல்ல எதிர்த்து போராடபோறீங்களா?” என்றவன் கேட்ட நொடி அவளுக்குள் ஒரு உத்வேகம் பிறந்தது.
அந்த உத்வேகம் அடுத்த நாள் காலை அவளையும் அவள் தோழி மஞ்சுவையும் உறுதியோடு வகுப்பறையின் முன்பு நின்று பேச வைத்தது.
“எம்பட பெயர் பைந்தமிழ். என்ற அப்பா ஒரு விவசாயி… அம்மா டீ கடை வைச்சு இருக்காங்க… என்ற ஊர்ல இஞ்னியரிங் படிக்குற முதல் பொண்ணு நான்தான்… ரொம்ப கஷ்டப்பட்டு என்ற அம்மா அப்பா என்னைய படிக்க வைச்சுட்டு இருக்காங்க… என்னோட ஒரே ஆசையே நான் சாம்பாதிச்சு அவங்க இரண்டு பேரையும் சௌரியமா வைச்சுக்கோனோம்… அம்புட்டுதான்” என்று சொல்லிவிட்டு அவள் நகர்ந்துவிட, அன்று முதல் முறையாகப் பைந்தமிழை மதிப்போடும் வியப்போடும் எல்லோரும் பார்த்தனர்.
அதன் பின்னர் காமராஜ் மாணவர்களிடம், “டோன்ட் ஜட்ஜ் அ புக் பை இட்ஸ் கவர்னு சொல்லுவாங்க… யாரையும் அவங்க உடை நிறம் உடல் வாகை பார்த்து ஒதுக்குறதும் கிண்டல் பண்றதும் ஒருத்தரோட தோற்றத்தை வைச்சு அவங்க கூட பழகலாமா வேணாம்னு யோசிக்கிறதும் எந்தவிதத்திலும் சரி இல்ல… அப்படி நீங்க யோசிக்கிறீங்கன்னா நீங்க இத்தனை வருஷமா படிச்ச கல்வி முறையில ஏதோ தப்பு இருக்குனுதான் அர்த்தம்…
உங்க எல்லோர்கிட்டயும் நான் தெரியாமதான் கேட்கிறேன்… நாகரிகங்கிறது என்ன? அது உடையிலும் நிறத்திலயும் இருக்குறதா?” என்றவன் கேள்விக்கு எல்லோரும் மௌனம் காத்தனர்.
“கோமனம் கட்டிக்கிட்டு நிலத்தில வியர்வை ஒழுக ஒரு விவாசாயி வேலை செய்வான்… அவன் கிட்ட போய் பேச கூட நம்ம இமேஜ் தடுக்கும்…. ஆனா அந்த விவசாயி உழைப்பில இருந்து வர அரிசி பருப்பைதான் நாம தினமும் சாப்பிடுறோம்னு நம்ம யோசிக்க கூட மாட்டோம்
என்ன பண்றது? நம்ம கல்வி முறை கத்து தர நாகரிகம் அப்படிதான் இருக்கு… கோட் சூட் டை ஷூன்னு போட்டிருந்தா அதுதான் நாகரிகம்
ஆனா கோட் சூட் எல்லாம் குளிர் பிரதேசத்தில இருக்கவன் அவனோட நாட்டோட சூழ்நிலைக்காக உருவாக்குனது… மொட்டை வெயில காயுற நமக்கு எதுக்குடா ஷூ சாக்ஸ்னு நம்ம கேட்டிருப்போமா?”
“ஏன்னா? இப்படியான உடை அணியிறதை டிஸிப்ளீன்னு நம்ம ஸ்கூல்ஸ் சொல்லி தருது… நம்ம நாட்டுல இருக்க பள்ளி கூடங்களே சுயமா யோசிக்கிறது இல்லன்னும் போது அங்க படிக்கிற நாம எப்படி சுயமா யோசிக்கிறவங்களா இருக்க முடியும்? அதான் படிச்சிட்டு எல்லோரும் ஏதோ ஒரு வெளிநாட்டு கம்பெனிக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துடுறோம்
இப்படி அடிமையா போறவங்கல அந்த கம்பெனிங்க சக்கையா பிழிஞ்சி தூக்கி போட்ருவாங்க…
நீங்க எல்லாம் அடிமையா இருக்க போறீங்களா இல்ல சுயமா யோசிச்சு எதாச்சும் புதுசா சாதிக்க போறீங்களான்னு இப்பவே முடிவு பண்ணிக்கோங்க” என்று கண்டனத்தோடும் கோபத்தோடும் பேசிய காமராஜ், அங்கிருந்து எல்லோர் மனதிலும் நிறைய யோசனைகளையும் கேள்விகளையும் விதைத்தார்.
ஆனால் எத்தனை பேரின் மனதில் அது மாற்றங்களை உருவாக்கியதோ? பைந்தமிழின் மனதில் பெரியளவிலான மாற்றங்களையும் தாக்கத்தையும் உருவாக்கியிருந்தது. நிறைய முதிர்ச்சியான சிந்தனைகளைக் கொடுத்திருந்தது. படிப்பு மட்டும்தான் எல்லாம் என்றிருந்த அவள் எண்ணங்களுக்குப் பரந்து விரிந்த இந்த உலகம் அதில் அடங்காது என்பது புரிந்தது.
பைந்தமிழுக்கு மாதா, பிதா, குரு என்ற வரிசையில் காமராஜ் ஆசான் என்ற இடத்தை முழுவதுமாக நிரப்பிவிட்டிருந்தார். அவனை தன் வாழ்வின் மிக முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் மதிப்பு மிக்கவராகவும் கருதத் தொடங்கினாள்.
அதன் பிறகு அவள் தன்னுடைய சந்தோஷம் துக்கம் கேள்விகள் அனைத்தையும் அவனிடம் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினாள். ஆசான் என்ற மதிப்போடு!
அவனிடமிருந்து நிறைய விஷயங்களை கற்கும் ஆர்வத்தில் அவள் அவனைத் தேடிச் சென்று உரையாடுவது வழக்கமானது. இயல்பாக யாரிடமும் பேசாதவள் அவனிடம் மட்டும் நிறையக் கேட்கவும் கற்கவும் செய்வாள். இதனால் காமராஜிற்கும் மற்ற மாணவர்கள் எல்லோரையும் விட அவள் மீது அபிமானமும் அன்பும் கூடியிருந்தது.
அவளுக்கு அவன் மீதிருந்தது ஆசான் என்ற பக்தி! அவனுக்கும் அவள் மீது தன் மாணவியென்ற அக்கறையும் அன்பும் நிரம்ப இருந்தது.
ஆனால் ஒரு ஆணும் பெண்ணும் இயல்பாகப் பழகினாலும் இந்த சமுதாயம் அவர்களைக் கேவலமான கண்ணோட்டத்தோடு பார்த்தே பழகிவிட்டது. அப்படியிருக்க இவர்களின் உறவை மட்டும் அது புனிதமாகவா பார்க்கும்?
எப்போதும் போலக் கல்லூரியில் அவர்கள் உறவைக் கொச்சைப்படுத்திப் பேசிய கூட்டமும் இருந்தது.
தமிழின் படிப்பு முடிய ஆறு மாதங்களே இருந்த அந்த தருணத்தில் ஒரு நாள் எதேச்சையாக கல்லூரியை விட்டு வெளியே காமராஜை சந்தித்த போது, “எங்க சார் இங்க?” என்று சாதாரணமாக அவள் பேச்சுக் கொடுக்க
“ஒரு முக்கியமான வேலையா வந்தேன் தமிழ்” என்று அவனும் இயல்பாகப் பதிலுரைத்தான். அவர்களின் எதேச்சையான இந்தச் சந்திப்பு சில வக்கிர பார்வைகளுக்குத் தவறாகத் தெரிந்தது. அவர்கள் இருவரும் பேசி கொண்ட அந்த காட்சியைப் புகைப்படமாக எடுத்து கல்லூரி முழக்கவும் பரப்பியிருந்தனர்.
அது கல்லூரியின் தலைமை வரைக்கும் போய் பெரிய பிரச்சனையில் முடிந்திருந்தது. காமராஜைப் பற்றித் தெரிந்தவர்கள் யாரும் இந்த வதந்திகளை நம்பவில்லை எனினும் அவன் மீது துவேஷமும் பொறாமையும் கொண்டவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கொண்டு அந்த விஷயத்தை ஊதி பெரிதாக்கினார்.
கல்லூரியை விட்டு வெளியே அவர் மாணவிகளோடு பேசுகிறார் பழகுகிறார். இது ஒழுக்கக்கேடான செயல் என்று சொல்லி காமராஜின் நல்ல குணநலன்களைக் கொச்சைப்படுத்தினர். அதோடு தமிழின் பெயரும் இதனால் கெட்டுப் போனது.
“நாங்க சாதரணமா வழில பார்த்தோம்… பேசிக்கிட்டோம்… இதை இவ்வளவு பெரிய இஷூவா ஆக்கிறது ஏன்னு எனக்கு புரியல… திரும்பத் திரும்ப இதைப் பத்தி எனக்கு விளக்கம் கொடுக்கக் கூட அசிங்கமா இருக்கு…
அதனால உங்களுக்கு என்ன தோணுதோ செய்யுங்க… ஆனா ஒன்னு… உங்களுக்கு தண்டிக்கணும்னு தோணுச்சுன்னா என்னைய மட்டும் தண்டிங்க… அந்த பொண்ணை விட்டுடுங்க… பீ இ ங்கிறது அந்த பொண்ணோட பெரிய கனவு… அதுவும் அவ நல்லா படிக்கிற திறமையான பொண்ணு” என்றவன் அவள் படிப்பு கெட்டுவிடக் கூடாது என்று சொன்ன காரணத்தால் கல்லூரியின் தலைமையில் அவளை எச்சரிக்கையோடு விட்டிருந்தாலும், காமராஜை ‘டிசிபளினரி ஆக்ஷன்’ என்று சொல்லி வேலையை விட்டு நீக்கியிருந்தனர்.
அதுமட்டுமின்றி கல்லூரி நிர்வாகம் ஊரிலிருந்து அவள் பெற்றோரை வரவழைத்து நடந்த அத்தனை விஷயத்தையும் தெரிவித்ததில் அவள் வாழ்வின் கனவே சிதைந்து போனது.
மதுசூதனன் சகுந்தலாவிற்கு மகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்த போதும் அந்தப் பேச்சுக்கள் அவர்களை வெகுவாக பாதித்திருந்தது. இந்த விஷயம் எந்த வகையிலாவது மகளின் எதிர்கால வாழ்க்கையை பாதித்துவிடப் போகிறது என்ற அச்சத்தில் சில அவசரமான முடிவுகளை எடுத்தனர்.
தமிழுக்குப் படிப்பு முடித்த கையோடு அவளுக்குத் திருமண ஏற்பாடுகள் செய்தனர்.
to comment, please click here
*************
குறிப்பு – 6 மூலிகை செடிகள்
‘உணவே மருந்து மருந்தே உணவு’ என்பதே நம்முடைய பாரம்பரிய உணவுமுறை பழக்கம் அமைந்திருந்தன. அந்த வகையில் நாம் தனியாக நோய்களுக்கு என்று மருந்துகள் உட்கொள்ள தேவையில்லை.
ஆனால் ‘உணவே மருந்து என்பது விஷமே உணவாக’ மாறிவிட்டது. நாம் உண்ணும் ஒவ்வொரு காய்கறிகளும் பூச்சிகொல்லிகளில் முக்கியெடுக்கப்பட்டுதுதான் நம் தட்டுக்களுக்கு வருகின்றன என்பதை மறுக்க இயலாது.
இந்த சூழ்நிலையில் மீண்டும் வீட்டு தோட்டம் அமைப்பது மட்டுமே நம் குடும்பத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான ஒரே வழி! இதன் மூலம் நமக்கான காய்கறிகளையும் மூலிகை செடிகளையும் வளர்க்கலாம்.
அதுவும் மூலிகைகள் வளர்ப்பது ஒன்றும் நமக்கு புதிதான விஷயம் இல்லை. நிச்சயம் வேப்பம், துளசி பலரின் வீட்டினில் இன்றும் இருக்கும். அது மிகவும் சக்தி வாய்ந்த மூலிகை என்பதாலேயே அதனை நம் முன்னோர்கள் கடவுளாக சித்தரித்துள்ளனர். அதேநேரம் வேப்ப மர காற்றே நமக்கு மருந்துதான்.
அதேபோல துளசி செடியிலிருந்து வரும் நேர்மறை சக்திகள்(பாசிடிவ் வைப்ரேஷன்) நம் வீட்டை அணுகும் எதிர்மறை சக்திகள் அணுகாமல் காக்கின்றன.
அதனால்தான் வீட்டு வாயிலில் துளசி செடிகளை வைக்கின்றோம். ஒரு வேளை அப்படி எதாவது பெரிய தீங்கு நம் வீட்டை அணுகும் பட்சத்தில் எச்சரிக்கை செய்யும் விதமாக பசுமையாக இருக்கும் துளசி செடி பட்டுப்போகிறது.
இந்த மாதிரி மூலிகை செடிகளுக்கு நம் வீட்டை பசுமையாக மட்டுமல்ல பாதுக்காப்பாகவும் வைத்து கொள்ள உதவுகிறது என்பதை நம் முன்னோர்கள் முன்னமே அறிந்துதான், வேப்பம் துளசி போன்றவற்றை சாமியாக மாற்றி வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கின்றன.
இதெல்லாம் ஓரளவு நமக்கு தெரிந்த கதைதான். ஆனால் காலத்தால் அழிந்து போன நிறைய மூலிகைகள் நம் வீட்டை மட்டுமல்ல. நம் உணவு பழக்கங்களை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டன.
நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் க்ரோட்டோனகள் வளர்க்க தொடங்கி வீட்டில் காய்கறி மரங்கள் வளர்ப்பதை நிறுத்தினோமோ அன்றே நம்முடைய ஆரோக்கியம் என்ற செல்வம் நம்மை விட்டு தொலை தூரம் போனது.
உடலுக்கு அத்தனை உபாதைகளும் வந்து சேர்ந்து மருத்துவமனையே கெதியாக கிடக்க தொடங்கிவிட்டோம். ஒரு மாதத்திற்கெ மருந்துகளாக சில ஆயிரங்கள் செலவழிக்கிறோம். ஆனால் குறைந்து செலவில் வீட்டில் மாடி தோட்டமும் அங்கே மூலிகை செடிகளும் இருந்தால் இனி நாம் மருத்துவமனை வாசலில் காத்திருக்க தேவையிருக்காது.
எடுத்துக்காட்டாக கொடியாக படரும் முடக்கத்தான் கீரை. இந்த கீரை மூட்டு வலிக்கு மிக சிறந்த மருந்து. கூடவே மிகவும் சுவையான உணவு வகையும் கூட.
முடக்கத்தான் கீரையை பறித்து கொஞ்சமாக மிளகும் சீரகமும் போட்டு அரைத்து தோசை மாவோடு கலந்தால் சுவையான முடக்கத்தான் தோசை தயார். இது அல்லாது சளிக்கு தூதுவாளை ரசம்… இருமலுக்கு முருங்கை சாறு… சிறுநீரக பிரச்சனைக்கு வாழைத்தண்டு கூட்டு இப்படி உணவோடு கலந்த மருத்துவம் நம் உடலை நோய்களிலிருந்து காத்து ஆரோக்கியமான சந்தோஷமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.
மூலிகைகள் பற்றி நான் சொன்னது எல்லாம் சில துளிகள் மட்டுமே! நீங்கள் அது குறித்து உங்கள் தாத்தா பாட்டிகளிடம் கேட்டால் நிறைய தகவல்கள் கிடைக்கும். அதோடு இணையத்தில் மாடி தோட்டம் வைத்திருப்பவர்களின் வீடியோக்கள் பலவும் இருக்கின்றன. அதில் எண்ணற்ற மூலிகைகள் அவற்றின் பயன்கள் குறித்த தகவல்கள் பகிரப்பட்டிருக்கின்றன.
அவற்றை பார்த்து பயன் பெறுங்கள்!
to comment, please click here
Ada kodumaiye
Nalla padivu dear
hmm.. romba nallavangala iruntha ithellam nadakurathu thaan onnum panna mudiyaathu intha ulagathai 😒
aama yaaroda kalyanam 😷 puthusa maapillaiya ila virumaandi yaa
Enna kodumai da ithu Oru ponnum paiyanum pesina adu thappa parkurade velai ya pochi, pavam tamil, kalyanam panna ellam sariyaguma, padicha ellorum appadi Dan erukamga, padakatha avamgalum appadi Dan irukamga, nice update moni dear thanks.