You don't have javascript enabled
ComedyMonisha NovelsRomantic comedy

Virus Attack- 10

காதல் அட்டாக்-10

ஆங்கிலேயர்கள், ஆப்பிரிக்கர்கள், சீனர்கள், ஜப்பானியர்கள், உள்ளூர் வாசிகள் என வெவ்வேறு நிறங்களில், குட்டையாகவும் நெட்டையாகவும் பருமனாகவும் ஒல்லியாகவும் வெவ்வேறு உடல்வாகுடன் ஆண் பெண் பாகுபாடின்றி, சிறியவர்களுக்கு அங்கே அனுமதி இல்லை என்பதினால் அவர்களைத் தவிர முதியவர்கள் இளைஞர்கள் என பேதமின்றி எல்லா வயது நிலையிலும் ‘எங்க இருந்ததுடா இதுக்குன்னு கிளம்பி வரீங்க’ என எண்ண வைக்கும் அளவுக்கு, ஆயிரம் பேர் இருக்கவேண்டிய இடத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐந்நூறு பேருக்கு மேல் இருக்கலாமோ எனும் அளவுக்கு பெரும் கூட்டம் பொங்கி வழிந்தது நிர்மலானந்தாவின் ஆசிரமத்தின் அந்த மிகப்பெரிய அரங்கத்தில்.

பணம் கொடுத்து நுழைவு சீட்டு வாங்கியிருந்தாலும், மில்லியை தேடிக்கொண்டு இவர்கள் போன அந்த இடைவெளியில் அந்த அரங்கம் நிரம்பியிருக்க, அவர்கள் முன் பதிவு செய்திருந்த இருக்கையை நெருங்கவே இயலவில்லை மேனகா மற்றும் நாயகியால்.

எங்கோ ஒரு ஓரமாக நெருக்கியடித்துக்கொண்டு நிற்க வேண்டியதாக ஆகிப்போனது.

எள் போட்டால் எண்ணையே எடுக்கலாம் என்கிற அளவுக்கு அந்த அரங்கம் முழுவதும் நெருக்கடியாக இருக்க, அங்கிருந்து சென்று யாரையாவது கேட்கலாம் என்கிற சூழலும் இல்லை.

திரையால் மூடப்பட்டிருக்கும் மேடையையே ஒரு அமைதியுடன் வெறித்துக்கொண்டிருந்தாள் மேனகா.

அவள் இதயம் ஏனோ வழக்கத்துக்கு மாறாகத் தாறுமாறாகத் துடித்துக்கொண்டிருந்தது.

வாழக்கையில் ஏதோ ஒரு புதிய மாற்றம் ஏற்படப்போகிறது என்கிற ஒரு உள்ளுணர்வு தோன்ற, படபடப்பாக இருந்தது அவளுக்கு.

அவளுடைய நிலைமை புரியாமல், “ப்ச்… மூணு மாசம் முன்னாலேயே சீட்டு வாங்கியாந்தேன். ஆனா சாமிய கிட்ட இருந்து பாக்க முடியாத செஞ்சுப்புட்ட இல்ல எலி நீயி.

மில்லியாம்ல மில்லி! நல்லா பேரு வெச்சிக்கிது பாரு இந்த மேனகா பொண்ணு ஒனக்கு.

நீ மில்லி இல்ல; எனக்கு வந்து வாச்ச சரியான வில்லி. தனியா கண்டி நீ என் கைல ஆப்டுகின… கைமாத்தாண்டி நீயி அஆங்” எனக் கையிலிருந்த கூண்டுக்குள் நல்ல பிள்ளை போல உறங்கிக்கொண்டிருந்த மில்லியை சாடிக்கொண்டிருந்தாள் நாயகி.

“ப்ச்… தொல்ல கொஞ்சம் சும்மா இருக்கியா” என மேனகா சற்று எரிச்சலுடன் மொழிய, அவள் தொல்லை என்றழைத்ததில் கடுப்பானவள், “தென்ன மரத்துல தேள் கொட்னா பன மரத்துல நெறி கட்டிக்கிச்சாம்… அந்த பெர்ச்சாளிய சொன்னா இந்த சுண்டெலிக்கு அப்படியே கோவம் பொத்துக்கினு வருது அஆங்” என முணுமுணுத்தாள் நாயகி.

ஏற்கனவே அங்கே பெரும் இரைச்சலாக இருக்க, அவள் இப்படி முணுமுணுக்கவும், “ஏய் எது சொல்றதுன்னாலும் கொஞ்சம் சத்தமா சொல்லு; சும்மா டென்ஷன் பண்ணாத” என்றாள் மேனகா.

“நீ இதுவும் சொல்லுவ; இன்னமும் சொல்லுவமே அஆங்.

அன்னைக்கு எலிகாபட்டர்ல அந்த சாமி குட்சைக்கு போவ சொல்லோவே நானு சாமிய கண்டுக்கினு வந்திருப்பேன்.

போவவுடாம செஞ்சுபுட்டு இங்க வந்து கூவினு கெடக்காரியாமா நீயி” என நாயகி எகிறதோடங்க, அவள் பேச்சு அப்படியே நின்றது.

காரணம் அங்கே இருந்த மேடையின் திரை விலகி, பஞ்ச உலோகங்களால் செய்யப்பட்ட, மலர் அலங்காரங்களுடன் கூடிய ஒரு மிகப்பெரிய நடராஜர் சிலை காட்சி அளிக்கவும், அங்கே குழுமியிருந்த பக்தகோடிகளின் கவனம் மொத்தமும் மேடையை நோக்கி திரும்ப, ‘காயா… மாயா… சிவஸ்ய சாயா’ என்கிற மந்திரம் வெவ்வேறு குரல்களில் வெவ்வேறு விதமான உச்சரிப்பில் தாறுமாறாக ஒலித்து அந்த அரங்கத்தையே அதிரச்செய்தது.

ஒரு ஓரப்பார்வையால் மேனகா நாயகியைப் பார்க்க, பக்தி பரவசத்தில் அந்த கைலாசத்திற்கே சென்றுவிட்டவள் போல அவளது முகம் ஒளிர்ந்தது.

சில நிமிடங்கள் இப்படியே கடக்க, ‘காயா… மாயா… சிவஸ்ய சாயா’ என்று சொல்லிக்கொண்டே அந்த மேடையில் தோன்றிய ஸ்வாமி நிர்மலானந்தா ஒரு கூடை மலர்களை அந்த நடராஜர் மீது தூவி கரம் குவித்து பின்பு மக்களை நோக்கித் திரும்பினார்.

அவர் முன்னால் குழுமி இருந்த மக்கள் வெள்ளத்தைப் பார்த்து அப்படி ஒரு பூரிப்பில் நிறைந்தது அவரது முகம்.

அவர் கழுத்தைச் சுற்றி இணைக்கப்பட்டிருந்த ஒலிவாங்கி மூலம் ஒலிபெருக்கி அவரது குரலை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க, ‘நிர்மலானந்தம்… நிர்மலானந்தம்’ என அங்கே எழுந்த ஆரவாரம் அடங்கவே சில நிமிடங்கள் பிடித்தது.

வெகு தூரத்திலிருந்து என்றாலும் அப்பொழுதுதான் அவரை நேரில் பார்க்கிறாள் மேனகா.

ஒரு ஐந்தரை அடி உயரம் இருக்கலாம். காவி வேட்டி உடுத்தி கவியிலேயே குர்தா அணிந்திருந்தார்.

அவருடைய முகம் தெளிவாகத் தெரியவில்லை. இருந்தாலும் ஏதோ ஒரு அதிர்வலை அவளைத் தாக்குவதுபோல அவளது உடல் ஒரு முறை குலுங்கிச் சிலிர்த்தது மேனகாவுக்கு.

ஒரு இனம் புரியாத பயம் மனதிற்குள் வந்து ஒட்டிக்கொள்ள அருகிலிருந்த ஒளித்திரையில் அவரது முகத்தைப் பார்த்தாள் அவள்.

அது தாடிக்குள் மொத்தமாகப் புதைந்து போய், விரிந்த நெற்றியையும் கண்களையும் தவிர அவரது முகத்தில் வேறொன்றும் புலப்படவில்லை அவளுக்கு.

அவரது அந்த கண்கள்… அதில் ஒரு ஈர்ப்பு இருந்தது.

அந்த கண்கள்… நெடுநாட்களாக பார்த்துப் பழக்கப்பட்ட கண்களாகத் தோன்றியது அவளுக்கு.

அப்படியே ஓடிப்போய் அவரை அணைத்துக்கொள்ளவேண்டும் போன்ற ஒரு வாஞ்சை உருவானது.

புரியாத ஒரு அன்பு சுரந்தது அவர்பால்.

காரணம் புரியாமல் வந்த அழுகையை அடக்கிக்கொண்டு தலையை பிடித்துக்கொண்டாள் மேனகா.

அதன்பின் தொடர்ந்து இரண்டு மணிநேரம் அவர் ஆற்று ஆற்று என ஆற்றிய உரை ஒன்றும் அவளது மூளைக்குள் செல்லவே இல்லை.

ஒருவழியாக அவர் தனது சொற்பொழிவை முடிக்கவும் அது வரை அமைதியாக இருந்த கூட்டமும், நாயகியும், ‘சாயா… மாயா” எனக் கத்த தொடங்க, சுய நினைவுக்கு வந்தவள், ஒரு பதட்டத்துடன் மேடையைப் பார்க்க, நூற்றியெட்டு தீபங்கள் ஜொலிக்க ஏற்றப்பட்ட அடுக்கு தீபத்தைக் கொண்டு அங்கே இருந்த நடராஜர் சிலைக்கு ஆரத்தி செய்து கொண்டிருந்தான் விஸ்வா.

வெண்கலத்தால் ஆன கிட்டத்தட்ட நான்கு அடி உயரமாவது இருக்கக்கூடிய மிகப்பெரிய அடுக்கு ஆரத்தி எனப்படும் தீபம் அது.

அதுவும் அதில் ஏற்றப்பட்டிருக்கும் விளக்குகளின் ஜுவாலையின் வெப்பத்துடன் அதை கைகளில் ஏந்தி தீபாராதனை செய்வதென்பது அவ்வளவு சாதாரண செயலல்ல.

உடலிலும் மனதிலுமாக மிகவும் பலம் பொருந்தியவனால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.

அவனுடைய முறுக்கேறிய புஜங்கள் அவனது வலிமையைக் காட்டிக்கொடுக்க, வியப்புடன் கண் இமைக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் மேனகா.

விஸ்வாவை பார்த்தபிறகு அவளது படபடப்பு கொஞ்சம் மட்டுப்பட்டதுபோல் தோன்றியது அவளுக்கு.

அந்த காட்சியை பார்த்துப் புல்லரித்து அங்கே கூடியிருந்த பக்த கூட்டம் உற்சாக ஒலி எழுப்ப, வாத்தியங்கள் முழங்க பஜனை பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்கவும், உற்சாக நடனம் ஆடத்தொடங்கினார் மேடையில் நின்றிருந்த நிர்மலானந்தா.

அதைப் பின்பற்றி கூட்டத்தில் நின்றவர்களும் ஆட தொடங்க அந்த அரங்கமே அதிர்ந்தது.

அருகில் திம்… திம்… என நாயகி குதிக்கத் தொடங்கவும், சூழ்நிலை உணர்ந்தது அவளை வெளியில் இழுத்துவந்தாள் மேனகா.

வரவே மாட்டேன் என முரண்டு பிடித்த நாயகியை ஒரு கையால் இழுத்துக்கொண்டு மில்லி இருந்த கூண்டை மற்றொரு கையில் பிடித்துக்கொண்டு, அதுவும் அந்த கூட்டத்திலிருந்து மீண்டு வெளியில் வருவதற்குள் போதும் போதும் என்று ஆனது அவளுக்கு.

நேரம் கிட்டத்தட்ட இரவு பதினொன்றை நெருங்கியிருந்தது.

“ஏய் தொல்ல; அறிவில்ல உனக்கு; நாம வந்த வேலை என்ன; நீ செஞ்சிட்டு இருக்கறது என்ன” என அவள் நாயகியிடம் எகிற, “இன்னாம்மா சொல்ற நீயி; நீதான் அந்த சின்ன சாமிய உஷார் பண்ண வந்த; நானில்ல… நெனப்புல வெச்சிக்க.

நான் எங்க பெரிய சாமி பேசறததான் கண்டுக்க வந்தேன்; சும்மா உன்னோட வேலைல என்னை கோத்து உட்டுக்குனு நொய்யி நொய்யிங்கற அஆங்” எனப் பதிலுக்கு அவள் எகிரவும், “ஏய்… சீ… உஷார் பண்ண வந்த அது இதுன்னு அசிங்கமா பேசாத. கருமம்” எனத் தலையில் அடித்துக்கொண்டவள், வாகன நிறுத்தத்தை அடைந்திருந்தாள் மேனகா.

அங்கே சுலபமாக வெளியில் எடுக்க ஏதுவாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது அந்த சிறிய ‘ஹட்ச் பேக்’ ரக கார். அதன் கண்ணாடி இறக்கப்பட்டிருக்க, சாவியும் தயாராக அதிலேயே வைக்கப்பட்டிருந்தது.

வெகு இயல்பாக அதை திறந்து கையிலிருந்த மில்லியின் கூண்டை அதன் பின் இருக்கையில் வைத்துவிட்டுப் போய் மேனகா அந்த வாகனத்தைக் கிளப்ப, அவசரமாக அவளுக்கு அருகில் வந்து உட்கார்ந்தாள் நாயகி அவளை ஒரு அதிர்ச்சியான பார்வை பார்த்துக்கொண்டே.

பின் அந்த ஆசிரமத்திலிருந்து வெளியில் வந்து சற்று தள்ளி வாகனத்தை நிறுத்தி அவள் சில நிமிடம் காத்திருக்க, மந்திரித்து விட்டவன் போல அங்கேயும் இங்கேயுமாக பார்த்தவாறு அங்கே வந்தான் விஸ்வா.

பயத்துடன் அவள் சுற்றுமுற்றும் பார்க்க அந்த நிகழ்ச்சி இன்னும் முடியவில்லை என்பதால் அந்த சாலையே வெறிச்சோடி கிடந்தது.

உடனே வேகமாகக் கீழே இறங்கியவள், ஓடிச்சென்று அவனது கையை பற்றிக் கிட்டத்தட்ட இழுத்து வந்து பின் இருக்கையில் அவனைத் தள்ளிவிட்டு அவன் உட்கார்ந்தவுடன், ஓட்டுநர் இருக்கையில் வந்து அமர்ந்தவள் காரை கிளப்பிக்கொண்டு வேகமாக அங்கிருந்து சென்றாள்.

மேனகாவின் செய்கை ஒவ்வொன்றையும் பார்த்து பீதியில் உறைந்துபோயிருந்தாலும் அதை வெளிக்காண்பிக்காமல் சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்திருந்த நாயகி ஒரு நிலைக்கு மேல் பொறுமையைக் கடைப்பிடிக்க இயலாமல், காரின் ‘ஆடியோ சிஸ்ட’த்தின் ஒலியைக் கூட்ட, அது சுந்தர மலையாளத்தில் இசைக்கத் தொடங்கியது.

நீ ஹிம மழையாய் வரு… (click here for view this song)

ஹ்ரிதயம் அணிவிரலால் தொடு…

என் மிழியிணையில் சதா,

ப்ரணயம் மஷி எழுதுன்னிதா…

ஷிலையாயி நின்னிடாம் நின்னே நோக்கியே…

யுகமேரி என்னே கண் சிம்மிடாதயே…

என் ஜீவனே…

வேற்று மொழியை கேட்டுக் கடுப்பானவள், “அய்ய இன்னாயாமா இது… இந்தில பாடுது” என்றவாறு அதை மாற்ற எத்தனிக்க, அதைச் செய்ய அவளுக்குத் தெரியாமல் போகவும், “மேனகாம்மா… நம்ம தலிவர் பாட்டு போடேன்” என அவள் கோரிக்கை விடுக்க, அவளை முறைத்தாள் மேனகா.

அவளுக்குமே அவ்வளவாக மலையாளம் தெரியாதுதான். ஆனாலும் அந்த பாடல் வரிகளில் பல தமிழ் வார்த்தைகள் கலந்திருப்பது போல் தோன்றவும், அதன் இனிமையில் அவளது மனம் சற்று அமைதி அடைந்திருக்க, “ப்ச்… பாட்டு நல்லா இருக்கு; சும்மா இரு நாயகி” என்றவள் ‘அவனே விரும்பி அடைபட்டிருக்கும் அந்த சிறையிலிருந்து அவனை மீட்டு வர வரம்பு மீறி நான் என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறேன்?

சந்ரமௌலி என்னுடைய ஆராய்ச்சிக்கு உதவி செய்கிறேன் என்று சொன்னதற்காக மட்டும்தான் நான் இதையெல்லாம் செய்கிறேனா?

இல்லை அந்த கனவு எனக்குள் எதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதா?

இது நடைமுறைக்கு நிச்சயம் சாத்தியப்படாதே!’ எனப் பல சிந்தனைகள் அவளுக்குள் குறுகுறுக்க, தன்னையும் அறியாமல் பின் புறமாகத் திரும்பி விஸ்வாவை பார்த்தாள் அவள்.

இருக்கையில் சாய்ந்தவாறு அப்படியே உறங்கிப்போயிருந்தான் அவன்.

ஏற்கனவே தாடிக்குள் புதைந்திருந்த அவன் முகம் அந்த அரை இருளில் தெளிவாகத் தெரியாமல் போக, ஒரு பெருமூச்சை வெளியேற்றியவள் சாலையில் தன் கவனத்தை செலுத்தத் தொடங்கினாள் மேனகா.

ஒரே சிறகுமாய் ஆயிரம் ஜன்மவும்…
கிடாதுணரனே நம்மளில் நம்மளாவோளம்…
நீ ஹிம மழையாய் வரு…
ஹ்ரிதயம் அணிவிரலால் தொடு…

செவிவழி புகுந்த அந்த பாடல் வரிகள் அவளுடைய சிந்தையில் தேனை வார்த்தது.


அந்த நள்ளிரவு வேளையில் நிர்மலானந்தாவின் சென்னை ஆசிரமமே லகலகதுக்கொண்டிருந்தது.

அந்த நிகழ்ச்சி முடிந்து, மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்துகொண்டிருந்த சமயம், விஸ்வாவை காணாமல் சில சிஷ்யர்கள் அவனைத் தேட தொடங்கியிருந்தார்கள்.

முதலில், அவன் அங்கேதான் எங்காவது இருக்கக்கூடும் என அசட்டையாகத் தேடியவர்கள் நேரம் செல்ல செல்ல கொஞ்சம் பதட்டம் அடைந்தனர்.

பின் அந்த விஷயம் நிர்மலானந்தாவை எட்ட, அவன் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் சிஷ்யர்களில் ஒருவன் அதுவும் ஆசிரமத்துக்கு மிகவும் முக்கியமானவன் என்பதால் கொஞ்சம் அதிர்ந்துதான் போனார் ஸ்வாமிஜி.

அங்கே மூலைமுடுக்கெல்லாம் கூட தேடியும் அவன் கிடைக்காமல் போக, “இத்தன பேர் இருக்கீங்க; நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கற வேலையை தவிர நீங்கல்லாம் உருப்படியா எதுவும் செய்ய மாட்டிங்களா?

சின்ன ஸ்வாமிஜி எங்க போனார்னு ஒருத்தர் கூடவா கவனிக்கல?” என தன் சாந்த ஸ்வரூப சாது வேஷம் கலையக் கூச்சலிட்டார் நிர்மலானந்தா.

முதல் முதலாக அவரது அந்த கோப முகத்தைப் பார்த்து அதிர்ந்துபோய் எல்லோரும் நிற்க, கொஞ்சமாகத் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு, தன் பருத்த உடலைத் தூக்கிக்கொண்டு அசைந்து அசைந்து அவருக்கு அருகில் வந்த அவரது குண்டு சிஷ்யர் தர்மானந்தா, “அமைதி ஸ்வாமிஜி அமைதி; நீங்க டென்ஷன் ஆனா உங்க பீபீ எகிறும்” என்று சொல்லி அவரது முறைப்பைப் பெற்றுக்கொண்டு, “இல்ல; சீசீ டீவி கேமரா பூட்டேஜஸை பார்த்தால் தெரிஞ்சிடும்; நம்ம செக்யூரிட்டி ஆபீசர் கிட்ட சொல்லி பார்க்க சொல்றேன்” என நிதானமாகச் சொல்ல, அடுத்த நொடி ஓட்டமும் நடையுமாக அந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பார்வையிடும் திரைகள் வைக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு அறை நோக்கி சென்றவர், அவர்களுடைய பாதுகாப்பு அதிகாரியின் துணையுடன், கண்காணிப்பு கேமரா பதிவுகளைத் தானே ஆராய தொடங்கினார் நிம்மி.

அதில் விஸ்வா ஆசிரமத்தை விட்டு வெளியேறி அந்த வீதியைத் தாண்டி செல்வதுவரை மட்டுமே பதிவாகியிருந்தது.

‘அவன் ஏன் இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் போனான்?’ என்ற கேள்வி அவர் மண்டையை குடைந்துகொண்டிருக்க, அந்த அறைக்கு வெளியே ஏதோ சலசலப்பு உண்டாகியிருந்தது.

ஆற்றாமையுடன் தலையைப் பிடித்துக்கொண்டவர் வெளியில் வந்து பார்க்க, “அந்த பழைய மாடல் காருக்கு நீங்க இவ்வளவு பிரச்சனை செய்ய கூடாது. கொஞ்சம் பொறுமையா இருங்க” என தர்மானந்தா ஒருவரிடம் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார்.

“ஐயோ; எண்ட குருவாயூரப்பா; ஆராகிலும் என்னே ஹெல்ப் செய்யு; எண்ட காரை யாரோ காட் கொன்னு போயி! (எனக்கு உதவி செய்ங்க; ஏன் காரை யாரோ திருடன் திருடிட்டு போயிட்டான்)

ஆ கார் இருபது வருஷம் முன்னே எண்ட கலியாணத்தினு அம்மாயியச்சனு வாங்கித்தந்ததானு! (அந்த கார் இருபது வருஷத்துக்கு முன்னால என் கல்யாணத்துக்காக என் மாமனார் வாங்கி கொடுத்தது)

அது இல்லாண்ட ஞான் வீட்டில் போயால் எண்டே பார்யா என்னே சவிட்டி கொல்லும்(அது இல்லாம நான் வீட்டுக்கு போனால் என் மனைவி என்னை தூக்கி போட்டு மிதிச்சே கொன்னுடுவா)” எனக் கூச்சல் போட்டுக்கொண்டிருந்தார் ஒருவர்.

அவர் எந்த காரை பற்றி சொல்லிக்கொண்டிருந்தாரோ, கேரள பதிவு எண்ணை தாங்கியிருந்த அந்த கார் அமைதியாகச் சந்திரமௌலியின் விருந்தினர் மாளிகையின் வாயிலில் போய் நின்றது.

அதற்குள்ளே இருந்து மேனகா எழுப்பிய ஆரன் ஒலியில் அந்த மாளிகையின் கதவு திறக்கப்பட, அவளை அடையாளம் கண்டுகொண்ட காவலாளி அவள் உள்ளே செல்ல அனுமதிக்கவும், அரை கிலோ மீட்டர் தூரம் வாகனத்தை உள்ளே ஓட்டி சென்று அதை நிறுத்தியவள், “நாயகி நீ மில்லியை தூக்கிட்டு போ; நான் விஸ்வாவை அழைச்சிட்டு வரேன்” என்று சொல்லி மில்லியின் கூண்டை எடுத்து அவளிடம் கொடுத்தாள் மேனகா.

அவள் ஏதோ முணுமுணுத்துக்கொண்டே கூண்டுடன் உள்ளே செல்ல அதை கண்டுகொள்ளாமல், “விஸ்வா! எழுந்திருங்க; உங்க வீடு வந்துடுச்சு” எனச் சிறு தயக்கத்துடன் விஸ்வாவை அவள் உலுக்கவும், அயர்ந்த உறக்கத்திலிருந்தவன் அவளைப் பார்த்து அரண்டு விழிக்க, “வாங்க உள்ள போகலாம்” என்றாள் அவள்.

அவள் செலுத்தியிருந்த ரசாயனத்தின் தாக்கத்திலிருந்தவன் மெய்மறந்து அவள் சொன்னதை அப்படியே செய்தான்.

அதாவது தனது வலதுக்காலை எடுத்துவைத்து அவனுக்குச் சொந்தமான அந்த மாளிகைக்குள் பிரவேசித்தான் விஸ்வா மேனகாவுடன்.

2 thoughts on “Virus Attack- 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content