Solladi sivasakthi-9&10
9
அவளின் முடிவு
இரவெல்லாம் அவனைப் பற்றிய சிந்தனையால் பாதி நேரம் உறக்கமின்றிக் கழிந்துவிடப் பின்னர்க் கீதாவிடம் பேசியபடி இருக்கக் கதிரவன் தன் பணியைத் தாமதமின்றிச் செய்யத் தொடங்கினான்.
கீதா அலுவலகத்திற்குப் புறப்படாமல் சக்திக்காக விடுப்பு எடுத்துக் கொள்வதாகச் சொன்னாள். ஆனால் சக்தி அவளைக் கட்டாயப்படுத்தி அலுவலகத்திற்குப் புறப்படச் செய்தாள்.
இரவு நேரத் தூக்கத்தைச் சரிக்கட்ட சக்தி சூரியனின் ஒளிக்கீற்றுகளை நிராகரித்துவிட்டு அவளை மறந்து நித்திரையில் ஆழ்ந்தாள்.
சக்தியின் கைப்பேசி ரொம்ப நேரம் சக்திசெல்வனின் அழைப்பை அறிவித்து அறிவித்துக் களைத்துப் போனது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சக்திக்குக் கனவில் கைப்பேசியின் அழைப்பு மணி கேட்டு கொண்டிருப்பதாய் தோன்றியது.
மீண்டும் கைப்பேசி மணி ஒலிக்க இம்முறை சக்தியின் மனம் விழித்துக் கொள்ளத் தெளிவுப் பெறாமலே கண்களை மூடியபடி கைகளைத் துழாவி கைப்பேசி அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்.
“ஹெலோ யாரு?” என்று கேட்டாள்.
“பெயர் சொல்லவா?” என்று சக்திசெல்வனின் கம்பீர குரல் ஒலிக்க, அடுத்தக் கணமே கண்களைத் திறந்து எழுந்து உட்கார்ந்துக் கொண்டாள்.
மீண்டும் அவன், “என்ன சக்தி… தூங்கிட்டிருந்தியா?!” என்று கேட்டான்.
“ம்ம்ம்” என்றாள்.
“என்ன விடிஞ்சி இவ்வளவு நேரமாச்சி… தூங்கிட்டிருக்க… நைட் தூங்காம ரொம்ப நேரம் யோசிச்சிட்டு இருந்தியோ?!” என்று கேட்டான்.
அவன் கண் காணாத இடத்தில் இருந்தபடி எல்லாவற்றையும் சரியாகவே கணித்து விடுகிறானே என்று சக்திக்குக் கோபம் வந்தது.
“நான் தூங்கினேன்… தூங்கல… உங்களுக்கு என்ன?” என்று கேட்டாள்.
அதே சமயத்தில் வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க சக்தி போஃனில் அவனிடம், “ஒன் மினிட்… யாரோ காலிங் பெல் அடிக்கிறாங்க?” என்றாள்.
“யாரோ இல்ல சக்தி… அது நான்தான்” என்றான்.
சக்தி அதிர்ச்சியோடு, “ஆர் யூ சீரியஸ்?” என்று கேட்டாள்.
“கம்மான் சக்தி ஓபன் தி டோர்” என்றான்.
“என்ன விளையாடிறீங்களா… பேரை கண்டுபிடிச்ச பிறகுதானே மீட் பண்றதா டிசைட் பண்ணோம்” என்று கேட்டாள்.
“அப்போ நீ என் மேல நம்பிக்கை இல்லைன்னு சொன்னியா… அந்தக் கோபத்தில அப்படிச் சொல்லிட்டேன்… இட்ஸ் ஒகே… நீ என் பேரை கண்டுபிடிக்கலன்னா பரவாயில்ல… இப்போ கதவு திற… ஐம் வெயிட்டிங் அவுட் சைட்… ஓபன் தி டோர்”என்றான்.
“நோ… டீல் இஸ் அ டீல்… நாம பேசினது பேசினதுதான்… உங்க இஷ்டப்படி எல்லாம் என்னால ஆட முடியாது” என்றாள்.
அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள். நைட் டீரஸ் அணிந்து கொண்டு உறக்கத்தால் சிவந்த கண்கள் பொட்டில்லாத களை இழந்த முகம். அவனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலை விட அவன் முன்னாடி தான் இப்படியா போய் நிற்பது என்ற பெண்மைக்கே உரித்தான கவலை அவளை ஆட்கொண்டது.
“நீ டெல்லிக்கு என்னைப் பார்க்கத்தானே வந்த சக்தி” என்று கேள்வி எழுப்பினான்.
“சரி நம்ம மீட் பண்ணுவோம்… பட் இப்ப வேண்டாமே… ப்ளீஸ் கோ” என்று சக்தி கெஞ்சினாள்.
எதிர்புறத்தில் அவன் கலகலவென்று சிரித்தபடி,
“சீரியஸா நான் சொன்ன பொய்யை நம்பிட்டியா சக்தி… ஸோ சாரி” என்றான்.
“பொய்யா?!” என்று சக்தி பெருமூச்சுவிட்டாள்.
பின்னர்க் கோபத்தோடு,
“வாட்ஸ் யுவர் பிராப்ளம்? என்னை ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க? ஊர் உலகத்தில உங்களுக்கு வேற பெண்ணே கிடைக்கல” என்று தன் எரிச்சலை வெளிப்படுத்தினாள்.
அவன் சிரித்துவிட்டு, “ரிலேக்ஸ்… போய் முதல கதவை திற… நான் காலில் வெயிட் பண்றேன்” என்றான்.
சக்தி போய்க் கதவைத் திறக்க,
“மேம்… தீஸ் பிஃளவர்ஸ் ஆர் பாஃர் யூ” என்று ஒரு இளைஞன் அந்த அழகிய ரோஜா மலர்களை நீட்டினான்.
சக்தி இன்னும் எரிச்சல் மிகுதியால் பூக்களை வாங்கிக் கொண்டு கதவை படாரென்று மூடினாள்.
‘ஹேவ் அக் கிரேட் டே சக்தி’ என்று அந்த மலர்களின் நடுவில் உள்ள சீட்டில் எழுதியிருக்க, “என் நாளே நாசமா போச்சு… இதுல கிரேட் டே வேற” என்று சொல்லி அந்தப் பூங்கொத்தை தூக்கி வீசினாள்.
சக்தி போஃனை எடுத்து கோபமாய்,
“இந்த மாதிரி ரோஸஸ் அனுப்பிறதை இதோட நிறுத்துங்க… எனக்கு இரிட்டேட்டிங்கா இருக்கு” என்றாள்.
“இனிமே அனுப்ப மாட்டேன்… நெக்ஸ் டைம் நானே நேரில வந்து தர்றேன்… பட் நீ என் பெயரை கண்டுபிடிச்சிட்டியா சக்தி ?!” என்று கேட்டான்.
“இல்ல முயற்சி பண்ணிட்டிருக்கேன்… கண்டுபிடிச்சிருவேன்” என்று தயக்கமின்றி சக்தி பொய்யுரைத்தாள்.
இத்தனை நேரம் வரை அவன் பெயர் தெரிந்தாலும் அவள் அதை உச்சரிக்காமலே பேசியதும் இப்பொழுது சக்தி உரைத்த பொய்யும் சக்திசெல்வனை ஏமாற்றும் எண்ணம் போலும்.
“போகட்டும்… நாளைக்கு நாம கண்டிப்பா மீட் பன்றோம்… நீ என் பெயரை கண்டுபிடிச்சாலும் சரி கண்டுபிடிக்கலனாலும் சரி… ஆனா பேசினபடி யார் தோற்க்கிறமோ அவங்க ஜெய்ச்சிவங்க டிமேன்ட்டை அக்ஸ்ப்பெட் பண்ணிக்கிட்டே ஆகனும்… ரைட்” என்று அவன் சொல்ல சக்தி,
“என்ன டிமேன்டா இருந்தாலும் கேள்வி கேட்காம ஒத்துக்கனுமா?!” என்று கேட்டாள்.
அவள் அப்படிக் கேட்டதன் அர்த்தம் நம் நாயகனுக்குப் புரிந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் வாசகர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும்.
“எஸ் சக்தி… அதானே டீல்” என்று அவன் சொல்ல அந்தப் பதில் அவனுக்கே வினையாய் முடியப் போகிறது.
சக்தி தன் சந்தோஷத்தைக் குரலில் காட்டிக் கொள்ளாமல்,
“ஒகே நாளைக்கு மீட் பண்ணுவோம்… அதுக்குள்ள நான் உங்க பெயரை கண்டுபிடிக்க ட்ரை பன்றேன்” என்றாள்.
“ஒகே சக்தி… சீ யூ சூன்” என்று அவன் சொல்ல இருவருமே இணைப்பைத் துண்டித்தனர்.
சக்தி மனதில் இப்போது வேறு விதமான குழப்பம் ஆட்கொண்டது. அவனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் ஒருபுறம் இருந்தாலும் அந்தச் சந்திப்பு எத்தகையதாய் இருக்கும் என்று மனதிற்குள் அச்சம் தொற்றிக் கொண்டது.
அந்த நேரத்தில் ஜெயா போஃன் செய்ய அவளிடம் அவனைப் பற்றி எந்த விஷயத்தையும் சக்தி பகிர்ந்து கொள்ளவில்லை.
தான் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் அவன் கணிக்கிறானா? இல்லை அவனுக்குத் தகவலாய் செல்கிறதா? என்பது புரியாத புதிராய் இருக்கும் நிலையில் இது குறித்து சக்தி ஜெயாவிடமே பகிர்ந்து கொள்ளப் பயந்தாள்.
அன்று முழுவதும் சக்தி பதட்டத்தோடு இருந்த போதும் ஒரே ஒரு முடிவில் தெளிவாய் இருந்தாள். அது அவள் நாளை சென்னையைச் சென்றடைய வேண்டும். அவள் எதிர்பார்த்தது போல் இரவு ஏழு மணிக்கான விமானத்தில் செல்ல பயணச் சீட்டையும் ஏற்பாடுச் செய்தாள்.
அலுவலகத்தில் இருந்த வந்த கீதாவிடம் தான் நாளை சென்னை செல்வதற்கான ஏற்பாடுகள் செய்து விட்டதாகச் சொன்னாள்.
“நாளைக்கு நீ சக்தி சாரை மீட் பண்ணுவ இல்ல” என்று கேட்டாள் கீதா.
“எனக்குச் சக்தியை பார்க்கனும்… ஆனா நாங்க இரண்டு பேரும் சந்திச்சிக்கக் கூடாது” என்றாள் சக்தி.
“எனக்குப் புரியல” என்று கீதா குழப்பமடைந்தாள்.
“புரிகிற மாதிரி சொல்றேன்… ஆனா நாளைக்கு நீ எனக்கு ஒரு உதவி செய்யனும்” என்றாள்.
“ஏடாக்கூடாம ஏதாச்சும் கேட்காதடி” என்றாள் கீதா.
சக்தி தான் மனதில் யோசித்த வைத்த திட்டத்தைக் கீதாவிடம் பகிர்ந்து கொண்டாள்.
“ஓமை காட்… சக்தி இது நல்லதுக்கில்ல… எனக்கு ஓரளவுக்கு சக்தி சாரை பத்தி தெரியும்… அவருக்கு எதிலயும் தோற்கிறது சுத்தமா பிடிக்காது… தான் நினைச்சதை நடத்தியே ஆகனும்னு பிடிவாதமான ஆளு.
அதனாலதான் இப்பவரைக்கும் நீ அவரை நிராகரிச்சிர கூடாதுன்னு அவர் நேர்ல வர தயங்குகிறாருன்னு நினைக்கிறேன்… பட் நீ வேண்டாம்னு மட்டும் சொல்லிட்டா நிச்சயம் சக்தி சாருக்கு அது கோபமா மாறாலாம்… அது உனக்கே பிரச்சனையா திரும்பிடுமோன்னு எனக்குப் பயமா இருக்கு”என்று கீதா பதட்டத்தோடு உரைத்தாள்.
“இப்ப என்ன சொல்ல வேற?” என்று சக்தி அலட்சியமான தொனியில் கேட்க,
“நீ சக்தியை மீட் பண்ணிட்டு… அப்புறமா சென்னைக்குப் போ” என்றாள் கீதா.
“இல்ல கீதா அது சரியா வராது… என்ன பிரச்சனை வேண்ணா வரட்டும் நான் அதைச் சென்னையில போய்ப் பேஃஸ் பண்ணிக்கிறேன்” என்று சக்தி தீர்க்கமாகச் சொன்னாள்.
அதற்குப் பிறகு கீதாவால் அவளின் பிடிவாதத்தை மாற்ற முடியவில்லை. சக்திக்கும் உள்ளூர பயம் இருந்த போதிலும் யாரும் தெரியாத அந்த ஊரில் இருப்பதைவிடச் சென்னைக்குத் திரும்பிவிடுவதே தனக்குப் பாதுகாப்பு என்று எண்ணினாள்.
இதுநாள்வரை அவன் அவள் கண் முன்னே தோன்றாமலே அவளின் நன்மதிப்பைப் பெற்றிருந்தான். ஆனால் இன்று வரை அவன் காதலை அவளிடம் வெளிப்படுத்தியதே இல்லை.
நாளை அவனை நேரில் சந்திக்க நேர்ந்து காதல் என்ற ஒன்றை முன்னிறுத்தினால் முடியாது என்று நிராகரிக்கும் தைரியத்தை சக்தி இழக்க நேரிடலாம். அதற்கான ஆழமான காரணம் அவளிடம் இருந்தது.
சக்தியின் அண்ணன் அருணுக்கு நேர்ந்த விபத்து. மொத்தமாய் அவளின் லட்சியத்தை விடுத்துத் தடம் மாறி அடித்துச் செல்ல இருந்த அந்தப் பெரும் வெள்ளத்தில் இருந்து அவளை மீட்டெடுத்தவன்.
ஒரு பக்கம் குற்றவுணர்வு சக்தியை வாட்டி வதைத்தது. வீசி எரிந்த ரோஜாக்களை மீண்டும் கைகளில் எடுத்து மேஜை மீது வைத்தாள். சக்தியின் மனதிற்கும் மூளைக்குமான பெரும் போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. சக்தியின் உறக்கத்தை நம் நாயகன் பறித்துக் கொண்டு வெகு நாளானது.
‘உன் உயிரை காப்பாத்தி… தொலைஞ்சி போக இருந்த உன் கனவை திருப்பிக் கொடுத்த அவனுக்கு நீ பிரதி உபகாரமாய் என்ன செய்யப் போற சக்தி?’ என்று சக்தியின் மனம் அவளிடம் கேள்வி எழுப்பியது.
10
மதிப்புக்குரியவன்
முன்பு ஒரு முறை சிவசக்தி சந்திக்க நேர்ந்த மோசமான நிகழ்வும், அப்பொழுது அவன் செய்த உதவியுமே அவளுக்கு அவனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டிற்று.
கல்லூரியில் கடைசி வருடத் தேர்வு நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. சிவசக்தி தேர்விற்குப் படித்துத்தான் எழுத வேண்டும் என்பதில்லை. அவள் படிப்பதைவிடத் தன் நண்பர்களுக்குப் பாடங்களை விளக்குவதன் மூலமே அவள் பயின்று விடுவாள்.
எல்லோருமே கல்லூரி நாட்களின் முடிவையும் வரப் போகும் தேர்வையும் எண்ணி வருந்திக் கொண்டிருந்தனர். அந்தத் தருணத்தில் சக்திக்கு கிடைக்கப்பெற்ற செய்தி எதிர்பாராத விதமாய் அவள் அண்ணன் அருணின் மரணம்.
அருண் கட்டிடக் கலை பொறியியல் பயின்றவன். சில மாதங்கள் ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்தான். சில கால அனுபவத்திற்குப் பின்னர்த் தானே சொந்தமாய் ஒரு நிறுவனம் தொடங்கி அதற்கான முழு முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருந்தான்.
ஆனால் எதிர்பாராத விதமாய் அவன் கட்டிக் கொண்டிருந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் இருந்து தவறி வீழ்ந்து அந்தக் கணமே உயிர் துறந்தான்.
சிவசக்தியினைத் தாங்கி நின்ற தூணாகவே அருண் இருந்தான் என்றே சொல்ல வேண்டும். இன்று அவனின் இறப்பு சக்தியின் தன்னம்பிக்கையை உடைத்தெறிந்தது.
திவ்யாவோ நிறைமாத கர்ப்பிணியாய் கணவனை இழந்து நொறுங்கிப் போயிருக்க சக்தியும் அவளைத் தேற்ற முடியாமல் உடைந்துப் போனாள். சிவசக்தி இல்லத்தில் இருந்த பெண்கள்தான் சக்திக்கும் திவ்யாவிற்கும் ஆறுதலாய் இருந்து வந்தனர்.
அத்தனை சீக்கிரத்தில் சரி செய்துவிடக் கூடிய இழப்பல்ல அருணின் மரணம். திவ்யா தன் பெற்றோர்களை விட்டு அருணை நம்பியே வந்திருந்தாள். ஆனால் இன்று எல்லாவற்றையும் மறந்து திவ்யாவின் பெற்றோர் மகளின் சோகத்தில் பங்கெடுத்துக் கொண்டனர்.
திவ்யாவின் தாய், தந்தையினருக்கு அருணின் மரணம் சோகத்தை விடக் கோபத்தையே அதிகமாய் உருவாக்கியது.
மகள் இப்படி நிராதவாய் நிற்க திவ்யாவின் தந்தை சக்தியிடம்,
“என் பொண்ணோட வாழ்க்கையே உன் அண்ணன் அழிச்சிட்டானே… இப்ப வயித்துல பிள்ளையோட அநாதரவா நிக்க வைச்சிட்டீங்களே?” என்று கண்ணீரோடு அவளைத் தூற்றினார்.
அது உண்மையிலேயே ஒரு தந்தையின் உணர்வுப்பூர்வமான வலி என்றாலும் அதில் சக்தியின் தவறென்ன? அண்ணனின் இழப்பைத் தாங்கி கொள்ளவே முடியாத பட்சத்தில் திவ்யாவின் தந்தையின் கோபம் அவளை அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. திவ்யாவை அவள் பெற்றோர்கள் உடன் அழைக்க அவள் சக்தியை தனியாய் விட்டுப் போக மறுத்தாள்.
சக்தி தன் அண்ணியிடம்,
“நீங்க உங்க அம்மா, அப்பாவோட போங்க… இந்த மாதிரி நேரத்தில நீங்க அவங்க கூடதான் இருக்கனும்… என்னைப் பத்தி கவலை படாதீங்க… நான் ஹாஸ்டல் போயிடுவேன்… எக்ஸேம்ஸ் முடிஞ்சதும் நம்ம இல்லத்தில போய்த் தங்கிப்பேன்” என்றாள்.
“இல்ல சக்தி“ என்று திவ்யா ஏதோ சொல்ல சக்தி அவளைப் பேசவிடாமல் வற்புறுத்தி அவள் பெற்றோருடன் பெங்களூர் அனுப்பிவைத்தாள்.
பிரச்சனை எல்லாம் அதற்குப் பிறகுதான் தொடங்கியது. அருண் கன்ஸ்டிரங்க்ஷன்ஸ் எடுத்துச் செய்து கொண்டிருந்த பெரிய பிராஜகட் அப்படியே ஸ்தம்பித்தது. அந்தப் பிராஜகட்டுக்காக அவன் பணம் பெற்ற கம்பெனி இப்போது நெருக்கடித் தந்தது.
பாதியில் முடிக்கப்படாமல் நின்று கொண்டிருக்கும் அந்தக் கட்டிடம் முடிவுறாமல் அதன் லாபத்தைப் பெற முடியாது. இந்நிலையில் அந்தக் கட்டிட வேலை மீண்டும் தொடர பணம் தேவையாக இருந்தது. அதை ஏற்பாடு பண்ணுமளவுக்கு சக்திக்கு வயதும் இல்லை. அதற்குரிய அனுபவமும் இல்லை.
அருண் தெரியாமலோ தெரிந்தோ செய்த தவறு தன் தொழிலுக்காகச் சிவசக்தி இல்லத்தை அடைமானம் வைத்து தன் பணத்தைப் பெற்றதுதான். அந்த இல்லம் சிவசக்தியின் பெயரில்தான் இருந்தது. அவளிடம் இது குறித்த விவரம் சொல்லாமல் அருண் வாங்கிய கையெழுத்தையும் அவள் மறந்திருந்தாள்.
அருண் சுயதொழில் செய்ய வேண்டுமென்ற அவன் கனவிற்காகப் பலரின் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக மாற்றினான். இது குறித்த செய்தியை இல்லத்தில் உள்ளவர்களுக்கு எப்படிச் சொல்லுவது என்று சக்தி வேதனையுற்று இருந்தாள்.
அருண் பணம் பெற்ற நிறுவனம் இப்போது சிவசக்தி இல்லத்துக்கான உரிமை அல்லது கடன் பெற்ற தொகையைக் கேட்டு நெருக்கடி தந்தது. அந்தச் சூழ்நிலையில் இது பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் திண்டாடினாள்.
அந்த நிறுவனரிடம் சக்தி இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்க, அவளுக்குக் கிடைக்கப்பெற்றதோ பத்து நாள். அந்த நிறுவனரிடம் பேசிவிட்டு வந்த சக்தி இப்பொழுது பணத்திற்காக ஏற்பாடு செய்வதா இல்லை இன்னும் ஒரு வாரத்தில் வரப்போகும் தேர்வில் கலந்து கொள்வதா என்ற யோசித்துக் கொண்டே வந்து ஒரு உயரமான நபரின் மீது மோதினாள்.
உடனே அவர்தான் நம் நாயகன் என்று வாசகர்கள் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.
“சாரி” என்று சொல்லிவிட்டு அவள் அவனைக் கடந்து சென்றாள்.
அவன் மீண்டும் சக்தியின் பின்னோடு வந்து,
“நீங்க எஸ். எஸ் காலேஜ் ஸ்டூண்டட்தானே ?“ என்று வினவினான்.
அவன் யாரென்றே தெரியாத பட்சத்தில் சக்தியை அவன் தெரிந்தவன் போல் கேட்க குழப்பமாய், “ஆமாம்” என்றாள்.
“அந்த இன்டர் காலேஜ் கல்சுரல்ஸ் பேஷன் ஷோ வின்னர்… ரைட்” என்றான்.
சக்தி பதிலேதும் பேசாமல் தலையசைத்தாள்.
“நைஸ் மீட்டிங் யூ” என்று அவன் கை நீட்ட அவளோ விருப்பமே இன்றிக் கைகுலுக்கிவிட்டு, “ஐ நீட் டு கோ” என்று சொல்லிவிட்டு சக்தி புறப்பட்டாள்.
சக்தியின் மனதில் ஓடிக் கொண்டிருந்த எண்ணமெல்லாம் எப்படிச் சிவசக்தி இல்லத்தை மீட்பது என்பதுதான். அதற்காக உதவிக் கேட்டு தன் தாய் மகேஷ்வரியின் தோழி சங்கீதாவிடம் உதவிக் கேட்க சென்றாள். ஆனால் சங்கீதா கேஸ் விஷயமாக வெளியூர் சென்றிருக்க அந்த முயற்சியும் தோல்வி.
சக்தி துவண்டு போய் இல்லத்தை அடைந்த போது அவளுக்காக வேறொரு பிரச்சனை காத்துக் கொண்டிருந்தது. அந்த நிறுவனத்தில் சந்தித்த அந்த நபர் அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.
அவனைத் தான் பார்த்ததை நினைவு கூர்ந்தவள் எதற்காக அந்த நபர் தன்னைத் தேடி வந்திருக்கிறான் என்ற கேள்வியோடு சக்தி அவனிடம் பேசினாள்.
“ஹாய் சக்தி… ஐம் அர்ஜுன்… உங்க அண்ணன் அருண்… பைனான்ஸ் வாங்கின அந்தக் கம்பெனியோட ஒன் ஆஃப் தி ஷேர் ஹோல்டர்… உங்க பிராப்பளத்துக்கு என்னால சொல்யுஷன் தர முடியும்” என்றான்.
சக்தி புருவங்களை உயர்த்தி, “எப்படி?” என்று கேட்டாள்.
“நான் ஒரு பெரிய அட்வட்டைஸிங் கம்பெனி வைச்சிருக்கேன்… நீங்க எங்க கம்பெனி மாடலா ஜஸ்ட் டூ இயர்ஸ் அக்ரீமன்ட் ஸைன் பண்ணுங்க… உங்க அண்ணன் கம்பெனி பிராஜக்ட் முடியறதுக்கான பணத்தை நான் கொடுக்கிறேன்.
அந்தப் பிராஜக்ட் கம்பிளீட் ஆகிட்டா உங்களுக்கு வர லாபத்தை வைச்சு நீங்க இந்த வீட்டை மீட்டிடலாம்… என்ன சொல்றீங்க சக்தி…” என்று தான் நினைத்ததைச் சொல்லி முடிக்க சக்தியின் முகம் வெளுத்துப் போனது.
ஒரு பிரச்சனைக்கான தீர்வு இன்னொரு பிரச்சனையாக இருந்தது. அவள் பதில் சொல்ல முடியாமல் தயங்கி நிற்க,
“உங்க பிரச்சனைக்கு இதை விடப் பெட்டர் சொல்யூஷன் இல்ல சக்தி… இந்த மாதிரி வாய்ப்பு எல்லோருக்குமே கிடைக்காது… ரியல்லி யு ஆர் டேலன்டட்… அதனாலதான் தேடிவந்து இப்படி ஒரு ஆஃபர் கொடுக்கிறேன்” என்றான்.
சக்தி முடிவெடுக்க முடியாமல், “நான் யோசிக்கனும்” என்றாள்.
அவன் லேசாய் நகைத்துவிட்டு,
“இதுல யோசிக்க என்ன இருக்கு… இது பெரிய சேன்ஸ்” என்றான்.
“நான் பைஃனல் இயர் எக்ஸேம்ஸ் எழுதனும்” என்று சக்தி தன் நிலைமையைப் புரிய வைக்க அர்ஜுன் மேலும் மேலும் அவளுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருந்தான்.
“நீங்க அக்ரிமன்ட் ஸையின் பண்ணிட்டு எக்ஸேம்ஸ் எழுதிட்டி வாங்க” என்று சொல்ல சிவசக்தி மௌனமாய் நின்றாள்.
“ஒகே சக்தி… இன்னைக்கு நைட் நல்லா யோசிச்சி நாளைக்கு முடிவு சொல்லுங்க… நீங்க சொல்லப் போற பதில்தான் இந்த வீடு உங்களுக்கு இருக்கனுமா வேண்டாமான்னு டிசைட் பண்ணும்…” என்று அவன் மிரட்டலாகச் சொல்லிவிட்டு புறப்பட்டான்.
அவன் உதவி செய்வதாகச் சொல்லி அவளின் இக்கட்டான சந்தர்ப்பத்தைச் சாதகமாக்கிக் கொள்ளவே வந்தான். இப்போது நிலைமை மோசமாகி சிவசக்தியின் கழுத்தை இறுக்கியது.
சிவசக்தி இல்லம் வெறும் வீடாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் பல பெண்களுக்கான ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் இருந்து வந்து கொண்டிருந்தது. இந்தப் பிரச்சனை சிவசக்தி இல்லத்தில் உள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாமல் ஜெயாவிடம் தொலைப்பேசி மூலமாகத் தன் கவலையைச் சொல்லி வேதனைப்பட்டாள்.
ஜெயாவுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. இறுதியாய் சக்தி தன் வழியை விதியே தீர்மானிக்கட்டும் என அந்த நிறுவனத்திற்கு அர்ஜுனை பார்க்கச் சென்றாள்.
நடப்பது நடக்கட்டுமே என்று சக்தி அக்ரிமென்ட்டில் ஸைன் போட்டு பிரச்சனையை முடிவு பெற செய்யலாம் என்று எண்ணினாள். அது அவள் வாழ்வில் எத்தனை பெரிய விளைவை ஏற்படுத்தினாலும் அதைச் சந்திக்க அவள் தயாராக இருந்தாள். ஆனால் அன்று அந்த அலுவலகத்தை சக்தி அடைந்த போது நிலைமையே தலைகீழாய் மாறியது.
அர்ஜுன் அலுவலகத்தில் சக்தி அவனைப் பார்க்க அறைக்குள் நுழைந்தாள். சக்தியை பார்த்ததும் அவன் முகம் மாறியது.
“உட்காருங்க சக்தி” என்றான்.
சக்தி நேரடியாகத் தான் வந்த விஷயத்தைச் சொன்னாள்.
“நான் அக்ரிமேன்ட்ல ஸைன் பன்றேன்… அட் தி சேம் டைம் நான் எக்ஸேம்ஸும் அட்டென்ட் பண்ணனும்” என்றாள்.
“நோ நீட் சக்தி… உங்களுக்கு மாடலிங்ல இன்டிரெஸ்ட் இல்ல என்னும் போது எதுக்கு?… வேண்டாம் பரவாயில்ல” என்றான்.
“நீங்க என்ன சொல்ல வர்றீங்க?!” என்று குழப்பமாய்க் கேட்டாள்.
“சக்தி… நீங்க தேவையில்லாம டென்ஷனாக வேண்டாம்… வீட்டுப் பத்திரம் தானா உங்க கைக்கு வந்துறோம்… அப்புறம் நான் தப்பா ஏதாச்சும் பேசி இருந்தா சாரி” என்று அர்ஜுன் சொல்ல சக்திக்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை. அவள் வீட்டை அடைந்த போது அவள் அண்ணன் கம்பெனியின் மேனேஜர் அமர்ந்திருந்தான்.
அந்த மேனேஜர் அருண் கன்ஸ்ட்ரக்ஷன்ஸை வேறொரு கம்பெனி சொந்தமாக மாற்றிக் கொண்டு அதற்கான பணத்தைத் தருவதாகச் சொன்னான். சக்திக்கு நடப்பதெல்லாம் மாயமாய்த் தோன்றியது. மேனேஜர் மேலும் அந்தப் பணத்தின் மூலம் வீட்டையும் மீட்டுவிடலாம் என்றான்.
ஒரே இரவில் அவளை மூழ்கடித்துவிடுமோ என்றிருந்த பிரச்சனைகள் இப்போது கண்களுக்குத் தெரியாமல் மறைந்துவிட்டன. இவை எல்லாம் எப்படி நடந்ததோ என்ற குழப்பத்தோடு சக்தி தன் அறைக்குள் நுழைய, அவளின் படுக்கையின் மீது ரோஜா பூக்களும் ஒரு கடிதமும் இருந்தது.
சக்தி வெளியே வந்து மற்றவர்களிடம் விசாரிக்க,
“யாரோ உன்கிட்ட கண்டிப்பா கொடுக்கச் சொல்லி கொடுத்துட்டு போனாங்க” என்று பதில் கிடைத்தது.
சக்தி தன் அறைக்குள் சென்று கடிதத்தைப் பிரித்துப் படித்தாள்.
“மை டியர் சக்தி,
நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டேன். ரொம்பவும் வருத்தத்திற்குரிய விஷயம்… நடந்ததை நம்மால் மாத்த முடியாது. மனசை திடப்படுத்திட்டு உன்னோட பைஃனல் எக்ஸேம்ஸல கவனத்தைச் செலுத்து. தைரியமா இரு. எப்பவுமே நான் உன் கூடவே இருப்பேன்.
ஆல் தி பெஸ்ட் பாஃர் யுவர் எக்ஸேம்ஸ்” என்று அவன் கையெழுத்தோடு முடிந்திருந்த கடிதத்தைப் பார்த்த போது சக்தியின் கண்கள் கண்ணீரால் நிரம்பின.
அதுவரையில் அவன் தன்னிடம் விளையாடிக் கொண்டிருக்கிறான் என்று அவள் நினைத்திருந்தாள். அந்த எண்ணம் இப்போது முற்றிலுமாய் மாறி முகம் தெரியாத அவன் மீது மதிப்பு உண்டானது.
அவனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அன்றிலிருந்து மலையென வளர்ந்தது. ஆனால் அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவே இல்லை.
அவனின் உருவம் எப்படி இருக்கும் என்ற ஆயிரமாயிரம் கற்பனைகள் அவளுக்குள் தோன்றி மறைந்தன. இத்தனை நாளுக்கான காதத்திருப்பு நாளை முடிவு பெற்றுவிடும். ஆனால் அவனை நேருக்கு நேராய் சந்தித்துத் தன் மனதில் உள்ளதை வெளிக்காட்டத் தயங்கினாள். சக்திசெல்வன் நாளை சிவசக்தியின் கண் முன்னே தோன்றி அவர் தொடங்கிய கண்ணாமூச்சி விளையாட்டை முடித்துவிடுவார் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்தச் சந்திப்பு அவர்கள் காதல் பயணத்தைத் தொடங்குமா என்பதை யாம் அறியோம்.