You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic comedyRomantic thriller

Solladi sivasakthi-11&12

11

அவன் மாயாவியோ?

கதிரவனின் வருகையால் டெல்லி மாநகரத்தில் பரபரப்பு மிகுந்து கொண்டே போனது. எல்லோரும் இயந்திரத்தைப் போல இயங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் சிவசக்தி உணர்ச்சிகளுக்குள் கட்டுண்டு பலவீனமாகி இயங்க முடியாமல் யோசனையில் ஆழ்ந்தாள்.

எத்தனை முறை சிந்தித்தாலும் அவள் மனம் அவனை நேரடியாய் சந்திக்கத் தயங்கியது. சிவசக்தி ஏற்படுத்திய குழப்பத்தால் கீதாவும் கலக்கமுற்றிருந்தாள்.

சக்திசெல்வன் காலையிலேயே சிவசக்தியை கைப்பேசியில் தொடர்பு கொள்ள அவள் பதட்டத்தோடே அழைப்பை ஏற்றாள்.

“கம்மான் சக்தி… நாம எங்க மீட் பண்ணலாம்” என்று எடுத்ததுமே கேட்டான்.

சக்திக்கு இப்போது கொஞ்சம் பதட்டம் அதிகமானது. அவள் பதில் பேச முடியாமல் மௌனமாயிருந்தாள்.

“என்னாச்சு… நான் வேணா அங்கையே வரட்டுமா?” என்று அவன் மீண்டும் ஆர்வம் மிகுதியால் கேட்க சக்தி அவசரமாக,

“நோ நோ” என்று உரைத்தாள்.

“என்ன சொல்லிட்டன்னு இப்போ நீ இவ்வளவு டென்ஷனாகிற?” என்று சந்தேமாய்க் கேட்டான்.

சக்தி தலையில் கை வைத்துக் கொண்டு,

“நத்திங்… நாம ஈவனிங் ஆறு மணிக்கு உத்தர சுவாமிமலை கோவிலில் மீட் பண்ணலாம்” என்றாள்.

சக்திசெல்வன் யோசனையோடு,

“ஏர்போர்ட்ல இருந்து அஞ்சு கிலோ மீட்டர் டிஸ்டன்ஸ்ல இருக்கே… அந்தக் கோவிலுக்கா?” என்று கேட்க,

சிவசக்திக்கு அவனின் கேள்வி எங்கே அவன் தன் திட்டத்தைக் கண்டுபிடித்துவிடுவானோ என்ற அச்சத்தைத் தோற்றுவித்தது.

சிவசக்தி யோசித்தபடி,

“என் ப்ஃரண்டு கீதா அந்தக் கோவிலுக்கு அடிக்கடிக்கி போவாளாம்… ஸோ எனக்கும் நாம அங்கே மீட் பண்ணலாம்னு தோணுச்சு” என்று சமாளித்தாள்.

“ஒகே சக்தி… அங்கயே மீட் பண்ணலாம்… சரி நீ என் பேரை கண்டுபிடிச்சிட்டியா?” என்று ஆவலோடு கேட்க,

“இன்னும் நாம மீட் பண்ண அறைநாள் இருக்கே… அதுக்குள்ள கண்டுபிடிச்சிடுவேன்” என்றாள்.

“உண்மையிலேயே நீ இன்னும் கண்டுபிடிக்கலயா… இல்ல என்கிட்ட பொய் சொல்றியா?” என்று சந்தேகமாய்க் கேட்டான்.

“நான் எதுக்குப் பொய் சொல்லனும்… இப்போதைக்கு என்னால கெஸ் பண்ண முடியல” என்றாள்.

“ஒகே… நாம ஈவனிங் மீட் பண்ணுவோம்… பை” என்று நம் நாயகன் அழைப்பைத் துண்டித்தான்.

அவனிடம் பேசியதன் மூலமாக ஒரு விஷயம் சக்திக்குப் புரிந்தது. அவனை ஏமாற்றுவது ரொம்பக் கடினம். இருப்பினும் சக்தி தன் திட்டத்தில் பின் வாங்கப் போவதில்லை.

அவள் தன் பொருட்களை அடுக்கி எடுத்து வைத்தாள். இரவு ஏழு மணி விமானத்தில் அவனைப் பார்க்காமல் தவிர்த்து விட்டு சென்னைக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

டெல்லியில் உத்தர சுவாமி மலைகோவிலில் அந்தச் சிறு மலையின் மீது தமிழ் கடவுள் முருகன் வாசம் செய்து கொண்டிருந்தார். அதனை மலை மந்தர் என்றும் அழைப்பர்.

படிகெட்டுகள் ஏறி மேலே சென்று இறைவனைத் தரிசிக்கலாம் என்ற நிலையில் கீழேயே நின்றபடி சக்திசெல்வனின் தரிசனத்திற்காகச் சிவசக்தி கீதாவுடன் காத்திருந்தாள்.

கீதா சக்தியிடம், “நீ சக்தி சாரை மீட் பண்ணிட்டே போலாமே?” என்றாள்.

“நாங்க மீட் பன்றதினால் எந்தப் பயனும் இல்லை… அந்தச் சந்திப்பு சக்தி செல்வனைக் காயப்படுத்தலாம்… அதுவும் இல்லாம சக்தி எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்காரு… அந்த உதவிக்குப் பிரதி உபகாரமாய் நான் என்றுமே செய்யக் கூடாதுன்னு நினைக்கிற விஷயங்களை அவர் எதிர்பார்த்தால்… என்னால அந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க முடியாது… அப்படி இருக்கும் போது சக்தி முகத்துக்கு நேரா என் மனசில இருக்கிற அபிப்பிராயத்தைச் சொல்ல தயக்கமா இருக்கு… எனக்கு அவர் மேல ரொம்ப மரியாதை இருக்கு… நான் கொடுக்கிற லெட்டரை நீ சக்தி கிட்ட கொடுத்திரு… ப்ளீஸ்” என்றாள்.

“உன் உயிரை சக்தி சார் காப்பாத்தி இருக்காரு… நீ ஒரு நன்றிக்காகவாச்சும் அவரை”என்று கீதா சொல்ல வந்ததை முடிக்காமல் நிறுத்தினாள்.

“மீட் பண்ணனும்னு சொல்றியா… இல்ல காதலிக்கனும்னு சொல்றியா?” என்று புரியாதவள் போல் கேட்டாள் சக்தி.

“இரண்டுமேதான்”என்றாள் கீதா.

சக்தி லேசாய் நகைத்துவிட்டு,

“நன்றி உணர்ச்சியும் காதல் உணர்ச்சியும் வேற வேற கீதா… அதுவும் இல்லாம சக்தி இதுவரைக்கும் எனக்கு எழுதின கடிதத்திலேயோ இல்ல அனுப்பிய ரோஸஸ்ல கூட லவ் யூன்னு அனுப்பியதில்ல… ஸோ நாமே எதுக்கு இப்படிக் கற்பனை பண்ணிக்கனும்” என்றாள்.

“தெரிவிச்சாதான் காதலா… சக்தி சாரோட பேச்சில உன் மேல இருக்கிற காதல் தெரியலயா உனக்கு” என்று கீதா கேட்க சிவசக்தி மௌனமாய் நின்றாள்.

சக்தியின் பிடிவாதத்தை மாற்றவே முடியாது எனக் கீதா எண்ணி கொண்டிருக்கையில் கோவில் வாசலில் ஒரு கார் வந்து நின்றது. கீதாவுக்கு சக்திசெல்வனை நன்றாகத் தெரியும்.

சக்தி கீதாவின் முகத்தைப் பார்க்க அந்தக் கருப்பு நிற அதி நவீன கார் கதவை திறந்து காதில் போஃனை வைத்தபடி ஒரு ஆடவன் இறங்கினான். இருவராலும் அவன் முகத்தைப் பார்க்க முடியாதபடி நின்றிருக்கக் கீதா

“இது நிச்சயமாக சக்தி சார்தான்” என்று அவனின் உடலமைப்பையும் உயரத்தையும் வைத்துக் கணித்தாள்.

சிவசக்திக்கு அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்க அவள் தன்னால் இயன்றவரை முயற்சி செய்தாள்.

அந்த ஆடவன் தன் உயரத்திற்கு ஏற்ற அவன் உடலமைப்பைச் சீராக வைத்திருந்தான். அவனின் அழைப்பு சிவசக்தியின் போஃனில் சிணுங்க அவள் அந்த அழைப்பை ஏற்கவில்லை.

சக்தி அழைப்பை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க அவள் கோவிலுக்குள் இருப்பாள் என்ற எண்ணத்தில் மேலே பிரகாரத்தை நோக்கி வந்தவனின் முகத்தை சக்தி முதன்முறை அப்போதுதான் பார்த்தாள்.

கீதாவும், “சக்தி சாரேதான்” என்று அவனைப் பார்த்த நொடியில் உறுதிப்படுத்தினாள்.

அவன் நிச்சயம் ஆணழகன்தான். அவன் பார்வையில் கூர்மையும் நடந்து சென்ற தோரணையும் சக்தியின் மனதைக் கவர்ந்திழுத்தது என்றே சொல்லலாம். அவன் நடையும் தோரணையும் பல பெண்களைத் தடுமாறச் செய்துவிடும். வெறும் சில நொடிகள் மட்டுமே பார்த்த சிவசக்தியின் விழிகள் மெய்மறந்து போனது.

ஆண்களைக் கண்டாலே வெறுப்பையும் கோபத்தையும் உமிழும் அவளுமே அசந்து போனாள் என்றால் அந்த விவரிக்க முடியாத கம்பீரத்தை நாம் என்னவென்று சொல்வது. சிவசக்தியின் புருவங்கள் நெரிந்தன.

இப்படி ஒரு ஆடவன் தன்னைத் தேடிக் கொண்டிருக்கும் அளவிற்கோ அல்லது பின்தொடரும் அளவிற்குத் தன்னிடம் அப்படி என்ன இருந்தது என்று எண்ணிக் கொண்டாள். உண்மையிலேயே அவனைப் போன்ற ஆணை நிராகரிக்க எந்தப் பெண்ணுக்கும் மனசு வராது. இருப்பினும் அவன் தன் கண் முன்னே வராமல் இருந்தது எதனால் என்று சிவசக்திக்கு புரியவில்லை.

சக்தி இப்படி யோசனையில் ஆழ்ந்திருக்க,

“இப்பையாச்சும் நீ உன் முடிவை மாத்திக்கிறியா சக்தி ?” என்று திகைத்து நின்றவளைப் பார்த்து கேட்டாள் கீதா.

“நான் கண்டிப்பா சக்தியை மீட் பண்ணவே கூடாது… தூரத்தில இருந்து பார்க்கும் போதே நான் இம்பிராஸாயிட்டேன்… நேருக்கு நேரா பார்த்தா அவன் என்ன சொன்னாலும் தலையாட்டிடுவேன்… நோ ஐ ஹேவ் டூ கோ…

நான் ரொம்பச் சாரி சொன்னேன்னு சொல்லி இந்த லெட்டரை சக்திகிட்ட கொடுத்திரு… நான் எங்கன்னு கேட்டா சென்னைக்கு ஆறு மணி பிளைட்ல போயிட்டேன்னு சொல்லி எப்படியாவது சமாளிச்சிடு கீதா… சரி பை” என்று உரைத்துவிட்டு சக்தி அங்கே அவர்க்ள் வந்த டாக்ஸியில் ஏறி விமான நிலையம் நோக்கி பயணப்பட்டாள்.

சக்தி சென்று கொண்டிருந்த கார் அதிவேகமாய்ப் பயணித்துக் கொண்டிருக்க முதல் முறையாய் ஒரு ஆடவனின் தோற்றம் அவளைத் தடுமாறச் செய்ததை அவள் மனம் ஏற்க மறுத்தது.

சில நிமிடங்களில் மலை மந்தரிலிருந்து இந்திரா காந்தி இன்டர்நேஷ்னல் ஏர்போர்ட் வந்து இறங்கிய சக்தி தன் ஹேன்ட் பேகிலிருந்த பணத்தை எடுத்து டேக்ஸி டிரைவரிடம் நீட்டினாள். அப்பொழுதுதான் சக்தி கவனித்தாள். அவள் உள்ளே வைத்திருந்த பயணச் சீட்டை காணவில்லை.

மீண்டும் மீண்டும் எத்தனை தடவை தேடினாலும் அந்தப் பையில் பயணச்சீட்டு இல்லை. அவள் எடுத்து வைத்த ஞாபகம் இருந்த போதும் எப்படி இல்லாமல் போகும். மனம் படபடக்கத் தொடங்கியது. இதெப்படி சாத்தியம். கீதாவிடம் இருக்குமோ. சிரமப்பட்ட போட்ட திட்டமெல்லாம் வீணானதே என்று சக்தி மனமுடைந்து போனாள்.

சக்தி அடுத்து என்ன செய்வதென்றே புரியாமல் குழம்பி நின்றபடி இருக்க, ‘இதுவும் அவனுடைய வேலைதானோ’ என்று எண்ணினாள். அந்தச் சமயத்தில் சக்தியின் கைப்பேசியில் கீதாவின் அழைப்பு. பதறியபடி எடுத்துப் பேசினாள்.

“ கீதா… ப்ஃளையிட் டிக்கேட் மிஸ்ஸிங்” என்றாள்.

கீதா மறுபுறத்தில் சிரித்துவிட்டு,

“இப்போ நீ சக்தியை மீட் பண்ணாம எப்படித் தப்பிக்கப் போற?” என்றாள்.

“அப்படின்னா… ப்ஃளைட் டிக்கெட்?!” என்று அதிர்ச்சியோடு வியர்வையைத் துடைத்தபடி கேட்டாள்.

“எனக்குத் தெரிஞ்சி ப்ஃளைட் டிக்கேட் சக்தி சார்கிட்டதான் இருக்கும்” என்றாள் கீதா.

“எப்படி முடியும் கீதா ?” என்று மீண்டும் புரியாமல் கேள்வி எழுப்பினாள்.

“எப்படி… என்னன்னு தெரியாது… ஆனா டிக்கெட் சக்தி சார்கிட்ட இருக்கு”

“நீ சக்தி செல்வனை மீட் பண்ணியா?”

“ம்… பண்ணேன்… நீ சொன்ன பொய்யெல்லாம் சொல்லி லெட்டரை கொடுத்தேன்… இந்த லெட்டருக்கு அவசியமில்ல சக்தி எனக்காக ஏர்போர்ட்ல வெயிட் பண்ணுவான்னு சொன்னாரு… அப்போ புரியல இப்போ எப்படின்னு புரியுது” என்று கீதா இயல்பாக உரைக்க சக்திக்கு அவனின் அசாத்தியமான அறிவை எண்ணி வியக்க தோன்றியது.

சக்தி கோபத்தோடு கீதாவின் அழைப்பைத் துண்டித்தாள். அவள் கையில் கட்டப்பட்டிருந்த கடிகாரம் வேகமாய்ச் சுழல்வது போலத் தோன்ற நகத்தைக் கடித்தபடி ஏர்போர்ட் வெளிப்புறத்தில் நின்றிருந்தாள்.

இனி என்ன செய்வதென்ற அவளின் மூளை வேகமாய் வேலை செய்தது. ஆனால் வழி ஏதும் புலப்படவில்லை. இப்படி அவனிடம் சிக்கி கொள்வதற்குப் பதிலாய் நேரடியாக அவனைப் பார்த்தே தொலைத்திருக்கலாம் என்று தன்னைத்தானே கடிந்து கொண்டாள்.

அவனைத் தான் சந்திக்கக் கூடாதெனபோட்டத் திட்டமெல்லாம் வீண். தொடக்கத்திலிருந்தே அவனிடம் நாம் தோற்றுக் கொண்டே வருகிறோம். சக்தி செல்வனின் பணமும் பதவியும் கொண்ட பின்புலமே அவனை இவ்வாறெல்லாம் செய்ய வைக்கிறது என்ற எண்ணம் அவளின் சினத்தைத் தூண்டிவிட்டது.

தான் எது செய்தாலும் அவன் யூகித்து விடுகிறானே. அவன் என்ன மாயாவியா…?

இந்தச் சிந்தனை ஏற்பட்ட மறுகணம் சிவசக்தியின் கைப்பேசியில் சக்திசெல்வனின் அழைப்பு.

சுற்றுமுற்றும் தேடிப் பார்த்தாள். அவன் எங்கே எப்படித் தன் கண் முன்னே தோன்றுவான் என அவளின் கண்கள் அலைபாய்ந்தன.

சிவசக்தி தயங்கியபடி அவனின் அழைப்பை ஏற்ற போது,”தேட வேண்டாம் கார் பார்க்கிங்ல பிளாக் கலர் கார்… கார் நம்பர் டிரிப்ள் ஒன்… வந்தா டிக்கெட்ஸ்… சென்னைக்குப் பறந்து போயிடலாம்… கம்மான் டியர் சக்தி” என்று சக்திசெல்வன் பளிச்சென்று சொல்லி விட்டு அவள் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தான்.

அவன் புத்திசாலியா இல்லை தான்தான் முட்டாளா என்றெண்ணி சக்தி தலையிலடித்துக் கொண்டாள். சிவசக்தியின் தேகத்தின் உஷ்ணம் குறைந்து சில்லென்று மாறியது.

தன் இதயத்துடிப்பின் சத்தத்தைத் தானே கேட்டறிந்தாள். பதட்டம் அதிகரிக்க அவளுக்கு மூச்சு முட்டியது. இப்போது அவளின் அசட்டுத் தைரியமெல்லாம் எங்கே தொலைந்து போயின.

சிவசக்தி தன் பயஉணர்வை மறைத்தபடி தைரியமாக இருப்பது போலத் தன்னை நம்ப வைத்துக் கொண்டாள். அவனை எப்படி எதிர்கொள்வதெனச் சிவசக்தி யோசித்தபடி கார் நிறுத்தம் நோக்கி நடந்தாள். காலம் வேகமாய் நகர அவளின் கால்கள் மெல்லவே நகர்ந்தன.

12

முதல் சந்திப்பு

சிவசக்தி அலைபாயும் விழிகளோடு கார்கள் பல நின்றிருந்த அந்த நிறுத்தத்திற்குள் நுழைந்து தேடினாள். அவன் சொன்ன அடையாளங்களுடன் கூடிய காரில் சாய்ந்படி சக்திசெல்வன் நின்றிருந்தான்.

அவன் சிவசக்தியின் வருகையை நோக்கியபடியே இருக்க, அவன் கம்பீரத் தோற்றம் என்பது உடலமைப்பில் மட்டுமல்ல. அவன் நின்றிருந்த தோரணையிலும் வெளிப்பட்டது. என்னதான் கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினாலும் இப்போதுதான் இருவருமே முதல்முறையாய் நேரெதிர் நிற்கிறார்கள்.

பல முறை அவனைப் பார்க்க வேண்டுமென அவள் எண்ணியபோது நடைபெறாத அந்தச் சந்திப்பு இன்று அவனைத் தவிர்க்க நினைத்த போது நிகழ்ந்துவிட்டது. இந்த விந்தையான விதியை யார் வடிவமைத்தது?

அவனின் தோற்றம் அவளின் கற்பனைகளுக்கும் எட்டாத வண்ணமே பிரம்மிப்பை ஏற்படுத்தின. சக்திசெல்வன் தன் கண்களிலிருந்த கூலர்ஸை கழட்டிவிட்டு சக்தியை பார்த்துப் புன்னகைப் புரிந்தான்.

அவள் அவனை நேர்கொண்டு பார்க்காமல்,

“டைமாச்சு மிஸ்டர். சக்தி டிக்கெட் கொடுங்க” என்றாள்.

“நீ கேட்டதும் கொடுக்கவா… நான் இந்த டிக்கெட்டை எடுத்தேன்” என்றான் சக்திசெல்வன் அவனின் புன்னகை மாறாமல்.

“அப்போ தரமாடீங்க” என்று தன் கூர்மையான பார்வையை அவன் மீது வீசியபடி சிவசக்தி கேட்டாள்.

“தருவேன்… நான் உன்கிட்ட சொல்ல நினைச்சதை சொன்ன பிறகு”

“சீக்கிரமா சொல்லுங்க… ப்ளீஸ்… இட்ஸ் கெட்டிங் லேட்” என்று சிவசக்தி தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி அலட்சியமாய் உரைத்தாள்.

சக்திசெல்வன் அவளின் அந்த அலட்சியத்தையும் திமிரையும் ரசித்தபடி,

“எதுக்கு என்னைப் பார்க்க டெல்லி வரைக்கும் வரனும்… ஏன் சொல்லிக்கலாமலே இப்போ அவசரமா கிளம்பினும்”என்று சக்தி செல்வன் கேட்க, அவள் அவனை நிமிர்ந்து நோக்கினாள்.

அவன் கண்களில் கோபம் வெளிப்பட்டது.

“நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்… பார்த்துட்டேன் இப்போ… கிளம்பறேன்” என்று சக்தி ஏளனமான புன்னகையோடு உரைத்தாள்.

“நாம மீட் பண்ணலாம்னு சொன்னது… சீட்டிங் இல்லயா?”

“என் கண்முன்னாடி வராம நீங்க என்னைச் சீட் பண்ணலயா… அப்படித்தான்” என்று சிவசக்தி தன் பதட்டத்தை மறந்து புன்னகையோடு சொன்னாள்.

அவளின் பதிலில் அவன் மீதான வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்ட எண்ணம் புலப்பட்டது.

“அப்போ இது ரிவஞ்ச்… நான் செஞ்சதை எனக்கே திருப்பிச் செய்யற… அப்படிதானே சக்தி” என்று சக்திசெல்வன் முறைத்தபடி கேட்க,

சற்றும் பயமின்றி,”ஆமாம் அப்படிதான்” என்றாள் தோள்களைக் குலுக்கியபடி.

“நீ புத்திசாலிதான் சக்தி… ஆனா நீ சொல்ற பொய்யை நம்பற அளவுக்கு நான் முட்டாள் இல்லை… நீ இந்த மாதிரி ஏடாகூடாம யோசிப்பன்னு தெரிஞ்சுதான் நான் இன்னைக்குச் சென்னைக்குப் போற ப்ஃளைட்ஸ் பேஸஞ்சர்ஸ் லிஸ்டை செக் பண்ண சொன்னேன்… துரதிஷ்டவசமா உன் பிளான்… எனக்குத் தெரிஞ்சி போச்சு “ என்றான்.

அவனின் பதிலில் சிவசக்தியின் ஏளனம் மாறி கோபம் உண்டானது.

“நீங்க பெரிய புத்திசாலிதான்… ஒத்துக்கிறேன்… ஆனா என்னை ஏன் முட்டாளாக மாத்தி பாக்கிறீங்க… எதுக்கு என் முன்னாடி வராம விளையாட்டு காண்பிச்சீங்க… அதுல என்ன உங்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம் ?…

நான் உங்ககிட்ட எந்த உதவியாச்சும் எதிர்பார்த்தேனா?… பின்ன எதுக்கு நீங்க உதவனிங்க?… என்ன எண்ணத்தை மனசுல வைச்சிட்டு இப்படி எல்லாம் செஞ்சிட்டிருக்கீங்க ?… இது உங்களுக்குப் பொழுது போக்கா?… இல்ல உங்களோட பணத் திமிரா?… எனக்குப் புரியல… பதில் சொல்லுங்க மிஸ்டர். சக்தி” என்று சிவசக்தி கோபத்தோடு தம் கேள்விகளை வெளிப்படுத்தினாள்.

“இந்தக் கோபத்தைதான் நான் உன்கிட்ட எதிர்பார்த்தேன் சக்தி… அட்லாஸ்ட் உன் மனசில இருக்கிற கேள்வியை எல்லாம் நீ கேட்டுட்ட… அதே போல என் மனசுல இருக்கிற விஷயத்தையும் நான் சொல்லிடறேன்… அப்போ உன்னுடைய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைச்சிரும்…” என்றான்.

அவர்களுக்கு இடையிலான விவாதம் இப்போது அனலாய் மாறியது.

சக்தி கையிலிருந்த வாட்ச்சை பார்த்தபடி,

“சொல்லுங்க… ஏன் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டுன்னு நானும் தெரிஞ்சிக்கனும்?” என்றாள்.

சக்தி கைகளைக் கட்டி தன் காரில் சாய்வாய் நின்றபடி

“முதல்ல இதெல்லாம் எனக்குப் பொழுது போக்கு இல்ல… நீ நினைக்கிற மாதிரி என்னோட பணத்திமிரும் இல்ல… நான் உன்னோட டைரியை எதச்சையாக ஆபிஸ் ரூம்ல பார்த்தேன்… அதன் முதல் பக்கத்திலிருந்த சிவசக்தி என்கிற பெயரை பார்த்ததும் படிக்கனும்னு தோணுச்சு…

உன் எழுத்தும், அதன் கருத்தும், சொல்லப்பட்ட விதமும் என்னை உண்மையிலேயே ரசிக்க வைச்சது… இந்தத் திறமையைப் பாராட்டனும்னு தோணுச்சு… அந்தக் கவிதையைப் பப்ளிஷ் பண்ணி உனக்கும்… அப்புறம் காலேஜ்ல நிறையக் காப்பீஸ்ஸை டிஸ்டிரிப்பியூட் பண்ணச் சொன்னேன்… அதுவரையில் நான் உன்னைப் பார்க்கல சக்தி… அப்போ உன் பெயர் மட்டும்தான் தெரியும்.

அதுக்கப்புறம் நடந்த இன்டர் காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல… அந்தப் பேஷன் ஷோவில் நம்ம காலேஜ் ஜெயிக்காதுன்னு நான் அந்த ஷோவை பார்க்க கூட விருப்பப்படல… ஆனா ஆச்சர்யம் என்னன்னா நீ அதில் வின் பண்ணதுதான்.

அப்பதான் வின்னர் சிவசக்தின்னு எல்லோரும் உன்னையும் உன் தைரியத்தையும் ஹேடிட்டியூட்டையும் பாராட்டினாங்க… அப்போதான் முதல் தடவை… எனக்கு உன்னைப் பார்க்கனும்னு ஒரு ஆவல் ஏற்பட்டுச்சு… உன் பெயர், உன் கவிதை, உன்னோட தைரியம் அப்புறம் உன்னோட வின்னிங் ஸ்ப்பிரிட்.

இதெல்லாம் கேள்விப்பட்டு உன்னைப் பார்க்காமலே நான் இம்பிரஸாகிட்டேன்… அப்புறம் பிரின்ஸ்பல் மேடம் நீ பேஷன் ஷோவில் ஜெயிச்சதற்காக உன்னைக் கூப்பிட்டு பாராட்டின போதுதான் நான் உன்னை முதல் தடவைப் பார்த்தேன்… ஆனா நீ என்னைப் பார்க்கல… நீ போன பிறகு மேடம் உன்னைப் பத்தி நிறையச் சொன்னாங்க… முக்கியமா நீ காலேஜ்ல பன்ற ரௌடிஸம் பத்தி”

இத்தனை நேரம் அவன் சொன்னதைப் பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்த சிவசக்தி கடைசி வார்த்தைகளைக் கேட்டு கோப மிகுதியால், “என்னது… நான் ரௌடிஸம் பண்ணனா ?” என்று கேட்டாள்.

“பின்ன இல்லயா… காலேஜ்ல இருக்கிற பாய்ஸ் கூடச் சும்மாவே வம்புக்கு போவியாமே” என்றான் அவளின் கோபத்தை ரசித்தபடி!

“அதெல்லாம் பொய்” என்று சக்தி மறுக்க,

“ஓ… அப்போ… ஹாஸ்டல் சுவரேறி குதிச்சது” என்று அவன் புருவத்தை உயர்த்தியபடியே கேட்க சக்தி பதிலின்றி மௌனமானாள்.

சக்திசெல்வன் மேலும், “உன் கேரக்டர் அப்புறம் உன்னோட கட்ஸ்… இதெல்லாம் எனக்குப் பிடிச்சி போச்சு… ரொம்பச் சேலஞ்சிங்கான உன்னை மாதிரி ஒரு பெண்ணை இம்பிரஸ் பண்ணனும்.

ஆனா அதுல என்னோட ஸ்டேட்டஸும் தோற்றமும் முன்னாடி நிக்கக் கூடாதுன்னு நினைச்சேன். நிச்சயமா அதெல்லாம் உன்கிட்ட எடுபடாதுன்னும் எனக்குத் தெரியும். அதனாலதான் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டை ஆரம்பிச்சேன். ஆனா ஒரு ஸ்டேஜ்ல நானே இந்த விளையாட்டை முடிச்சிடலாம்னனு நினைச்சா கூட என்னால முடியல.

ஒவ்வொரு தடவையும் உன் முன்னாடி வரலாம்ன்னு நினைக்கும் போது சூழ்நிலை பார்க்க முடியாதபடி அமைஞ்சிடுச்சு. உங்க அண்ணனை இழந்து நீ பெரிய பிரச்சனையில் இருந்தபோது நேரடியா உனக்கு உதவி செஞ்சா… அந்தச் சூழ்நிலையை நான் சாதகமாக்க முயிற்சிக்கிறேன்னு நீ நினைப்பியோன்னு நான் உன் முன்னாடி வரல…

அந்தப் பெங்களூர் டிரெயின்ல உன்னை மீட் பண்ணிடனும்னு நினைச்சேன் சக்தி… பட் அந்த நேரத்தில நடந்த ஆக்ஸிடென்ட்… உயிருக்காகத் துடிச்சிட்டிருந்த போது எங்க நம்ம சந்திப்பு நிகழாமலே போயிடுமோன்னு பயந்தேன்.

என் வாழ்க்கையோட மோசமான தருணங்கள் அதுதான்… அன்னைக்கு ஏன் உன் கண்முன்னாடி வரமா இத்தனை நாளாய் விலகி இருந்துட்டோமுன்னு ரொம்பக் கில்டியா இருந்துச்சு… பட் அந்தத் தடவையும் நாம சந்திக்க முடியாத சிட்டுவேஷன் வந்துருச்சு…

என்னைப் பார்க்க நீ டெல்லிக்கு வரன்னு சொன்ன போது நம்ம மீட்டிங்கை எதிர்பார்த்து ரொம்ப எக்ஸைட்டிங்கா காத்திட்டிருந்தேன்… இதற்கிடையில் என்னைப் பத்தி நீ விசாரிச்சி என் ஸ்டேட்டஸ் இதபத்தி எல்லாம் தெரிஞ்சிகிட்டா அதுவே நீ என்னை அவாயிட் பண்ண காரணமா அமையும்னு தோணுச்சு…

அதனாலதான் உனக்குத் தெரியாம மறைச்சேன்… நீ என்னைப் பத்தி நானா சொல்லாம தெரிஞ்சிக்கக் கூடாதுன்னு நினைச்சேன்… ஆனா உனக்குத் தெரிஞ்சிடுச்சு… நான் நினைச்ச மாதிரியே என்னை அவாயிட் பண்ண முடிவு செஞ்ச …

பட் இந்த மீட்டிங் யார் தடுத்தாலும்… நடந்தே தீரனும்னு உறுதியா இருந்தேன்… இந்ததடவை மிஸ் பண்ணவே கூடாதுன்னு நினைச்சேன்… அதனாலதான் உனக்கே தெரியாம உன் டிக்கெட்டை எடுக்க வைச்சேன்…” என்றான்.

“கிரேட்… நாம மீட் பண்ணிட்டோம்… நீங்க நினைச்சதை சாதிச்சிட்டீங்க… இனிமே என்ன… டிக்கெட்டை கொடுங்க மிஸ்டர்” என்று அவன் சொன்னவற்றைப் பொருட்படுத்தாமல் டிக்கெட்டை வாங்குவதிலேயே மும்முரமாய் இருந்தாள்.

“வெயிட் டியர்… இனிமேதான் மேட்டரே இருக்கு” என்று அவனும் விட்டுக்கொடுக்காமல் கர்வப் புன்னகையோடு உரைத்தான்.

“இன்னும் என்ன?” என்று தவிப்புற்றாள் சிவசக்தி.

அவன் தன் காரிலிருந்த ரோஜா பூங்கொத்தை எடுத்து நீட்டியபடி,

“எத்தனையோ பெண்களை நான் கடந்து வந்திருக்கேன்… ஆனா நீ மட்டும்தான் என்னை இந்தளவுக்கு இம்பிரஸ் பண்ண சக்தி… யூ ஆர் தி ஒன்… ஐ வான்ட் டு மேரி யூ” என்றான். எதற்காக அவள் விலகி செல்ல நினைத்தாலோ இப்பொழுது அந்த நிகழ்வும் நடந்தேறியது.

சக்தி அந்தப் பூங்கொத்தை வாங்க விருப்பமின்றி,

“நீங்க செய்த உதவி எல்லாம் ரொம்பப் பெரிசு… அதுக்கெல்லாம் பிரதி உபகாரமாய் நான் உங்க காதலை அக்ஸ்ப்பெட் பண்ணிக்கனுமா?” என்று கேட்டாள்.

அந்தக் கேள்வி சக்தி செல்வனுக்குக் கோபத்தை உண்டாக்கிய போதும் அதை மறைத்துக் கொண்டு,

“நிச்சயமா அப்படி இல்ல சக்தி… உனக்கு விருப்பம் இருந்தா வாங்கிக்க… விருப்பமில்லன்னா எனக்கு அதுக்குக் கன்வின்ஸிங்கான காரணத்தைச் சொல்லிட்டு டிக்கெட்டை வாங்கிட்டு போ” என்று தீர்க்கமாய்த் தன் எண்ணத்தை வெளியிட்டான்.

சக்தி பெருமூச்சுவிட்டபடி, “நீங்கன்னு இல்ல வேற யாராக இருந்தாலும் நான் விருப்பமில்லைன்னுதான் சொல்லுவேன்… எனக்குக் காதல் மேல நம்பிக்கையும் இல்ல… கல்யாணம் செஞ்சிக்கிற ஐடியாவும் இல்ல “என்றாள்.

“நீ சொல்றது நடைமுறைக்குச் சாத்தியமில்லை… என்னை நீ வேண்டாம்னு சொல்ல இது சரியான ரீஸன் இல்ல… நான் இதுவரைக்கும் உன்னைத் தவிர வேறெந்த பொண்ணு பின்னாடியும் போனதுமில்ல… அட் தி சேம் டைம் எந்தக் கெட்ட பழக்கமும் என்கிட்ட இல்ல… அப்படி இருக்கும் போது ஒய்… கம்மான் கிவ் மீ த கரெக்ட் ரீஸன் “ என்று அவளுக்கு அழுத்தம் தந்தான்.

சிவசக்தி தலையில் கை வைத்துக் கொண்டு என்ன சொல்வது… எப்படிச் சமாளிப்பது என்று யோசித்தாள்.

“ரீசனே இல்லன்னா… அப்போ நீ பொய் சொல்றன்னுதானே அர்த்தம்” என்று சக்திசெல்வன் சொல்ல சிவசக்தி அவனை நிமிர்ந்து நோக்கி,

“நல்லா கேட்டுக்கோங்க… ஜீரோ பக்கத்தில ஒன் இருக்கிற வரைக்கும்தான் அதுக்கு மதிப்பு… அந்த ஒன் இல்லாம போயிட்டா… இட்ஸ் நாட் ஒர்த்… இந்தப் பணம் பதவி எல்லாம் உங்க கூட இருக்கிற வரைக்கும்தான் யூ ஆர் சீம்ஸ் டூ பி ஹீரோ… இல்லன்னா “ என்று சக்தி மேலே பேசாமல் நிறுத்த,

“ஜீரோன்னு சொல்ல வர்ற… கரெக்டா ?” என்று அவன் அவள் வாக்கியத்தை முடித்தான்.

“ தண்ணிக்குள்ள இருக்கிற மீன் எப்படி வெளியே வந்தா உயிர் வாழ முடியாதோ… அப்படி இந்த ஆடம்பரமான வாழ்கைக்குப் பழகிட்ட நீங்க இதை விட்டு வெளிய வந்தா யூ கான்ட் ஸர்வைவ்…

சாரி… நீங்க என் கண்ணுக்கு மறைவா இருந்த போதும்… உங்க பணமும் பதவி பலமும்தான் எனக்குத் தெரிஞ்சுது… சக்திசெல்வனா நீங்க தனிப்பட்ட முறையில் என்னை இம்பிரஸ் பண்ணல… இதுக்கு மேல நீங்க டிக்கெட்டை கொடுக்க வேண்டாம்… இனிமே என்னால போக முடியும்னு தோணல” என்று அவனை நிராகரித்துவிட்டு திரும்பிக் கொண்ட போது,

“வெயிட் சக்தி” என்று அவன் அழைத்து டிக்கெட்டை நீட்டி,

“இன்னும் டைம் இருக்கு… கோ” என்றான்.

சிவசக்தி இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதனை வாங்கிக் கொண்டு அவள் விமான நிலையத்திற்குள் சென்றாள். கடைசிப் பதட்டமான சில நொடிகளில் எப்படியோ சக்தி விமானத்தில் ஏறினாள்.

விமானம் இந்தப் பூமியை நிராகரித்துவிட்டு வானை நோக்கிப் பறந்தது. மேகங்களைக் கிழித்துப் பறந்து கொண்டிருக்கச் சிவசக்தி கண்களை மூடியபடி,

“ஐம் சோ சாரி சக்தி… நான் உங்களைப் பாத்து இம்பிரெஸ் ஆகலன்னு சொன்னதெல்லாம் பொய்… நான் அடிப்பட்டு உயிர் போற நேரத்தில வலியோட சக்தின்னு கதறின அந்தக் குரலை கேட்ட அந்த நிமிடமே…

உங்களைப் பார்க்காமலே நான் உங்களைக் காதலிக்க ஆரம்பிச்சேட்டேன்… ஆனா உங்களோட ஸ்டேட்டஸ்… என்னைப் பயமுறுத்தியது… என் லட்சியமும் என் தனித்தன்மையும் அந்த ஆடம்பரமான வாழ்க்கைகுள்ளே தொலைஞ்சி போகலாம்… இந்தக் காதலினால் ஏற்பட்ட வலியை நான் கடந்து வந்துருவேன்…

ஆனா காதலுக்காக என்னோட இத்தனை வருட இலட்சியத்தைத் தொலைச்சிட்டு ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையை உங்களுக்காக என்னால வாழவே முடியாது” என்று எண்ணிக் கொள்ளும் போது அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

டெல்லி விமான நிலையத்தைக் கடந்து சக்தி வெகுதூரம் பயணித்துவிட்ட அதே நொடியில் அந்தக் கருப்பு நிற கார் அதிவேகமாய்ச் சீறிக் கொண்டு பாய்ந்தது.

சக்திசெல்வனின் வலியும் கோபமும் அந்தக் காரின் வேகத்தைப் பார்க்கும் போதே புரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content