You don't have javascript enabled
narmadha novelsRomance

Madhu’s Maran-1&2

அத்தியாயம் 1:

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது

ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது

புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே

விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்

அமைத்தேன் நான்

மடை திறந்து தாவும் நதியலை நான்

மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்

இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்

நினைத்தது பலித்தது ஹோ…..

நேற்றேன் அரங்கிலே நிழல்களின் நாடகம்

இன்றேன் எதிரிலே நிஜங்களின் தரிசனம்

வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்..

தன் கான இன்னிசையால் கந்தர்வ குரலால் ஈர்த்து அரங்கத்தை அதிர வைத்துக் கொண்டிருந்தார் எஸ் பி பி.

அருகே இளையராஜா நிற்க, தன் நண்பனை கண்களால் தழுவி பாடிக் கொண்டிருந்தார் எஸ் பி பி. அது இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி.

மனம் குதூகலிக்க துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாள் அந்த இசைஞானியின் ரசிகை.

தன் பல வருட ஆசை நிறைவேறிய இத்தருணத்தை தற்சமயமும் நம்ப முடியாமல் தன்னை கிள்ளி பார்த்து ஆனந்தத்தில் திளைத்திருந்தாள் ராஜாவின் ரசிகையான வாணி.

அருகில் மாறன் அமர்ந்திருந்த அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒவ்வொரு பாடலுக்கும் அவளின் பரவசம்,  ஆனந்தம், துள்ளல் என அவளின் ஒவ்வொரு முக பாவங்களையும் ரசித்துக் கொண்டிருந்தான் மாறன்.

எனையே தந்தேன் உனக்காக

ஜென்மமே கொண்டேன் அதற்காக

நான் உனை நீங்க மாட்டேன்

நீங்கினால் தூங்க மாட்டேன்

சேர்ந்ததே நம் ஜீவனே!!

தன் சுற்றம் மறந்து இது வரை மேடையை மட்டுமே நோக்கி கேட்டிருந்தவளின் விழிகள் இந்த வரிகளில் அனிச்சையாய் தன்னவனை திரும்பி பார்த்தது. காதல் ஒளி கண்களில் பரவ நேசமாய் பார்த்திருந்தாள் அவனை.

அவளின் பார்வை மொழி புரிந்ததோ அவனுக்கு. அவள் காதருகே சென்றவன்,  என்றும் அவளுக்காக பாடும் இவ்வரிகளை அவள் செவி மட்டும் கேட்கும் வண்ணம் பாடினான்.

சுற்றி இருந்த கூச்சல் சத்தம் மேடையின் பாடலிசை அனைத்தும் மறந்து அவளுக்கு அவன் குரல் மட்டுமே உள்ளுக்குள் ரீங்காரமாய் கேட்க,  தன்னை மீறி அவன் கன்னத்தில் இதழ் பதித்திருந்தாள்.

“தேங்க்ஸ்ப்பா!! இப்படி ஒரு சர்ப்ரைஸ் நிஜமா எதிர்பார்க்கல. மனசு பூரிச்சு போய் இருக்கு” உரைத்தவள் அவன்  கைகளை கோர்த்து தோளில் தலை சாய்த்து விழிகளை மூடிக்  கொண்டாள்.

நெடுநாளைய அவளின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவளறியாது அவள் பிறந்தநாளின் நிமித்தமாய் ஆனந்த அதிர்ச்சியாய் இந்த இன்னிசை கச்சேரிக்கு அழைத்து வந்திருந்தான் மாறன்.

பாடலைக் கேட்டுக் கொண்டே அவனின் தோளில் மோன நிலையில் சாய்ந்திருந்தவளின் விழிகள் கலங்கியது அடுத்து வந்த பாடலில். அந்த உயிரை உருக்கும் குரலில்.

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது

ஒன்றில் ஒன்றாய் கலந்தாட

ஊண் கலந்து ஊணும் ஒன்றுபட தியானம்

ஆழ் நிலையில் அரங்கேற

காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு

இக்கணத்தைப்போலே இன்பமேது சொல்லு

காண்பவை யாவும் சொர்க்கமேதான்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்

எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற

எதுவோ…ஓர்…மோகம்

‘காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு

இக்கணத்தைப்போலே இன்பமேது,

இந்த வரிகளில் அக்கணம் உறைந்திடக்கூடாதா என்று எண்ணி அகமகிழந்திருந்தவள், இன்று  அதே கண்ணீருடன்  தொலைகாட்சியில் ஓடிய இப்பாடலை அந்நாட்களை நினைந்துக் கொண்டு கேட்டிருந்தாள் மதுரவாணி.

அன்று அது சந்தோஷக் கண்ணீர். இன்று இது சோக கண்ணீர். எதனால் இந்த சோக கண்ணீர்?? தெரிந்துக் கொள்ள வாருங்கள் கதைக்குள் செல்வோம்.

—–

சில மாதங்களுக்கு முன்பு

அன்று மது மாறனுடனான ஊடலில் கோபமான சோகத்தில் மெத்தையில் அமர்ந்திருக்க,

சட்டென்று கதவு திறக்கும் ஓசை கேட்க, இவள் அவசரமாய் கண்களை துடைத்து திரும்பி பார்க்க உள்நுழைந்தான் வெற்றி மாறன்.

“என் செல்லகுட்டிக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் தெரியுமா??” என அவன் அவள் தோளை தொட்டு தன் பக்கம் திருப்ப, வெடுக்கென முகத்தை திருப்பி தன் இடத்திலிருந்து நகர்ந்து அருகிலிருந்த மெத்தைக்கு மாறினாள் வாணி.

“என்னைய இப்படி தான் கொஞ்சி கொஞ்சி ஏமாத்திட்டிருக்கீங்க நீங்க??  உங்க பேச்சை நான் கேட்கிறதா இல்ல”  என கூறிக் கொண்டு தன் கைபேசியில் கவனம் செலுத்துவது போல் பாவனை செய்து ஓரக்கண்ணால் அவள் அவனைப் பார்க்க,  அவன் அந்த மெத்தையிலமர்ந்து அவள் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.

“பார்க்குறத பாரு!! என்ன பார்த்தாலும் நான் இந்த தடவை இறங்கி போக மாட்டேன்” என மனதிற்குள் எண்ணிக் கொண்டவள் முகத்தை திருப்பிக் கொள்ள,

சரியாய் அந்நேரம் மாறனின் கைபேசி ஒலித்தது.

“சொல்லுடா ஆஷிக். எப்படி இருக்க?” என மாறன் சத்தமாய் பேசிய நேரம்,

தாங்கள் சண்டைப் போட்டிருப்பதையும் மறந்து மாறனின் அருகில், “அந்த பன்னி டாக் ஃபெல்லோ உங்களுக்கு மட்டும் போன் பண்றானா?? என்னையலாம் மறந்துட்டான்ல அவன்.  அவனை ஒரு வழி பண்றேன் இன்னிக்கு” எனக் கூறிக் கொண்டே மாறனின் கையிலிருந்த பேசியை பறித்தாள்.

“இந்தியால தான் இருக்கியா? இல்ல வேற எங்கயும் போய்ட்டியா??  வாணினு ஒரு ஃப்ரணட் உனக்கு இருந்ததா நியாபகம் இருக்கா?? இந்த வாணி இல்லனா மாறன் உனக்கு ஃப்ரண்ட் ஆயிருக்க முடியுமா?? நீயும் அவரை மாதிரி என்னைய புரிஞ்சிக்கல தானே” என அவள் கோபத்தில் பொரிந்து தள்ள,

சத்தமாய் சிரித்தான் மாறன்.  அவன் சிரிப்பில் தன் பேச்சை நிறுத்தி கைபேசியை நோக்கியவளுக்கு எரிச்சல் மீதுற,

“ஃபோன் வராமலே வந்த மாதிரி ஆக்டிங்கா” என அவனை அடிக்க பாய, (தனது கைபேசியிலிருந்த ஃபேக் கால் ஆப்ஷன் மூலம் தானே தன் மொபைலுக்கு அழைப்பு வரவைத்திருந்தான் மாறன்).

அவளை கைகளில் மொத்தமாய் அள்ளி  தன் உயரத்திற்கு தூக்கியவன், அவளை வழக்கமாய் நிறுத்தி வைக்கும் மேஜையில் நிறுத்தினான்.

அவள் நெற்றியுடன் தன் நெற்றியை முட்டியவன், “இதுல நின்னாதான்டி என் உயரத்திற்கு வர நீ” எனக் கூற,

“அவளோ அலுத்துகிறவரு எதுக்கு என்னை கட்டிக்கிட்டீங்களாம்” என அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள,

தன் பக்கம் அவள் முகத்தை திருப்பியவன்,  அவளிதழ் நோக்கி குனிய, அவனை நெருங்க விடாது இவள் தன் முகத்தை திருப்ப, எக்குதப்பாய் அந்த முத்தம் அவள் கன்னத்தில் வந்து விழுந்தது.

தன் கன்னத்தை அழுந்த துடைத்தவள், “பாசமில்லாம யாரும் எனக்கு கிஸ் பண்ண வேண்டாம” என்றுரைத்தவள் அந்த மேஜையை விட்டு இறங்க முயல,

அவளை இறங்க விடாது தன் கைவளைக்குள் கொண்டு வந்தவன்,  “இப்ப என்ன கோவம் உனக்கு என் மேல?” என்றான்.

“மேரேஜ் ஃபிக்ஸ் ஆன டைம்ல, நமக்கு கல்யாணமான புதுசுல ஒரு நாளுக்கு மூனு நேரமாவது நான் ஆபிஸ்ல இருக்கும் போது போன் பண்ணுவீங்க.  இப்ப என்னடானா சாப்டாங்களானு நான் மெஸேஜ் செஞ்சாலும் ரிப்ளை இல்ல”

“உங்களுக்கு என் மேல அக்கறை இல்ல,  பாசமில்ல,  ஒன்னுமில்லை. நான் மட்டும் ஏன்  உங்ககிட்ட பாசமா நடந்துக்கிடனும்” என கண்ணில் நீர்  வழிய அவள் கூற,

அவள் மனதின் ஏக்கம் அவன் மனதை சுட,

“எப்ப தான்டா உனக்கு இந்த இன் செக்யூர்டு  ஃபீல் போகும்” என வருத்தமாய் கேட்டான்.

பதிலுரைக்காது மீண்டும்  அவள் அம்மேஜையை விட்டு இறங்க முயல, “இப்ப எங்க போற? இபப்டியே நின்னு பேசு” என்றவன் கேட்க,

“எனக்கு ஹர்ட் ஆகுது. இதுக்கு மேல நான் பேச விரும்பல”  என அவள் மீண்டும் இறங்க முயல, 

இறங்க விடாது அவளை இழுத்து அணைத்தவன், “சாரிடா செல்லகுட்டி.  இப்படி சின்ன சின்ன விஷயமெல்லாம் உன்னை ஹர்ட் பண்ணுதுனு எனக்கு இப்ப தானே புரியுது.  சீக்கிரம்  சரி பண்ணிக்கிறேன். உன்னோட புருஷனுக்கு ஒரு சான்ஸ் தர மாட்டியா?” என பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு அவன் கேட்க,

“இப்படி இவர் சோகமா மூஞ்ச வச்சிக்கிட்டாலும் கஷ்டமா இருக்கு. அதுக்காக சண்டை போடாம இருந்தாலும் கஷ்டமா இருக்கு. எவன் தான் இந்த லவ்வ கண்டு பிடிச்சானோ?” என வாய்க்குள் முனகி கொண்டே அவனை வெறித்துப் பார்க்க,

“உன் மாம்ஸ் அவ்ளோ அழகாவா இருக்கேன்  மதுக்குட்டி. இப்டி வெறிச்சி பார்த்துட்டு இருக்க”  என கண்ணடித்து அவன் கேட்க,

“ரொம்ப தான் நினைப்பு” என நொடித்துக் கொண்டவள்,

“சரி சரி மன்னிச்சிட்டேன் மன்னிச்சிட்டேன்.  என்னைய இறக்கி விடுங்க” என்றாள்.

இது தான் வாணியின் குணம்.  சிறு சண்டை நேர்ந்தாலும் பெரியதாய் எண்ணி சோகத்தில் ஆழும் அதே நேரம்,  அவளை சமாதானம் செய்துவிட அவன் முயன்றுவிட்டால் போதும்,  அதுவும் அவனின் முகம் வாடினாலே போதும் தனது சோகம் சண்டை எதுவாயினும் அவனுக்காக அந்நேரமாவது ஒதுக்கி வைத்து இயல் நிலைக்கு திரும்பி விடுவாள்.

“நம்ம டீல் என்னனு நியாபகம் இருக்கா அருமை பொண்டாட்டியே?” என்றவன் கேட்க,

“டீலா அப்படிலாம் எனக்கு எதுவும் நியாபகம் இல்லையே” என நமட்டு சிரிப்புடன்  அவள் கூற,

“அப்போ ஞாபகப்படுத்திடுவோம்” என்றுரைத்தவன் அவளிதழை முற்றுகையிட்டிருந்தான்.

இருவரும் மற்றவரில் மூழ்கியிருக்க, வாசற்கதவின் அழைப்பொலி  அவர்களின் மோன நிலையை கலைத்தது.

அத்தியாயம் 2

தனது மார்பை தலையணையாக்கி ஒய்யாரமாய் துயில் கொண்டிருந்த தன் மனைவியின் தலையை கோதிக் கொண்டிருந்தான் மாறன்.

அவள் கண்ணில் லேசாய் கண்ணீர் தடமிருக்க,  “அப்பா வந்ததும் என்னைய கண்டுக்காம போயிட்டு, இப்ப வந்து அழுது வடிஞ்சி ஒட்டிக்கிட்டு தூங்குறதப் பாரு” செல்லமாய் அவளை மனதிற்குள் வசைப்பாடிக் கொண்டிருந்தான்.

நேரம் காலை நான்கு மணியை கடந்திருக்க, அவளை தள்ளி படுக்க வைத்தவன், தனதறை விட்டு வெளியே வந்து பால்கனியை பார்த்தான்.

அப்பால்கனியில் அமர்ந்து அதிகாலை பொழுதை ரசித்து கொண்டிருந்த தன் மாமனாரிடம் வந்தான் மாறன்.

“என்ன மாமா?? தூக்கம் வரலையா?” கேட்டான் அவரிடம்.

“இல்ல மாப்பிள்ளை.  சீக்கிரம் முழிப்பு வந்துடுச்சு”

“சாரி மாமா!! நேத்து சட்டுனு கோபம் வந்துடுச்சு. எதுவும் ஹர்ட் பண்ணிட்டேனா உங்கள? நீங்க உடனே கிளம்புறேனு சொன்னது கஷ்டமா போச்சு” என்றான் மனதில் உதித்த குற்றவுணர்வுடன்.

“சே சே இல்லப்பா. அதுக்காக கிளம்புறேனு சொல்லல. நீ நேத்து சொன்னது கரெக்ட் தான்.  பொண்ண ரொம்ப கைக்குள்ள வச்சி வளர்த்துட்டேன். அதான் என்னை போலவே எதிர்பார்த்து உன்னை ரொம்ப கஷ்டபடுத்துறா?” என்றார் அவரும் குற்றவுணர்வுடன்.

“அச்சோ அப்படிலாம் இல்ல மாமா!! அவ என்னை கஷ்டபடுத்தினாலும் எனக்கு அது பிரச்சனை இல்லயே!! அவ அவளையே தான கஷ்டபடுத்திக்கிறா.

நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே” என தீவிரமாய் மாறன் கேட்க,

“எதுனாலும் சொல்லுங்க மாப்பிள்ளை” என்றவரும் படு தீவிரமாய் கேட்க,

“உங்க பொண்ணு ஒரு பொசசிவ் பேய் மாமா” என்றவன் கூறிய நொடி கணீரென சிரித்தார் செல்வம்.

அவரின் சிரிப்பில் இவனும் இணைத்திட,  இருவரும் சிரித்து முடித்த நேரம்,

“ஆனா அந்த பொசசிவ் தான் அவகிட்ட எனக்கு பிடிச்ச விஷயமே. இது என் பொம்மை, யாருக்கும் தரமாட்டங்கிறது போல நடந்துப்பா மாமா” கண்ணில் ரசனை மின்ன ஆழ்ந்து ரசித்து அனுபவித்து கூறினானவன்.

அதே பொசசிவ் தன்னை பிற்காலத்தில் ஆட்டுவிக்க போகிறதெனவும் அதற்காக அவளிடம் கடுமையாய் சண்டையிட போகிறோமெனவும் அறியாது அவளின் பொசசிவ் குணத்தைக் கூறி சிரித்துக் கொண்டிருந்தான்.

முந்தைய நாள் நிகழ்வு அவன் மனகண்ணில் நிழலாடியது.

கதவு தட்டும் ஓசையில் மோன நிலை கலைந்து யாரென்று பார்க்க மாறன் போய் கதவை திறந்த நொடி, மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள் வாணி.

“அப்பாஆஆ” என்று ஓடோடிச் சென்று அவரைக் கட்டிக் கொண்டாள்.

வாணி துள்ளிக் குதித்த சமயம் மாறனின் மனமோ, “போச்சுடா!!  சும்மாவே அப்பா புராணம் பாடுவா!! இப்ப கேட்கவே வேண்டாம். நம்மள ஒரு மனுஷனாவே யோசிக்க மாட்டாளே” என அலுத்துக் கொண்டது.

மகளை கண்ட மகிழ்ச்சியில் அவளை ஆதுரமாய் தழுவி கொண்ட செல்வம், “எப்படிமா இருக்க??”  என தலையை வருடிக் கேட்டார்.

“இனி இந்த உலகத்திலேயே அவங்க இரண்டு பேர் மட்டும் தான் இருக்கிறது போல சுற்றத்த மறந்து பேசுவாங்களே” என கடுப்பாய் மைண்ட் வாய்ஸ் பேசியவன் வெளியில் கிளம்பிச் சென்றான்.

அவன் வெளியில் சென்றதைக் கூட கவனியாது இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

வெற்றிமாறனின் குடும்பம் நெல்லையை பூர்வீகமாய் கொண்டு சென்னையை இருப்பிடமாய் வைத்து வாழ்ந்து வந்தது.

எம்பிஏ முடித்தவனுக்கு அலுவலகத்தில் மணி கணக்கு பார்த்து மாத சம்பளத்திற்கு காத்திருந்து, மாத முதல் வாரம் செல்வந்தராகவும் கடைசி வாரம் பிச்சைகாரனாகவும் வாழும் நிலை வேண்டேவே வேண்டாமென தீர்க்கமாய் முடிவெடுத்திருந்தபடியால் , தன் தந்தையின் சிறு சேமிப்பு பணத்தையும் பேங்க் லோன் பணத்தையும் வைத்து கார் ஷோரூம் வைத்து நடத்தினான்.

தொழில் தொடங்கிய நேரம் சறுக்கி விழுந்து நிறைந்த அனுபவம் பெற்று சிறுக சிறுக முன்னேறி, தன் தொழிலுக்கு சென்னையிலும் பெங்களுரிலும் ஒரு கிளை திறக்குமளவு முன்னேறியிருந்தான்.

இவனுமே பெங்களுரில் முக்காலவாசி மாதம் இருந்துவிட்டு,  தாய் தந்தையின் வற்புறுத்தலுக்காக அவ்வப்போது சென்னை வந்து சென்றுக் கொண்டிருந்தான் திருமணத்திற்கு முன்பு வரை.

திருமணத்திற்கு பின் வாணியின் வேலை அலுவலகம் சென்னையிலேயே இருக்கட்டும் மாற்ற வேண்டாமென உரைத்தவன்,  சென்னையை இருப்பிடமாக்கி அவ்வப்போது பெங்களுருக்கு சென்று கொண்டிருந்தான்.  மறக்காமல் மறுக்காமல் இவளையும் உடன் அழைத்து செல்வான்.

மாறனின் தாய் தந்தையர் நெல்லைக்கு சென்றிருக்க, இவளும் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதாய் கூறியதால் அன்றைய நாள் மதிய உணவு உண்பதற்காக வீட்டுக்கு வந்திருந்தான் மாறன்.

ஆனால் இப்போது ஏன் வந்தோம் என்ற அலுப்புடன் அலுவலகத்திற்கு தன் இரு சக்கர வாகனத்தில் பயணப்பட்டிருந்தான்.

வெற்றிமாறன் நெடு உயரமும் அதற்கேற்ற உடலும் சிறிய தொப்பையும் நவநாகரிகமாய் திருத்தப்பட்ட அடர் தாடியும் சுருள் கேசமும் கொண்ட நாகரிக யுவன்.

நம் மதுரவாணிக்கு நேர் எதிர்பதமாய் இருப்பவன். என்ன தான் மென்பொருளாளினியாய் அங்கு லீட் வாகவே வேலை பார்த்தாலும் லண்டன் பெங்களுர் என பல ஊர்களில் வேலை பார்த்திருந்தாலும் அவளின் உடையோ என்றுமே இன்றைய நாகரிகம் என்ற அளவை கூட தொட்டதில்லை.

பின் எவ்வாறு இத்தகைய காதல்??  அவள் எது செய்தாலும் சகித்துக் கொள்ளும் காதல் அவனுக்கு அவள் மீது.  அவனாய் தேடிச் சென்று அவள் தந்தையிடம் பெண் கேட்டு மணந்துக் கொண்டான் அவளை.

இக்கால யுவதிகள் போலல்ல அவள். மீடியம் சைஸ் பொட்டில்லாது குங்குமம் இல்லாது அவள் நெற்றி வெற்றிடமாய் என்றும் இருந்ததில்லை.

உயரம் இல்லை,  தங்க நிறமில்லை என்ற காரணத்திற்காகவே எத்தனையோ வரன்கள் அவளை புகைபடத்தில் பார்த்தே வேண்டாமென நிகாரித்து சென்றிருந்த சமயம், தானாய் வந்து அவள் எனக்கு வேண்டும் என கேட்டு மணம் புரிந்துக் கொண்டானவன்.

எவ்வாறு எவ்வகையில் நம் மது அவனை ஈர்த்தாள். அவளுக்கே தெரியாத ரகசியமது.

திருமணமாகிய இந்த ஆறு மாத காலத்திலும் அந்த ரகசியத்தை அவளிடம் உரைக்காது காத்துக் கொண்டிருந்தான் மாறன்.

அவன் ஷோரூமில் ஒரு வாடிக்கையாளர் வந்து பிரச்சனை செய்து சென்றிருக்க, அத்தகைய கடுப்பு மனநிலையிலேயே வீட்டை வந்து சேர்ந்தவனுக்கோ அவனது மாமனார் கதவை வந்து திறக்கவும் ஏகமாய் கடுப்பாயிற்று.

“எங்க மாமா அவ?? ”  உள்நுழைந்ததும் அவனின் முதல் கேள்வியே அது தான்.

“தூங்கிட்டு இருக்காப்பா” என்றாரவர்.

மதியம் அவன் உண்ணாமல் செல்கிறானென கூட அவள் கவனியாமல் இருந்தது, இப்போதும் தனக்காக காத்திராமல் தான் உண்டேனா இல்லையா என்கின்ற எண்ணமுமில்லாமல் அவள் உறங்குவது என அனைத்தும் அவன் மனதில் கோபத்தை கிளற,

இவை அனைத்திற்கும் காரணம் அவள் தந்தையின் வருகை என்ற காரணமும் சேர்ந்துக்கொள்ள,

“என்னனாலும் இப்படி கைகுள்ளேயே வச்சு நீங்க உங்க பொண்ண வளர்த்திருக்க கூடாது மாமா” கேட்டிருந்தான் அவன் மாமனாரிடம்.

செல்வத்தின் முகம் சுருங்கி போனது.

“உங்களை பார்த்ததும் என்னையே மறந்தே போய்டா… நான் சாப்பிட்டேனா இல்லையா ஆபிஸ் ரீச் ஆயிட்டேனா ஒரு மெசேஜ் இல்ல இன்னிக்கு. காலைல அவ  என் கிட்ட சண்டை போட்டதே அவளோட மெசேஜ நான் பார்க்கிறதே இல்ல.  பார்த்தாலும் ரிப்ளை பண்றதில்லைனு தான்.  ஒரு நாளைக்கு பத்து மெசேஜாவது நான் ஆபிஸ்ல இருக்க நேரத்துல அவகிட்டயிருந்து வந்திடும்.  இன்னிக்கு நான் அவ மெசேஜூக்காக காத்திருக்க, மேடம்  என்னைய கண்டுகாம தூங்கிட்டு இருக்காங்க” 

தன்னவள் தன்னை கண்டு கொள்ளவில்லை என்கின்ற அவனின்  காதல் மனம் விளைவித்த கோபமது என நன்றாய் புரிந்தது செல்வத்திற்கு.

மென்னகை புரிந்தாரவர் அவனின் குற்றச்சாட்டில்.

“அவ உங்களை தான் உங்க அன்பை தான் பென்ச் மார்க்கா வச்சி பார்க்கிறா.  அதை நான் ரீச் பண்ணனும்னு நினைக்கிறா”

“எல்லா அப்பாவும் இப்படி பொண்ணுங்க மேல பாசம் கொட்டி வளர்க்கிறீங்களே… உங்களோட வைஃப் கிட்டயும் மக மேலே பொழியுற மாதிரியே பாசத்தை பொழிஞ்சீங்களா??

இது தெரியாம பொண்ணுங்க எல்லாரும் என் அப்பா போல வருமானு சொல்லி சொல்லி வெறுப்பேத்தியே புருஷன் சாபத்தை வாங்கிக்கிறாங்க”  என அவன் உலகத்திலுள்ள அனைத்து பாவப்பட்ட புருஷங்களுக்காக பேசிக்கொண்டிருந்த நேரம்,

மாறனின் அறையினின்று எட்டிப்பார்த்தாள் வாணி.

“அய்யோ!! எல்லாத்தையும் கேட்டிருப்பாளோ?” அவளைப் பார்த்ததும் இவ்வாறு தான் மனம் குமுறியது மாறனுக்கு.

அவனை முறைப்பாய் பார்த்தவள், “அப்பா  உங்களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை மெசெஜ் செய்வேன்ப்பா” என்றாள்.

“இரண்டே இரண்டு தான்மா. காலை வணக்கம். இரவு வணக்கம்.  அதுவும் நான் அனுப்பின பொறவு தான் உன்கிட்ட இருந்து வரும்”  மாப்ள வசமா பொண்ணுக்கிட்ட சிக்கிட்டாரோ என்கின்ற நினைப்புடன் கூடிய சிரிப்புடன் கூறினாரவர்.

“உங்களுக்கு எத்தனை மெசேஜ் வரும்னு சொல்லுங்க”  என்றாள் மாறனிடம்.

‘ஆஹா மாறா வகையா மாட்டிக்கிட்டியே அவ கிட்ட.  இப்ப எக்ஸ்ஸாம்பிள் காமிச்சு விளக்கோ விளக்குனு விளக்குவாளே’ என அவன் மைண்ட் வாய்ஸ் பதற,

அவை எதையும் வெளியில் காண்பிக்காது , “நீங்க அனுப்புற குட் மார்னிங் அப்படியே எனக்கு ஃபார்வேடு பண்ணுவா  மாமா. அப்புறம் அவ அப்பப்ப பேஸ்புக்ல பார்கிற அவளுக்கு பிடிக்கிற போஸ்ட் மீம்ஸ்லாம் வந்துட்டே இருக்கும்.  மதியம் சாப்பிட்டாச்சானு கேட்பா?? அவளுக்கு வேலை செய்ற நேரம் இடைல போர் அடிச்சா இன்னிக்கு இப்படி ஆச்சு அப்படி ஆச்சனு எல்லாத்தையும் எனக்கு டைப் பண்ணிட்டிருப்பா… இல்லனா வீட்டுக்கு வந்து சொல்லுவா” என அவள் கேட்ட கேள்விக்கு தன் மாமனாரிடம் பதிலுரைத்துக் கொண்டிருந்தான்.

“அப்புறம் வேறென்ன மெசேஜ்” என்றாளவள் புருவத்தை உயர்த்தி.

“அப்புறம்ம்ம்” என இழுத்தவன்

“அதையும் சொல்லனுமா” என்றான் அவளிடம்.

“ம் சொல்லுங்க!! நீங்க சொன்ன குற்றச்சாட்டு எவ்ளோ அபத்தம்னு அவங்களுக்கு தெரிய வேண்டாமா… பொண்ணு இன்னும் குழந்தையாவே மெச்சூரிட்டி இல்லாம இருக்கானு அவங்க கவலைபடுவாங்கல”  என்றாள் கண்சிமிட்டி.

“அதை நீயே சொல்லலாமே” என்றானவன் முகத்தில் தோன்றிய வெட்கப்புன்னகையுடன்.

அவனின் வெட்கச்சிரிப்பை பார்த்து ரசித்து சிரித்தாளிவள்.

இவர்களின் பேச்சும் பார்வையும் சிரிப்பும் போகும் திக்கை பார்த்து சிரித்த செல்வம்,  “விடுமா மாப்ளய!! ஓவரா தான் மிரட்டுற அவர” என்றார் மாறனுக்காக பரிந்து வந்து.

“இன்னிக்கு வேணும்னே தான்ப்பா அவருக்கு மெசேஜ் செய்யல.  மதியம் கண்டுகாத மாதிரி இருந்தேன்.  மெசேஜ் பார்த்தும் ரிப்ளை செய்யாம கொஞ்ச நாளா கடுப்பேத்தினாரு. எனக்கு அவர் என்னை அவாய்டு பண்றாருனு தானே தோணும்.  அதான் இன்னிக்கு அவரை வெறுப்பேத்தினேன்” என அவனை நோக்கி நாக்கை துறுத்தி உரைத்தாள்.

“சரி வாங்கப்பா சாப்பிடலாம். நீங்களும் கை கால் கழுவிட்டு வாங்க” என்றிவள் இருவரையும் உண்ண அழைக்க,

“அதெல்லாம் வேண்டாம்மா.  நீ தனியா இருக்கியேனு தான் இவ்ளோ நேரம் இருந்தேன். நான் கிளம்புறேன். அங்க உங்கம்மா தனியா இருப்பா” என செல்வம் கூற,

“இதுக்கப்புறம் லேட் நைட் நீங்க ஒன்னும் போக வேண்டாம்.  அம்மாகிட்ட நான் பேசிக்கிறேன்.  ஒரு நாள் அவங்க தனியா சமாளிச்சிப்பாங்க” இது தான் முடிவு என்பது போல் உரைத்து சமையலறை சென்ற மகளையே பார்த்துக் கொண்டிருந்தார் செல்வம்.

“ஹா ஹா ஹா மாமா… உங்களையே மிரட்டுற அளவுக்கு எப்படி வளர்ந்துட்டா பாருங்க உங்க பொண்ணு” என்றான் மாறன்.

“அத நினைச்சி தான் மாப்ள நானும் அவளை பார்த்துட்டு இருக்கேன். இந்த ஆறு மாசத்துல மூனு நேரம் தான் அவளை நேர்ல பார்த்திருக்கேன்.  ஒவ்வொரு நேரமும் அவளோட முதிர்ச்சியான பேச்சு நடவடிக்கை என்னைய பூரிக்க வைக்குது தான்” என்றாரவர்.

அதன்பின் அனைவரும் உண்டுவிட்டு உறங்க செல்ல, செல்வம் ஹாலிலேயே படுத்துக் கொண்டார். அவரை உறங்க வைத்து விட்டே வாணி தனதறைக்குச் சென்றாள்.

அவள் உள்நுழைந்த நொடி,  அவளின் இரு கால்களையும் தன் கைகளுக்குள் கோர்த்து தன் உயரத்திற்கு மேலாய் அவளை தூக்கினானவன்.

திடுமென நிகழ்ந்த  அதிர்ச்சியில் “ஹே” என அவள் பதற,

கட்டிலில் அவளை நிறுத்தியவன் அவள் வயிற்றில் தனது தலையை முட்டி குறுகுறுப்பூட்டினான்.

மழலையாய் சிரித்தவள் அவன் சிகைப் பற்றி இழுத்து நிறுத்த,  “என்னா மிரட்டல் மிரட்டுற உன் அப்பா முன்னாடி.  எல்லாத்துக்கும் தண்டனை உண்டு” என்றவன் அவளுள் முழ்கி போனான்.

அவன் மார்பில் அவள் தலை வைத்திருக்க,  “நிஜமாவே இன்னிக்கு நான் உங்களை மறந்துட்டேனு நினச்சீங்களாப்பா” என்றாள் கண்ணில் நீர் தேக்கி.

அவளின் அன்பின் வீரியம் புரியாது, அதை மதியாது அவளின் அன்புக்குரியோரே நடந்தால் மிகவும் வேதனைக்குள்ளாவாள்.  அது தான் வாணியின் ப்ளஸ் அண்ட் மைனஸ்.  அன்புக்கு நான் அடிமை கேட்டகரி அவள்.

அவளின் இக்குணம் விளைவிக்க போகும் பிரச்சனையை எவ்வாறு சமாளிக்க போகிறானோ மாறன்.

ஏதேதோ பேசி சமாதானம் செய்து அவளை உறங்க வைத்தான் மாறன்.

9 thoughts on “Madhu’s Maran-1&2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content