vilakilla vithigal ‘AVAN’ – 15
15
பாரதிக்கு மரணத்தின் பயமோ கவலையோ துளி கூட இல்லை. யாருக்காக வாழ வேண்டுமென்ற விரக்திதான் அவனது எண்ணங்களில் விஞ்சி நின்றது. அந்த சலிப்போடுதான் நந்தினியிடம் சண்டையிட்டுவிட்டு அவன் சென்றதும் கூட!
ஆனால் சில அடி தூரங்கள் நடந்த பிறகு அந்த ரவுடி கும்பல் என்னவானார்கள் என்ற சந்தேகம் எழ, சட்டென்று திரும்பி பார்த்தான்.
நந்தினி தரையில் விழுந்து கிடந்தாள். அவளுக்கு என்னவானது என்று புரியாமல் பதறிப் போய் அவளிடம் ஓடி வந்தான். அத்தனை நேரம் அவளிடம் வெறுப்பையும் கோபத்தையும் மட்டுமே காட்டினாலும் அவளுக்காக அவன் இதயம் அடித்து கொண்டது.
தான் ஆடவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே! அப்படித்தான் அவன் உள்ளம் துடிதுடித்தது. அவர்கள் உறவின் பிணைப்பை அவன் அறியாத போதும் அவன் மனம் அறிந்திருந்தது.
தரையில் கிடந்தவளை தன் மடியில் கிடத்தினான். அவள் உடலில் காயங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
“நந்தினி” என்று அவள் கன்னத்தில் தட்டி எழுப்ப முயன்றான். அவளிடம் எந்த அசைவும் இல்லை.
“நந்தினி எழுந்திரு” என்றவன் மீண்டும் அவள் கன்னங்களைப் பற்ற, அவள் எதிர்வினை இல்லாமல் மூர்ச்சை நிலையில் கிடந்தாள். அவனுக்கு முதலில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதயம் படபடத்தது. தன்னையும் அறியாமல் அவன் கண்களில் கண்ணீர் உதிர்ந்து அவள் கன்னங்களில் சொட்டியது.
என்ன செய்வதென்று யோசித்தவனுக்கு சுற்றிலும் ஆள் அரவமே இல்லையென்று புரிந்தது. மீண்டும் ஏதேனும் ஆபத்து வருமோ என்று எச்சரிக்கையாக யோசித்தவன் உடனடியாக அருகில் நின்றிருந்த காரை பார்த்துவிட்டு அவளை தூக்கி பின் இருக்கையில் கிடத்தினான். தரையில் விழுந்திருந்த அவள் செல்பேசியை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கார் சாவியைக் கையிலெடுத்துக் கிளம்பினான்.
நந்தினியின் காரை பார்த்ததும் காவலாளி கேட்டை திறந்துவிட, அவளை தன் கரங்களில் சுமந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்ததை பார்த்து வேலைக்கார பெண்மணி பதறி ஓடி வந்தாள்.
“நந்தனி மேடத்துக்கு என்னாச்சு சார்?” என்று அவள் கேட்கவும்,
“மயங்கி விழுந்துட்டாங்கன்னு நினைக்கிறேன்… கொஞ்சம் போய் தண்ணி எடுத்துட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு அவள் அறைக்குள் தூக்கி வந்து படுக்கையில் கிடத்தினான்.
“நந்தினி” என்று அழைத்தபடி அவள் அருகிலேயே அமர்ந்தவனுக்கு எந்த உணர்வோடு இதையெல்லாம் செய்கிறோம் என்றே தெரியவில்லை. வெறும் இரக்க உணர்வு மட்டும்தானா?
அப்போது அந்த அறையில் செல்பேசி ரீங்காரமிடும் சத்தம் தொடர்ந்து கேட்டது. தன் பாக்கெட்டிலிருந்த பேசியை எடுத்து பார்த்தவனுக்கு அதிலிருந்து சத்தம் வரவில்லை என்று புரிந்த நொடி அவன் படுக்கை அருகிலிருந்த மேசைக்குள்தான் அந்த செல்பேசி சத்தம் கேட்கிறது என்று எண்ணித் திறக்க அதனை எடுக்க முற்படுவதற்குள் நந்தினி அவசரமாக எழுந்து அந்த பழைய ரக பேசியை தன் கையில் எடுத்துக் கொண்டாள்.
அதனை உடனடியாக அணைத்துவிட்டு அவள் பாரதியை நோக்க, அவன் ஷாக்கடித்தது போல நின்று கொண்டான்.
அவள் நாக்கை கடித்து கொண்டு அவஸ்த்தையாக விழிக்க, அப்போது சமையல்கார பெண்மணி தண்ணீர் ஜக்கோடு உள்ளே வந்துவிட்டு, “மேடம்… என்னாச்சு மேடம்? மயக்கமாகிட்டீங்களா?” என்று பதட்டமாக கேட்கவும்
“அது வந்து… எனக்கு… லேசான மயக்கம்தான்… தெளிஞ்சிடுச்சு… நான் நல்லா இருக்கேன்” என்று பாரதியை பார்த்துக் கொண்டே அவளிடம் உளறி கொட்டினாள்.
“ஜூஸ் எடுத்துட்டு வரவா மேடம்”
“ஐயோ! ஒன்னும் வேண்டாம் நீ போ” என்று அவளைத் துரத்திவிட்டு பாரதியின் புறம் திரும்ப அவன் பார்வையில் மெல்ல உஷ்ணமேறி கொண்டிருந்தது.
“அக்சுவலி போன் ரிங் சத்தத்தில்தான் எனக்கு மயக்கம் தெளிஞ்சிருச்சு” என்றவள் சொன்ன சமாளிப்பை நம்பாமல் புருவத்தை உயர்த்தியவன் நிறுத்தி நிதானமாக அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“ரத்தம் சதை நாடி நரம்புன்னு உன் உடம்பு முழுக்க பொய்தான் இல்ல?” என்றான் பல்லைக் கடித்தபடி!
“சாரி பாரதி… உன்னை வீட்டுக்கு வர வைக்க எனக்கு வேற வழி தெரியல” என்றவள் சொன்னதில் அவன் முகம் அசூயையாக மாறியது.
“ச்சே… உன்னைப் போய் பாவம் பார்த்து வீடு தூக்கிட்டு வந்த பாரேன் என்னை” என்று தலையிலடித்து கொண்டவன், “அப்படியே உன்னை நடுரோட்டுல விட்டுட்டு போயிருக்கனும் டி” என்று பல்லைக் கடித்தான்.
“அதெல்லாம் உன்னால முடியாது பாரதி… ஏன் னா நீ ரொம்ப நல்லவன்… நான் மயக்கம் போட்டதும் பதறிட்டு ஓடி வந்து என்னை தூக்குன இல்ல? உன் கோபம் வெறுப்பெல்லாம் வெறும் வாய் வரைக்கும்தானு அப்பவே எனக்கு புரிஞ்சிடுச்சு” என்று அவள் புன்னகையாகத் தொடர கடுப்பானவன்,
“ரொம்ப கற்பனை பண்ணிக்காதே… நீன்னு இல்ல… அந்த இடத்துல ஒரு பிச்சைக்காரி இருந்திருந்தாலும் நான் தூக்கி இருப்பேன்” என்றான்.
“உண்மைதான்… அந்த இடத்துல ஒரு பிச்சைக்காரி இருந்திருந்தாலும் நீ தூக்கி இருப்பதான்… ஆனாலும் கூட என்னை நீ தூக்கும் போது வெறும் இரக்கமும் பச்சாதாபமும் மட்டும் இருந்த மாதிரி தெரியலையே?!” என்றவள் சூசகமாக அவனை ஓரப்பார்வை பார்க்க,
“நீ உன் இஷ்டத்துக்கு என்ன வேணா நினைச்சிக்கோ… பேசிக்கோ… ஆனா உண்மைக்கு உன்னை இந்த கையால தூக்குனதுக்காக நான் இப்போ எவ்வளவு அருவருப்பா பீல் பண்றேன்னு எனக்குதான் தெரியும்” என்றவன் கடுகடுக்க, அவன் சொல்வதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் உதட்டைப் பிதுக்கியவள்,
“நீ கூட நல்லாத்தான் பொய் சொல்ற… ஆனாலும் அது உன் கேரக்டருக்கு பொருந்தவே இல்ல பாரதி” என்றாள்.
“சீ… உன்னை மாதிரி ஒரு பொண்ணை நான் பார்த்ததும் இல்ல… இந்த் வீட்டுல நிற்க கூட எனக்கு பிடிக்கல” என்றவன் முகம் சுளித்துவிட்டு வாசற்கதவை நோக்கிப் போக எத்தனிப்பதற்குள் அவள் அறைக்கதவை மூடியபடி முன்னே வந்து வழிமறித்தாள்.
“ஒழங்கா விலகி போயிடு நந்தினி”
“நான் விலகி போயிடுறேன்…. அதுக்கு முன்னாடி ஒரே ஒரு சான்ஸ்?” என்றவள் அவனை பாவமாகப் பார்க்க,
“திரும்ப திரும்ப உன் நடிப்பை நம்ப நான் ஒன்னும் முட்டாள் இல்ல? ஒழுங்கா நீயா என் வழியை விட்டு விலகி போறியா?” என்றவன் சீற்றமாகப் பொரிய,
“என்ன நீ? நான் நடிக்கும் போதெல்லாம் நம்புற… உண்மையைச் சொல்லும் போது மட்டும் நம்ப மாட்டுற… இப்படி பண்ணா எப்படித்தான்” என்றான்.
அவள் பேசுவதைக் கேட்கக் கேட்க அவனுக்கு கடுப்பேறியது.
“சும்மா சும்மா உண்மை சொல்லறன்னு என்னை வெறுப்பேத்தாதே சொல்லிட்டேன்”
“இந்த தடவை சொல்ல போறது இல்ல… காட்ட போறேன்”
“வேண்டாம் தாயே… நீ எதுவும் காட்ட வேண்டாம்… நான் இங்கே ஒரு நிமிஷம் கூட இருக்கவே மாட்டேன்” என்றவன் பிடிவாதமாக வெளியே செல்ல முயல,
“நீ இங்கே இருக்க வேண்டாம்… நீயும் நானும் சேர்ந்திருக்கிற போட்டோ ஒன்னு இருக்கு… அதை மட்டும் பார்த்துட்டு போ… ப்ளீஸ் ப்ளீஸ்” என்றவள் கெஞ்சியபடி வேகமாக ஒரே எட்டில் கப்போர்டை திறந்து ஒரு போட்டோ பிரமை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
“கிராபிக்ஸ் பண்ணி வைச்சு இருக்க போற… இதை நான் பார்க்கனுமா?” என்று அலட்சியமாக அவள் கொடுத்ததை வாங்க மறுக்க,
அந்த போட்டோவின் மேலுறையை எடுத்து அவனிடம் காண்பித்தவள், “இதை பார்த்தா உனக்கு கிராபிக்ஸ் மாதிரி தெரியுதா?” என்றாள்.
அந்த படத்தை பார்த்து அவன் விழிகள் அகல விரிந்தன. முதல் முறையாக தன் அம்மா அப்பா இணைந்திருக்கும் படத்தை அவன் பார்க்கிறான். தன்னையும் அறியாமல் மனதில் ஒருவிதமான உத்வேகம் பரவியது.
தன் அப்பாவின் படத்தை எப்போதாவது சுவரொட்டிகளிலும் பதாகைகளிலும் பார்ப்பதோடு சரி. அவரை நேரில் பார்க்க வேண்டுமென்று அவனுக்குப் பெரிதாக தோன்றியதில்லைதான். ஒரு வகையில் அப்படியொரு எண்ணம் எழ வித்யா விட்டதுமில்லை.
தம்பதியாக நின்றிருந்த அவர்களின் முன்னே பத்து பன்னிரென்டு வயதில் ஒரு சிறுமியும் சிறுவனும் அருகருகே இணக்கமாக நின்றிருந்தனர். அந்த சின்ன சிறிசுகளின் முகம் பூவாய் மலர்ந்திருந்தது.
அந்த படத்தை ஆர்வமாக தன் கையில் வாங்கி அச்சிறுவனின் முகத்தை உற்றுப் பார்த்தவனுக்கு அது தான்தான் என்று விளங்கியது.
“இப்ப நம்புறியா?” என்றவள் சொல்ல, பாரதி அவளை நிமிர்த்து பார்த்தான்.
படத்திலிருந்த கள்ளங்கபடமில்லாத அந்த சிறுமியின் முகம் நந்தினியின் முகத்தோற்றத்தை ஒத்திருந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“எனக்கு இந்த போட்டோல இருக்க உன்னை ஞாபகம் இல்லையே?” என்றவன் குழப்பமாகச் சொல்ல,
“உனக்கு சின்ன வயசுல தலையில அடிப்பட்டதுல நீ ஒரு சில விஷயங்களை மறந்துட்ட பாரதி” என்றாள்.
“தலையில அடிபட்டுச்சா… எப்போ எதனால?”
“எதனாலன்னு எனக்கு காரணமெல்லாம் தெரியாது… ஆனா உனக்கு தலையில அடிபட்ட பிறகுதான் யார்கிட்டயும் சொல்லாம அத்தை உன்னை தனியா கூட்டிட்டு போயிட்டாங்க” என்றவள் சொன்ன தகவல் அவனுக்குமே ஒரளவு தெரிந்திருந்தது.
மேலும் காலணியில் வாழ்ந்த நினைவுகள் மட்டுமே அவன் ஞாபகத்திலிருந்தன. ஏன் வித்யா அறிவழகனைப் பிரிந்து வந்தார் என்று இப்போது வரை அவனுக்குக் காரணம் தெரியாது. வித்யா சொல்லவும் இல்லை. இவன் கேட்கவும் இல்லை.
தன் தந்தையுடன் நெருக்கமாகவும் அன்பாகவும் இருந்தது போன்ற எந்தவொரு காட்சிகளும் அவனுடைய நினைவுகளில் பதிவாகவில்லை என்பதால் அவனுக்கு அவரை விட்டு விலகியிருப்பது அத்தனை சிரமமானதாகவும் இருக்கவில்லை.
“எந்த காரணத்தைக் கொண்டும் உங்க அப்பாவோட அடையாளத்தையோ இல்ல வசதியையோ நீ பயன்படுத்தவே கூடாது பாரதி… அவரோட நமக்கு இனி எந்த ஒட்டும் இல்ல… உறவும் இல்ல… அவர்தான் உங்க அப்பான்னு உன்னை சுத்தி இருக்க யாருக்கும் தெரியவும் கூடாது…” என்று தீர்மானமாக சொன்ன தன் அம்மாவின் குரல் அவன் காதில் இப்போதும் கணீரென்று ஒலித்தது.
அப்பா பெயர் தெரியாதவன் என்று சிலர் முகத்திற்கு நேராக அவனை அவமானப்படுத்திய போதும் கூட அவன் அறிவழகன்தான் தன்னுடைய அப்பா என்று பறைசாற்றிக் கொண்டதில்லை.
அறிவழகன் தமிழகத்தின் முதலமைச்சர் என்பதும் அவர் பெரிய அரசியல் கட்சித் தலைவர் என்பதைத் தாண்டி அவர் தன்னுடைய அப்பா என்ற எண்ணத்தையே நாளடைவில் அவன் மறந்துவிட்டான்.
ஆனால் இந்த படம் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வை அவனுக்குள் ஊற்றெடுக்கச் செய்தது. தன் பெற்றோர்களின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் அவன் மனதில் கரைபுரண்டோடியது.
இது நாள் வரை அவற்றைக் குறித்துச் சொல்ல அவனுக்கு யாரும் இல்லை.
நந்தினியை யோசனையோடு பார்த்தான். அவளுக்கு எல்லாம் தெரிந்திருக்குமோ? என்றவன் எண்ணிக் கொண்டிருக்கும் போதே,
“நீயும் நானும் சின்ன வயசுல எப்படி ஒரு ப்ரெண்ட்ஸ் தெரியுமா? உனக்குத்தான் எதுவும் ஞாபகத்துல இல்லை” என்றவள் சொல்லும் போதே கலங்கிய அவள் விழிகளைப் பார்த்தான்.
“சாரி நந்தினி… எனக்கு இந்த விஷயத்துல இப்படி ஒரு சைட் இருக்கும்னு தெரியல… எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு”
அவள் மெலிதாக புன்னகைத்து, “எல்லா கதைக்கும் இன்னொரு சைடும் இருக்கும் பாரதி… நம்ம பார்க்காதே சைட்… முக்கியமா உன் வாழ்க்கையில நீ பார்க்காதே சைட் ஒன்னு இருக்கு… அது என்னோட சைட்” என்றாள்.
அவள் பேசுவதை அவன் அமைதியாகக் கேட்டிருக்க அவள் தொடர்ந்தாள்.
“சின்ன வயசுல உன் கூட இருந்த நாட்களை என்னால மறக்கவே முடியாது பாரதி… உங்க வீடு எங்க வீட்டுக்கு அடுத்த காம்பவுன்ட்தான்… என்னை பார்க்கிறதுக்காகவே நீ வருவ… என் கூட பேசுவ… ஜாலியா விளையாயாடுவ… உன் கூட இருக்க கொஞ்ச நேரம்தான் நான் சந்தோஷமா இருந்த நிமிஷங்கள்… திடீர்னு நீயும் அத்தையும் காணாம போயிட்டீங்கன்னு தெரிஞ்சதும் நான் எப்படி நொறுங்கி போயிட்டேன்னு தெரியுமா?” என்றவள் சொன்ன போது அவள் விழிகளில் தேங்கியிருந்த ஏக்கம் அவனுக்குப் பொய்யாக தெரியவில்லை. ஆனால் அப்போதும் அவள் சொன்ன எதையும் அவனால் நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை.
நந்தினியின் மனமோ அவனுடன் இருந்த காலங்களை தன் ஞாபகங்களுக்குள் பொக்கிஷமாகப் பொத்தி பாதுகாத்து வைத்திருந்தது.
“நீயும் அத்தையும் வீட்டை விட்டு போன பிறகு மாமா உங்களைத் தேடவே இல்லை… மீடியாவுக்கு தெரிஞ்சா அசிங்கமாயிடும்னுதான் கவலைப்பட்டாரு…
அங்கிருந்த எல்லாரையும் விட உங்க இழப்பு என்னைத்தான் அதிகமா பாதிச்சுது… திரும்ப உங்களை பார்க்கவே முடியாதான்னு நினைச்சு நான் எவ்வளவு அழுதிருக்கேன் தெரியுமா?
ஆனா திடீர்னு ஒரு நாள் ஒரு அதிசயம் நடந்துச்சு பாரதி… ஒரு இன்டர் காலேஜ் காம்பட்டிஷன்க்காக வந்த போதுதான் உன்னை பார்த்தேன்…
நீ மேடையில பாரதியார் பாட்டு பாடிட்டு இருந்த…
‘சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ?
வட்டக் கரிய விழி கண்ணம்மா
வான கருமைகளோ?’
நீ பாடினதைக் கேட்டு பேச்சு மூச்சே இல்லாம நின்னுட்டேன் தெரியுமா? நீ பாடி முடிச்சதும் எல்லோரும் பாரதி பாரதின்னு உன் பேரைச் சொல்லி எல்லோரும் கத்துனாங்க… அப்பவே என் உள்ளுணர்வு நீதான்னு எனக்கு அடிச்சு சொல்லுச்சு
உன் காலேஜ்ல உன்னை பத்தி எல்லாம் விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்… முதல் வேலையா அத்தையை போய் பார்த்து பேசினான்… அவங்கதான் இப்போதைக்கு உன்னைப் பார்த்துப் பேச வேண்டாம்னு சொன்னாங்க” என்று சொல்லும் போதே அவள் குரலில் சுருதி இறங்கியது.
‘ஒரு வேளை அன்னைக்கே நான் உன்னை பார்த்து பேசியிருந்தா துர்கான்னு ஒருத்தி எனக்கும் உனக்கும் இடையில வந்திருக்க மாட்டா பாரதி’ என்ற எண்ணத்தை வார்த்தைகளாக வெளிவரவிடாமல் தொண்டைக் குழியிலேயே இருத்தி கொண்டாள்.
அவள் மௌனமாக அமர்ந்திருப்பதைப் பார்த்து, “நந்தினி” என்று அவன் அழைத்த நொடி அவன் கைகளைப் பற்றிக் கொண்டவள்,
“இங்கே இருந்து போகாதே பாரதி… ப்ளீஸ்” என்றாள்.
பதிலளிக்க முடியாமல் இம்முறை தயக்கமாக அவள் முகம் பார்த்து, “இல்ல நந்தினி… அது சரியா வராது” என்றவன் சொல்லவும்,
“எனக்கு புரியுது… நான் உன்னை காதலிக்கிறேன்னு சொன்னதாலதானே நீ தயங்குற” என்றவள் நிறுத்தி அவனைப் பார்த்து,
“நான் இனிமே காதல் அது இதுன்னு ரப்பிஷா பேச மாட்டேன்… நம்ம நல்ல ப்ரெண்ட்ஸா இருப்போமே… உன்னை விட்டா எனக்கும் யாரும் இல்ல பாரதி” என்றவள் வேதனையோடு அவன் கண்களை பார்த்தாள்.
அவள் விழிகளில் எந்தவித நாடகத்தனமும் இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை.
“என்னை ப்ரெண்டா ஏத்துக்க கூடாதா?” என்றவள் இறைஞ்சுதலாக பார்க்க மெல்லிய புன்னகையோடு சம்மதமாக தலையை அசைத்தவனுக்கு முழுவதுமாக அந்த சூழ்நிலையை ஏற்று கொள்ள இன்னும் தயக்கமாகத்தான் இருந்தது. மீண்டும் மீண்டும் ஒரே வட்டத்திற்குள் மாட்டி சுழல்வது போன்ற உணர்வு!
இன்னொரு புறம் அவள் சொல்வதெல்லாம் உண்மைதானா? என்ற சந்தேகம் மூளையை குடைய குழப்பமாக தன் அம்மாவின் படத்தைப் பார்த்தான். அவர் மட்டுமே இதற்கெல்லாம் சரியான பதில் சொல்ல முடியும்.
பாரதியை மிரட்டலாளோ அல்லது கோபத்தினாலோ அடிப்பணிய வைக்க முடியாது. அவன் அன்பிற்கு மட்டுமே கட்டுப்படுபவன் என்பதை நன்கறிந்து கொண்டவள் அவன் மனதை ஒருவாறு திசை திருப்பிவிட்ட திருப்தியில் நிம்மதியாக மூச்சுவிட்டாள். கணபொழுதில் சிறுப் புன்னகை அவள் உதட்டினோரம் தவழ்ந்து மறைந்தது.
Iva solradu ellame unmai ah nu teriyaliye Bharathi ku aabathu iruku aduku ivanai safe Inga vechiruka, idu avanuku sonnalum puriyade, nice update dear thanks.
Lovely update
Adana iva maramata
Hoom edukagaga nanthini ku ivlo villathanam
Bara
Barathi amma accident plan ah
Mugunda group en barathi ah kolla muyarchi pannanum