You don't have javascript enabled
Narmada novelsRomance

Madhu’s Maran-9

அத்தியாயம் 9:

மாறன் சட்டென உள் நுழைந்ததில், தான் கூறியதை தவறாய் எண்ணியிருப்பாரோ என்று சற்று கலங்கிப் போனான் மருதன்.

தன்னால் தன் தோழியின் வாழ்வில் எவ்வித தீங்கும் நேர்ந்துவிட கூடாது என்கின்ற எச்சரிக்கையின் விளைவினால் தோழியின் மீதிருந்த பாசத்தினால் வந்த கலக்கமது.

“வா மருதா.  எப்படி இருக்க?” என்று இயல்பாய் கை குலுக்கி நலம் விசாரித்தான் மாறன்.

“நல்லா இருக்கேன் மாறன்.  நீங்க எப்படி இருக்கீங்க?? மதுரா பொண்ணு உங்களுக்கு ஒழுங்கா சமைச்சு போடுறாளா இல்லையா? ஒரு வாரத்துல ஒரு கிலோ எடை குறைஞ்ச மாதிரி இருக்கீங்களே” என வாணியை கிண்டலடித்து மாறனிடம் சிரிப்பாய் அவன் கேட்க,

“அட நீங்க வேற,  நல்லா ஊட்டி ஊட்டி வளக்குறா என்னை” என அவள் காலையில் ஊட்டி விட்டதை இவ்வாறாய் மாறன் கூற,

“ம்ப்ச் என்ன பேச்சு இது” என்று மாறனின் தோள் பையை வாங்கும் சாக்கில் கையை கிள்ளினாள் மது.

அதை கண்டுகொண்ட மருதன் வாய்விட்டு சிரித்தான்.

அவனின் சிரிப்பில் அச்சோ வென மாறனின் தோளிலேயே சாய்ந்து அசட்டு புன்னகை சிந்தியவள்,

“நான் காபி போட்டுட்டு வரேன். நீங்க பேசிட்டு இருங்க” எனக் கூறி சமையலறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் மாறன்” என்றான் மருதன்.

“ஹ்ம்ம்..  எனக்கும் உன்கிட்ட கேட்க வேண்டிய கேள்விகள் கொஞ்சம் இருக்கு” என்றான் மாறன்.

“அன்னிக்கு நீங்க வீட்டுக்கு வந்தப்பவே உங்க முகம் சரியில்ல. மது உங்களை விட்டு கொடுத்து பேசிட்டதா நீங்க நினைச்சிட்டீங்கனு எனக்கு புரிஞ்சிது. நானும் அவளை ஓவரா தூக்கி வச்சி பேசினது உங்களுக்கு ஹர்ட் ஆகியிருக்குமோனு தோணுட்டு. அதான் க்ளாரிஃபை செஞ்சிடலாம்னு நினைச்சேன்” என்றவன் கூற,

மேற்கொண்டு கூறு என்பது போல் பார்த்திருந்தான் மாறன்.

“வாணிய நான் எங்க எப்ப பார்த்தேன் தெரியுமா மாறன்” கேட்டான் மருதன்.

“லண்டன்ல உங்களை மீட் செஞ்சதா சொல்லிருக்கா மருதா.  மத்த எதுவும் நாங்க உன்னை பத்தி பெரிசா பேசிக்கல”  என்றான் மாறன்

“லண்டன்ல நான் மதுராவ முதன் முதல்லா பார்க்கும் போது, “இந்த பொண்ணுலாம் எப்படி ஆன்சைட்க்கு அனுப்பினாங்கனு தான்” நினைச்சேன். ஏன்னா அப்ப நான் அப்பியரன்ஸ்க்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பேன். கொஞ்சம் மார்டனா இருக்க பொண்ணுங்க தான் பிடிக்கும். அப்படி இருக்க பொண்ணுங்க கிட்ட தான் பேசுவேன்” என்றிவன் கூறிய நொடி,

அதிர்ச்சியில் ஆழ்ந்தான் மாறன்.

தன்னை போலவே முதல் பார்வையில் மதுவை இவனும் குறைவாய் தாழ்வாய்  எண்ணியுள்ளானே என்றெண்ணி அதிர்ந்தான் மாறன். மருதன் மீது சிறிது கோபமும் வந்தது.  அது தன் மீதான கோபமும் கூட. 

இளமை பருவம், கண்ணுக்கு அழகாய் தோற்றமளிப்பதே உயர்வானதாய் எண்ண வைக்கும் வயதது. சற்று முதிர்ச்சியாய் சிந்தித்தால் வாழ்நாளுக்கும் தேவை குணமும் அன்பும் என உரைத்திருக்கும்.

ஆனால் அனுபவம் என்ற ஒன்று சிறிது காலம் தாழ்த்தினாலும் வாழ்க்கைக்கு தேவை எது என்பதை வலிக்க வலிக்க உணர்த்திவிட்டு தான் செல்கிறது.

இருவரும் அவ்வாறோர் அனுபவத்தின் மூலமே வாணியின் உன்னதமான குணத்தை கண்டு அவளின் அன்பிற்கு சரணடைந்தனர்.

இது அவளிடம் எவ்வாறு  கூறுவதென அறியாமல் தான், தங்களது முதல் சந்திப்பை வாணியிடம் கூறாமல் இருக்கிறான் மாறன்.  இதற்கு வாணியின் எதிர்வினை எவ்வாறு இருக்குமென யூகிக்க முடியாமல் தான் அதனை கூறாமல் இருக்கிறான் மாறன்.

முதல் சந்திப்பில் இவ்வாறு எண்ணியவன், பின் எவ்வாறு அவளை உற்ற தோழியாய் ஏற்றுக் கொண்டான்.  அவளின் மீது எவ்வாறு இத்தகைய பாசம் அவனுக்கு என பல கேள்விகள் மாறனின் சிந்தையில் சுழன்றது.

சில வருடங்களுக்கு முன்பு…

வெள்ளை மனிதர்களும் வெளீர் பனி குளுமையும் சூழ்ந்த லண்டன் மாநகரத்தின் ஈஸ்ட் ஹம் பகுதியிலிருந்த அவ்வீட்டின் கதவை தட்டிக் கொண்டிருந்தாள் வாணி.

கதவை திறந்த அவ்வீட்டின் உரிமையாளரினருகில் நின்றிருந்தாள் சஹானா.

நைட் பேண்ட்டும் டீ ஷர்ட்டுமாக அதன் மேல் ஜர்கினுமாக அப்பொழுது தான் தூங்கி எழுந்த முகமாய் நின்றிருந்தாலும் அவளின் ஃபெதர் கட் ஹேர் ஸ்டைலில் முகம் முன் விழுந்த முடியை கோதி பால் நிறத்தில் மிளிர்ந்து சிரித்த முகமாய் நின்றிருந்தவளைக் கண்டதும், “செம்ம அழகுல” என்று தான் வாணிக்கு தோன்றியது.

“வாங்க வாணி” என வாசலில் நின்றிருந்தவளை உள்ளுக்குள் அழைத்த சஹானா,

“வாணி, இவங்க தான் ஹரி அங்கிள். இந்த வீட்டோட ஓனர்.” என அறிமுகம் செய்து வைத்தாள்.

பரஸ்பர அறிமுகத்திற்கு பின் வாணியை தனது அறைக்கு அழைத்து சென்றாள் சஹானா.

“இது தான் நம்ம ரூம்.  இது தான் உங்க பெட்.  ரிஃபெரஷ் செஞ்சிட்டு வாங்க… க்ரீன் டீ குடிக்கலாம்”  என சஹானா கூற,

ரிப்ரெஷ் ஆகி வந்த வாணி, “தேங்க்ஸ்  சஹானா.  நான் வரதுக்கு முன்னாடியே இங்க எல்லா ஏற்பாடும் செஞ்சி வச்சதுக்கு” என நன்றியுரைத்தாள்.

“நான் என்ன பெரிசா செஞ்சேன். ஏற்கனவே இங்க இருந்த உங்க கலீக் பதிலா தானே நீங்க வந்திருக்கீங்க.  அதனால அப்படியே உங்களுக்கு அலக்கேட் பண்ணிட்டாங்க. ஆக்ட்யுவலி நான் சாரி கேட்கனும். உங்களை  ரீசவ் பண்ண நீங்க ஏர்போர்ட் வர சொல்லியும், வராம இருந்ததுக்கு ரொம்ப சாரி. எல்லாம் இந்த இளானால வந்தது.” என்றவள் கூறிய நொடி,

“என்னது இளாவாஆஆஆஆ” என்று வாணி வாயை பிளக்க,

“உங்களுக்கு இளாவ முன்னாடியே தெரியுமா??” என்றாள் சஹானா.

“இல்ல இளாங்கிற பேர்ல ஒருத்தரை தெரியும். அதனால அதே பேர்ல இங்கயும் இருக்காங்களானு கேட்டு ஷாக்காயிட்டேன். என் ஃப்ரண்ட் வேணியோட ஹஸ்பண்ட் பேரு இளா தான்” என்றாளவள்.

“ஓ இவன் பேரு இளமருதன். இங்க தான் பக்கத்து ரூம்ல  தான் தங்கியிருக்கான்” என்று சஹானா கூறியதும்,

“என்னது இங்க ஜென்ட்ஸ் லேடிஸ் ஒரே பிஜில இருப்பாங்களா??” என ஆச்சரியமாய் வாணி கேட்க,

வாணியின் முகபாவனையில் சிரித்த சஹானா, “ஆக்ட்யுவலி இங்க பிஜி மாதிரி லாம் கிடையாது.  இது வீடு தான்.  ஒரு வீட்டுக்கு மூனு பெட்ரூம்னு வச்சிருப்பாங்க. 

ஒரு பெட்ரூம்க்கு இரண்டு பெட்னு  இரண்டு பேரு ரெண்ட்க்கு விடுவாங்க.  சோ லேடீஸ் மட்டும் தான் ஜென்ட்ஸ் மட்டும் தான்னு கிடையாது.

இங்க இண்டியன்ஸ் தான் அதிகமா இருக்காங்க. இண்டியால இருந்து இங்க வந்து செட்டில் ஆனவங்க தான் இப்படி வீடு வச்சி வாடகைக்கு விட்டுட்டு இருக்காங்க” என்று கூறினாள்.

“இளாவும் நம்ம ஆபிஸ் தான்.  நான் இங்க வந்தப்ப ரொம்ப லோன்லியா ஃபீல் செஞ்சேன்.  அவன் தான் என்னை கேர் பண்ணி பாத்துக்கிட்டது. நான் இங்க வந்து த்ரீ மன்த்ஸ் ஆகுது.  அவன் வந்து ஒன் இயர் ஆகுது” என்றாள் சஹானா.

சஹானாவின் பேச்சில் இளமருதன் மீது நல்ல அபிப்ராயம் வந்தது வாணிக்கு.  பேசும் சஹானாவின் வதனத்தையே பார்த்திருந்த வாணி, “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க”  என்றாள்.

வாணியின் வார்த்தையில் சிரித்தவள், “யு ஆல்சோ லுக்ஸ் ப்ரிட்டி. காஜ்ஜியஸ் ஐஸ் யு ஹேவ்(u also looks pretty.  Gorgeous eyes u have)” என்றாள்.

நிஜமாவா என்பது போல் வாணி பார்க்க,

மீண்டும் சிரித்த சஹானா, “வாணி, உங்களை விட உங்க கண்ணு ரொம்ப பேசுதுங்க” என்றாள்.

“இன்னிக்கு சண்டேனால நானும் இளாவும் வெளில போகலாம்னு ப்ளான் செஞ்சிருந்தோம்.  நீங்க ரெஸ்ட் எடுக்குறீங்களா இல்ல சுத்தி பார்க்க வர்றீங்களா??” என்று க்ரீன் டீ குடித்துக் கொண்டே இருவரும் பேசிக் கொண்டிருந்த நேரம், அவர்களின் அறை கதவை எவரோ தட்டும் ஓசை கேட்க, சஹானா சென்று கதவை திறந்தாள்.

“ஹை பியூட்டி”  என்று சஹானா பார்த்து சிரித்துக் கொண்டு நின்றிருந்தான் இளமருதன்.

உள் நுழைந்தவன் வாணியை பார்த்து யாரது என்பது போல் நோக்க,

“இளா நான் நேத்து சொன்னேன்ல மதுரவாணினு ஒருத்தங்க வர்றாங்கனு. இவங்க தான்” என்று சஹானா கூறியதும்,

“ஓ ஹை” என்று வாணியை பார்த்து சற்றாய் சிரித்தவன்,

“கிளம்பு சஹா, வெளில எங்கயாவது போய்டு வரலாம்… சன்டேவும் ரூம்ல இருந்தா ரொம்ப கடுப்பா இருக்கு”  என்றுரைத்த நொடி,

“நீங்களும் வாங்க வாணி.  இங்க தனியா என்ன செய்வீங்க?”  என்றாள் சஹானா.

அவங்கள எதுக்கு கூப்பிடுற என்பது போல் சஹானாவை மருதன் முறைத்து பார்க்க, “அவங்க இங்க தனியா தானே இருக்கனும் இளா” என்று சஹானா ஏதோ கூற விழைந்த நொடி,

“இல்ல எனக்கு டயர்ட்டா இருக்கு.  ரெஸ்ட் எடுக்கனும்.  இங்க நல்லபடியா வந்துட்டேனு அப்பா அம்மா ப்ரண்ட்ஸ்குலாம் சொல்லனும். அதனால நீங்க போய்ட்டு வாங்க”  என்று கூறி விட்டாள் வாணி.

ஹப்பாடா என்றொரு ஆசுவாசம் மருதனின் முகத்தில்.

சங்கடமாய் வாணியின் முகத்தையும் கடும் எதிர்ப்பாய் மருதனின் முகத்தையும் பார்த்திருந்த சஹானா, “சரி போ இளா.  நான் கிளம்பி வர்றேன்.” என்று மருதனை அவ்விடத்தை விட்டு துரத்தினாள்.

வாணிக்கு மருதன் மீது ஏற்பட்டிருந்த நல்ல அபிப்ராயத்தை, அவனின் ஹை பியூட்டி என்ற அழைப்பில் நலிந்து அதன் பிறகான அவனது ஒட்டுதல் இல்லாத ஒதுக்கமான பேச்சில் முற்றாய் முறிக்க செய்தது.

“என்னமோ இவன் கூட போக நம்ம விருப்பபடுறா மாதிரி ஓவரா தான் பிகு பண்ணிக்கிறான்.  இவங்க இரண்டு பேரு எங்க ஒன்னா போனாலும்  நம்ம கூட போக கூடாது” என மனதில் நினைத்துக் கொண்டாள் வாணி.

ஆனால் விதியோ அவளை தினமும் அவர்கள் இருவருடனும் சேர்ந்து தான் அலுவலகத்திற்கு பயணிக்க வைத்தது.

அங்கே இரயிலை டியூப் என்றே விளிப்பர். இரண்டு நிமிடத்திற்கு ஒரு டியூப் என வந்த வண்ணமே இருக்கும்.  மூவருமே ஒரே அலுவலகமாகையால் சேர்ந்தே செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் வாணி.

அலுவலகத்திலிருந்து சரியான நேரத்திற்கு சஹானா கிளம்பிடுவாளாகையால் அவளுடனே தானும் கிளம்பி சென்றிடுவான் மருதன்.

வாணி சற்று நேரம் இருந்து தனது பணிகளை முடித்துவிட்டே கிளம்புவாள்.

வாணி இரவு அலுவலகத்தில் இருந்து தாமதமாய் வந்த போதும் அவளின் பாதுகாப்பை பற்றியெல்லாம் மருதன் கேட்டுக் கொண்டதுமில்லை. கவனித்ததுமில்லை. ஆனால் சஹானாவிற்கு அனைத்தையும் செய்துக் கொண்டு அவளின் பின்னேயே சுற்றிக் கொண்டிருந்தான்.

மருதனின் அழகை பார்த்து பழகும் தன்மையை அவனுடனான இரண்டாம் முறை சந்திப்பிலேயே கண்டு கொண்ட வாணி,  முழு முற்றாய் வெறுத்தாள் அவனை. சஹானாவிற்காக ஹை பை ரேஞ்சில் அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

மருதனின் இக்குணத்தை அறிந்தும் அவனிடம் நட்பு பாராட்டும் சஹானாவையுமே சற்று பிடிக்கவில்லை தான் வாணிக்கு.  தன் அழகுக்காகவே தன் மீது அக்கறை எடுத்து பார்த்துக் கொள்கிறான்  என அறிந்தும் அவனை அவள் தோழனாய் ஏற்றுக் கொண்டது பிடிக்கவில்லை வாணிக்கு.

பள்ளியிலும் சரி கல்லூரியிலும் சரி வேலை பார்க்குமிடங்களிலும் சரி இவ்வாறான ஆண்கள் இன்றும் இருக்க தான் செய்கிறார்கள். அழகான பெண் தனக்கு தோழியாய் இருந்தால் போதும், அதுவே அவர்களுக்கு ஒரு பெருமிதத்தை கர்வத்தை அளிப்பதாய் எண்ணுகிறார்கள்.

அதற்காக அவர்களின் நட்போ அன்போ தவறானது என்று இல்லை.  அவர்கள் அப்பெண் மீது வைத்திருக்கும் அன்பு நட்பு தூய்மையானது தான். ஆனால் அவற்றின் ஆரம்ப புள்ளி இப்படியான கர்வமும் பெருமிதத்திற்காக ஆரம்பித்த ஒன்றாக தான் இருக்கும். 

அப்பெண் அழகுடன் கூடிய பண்புடையவளாய் இருப்பின் இவர்கள் தப்பித்து விடுகிறார்கள். அவ்வாறில்லாத பெண்களிடம் தோழமை வைத்து மன வலியை பெற்று வாழ்பவர்களும் உண்டு.

இதில் தாங்கள் அழகில்லை என்ற தாழ்மை மனப்பான்மைக்கு மற்ற பெண்களை தள்ளிக் கொண்டிருக்கிறோம் என்றும் பலருக்கு புரிவதில்லை.

ஆக நட்போ  காதலோ எத்தகைய உறவிற்கும் அடிப்படை அன்பும் பண்பும் மட்டுமாய் இருக்க வேண்டுமே தவிற அங்கே அழகு ஒரு பொருட்டாய் இருத்தல் கூடாது.

இளமருதன் அத்தகைய தவறினை தான் செய்து கொண்டிருந்தான்.

நட்பாய் சென்றுக் கொண்டிருந்த அவனின் பயணம் அவளிடம் காதலாய் உருமாற அது புகட்டி சென்ற பாடம் தான் வாழ்க்கையின் நிதர்சனத்தை மருதனுக்கு உணர்த்தியது.

முகப்பறையில் நிகழ்ந்துக் கொண்டிருந்த மருதன் மாறனின் உரையாடலில்,  சமையலறையில் காபி கலக்கி கொண்டிருந்த வாணியின் எண்ணங்கள் இவ்வாறாய் பயணித்துக் கொண்டிருக்க,

மாறன் வந்து பின்னின்று அணைக்க,  நிகழுலகுக்கு வந்தாள் வாணி.

“என்ன பெருத்த யோசனைல இருக்கு என் மதுக்குட்டி”  எனக் கூறி பின்னின்று அணைத்திருந்தவன் அவளுயரத்திற்கு குனிந்து அவளின் முகத்தினருகே தன் முகத்தை வைத்து கன்னத்தில் இதழ் பதித்தான்.

“யோசனைலாம் ஒன்னும் இல்லப்பா” என்று இவள் ஏதோ கூற வர,

தன்னை நோக்கி அவளை திருப்பியவன்  தன்னுயரத்திற்கு அவளை தூக்கி தலையில் முட்டி,

“ஹால்ல இருந்துட்டு உன்னை நான் மூனு நேரம் கூப்டேன் என் அருமை பொண்டாட்டி.  நீதான் ரெஸ்பான்ஸே பண்ணல.  அதான்  என்னாச்சுனு பார்க்க வந்தேன். காபி போட இவ்ளோ நேரமா மதுரா பொண்ணுனு உன் ஃப்ரண்டும் உன்னை கிண்டலடிச்சிட்டு இருக்கான் அங்க.  சீக்கிரம் வா” என  நெற்றியில் இதழ் பதித்து இறக்கி விட,

திடீரென்ற இவனின் அதிரடியில் அவள் பே வென முழித்து நிற்க,

“அந்த கண்ணை ரொம்ப தான் உருட்டி முழிச்சு என்னை உசுப்பேத்துற மதுக்குட்டி” என கண்ணிலும் இதழ் பதித்தே விட்டு சென்றான்.

இவள் இங்கு சமையலறையில்  எண்ணங்களை பின்னோக்கி செலுத்திக் கொண்டிருந்த நேரம், முகப்பறையில் மருதன் தன் காதல் கதையையும் வாணியை தான் கவனியாது இருந்ததையும் கூறி முடித்திருந்தான்.

அடுத்து மருதன் எவ்வாறு வாணி மீது இத்தகைய அன்பு வந்தது என்று கூற தொடங்கிய நொடி தான், மாறன் வாணி வரட்டும் அதன் பிறகு இக்கதையை கூற சொல்லிவிட்டான்.  அதன் பின்னரே வாணியை அழைத்தனர் இருவரும்.

— நர்மதா சுப்ரமணியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content