You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic thriller

Solladi sivasakthi-33&34

33

பிரம்மாஸ்திரம்

சிவசக்தி அங்கே சக்திசெல்வன் வந்துநின்றதைக் கவனிக்காமல் விஜயிற்கு எப்படிப் புரிய வைப்பது எனத் தலையில் கைவைத்தபடி நின்றிருந்தாள்.

விஜய் அவளின் நிலையைப் புரிந்து கொள்ளாமல்,

“என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா சக்தி?” என்று கேள்வி எழுப்பினான்.

சிவசக்தி உணர்ச்சி வேகத்தில்,

“நான் ஒருத்தரைக் காதலிக்கிறேன் விஜய்… அவரைத் தவிர வேறு யாரையும் என்னால அந்த இடத்தில் வைச்சு பார்க்கவே முடியாது…” என்று சொல்லிவிட்டு திரும்பும் போது அவளைப் பார்த்தபடி நின்றிருந்த சக்திசெல்வனை அவளும் கவனித்தாள்.

இவர்கள் இருவரின் பார்வையும் ஒரு சேர பார்த்துக் கொள்ள அந்த ஆழமான காதலை இருவருமே புரிந்து கொள்ளும் தருணமாய் அது அமைந்தது.

அவள் பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை எனினும் அவள் தன்னைத்தான் குறிப்பிடுகிறாள் என்று சக்திசெல்வன் புரிந்தபடி கர்வப் புன்னகையோடு நின்றிருந்தான்.

ஆனால் இன்னமும் சக்திசெல்வனை கவனிக்காத விஜய் ஏமாற்றத்தோடு,

“நீ இதுவரைக்கும் ஒரு தடவை கூடச் சொல்லவே இல்லையே… யாரது?” என்று சந்தேகமாய்க் கேட்டான்.

இவன் இன்னும் புரிந்து கொள்ளாமல் கேள்வி எழுப்புகிறானே என்று அவள் எரிச்சலடைய, இப்போது அவனிடம் எங்கனம் பதிலளிப்பது எனத் தயங்கி நின்றாள்.

“அது வேற யாருமில்லை… நான்தான் விஜய்” என்று சக்திசெல்வன் பதிலளிக்க அப்போதுதான் விஜயின் பார்வை அவன் புறம் திரும்பியது.

விஜய் அதிர்ச்சியில் கொஞ்சம் தடுமாறச் சக்திசெல்வனின் முகத்தில் புன்னகை அந்த இருளாகியிருக்கும் சூழலிலும் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

அவன் தன் மீது கோபத்தைச் சுமந்து கொண்டிருந்தாள் நிச்சயம் இந்தப் பதில் அவனிடமிருந்து வந்திருக்க வாய்ப்பில்லை என்று அவள் எண்ணி நெகிழ்ந்தாள். இருவரும் பேசிக் கொள்ளாமலே அவர்களின் எண்ணங்கள் பரிமாறப்பட்டுவிட்டன.

இப்போது இவர்கள் தங்கள் வெகு நாட்களின் பிரிவிற்குப் பிறகான அந்தக் காதல் தருணத்தை அனுபவிக்கவிடாமல் விஜய் இடையூறாக நின்றபடி சக்திசெல்வனை நோக்கி சந்தேகத்தோடும் தடுமாற்றத்தோடும்,

“சார் நீங்க… ஹோட்டல் எஸ். எஸ்ல மீட் பண்ணோமே?” என்று கேட்டான்.

இப்போது சக்திசெல்வன் எரிச்சலோடு,

‘இப்பதான் இதை இவன் ஞாபகப்படுத்தனுமா… கேள்வி மேல கேள்வி கேட்கப் போறாளே’ என்று மனதில் அவன் எண்ணிக் கொண்ட அதே நேரத்தில் விஜயும் தன் தவறை உணர்ந்தவனாய் உதட்டைக் கடித்தபடி சிவசக்தியை நோக்கினான்.

சிவசக்தி விஜயின் கேள்வியையும் அவர்கள் இருவரின் முகப்பாவனையையும் கவனித்தாள்.

ஏற்கனவே அன்று நடந்த விஷயத்தில் அவளுக்குள் இருந்த சந்தேகம் வலுக்கத் தொடங்க விஜய் விழித்தபடி, “நான் கிளம்பறேன் சக்தி” என்று புறப்பட நினைத்தான்.

சிவசக்தியின் பார்வை இருவரையும் கூர்மையாக நோக்கியபடி,

“விஜய் வெயிட்” என்றாள்.

சில நிமிடங்களுக்கு முன் அவன் போனால் போதும் என்று நினைத்தவள் இப்போது போகவிடாமல் தடுத்தாள்.

இப்போது நடக்கப் போவதை தடுக்க இயலாது என்று எண்ணிக் கொண்ட சக்திசெல்வன் மீண்டும் அவளின் கோபத்தை எதிர்கொள்வதா எனச் சலிப்புற்றான்.

விஜய் பதில்பேசாமல் அமைதியோடு நிற்க,

சிவசக்தி அவனை நோக்கி, “ஹோட்டல் எஸ். எஸ்ல இரண்டு பேரும் ஏற்கனவே அறிமுகமாயிட்டீங்களா?” என்று வினவினாள்.

விஜய் பதட்டமாய் சக்திசெல்வனை நோக்கினான். அப்படிப்பட்ட சூழ்நிலையைச் சமாளிக்கும் விதமாய் சக்திசெல்வன்,

“விஜயை ஒரு தடவை ஹோட்டலில் பார்த்திருக்கேன்… அப்படி அறிமுகம்” என்றான்.

“ஆமாம் சக்தி” என்று விஜயும் அவன் பதிலை ஆமோதித்தான்.

விஜயிடம் தான் கேட்ட கேள்விக்கு இவன் ஏன் சமாளிக்கிறான் என்ற எண்ணம் சிவசக்தியின் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.

சிவசக்தி இப்போது கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டவளாய்,

“நட்பு, காதல் இந்த இரண்டு உறவிலயும் உண்மையா இருக்கனும்னு நான் நினைக்கிறேன்… அதுக்கப்புறம் உங்க இஷ்டம்” என்ற அவள் உரைக்க அந்த வார்த்தை இருவரையுமே தாக்கியது.

இனிமே அந்த விஷயத்தைச் சிவசக்தியிடம் மறைப்பது சரியில்லை என்று எண்ணிய சக்திசெல்வன் அன்று நடந்தவற்றிற்கு முக்கியக் காரணமான விஜய்தான் அந்தச் சம்பவத்தை விவரிப்பது சரியாக இருக்கும் என விஜயின் புறம் தன் பார்வையை வீசினான்.

அவன் பார்வையைப் புரிந்த விஜயும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சிவசக்தியை நேர்கொண்டு பார்க்க முடியாமல் தயங்கித் தயங்கி,

“சக்தி… நான்… அன்னைக்கு… உன் மேல இருந்த கோபத்தில…” என்று தடுமாறி பேச்சற்று நின்றவனைக் கூர்மையாய் பார்த்து,

சிவசக்தி பொறுமையிழந்தவளாய் “விஜய்… ஸ்பீக்… நான் என்ன நடந்ததுன்னு இப்போ தெரிஞ்சிக்கிட்டே ஆகனும்” என்று அழுத்தம் கொடுத்தாள்.

அவள் பார்வையில் அன்று நடந்ததைத் தெரிந்து கொண்டே தீர வேண்டும் எனும் ஆர்வம் புலப்பட விஜய் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு,

“நான் பெரிய தப்புச் செஞ்சிட்டேன் சக்தி உனக்கு… அது… நீ குடிச்ச கூல்டிரிங்ஸ்ல டிரிங்ஸை கலந்துட்டேன்… அந்த நிலையில் உன்னைக் கீதா வீட்டில கொண்டு போய் விட்டு,

எல்லோர் முன்னிலையிலும் நீ அவமானப்படனும்னு நினைச்சேன்… நல்ல வேளையா… அப்போ சார் உன்னை அந்த நிலையில் பார்த்துட்டு… உன்னை என் கூட அனுப்ப மாட்டேன்னு அங்கேயே ரூம்ல ஸ்டே பண்ண வைக்க ஏற்பாடுப் பன்னாரு” என்று சொல்லி முடிக்க,

இதைக் கேட்ட சிவசக்தி அதிர்ந்துப் போய் நின்றாள். ஒருபக்கம் விஜய் செய்த துரோகம் கோபமாய்த் தெறிக்க மறுப்பக்கம் தான் பிரச்சனையில் இருக்கும் போதெல்லாம் சக்திசெல்வன்தான் தன்னைக் காப்பாற்றுகிறான் என்ற எண்ணம் அவள் மனதில் நன்றியுணர்ச்சியோடு சேர்த்து குற்றவுணர்ச்சியையும் ஆட்கொண்டது.

விஜய் மேலும் நிறுத்தாமல், “சாரி சக்தி… அப்போ எனக்கு உன் மேல இருந்த கோபத்துல… ஆனா இப்போ சத்தியமா என் தப்பை நான் உணர்ந்திட்டேன் “ என்றான்.

சிவசக்தி உக்கிரமான பார்வையை விஜய் மீது வீசி,

“நான் அன்னைக்கே உன்கிட்ட நாம வேற யாரையாச்சும் மீட் பண்ணோமான்னு கேட்டேன் இல்ல… நீ ஏன் அப்பவே இவரைப் பார்த்த விஷயத்தைப் பத்தி சொல்லல?!” என்று அழுத்தமாய்க் கேட்டாள்.

இப்போது சக்திசெல்வன் அவளை நோக்கியபடி,

“நான்தான் என்னைப் பத்தி எதுவும் சொல்ல வேண்டாம்னு சொன்னேன்” என்றான்.

சிவசக்தி வேதனையோடு,   `1 “இரண்டு பேருமா சேர்ந்து என்னை முட்டாளாக்கிட்டீங்க” என்று சக்திசெல்வனை நோக்கி உரைத்து விழிகளில் வழிந்த நீரைத் துடைத்தாள்.

“ப்ளீஸ் சக்தி… என்னை மன்னிச்சிடு” என்று விஜய் கேட்க அவனின் மன்னிப்பு சிவசக்தயின் செவிக்கு எட்டவில்லை. மாறாய் கோபமே அதிகரித்தது.

சக்திசெல்வன் அவளின் கோபத்தைப் புரிந்தபடி அவளை நோக்கி,

“எல்லோருமே சூழ்நிலை காரணமா தப்பு செய்வாங்க… அந்தத் தப்பை உணர்ந்து அவங்க திருத்திக்கனும்னு நினைக்கும் போது… நம்மகிட்ட மனசார மன்னிப்பு கேட்கும் போதும் நாம நிச்சயம் மன்னிக்கனும்… அதுவுமில்லாம நமக்கு அவங்க செஞ்ச கெடுதலைப் பத்தி மட்டுமே யோசிக்காம… அவங்க செஞ்ச நல்லதையும் கொஞ்சம் நினைச்சுப் பார்க்கனும் சக்தி” என்றான்.

இவை எல்லாவற்றையும் அவன் விஜயிற்காகதான் உரைத்தானா என்று சிவசக்தி சக்திசெல்வனைச் சந்தேகமாய்ப் பார்த்தாள்.

சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தவள் பின்னர் விஜயினை நிமிர்ந்து நோக்கியபடி,

“சரி… போகட்டும் விடு விஜய்… நீ எனக்கு ஒரு நல்ல நண்பனாய் நிறைய உதவி செஞ்சிருக்க… ஸோ அன்னைக்கு நடந்த அந்த மேட்டரை மன்னிக்கிறதை விட நாம மறந்திடலாம்… லீவ் இட்” என்றாள்.

சக்திசெல்வன் அவள் தான் சொன்னதைக் கேட்டு விவாதம் செய்யாமல் உடனே ஏற்றுக் கொண்டாலே என வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான். ஆம் அவனின் வார்த்தையைத் தட்ட விருப்பமில்லாமலே சக்தி விஜயை அப்போதைக்கு மன்னித்தாள்.

விஜய் அவளின் காதலை எதிர்நோக்கி வந்து இப்போது அவர்களின் நட்பாவது காப்பாற்றப்பட்டதே என நிம்மதி அடைந்தவனாய் சக்தியிடம் நன்றி உரைத்துவிட்டு அவர்களிடம் விடைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டான்.

சக்திசெல்வன் அவளிடம் தெரிந்த மாற்றத்தை உணர்ந்தபடி புன்னகையோடு சிவசக்தியை நோக்கி,

“அப்போ எனக்கும் மன்னிப்பு கிடைக்கும்தானே?!” என்று ஆவலோடு எதிர்பார்த்திருக்க,

சிவசக்தி அவன் இப்போதும் தான் செய்த தவறை மறந்து விட்டுத் தன்னிடம் மன்னிப்பு கோருகிறானே என வியப்பாய் நோக்கியபடி,

“நீங்க மன்னிப்பு கேட்கிறளவுக்கு எந்தத் தப்பும் செய்யல சக்தி… உங்க அம்மாவை நீங்க கன்வின்ஸ் பண்ணனும் நினைச்சுதானே… அப்படி எல்லாம் செஞ்சீங்க… பரவாயில்ல… அதுல தப்பு எதுவும் இல்ல… ஆனா அன்னைக்கு என் மனசில இருக்கிறதை சொல்லவிடாம என்னை வேதனைப்படுத்தி அப்படி ஒரு விளையாட்டை நீங்க விளையாடிருக்க வேண்டாம்.

என்கிட்ட முன்னாடியே ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்?… அதுதான் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு… என்ன… உங்க பக்கம் இருக்கிற நியாயம் எனக்குப் புரிந்தாலும் அந்த நேரத்தில எனக்கு ஏற்பட்ட ஏமாற்றமும் வலியையும் வார்த்தையால் சொல்லவே முடியாது… ஐம் டோட்டலி டிப்பிரஸ்ட்… அந்த டிப்ரஷ்னலதான் ஏர்போர்ட்ல நீங்க சொல்ல வந்ததைக் கூடக் கேட்காம நான் ரொம்ப ஹார்ஷா பிகேவ் பண்ணிட்டேன்” என்றாள்.

சக்திசெல்வன் அவளுக்கு இந்தளவுக்கு விஷயமெல்லாம் எப்படித் தெரிந்திருக்கும் என்று யோசித்தவன் பின்னர்த் தன் தந்தை தெரியப்படுத்திருக்கக் கூடும் என எண்ணித் தெளிவு பெற்றான்.

பின்னர் அவன் சிவசக்தியிடம், “நான் உனக்குத் தெரியப்படுத்த முயற்சி செஞ்சேன்… அதை நீ பார்க்கல… அது என்னோட துரதிஷ்டம்” என்றான்.

சிவசக்தி குழப்பத்தோடு, “அப்படியா?” என்று கேள்வி எழுப்ப அவன் தான் தங்கியிருந்த அறைக்கதவு பூட்டப்படாததைக் கவனித்து அதனுள் நுழைந்தான்.

சிவசக்தியும் அவன் பின்னோடு சென்றாள்.

“நான் போனபிறகு இந்த ரூமுக்கு நீ வந்தியா சக்தி?” என்று அவன் வினவ,

“உங்களோட ஞாபகங்கள் இங்க இருக்கே… அதனால அடிக்கடிக்கு வருவேன்” என்றாள்.

“நான் பலநேரங்களில் உன்கிட்ட சொல்லனும்னு நினைச்சதை லெட்டரா அனுப்புவேன் மறந்திட்டியா?!” என்று கேட்டான்.

சிவசக்தி யோசித்தபடி, “ம்… ஆனா இந்த ரூம்ல நீங்க யூஸ் பண்ண மேக்ஸ் புக் தவிர இங்கே எதுவுமே இல்லையே…” என்று உரைத்துவிட்ட மறுகணம் அந்தப் புத்தகத்தை வேகமாய்ப் புரட்டினாள். உள்ளே இருந்த கடிதத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள்.

அவள் அந்தக் கடிதத்தை ஆர்வமாய்ப் பிரிக்க அது சக்திசெல்வன் அவளுக்காக எழுதி வைத்திருந்த கடிதம் என்பதை உணர்ந்து அவள் விழிகள் குற்றவுணர்ச்சியோடு சக்திசெல்வனை நோக்கியது. அவன் படி என்பது போல் மௌன பாஷையில் தெரிவிக்க, சிவசக்தி அதைத் தவிப்போடு படிக்கலானாள்.

“மை டியர் சக்தி,

முதல நான் உன்கிட்ட தேவையில்லாம கோபப்பட்டதுக்கு என்னை மன்னிச்சிடு… நான் ஏன் அப்படிச் செஞ்சன்னு அதற்கான காரணத்தை என்னால உனக்கு இப்போதைக்குத் தெளிவா சொல்லிப் புரிய வைக்க முடியாது.

என் மேலயும் என் காதல் மேலயும் உனக்கு நம்பிக்கை இருந்தா, எனக்காக ஒரே ஒரு வருஷம் நாம இரண்டு பேரும் பார்க்காம பேசிக்காம இருப்போம். ஏன் எதுக்குன்னு கேட்காதே?

அதுக்கான காரணத்தை இந்தப் பிரிவுக்குப் பிறகு வரப்போற நம்மோட அடுத்தச் சந்திப்பில் நிச்சயம் சொல்றேன். இப்போ நீ சொல்லாம விட்டதை அடுத்த மீட்டிங்ல கண்டிப்பா என்கிட்ட சொல்லனும்.

அந்த நாளுக்காக நான் காத்திட்டிருக்கேன். இந்த நேரத்தில என்னைப் பத்தி நீ கவலைப்படாம உன்னோட இலட்சியத்தை நோக்கிப் போகனும். புரிஞ்சிதா.

ஆல் தி பெஸ்ட்.

ஐ டெரிப்பளி மிஸ் யூ

-சக்திசெல்வன்”

என்று எழுதியிருந்ததைப் படித்துக் கொண்டிருக்கும் போதே அவள் கண்களில் கண்ணீர் அருவியாய் வழிந்தது. அந்தப் பிரம்மாஸ்திரம் அவளின் கோபத்தை முறியடித்து அவர்களின் காதல் போரை முற்றுப் பெறச் செய்தது.

34

காதல் மழையோ!

வெளியே இடி மின்னலால் போர் களமாய்க் காட்சியளித்த விண்ணகம் இப்போது மழையை வாரி இறைத்துப் பூமியை குளிர வைத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் சிவசக்தியும் அவள் செய்த தவறை எண்ணிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அவள் கோபமெல்லாம் கண்ணீராய் வெளியேறியது.

சக்திசெல்வன் அவளிடம் எவ்வளவோ சமாதானம் உரைத்தும் அது அவளுக்குள் குற்றவுணர்வையே அதிகமாய் ஏற்படுத்தியது. தான் ஏன் அவனையும், அவன் தூய்மையான காதலையும் இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் காயப்படுத்திக் கொண்டே இருக்கிறோம் என அவள் வேதனைக் கொள்ள,

சக்திசெல்வன், “சக்தி” என்று அழைத்து அவள் கன்னங்களைத் தாங்கியபடி “ப்ளீஸ் அழாதே… இந்த லெட்டரை நீ பார்க்காதது உன் மிஸ்டேக் இல்ல… புரியுதா?!” என்றான்.

“ஆனா நீங்க என்கிட்ட பேச வந்த போது நான் நீங்க சொல்ல வந்ததைக் கேட்காம இன்ஸல்ட் பன்ற மாதிரி பேசினேனே… அது பெரிய தப்புதானே… நீங்க என் காதல் மேல வைச்சிருந்த நம்பிக்கையை நான் உங்க காதல் மேல வைக்கலயே சக்தி… நான் உங்களைப் புரிஞ்சிக்காமலே ஏதேதோ பேசிட்டேன்… நான் உங்களுடைய காதலுக்குக் கொஞ்சம் கூடத் தகுதியானவளே இல்லை” என்றாள்.

“நீ என்னைப் புரிஞ்சிக்கலன்னு யார் சொன்னது… நான் கிஃப்ட் பண்ண வாட்ச்… அப்புறம் ஆனந்திக்கு அனுப்பின பாரதியார் கவிதைகள் புக்… இதெல்லாம் மூலமா நான் என்ன சொல்ல நினைச்சேன்னு அதை நீ கரெக்ட்டா புரிஞ்சிக்கிட்டியே” என்றான்.

“இதெல்லாம் உங்களுக்கு எப்படி?” என்று அவள் புருவங்கள் சுருங்கக் குழப்பமாய்க் கேட்க,

“ஜெயா சொன்னா… உன் வேதனை… தவிப்பு எல்லாத்தையுமே சொன்னா… அன்னைக்கு டெல்லி ஏர்போட்டில உன்கிட்ட பேசி இருப்பேன் சக்தி…

ஆனா எங்க அம்மா உன் காதல் மேல உனக்கு இவ்வளவுதான் நம்பிக்கையான்னு கேட்டிருப்பாங்க… அதனாலதான் நான் அப்படி நடந்துக்க வேண்டியதா போச்சு…

பட் என்னால உன் நிலைமையைப் புரிஞ்சிக்க முடிஞ்சிது… என் மேல உனக்கு இருக்கிற ஆழமான காதல் அப்படி உன்னை நடந்துக்க வைச்சிடுச்சு… இட்ஸ் ஒகே” என்று அவன் சமாதானம் செய்ய,

அவனின் புரிதல் அவளை நெகிழச் செய்ய, தழுதழுத்த குரலோடு,

“நான் உங்களை அவமானப்படுத்திப் பேசினதை எல்லாம் மறந்திட்டு… என் நிலைமையில் நின்னு யோசிச்சு என்னை இந்தளவுக்குப் புரிஞ்சிக்கிட்டீங்க… பெரிய விஷயம்… நான்தான் அறிவுக்கெட்டத்தனமா நடந்துக்கிட்டேன்… சாரி சக்தி… ஐம் எக்ஸ்ட்ரீம்லி சாரி பாஃர் தட்” என்றாள்.

“உன்கிட்ட இருந்து நான் காதலை மட்டும்தான் எதிர்பார்க்கிறேன்… மன்னிப்பை இல்ல…” என்று அவன் அழுத்தமாய் உரைத்தான்.

சிவசக்தி தன் கண்ணீரைத் துடைத்துவிட்டு சக்திசெல்வனை நோக்கி,

“நீங்க என்னைக் காதலிக்கிற அளவுக்கு நான் உங்களைக் காதலிக்கிறேனான்னு எனக்குத் தெரியல சக்தி… பட் ஐ லவ் யூ…

எந்த ஒரு காரணத்துக்காகவும் உங்களை நான் மிஸ் பண்ண விரும்பல… நான் உங்களுக்குத் தகுதியே இல்லாதவன்னு அன்னைக்கு உங்கம்மா சொன்னாங்க… அது உண்மையா கூட இருக்கலாம்…

ஆனா அதுக்காக எல்லாம் நான் வேறொரு பொண்ணுக்கு உங்களை விட்டுத்தர முடியாது… நெவர்

என் வாழ்நாள் முழுக்கவும்… உங்க காதல் எனக்கு வேணும்… அது எனக்கு மட்டுமே உரிமையானதா இருக்கனும்… வில் இட் பீ?!” என்று அவள் அவனிடம் கொஞ்சம் அதிகாரத்தோடு வினவ,

சக்திசெல்வன் அவளின் வார்த்தைகளால் நெகிழ்ந்தபடி அவள் நெற்றியில் தன் இதழ்களைப் பதித்தான்.

அந்த முத்தமே அவனின் காதலை அழுத்தமாய் உணர்த்திட அவன் அவள் விழிகளைப் பார்த்தபடி,

“என் மரணம் வரைக்கும் என் காதலுக்குத் தகுதியானவளும் நீதான்… உரிமையானவளும் நீதான்…” என்று சொன்னதும் சிவசக்தி பெருமிதத்தோடு அவன் மீது சாய்ந்து கொண்டு, ”தேங்கஸ் அ லாட்” என்றாள்.

சக்திசெல்வன் அவளை அணைத்தபடி,

“நீ என்கிட்ட உன் காதலை சொல்றது இது இரண்டாவது தடவை சக்தி… ஆனா முதல் தடவை அந்தப் போதையிலும் நீ என்கிட்ட காதலை சொன்ன அழகு இருக்கே…” என்று அவன் அந்த நாளை நினைவுகூர்ந்து உரைக்க,

சிவசக்தி குழப்பத்தோடு அவனை நிமிர்ந்து நோக்கி,

“எப்போ… அன்னைக்கு ஹோட்டல்லையா?” என்று கேட்டாள்.

அவள் முகத்தைப் பார்த்தபடி “ஏன்… அந்தக் கனவு உனக்கு ஞாபகத்தில் இல்லையா?!” என்று கேட்டான்.

சிவசக்திக்கு அன்று நடந்தவை எல்லாம் அவள் நினைவில் மேலோட்டமாய் இருக்க அவை எல்லாம் கனவு என்று தான் நினைத்தது பொய்யா என்று குழம்பினாள்.

அன்று சக்திசெல்வன் தன்னை அணைத்து முத்தம் தந்தது போன்ற உணர்வை இப்பொழுதும் அவள் மனம் நம்ப மறுத்தது. அப்படி உண்மையில் நடந்திருக்க வாய்ப்பில்லை. தான் அப்படி அரைமயக்க நிலையில் இருக்கும் போது சக்தி தன்னிடம் அப்படி நடந்துகொண்டிருக்க மாட்டார் என்ற மனப்போராட்டத்தில் அவள் இருந்த சமயத்தில் சக்திசெல்வனின் சுவாசத்தின் தீண்டல் அவள் சிந்தனையைத் தடைச் செய்தது.

அவன் அவளின் ரொம்பவும் அருகாமையில் நின்றுகொண்டிருக்க அதை இத்தனை நேரம் உணராத சிவசக்தி பதட்டத்தோடு விலகப் பார்க்க அவளை எந்தப்பக்கமும் நகரவிடாமல் சுவற்றோரமாய்த் தன் கரத்தால் அணைப் போட்டான்.

“சக்தி… ப்ளீஸ்… வழி விடுங்க” என்று தவிப்போடு அவள் கேட்க,

அவன் அதைப் பொருட்படுத்தாமல், “நீ இன்னும் நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லல சக்தி… அந்தக் கனவு உனக்கு ஞாபகத்தில் இருக்கா இல்லையா?” என்று கேள்வி எழுப்பினான்.

சிவசக்தி உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாமல் எப்படி நினைவிருப்பதாகச் சொல்வது என்று புரியாமல்,

“எனக்கு எதுவும் ஞாபகத்தில இல்ல சக்தி… என்னைப் போக விடுங்க” என்று சொல்லி அவள் அவன் பிடியிலிருந்து நழுவப் பார்க்க அது சுலபமான காரியமாக இல்லை.

“என்னை விட்டு நீ விலகிப் போகப் போக நான் இன்னும் நெருங்கி வருவேன்… ஸோ ஸ்டே வேர் யூ ஆர்” என்று அவன் அதிகாரமாகச் சொல்ல சிவசக்தி இயலாமையோடு சுவற்றில் தலைசாய்த்து நின்று கொண்டான்.

சிவசக்தி தவிப்போடு “ஏன் இப்படி எல்லாம் பன்றீங்க சக்தி… உங்களுக்கு என்னதான் வேணும்?” என்று கேட்டாள்.

“அன்னைக்கு ஹோட்டல் ரூம்ல என்ன நடந்ததுன்னு உனக்கு ஞாபகப்படுத்த போறேன்” என்று அவன் சொல்ல அவளுக்கு உடனே படபடப்பு ஏற்பட்டது.

தான் அந்தப் போதையில் என்னவெல்லாம் செய்தோமோ என்று எண்ணிக் கொண்டவள் அதை வேறு அவன் வாயாலேயே தெரிந்து கொள்வதா என நாணம் கொண்டு,

“இப்போ அதைப் பத்தி பேச வேண்டாமே… நாம கீழே போகலாமே” என்று கெஞ்சலாக உரைத்தாள்.

“ஷ்…” என்று அவன் அவளை அதட்டி விட்டுப் பேசக் கூடாதெனத் தலையசைத்தான்.

பின்னர் அவளின் இதயத் துடிப்போடு சேர்ந்து படபடவெனத் துடிக்கும் விழிகளின் நாணத்தைக் காதலோடு ரசித்தபடி

“நீ போதையில ஹோட்டல் வாசலில் உட்கார்ந்து உள்ளே வரமாட்டேன்னு அடம்பிடிச்சியா… நான் உன்னைத் தூக்கிட்டு வந்து பெட்ல படுக்க வைக்க… என்னை விலகிப் போகவிடாம நீ என் சட்டையைப் பிடிச்சி பக்கத்தில இழுத்து…” என்று சொல்லியபடி சக்தி சிவசக்தியை நெருங்க,

அவள் அவனை நெருங்கவிடாமல் கைகளால் தடுத்தபடி,

“ஸ்டாப் இட் சக்தி… போதும்… நீங்க பொய் சொல்றீங்க… நான் நம்பமாட்டேன்…” என்றாள்.

சக்திசெல்வன் இப்போது கோபத் தொனியில் ”எதுடி பொய்… நல்லா யோசிச்சு பாரு… நான் உன்னைத் தூக்கிட்டு வந்து பெட்ல படுக்க வைக்கல… என் சட்டையைப் பிடிச்சி இழுத்து நீ பட்டனை அறுக்கல?!” என்று கேட்டான்.

சிவசக்தியின் மனம் அன்று படுக்கையில் கிடைத்த பட்டனை பற்றி நினைவுக்கு வர என்ன நடந்திருக்கும் எனக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாமல் தவிப்போடு மௌனமாய் நிற்கக் கனவில் தான் அவனைக் கட்டியணைத்துக் கொண்டதெல்லாம் நிஜமா என எண்ணியபடி அவனை நோக்கினாள்.

அவளின் அமைதியைச் சாதகமாய்க் கொண்டு அவன் மேலும், “என் வாழ்க்கையிலேயே என்னால மறக்க முடியாது நாள் அதுதான்” என்று அவன் உரைத்த மறுகணம் சிவசக்தி தன் மனதில் எழுந்த பலவிதமான சந்தேகங்களால் புரியாமல், “ஏன்?” என்று வினவினாள்.

“நீ அன்னைக்கு என் கிட்ட வந்து என்னக் கேட்டன்னு மறந்திட்டியா?” என்று சக்திசெல்வன் மேலும் மேலும் சிவசக்தியை தவிப்புறச் செய்ய,

அவள் புரியாமல் என்ன நிகழ்ந்திருக்கும் எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், “நான் என்ன கேட்டேன் சக்தி?” என்றாள்.

“நீ கேட்ட முத்தத்தையும் மறந்திட்ட… நான் உனக்குக் கொடுத்த முத்தத்தையும் மறந்திட்டியா?” என்று சொன்ன மறுகணமே அவள் தம் விழிகளை அகலவிரித்தாள்.

அப்போது கனவென்று சொல்லித் தான் ஆறுதல் செய்து கொண்ட விஷயம் தனக்கு உண்மையிலேயே நடந்தேறிய நிகழ்வா என்ற வேதனையோடு சக்திசெல்வன் மீது கொண்ட அழுத்தமான நம்பிக்கை நொறுங்கிப் போனதை தாங்க இயலாமல்,

அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட, “ஆ… எதுக்குடி அடிச்ச” என்று சிவசக்தியின் செயலைக் கண்டு சக்தி அதிர்ந்தான்.

பின்னர்ச் சிவசக்தி அதே கோபத்தோடு சக்திசெல்வனை நோக்கி,

“நான் போதையில் இருந்தேன்… ஆனா நீங்க தெளிவாதானே இருந்தீங்க… கொஞ்சமாச்சும் புத்தி வேண்டாம்… எப்படி அறை மயக்கத்தில இருந்த எனக்கு நீங்க முத்தம் கொடுக்கலாம்…

நான் உங்க மேல வைச்சிருந்த நம்பிக்கையைத் தூள் தூளாய் நொறுக்கிட்டீங்க… நல்லா கிடைச்ச சந்தர்ப்பத்தை யூஸ் பண்ணிக்கிட்டீங்க இல்ல… தெரியாமதான் கேட்கிறேன்… வெறும் முத்தம் மட்டும்தான் கொடுத்தீங்களா… இல்ல” என்று அவள் கேட்க அவன் முகமெல்லாம் கோபத்தில் சிவக்க உதடெல்லாம் துடித்தது.

மறுகணமே சக்திசெல்வன் கட்டுப்படுத்த முடியாத அளவில்லாத கோபத்தால் சிவசக்தியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

அவள் அவனின் எதிர்பாராத அடியால் அப்படியே உறைந்து போய் நின்றாள். உடனடியாக அவள் கண்களில் நீர் பெருகிவிட அந்தக் காட்சியைப் பார்த்ததும் அவனுக்கும் வேதனை தொற்றிக் கொண்டாலும் அவளின் வார்த்தைகளைக் கேட்டு ரொம்பவும் காயப்பட்டவனாய் அவளின் கரத்தை பிடித்து இழுத்து,

“உன் கோபத்தில நியாயம் இருக்கு சக்தி… ஆனா என்னைப் பார்த்து நீ சந்தர்ப்பத்தை யூஸ் பண்ணிக்கிட்டியான்னு கேட்ட பார்த்தியா… அது நியாயமே இல்ல… நான் செஞ்சதை சரின்னு நான் சொல்லவே இல்ல… அதே சமயத்தில அன்னைக்கு என்ன நடந்ததுன்னு முதல நீ தெரிஞ்சிக்கோ…” என்று அவன் சீற்றத்தோடு உறைக்க,

இதுவரை அவள் பார்த்திடாத சக்திசெல்வனின் இன்னொரு அவதாரம். அவளின் கன்னம் விண்விண்னென்று வலிக்க அவனின் பிடி அவளின் மிருதுவான கரத்தின் ரத்த ஓட்டத்தை நிறுத்திவிடும் போலத் தோன்றியது. இதுவரை அவன் கொண்டதெல்லாம் கோபமே இல்லை என்பது போல முற்றிலும் உக்கிரமான கோலத்தில் அவன் நின்றிருக்க அவள் பதில்பேசாமல் மௌனமாய் நின்றாள்.

சிறிது நேரம் அவளைச் பார்வையினாலேயே சுட்டெரத்து விடுவது போலப் பார்த்தவன் பின்னர் அவளைப் பார்க்க விரும்பாமல் அவள் கரத்தை விடுத்து விலகி வந்து,

“நீ அரை மயக்கத்தில இருக்கும் போது உன் கூட ஒரே அறையில கூட இருந்தா தப்பாயிடுமோன்னு என் ஹோட்டல் ஸ்டாஃப்ஸை உன்னைப் பாத்துக்கச் சொல்லிட்டு கிளம்பிப் போனேன்… ஆனா நீதான் நிதானத்தில் இருக்கும் போதே யாருக்கும் அடங்க மாட்டியே… இதுல போதை வேற… நீ செஞ்ச கலட்டாவால என் ஹோட்டல் ஸ்டாஃப்ஸால உன்னைச் சமாளிக்கவே முடியல…

வேற வழி இல்லாம திரும்பவும் நான் ரூமுக்கு வர வேண்டியதா போச்சு… நான் பாட்டுக்கு உன்னைப் பெட்ல படுக்க வைச்சிட்டுப் போயிருப்பேன்… நீதான் என்னைப் போகவிடாம என்னை வலிய இழுத்து வம்புப் பண்ணி… விலகி விலகிப் போனவனை முத்தம் கொடுக்க வைச்ச…

இப்போ எல்லாத் தப்பையும் என் மேல முழுசாப் போட பார்க்கிற… இதென்னடி நியாயம்?… அன்னைக்கு நீ இருந்த நிலைமைக்கு நான் நினைச்சிருந்தா எப்படி வேணா நடந்திருக்கலாம்… ஆனா நான் அப்படிப்பட்டவனாடி?

ஒரே வீட்டில ஒண்ணா இருந்த போது கூட உன்னைத் தப்பான ஒரு பார்வை பாத்திருக்கேன்னா? புத்தி இருக்கான்னு என்னைப் பார்த்து கேட்டியே? அது உனக்கு இருக்காடி? கோபம் வந்தா யார்கிட்ட என்ன பேசிறோன்னு கூடவா யோசிக்க மாட்ட…

நான் உன்னைக் காதலிக்கிறேன் இடியட்… அப்படி ஒரு நாளும் நான் உன் பெண்மையையும் கலங்கப்படுத்தி… என் காதலையும் கலங்கப்படுத்திக்க மாட்டேன்…

நீ அடிச்சது கூடப் பரவாயில்லடி… ஆனா தப்பா நினைச்சுப் பேசின பார்த்தியா… அதை நான் மன்னிக்கவே மாட்டேன்… உன் விஷயத்தில் நானும் ரொம்பப் பொறுமையா இருந்திட்டேன்…

பட் திஸ் டைம் ஐ கான்ட் டாலரேட்… காதலுக்காக எதை வேணா விட்டுக் கொடுப்பேன்… பட் என் டிக்னிட்டிய… நோ வே… இனிமே என் முகத்தில கூட நீ விழிக்காதே… குட் பை” என்று சொல்லிவிட்டு உணர்ச்சி வேகத்தில் அந்த அறையை விட்டு கோபத்தோடு வெளியேறப் பார்க்க,

சிவசக்தி அவனை வழிமறித்து நின்று, “சக்தி ப்ளீஸ்… ஒரே நிமிஷம் நான் சொல்றதை கேட்டுட்டு போங்க… கிவ் மீ லாஸ்ட் சேன்ஸ்” என்று குற்றவுணர்வில் கெஞ்சியபடி நின்றிருந்தவளை,

சக்திசெல்வன் கோபம் கலந்த பார்வையோடு, “லாஸ்ட் சேன்ஸ்… உனக்கா… எதுக்கு… திரும்பியும் நீ என்னைக் காயப்படுத்தவா… ஒரு விஷயத்தைப் புரிஞ்சிக்கோ… காதலுக்கு ரொம்ப முக்கியம் நம்பிக்கை… அந்த அடிப்படை நம்பிக்கையே உன்கிட்ட இல்லைன்னும் போது… உன்கிட்ட எல்லாம் பேசிறதே வேஸட்” என்றான்.

சிவசக்தி கண்ணீரோடு,“நான் உங்களை நம்பலன்னு யார் சொன்னது… உங்க மேல இருந்த கண்மூடித்தனமான நம்பிக்கைதான் எனக்குக் கோபமா மாறுச்சு… அதை முதலில் புரிஞ்சிக்கோங்க சக்தி… அன்னைக்கு நடந்ததெல்லாம் எனக்கு ஒரு சில விஷயங்கள் ஞாபகம் இருந்தது… நீங்க எனக்குக் கொடுத்த முத்தம் உட்பட” என்று சொல்லிவிட்டு சிவசக்தி பேசாமல் மௌனமாக,

சக்திசெல்வன் அதிர்ச்சியோடு, “அப்படின்னா… ஏன்டி எதுவும் ஞாபகம் இல்லைன்னு பொய் சொன்ன… எதுக்கு என்கிட்ட முன்னாடியே இதைப் பத்தி நீ கேட்கல ?” என்று கேட்டான்.

இப்போதும் அவன் கோபம் மாற்றமடையாமல் இருக்க அவள் கண்ணீரை துடைத்துக் கொண்டபடி,

“ஏன்னா… அப்படி ஒரு நாளும் நீங்க என்கிட்ட நடந்திட்டிருக்க மாட்டீங்கன்னு நான் ரொம்ப ஸ்டிராங்கா நம்பின சக்தி… அந்த இன்ஸிடன்ட் நிச்சயமா கனவாதான் இருக்க முடியும்னு என்னை நானே நம்ப வைச்சுக்கிட்டேன்…

பட் எப்போ அதெல்லாம் உண்மைன்னு நீங்களே சொன்னீங்களோ… அப்போ நான் உங்க மேல வைச்சிருந்த நம்பிக்கை உடைஞ்சி போன வேதனையில என்ன பேசிறதுன்னு தெரியாம வார்த்தையைக் கொட்டிட்டேன்…

இப்போதான் எனக்குப் புரியுது… நான்தான் அன்னைக்கு நடந்த எல்லத்துக்கும் காரணம்னு… எனக்கு ரொம்பக் கில்டியா இருக்கு… உங்க கிட்ட மன்னிப்பு கேட்கிற தகுதி கூட எனக்கில்ல…” என்று சொல்லி சிவசக்தி கண்ணீர் வடிக்க அவளின் ஆழமான நம்பிக்கையை உடைத்ததில் தன்பக்கமும் இருக்கும் தவறு இருப்பதை சக்திசெல்வன் உணர அவன் கோபமெல்லாம் நொடி நேரத்தில் கரைந்து போனது.

அவன் அப்படியே அவளின் பேச்சில் உறைந்து போய் நிற்க அவள் மீண்டும் அவன் விழிகளை நோக்கி, “திரும்பியும் உங்களைப் பிரிஞ்சிருக்கிற வேதனையை எனக்குக் கொடுக்காதீங்க ப்ளீஸ்… என்னால அதைத் தாங்கவே முடியாது…

நான் என் வாழ்க்கையில வரிசையாய் நிறைய இழப்புகளைச் சந்திச்சிட்டேன்… உங்களையும் நான் இழக்க விரும்பல… நான் தப்பு செஞ்சிருந்தன்னு தோணுச்சுன்னா இன்னும் இரண்டு அடி அடிச்சிருங்க… பட் ப்ளீஸ் என்னை விட்டு போறேன் மட்டும் சொல்லாதீங்க…” என்று சொல்லி கண்ணீரில் கரைந்தவளிடம் சக்திசெல்வன் சமாதானப்படுத்தும் விதமாய் அவளைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டு

“நோ சக்தி நெவர் இனிமே நான் அப்படிச் சொல்ல மாட்டேன்…” என்று சொல்லி அவளைத் தன்னுடைய இறுக்கமான அணைப்பில் வைத்திருந்தான்.

அவன் கண்களிலும் நீர்துளிர்த்திருக்க அவளைத் தன்னிடமிருந்து பிரித்து அவன் அடித்த அடியால் சிவந்து அவன் விரல்கள் பதிந்திருந்த கன்னத்தைத் தடவியபடி “ரொம்ப வலிக்குதா சக்தி?” என்று வேதனையோடு கேட்டான்.

சிவசக்தி புன்னகையோடு, “காதலோனோட முதல் முத்தம் மட்டுமில்லை… முதல் அடியும் சுகம்தான்” என்றாள்.

இப்படிச் சிவசக்தி சொல்ல சக்திசெல்வனுக்கு அன்று ஹோட்டலில் ஆவேசத்தில் அவளை அணைத்துக் கொடுத்த முத்தங்கள் நினைவுக்கு வர அவன் அவள் முகத்தைக் கூர்மையாய் நோக்கி,

“அன்னைக்கு நான் கொடுத்த கிஸஸ் ஞாபகம் இருக்கா?” என்று கேட்டான்.

சிவசக்தி பதில்பேச முடியாமல் ஆமாம் இல்லை என்று இருபுறமாய்த் தலையசைக்க அவன் குழப்பத்தோடு,

“இப்படி ரெண்டு பக்கமும் தலையாட்டினா நான் என்னடி புரிஞ்சிக்க?!” என்று கேட்டான்.

“இருக்கு… ஆனா இல்லை” என்றாள் புன்னகை ததும்ப!

சக்திசெல்வன் உடனே அவள் இடையைத் தன் கரத்தால் பிணைத்துக் கொண்டு,

“அப்படின்னா எப்பவும் நம்ம வாழ்க்கை முழுக்க நினைவிருக்கிற மாதிரி… ஒரு கிஸ் தரட்டுமா?” என்று கேட்க சிவசக்தி என்ன சொல்வதென்று புரியாமல் திகைத்தபடி அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சக்திசெல்வன் அவளின் கன்னத்தைத் தாங்கி முகத்தின் அருகாமையில் நெருங்கி

“இந்த மொமன்ட் நமக்கு ரொம்ப ஸ்பெஷல் சக்தி… நிறையப் போராட்டம், வலி, வேதனை எல்லாம் கடந்து நாம நம்ம காதலை அடைஞ்சிருக்கோம்… நம்ம லைஃப் முழுக்க இந்த நாள் அழுத்தமான ஞாபகமா பதிவாகனும்… நான் உனக்குக் கொடுத்த முதல் முத்தம்தான் ஏதோ உணர்ச்சிவசத்தால அவசர கதியில் நடந்திடுச்சு.

ஆனா இந்தச் சேன்ஸை நான் மிஸ் பண்ண விரும்பல… ஐ வான்ட் திஸ் மொமன்ட் சக்தி… ப்ளீஸ்… லெட் மீ…” என்று சொல்லியபடி சக்திசெல்வனின் இதழ்கள் அவளின் இதழ்களை நெருங்கி அனுமதி கேட்டுக் காத்திருக்க,

அதற்கு மேல் தவிர்க்கவே முடியாமல் அவள் தன் இமைகளால் ஆமோதித்துச் சம்மதம் சொல்ல, அவன் காத்திருந்து கிடைத்த அந்த அழகிய தருணத்தைத் தனதாக்கிக் கொண்டான்.

இருவருக்குமான இடைவெளி மொத்தமாய் நீங்கிட, அவன் தன் காதலுடன் கூடிய நம்பிக்கையை அவனின் இதழ்களால் அவளின் இதயத்திற்கு ஆழமாய் விவரித்துவிட்டான்.

மழை பெய்து ஓய்ந்த அந்த நிசப்தமான சூழலில் அவர்கள் ஒருவருக்குள் ஒருவர் முழுவதுமாய்த் தொலைந்து போக அந்தச் சமயம் பார்த்து திவ்யா, “சக்தி” என்று அழைத்தாள்.

அந்தக் குரல் இருவரையும் மீட்டெடுத்தது. சக்திசெல்வன் அவன் பிடியை விலக்கிக் கொள்ள அவசரமாய்ச் சிவசக்தி கதவருகே வந்து நின்று கொண்டாள்.

சிவசக்தி அவன் அளித்த முத்தத்தின் தாக்கத்தால் திவ்யாவை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தவிக்க, “மழைதான் நின்னுடுச்சே… கீழே வர வேண்டியதுதானே” என்று கேட்டாள் திவ்யா.

சிவசக்தி தடுமாற்றத்தோடு, “வர்றேன்… அண்ணி” என்று சொல்ல திவ்யா முன்னேறிச் சென்றாள்.

“இவ்வளவு சீக்கிரம் இந்த மழை நின்றிருக்க வேண்டாமே” என்று சக்திசெல்வன் ஏக்கத்தோடு உரைக்க,

“இப்போதைக்கு இந்த மழை போதும்” என்று சொல்லிவிட்டு அவள் அவனைத் திரும்பி பார்க்க முடியாமல் அகன்றாள்.

சக்திசெல்வன் அந்த அறையை விட்டு வெளியே வந்து நின்றபடி அந்த நிற்காத தூரலின் தீண்டலை ரசித்தான். ஒவ்வொருமுறையும் இயற்கை அவன் காதலுக்கான அழகான சூழலை ஏற்படுத்தி அவனைச் சிலிர்ப்பில் ஆழ்த்திவிடுகிறது.

பருவகால மாற்றங்கள் அவர்களின் காதலிலுமே உண்டு. கடும் வெயில் மறைந்து இப்போது கனமழைப் பொழிந்து குளிர்விக்க, விரைவில் அவர்கள் வாழ்வில் வசந்த காலமும் தோன்றிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content