You don't have javascript enabled
RomanceRomantic comedy

Vithai-1

விதையென வீழ்ந்து விருட்சமென எழுந்த காதல்

முன்னுரை:

வணக்கம் மக்களே! நான் சிவரஞ்ஜனி குமாரவடிவேலு. இது என்னுடைய முதல் நாவல்.  இது முழுக்க முழுக்க கற்பனைக் கதை. நகைச்சுவை கலந்த உணர்வுபூர்வமான அழகிய காதல் கதை.  உங்களின் மனதினை மகிழ்விக்கும் என்று நம்புகிறேன்.

அன்புடன்,

 சிவரஞ்ஜனி குமாரவடிவேலு

விதை 1

 அதிதி:  இவள்தான்  நம் கதையின் நாயகி. அன்பானவள். பண்பானவள். ஓரளவு  அழகானவள். மன நல மருத்துவர். எனவே  மருகும் மற்றவர் மனதினை சாந்தப்படுத்துவதில் கைதேர்ந்தவள்.

ஆனால் பாவம் தன் மனதில் அடிக்கப்  போகும் புயலினை  சாந்தப்படுத்தும் வழி அறியாமல் தவிக்கப்  போகிறோம்  என்று ஒரு போதும் நினைத்திருக்கவில்லை  அவள்.

  வந்தனா: அதிதியின்  உயிர்த் தோழி, அவள் மனித   மூளையைப் படித்த  சமயத்தில்  இவள் கணினி  மூளையைப்  படித்தாள். மென் பொருளாளினி. இருக்கும் இடத்தை  இன்ப மயமாக்கும்  கலகல டைப். சற்றே வெறி ஏற்றினால்  லகலக டைப் ஆகி விடுவாள். இருவரும் பள்ளிப்  பருவத் தோழிகள்.

ஒரு நாள் இருவரும் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தனர். நடுவழியில்  நச்சென்று நின்றது. இறங்கி பெட்ரோலிலிருந்து  அவர்களுக்கு  தெரிந்த அனைத்தையும் பரிசோதித்துப்  பார்த்துவிட்டனர். வண்டி சண்டித்தனம் செய்து ஸ்டார்ட்  ஆக மறுத்தது.

   “ஏய்! எரும! ஒரு  வண்டியக் கூட ஒழுங்கா வச்சுக்க  மாட்ட. உன்ன மாதிரிதான  உன் வண்டியும்  இருக்கும்.

போயும்  போயும் உன்ன நம்பி வந்தேன் பாரு, உன் ஹீல்ஸாலயே என்னை அடிச்சுக்கணும்!” என்று புலம்பித் தள்ளினாள் அதிதி.

     “அடியேய்!  இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன். வண்டி நொண்டினா நான் என்னடி பண்ணுவேன். எனக்கென்ன  ஜோசியமா  தெரியும். எல்லார்கிட்டயும்  சாந்த  சொரூபி, என் கிட்ட மட்டும் சந்திரமுகி.

 இரு இரு உன்னை வச்சு செய்ற டைம் எனக்கும் வரும். அப்போ இருக்கு உனக்கு.” என்றாள் வந்தனா.

 “பேசியே  கொல்லாதடி. எனக்கு டைம் ஆச்சுடி. அங்க எல்லாரும் வெய்ட்  பண்ணிட்டு  இருப்பாங்க. இப்போ என்ன செய்ய?” என்று புலம்பினாள்  அதிதி.

 “சைக்கார்டிஸ்ட்  மேடம். என் கூட இருந்தா மூளையக் கழட்டி  வச்சிருவ போல. இன்னும் ஸ்கூல் பொண்ணு மாதிரியே இருக்க.

 எப்படித்தான்  உன்கிட்டலாம்  வந்து  தெளியுறாங்களோ? ஒரு வேளை, இந்த லூசுக்கு  நம்ம தேவலாம்னு ரெடி ஆயிட்றாங்களோ?” என்று வாரினாள் வந்தனா.

“எதுக்குடி என்னை இப்போ இப்டி ஓட்ற?”

“என்ன செய்யனு திருவிழால தொலைஞ்ச குழந்தை போல கேக்குற. ஓட்டாம கொஞ்சுவாங்களா? என் பிரண்டை வர சொல்லி, நான் வண்டிய ரெடி பண்ணிக்கிறேன். நீ ஒரு கால் டாக்ஸில போயிரு.”

 “உனக்குக் கொழுப்புடி. நீயும் வரணும்னுதானே நான் யோசிக்குறேன்.”

  இவ்வாறு இவர்கள் பேசிக்கொண்டிருந்த  போதே இவர்களைக்  கடந்து  சென்ற கார்  ஓரம்  கட்டி நின்றது. அதிலிருந்து  ஒருவன் இறங்கி இவர்களை நோக்கி  வந்தான்.

“வந்துடார்பா  ஹீரோ.” வந்தனா.

“என்னடி உளர்ற?” அதிதி

“பின்ன, உன்ன ஹீரோயின்னு இன்ட்ரோ குடுத்தாங்க. இப்டி ஒரு சுச்சுவேஷனஸ்ல இப்டி ஒரு ஆள் வந்தா அது ஹீரோதான. இப்போ ஒரு அல்லக்கை ப்ரண்டு இறங்குவான் பாரு”

  “அட,ஆமா! எப்படிடி  இவ்ளோ கரெக்ட்டா  சொன்ன”

  “காலம் காலமா  இதானேடி  நடக்குது. நம்ம ஸ்கூட்டி  சொதப்பல்  கூட, அந்த ரைட்டர் வேலடி. திட்றதா  இருந்தா அவங்களைத் திட்டு. பிட்வீன் ரெண்டும்  செம  ஸ்மார்ட்டா  இருக்குதுங்க”

   “ஏய்!  இப்டி அஃறிணை  போல பேசாதனு எவ்ளோ வாட்டி  சொல்றது. கூடவே ஜொள்ளை  கொஞ்சம் கம்மி  பண்ணு.”

  “வாட்ட்ட். ஜொள்ளா?!!!  கொன்றுவேன்  உன்ன. அந்தப் பன மரம்( ஹீரோ) இறங்கினதும், இந்தத் தென்ன மரத்துல(ஹீரோயின்)  ஸ்பார்க்  வந்தது தெரியாதுன்னு நெனச்சியா? இதுல என்னை சொல்றியா? அதிதி வாசி  அடக்கி  வாசி!

 இவ்வாறாக இருவரும் அவர்கள் வந்து நின்றதைக் கூட கவனிக்காமல்  வளவளத்துக் கொண்டிருந்தனர்.(வந்தானாமா நல்ல்லா  வருவமா  நீ)

அதில் ஒருவன் பொறுமை இழந்து,

“ஹலோ!  முனுமுனு  மேடம்ஸ்!  இங்க கொஞ்சம் பாருங்கோ” சொன்னவன்  வர்ஷன்

“என்ன வேணும், நய்யாண்டி நக்கீராஸ்?” ஸாத்சாத்  வந்தானா.

 “ஹேய்,சும்மா இருடி”.  அதிதி

 “டேய்!  நான் அப்போவே  சொன்னேன், வேணாம்னு .கேட்டியா, இதெல்லாம் நமக்குத் தேவையாடா? ஹெல்ப் பண்றானாம்  ஹெல்ப்பு.” வர்ஷன்

  “இதுவே இங்க ரெண்டு பாட்டிங்க  நிக்கட்டும் , இந்த கார் நின்னிருக்குமா?” வந்தனா

  “இப்போ நின்னிருக்கே!” வர்ஷன்

   “எவ்ளோ தைரியம் இருந்தா எங்களைப் பார்த்து பாட்டிங்கனு சொல்வீங்க?”

   “தப்புதான். போயும் போயும் உங்க கூட போய் பாட்டிங்கள இணை  வச்சுப் பேசிட்டேன்.”

     இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்க  அவர்கள் இருவரும் அடுத்தவர் கண்களில்  கரண்ட்  எடுப்பது  எப்படி என்று ஆராய்ச்சி செய்கிறார்களோ  என்று ஆராயும் வண்ணம் கண்களால் கட்டுண்டிருந்தனர்  சில கணங்கள்.

இருவரும் தத்தம்  நண்பரை  உலுக்க  சுய நினைவு பெற்றனர். பின்னர் ‘கண்ணாலே  காதல் கடிதம்’  என வர்ஷனும்  வந்தனாவும் ஒரு சேர பாட ஆரம்பித்து  நிறுத்தினர்.

மிக மெதுவாய்தான் பாடினர், தங்கள் தோழனை  மற்றும் தோழியை  ஓட்ட, ஆனால் அது அடுத்தவர் காதிலே விழ, இப்போது கண்களால் கட்டுண்டது  அவர்கள்.

    ‘கண்ணும் கண்ணும்  கொள்ளை அடித்தால்  காதல் என்று அர்த்தம்’ என்று வர்ஷனின்  கைபேசி கதறியதில் அனைவருமே நடப்பிற்கு வந்தனர்.

வர்ஷன் ஒரு ஓரமாக  சென்று கைபேசியை கவனித்தான்.

“உங்கள  எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே. பட் எங்கனுதான்  சரியா  ஞாபகம் வரல” என்றான் அமர், அதிதியை  நோக்கி. வந்தனா லேசாக முறைத்தாள்.

 “உங்க ப்ரண்ட்க்கு அவங்கள  பார்த்து சொல்லலைனு  பொறாமை போல, முறைக்குறாங்க”

  “ஹலோ! எந்த ஆமையும்  இல்ல, முயலும்  இல்ல. எவ்ளோ நாளைக்குத்தான்  இந்த ஓல்டு ட்ரெண்டை  வெச்சிட்டு, நூல் விடுவீங்களோனு  யோசிச்சேன், முறைச்சேன்”

  “அப்போ நூல் விடறது  ப்ராப்லம் இல்ல. ஓல்டு ட்ரெண்டுதான்  ப்ராப்லமா?”

   “சோ நூல் விடறீங்கன்னு  ஒத்துக்குறீங்க?”

   “அடியேய்!  கொஞ்ச நேரம் பேசாம  இருடி, அவர் ஹெல்ப் செய்யத்தான்  வந்திருக்கார்.

    “ரொம்ம்ம்ப தேங்கஸ்ங்க, நீங்களாச்சும்  நம்பினீங்களே”

    “எனக்கும்  உங்களை எங்கயோ பார்த்திருக்கேன்னு தோணுச்சு. அப்போதான் ஞாபகம் வந்துச்சு. ரெண்டு மூணு தடவ இப்டி ஹெல்ப் செய்யறதை  பார்த்திருக்கேன். அவங்க யாரும் வயசுப் பொண்ணுங்க இல்ல.” என்று கூறி சிரித்தாள்.

    “எக்சாக்ட்லி !  நான் பொதுவா , உங்க ப்ரண்டு மாதிரி ஆளுங்களுக்கு  யோசிச்சே  எந்தப்  பொண்ணுங்களுக்கும் வான்டேடா  போயி ஹெல்ப் செய்ய மாட்டேன். பட் என்னமோ தெரில. உங்களப் பார்த்துட்டு  அப்டி போக முடில. சரி அது போகட்டும். என்ன பிராப்லம்.”

    “வண்டி நின்னுபோச்சு. ஸ்டார்ட் ஆகல. நாங்க அவசரமா போகணும்”

    “எங்க போகணும்?”

  “மேடவாக்கம் “

    “நாங்களும் அங்கதான் போறோம். என் டிரைவர் வச்சு வண்டி  ரெடி பண்ணிக்கலாம். வாங்க நான் உங்கள ட்ராப் பண்றேன்.”

அவள் சற்றும் யோசிக்காமல்  சரி என்றாள். அவளுக்கு அவன் மேல் அவளையும் அறியாமல் அதீத நம்பிக்கை, ஒரு ஈர்ப்பு, அவனைக் காணும் போது ஒரு பரவசம்  இதெல்லாம் வந்து அவள் இதயத்தில் இதம் சேர்த்தது. ஆனால் இதற்கெல்லாம் பின்னால் ஒரு வலிமையான காரணம் இருக்கும் என்றோ, அக்காரணம் அறியும்  வேளையில், அவள் இதயம் இடி சுமந்து நொறுங்கும்  என்றோ அவள் அப்போது அறிந்திருக்கவில்லை பாவம்.

 ட்ரைவரிடம் ஸ்கூட்டியை  ஒப்படைத்துவிட்டு, போகும் வழியில் ஒரு மெக்கானிக் ஷெட்டில் சொல்லிவிட்டுச் செல்லலாம் என்று முடிவு செய்து, அனைவரும் காரில் ஏறினர். வந்தனாவுக்கு தன் தோழியின் செயல் ஆச்சர்யமும் அதிர்ச்சியும்  தந்தாலும் நேரத்தைக்  கருத்தில்  கொண்டு அவளும் எதுவும் பேசவில்லை வந்த வர்ஷனிடமும் விளக்கிவிட்டுப் புறப்பட்டனர்.

    “மேடவாக்கத்துல எங்க போகணும்?”  அமர்

    “ஆதித்யா  கவுன்செலிங் சென்டர்.”  அதிதி

    “நல்ல சாய்ஸ். பட் அங்க உள்ள சைக்கார்ட்டிஸ்ட நெனச்சாதான்  ரொம்ப கவலையா  இருக்கு. அவரை  உங்க ப்ரண்டு, ட்ரீட்மெண்ட்  குடுக்கறத விட்டிட்டு  ட்ரீட்மெண்ட் எடுக்கற நிலைக்குத்  தள்ளிருவாங்க.”  வர்ஷன்

      “ஹலோ!  நானும் அப்போ இருந்து பார்க்கறேன். ரொம்ப ஓவரா  பேசுறீங்க. முன்ன பின்ன தெரியாத பொண்ணுகிட்ட  கன்னா பின்னான்னு  பேசற உங்களுக்குத்தான்  ஹெவி ட்ரீட்மெண்ட் தேவை”. வந்தனா

“டேய்!  சும்மா  இறேன்டா!”

“நாங்களும் அங்கதாங்க  போறோம். அங்க எதுக்குங்க  போறீங்க?”

“உங்க ப்ரண்டு மாதிரி லூசா  இருக்கறவங்கள டைட்டாக்க  போறோம்”

 “வந்தனா ப்ளீஸ்”  என்று  அதிதியும்

“ஏங்க ப்ளீஸ்”  என்று அமரும்  ஒரு சேர, சற்றே காட்டமான  கண்டன  குரலில்  அதட்டினர். வந்தனாவிற்கு, தன் தோழியின் எண்ணம்  திண்ணமாய்  மூளையில் எட்ட,

    “ஐம் ஸோ சாரிடி, ஐ டிடின்ட்  மீன் தட். நான் ஒரே ஒரு ஜீவனைத்தான்  சொல்ல நெனைச்சேன். பட் அப்டி சொல்லிட்டேன்,” என்று வர்ஷனை நோக்கியவாறே நோக்கினாள்.

       “ஒரு ஜீவன் டைட் பண்ண முடியாத அளவுக்கு  எக்குத்தப்பா எல்லாமே லூசாயி  கிடக்கு பாவம்”

     அவளும் நோக்கினாள், அண்ணலும் நோக்கினான்.

     “டேய்!  கொஞ்சம் சும்மா இருக்கியா ப்ளீஸ்!  ”  அமர்

     “உங்க பேர் என்னங்க?”  அமர் ரியர்  வ்யூவில்  வந்தனாவைப் பார்த்து கேட்டான்.

     “நான் வந்தனா, இவ அதிதி”  என்று இருவரையும் அறிமுகம் செய்தாள்.

     “மேரேஜ் ஆயிடுச்சா”  அமர் ஒரு முறைப்பு பதிலாக  வந்தது.

    “உங்கள மிஸ்னு, கூப்பிடவா  இல்ல மிஸஸ்னு கூப்பிடவா,அதுக்குதான்  கேட்டேன் ” அமர்

“மிஸ்ஸ்ஸ்ஸ்னே கூப்டுங்க” அழுத்தம் திருத்தமாக  வந்தது பதில்.

 “மிஸ். வந்தனா!  நீங்க என் பிரண்டை கலாய்ச்சதுக்கு நான் கோபப்படல. பட் கவுன்சிலிங் சென்டெர்க்கு போறவங்களாம் லூசுன்னு சொன்ன மாதிரி இருந்துச்சு உங்க பேச்சு. என்னால அதை தாங்கவே முடிலங்க.

   உடம்புக்கு  தலைவலி, சளி, காய்ச்சல்னு வரது போலத்தான் மனசுக சில பிரச்சினைகள்  வருது. சில பேர்க்கு  அவங்க கடந்து வந்த சூழல் காரணமா கொஞ்சம் கடுமையா  வருது. அதுக்காக அவங்களை எந்த வகைலயும் குறைச்சு  பேசறதை என்னால கொஞ்சமும்  ஏத்துக்க முடியாதுங்க.

இன்னொரு தடவ இந்த மாதிரி எங்கயும்  பேசாதீங்க.இட்ஸ் மை ஹம்பில் ரிக்வஸ்ட்.”   அமர்

 அதிதியும் அச்சு  பிசகாமல் இதையேதான்  சொல்வாள். எனவே இருவரும் அவன் சொல்வதைக் கேட்டு வாயில்  வாலி பால் போகுமளவு  பிளந்தனர்.

 அதிதிக்கு  அவன்மேல்  பன்மடங்கு  மரியாதை கூடியது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ரியர் வ்யூவில் பார்த்தவன்,

   “என்னங்க அப்டி ஒரு ஆச்சர்ய  பார்வை பாக்குறீங்க ரெண்டுபேரும்” அமர்.

    “அதிதி, புல்ஸ்டாப், கமா மாறாம  இதையேதான் சொல்வா அதான்” வந்தனா. அவன் கண்ணில் மின்னல்.அகம் மலர்ந்தது முகத்தில் மென் நகையாய்

ஒளிர்ந்தது. வர்ஷனுமே அதிர்ந்து பார்த்தான்.ஆனால் அதன் பின்னர் யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் எதற்காக  இவர்கள்  அங்கு செல்கிறார்கள்  என அனைவருமே ஆழ்ந்து  சிந்தித்துக்கொண்டு  சென்றனர்.

 அங்கு அனைவருக்குமே  அதிர்ச்சி  காத்திருந்தது.

 யார் இவர்கள். எதற்காக அங்கே செல்கிறார்கள். அப்படி என்ன அதிர்ச்சி அங்கே காத்திருக்கிறது? தெரிந்துகொள்ளக்  காத்திருப்போம்.              

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content