You don't have javascript enabled
Monisha NovelsRomantic thriller

Iru thruvangal -21to25

21

கோவா

வழி நெடுக தென்னை மரங்கள். ஒயாமல் கேட்கும் அலையின் ஒசை. பரந்து விரிந்த கடல்களில் மிதக்கும் கப்பல்கள். தடையில்லாமல் எங்கும் விற்பனையாகும் மதுபானங்கள். வடநாட்டவர்கள், அயல் நாட்டவர்கள் எங்கும் சூழ்ந்திருக்கத் தமிழர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தனர்.

கோவாவில் உள்ள அகோண்டா கடற்கரை கற்பாறையின் மீது வேணு மகாதேவன் கம்பீரமாய் அமர்ந்திருந்தான். சிவா சிலை போல கால்கள் மணலில் புதைய நின்றிருந்தான்.

இந்தக் கேஸில் சின்ன க்ளூ கூடக் கிடைக்க மாட்டேங்குது சிவா… ஏதாவது மோட்டிவிற்கான வாய்ப்பும் இருப்பதாகத் தெரியல… ரொம்பவும் குழப்பமா இருக்கு. சம்டைம்ஸ் இது நாம கொலையென்று தேவையில்லாம சந்தேகம் படுகிறோமோனு தோணுது… வாட் டு யு திங்க்?என்று வேணு மகாதேவன் சொல்ல சிவா அதைக் கவனிக்காமல் வேறு ஏதோ ஆழமான யோசனையில் இருந்தான்.

சிவாஎன்று மீண்டும் வேணு உரக்க அழைக்க அவன் சிந்தனை தடைபட்டன.

சொல்லுங்க சார்

என்ன டீப் திங்கிங்?

எம். வி. டி பாஃக்டரி… அங்க நடப்பது எதுவும் எனக்குச் சரியாப்படல. அமரேஷ் லிக்கர் பாஃக்டரிக்கு போட்டியான கம்பெனி என்பதற்காக மட்டும் சொல்லவில்லை.

 நம்முடைய விசாரணையை எதிர்பார்த்தது போலவே எம். டி அவினாஷோட பதில்கள் இருந்தது. இவை எல்லாம் தாண்டி அங்கே நடப்பதையெல்லாம் பார்த்தால்… சம்திங் பிஷ்ஷி என்றான்.

கம்மான் சிவா… அந்தக் கம்பெனி பெரிய அரசியல்வாதியுடையது. அவினாஷ் அவற்றிற்கு உரிமையானவன் அல்ல… அவன் வெறும் பினாமி.

 அங்கே நடப்பவற்றை நாம் கேள்வி கேட்க முடியாது… அது நம்ம அதிகாரத்தை மீறியது. மோர் ஓவர் அமரேஷ் ஃபாக்டரியை அவங்க போட்டியாக நினைப்பதாகத் தெரியவில்லை.

 தேர் இஸ் நோ மோட்டிவ்… என்னோட தாட் எல்லாம் கேத்ரீனின் டாக்டர் ஷீலா சொன்னதுதான். அவளுக்கு டிரிங்க்ஸ் அலர்ஜினும், குடித்தால் போதை தலைக்கேறி எல்லைகளை மீறி நடந்து கொள்வாள் என்று சொன்னாங்களே

எஸ்… அதுவும் பெரிய குழப்பம்தான்… அலர்ஜினு தெரிந்து தன்னோட லிமிட் மீறாதவள், அன்று ஏன் அளவை மீறி டிரிங்க்ஸ் சாப்பிடணும்?என்றான் சிவா

அவளுக்கு அஃபைர் யாராவது இருந்திருக்கலாம்… ஆனால் அதுவும் புதிராகவே இருக்கு சிவா

கேத்ரீனோட வீட்டைத் தேடி பார்த்தால் ஏதாவது க்ளூ கிடைக்கலாம் என்றான் சிவா.

இப்படி இவர்கள் தங்களுக்குள்ளே விவாதித்துக் கொண்டிருக்க அவர்களின் பின்னோடு வந்த ஒருவன் காடி ரெடி சாப்(வண்டி ரெடி சார்)என்றான் ஹிந்தியில்.

தன் புதையுண்ட கால்களை உதறியபடி சிவா செல்ல, பின்னோடு வேணு எதையோ யோசித்தபடி நடந்து வந்தான்.

விந்தியா இரவு வெகுநேரம் கழித்து வீட்டை அடைந்தாள். அவள் ரொம்பவும் சோர்வாய் காணப்பட்டாள். சண்முகம் அவளைப் பார்த்தவுடன், சாப்பிட வாங்கம்மாஎன்றான்.

வேண்டாண்ணா… சூடா காபி மட்டும் ரூமுக்கு கொண்டு வாங்க… தலைவலியா இருக்கு

ஐயா வரலியாம்மா?

இல்லண்ணா… மாமா ஆடிட்டிங் வேலையை முடிச்சுட்டு வர்றேன் சொன்னாரு. என்னால முடியல… நான் புறப்பட்டு வந்துட்டேன். மாமாவுக்குச் சாப்பாடு எல்லாம் எடுத்து வைக்க வேண்டாம்… அவர் வர லேட்டாகும்.

ஆதித்தியா வந்தாச்சா?என்றாள் விந்தியா.

வந்துட்டாரு… வந்ததிலிருந்து உங்களப் பத்திதான் விசாரிச்சாரும்மா

விந்தியா தலையாட்டிவிட்டு படியேறி மேலே நடந்தாள். எதிர்பாராமல் கால்கள் பின்ன அவள் மேலும் செல்ல முடியாமல் வலியுடன் படிக்கட்டின் மீது அமர்ந்து கொண்டாள்.

அவள் வேதனையோடு படிக்கெட்டின் மீது அமர்ந்திருக்க அதைப் பார்த்த சண்முகம் என்ன செய்வதென்று புரியாமல் வேகமாகச் சென்று ஆதித்தியாவின் அறைக்கதவை தட்டினான். ஆதித்தியா வெளியே வந்து விந்தியா வலியினால் வேதனைப்படுவதைக் கவனித்தான்.

தலையைத் தூக்கியே நடந்தா… கொஞ்சமாவது தரையைப் பாத்து நடக்கணும்என்று ஆதி கேலியாகச் சொன்னான்.

எதுக்கு இவரைக் கூட்டிட்டு வந்தீங்க… இவரு என்ன டாக்டரா… நீங்க டாக்டருக்கு போன் பண்ணுங்கண்ணாஎன்று சண்முகத்தைப் பார்த்து உரைத்தாள்.

இந்த நேரத்தில் எந்த டாக்டர் வருவாங்க மேடம்? அதுவுமில்லாம என்கிட்ட ஆயின்மென்ட் இருக்கு… அதை அப்ளை பண்ணா காலையில நார்மலாயிடும்

தட்ஸ் பெட்டர்… இப்பவே போய் ஆயின்மென்ட்டை எடுத்துட்டு வாங்கஎன்றாள் வலி பொறுக்கமுடியாமல்.

இங்கயேவா? கம்மான் ட்ரை பண்ணி எழுந்திரி… ரூமுக்குப் போகலாம்… நான் பிடிச்சிக்கிறேன்

இதான் சேன்ஸுனு என்னை டார்ச்சர் பண்ண பார்க்காதீங்க… என்னால ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது

ஆதித்தியா எவ்வளவு முயற்சி செய்தும் விந்தியா ஒரூ அடி கூட எடுத்து வைக்கமாட்டேன் என்று அடம் பிடித்தாள். ஆதித்தியா யோசித்து விட்டு சண்முகத்தைப் பார்த்தான்.

சண்முகம்… நீங்க போய்க் கொஞ்சம் ஐஸ் க்யூப்ஸ் எடுத்துட்டு வாங்கஎன்றான்.

விந்தியா அவன் என்ன செய்யப் போகிறான் என்று யூகிப்பதற்கு முன்பாகவே விந்தியாவைக் கைகளில் தூக்கிக் கொண்டான்.

ஆதி… நோ… விடுங்க பிளீஸ்என்று கதறினாள். அவள் பேசுவதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவளை அறைக்குள் தூக்கிச் சென்றான். அவள் தன்னுடைய இயலாமையால், அவனை எதுவும் செய்ய முடியாமல் அமைதியானாள்.

அவளை படுக்கையின் மீது லாவகமாய்ப் படுக்க வைத்துவிட்டு, கால்களில் சண்முகம் எடுத்துட்டு வந்த ஐஸ் க்யூப்ஸால் ஒத்தடம் வைத்தான். விந்தியா வேண்டுமென்று கத்திக்கொண்டிருக்க அவன் காதில் வாங்கிக் கொள்ளவதாக தெரியவில்லை. அவள் கால்களில் மருந்தும் தேய்த்துவிட்டு வலியை மறக்க மாத்திரையும் கொடுத்தான்.

விந்தியா அமைதி அடையாமல் சோபாவில் படுத்துக் கொள்கிறேன் என்று எழுந்தவள்,  அம்மாஎன்று அலறிக்கொண்டு தலையணையில் சாய்ந்து விட்டாள்.

இதென்ன மேஜிக்கா? மருந்து தடவினதும் குணமாக. அமைதியா படு. நான் உன் பக்கத்தில் படுக்கக் கூடாது… அவ்வளவுதானே. நான் சோபாவில் படுத்துக்கிறன்என்று சொல்லிவிட்டு தலையணையை எடுத்து சோபாவின் மீது போட்டு படுத்துக் கொண்டான்.

ஆதித்தியாவின் கண்ணியம் விந்தியாவை வியக்கச் செய்தது. சந்திரகாந்த் முதல் சிவா வரை எல்லோரும் ஆதியை பற்றிச் சொன்னவை உண்மை என்றால் இப்பொழுது தான் கண்ணெதிரே பார்ப்பது நடிப்பா? அப்படி இதுதான் ஆதியின் உண்மை முகம் என்றால் அப்பொழுது அவர்கள் சொன்னவை பொய்யா?’ என்று விந்தியா யோசிக்க அவளுக்குத் தலைசுற்றியது. சிலமணி நேரங்களுக்குப் பிறகு விந்தியா இந்தக் குழப்பத்தை மறந்தவளாய் உறங்கிப் போனாள்.

கோவாவில் பனாஜியில் இருந்த கேத்ரீனின் பிரமிக்க வைக்கும் வீட்டினுள் நம் இரு நண்பர்கள் சிவாவும் வேணுவும் அங்குள்ள ஏராளமான வேலையாட்களை விசாரித்தனர். கேத்ரீன் எல்லோரோடும் இயல்பாகப் பழகும் குணமுடையவள். இருப்பினும் சிறு தவறையும் மன்னிக்கும் மனப்பான்மை அற்றவள் என்பதும் நிதர்சனம் என்றனர்.

கேத்ரீனின் அறைக்குள் ஆறடிக்கு நிகராய் அவள் போட்டோ மாட்டி இருக்க இருவரும் அதைப் பார்த்தபடியே உள்ளே நுழைந்தனர். அந்த அறை சுற்றிலும் புத்தகங்கள் நிரம்பி இருந்தன. அங்கே அவர்கள் சந்தேகப்படும்படியாய் எந்த பொருளும் இல்லை.

ஆனால் அங்கே மூடியிருந்த லாக்கர் சிவாவின் மனதிற்குள் ஏதோ ஓர் உறுத்தலை ஏற்படுத்தியது. அதை திறக்க அவன் செய்த முயற்சிகள் யாவும் தோல்வியைத் தழுவி. அவர்கள் எங்கு தேடியும் கேத்ரீனின் பொருட்களில் சாவியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடைசியில் அந்த லாக்கரின் இன்னொரு சாவி கேத்ரீனின் லாயரிடம் இருப்பதாகத் தெரிய வர அவரையும் அங்கே சாவியுடன் வரவழைத்தனர்.

லாயர் ஜான் அந்த லாக்கரை தான் திறந்ததில்லை என்றும் அந்தச் சாவி வெறும் பாதுகாப்புக்காகக் கேத்ரீன் கொடுத்தாக உரைத்தான். இறுதியாகச் சாவி கிடைத்துவிட்ட திருப்தியில் சிவா அந்த லாக்கரை திறக்க அவனுக்கு ஏமாற்றமே மிச்சமாயிருந்தது. உள்ளே இருந்த இன்னொரு கதவில் ரகசிய எண் கேட்க அதன் சூட்சமம் தெரியாமல் எல்லோருமே விழித்தனர்.

22

கருணை பிறந்தது

கேத்ரீனின் லாக்கரின் ரகசிய எண் பற்றிப் பலரிடம் விசாரித்தும் பயன் அளிக்கவில்லை. கேத்ரீனின் உறவினர்கள் மும்பையில் உள்ள அவளின் நெருங்கிய தோழி மகிளாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறினர். அதன் காரணமாகச் சிவாவும், வேணுவும் மும்பையில் உள்ள மகிளாவை தொடர்பு கொண்டனர்.

அவளே தனிப்பட்ட முறையில் சில தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறாள். அதன் சார்பாக உதவி பெற டெல்லி வரை சென்றிருப்பதாகத் தெரியவந்தது. கேத்ரீனின் நட்பு வட்டாரம் ரொம்பவும் குறுகலானது. அப்படிப்பட்ட சிலரை கண்டுபிடிக்க அவளுடன் கல்லூரியில் படித்தவர்களின் பட்டியலை பெறுவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டனர். இந்தக் கேஸ் அவர்களை மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே கொண்டு சேர்த்தது.

விந்தியா உடல் சோர்வினாலும், காலில் ஏற்பட்ட காயத்தினாலும் விடிந்து வெகு நேரம் கழித்தே விழித்துக் கொண்டாள். இரவு நடந்தவை எல்லாம் கனவு போல தோன்றியது. நடந்தவற்றை நினைவுப்படுத்திக் கொண்டபடி மெல்ல எழுந்து கொண்டாள்.

அவள் காலில் ஏற்பட்டிருந்த வலி கிட்டத்தட்ட மாயமாய் மறைந்து போயிருந்தது. அவள் படிக்கட்டில் இறங்க போனதும் சண்முகம் பதறிக் கொண்டு ஓடி வந்து அவளை ஓய்வு எடுக்கச் சொன்னான்.

சந்திரகாந்தும் அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என கண்டிப்பாய் சொல்லிவிட்டு கிளம்பியதாகவும், ஆதித்தியாவும் வார்த்தை மாறாமல் அதையே சொல்லிவிட்டு புறப்பட்டாதாகவும் சண்முகம் உரைத்தார்.

விந்தியா தனியே அறையில் தவிர்க்க முடியாத சிந்தனைகளோடு அமர்ந்திருக்கக் கதவை தட்டிக் கொண்டு சுபா உள்ளே வந்தாள். விந்தியாவிற்கு உதவியாக இருக்கும்படி சந்திரகாந்த் தெரிவித்ததாகச் சொன்னாள்.

 சுபா வந்தது விந்தியாவிற்கும் நல்ல துணையாய் அமைந்தது. அவர்கள் இருவரும் ஏதெதோ பேசிக் கொண்டிருக்க விந்தியா ஆதித்தியாவை பற்றி அவள் மனதில் எழுந்த சந்தேகத்தைக் கேட்டாள்.

ஏன் சுபா… மாமாவுக்கும் ஆதிக்கும் அப்படி என்னதான் பிரச்சனை?” என்று விந்தியா தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டாள்.

அண்ணன் இப்படி எல்லாம் நடந்துக்க அங்கிளும் ஒரு காரணம்என்றாள் சுபா.

என்ன சொல்ற சுபா?”

அண்ணனுக்கு ஐந்து வயசு இருக்கும் போதே அம்மாவை பறிகொடுத்துட்டாரு. அப்போதிலிருந்தே அங்கிளுக்கு எல்லாவற்றிலும் இருந்த பிடிப்பும் விட்டுபோச்சு... அண்ணன் உட்பட.

அம்மாவை இழந்து அப்பாவோட கவனிப்பும் இல்லாம வளர்ந்துட்டாரு. அண்ணன் இப்படி பொறுப்பில்லாதவராய் அவரே தன்னை மாத்திகிட்டாருனு சொன்னா நம்புவீங்களா? அங்கிள் பேரன்ட்ஸ் மீட்டிங்னு கூப்பிட்டா கூட போகமாட்டாரு.

ஆனா அண்ணன் ஏதோ தப்பு செஞ்சிட்டாருனு சொன்னதும் அங்கிள் பதறிட்டு போய் நின்னாராம்… தான் தப்பு செய்தா மட்டும்தான் தன்னோட அப்பாவோட கவனம் நம்மீது இருக்கும்னு அண்ணன் இஷ்டத்துக்கு வேண்டுமென்றே தப்பு செய்வாராம்.

 கடைசியில் அதுவே அவரோட குணம்னு எல்லோருமே நம்பிட்டாங்க… அங்கிள் தன் தப்பை உணரும் போது அண்ணன் அவரை விட்டு ரொம்ப விலகி போயிருந்தார்என்று சுபா ஆதியின் வரலாற்றையே சொல்லி முடித்தாள்.

எனக்கு ஒரு விஷயம் புரியல… அன்னைக்கும் சரி… இன்னைக்குப் பேசும் போதும் சரி… நீ ஆதித்தியாவை விட்டுக் கொடுக்காம பேசுற… அப்பாவே புரிஞ்சுக்க முடியாத ஒருவரை உன்னால எப்படி இந்தளவுக்குப் புரிஞ்சுக்க முடியுது

என் வாழ்கையில் நடந்த ஒரு விஷயம்… இதுவரைக்கும் என் கணவரிடமும் என் அப்பா, அம்மாவிடம் கூடச் சொன்னதில்லை… முதல் முறையாய் உங்கக்கிட்ட சொல்லணும்னு தோணுதுஎன்றாள்.

சுபா இத்தனை பீடிகை போடுமளவிற்கு அப்படி என்ன சொல்லப் போகிறாள் என்று உற்று கவனித்துக் கொண்டிருந்தாள்.

நானும் அண்ணனை… அங்கிளும் அப்பாவும் சொல்வது போலதான் நம்பிட்டிருந்தேன். நான் காலேஜில் ஒரு பையனை சின்ஸியரா லவ் பண்ணினேன்.

அவன் கூட நான் இருப்பதைப் பாத்துட்டு அண்ணன் என்னைப் பலமுறை அவன் தப்பானவன்னு புரிய வைக்க முயற்சி செய்தாரு… ஆனா நான் அதைக் காதிலேயே வாங்கல… வயசுக் கோளாறு…

 என் நேரம் நல்லாருந்துச்சு… நானே அவனைப் பத்தி புரிஞ்சு விலகி போன போது அவன் என்னைத் துரத்தி துரத்தி டார்ச்சர் செய்தான்.

 கடைசியில் அண்ணன்தான் எனக்கு உதவினாரு… இத பத்தி அம்மா அப்பாகிட்ட மூச்சு விடக்கூடாதுனு சொல்லிட்டாரு… அதனால்தான் யாருக்குமே இந்த விஷயம் இப்ப வரைக்கும் நான் சொன்னதில்லைஎன்றாள் சுபா.

ஆதித்தியாவை பற்றி கேட்கக்கேட்க அவனின் மீதான வெறுப்பு மறைந்து போனது. அவன் மீது காதல் பிறந்ததோ தெரியாது… ஆனால் விந்தியாவிற்கு அவன் மீது கருணை உருவானது.

நாளடைவில் விந்தியா ஆதியிடம் பழகும் விதம் வேறுவிதமாய் மாறியிருந்தது. விந்தியா வெறுப்பைக் காட்டும் போதே அவளிடம் நாடிய அவன் மனம், இப்பொழுது அவளைத் தன் வசப்படுத்திக் கொள்ளத் தவித்தது. இருந்தும் அவளை நெருங்க அவனுக்குக் கொஞ்சம் தயக்கமும் இருந்தது.

அவள் மனதை முழுதாய் தெரிந்து கொள்ள அவனுடைய நெருங்கிய தோழி லீனாவின் பர்த்டே பார்ட்டிக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தான்.

 அங்கே அவன் பெண்களிடம் பழகும் விதம், அவளுக்குக் கோபத்தை ஏற்படுத்தினால் அது விந்தியாவிற்குத் தன் மீது ஈர்ப்பு இருப்பதைப் புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும் என்று ஆதித்தியா ஒரு கணக்கு போட்டான்.

அதற்காக விந்தியாவையும் பிரயத்தனப்பட்டுச் சம்மதிக்க வைத்து அழைத்துச் சென்றான். அவள் ஒரு வெள்ளை நிற டாப்ஸும் ஜீன்ஸும் அணிந்து கொண்டு தோள் மீது சரிந்த முடியை விலக்கி விட்டபடி காரில் ஏறினாள்.

என்ன ஆதி… எப்பவும் நீங்கதான் டிரைவ் பண்ணுவீங்க… எதுக்கு டீரைவர்?” என்றாள்.

பார்ட்டிக்கு போறோம்… கொஞ்சமா டிரிங்க்ஸ் சாப்பிட்டால்?என்று அவன் சொன்னவுடன் விந்தியா அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாக, என்ன… டிரிங்ஸ் பண்ணக் கூடாதா?என்றான்.

ஆனால் விந்தியா எந்தப் பதிலும் சொல்லாமல் மெளனமாக இருந்தாள். அவள் ஏதாவது சொல்லுவாளா என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சமாயிருந்தது. அவள் அவனின் புரிதலுக்கு அப்பாற்பட்டவளாய் இருந்தாள்.

பார்ட்டி ஹாலே இருள் சூழ்ந்தபடி இருக்க வெளிச்சம் மட்டும் வண்ணமயமாய் மின்னிக் கொண்டிருந்தது. லீனா நடுமட்டத்தில் நின்று கொண்டிருக்க எல்லோரும் அவளைத் தேடி வந்து வாழ்த்தினர்.

 சமுத்திரனும் அங்கே வந்திருந்தான். ஆனால் இம்முறை வேறொரு நண்பனோடு வந்திருந்தான். அந்த நண்பன் நேரடியாக வந்து லீனாவை கட்டியணைத்து வாழ்த்திவிட்டு, கம்மான்… எல்லோருமே வந்தாச்சு… லெட்ஸ் என்ஜாய் தி பார்ட்டிஎன்றான்.

வெயிட் மனோஜ்… ஆதி இஸ் ஆன் தி வே… லெட் ஹிம் கம்என்றாள்.

அவனின் முகம் கடுகடுவென மாறியது. அங்கிருந்து நகர்ந்து கையில் ஒரு கிளாஸை எடுத்து அதிலிருந்த டிரிங்க்ஸை மடமடவென குடித்தபடி அமர்ந்து கொண்டான். அவனின் மனநிலையைப் புரிந்த சமுத்திரன் அவன் தோள்களில் தட்டினான்.

அப்படியே எரிச்சலாய் இருக்கு… வந்து காத்திட்டிருக்கவன் எல்லாம் மனுஷனா தெரியலையா அவளுக்கு

விடு மனோஜ்!

நான் எதுக்கு விடணும்… அவன் என் வழியிலேயே குறுக்கிடுறான்… அவன் எல்லாம் எனக்கு ஒரு போட்டியா? என்னோட ஸ்டேட்டஸுக்கும் எங்க அப்பாவோடு பதவிக்கும் அவன் பக்கத்துல நிக்க முடியுமா?என்று மனோஜ் ஆதியின் மீதான கோபத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தினான்.

கம்மான் மனோஜ்… ஆதி எப்பவுமே உன்கிட்ட போட்டி போட நினைச்சதில்லைஎன்றான் சமுத்திரன்.

ஆனா பாக்கிற பொண்ணுங்கல்லாம் அவன் பின்னாடியே போகுதே

அதுக்கு அவன் காரணமில்லைஎன்றான் சமுத்திரன்.

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஆதித்தியா விந்தியாவுடன் பார்ட்டி ஹாலில் நுழைந்ததை மனோஜும், சமுத்திரனும் கவனித்தனர். விந்தியாவின் மீது மனோஜின் பார்வை பதிந்தது.

யார் அந்த அரேபிய குதிரை?என்று மனோஜ் முதல் பார்வையிலேயே விந்தியாவின் கம்பீரமான அழகால் கவரப்பட்டவனாய் சமுத்திரனிடம் கேட்டான்.

வார்த்தைய அளந்து பேசு… அவ ஆதியோட வைஃப்என்றான் சமுத்திரன்

கிரேட்… இத்தனை நாளா ஆதியால் எனக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு நல்ல பதலடி கொடுக்க இன்னைக்குத்தான் நல்ல சேன்ஸ் கிடைச்சிருக்கு… நான் அந்த வாய்ப்பை மிஸ் பண்ணமாட்டேன்என்றான் மனோஜ் கண்களில் வெறியோடு

வேண்டாம் மனோஜ்… நீ ஏதோ தப்பா யோசிக்கிற

கரெக்ட்… தப்பாதான் யோசிக்கிறேன். ஆதிக்கு என்னோட வலியை புரிய வைக்கப் போறேன்என்றான் விந்தியாவைப் பார்த்தபடி.

மனோஜ்… நீ நினைக்கிற மாதிரியான பொண்ணு அவ இல்லை… ரொம்பவும் திமிரு பிடிச்சவ… பார்க்கிற பார்வையிலேயே எரிச்சிடுவாஎன்றான் சமுத்திரன்.

பெரிய கண்ணகியா… அதையும்தான் நான் பார்க்கிறேனேஎன்றான் மனோஜ்.

23

அவள் திரௌபதி அல்ல

விந்தியா உள்ளே நுழைந்ததும் அங்கே நடப்பவை அனைத்தும் அவளை முகம் சுழிக்க வைத்தது. ஆதித்தியா நேராக லீனாவை நோக்கி சென்றான். அவன் கைகளை நீட்டி வாழ்த்தியதும், அவள் அவன் கைகளைத் தட்டி விட்டு இழுத்து அணைத்து கொண்டாள்.

 விந்தியா சலனமில்லாமல் ரொம்பவும் இயல்பாகவே நின்று கொண்டிருந்தாள். லீனாவிடம் விந்தியாவைக் காட்டி மனைவி என்று அறிமுகப்படுத்த, அவள் விந்தியாவை ஏறிட்டுப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

லீனா கேக் வெட்ட, அங்கே பெரும் ஆரவாரமே நிகழ்ந்தது. அந்த நிகழ்வு முடிந்ததும் எல்லோரும் ஆண் பெண் வித்தியாசமின்றி ஆட்டம் பாட்டமாய் குதுகலித்தனர்.

லீனா கம்மான் ஆதி… லெட்ஸ் டான்ஸ்என்று சொல்லி ஆதித்தியாவை கையோடு இழுத்துக் கொண்டு போனாள். அவளைத் தவிர்க்க முடியாமல் விந்தியாவைப் பார்த்தபடியே அவனும் சென்றான்.

விந்தியா அங்கே நடப்பவை எதிலும் ஈடுபாடு இல்லாமல் ஒதுங்கிக் கொண்டாள்.

விந்தியாவை அவமானப்படுத்த கிடைத்த சரியான சந்தர்ப்பம் என்று மனோஜ் அவளை நோக்கி முன்னேறிச் சென்றான். சமுத்திரன் மெளனமாய் நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்தான்.

மனோஜ் கையிலிருந்த டிரிங்க்ஸை ரொம்ப பழகியவன் போல விந்தியாவிடம் நீட்டினான்.

ஹேவ் இட்என்றான். அதைச் சற்றும் எதிர்பாராதவள் அவன் யாரென்று புரியாமல் முகத்தைத் திருப்பியபடி,

நோ… தேங்க்ஸ்என்றாள்.

இது வெரி நார்மல் டிரிங்க்… அவ்வளவு போதை எல்லாம் இல்லைஎன்று மனோஜ் சொன்னதற்கு, விந்தியா அவனைக் கோபமாய் ஒரு பார்வை பார்த்தாள்.

இட்ஸ் ஒகே… விருப்பமில்லனா பரவாயில்லைஎன்று அவள் பார்வையின் பொருள் புரிந்தவனாய் அந்தக் கிளாஸை ஓரமாய் வைத்தான்.

மீண்டும் அவன் கைகளை நீட்டி, லெட் அஸ் டான்ஸ்என்றான்.

யார் நீங்க மிஸ்டர்? வாட் டு யு வான்ட்?என்று கேட்டுவிட்டு அவள் அலட்சியமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அவளின் முன்னே மீண்டும் வந்து நின்று, யாருனு தெரிஞ்சாதான் ஆடுவியா?

நிச்சயம் மாட்டேன்என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தவளின் கைகளை அழுத்தி பிடித்துக் கொண்டான்.

அவனின் செயல் விந்தியாவிற்கு எரிச்சலை தர கைகளை உதறி விட்டு ஆதித்தியாவை தேடினாள். ஆனால் அவள் கண்களில் ஆதித்தியா தென்படாமல் போக, விந்தியா மனோஜை தவிர்க்க அந்த இடத்தை விட்டு வெளியேற முயன்றாள்.

ஆதித்தியா லீனாவை சமாளித்துவிட்டு விந்தியாவைத் தேடிக் கொண்டு வந்தான். தே சமயத்தில் மனோஜ் விந்தியாவை விடுவதாக இல்லை.

அங்கே ஆடிக்கொண்டிருந்த கூட்டத்திற்கு இடையே வந்து அவளை மீண்டும் வழிமறித்துக் கொண்டான். அவனின் செயலால் அருவருப்பு அடைந்தவளாய் விந்தியா அவன் மீது ஏற்பட்ட கோபத்தை அடக்கி கொண்டு விலகிச் செல்ல த்தனித்தாள்.

ஆனால், மனோஜ் அநாகரிகமாய் அவளின் இடுப்பை வளைத்து அணைக்க முயற்சி செய்ய விந்தியாவின் பொறுமை தூள்தூளாய் நொறுங்கிப் போனது. கண்களில் கோபம் கனலாய் எரிய விந்தியா அவனைத் தள்ளிவிட்டு கால்களிலிருந்த செருப்பைக் கொண்டு முகத்தில் அறைந்தாள்.

தன்னிலை மறந்து ஆடிக்கொண்டிருந்த எல்லோருமே அதிர்ச்சியில் உறைந்து போயினர். விந்தியாவின் செயலை கண்ட ஆதித்தியாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ஆதி நடந்ததை யூகிப்பதற்குள் விந்தியா அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு வெளியேறியிருந்தாள்.

விந்தியாவின் செயலால் உறைந்து போயிருந்த மனோஜ், ஆதித்தியா சட்டையை இழுத்து பிடிக்க இன்னும் மிரண்டு போனான்.

ஆதி லிஸன்… நான் ஜஸ்ட் டான்ஸாட கூப்பிட்டேன்… அதுக்கு போய் ஓவரா ரியாக்ட் பண்றாஎன்றான் மனோஜ்.

ராஸ்கல்… பொய் சொல்லாதடா என்று ஆதி கை ஓங்க லீனா குறுக்கே வந்து நின்றாள்.

ஆதி ஸ்டாப் இட்… இது என்ன நீங்க சண்டை போடற இடமா? உண்மை என்னன்னு தெரியாம மனோஜ் மேல கை ஒங்கிட்டு வர்ற. முதல உன் மனைவிக்குப் போய் நாகரிகம்னா என்னன்னு கத்துக்கொடுஎன்றாள்.

லீனா… போதும்… விந்தியா பத்தி பேச இங்க யாருக்கும் தகுதி இல்லை அன் யு… நீ என் கையில மட்டும் சிக்கின… அதுக்கப்புறம் உன்னை யாராலும் காப்பாத்த முடியாது மனோஜ்என்று லீனாவின் பின்னோடு ஒளிந்து கொண்டிருக்கும் மனோஜை பார்த்து மிரட்டிவிட்டு வேகமாய் வெளியேறினான்.

லீனா மனோஜின் பக்கம் திரும்பி, கெட் அவுட் ஆஃப் மை சைட்என்றாள் கோபமாக.

சமுத்திரன் மட்டும் அங்கே நடந்த எவற்றிலும் கலந்து கொள்ளாமல் பார்வையாளனாகவே வேடிக்கை பார்த்தான்.

ஆதித்தியா வெளியெ வந்தான். விந்தியா காரில் ஏறாமல் விறுவிறுவென சென்றுவிட்டதாக டிரைவர் சொன்னதும், கவலையுற்றவனாக அந்த நடுநிசி இரவில் எப்படித் தனியாகச் சென்றிருப்பாள் என அந்த இடத்தைச் சுற்றிலும் தேடிப் பார்த்தான்.

பின்னர் விந்தியா வீட்டிற்கு சென்றிருப்பாளோ என்ற எண்ணத்தோடு வீட்டை வந்தடைந்தான். அவன் எண்ணமிட்டபடி அவள் அறையில் கைகளைப் பின்னிக்கொண்டு தலையைக் குனிந்தபடி சோபாவில் அமர்ந்திருந்தாள்.

ஆதி விந்தியாவின் முன் நின்று கோபமாக, அறிவில்லை உனக்கு? இந்த ராத்திரியில் உன்னைச் சுற்றி சுற்றி தேட வைச்சிட்ட இல்ல… பைத்தியக்காரன் மாதிரி ரோடெல்லாம் ஓட வைச்சிட்ட. இவ்வளவு திமிரும் தெனாவெட்டும் ஒரு பொண்ணுக்கு நல்லதில்லை.

 ஆம்பிளைங்க எல்லாம் உன் காலில விழணும்னு நினைச்சிட்டிருக்கியா? அடிமட்ட நாகரிகம் கூடத் தெரியாதாடி உனக்கு?

 நீயெல்லாம் இந்த ஊர் எல்லைய தாண்டி போயிருந்தாதானே… காட்டு கத்துக் கத்திட்டிருக்கேன்… காதிலேயே வாங்காம உட்காந்திட்டிருக்கஎன்று சொல்லியபடி மேஜை மேலிருந்த பூஜாடியை உடைக்கத் தூக்கினான்.

ஸ்டாப் இட் ஆதி…என்று கத்தியபடி அந்த ஜாடியை பிடுங்கி மீண்டும் இருந்த இடத்திலேயே வைத்தாள்.

எல்லாத்தையும் ஈஸியா தூக்கி போட்டு உடைச்சிடலாம்… அதை மாதிரி ஒன்றை உருவாக்குறதுதான் கஷ்டம்என்றாள்.

நான் வெறும் ஜாடியைதான் உடைக்க நினைச்சேன்… ஆனா நீ உணர்வுகளையே சுலபமாய் தூக்கிப் போட்டு உடைக்கிறஎன்று விந்தியாவின் மீது கடுமையான வார்த்தைகளைக் கொண்டு தாக்கிவிட்டு அமைதியானான்.

ஏன் நிறுத்திட்டீங்க? அறிவில்லாதவ… நாகரிகம் தெரியாதவ… திமிரு பிடிச்சவ… உணர்வுகளை மதிக்கத் தெரியாதவ… இன்னும் ஏதாவது மிச்சம் மீதி இருக்கா? கம்மான் ஆதி… முழுசா சொல்லி முடிச்சிடுங்கஎன்று சொல்லி விந்தியா ஆதித்தியாவை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்கள் சிவந்து போயிருந்தது.

அந்தப் பார்வையே அவளுடைய வேதனையைப் புலப்படுத்தியது.

என்ன பிரச்சனை உனக்கு… நானும் அங்கதானே இருந்தேன்…

அதுதான் எனக்கும் தெரியணும்… நீங்க எங்கதான் இருந்தீங்க?”

என்னதான் இருந்தாலும் நீ நடந்துக்கிட்டது ரொம்ப ஓவர்… இடம் பொருள் ஏவல் தெரியாம

ரொம்ப ஓவர்தான். நாகரிகம் தெரியாம நடந்துக்கிட்டேன்… ஆமாம்… எனக்கு உங்க நாகரிகம் தெரியாது… தெரிஞ்சுக்கவும் விருப்பப்படல…

இந்த ஊர் எல்லை தாண்டி போய் இருப்பேனானு கேட்டீங்க இல்ல… ஆஸ்டிரேலியா… அட்லான்டா… பேரீஸ்னு பல இடங்களில் வேலை பாத்திருக்கேன். எத்தனை மைல் கடந்து போனாலும் என்னோட நாகரிகத்தையும் என் நாட்டோட கலாச்சாரத்தையும் விட்டு கொடுத்ததில்லை… எதுவும் தெரியாம பேசாதீங்க!

சரி… நான் எதுவும் தெரியாம பேசிட்டதாகவே இருக்கட்டும்… ஆனா நீ கோபத்தைக் காட்டின விதம் சரியா?” என்றான்

தப்புதான்… நான் அப்படி நடந்திருக்கக்கூடாது. என்கிட்ட அநாகரிகமாய் நடந்துக்கிட்டவனை… என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செய்ய நினைச்சவனை நான் செருப்பால அடிச்சிருக்கக் கூடாது.

வேறெப்படி நடந்துக்கணும்… திரௌபதியை சபையில் அவமானப்படுத்திய பொழுது, அஞ்சு புருஷனில் ஒருவனாவது காப்பாத்துவான்னு எதிர்பார்த்து நின்னுட்டிருந்தாளே… அப்படியா? இல்ல கடவுளே காப்பாத்துனு கை தூக்கிட்டு நிக்கணுமா?” என்று சொல்லிவிட்டு விந்தியா ஆதித்தியாவை பார்த்த பார்வையில் அவன் பதில் சொல்ல முடியாமல் நிலைகுலைந்து நின்றான்.

ஆதித்தியா பிரச்சனை இத்தனை தீவிரமாய் இருக்கும் எனத் தெரிந்து கொள்ளாமலே, விந்தியாவிடம் வார்த்தைகளை விட்டுவிட்டதை எண்ணி வேதனையுற்றான்.

சாரி… விந்தியா… நான் என்ன நடந்ததுனு கேட்காமலே… ஐம் ரியலி சாரிஎன்றான்.

இந்த நிதானமும் பொறுமையும் வார்த்தைகளை அள்ளி கொட்டுறதுக்கு முன்னாடியே இருந்திருக்கணும். இட்ஸ் டூ லேட்… இந்த நொடி வரைக்கும் ஏதாவது ஒரு சின்னப் புள்ளியில் நமக்குள்ள ஒத்துப்போகும்னு முட்டாள்தனமா நினைச்சிட்டிருந்தேன்…

பட் நெவர்… நீங்களும் நானும் இரண்டு துருவங்கள் மாதிரி… அது ஒன்றாகச் சேரவே முடியாதுஎன்று சொல்லிவிட்டுச் சோபாவில் தலையணை போட்டு சாய்ந்து கொண்டாள்.

ஆதி விந்தியாவை சமாதானப் படுத்த முடியும் என்ற நம்பிக்கை இழந்தவனாய் பால்கனியில் நின்று கொண்டான்.

கல்யாணம் செஞ்சு ஒரு நாள் கூட நிம்மதி இல்லை… வேண்டாம்னு தூக்கி போடவும் முடியல… நீதான்டி வேணும்னு உரிமையோட சொல்லவும் முடியல…

மனசில இருக்கிறதை சொல்லலாம்னு நினைக்கும் போதுதான் ஏதாவது பிரச்சனை வருது… பிரச்சனை தானா வருதா இல்ல இவளா உருவாக்கிறாளா தெரியலஎன்று மனதிற்குள் புலம்பியபடி சிகரெட்டை வாயில் வைத்தான்.

 எதிர்பாராமல் விந்தியாவை அவன் பார்க்க… அவள் புருவத்தை சுருக்கிக் கொண்டு பார்த்த பார்வையில் அந்த சிகரெட்டை அவனை அறியாமலே தூக்கி வீசினான். அவன் மனம் அவளின் பார்வையை மீறி கூடச் செயல்பட மறுத்தது.

மனோஜ் கன்னங்கள் வீங்க நடந்த அவமானத்தைச் சகித்துக் கொள்ள முடியாமல் குடிபோதையில் மூழ்கினான். சமுத்திரனின் அறிவுரை எதுவும் அவன் காதில் விழவில்லை.

மனோஜின் நினைப்பு முழுக்க விந்தியாவை வேதனைபடுத்த வேண்டும்... அவளைத் தனிமைப்படுத்திக் கதற வைக்க வேண்டும்... அவனிடம் வந்து அவள் மண்டியிட வேண்டும்... இப்படியாக அவன் தீவரமாய் எண்ணமிட்டுக் கொண்டிருந்தான்.

இராவணன் சீதையை சந்தித்த நொடி இருவரில் யாருக்கான பிரச்சனையைத் தீர்மானித்தது என்ற பதில் சொல்ல முடியாத கேள்வியாக விந்தியா மனோஜின் சந்திப்பு அமைந்தது.

24

லாக்கர் எண்

விந்தியா ஆதித்தியாவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

அதே அறையில் இருந்த போதும் விந்தியா அவனின் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை. ஆதித்தியா தான் பல பெண்களை நிராகரித்ததின் பலனாகவே விந்தியா தனக்கு வாய்த்திருக்கிறாள் போலும் என்று நினைத்துக் கொண்டான்.

விந்தியா ஹோட்டலுக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருக்க ஆதித்தியாவும் எத்தனையோ விதமாய் அவள் கவனத்தைத் திருப்ப முயற்சி செய்தான்.

ஏய்… நான் உன் கண்ணுக்கு தெரிகிறேனா இல்லையா… ஹாலோமேன் மாதிரி மறைஞ்சிட்டேனோ?என்று ஆதித்தியா கண்ணாடியை பார்த்து உடையைச் சரி செய்து கொண்டிருந்த விந்தியாவின் பின்னோடு நின்று கேட்டான்.

அவனின் எந்தச் செயலையும் கண்டுகொள்ளாதது போலவே இருந்தாள். விந்தியா தன் தோள் பையை மாட்டிக் கொண்டு அறைக்கு வெளியே செல்ல அவளின் முந்தானை மாட்டிக் கொண்ட உணர்வில் திரும்பி பார்த்தாள்.

இம்முறை அது ஆதித்தியாவின் கையில் சிக்கி கொண்டிருந்தது. அவள் எரிச்சலோடு முந்தானையை இழுக்க அவனின் பிடிப்பு இறுக்கமானது.

என் மேல உனக்கு கோபமாய் இருந்தால் இரண்டு அடி கூட அடிச்சிடுடி… இப்படியெல்லாம் பண்ணாதே… ஆனா கையாலதான் அடிக்கணும்என்றான்.

விந்தியா இம்முறையும் அவன் பேச்சை கவனிக்காமல் புடவையை உதறிக் கொண்டு படிக்கெட்டுகளில் இறங்கி வர, ஹாலில் அமர்ந்திருந்த மாதவி, வருண், நந்தினியை பார்த்து சிலையாய் அங்கேயே நின்றுவிட்டாள்.

பின்னோடு வந்த ஆதித்தியாவும் விந்தியாவின் அருகில் வந்து நின்றான். ஆதித்தியாவிற்கு வந்தவர்களைப் பார்த்தவுடன் கண்களில் குறும்புத்தனம் தெரிந்தது.

என்னோட குட் டைம்… உன்னோட பேட் டைம்என்று சொல்லி விந்தியாவின் தோள்களை அணைத்தபடி அவளைக் கீழே அழைத்து வந்தான்.

மாதவி புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்க அவன் பிடியை விலக்கி விட முடியாமல் தவித்தபடி விந்தியா இறங்கி வந்தாள். அவர்களை நெருங்கியதும் அவன் பிடியிலிருந்து விலகி, மாதவியை அணைத்துக்கொண்டாள்.

சண்முகம் வந்தவர்களுக்குக் காபி கொண்டு வந்தான்.

விந்தியாவின் கடைக்கண் பார்வைக்காக காத்துக் கொண்டிருந்த ஆதியை பார்த்து,

எப்படி இருக்கீங்க மாப்பிள்ளை?என்றாள் மாதவி.

உங்க பொண்ணோட கவனிப்பில் ரொம்ப நல்லா இருக்கேன்என்றான்

எல்லோரின் முகமும் அவன் பதிலில் மலர்ந்தது விந்தியாவைத் தவிர. எல்லோரும் ஆதியை நலம் விசாரிக்க விந்தியா நந்தினியை பார்த்து,

என் தம்பி உன்னை நல்லா பாத்துக்கிறானா?” என்றாள்.

ஏதோ பாத்துக்கிறாரு. ஆனா வார்த்தைக்கு வார்த்தை எது செய்தாலும் அக்கா இப்படி… அக்கா அப்படினு… யாம அக்கா புராணம்தான்என்றாள் நந்தினி. எல்லோரும் கலகலவென்று சிரித்தனர்.

இவர்கள் பேச்சு இப்படியே நீண்டு கொண்டிருக்க மாதவி திருநள்ளாறு போய்விட்டு வந்ததாகக் கூறி பிரசாதத்தை விந்தியாவிற்குக் கொடுத்து, வைத்துக் கொள்ளச் சொன்னாள்.

மாப்பிள்ளைக்கும் கொடுஎன்றாள் மாதவி.

விந்தியா அவன் முகத்தைப் பார்க்காமல் ஆதித்தியாவிடம் நீட்ட அவன் நெற்றியை காண்பித்தபடி நின்றான்.

அக்கா… மாமா எத்தனை நேரம் குனிஞ்சிட்டு இருப்பாரு… அவர் நெற்றியில் வைத்து விடுஎன்றான் வருண்.

விந்தியா வேறுவழியின்றி அவன் முகத்தைப் பார்த்து நெற்றியில் விபூதி இட்டு விட

பார்த்தியா… கடவுள் கூட என் பக்கம்தான் இருக்காருஎன்றான் ஆதி.

விந்தியா எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்த முடியாமல் திரும்பிக்கொண்டாள்.

மாதவி புறப்படுவதாகச் சொல்லவும், அதெல்லாம் முடியாது… உங்க பொண்ணு கையால நீங்க சாப்பிட்டிட்டுதான் போகணும்என்றான் ஆதி.

அய்யோ மாமா… இவ்வளவு பெரிய தண்டனை வேண்டாம்… அக்காவுக்கு சுட்டுப் போட்டாலும் சமையல் வராதுஎன்றான்.

இப்ப நீ இதை கண்டிப்பா சொல்லியே ஆகணுமா?என்றாள் விந்தியா கோபமாக.

ஆதி சிரித்துக் கொண்டே,

உங்க அக்காவுக்குச் சமைக்கத்தானே தெரியாது… நல்லா பரிமாறத் தெரியும்ல

அப்படின்னா ஓகேஎன்றான் வருண்.

மாதவி, “அக்காவை கேலி செய்யாதே என்று வருணை அதட்டினாள்.

எல்லோரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க விந்தியா பரிமாறினாள்.

ஆதியின் சீண்டலையும் விந்தியாவின் ஊடலையும் நந்தினி ஆரம்பத்திலிருந்தே கவனித்துக் கொண்டிருந்தாள். நந்தினி அது பற்றி விசாரிக்க விந்தியா எதுவுமில்லை என்று சிரித்து சமாளித்துவிட்டாள்.

மாதவி விந்தியாவிடம் கிளம்புவதாகச் சொல்லிவிட்டு ஆதித்தியாவிடம் கண் கலங்கியபடி,

விந்தியாவைப் பாத்துக்கோங்கஎன்றாள்.

ஆதித்தியா புன்னகையோடு

என்ன அத்தை சொல்றீங்க? உங்க பொண்ணை யாராவது பாத்துக்கணுமா? அவளுக்கு தன்னைத் தானே பாத்துக்கிற தைரியம் நிறைய இருக்கு… என்னைதான் உங்க பொண்ணு கண்கலங்காம பாத்துக்கணும்என்றதும் எல்லோரும் வயிறு குலுங்க சிரிக்க விந்தியா மட்டும் வெறித்துப் பார்த்து கொண்டிருந்தாள்.

ரொம்பக் கரெக்ட்என்றாள் நந்தினி. அவர்களை வழி அனுப்பிவிட்டு விந்தியா கோபத்துடன் திரும்பினாள். ஆதித்தியா தயாராக, திட்டணும்னு தோணல… கம்மான் திட்டு விந்தியா!என்றான்.

அவள் திட்டப்போவதை கூட ரசிக்கக் காத்துக் கொண்டிருப்பவனிடம் என்ன பேசுவது என்று புரியாமல் விந்தியா தன் பேக்கை மாட்டிக் கொண்டு ஹோட்டலுக்கு புறப்பட்டாள்.

சமுத்திரன் தன்னுடைய வீட்டினுள் அமைக்கப்பட்ட அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்க சுபா அவனுக்குக் குடிக்கப் பால் எடுத்து வந்தாள். அங்கே சமுத்திரனின் செல்போன் ஒயாமல் அடித்துக் கொண்டிருக்க சுபா அதை எடுத்து அவனருகில் வைத்தாள்.

“ஃபோன் அடிச்சிட்டே இருக்கேஎன்றாள்.

எனக்கென்ன காது கேட்காதா? நீ போ நான் பேசிக்கிறேன்என்று சொல்லிவிட்டு போனை கையில் எடுத்தான்.

அதில் வி. டி என்று குறியிட்டிருக்க சமுத்திரனின் முகத்தில் பயம் தோன்றியது. விருப்பமில்லாமல் மிரட்சியோடு அழைப்பை ஏற்றான்.

என்ன சமுத்திரா… போனை எடுக்க நேரமில்லையா இல்ல விருப்பமில்லையா?

இல்ல சார்… எடுக்கக் கூடாதுன்னு இல்ல

எடுத்தா என் கேள்விக்குப் பதில் சொல்லணுமே… அதானே?இதற்குச் சமுத்திரன் எந்தப் பதிலும் உரைக்கவில்லை.

என்ன நடந்தது? நேற்றிலிருந்து மனோஜோட முகமே சரியில்லையே

இல்ல சார்… எதுவும் நடக்கலையேஎன்று சமுத்திரன் சொல்லும் போது அவன் நெற்றியில் வியர்வை துளிர்த்தது.

எதிர்புறத்தில் சிரிப்புச் சத்தம் கேட்டது.

என்ன நடந்ததுனு தெரிஞ்சிக்க எனக்கு நிறைய வழி இருக்கு… இருந்தும் நான் உன்னைக் கேட்கிறேனா அது நான் உன் மேல வைச்சிருக்கிற நம்பிக்கைஎன்று அந்தக் கம்பீரமான குரல் சொல்ல அதற்கு மேல் எதையும் மறைக்காமல் சமுத்திரன் நடந்ததை உரைத்தான்.

அவன் சொல்லி முடித்த போது எதிர்புறத்தில் அமைதி நிலவியது. அந்த மெளனம் அவனுக்குள் பயத்தை ஏற்படுத்தியது.

மீண்டும் அந்தக் குரல், இந்த விஷயத்தை இப்போதைக்கு மனோஜை ஒத்திப்போட சொல்… எலக்ஷன் வர நேரம்என்று அந்தக் குரல் சொன்னதும் சமுத்திரன் நிம்மதி அடைந்தவனாய் சரிஎன்றான்.

ஆனால் மனோஜ் இவன் சொல்வதை எடுத்துக்கொள்வானா என்பது சந்தேகம்தான். அவன் அத்தனை வெறியோடும் கோபத்தோடும் இருக்கிறான்.

விந்தியாவின் இந்தச் செயலால் ஆதித்தியாவிற்கு ஏதோ ஒரு ஆபத்து நேரிடப் போகிறதோ என சமுத்திரன் யூகித்திருந்தான்.

சிவாவும் வேணுவும் ஒரு சீ ஷோர் ரெஸ்டிரான்டில் அமர்ந்திருக்க, அவர்களைப் பார்த்தபடி ஒரு பெண் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

அவள் உடையும் நிறமும் நெற்றியின் வகுட்டில் நீட்டமான குங்குமம் வட நாட்டுக் கலாசாரத்தைப் பிரதிபலித்தது. மகிளாவிற்கு ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமே தெரிந்திருந்ததினால் சிவா அவளை ஆங்கிலத்திலேயே விசாரணையை நடத்தினான்.

கேத்ரீனின் இறப்புக்கு முன்னர் வரையிலும் எங்கள் நட்பு நெருக்கத்தோடு இருந்ததாகக் கூறினாள். கேத்ரீனோடு மாதத்திற்கு இருமுறையாவது தங்குவேன் என்றாள்.

அவளின் லாக்கர் நம்பர் பற்றிக் கேட்டபோது தன்னிடம் இதுவரையிலும் அது பற்றிச் சொன்னதில்லை என்றாள். நிச்சயம் அந்த ரகசிய எண் ஏதோ ஒரு மறக்க முடியாத தேதியை குறிப்பது என்பதை மட்டும் கேத்ரீன் ஒருமுறை தெரிவித்ததாகக் கூறினாள்.

சிவா ஏற்கனவே அந்த விஷயத்தை யூகித்து அவள் வாழ்கையின் முக்கியமான தேதிகளை முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.

இதுவரையிலான விசாரணையில் அவர்களுக்கு புதிதான தகவல் கிடைக்கவில்லை.

கடைசியாகக் கேத்ரீனின் வாழ்கையில் காதல் என்ற உறவை பற்றிக் கேட்க மகிளா ரொம்ப நேரம் யோசித்த பின் அவள் சில வருடங்களுக்கு முன்பு ஆதித்தியா என்பவனை காதலித்ததாகவும் கூறினாள்

. இத்தனை நேரம் தடுமாற்றமே இன்றிக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த சிவா லேசாகத் தயங்கியவனாய், யார் அந்த ஆதித்தியா?” என்றான். அவளோடு கல்லூரியில் படித்தவன் என்றும் அது கிட்டதட்ட கேத்ரீனின் ஒரு தலை காதல் என்றும் சொன்னாள்.

 அவர்கள் இருவருக்கும் இடையில் தீர்க்க முடியாத சண்டை ஏற்பட்டதால் இருவரும் சந்தித்துக் கொள்வதை நிறுத்திவிட்டதாக சொன்னாள்.

தான் ஆதித்தியாவை ஒரே ஒரு முறைதான் பார்த்ததாகவும் இப்பொழுது அவன் முகம் தனக்கு நினைவில்லை என்றாள். ஆனால் ஆதித்தியாவிற்கும் இந்தக் கொலைக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை என்று அவள் இறுதியாகச் சொன்னபோது, வேணு குறுக்கிட்டு அது எங்கள் விசாரணையில் தெரியவரும் என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தான்.

சிவா கேத்ரீனோடு கல்லூரியில் படித்தவர்களின் பட்டியல் ஒன்று அவனிடம் இருந்தது. அதை வேகமாய் புரட்டிப் பார்த்தான்.

ஆண்களின் வரிசையில் முதலிடத்திலேயே ஆதித்தியா என்ற பெயர் இருந்தது. அதற்குக் கீழே சன் ஆப் சந்திரகாந்த் என்று இருந்தது.

வேணு ஆனந்த களிப்போடு, “கேத்ரீன் ஹோட்டல் ஆதித்தியாவில் தங்குவதற்கான காரணமா?” என்று கேட்க சிவா பதில் சொல்லும் நிலைமையில் இல்லை. இந்த கேஸ் அவனின் நட்புக்கும் கடமைக்கும் இடையில் சிக்க வைக்கப் போகிறதோ என்ற பயம் தொற்றிக் கொண்டது.

சிவா அன்றிரவு கலக்கத்தோடு விந்தியாவிற்கு தொடர்பு கொண்டான். அவனின் நம்பரை பார்த்ததும் விந்தியா ஆர்வத்துடன் எடுத்து பேசினாள்.

என்ன சிவா… எப்படிப் போயிட்டிருக்கு உன்னோட இன்வெஸ்டிகேஷன்?

ம்… போயிட்டிருக்கு… நான் உன் கிட்ட சொன்ன வேலையை முடிச்சிட்டியா?

செய்யாம இருப்பேனா… இட் இஸ் ஆல்மோஸ்ட் டன்என்றாள்.

அப்போ அந்த எவிடன்ஸ்?

நீ வரும் போது அது உன் கையில இருக்கும்

சிவா சந்தோஷப்பட முடியாமல் அந்த ஆதாரத்தில் இருக்கப் போவது அவளின் வாழ்வுக்கு எதிரானதாக இருக்குமோ என்ற பதட்டமும், அதை தான் அவள் கையாலேயே பெறப் போகிறோம் என்ற துக்கமும் தொண்டையை அடைக்க சிவா சிறிது நேரம் மெளனமானான்.

அதே சமயத்தில் ஆதித்தியா அறைக்குள் நுழைய விந்தியா போனை காதில் வைத்துக் கொண்டு,

சிவா… சிவா… பேசுடா… ஏதாவது சிக்னல் பிராப்ளமா?என்று கேட்டு கொண்டிருந்தாள்.

ஆதித்தியாவிற்கு அவள் அழைத்துக் கொண்டிருந்த பெயர் எரிச்சல் மூட்டிய போதும் விந்தியாவிடம் ஏதோ பேச நினைத்து அவள் அருகில் வந்து நின்றான்.

விந்தியா முகத்தைத் திருப்பிக் கொள்ள, நான் சொல்றதை நீ கேட்க மாட்டனு தெரியும். பட் ஐ நீட் டு டெல் யூ… கம்மிங் மன்டே என்னோட பர்த்டே. அன்னைக்கு உனக்காக ஸ்பெஷல் சர்ப்ரைஸ் வைச்சிருக்கேன்… அதைக் கேட்டதும் நிச்சயமா நீ சமாதானமாயிடுவஎன்று சொல்லிவிட்டு ஆதித்தியா அவளிடமிருந்து எந்தவொரு பதிலையும் எதிர்பார்க்காமல் அங்கிருந்து அகன்றான்.

சிவா போனில் ஆதியின் குரல் கேட்க அவன் சிந்தனையிலிருந்து மீண்டவனாய் கேட்டான்.

அது ஆதித்தியா குரல்தானே… அவன் இப்ப என்ன சொன்னான்?”

நத்திங்… கம்மிங் மன்டே அவரோட பர்த்டேவாம்… மிஞ்சிப் போனால் பார்ட்டி செலிபிரேட் பண்ணுவாங்க… வேற என்ன செய்யப் போறாங்கஎன்று விந்தியா பேசிக் கொண்டிருக்க சிவாவிற்கு லாக்கர் எண் பற்றிய நினைவு வந்தது.

ஆதித்தியாவின் பிறந்த நாள்.

25

காதல் பறவைகள்

சிவா ஆதித்தியாவின் பிறந்த நாள் பற்றி கேட்டவுடன் லாக்கரின் ரகசிய எண்ணை பற்றி நினைவுக்கு வந்தது. விந்தாயாவிடம் ஏதோ காரணம் சொல்லி தொடர்பை துண்டித்து விட்டு, வேணுவிடம் இது பற்றி கூறினான்.

அடுத்த நாள் காலையில் லாயர் ஜானுடன் கேத்ரீனின் வீட்டுக்கு சென்றனர்.

இந்த முயற்சியும் தோல்வியுற்றால் பின் லாக்கரை திறக்க வேறு முறையைத்தான் பின்பற்ற வேண்டுமென்று பேசிக் கொண்டிருந்தனர்.

கேத்ரீனின் அறைக்குள் நுழைந்ததும் சிவா சாவியைத் திறந்து அந்த நான்கு வரிசை எண்ணை சுழற்சியில் நேராக நிறுத்தியதும் லாக்கர் திறந்து கொண்டது.

சிவா எதிர்பார்த்தது போல் லாக்கரின் உள்ளே முக்கியமான டாகுமென்ட் என்று எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால் அதிலிருந்த ஒரு பத்திரம் மட்டும் எல்லோருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

நான்கு வருடங்களுக்கு முன்னர்க் கேத்ரீன் தன்னுடைய கம்பெனியின் சரிசமமான பங்குகளை ஆதித்தியாவின் பெயரில் மாற்றியிருக்கிறாள். அதில் அவளுடைய கையெழுத்து மட்டும் இருந்தது. அந்தப் பத்திரத்தை அவள் பதிவும் செய்யவில்லை.

இந்த விடை தெரியாத புதிரோடு கோவாவில் இருந்து புறப்பட சிவாவும், வேணுவும் ஆயுத்தமாகினர். கேத்ரீனின் மரணம் முதற்கொண்டு தொடர்ச்சியாய் உள்ள எல்லா கேள்விகளுக்கும் ஆதித்தியா மட்டுமே பதில் சொல்ல முடியும்.

ஹோட்டல் ஆதித்தியா!

விந்தியா தன் அறையில் கவனம் சிதறாமல் கூர்மையாய் யோசித்தபடி வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, கதவை கூடத் தட்டாமல் மேனஜர் ரமேஷ் உள்ளே நுழைந்தான்.

அவரின் முகத்தில் பதட்டம் நிரம்பியிருக்க,

மேடம்… ஆதித்தியா சாருக்கு ஆக்ஸிடன்ட். சந்திரகாந்த் சாருக்கு இப்பதான் போன் வந்துச்சுஎன்றார்.

விந்தியா என்ன செய்வதென்றே புரியாமல் அதிர்ச்சியானாள்.

சந்திரகாந்தும் விந்தியாவும் காரில் புறப்பட இருவருமே பேசிக் கொள்ள வார்த்தைகள் இல்லாத மனநிலையில் அமர்ந்திருந்தனர். மருத்துவமனையின் உள்ளே நுழைந்ததும் சமுத்திரன் ஆதித்தியாவிற்கு சிகிச்சை செய்யும் அறை வாசல்முன் நின்றிருந்தான்.

சந்திரகாந்த் நேராகச் சமுத்திரனிடம் என்ன நடந்தது என்று விசாரிக்கத் தொடங்கினார். விந்தியா பின்னோடு அமைதியாய் நின்றாள்.

விந்தியாவின் மனம் ஆதித்தியாவின் நினைவுகளில் திளைக்க நேற்று அவன் தன்னிடம் பேச வந்த போது அவனை நிராகரித்ததை எண்ணி அவள் நெஞ்சம் வேதனையுற்றது.

சமுத்திரன் ஆதித்தியா பைக் ரேஸில் கலந்து கொண்டதினால் ஏற்பட்ட விபத்து என சந்திரகாந்திடம் சொன்னதும் அவருக்கு அடங்கா கோபம் ஏற்பட்டது.

அதே நேரத்தில் ஆதிக்குச் சிகிச்சை செய்த டாக்டர் வெளியே வந்தார்.

நத்திங்… உடம்பில சின்னச் சின்ன ஸ்கராட்ச்… ரைட் லெக்கில் ஒரு ஹேர் லைன் ஃப்ராக்சர்… இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்என்று சொல்லிவிட்டு டாக்டர் நர்ஸிடம் பேசியபடி மளமளவென நடந்து போய்விட்டார்.

விந்தியாவும் சந்திரகாந்த்தும் உள்ளே நுழைய சமுத்திரனும் பின்னோடு வந்தான். சந்திரகாந்த் ஆதித்தியாவிடம் அளவில்லா கோபத்தை வெளிப்படுத்தினார்.

உனக்கெல்லாம் பொறுப்பே வராதே. இப்படியே உறுப்புடாமத்தான் சுத்திட்டிருக்கப் போறியா? உன்னைப் பத்தியும் யோசிக்க மாட்டிற… உன்னை நம்பி வந்த பொண்ணைப் பத்தியும் யோசிக்க மாட்டிற…

 நீ செய்யுற முட்டாள்தனத்தினால் ஏற்படப் போகும் பாதிப்பை பத்தி கொஞ்சமாவது யோசிச்சியா?என்று சந்திரகாந்த் நிறுத்தாமல் வசை பாட விந்தியா எப்படியோ இடைமறித்து அவர் பேச்சை நிறுத்தினாள்.

சந்திரகாந்த் அறைக்கு வெளியே கோபமாய் சென்று விட அவரைச் சமாதானப் படுத்த சமுத்திரன் பின்னோடு ஓடினான்.

ஆதித்தியா ரொம்ப இயல்பாக, மழை அடிச்சு ஒய்ந்த மாதிரி இருக்குஎன்றான்.

யாருடைய உணர்ச்சிகள் பத்தியும் கொஞ்சமும் கவலை இல்லையா உங்களுக்கு?” என்று விந்தியா மனவேதனையோடு கேட்க…

கவலைப்படற மனுஷன்தான் இப்படி கத்திட்டு போவாரா?” என்றான் ஆதி.

அவரோட கோபத்திலிருக்கிற பாசத்தைப் பத்தி புரிஞ்சிக்கவே மாட்டீங்களா?என்றாள்.

அத பத்தி எல்லாம் நீ பேசாதே… நீ என்னைக்காவது என்னைப் புரிஞ்சிக்கிட்டியா?

நல்லாவே புரியுது… இதுதான் நீங்க தர ஸர்ப்ரைஸா?”

சத்தியமா இல்லை… நான் வேறெதோ நினைக்க அது வேறேதோ நடந்துடுச்சு

அப்படி என்ன நினைச்சீங்க?

இதுவரைக்கும் நான் நிறையப் பைக் ரேஸை ஓட்டிருக்கேன்… பட் அதெல்லாம் வெறும் எக்ஸைட்மென்டுக்கு. ஆனா திஸ் டைம்… என்னோட இன்வெஸ்மென்டுக்காக. வின் பண்ண பிறகு பைக்கோட ஸ்பீட குறைக்க முடியாம விழுந்துட்டேன் சின்ன அடிதான். சைட்டுக்கான பணத்தை ரெடி பண்ணத்தான் இவ்வளவு ரிஸ்க்கும் என்று ஆதித்தியா சொன்னது விந்தியாவிற்கு நெகழ்ச்சியாய் இருந்தது.

கண்களில் கண்ணீர் நிரம்பியிருக்க வனிதாவும் வருணும் உள்ளே வந்தனர். விந்தியா மாதவியிடம் சொல்ல வேண்டாம் என்ற காரணத்தால் மாதவியுடன் நந்தினியை துணைக்கு விட்டுவிட்டு அவர்கள் இருவரும் ஆதித்தியாவை பார்க்க வந்தனர்.

இப்பதானே பார்த்தோம்… அதுக்குள்ள உங்களுக்கு இப்படி எல்லாம் நடந்து போச்சுஎன்று வருண் சொல்லிக் கொண்டிருக்க வனிதா அக்காவின் கண்களில் நிரம்பிய நீரை கவனித்தாள்.

நீங்க ஏன் மாமா இப்படி இருக்கீங்க? உங்களுக்கு அக்காவை கஷ்டப்படுத்தி பார்க்கிறதுல அப்படி என்ன சந்தோஷம்? அக்கா எவ்வளவு தைரியமா இருப்பா தெரியுமா? அவளை இப்படி வேதனைப்படுத்திப் பார்க்கிறீங்களே… நியாயமா?என்று வனிதா ஆக்ரோஷமாய் பேச வருணும் விந்தியாவும் திகைத்து போய் நின்றனர்.

விந்தியா வனிதாவை வெளியே அழைத்துச் சென்று சமாதானப்படுத்த உள்ளே வருண் ஆதித்தியாவிடம் மன்னிப்பு கேட்டான்.

இட்ஸ் ஒகே வருண்… நான் தப்பா எடுத்துக்கல.. நமக்காகச சண்டை போடவும், நம்ம கூட சண்டை போடவும் இந்த மாதிரி கூடப் பிறந்தவங்க யாராவது இருக்கணும்என்றான் பொறாமை தொனியில்.

சிறிது நேரம் வருண் நடந்ததைப் பற்றி ஆதித்தியாவிடம் விசாரித்து விட்டு வனிதாவை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.

விந்தியா அவர்களை வழியனுப்ப செல்ல, சந்திரகாந்த் ஆதித்தியாவுடன் இரவு விந்தியாவை துணைக்கு இருக்க சொல்வதைப் பற்றி சமுத்திரனிடம் சொல்லவும் அவன் தானே துணைக்கு இருப்பதாகச் சொன்னான்.

முதலுக்கே மோசமா போச்சு…என்று ஆதி புலம்பிவிட்டு சமுத்திரனை அருகில் அழைத்தான்.

நீ எல்லாம் பிரண்டாடா? அந்த மனுஷனே எனக்கு நல்லது செஞ்சா கூட நீ குறுக்காலப் படுத்து தடுக்கிறஎன்று ஆதி விந்தியாவை தங்க விடாமல் சமுத்திரன் தடுத்ததை ஏக்கத்தோடு வெளிப்படுத்தினான்.

இங்க விந்தியா இருந்து என்ன செய்யப் போறா?என்றான் சமுத்திரன்.

நண்பனாய் இருந்த போதும் தன்னுடைய தவிப்பு புரியவில்லையே என்று ஆதித்தியா பொருமிக் கொண்டிருக்க விந்தியா அறைக்குள் நுழைந்தாள்.

ஆதியோட யாராவது ஒருத்தர்தான் ஸ்டே பண்ணனும் விந்தியா… சமுத்திரன் இருக்கிறானாம்… நாம போயிட்டு காலையில் வருவோம்என்றார் சந்திரகாந்த்.

விந்தியா புருவத்தைச் சுருக்கி திமிராக சமுத்தினைப் பார்த்து, நான் இருக்கும் போது நீங்க ஏன் ஸ்டே பண்ணனும்? நான் பாத்துக்கிறேன்… நீங்க கிளம்புங்க சமுத்திரன்என்றாள்.

விந்தியா யாரிடமும் அனுமதி கேட்காமல் தன் முடிவை சொல்லவும் சமுத்திரன், சந்திரகாந்த் இருவருக்கும் பேசவதற்கு ஒன்றுமில்லை. சந்திரகாந்த்துடன் பேசிக் கொண்டே கார்வரை வழியனுப்பிவிட்டு வர, சமுத்திரன் விந்தியாவை எதிர்பார்த்தபடி நின்றிருந்தான்.

நீங்களும் கிளம்புங்க சமுத்திரன்என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல முயற்சிக்க அவன் வழிவிடாமல் நின்று கொண்டிருந்தான்.

வழி விடுங்க…என்றாள் விந்தியா அவனைப் பார்க்க விரும்பாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு.

நீ முதல வழி விட்டு ஆதியோட வாழ்கையிலிருந்து விலகி நில்… உன்னாலதான் அவனுக்கு இவ்வளவு பிரச்சனையும்என்றான் சமுத்திரன்.

விந்தியா தன் கோபத்தை வெளியே காட்டாமல் லேசான புன்னகையோடு, நிச்சயமா விலகிடுறேன்… ஆனா அதை நீ சொல்ல கூடாது… ஆதித்தியா சொல்லட்டும்என்று சொல்லி விட்டு அவள் பார்த்த கோபமான பார்வையில் சமுத்திரனே அறை வாசலில் இருந்து நகர்ந்தான்.

விந்தியா உள்ளே செல்ல ஆதித்தியா ஒரு நர்ஸோடு ஆர்வமாய்ப் பேசிக் கொண்டிருந்தான். அந்த நர்ஸும் அவனோடு ரொம்ப பழகியதை போல் பேசி கொண்டிருந்தாள்.

விந்தியா தன் பொறுமை இழந்தவளாய், சிஸ்டர்… நீங்க கவனிச்சிக்க இந்த ஒரு பேஷன்ட் மட்டும்தான் இருக்காரா?என்று கேட்கவும், அந்த நர்ஸ் விந்தியாவின் வார்த்தை புரிந்தவளாய் வெளியே சென்றாள்.

மத்தவங்க வேலையைக் கெடுப்பதுதான் உங்களோட ஓரே வேலையா?” என்று விந்தியா கேட்க,

நீயும் என்கிட்ட சிரிச்சு பேசமாட்ட… மத்தவங்களையும் சிரிச்சு பேசவிட மாட்ட… சரியான லேடி ஹிட்லர்டி நீஎன்றான்.

நான் இருக்கிறது பிடிக்கலன்னா நான் கிளம்புறேன்… வீட்டுக்குப் போய் சண்முகம் அண்ணாவை அனுப்பிவைக்கிறேன்என்று புறப்படச் சென்றவளின் கைகளை எட்டிப்பிடித்துக் கொண்டான்.

நில்லுடி… உன் பின்னாடி ஒடி வர நிலைமையிலயா நான் இருக்கேன்… கட்டுப்போட சொன்னா அந்த டாக்டர் பெரிய காம்பவுண்டே கட்டி வைச்சிருக்காரு… புரிஞ்சுக்கோடிஎன்றான்.

விந்தியா அவன் பேசியதை கேட்டு அவளை அறியாமல் கலீர் என சிரித்து விட்டு அவன் புறம் திரும்பினாள். ஆதியின் பிடி அத்தனை அழுத்தமாகவும் இல்லை. இம்முறை விந்தியா அவன் பிடியை உதறிக் கொள்ளவும் இல்லை.

என் மேல காட்ட வெறுப்பையும் கோபத்தையும் தவிர வேறெதுவும் தோணலியா உனக்குஎன்றான் ஆதித்தியா.

உங்க மேல அன்பையும் பாசத்தையும் காட்ட லீனா முதல் இன்னைக்குப் பார்த்த நர்ஸ் வரைக்கும் ஏராளமானவங்க இருக்கும் போது, நான் எதுக்கு ஆதி பத்தோட பதினொன்றா?என்றாள்.

முதல் நாள் இரவில் நீ என்கிட்ட ஒண்ணு சொன்ன ஞாபகம் இருக்கா விந்தியா!… நான் என்ன உங்க வாழ்கையோட முதலும் கடைசியுமான பெண்ணானு. நான் இப்ப சொல்றேன்… இந்த நிமிஷத்தில் இருந்து நீ மட்டும்தான் என் வாழ்கையோட முதலும் கடைசியுமான பெண்… நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும்என்றான்.

அவன் பிடியில் அவள் கை இருக்க ஆதியின் இந்த வார்த்தைகளுக்கு என்ன பதில் சொல்வாள். அவளின் அமைதி அவனுக்குச் சாதகமாய் இருக்க அவன் மேலும் தொடர்ந்தான்.

ரே பெண்ணோட வாழும் வாழ்க்கை மோசமானதா இருக்கும்னு நினைச்சு காதல், கல்யாணம் இதை எல்லாம் வெறுத்திருக்கேன். ஆனா இப்போ சொல்றேன்… நீ ஒருத்தி என் வாழ்கையில் வராமல் இருந்திருந்தால் நான் எதுவுமே தெரியாதவனாய் அற்ப சந்தோஷங்களோடவே செத்திருப்பேன்என்றான் உணர்வுகள் பொங்க.

விந்தியாவிற்கு அதற்கு மேல் உணர்ச்சிகளைக் கட்டுபடுத்த முடியவில்லை. அவன் பிடியிலிருந்து தன் கைகளை விலக்கியபடி நகர்ந்து நின்றாள்.

போதும் ஆதி… இதுக்கு மேல ஒண்ணும் பேச வேண்டாமேஎன்றாள்.

ஏன் விந்தியா… எனக்கு உன்கிட்ட நிறைய பேசணும்… நிறைய காதலிக்கணும்

ஆதி… ப்ளீஸ்… நீங்க என்னை ரொம்ப இமோஷனலாக்கிறீங்கஎன்றாள்.

நீ மறைச்சு வைச்சிருக்கிற காதல் வெளிப்பட்டு விடுமோனு பயமா இருக்கோ?

நோ… உங்களைக் காயப்படுதிடுவேனோன்னு பயமா இருக்கு… உங்களவுக்கு நான் உங்களை நேசிக்க முடியுமானு சந்தேகமா இருக்கு…

எங்க அப்பாவோட மரணத்திற்குப் பிறகு நான் நிறையப் பொறுப்புகளைச் சுமக்க என்னை நானே இறுக்கமானவளாய் மாத்திக்கிட்டேன்…

இந்த வெறுப்பு, கோபம், திமிரு… எல்லாம் யாரும் என்னை நெருங்காம இருக்க எனக்கு நானே போட்டுகிட்ட கவசம். உங்க மனசில் இருப்பதை வெளிப்படையா நீங்க சொல்லிட்டீங்க… பட் என்னை ஏதோ தடுக்குது…

நீங்க எனக்காக உங்கள மாத்திக்கிட்ட மாதிரி சட்டுனு என்னை மாத்திக்க முடியுமானு தெரியல… எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க… ப்ளீஸ் ஆதிஎன்று விந்தியா தன் மனஇறுக்கத்தை ஆதியிடம் வெளிப்படுத்தினாள்.

ஆதித்தியா சிரித்தபடி, நீ எனக்கு மனைவியா.. காதலியா எல்லாம் இருக்க வேண்டாம். நீ எப்பவும் அந்தத் திமிரு பிடிச்ச விந்தியாவாக இரு…

உன்னோட அந்த கேரக்டரைத்தான் நான் ரொம்ப அதிகமா நேசிக்கிறேன்… அந்த தலைவணங்காத விந்தியாவைத்தான் நான் காதலிக்கிறேன்என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் காலில் வலியை உணர்ந்தவன் போல முகத்தைச் சுளித்தான்.

என்னாச்சு ஆதி?என்று பதறிக் கொண்டு அருகில் வந்தவளின் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டு குறும்புத்தனத்தோடு கண்ணடித்தான்.

நீ எவ்வளவு வேண்டுமானாலும் டைம் எடுத்துக்கோ… என்னை விட்டு தள்ளி மட்டும் போகாதேஎன்றான் ஆதித்தியா. அழகான அந்தக் காதல் பறவைகள் எதிர்காலக் கனவுகளோடு கட்டிய அந்தக் கூடு, வேரோடு பெயர்ந்து விழப் போகும் அந்த மரத்தில் எப்படி ஜனித்திருக்குமோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content