You don't have javascript enabled
Monisha NovelsRomantic thriller

Iru thruvangal-16to20

16

கனவல்லவே!

எழுத்து சுதந்திரம்தான் நம் தேசத்தின் சுதந்திரத்திற்கு அஸ்திவாரம் என்பதை யாரும் மறுக்க முடியாது. மனிதசக்தியை திரட்டி நம் நாட்டில் நடைபெறுகின்ற அநியாயங்களுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை நடத்தி மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

ஆனால் இன்று நம்மைச் சுற்றியுள்ள பத்திரிக்கை எல்லாம் அக்கிரமங்களைத் தூண்டிவிடுவதும், கலவரங்களை ஏற்படுத்தவும், மொத்தத்தில் தவறுகளின் துணைவனாய் அமைந்திருக்கும் நிலையில் ட்ரூத்என்ற இந்தியாவின் பெரும் மாநகரங்களில் வெளியாகும் ஆங்கில நாளிதழ் உண்மையைக் கொணர்வதையே தங்கள் பத்திரிக்கையின் கொள்கையாகக் கொண்டுள்ளது.

அந்த பத்திரிக்கையில் வெளியான ‘28 வயது பெண்ணின் சாதனைகள்என்று இறந்த போன கேத்ரீனைப் பற்றிய ஆர்டிக்கல் இந்தியாவைத் திரும்பி பார்க்க வைத்தது.

கேத்ரீனை பார்க்க இந்தியப் பெண்களின் சாயலிலில்லாத போதும் அவள் பிறந்து வளர்ந்த தாய் நாடு இந்தியா. அவளுடைய தந்தை தமிழ் நாட்டில் சிறிய கிராமத்தில் பிறந்த மகேந்திரன்.

அவருக்குள் இருந்த சாதிக்கும் எண்ணமும், அயராத உழைப்புமே அவரை இளமையிலேயே பெரிய வளர்ச்சியை அடைய வைத்தது. மகேந்திரன் தன்னுடைய பெயரை அமரேஷ் என்று மாற்றிக் கொண்டுவிட்டார்.

ஒரு வருடத்திற்கே பல கோடி ரூபாய்க்கு லாபம் ஈட்டும் கோவாவில் அமைந்துள்ள அமரேஷ் லிக்கர் பேஃக்டரியின் வளர்ச்சி அபரிமிதமானது. உலகளவில் அவருடைய நிறுவனம் வளர்ந்து நிற்பதற்குக் காரணம் அமரேஷ் மட்டுமல்ல. அவருடைய மனைவி சோஃபியாவும்தான்.

 ஃபிரான்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து விட்டு தன் காதல் கணவனுக்காக கோவாவிலேயே தங்கி விட்டாள். அதுமட்டுமின்றி அவள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள குடும்பச் சொத்தை கணவனின் வளர்ச்சிக்காகத் தாரை வார்த்தவள். அவர்களின் காதலின் சின்னமாகப் பிறந்தவள்தான் வேலட்டினா கேத்தரீன்’.

சோஃபியா மருத்துவம் மட்டும் பார்ப்பதில்லை. சில மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியும் செய்து கொண்டிருந்தாள். அதன் விளைவாக ஏற்பட்ட விபத்தில் சோஃபியாவின் இரு கண்களும் பாதிக்கப்பட்டன.

 கணக்கு வழக்கில்லாத பணம் கூட அவளைக் குணப்படுத்த இயலவில்லை. சில நாட்கள் அந்த மனத்துயரில் இருந்த சோஃபியா, கேத்ரீனின் பன்னிரண்டாவது வயதில் இறந்தும் போனாள்.

தாயை இழந்து விட்ட கேத்ரீன், அப்பொழுதிலிருந்து தனிமையைப் பழகி இருந்தாள். ஐ. ஐ. எம் பெங்களூரில் எம். பி. ஏ முடித்த கேத்ரீன் தன் தந்தையோடு சேர்ந்து நிறுவனத்தின் முக்கியப் பொறுப்புகளைப் பார்த்து கொண்டாள்.

துரதிஷ்டவசமாக அமரேஷும் இறந்து விட அந்த நிறுவனத்தின் பங்குகள் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. கேத்ரீனால் தனியாக நிர்வாகம் செய்ய முடியுமா?’ என அவள் வீழ்ச்சியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த எல்லோருமே அதிர்ச்சி அடையும் விதமாய் அவள் தன்னுடைய திறமையால் அந்த நிறுவனத்தைப் பன்மடங்கு லாபம் பெருகச் செய்தாள்.

இது கேத்ரீனை பற்றி எல்லோருக்கும் தெரிந்த ஒரு முகம். ஆனால் ட்ரூத் இதழ் வெளிச்சம் போட்டுக் காட்டியது அவளுடைய இன்னொரு முகம்.

அமரேஷ் லிக்கர் பாஃக்டரியின் லாபத்தில் பல பங்குகளைச் சர்ச் பாஃதர் அந்தோனியின் மூலமாக பல்லாயிரம் ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்க்கைக்காக அற்பணித்து இருக்கிறாள். கண்களை இழந்த பல நூறு குழந்தைகளுக்கு பார்வை திரும்பக் கிடைக்கப் பெற செய்திருக்கிறாள்.

இப்படி கணக்கிலடங்கா உதவிகளைக் கண்களுக்குத் தெரியாமல் செய்திருக்கிறாள். அவள் இறந்த பின்பும் கூட அந்த நிறுவனத்தின் ஒரு பங்கு லாபத்தை ஆசிரமத்திலுள்ள குழந்தைகளுக்கென அற்பணித்திருக்கிறாள். இந்த அறியாத உண்மை உலகையே மெய் சிலிர்க்க வைத்தது.

 அவளுடைய மரணத்திற்குப் பிறகு பிரான்ஸிலிருந்து வந்த தாய் வழி உறவினர்கள் அடக்கம் செய்தனர். அந்த இடத்தில் புல்லே முளைத்துவிட்ட நிலையில் தமிழ்நாடு போலீஸ் அவளுக்கான நீதியை வழங்கவில்லை. அவளுக்காகக் கேள்வி கேட்போர் இல்லாததினால் அவளின் மரணம் மர்மமாய் போனது.

அந்தக் கடைசி வரி கேத்ரீனின் இறப்பிற்கான நீதியை வழங்க பல லட்சோபலட்ச மக்கள், தொண்டு நிறுவனங்களைக் குரல் கொடுக்கச் செய்தது. அந்தக் குரல் சென்னை மாநகரித்திலும் ஒலித்தது.

அவளின் இறப்பில் ஒளிந்துள்ள உண்மையைக் கண்டுபிடிக்க மறு விசாரணைக்குத் தமிழ்நாடு போலீஸ் ஏற்பாடு செய்தது. அதனால் திருச்சியிலிருந்து இன்வஸ்டிகேஷனில் திறமை மிகுந்த ஆபிஸர் வேணு மகாதேவனை இந்தக் கேஸில் இறக்கியது. கூடவே இன்ஸ்பெக்டர் சிவாவும் விசராணையின் உதவிக்காகப் போடப்பட்டுள்ளது நாம் அறிந்த விஷயமே.

ஹோட்டல் ஆதித்தியா!

மீண்டும் அறை எண். 603ல் அந்த ட்ரூத் நாளிதழை கையில் சுருட்டி வைத்துக் கொண்டு வேணுவும், அவரோடு சிவாவும் கேத்தரீன் இறப்பு கொலைக்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து கொண்டிருந்தனர்

பத்து மாசத்திற்குப் பிறகும் இந்த அறையை ஹோட்டல் நிறுவனம் ஏன் பூட்டியே வைச்சிருக்கனும்?” என்றார் வேணு.

மீடியாக்கள்தான்… ரூம் நம்பர். 603 டெத் என ஒயாம புலம்பி அதை மக்கள் மனசில பதிய வைச்சிட்டாங்கஎன்றான் சிவா.

பாயின்ட் சிவா… மீடியாக்களுக்குத் தேவை வெறும் பரபரப்புதான்

சிவா அவள் விழுந்த பால்கனியின் வழியே எட்டிப் பார்த்தான்.

வெறும் ஐந்தரை அடி இருக்கும் பெண் குடிபோதையால் தவறி விழுந்திருக்க வாய்ப்பே இல்லை சார். இட்ஸ் அ மர்டர். யாராவது பின்னாடி இருந்து தள்ளி விட்டிருக்கணும்இல்லைனா… கால வாரி விட்டிருக்கலாம்?”

அப்போ உள்ளே ஆள் இருந்திருக்கணும் … இல்லை அவளோடு பின்னாடியே நுழைந்திருக்கலாம்… என்ன சிவா?”

உள்ளே ஆள் இருக்க அவன் இந்தக் கதவை சாவி இல்லாம திறந்திருக்கணும்… பட் ஹோட்டல் நிறுவனம் அதுக்கு வாய்ப்பில்லைனு சொல்றாங்களே. செகண்ட் திங் பின்னாடியிருந்து வந்திருந்தா சீசிடிவியில் அவன்/அவள் பின்னோடு வருவது பதிவாயிருக்கணும்.

இருவருமே ஒரு புள்ளியில் வந்து மீண்டும் குழப்பத்தில் நின்றனர்.

ஒய் நாட்? அவன் இந்தப் பால்கனி வழியா வந்து கதவுக்குப் பின்னாடி நின்னுட்டிருந்தா?”

நாட் பாஸிபில் சிவா. அதுவும் ரொம்ப ரிஸ்கி. நாம இந்த கேஸை வேற இடத்திலருந்து ஸ்டார்ட் பண்ணனும்என்றார் வேணு.

எங்கிருந்து?”

கோவா… வேலட்டீனா கேத்ரீனின் சொந்த ஊர்என்று வேணு முடிவெடுக்க அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய இருவரும் புறப்பட்டனர்.

இருளில் ஒளிர்ந்திருந்த மின்விளக்குள்… திடீரென ஆறாவது மாடியிலிருந்து ஒரு பெண் தவறி விழுகிறாள். அவள் முகமெல்லாம் இரத்தம் தோய்ந்திருக்க,

கேத்ரீன்…என அலறியபடி எழுந்து கொண்டான் ஆதித்தியா.

அவனின் அலறல் சத்தம் விந்தியாவிற்கும் கேட்க அவள் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டாள். ஆதித்தியா எதையோ கண்டு மிரட்சியாக நெற்றியில் வியர்வை துளிகள் படிந்தபடி அமர்ந்திருந்தான்.

ஆதித்தியா… ஆதித்தியா…என்று விந்தியா தொடர்ச்சியாக அழைத்தும் அவன் பதிலின்றி அமர்ந்திருந்தான்.

விந்தியா போர்வையை விலக்கி கொண்டு அவன் அருகில் வந்து ஆதித்தியாஎன்று அழைத்தாள். அப்பொழுதும் பதில் இல்லை. பக்கத்திலிருந்த தண்ணீர் ஜக்கிலிருந்த தண்ணீரை சுரீலென அவன் முகத்தில் தெளித்தாள்.

முகத்தை அசைத்தபடி நினைவுக்கு வந்தவனாய் அவன் அருகில் தண்ணீர் ஜக்கோடு நின்றிருந்தவளை நிமிர்ந்து பார்த்தான்.

பைத்தியமாடி நீ?” என்று முகத்தைத் துடைத்தபடி கேட்டான்.

அத நான் கேட்கணும்…என்று சொல்லிவிட்டு தண்ணீரை அவன் கைகளில் கொடுத்தாள்.

முதல்ல தண்ணி குடிங்க மிஸ்டர்… நிம்மதியா தூங்கிட்டிருந்தேன்… ஏதோ கெட்ட கனவு கண்டு அலறிட்டு… இப்போ என்னைப் பாத்து பைத்தியம்னு சொல்றீங்கஎன்றாள் விந்தியா கோபமாக!

கனவா?”

அதுவே தெரியலயா? நான் தூங்கப் போறேன். திரும்பியும் அலறினீங்க தண்ணிய தெளிக்க மாட்டேன்… மொத்தமா ஜக்கோட ஊத்திடுவேன்என்று சொல்லிவிட்டு போர்வையை முகத்தில் போட்டுக் கொண்டு படுத்துக் கொண்டாள்.

ஆதித்தியாவால் அதை கனவு என்று நம்பமுடியவில்லை. உறக்கமின்றி எழுந்து நடந்தவனின் கால்களில் ஏதோ தட்டுப்பட அவன் அதைக் கைகளில் எடுத்துப் பார்த்தான். அது வேறொன்றுமில்லை. ட்ரூத்மேகஸின்.

விந்தியா அவன் அறையில் அதைப் படிக்க வைத்திருந்தாள். காலையில் அதை அவன்தான் பார்த்துவிட்டு தூக்கி விசிறி அடித்தான். அந்த ஞாபகம்தான் கனவாக மாறியிருப்பதை உணர்ந்தான்.

அந்த இதழின் அட்டை படத்தில் அவார்ட்டுடன் கேத்ரீன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த ஆதி கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டவனாய்,

ஐம் சோ சாரி கேத்ரீன்என்றான்.

அவன் மூளைச் சூடேற அவனுடைய சிகரெட் பாக்கெட்டை இருளில் தேடினான். அந்த சோபாவின் அருகிலிருந்த மேஜையில் கைகளை வைத்துத் தடவினான்.

அது கிடைக்காமல் போகவே நிமிர்ந்தவன் சோபாவில் படுத்திருத்த விந்தியாவின் மீது தவறி விழுந்து விட விந்தியா அம்மாஎன்று அலறினாள்.

17

வேல் விழிகளோ!

ஆதித்தியா எதிர்பாராமல் விந்தியாவின் மீது விழுந்துவிட, தூங்கி கொண்டிருந்தவள் பயந்து போனாள். ஆதித்தியா கொஞ்சம் சுதாரித்து எழுந்து கொண்டான். விந்தியா சோபாவிலிருந்து போர்வையை விலக்கி எதிர்பாராத அந்த அதிர்ச்சியைச் சமாளித்து எழுந்தாள்.

அர் யூ மேட்?” என்று விந்தியா கேட்க ஆதித்தியா தன் செயலை நினைத்து தானே சிரித்துக் கொண்டான்.

ஐம் சாரிஎன்று சொல்லிக் கொண்டே சிரித்தான்.

விந்தியா கண் கொட்டாமல் அவன் சிரிப்பதையே பார்த்து கொண்டிருந்தாள். அவன் மீது அளவில்லாத எரிச்சல் ஏற்பட்டது.

என்ன டிரை பண்றீங்க ஆதி? திடீர்னு அலறீங்க… திடீர்னு மேல விழறீங்க… என்னை டிஸ்டர்ப் பண்றதுதான் உங்க மோட்டிவா?”

சத்தியமா இல்லை…என்று விந்தியாவின் தலையில் கை வைத்தான் ஆதித்தியா. அவனின் கைகளைத் தட்டி விட்டாள்.

ஏதோ தப்பா இருக்கு…என்று கேட்டுவிட்டு விந்தியா கூர்மையாகப் பார்த்தாள்.

நீ நினைக்கிற மாதிரி தப்பான எண்ணத்தில் எல்லாம் விழல… கால் தடுக்கிடுச்சு

அப்போ தப்பான எண்ணம் வேற இருக்கா?”

நானே வாயக் கொடுத்து சிக்குறேன். இதப் பாரு என்னோட பொருள் ஒண்ண இருட்டில தேடிட்டிருந்தேன். கால் தடுக்கி உன் மேல விழுந்துட்டேன்… தட்ஸ் இட். வேணும்டே பண்ணியிருந்தா … இப்படி உன்கிட்ட பேசிட்டா இருந்திருப்பேன்?

ஹெலோ… எதை தேடுறுதுனாலும் லைட்ட போட்டு தேடுங்க… திரும்பியும் வேற ஏதாவது லூசு மாதிரி பண்ணாதீங்கஎன்று சொல்லிக் கொண்டே தலையணையை எதிர்புறம் திருப்பி வைத்துக் கொண்டு படுத்துக் கொண்டாள்.

இனிமே தூக்கம் எப்படி வரும்?என்று விந்தியா புலம்ப, ஆதித்தியா அறையை வெளிச்சமாக்கி விட்டு மீண்டும் தேட ஆரம்பித்தான்.

விந்தியாவை நோக்கி, நீ என்னோட சிகரெட் பாக்கெட்டை பார்த்தியா?என்று கேட்டதும் விந்தியா திருதிருவென்று விழித்து விட்டு,நான் எடுக்கலை…என்று சொல்லியபடி போர்வையை எடுத்து முகத்தை மூடிக் கொண்டாள்.

விந்தியாவின் செயலைப் பார்த்துச் சந்தேகம் கொண்டவனாய்,எப்பவும் நான் வைக்கிற பொருள் இடம் மாறினதேயில்லை… இன்னைக்கு எப்படிக் காணோம்? இவள தவிர வேற யாரும் எடுத்திருக்க முடியாதுஎன்று யோசித்துவிட்டு விந்தியாவின் போர்வையை முகத்திலிருந்து விலக்கினான்.

எங்கடி என் சிகரெட் பேக்கெட்?”

விந்தியா சலித்துக் கொண்டு, என்னதான் பிரச்சனை உங்களுக்கு? நான் எடுக்கலை

நீதான் எடுத்திருக்க

என்னைப் பார்த்தா சிகரெட் பிடிக்கிற மாதிரியா தெரியுது?”

அதெல்லாம் எனக்குத் தெரியாது… என் சிகரெட் பேக்கெட் எங்கே?”

நான் எடுக்கல

நிச்சியமா நீதான் எடுத்திருக்க

இல்லை என்று கத்தினாள்.

அப்போ நீ எடுக்கலை?

அதைத்தானே திரும்பத் திரும்ப சொல்றேன்

சரி… நான் ரொம்ப டென்ஷனா இருந்தா மட்டும்தான் சிகரெட் பிடிப்பேன்… இப்போ சிகரெட் இல்லை. இப்ப என் டென்ஷன் குறையணும்

அதுக்கு…

அவன் எதுவும் பேசாமல் அவளை நெருங்கி வந்தான். அவளுக்குப் பதட்டம் அதிகமானது.

ஆதி… ஸ்டே அவேஎன்றாள்.

ஆனால் ஆதி அவளின் இதழ்களைப் பார்த்தபடியே நெருங்கி வந்தான். அவனின் நோக்கத்தை விந்தியா புரிந்து கொண்டாள். அவளின் கைகளால் அவனைத் தடுக்க முயற்சி செய்து அதுவும் பலனளிக்கவில்லை.

அவளை மீறிக் கொண்டு அவனை நெருங்க அவனின் அருகாமை விந்தியாவிற்குப் படபடப்பு அளித்தது. அவளின் இதயத்துடிப்பு அவளின் காதுகளுக்கே ஒலித்தது.

திஸ் இஸ் நாட் பேஃர்என்றாள் படபடப்போடு.

எவ்ரித்திங் இஸ் பேஃர் இன் லவ் அன் வார்… பேபிஎன்று சொல்லிவிட்டு காதல் நிரம்பிய புன்னகையோடு அவளை நெருங்கினான்.

விந்தியா தன் கைகளால் உதட்டை மூடிக் கொண்டாள்.

அந்த பேக்கெட் என் கண்ணில பட்டுச்சு. இது ஏன் இங்க இருக்குனு நான்தான் தூக்கிப்போட்டேன்…என்றாள். இதைக் கேட்டதும் ஆதியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

ஆதி அவளை தொடவில்லை இருந்தும் அவனின் மூச்சுக் காற்றை விந்தியாவால் உணர முடிந்தது. தன் இமைகளை விரித்து அவனைப் பார்த்தாள். அந்தக் கண்களை நேருக்கு நேர் அத்தனை அருகில் பார்த்தபின் கொஞ்சம் அவன் நிலை தடுமாற அவனே அவளை விட்டு விலகினான்.

விந்தியா பெருமூச்சுவிட்டவளாய் படபடப்பு அடங்காமல் சோபாவில் சாய்ந்து கொண்டாள். எத்தனையோ ஆண்களின் முன்னிலையில் தலைவணங்காமல் இருந்தவள் முதன் முறையாக அவனின் அருகாமையில் பலவீனமாய் உணர்ந்தாள்.

அவனிடம் பெண்களை வசீகரிக்கும் ஏதோ ஒரு ஆற்றல் இருக்கிறது என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது.

வேல் விழிகள் என்று சொல்வார்களே… அவை இதுதானா?

நேராக அந்தக் கூர்மையான பார்வை ஈட்டியைப் போல் அவன் இதயத்தில் பாய்ந்தது. ஆதி நிலைகுலைந்தவனாய் பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியேறினான். முதன் முறையாய் ஒரு பெண் தன்னைத் தடுமாறச் செய்துவிட்டதை உணர்ந்தான்.

தான் விந்தியாவிடம் விட்ட சவாலில் தோற்று விடுவோம் என்று ஆதிக்கு தோன்றிற்று. அழகைத் தாண்டி அவளிடம் ஏதோ இருக்கிறது என்று சிந்தித்தவன், அவளிடம் தானே சரணடைந்து விடுவோமோ என்று பயப்படலானான்.

நோ இட்ஸ் இம்பாஸிபிள்என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டான்.

ஆதியிடம் யார் சொல்வது?

வ்ரித்திங் இஸ் பேஃர் இன் லவ் அன் வார்

காதலிலும் போரிலும் யாராவது ஒருவருக்கு தோல்வி நிச்சியம்.

18

காதலும் யுத்தமும்

வேகமாய் நகர்ந்து கொண்டிருந்த காரில் விந்தியாவும் சந்திரகாந்தும் மும்முரமாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

உன் மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கும்மாஎன்றார் சந்திரகாந்த்.

இல்ல மாமா… நீங்க சொல்றது சரியா வராது. அதோட நம்பிக்கை வேற… பிராக்டிக்கல் வேறஎன்றாள்.

நோ ஆர்க்யுமென்ட்ஸ்… நீதான் இனிமே ஹோட்டல் எம். டிஎன்றார்.

இல்ல மாமா… ஆதித்தியா நிர்வகிப்பதுதான் சரியா இருக்கும்என்றதும் சந்திரகாந்த் லேசாகப் புன்னகை புரிந்தார்.

ஆதித்தியாவிற்கு ஹோட்டல் பிஸ்னஸில் துளி கூட இன்ட்ரஸ்ட் இல்லை… ஹி ஹேஸ் சம் அதர் ஐடியா. அது மட்டும் கரெக்டா வொர்க் அவுட் ஆச்சினா அவன் வெற்றி வேற லெவலில் இருக்கும்என்று சந்திரகாந்த் சொல்லிக் கொண்டிருக்கும் போது கார் ஒரு பிரமாண்டமான வீட்டின் முன்னிலையில் நின்றது.

அந்த வீட்டின் வாசலில் இருந்த பெயர் பலகையில் திருமூர்த்திப் பி. ஏ. பி. எல். என்றும், சமுத்திரன் எம். ஏ. பி. எல் என்றும் பொறிக்கப்பட்டிருந்தது.

விந்தியாவும் சந்திரகாந்தும் உள்ளே நுழைய திருமூர்த்தி சந்திரகாந்த்தை கட்டியணைத்துக் கொண்டார். திருமூர்த்தி விந்தியாவையும் நலம் விசாரித்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் சுபா அவள் செய்யும் வேலையைப் பாதியில் நிறுத்தியபடி வந்து சந்திரகாந்த்தையும், விந்தியாவையும் பற்றோடு விசாரித்தாள்.

எங்க என் பேரப்பிள்ளைங்க? கூப்பிடு சுபாஎன்றார் சந்திரகாந்த்.

இதோ அங்கிள்… கூப்பிடறேன் என்று சொல்லி, சுபாஷ்… சமுத்திரா…என்று உரக்கக் கத்தினாள்.

அவர்கள் இருவரும் மாடியிலிருந்து இறங்கி ஓடி வந்தனர். அவர்களின் முகச்சாயலே அவர்களை இரட்டை குழந்தைகளென தெளிவாய் காண்பித்தது. விந்தியா அவர்கள் இருவரையும் ஆர்வமாய் கன்னங்களைக் கிள்ளி கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

அண்ணிக்கு குழந்தைங்கன்னா ரொம்ப இஷ்டம் போல… அப்போ நீங்களூம் சீக்கிரம் ஒண்ணைப் பெத்துக்கோங்கஎன்றாள்.

மழலைகளை விரும்பாதவங்க யாராவது இருக்க முடியுமா?” என்றாள் விந்தியா.

அந்த நேரத்தில் அந்த இரு வாலுகளுக்கும் சந்திரகாந்த் வாங்கி வந்த சாக்லேட், பிஸ்கேட் அனைத்தையும் சமமாகப் பிரித்துக் கொடுத்தார். அதை எடுத்துக் கொண்டு ஓடி விட விந்தியா ஸோ க்யூட்என்றாள்.

கல்யாணத்தின் போதே உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன்… ஆனா டைமே கிடைக்கலஎன்று சுபா விந்தியாவிடம் சொல்ல,

இப்பதான் டைம் இருக்கே… கூட்டிட்டு போய் ஆத்தீர பேசுஎன்றார் சந்திரகாந்த்.

சுபா அவளை மாடிக்கு அழைத்துச் சென்றாள். அங்கே இருந்த பெரிய பலகை ஊஞ்சலில் அமர்ந்தபடி நிறைய கதைகள் பேசிக்கொண்டிருந்தனர்.

பேசி கொண்டிருந்தனர் என்று சொல்ல முடியாது… சுபா ஓயாமல் பேச விந்தியா அவற்றைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். சந்திரகாந்த், திருமூர்த்தியின் நட்பு பற்றியும் சமுத்திரன், ஆதியின் இன்று வரையிலான நட்பு பற்றியும் விளக்கமாய் சுபா சொல்லிக் கொண்டிருந்தாள்.

என்ன அண்ணி… நான் பேசி பேசி உங்கள போரடிக்கிறேனோ?

இல்லவே இல்ல… நீ பேசிற விதத்தைப் பார்க்க அப்படியே என் தங்கை வனிதா மாதிரியே இருக்குஎன்றாள் விந்தியா.

எனக்கு அந்தக் கொடுப்பனை இல்ல. நான் ஒரே பொண்ணு… என்னோட வீட்டுகாருக்கும் கூடப் பிறந்தவங்கன்னு யாரும் இல்லை.என்றாள் சுபா லேசான வருத்தத்துடன்.

நீயும் இனிமே என்னோட சிஸ்டர்தான்… சரி… உங்க அம்மா வீட்டில இல்லையா?

அவங்க கோவிலுக்குப் போயிருக்காங்க… கடவுளே எழுந்து வெளியே போனு சொல்ற வரைக்கும் அவங்க வரமாட்டாங்கஎன்றாள்.

சரி சுபா… நீ என்ன பண்ணிட்டிருக்க?”

இந்த வாலுங்களை மேய்க்கிறேனே… அதுதான் என்னோட பெரிய வேலை. எங்க அப்பா என்னைப் பி. ஏ. பி. எல் படிக்க வைச்சிருக்காரு. பட் நோ யூஸ்… படிச்சதும் கல்யாணம்… அப்புறம் குழந்தைங்க… பிராக்டீஸ் பண்ண நேரம் கிடைக்கவே இல்லைஎன்றாள்.

விந்தியா மெலிதான சிரிப்போடு சொன்னாள்.

எல்லா வேலைகளுக்கும் பெண்களுக்கு நேரமிருக்கும்… ஆனால் அவங்களுக்காக என்று கொஞ்சம் நேரம் ஒதுக்க முடியாது. உனக்கான நேரத்தை ஒதுக்கினாத்தான் நமக்கான அங்கீகாரம் கிடைக்கும் சுபாஎன்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாடியின் அறை கதவை திறந்து கொண்டு வெள்ளை உடையில் சமுத்திரன் வந்தான்.

அவரு கோர்ட்டுக்கு கிளம்பிட்டாருஎன்று சுபா சொல்லிக் கொண்டிருக்கும் போதே சமுத்திரன் அவர்களை நோக்கி நடந்து வந்தான்.

சுபாவிடம் கண் ஜாடையிலேயே யாரென விந்தியாவைப் பார்த்து கேட்டான்.

ஆதி அண்ணனோட வைஃப்என்றாள் சுபா.

என் ஹஸ்பெண்ட். சில காரணங்களால் கல்யாணத்துக்கு வர முடியாமல் போயிடுச்சு… அதனால்தான் உங்களை அடையாளம் தெரியல அண்ணிஎன்று விந்தியாவைப் பார்த்து உரைத்தாள்.

விந்தியா இயல்பான புன்னகையோடு சமுத்திரனை பார்த்தாள்.

ஹெலோ விந்தியா! பார்த்ததில்லை ஆனா உங்கள பத்தி அப்பா நிறையச் சொல்லியிருக்காரு. ஐம் சமுத்திரன்என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.

மாமா உங்கள பத்தியும் நிறையச் சொல்லியிருக்காரு சமுத்திரன்என்றாள் விந்தியா.

சமுத்திரன் சுபாவை பார்த்து காபி கொடுத்தியா?” என்று கேட்டதும், சுபா முகபாவத்திலேயே இல்லை என்பது போல் தெரிவித்தாள்.

வாய் ஒயாம பேசு… ஆனா மத்த எல்லாத்தையும் மறந்துடு… போங்க மேடம்… பேசுறதை நிறுத்திட்டு காபி எடுத்துட்டு வாங்கஎன்றான்.

விந்தியா முந்திக் கொண்டு, இல்ல வேண்டாம்மாஎன்றாள்.

நீ போய் எனக்கு எடுத்துட்டு வாஎன்று சுபாவிடம் அதிகாரமாய்ச் சொன்னான்.

சுபா படியிறங்கி சென்று விட சமுத்திரன் விந்தியாவைப் பார்த்தபடி நிற்க, அவள் கொஞ்சம் இறுக்கமாக நின்று கொண்டிருந்தாள். அங்கே நிலவிய மெளனத்தைச் சமுத்திரன் கலைத்தான்.

ஆதியோட கேரக்டர் பத்தி தெரிந்தும் நீங்க அவனைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டீங்களே… பெரிய விஷயம்என்றான். அவன் சொல்வதைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் விந்தியா அமைதியாக நின்றாள்.

ஆனா பணமும் சொத்தும் ஏராளமாக இருந்தா குணத்தைப் பத்தி கவலை இல்லை… என்ன சொல்றீங்க விந்தியா?என்று சமுத்திரன் விந்தியாவை தன் வார்த்தைகளால் தாக்கினான்.

சமுத்திரன் விந்தியாவைக் காயப்படுத்தும் விதமாகவே பேசினான்.

இருப்பினும் விந்தியா சலனமற்று நின்று கொண்டிருந்தாள். அவளின் மன ஒட்டத்தை அறிந்து கொள்வது அத்தனை சுலபமல்ல. சமுத்திரன் அவளின் அமைதியை அவனுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து விந்தியாவின் மீது வார்த்தைகளால் தாக்கிக் கொண்டிருந்தான்.

அப்பா சொல்றது போல எம். டி என்ற பொறுப்பு அவ்வளவு சுலபமானதல்ல… சொகுசா வாழற மாதிரியில்லை பொறுப்புகளையும் பதவியையும் சுமப்பது.

ஸ்டேட்டஸ்னு ஒண்ணு இருக்கில்லை… அத பத்தியும் கொஞ்சம் யோசிக்கணும். புலி மாதிரி பூனை கோடு போட்டு கொண்டால் அது புலியாகிடுமா என்ன?” என்று சமுத்திரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சுபா காபியுடன் மாடியேறி வந்தாள்.

சுபாவின் முன்னிலையில் அவனின் பேச்சும் பார்வையும் மாறியிருப்பதை விந்தியாவால் உணர முடிந்தது. சிறிது நேரத்தில் சமுத்திரன் பேசுவதை நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றதும் விந்தியாவும் சுபாவும் பின்னோடு இறங்கி வந்தனர்.

சந்திரகாந்த் விந்தியாவின் பெயரில் பொறுப்புகளை மாற்றுவதற்கான சில பத்திரங்களைத் தயாரிப்பது பற்றித் திருமூர்த்தியிடம் பேசிக் கொண்டிருக்க, சமுத்திரனின் முகம் கடுகடுவென மாறியிருந்தது.

திருமூர்த்தி விந்தியாவைப் பார்த்து, “விந்தியா… உன் மாமனார் இவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுக்க நினைக்கிறாருனா… அது உன் மேல இருக்கிற அசைக்க முடியாத நம்பிக்கைதான் காரணம்என்றார்.

ஆனா என் மருமகளுக்கு என் முடிவில விருப்பமில்லையேஎன்றார் சந்திரகாந்த்.

விந்தியா சிரித்துக் கொண்டே, இல்ல மாமா… நீங்க சொல்வதைப் போல நான் ஹோட்டல் பொறுப்புகளைக் கவனிச்சுக்கிறேன்… ஆனா எம். டி போஸ்ட்டில் இல்ல. கொஞ்ச நாள் எல்லா விஷயங்களையும் கத்துக்கிட்டு நிர்வகிக்கும் திறமையை வளர்த்துக்கிட்ட பிறகுஎன்று விந்தியா சமுத்திரனை ஏளனமாய்ப் பார்த்தபடி சொன்னாள்.

ஆமாம் மாமா. ஆனா என்னைச் சம்மதிக்க வைத்த கிரெடிட் முழுக்க மிஸ்டர். சமுத்திரனைதான் சேரும்… என்னோட கிளாஸ்… ஸ்டேட்டஸ்… எல்லாவற்றையும் தெளிவா சொல்லி புரிய வைத்தார்என்று சொல்ல சமுத்திரன் அவளின் செயலால் கொஞ்சம் திகைத்து நின்றான்.

சந்திரகாந்த் சமுத்திரனை வெகுவாகப் பாராட்டிவிட்டு விந்தியாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

அங்கே சமுத்திரன் பேசியதை பற்றி விந்தியா யோசிக்கும் போது அவன் மீது கோபத்தைவிடக் குழப்பமே அதிகமானது.

ஆனால் விந்தியாவைச் சந்தித்த பின் சமுத்திரன் தெளிவாகவே இருந்தான். அவன் விந்தியாவிற்கும் ஆதித்தியாவிற்கும் இடையிலான உறவை காதலாக மாற்றுவதா அல்லது யுத்தமாக மாற்றுவதா என்று.

19

பனிப்போர்

விந்தியா அறையில் அமர்ந்து கொண்டு சில பைஃல்களைப் புரட்டியபடி இருந்தாள். ஆதித்தியா அறைக்குள் கோபமாக நுழைந்து அவன் விருப்பம் போல் ஏதேதோ புலம்ப, அவள் அவனை நிமிர்ந்து பார்க்காமல் வேலையைப் பார்த்தபடியே,

என்ன பிரச்சனை உங்களுக்கு?என்று கேட்டாள்.

நாளைக்கு நான் உன்னை அழைச்சுகிட்டு உங்க அத்தை வீட்டுக்கு விருந்துக்கு போகணும்னு மிஸ்டர். சந்திரகாந்த் ஆர்டர் பண்றாரு. அது என்ன? என்னைக் கேட்காமலே இவர் விருப்பம் போல எனக்குக் கமிட்மண்ட் பிஃக்ஸ் பண்றாரு… என்னால வரமுடியாதுஎன்று கொஞ்சம் கோபமாகச் சொன்னான் ஆதி.

விந்தியா அவனின் கோபத்தைப் பொருட்படுத்தாமல், இட்ஸ் ஓகே… நீங்க வரலைன்னா ஒண்ணும் பிரச்சனை இல்லை… நான் மட்டும் போயிட்டு வர்றேன்என்று பைஃல்களை புரட்டியபடியே பதில் சொன்னாள்.

அவள் இப்படிச் சொன்னதும் ஆதி அப்படியே திகைத்து போய் நின்றான். அவள் அத்தனை சுலபமாகச் சொன்னது ஆதித்தியாவிற்கு உறுத்தலாக இருந்தது.

சோ… நான் வராததுனால உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை… அப்படித்தானே

எஸ்என்று இம்முறையும் ரொம்பவும் இயல்பாக பதில் சொன்னாள்.

ஆதித்தியா கொஞ்ச நேரம் மௌனமாய் யோசித்துவிட்டு, அப்போ நான் உனக்குப் பிரச்சனை தரவாச்சும் வருவேன்… ஐம் கம்மிங் பார் யூ டார்லிங்என்றதும் அத்தனை நேரம் வேலையில் பிஸியாக இருந்தவள், அவனின் வார்த்தைகளைக் கேட்டு நிமிர்ந்தாள்.

உடனே ஆதித்தியா அவளை நோக்கி கண்ணடித்து விட்டு அறையை விட்டு வெளியேறினான். அவனின் குறும்புத்தனமான பார்வையையும் முரண்பாடான எண்ணங்களையும் நினைத்து,

வர முடியாதுன்னு சொன்னான்… பரவாயில்லைனு சொன்னா, ஐம் கம்மிங் பார் யூனு சொல்லிட்டுப் போறான். வாட் கைன்ட் ஆஃப் எ கேரக்டர் ஹி இஸ்!!என்று தனக்குத் தானே குழம்பினாள். மொத்தத்தில் அவனின் செயலால் அவள் வேலைகள் ஸ்தம்பித்தன.

அடுத்த நாள் காலை விருந்துக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தாள் விந்தியா. ஒரு அழகான, மென்மையான தங்க நிற பார்டர் கொண்ட சிவப்பு நிற புடவையை அணிந்து கொண்டு அவள் கண்ணாடியை பார்த்தபடி நிற்க ஆதி அவளை ரசித்தபடி பின்னோடு வந்து நின்றான்.

ரெடியா பேபி… போவோமா?என்று ஆதி சொல்ல விந்தியா அவனைத் திரும்பி பார்த்து முறைத்தாள்.

சாரி அழகா இருக்கு… ஆனா செளகரியமா இருக்குமா?”

ஸ்டாப் காலிங் மீ பேபி… எனக்கு எரிச்சலா இருக்குஎன்றாள்.

ஆதித்தியா தோள்களைக் குலுக்கிவிட்டு சிரித்துக்கொண்டே பதில் எதுவும் பேசாமல் வெளியே புறப்பட்டான். விந்தியா சந்திரகாந்த்திடம் சொல்லி விட்டு வெளியே வந்தவள் அதிர்ச்சியடைந்தாள்.

ஆதித்தியா பைக்கில் அமர்ந்து கொண்டிருந்தான்.

கார்தான் இத்தனை இருக்கே… பைக் எதுக்கு?” என்றாள் விந்தியா.

என்கிட்டே பைக் இருக்கும் போது… கார் எதுக்கு?”என்றான் விதண்டாவாதமாக.

நான் பைக்கில வரமாட்டேன்

அப்போ சரி… விந்தியாவுக்கு வர விருப்பமில்லைனு சொல்லிடட்டுமா உங்க அத்தைகிட்ட

திஸ் இஸ் டிஸ்கஸ்டிங்!என்றாள் விந்தியா எரிச்சலோடு.

நோ… இட் வில் பி எக்ஸைட்டிங் என்றான் பைக்கில் அமர்ந்து சிரித்தபடி.

விந்தியாவின் எல்லாக் கேள்விகளுக்கும் ஆதித்தியா நேர்மாறான பதில் வைத்திருந்தான். அவனிடம் வாக்குவாதம் செய்ய முடியாமல் இறுதியில் சம்மதித்தாள்.

அந்தப் பைக்கின் பின்புற இருக்கை கொஞ்சம் உயரமாய் இருக்க விந்தியா புரியாமல்,

இந்தப் பைக்கில எப்படி உட்காருவது?” என்று கேட்டாள்.

பைக்கில உட்காருவதற்கு கூடவா உனக்குக் கிளாஸ் எடுக்கணும்?

விந்தியா சிரமப்பட்டே அந்த பைக்கில் ஏறி அமர்ந்தாள். அவன் செளகரியமா இருக்குமா என்று கேட்டதற்கான அர்த்தம் அப்பொழுதுதான் புரிந்தது.

இருவரும் சிவாவின் வீட்டு வாசலில் நின்றனர்.

எப்படி இருந்தது டார்லிங்… பைக் ரைட்?

ப்ளீஸ் ஆதி… உள்ளே வந்து டார்லிங்… பேபினு கூப்பிடாதீங்கஎன்று விந்தியா கெஞ்சினாள்.

ஆதித்தியா சிரித்தபடி ஓகே டார்லிங்என்றான்.

விந்தியா தலையில் அடித்துக் கொண்டு வேகமாக உள்ளே சென்றாள்.

ஆதித்தியா உள்ளே நுழைந்ததும் சரோஜாவும், தனசேகரனும் அவனை மரியாதையோடு வரவேற்றனர். வருண், நந்தினியோடு விருந்துக்கு மாதவியும் வந்திருந்தாள்.

 மகளைப் பார்த்தவுடன் பூரிப்புடன் கட்டியணைத்துக் கொள்ள, வருண் ஆதித்தியாவை வாசலில் நின்று வரவேற்று உள்ளே அழைத்து வந்தான். எல்லோருமே ஆதித்தியாவை பெரும் மதிப்போடு வரவேற்க, சிவா மட்டும் அறையிலிருந்து வெளியே வராமல் உள்ளேயே இருந்தான்.

ஆதித்தியா பெயருக்காக எல்லோரிடமும் சிரித்தாலும், சிந்துவைப் பார்த்ததும் ஆனந்தமாய்த் தூக்கி வாரிக் கொஞ்ச ஆரம்பித்தான். சிந்துவிடம் சாக்லேட்டை ஒளித்து வைத்து விளையாடிக் கொண்டிருந்தவன் பின்னர் அவளைத் தவிக்க வைத்து நீட்டினான்.

திஸ் இஸ் பாஃர் மை குட்டி டார்லிங்என்று ஆதி சிந்துவிடம் சொல்ல விந்தியா அவளை அறியாமல் திரும்பி பார்த்தாள்.

ஆதித்தியாவும் அதை எதிர்பார்த்தவன் போல அவளை நோக்கி குறும்போடு கண்ணடிக்க விந்தியா உடனே முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஆதியின் மீது அவளுக்கு ஏற்பட்ட ஈர்ப்பை மறைக்க முயற்சி செய்து, சில நேரங்களில் அவளை அறியாமல் அவனிடம் மாட்டிக் கொள்கிறாள்.

ஆதித்தியா சிந்துவோடு விளையாடிக் கொண்டிருக்க விந்தியா, தனசேகரனுடன் அமர்ந்து டி. வி பார்த்துக் கொண்டிருந்தாள்.

இந்த மாதிரி ஆட்கள் இருக்கும் வரை நாடு உருப்படாதுஎன்றார் தனசேகரன் டி. வி பார்த்தபடி!

யாரை சொல்றீங்க மாமா?

அவன்தான் சென்டிரல் மினிஸ்டர் வித்தியாதரன். பல கோடிக்கணக்கான சொத்துக்களை மடக்கிப் போட்டுக் கொண்டு சாமியார் மாதிரி வேஷம் போடுறான்

விந்தியா சிரித்துக் கொண்டே, கோடிக்கணக்கான பேர் செய்யும் தப்பிற்கு நாம ஆயிரம் பேரை குறைச் சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன நியாயம் இருக்கு?என்றாள்.

நீ சொல்வது சரிதான் விந்தியா… ஓட்டு போடுகிறவர்கள் சரியா இல்லாததுதான் இவன மாதிரி ஆட்கள் உருவாவதற்கான காரணம்என்று தனசேகரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரோஜா அருகில் வந்து நின்றாள்.

வீட்டில விருந்துக்கு தயார் பண்ண வேண்டாமா? நீங்க பாட்டுக்கு ஊர் கதை பேசிட்டிருக்கீங்க… கடைக்குக் கிளம்புங்கஎன்றாள் சரோஜா.

இப்ப எதுக்கு மாமாவை தொந்தரவு பண்றீங்க? பனைமரம் மாதிரி ஒரு பிள்ளையை வளர்த்து வைச்சிருக்கீங்களே அவனை அனுப்புங்க அத்தைஎன்று விந்தியா வேண்டுமென்றே சிவாவின் காதுகளில் விழும்படி உரக்கச் சொன்னாள். சிவா காதுகளில் விழுந்தாலும் அவன் அமைதியாகவே இருந்தான்.

அவனுக்கு ஏதோ வேலை இருக்காம்மாஎன்றாள் சரோஜா.

அவருக்குத்தான் வேலை இருக்கு… நாங்க வெட்டியா இருக்கோம்மா என்ன… ஏன் மாமா?” என்று விந்தியா தன் மாமா தனசேகரனை தூண்டிவிட்டாள்.

அதானேஎன்று அவளிற்கு ஒத்து ஊதினார் தனசேகரன்.

சரோஜா என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருக்க சிவா கோபமடைந்தவனாக வெளியே வந்தான்.

என்னடி பிரச்சனை உனக்கு… என்னை வம்பு இழுக்கத்தான் வந்தியாக்கும்என்று அவளிடம் கோபமாக பேச அத்தனை நேரம் அங்கே நடந்தவற்றைக் கவனிக்காமல் சிந்துவுடன் விளையாடிக் கொண்டிருந்த ஆதித்தியா கணநேரத்தில் சிவாவை திரும்பி பார்த்தான். விந்தியாவிடம் அவன் கோபமாகப் பேசிய விதம் அவனுக்குச் சுருக்கென்று வலித்தது.

ஆதித்தியாவிடம் ஏற்கனவே விந்தியா டிபோட்டு அழைக்கக் கூடாது எனக் கண்டித்திருக்க, அதைப் போல் சிவா பேசும் போது இயல்பாக எடுத்துக் கொண்டு சிரித்தது, அவனை மேலும் சிவாவின் மீதான வெறுப்பைத் தூண்டியது.

விந்தியாவும் சிவாவும் இதைப் பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் சண்டை போட்டுக் கொண்டிருக்க, சரோஜா மட்டும் ஆதித்தியாவின் பார்வையைக் கவனித்து புரிந்தும் கொண்டாள்.

சிவாவை தனியாக அழைத்துக் கண்டித்தாள். இருப்பினும் இருபது வருட நட்பினை நேற்று வந்தவனுக்காக மாற்ற வேண்டும் என நினைப்பது அவனுக்கு எரிச்சலை மூட்டியது.

விருந்து முடியும் வரை ஆதித்தியா கொஞ்சம் இறுக்கமாகவே இருந்தான். அதன் காரணத்தை விந்தியா புரிந்து கொள்ளாத போதும் சிவா அதன் அர்த்தத்தை உணர்ந்து கொண்டான். விந்தியாவின் மீதிருக்கும் உரிமையை நிலைநாட்ட சிவாவுக்கும் ஆதிக்கும் இடையில் ஒரு பனிப்போர் தொடங்கியது.

விருந்து முடிந்து ஆதியும் விந்தியாவும் வீட்டு வாசலை அடைந்தபோது, ஆதி தன் மனதை துளைத்த அந்தக் கேள்வியை விந்தியாவிடம் கேட்டான்.

20

மதிப்புக்குரியவள்

வீட்டிற்குள் செல்ல இருந்த விந்தியாவை ஆதித்தியா அழைத்தான்.

விந்தியா… ஒரு நிமிஷம்அவள் முன்னேறிச் செல்லாமல் அவனைத் திரும்பி பார்த்து அமைதியாக நின்றாள்.

கேட்கிறனேன்னு தப்பா எடுத்துக்காதே… ஊருக்கெல்லாம் மரியாதை சொல்லித் தர்ற. உன் தங்கச்சி புருஷனுக்கு சொல்லி தரலியா? அவனுக்கு மரியாதைன்னா என்னன்னு தெரியாதா?”

அவனின் கேள்வியின் காரணத்தைப் புரிந்து கொண்ட விந்தியா இயல்பாகச் சிரித்தபடி,  “நண்பர்களுக்குள்ள யாராவது மரியாதையோட பேசிப்பாங்களா என்ன? அப்படிப் பழகினா அந்த நட்பு இயந்திரத்தனமா இருக்காது? அதுவுமில்லாம எங்க நட்பு ஜஸ்ட் டூ, த்ரீ இயர்ஸ் இல்ல… மோர்தென் டுவென்ட்டி இயர்ஸ்.

அவன் எப்பவும் என்கிட்ட அப்படித்தான் பேசுவான். நானும் வாடா போடானுதான் பேசுவேன். இன்னைக்கு நம்ம ரெண்டு பேருக்குமிடையே இருக்கிற கமிட்மென்டுக்காகவெல்லாம் எங்க பழக்க வழக்கத்தை மாத்திக்க முடியாது… சோ சாரிஎன்று ஒரு விநாடி கூட யோசிக்காமல் அவள் மனதில் தோன்றியதை சொல்லி விட்டு சென்றாள்.

கண்களைப் பார்த்து அவள் தயங்காமல் சொன்ன விதமும் அந்தப் பதிலில் இருந்த திமிரும் அவனை ரசிக்க வைத்தது. அவள் தன் நட்பை யாருக்காகவும் மாற்றிக் கொள் முடியாது என்று கர்வமாய் சொன்னாலும் அது அழகாகவே இருந்தது. இவை எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் சிவாவின் மீதான பொறாமையும் வெறுப்பும் உள்ளுக்குள் மீதம் இருந்தது.

விந்தியா அன்று முதன்முறையாக ஹோட்டலின் முக்கியப் பொறுப்புகளை எடுத்து கொள்வதற்காக புறப்பட்டாள். ஆதித்தியா சந்திரகாந்தை வழிமறித்து நின்று கொண்டு தனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாக சொன்னான்.

எதுக்கு ஆதி?”

ஒரு நல்ல சைட் விலைக்கு வந்திருக்கு… அதை டிலே பண்ணாம வாங்கணும்

ஓகே… சைட்டோட கம்ப்ளீட் டீடைல்ஸை எனக்கு மெயில் பண்ணுஎன்றார் சந்திரகாந்த்.

நான் உங்ககிட்ட எல்லாவற்றிற்கும் ஆதாரம் கொடுத்துட்டே இருக்கணுமா? என் மேல உங்களுக்கு இம்மி அளவு கூட நம்பிக்கை இல்லையா?என்று தன் கோபத்தை வெளிப்படுத்தினான் ஆதி.

இல்லைஎன்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு சந்திரகாந்த் வேகமாக வெளியே சென்றுவிட்டார்.

ஆதித்தியா எரிச்சலடைந்தவனாய் சோபாவில் தலையைச் சாய்த்தபடி அமர்ந்து கொண்டான். விந்தியா ஆதியின் அருகில் வந்து நின்றாள்.

உங்க அப்பா…என்று விந்தியா ஏதோ சொல்ல யத்தனிக்க ஆதி அவளை நிமிர்ந்து பார்த்து முறைத்தான்.

சரி… உங்க அப்பா இல்லை… மிஸ்டர். சந்திரகாந்த்… என்னோட மாமனார்… உங்களுக்குச் சம்பந்தமில்லாத ஒருத்தர்… அவர்கிட்ட எந்த உரிமையில் பணம் எதிர்பார்க்கிறீங்க ஆதித்தியா?

என்ன உங்க மாமானாருக்கு சப்போர்ட்டா?

இல்லவே இல்ல… உங்களுக்காகத்தான் பேசிறேன் ஆதி. உங்களோட பிஸினஸ் சம்பந்தப்பட்ட பைஃலை படிச்சேன்… இட் வாஸ் எக்ஸெலன்ட் ஆதி. இப்படி ஒரு வித்தியசமான ஐடியாவை வைச்சுக்கிட்டு நீங்க ஏன் மாமா பின்னாடி போகணும்? பேங்கில லோன் அப்ளை பண்ணலாமே…

நீ தெரிஞ்சுதான் பேசிறியா? நான் கேட்கிறது பெரிய தொகை… பேங்கில எல்லாம் பாஸிபில் இல்லை

விந்தியா அவனைப் பார்த்து லேசான புன்னகையோடு,  நத்திங் இஸ் இம்பாஸிபில்… இந்தப் பணமும் சொத்தும் இருக்கும் போது நான் ஏன் வெளிய அலையணும்னு யோசிக்கிறீங்க உங்களுக்குத் தெரியுமா?

பெரிய ஆலமர நிழலில் சிறு புல் பூண்டு கூட முளைக்காது. கொஞ்சமாவது சிரமப்படணும். நீங்க வெற்றி பெறும் போது அது உங்க பெயரை மட்டும் சொல்வதாக இருக்கணும்…

இந்தக் கதவை பார்த்தீங்களா? இது திறந்திருக்கிற வரைக்கும் இந்த வீட்டை விட்டு வெளியே போகும் வேறு வழிகள் கண்ணுக்குத் தெரியாது. அதுவே இந்தக் கதவை அடைச்சிட்டா வெளியே போவதற்கான வேற வழியைத் தேடி போகத் தோன்றும்.

அப்படித்தான்இந்தச் சொத்தும் பணமும் இல்லாமல் போனால், நீங்க என்ன செய்வீங்க… உங்க பிஸினஸுக்கான இன்வஸ்மென்ட்டை எப்படி ஏற்பாடு பண்ணுவீங்க

 அப்படி யோசிச்சு பாருங்க… சாரி ஆதி! ஏதோ சொல்லணும்னு தோணுச்சு… சொல்லிட்டேன். எடுத்துக்கிறதும் எடுத்துக்காததும் உங்க விருப்பம்என்று சொல்லிவிட்டு விந்தியா வெளியே புறப்பட்டாள்.

அம்மாவின் அரவணைப்பில் வளராத ஆதித்தியாவிற்கு பெண்மையின் மதிப்பு புரிந்ததில்லை. முதன் முறையாய் ஒரு பெண் அவன் வாழ்வில் மதிப்புகுரியவளாய் மாறுகிறாள். விந்தியா சொன்ன ஒவ்வொரு வார்த்தையின் பொருளும் அவனின் மனதில் அழுத்தமாய் பதிந்தது.

ஆதித்தியா சமுத்திரன் ஆபிஸில் அமர்ந்திருந்தான்.

நீ எதுக்கு லோனுக்காக அலையணும்… உனக்கென்னடா தலையெழுத்து?” என்றான் சமுத்திரன்.

முதல் முறையாய் என்னோட தப்பு எனக்குப் புரியுது

என்ன சொல்ல வர்ற? எனக்குப் புரியலயே?”

புரியலைனா பரவாயில்ல… எனக்கு இது சம்பந்தமா நீதான்டா உதவி செய்யணும்”

சமுத்திரன் சிரித்துக் கொண்டே,  லாயர்ஸ் யாருக்கும் பேங்கில லோன் தரமாட்டானுங்க ரொம்ப ரூல்ஸ் பேசுவோமே. ஏமாந்தவனுக்குதான் தருவானூங்க… இதுல நான் என்னடா உதவுறது?” என்றான்.

நான் உன்னைக்கூட வந்து லோன் வாங்கித் தரவா சொன்னேன்? சில டாகுமெண்ட்ஸ் ரெடி பண்ணிக் கொடு

செஞ்சிட்டா போச்சு… ஆனா உனக்கு என்ன திடீர் ஞானோதயம்?

விந்தியா…என்றான்.

சமுத்திரனின் முகப்பாவம் அப்படியே மாறிப் போனது.

ஒரு பொண்ணுக்காக உன்னை நீ மாத்திக்கிட்டியா?

மாறுவதா? நானா? அவ சொன்ன விதமும் சொன்ன விஷயமும் பிடிச்சிருந்துச்சு… எடுத்துக்கிட்டேன்… தட்ஸ் இட்

ம்… பாத்து நடந்துக்கோ… அப்பா பொறுப்பை எல்லாம் தூக்கி விந்தியாவிடம் கொடுத்துட்டாருனு கேள்விப்பட்டேன்எதுவும் தெரியாதவன் போல் சமுத்திரன் ஆதியிடம் விசாரித்தான்.

அவளால மேனேஜ் பண்ண முடியும்னு அவர் நினைச்சிருக்கலாம்… அதில் என்ன இருக்கு?என்றான் ஆதி.

சமுத்திரனுக்கு ஆதித்தியாவின் பதில் அதிர்ச்சியாக இருந்தது. சந்திரகாந்த் எது செய்தாலும் குறை சொல்லும் குணமுடையவன் முதல் முறையாய் அவர் செயலை நியாயப்படுத்துகிறான்.

விந்தியாவைப் பற்றி ஏதாவது குறை கூறினாள் அது தனக்குத்தானே வினையாக முடியும் என்று சமுத்திரன் அதோடு அமைதியானான். விந்தியாவுடன் ஆதி இன்னும் சில நாட்கள் இருந்தால் அவன் தலைகீழாய் மாறிவிடுவானோ என்ற எண்ணம் சமுத்திரனுக்கு உதித்தது.

வனிதா பெட்டிக்குள் சிவாவின் உடைகளை அடுக்கிக் கொண்டிருந்தாள். அவள் முகம் வாடிப் போயிருந்தது. சிவா வேறு சில முக்கியமான பொருட்களை சின்னதாய் ஒரு பேக் ஒன்றில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

எப்போ வருவீங்க மாமா?

கரெக்டா சொல்ல முடியாது வனிதா… ஒரு முக்கியமான கேஸ் விஷயமா போகிறேன்

வனிதா ரொம்பவும் சோகமானாள். அதைச் சிவாவும் கவனித்தான்.

என்னை விட்டுட்டு ஒரு மாசம் அம்மா வீட்டில் ஜாலியா இருந்த… இப்ப மட்டும் என்னடி ஆச்சு?” வனிதா அவனிடம் எதுவும் சொல்லாமல் சோகமயமாய் அமர்ந்து கொண்டாள்.

ஏய் அழுமூஞ்சி… போய் உங்க அம்மா வீட்டில் இருந்துட்டு வாயேன்… உன் தம்பி மனைவிக்கு துணையா இருக்கும்

வேண்டாம்எனப் பதில் சொல்லிவிட்டு பொம்மைக்காக அழும் குழந்தை போல முகத்தை வைத்து கொண்டாள்.

என்னடி இது? நீ இப்படி முகத்தைத் தூக்கி வைச்சிட்டிருந்தா நான் போற வேலை எப்படி நடக்கும்? அப்புறம் எப்படி நான் சீக்கிரம் வரமுடியும்?”

வனிதா ரொம்பவும் பிராயத்தனப்பட்டு முகத்தைத் துடைத்துக் கொண்டு சிரித்தாள்.

இது நல்ல பெண்ணுக்கு அழகுஎன்று சொல்லி செல்லமாகக் கன்னத்தில் தட்டினான்.

நான் ஒரு விஷயம் சொன்னால் கோபப்பபட மாட்டீங்களே?

முதலில் விஷயத்தைச் சொல்லு என்றான் சிவா.

நீங்க வீட்டுக்கு வந்த அக்காவிடம் அப்படி நடந்திருக்கக் கூடாது. அவ மனசு ரொம்ப வருத்தப்பட்டிருக்கும்… நீங்க கோவா கிளம்பும் முன் அக்காகிட்ட ஒரு வார்த்தை பேசுங்க மாமா… ப்ளீஸ்என்று சொல்லி அவனுடைய செல்போனை நீட்டினாள்.

சிவாவின் மனதிலும் அதே எண்ணம் இருந்ததினால் செல்போனை வாங்கிக் கொண்டான். அவன் விந்தியாவிற்கு போன் போட்டதும் வனிதா வேலை இருப்பதாகச் சொல்லி அங்கிருந்து அகன்றாள்.

விந்தியா அழைப்பை ஏற்றாலும் சிவா எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தான். விந்தியாவும் அவனே பேசட்டும் என மௌனம் காத்தாள்.

இறுதியாக விந்தியா, தாங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் தற்சமயம் மிகுந்த கோபத்தில் உள்ளார் என்று சொன்னதும் சிவா மறுபுறத்தில் சிரித்துவிட்டான்.

விந்தியாவும் சிவாவும் எப்படியோ சண்டை போட்டு சமாதானமாகினர்.

சிவாவிடம் தான் ஹோட்டல் ஆதித்தியாவில் முக்கியப் பொறுப்புகளைக் கவனிப்பதாகச் சொன்னாள். அவள் அப்படி சொன்னவுடன் சிவா விந்தியாவிடம் கேஸ் விஷயமாக ஒரு ரகசிய உதவி ஒன்றை கேட்டான். அது பற்றி விளக்கமாக உரைத்தான்.

அவள் சந்தேகம் கொண்டவளாய் அவனிடம் இது சாத்தியமா?” என்று கேட்டாள்.

நீ நினைத்தால் முடியும்என்று சிவா சொன்னதும் விந்தியா தெளிவுற்றவளாய் அவன் கேட்ட உதவியைக் கண்டிப்பாகச் செய்வதாகக் கூறி இணைப்பைத் துண்டித்தாள்.

சிவாவுக்கு விந்தியா செய்யப்போகும் உதவி, அவர்கள் வாழ்வில் பெரும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்று அவர்கள் அப்போது உணரந்திருக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content