AA-3
3
புகைந்து கொண்டிருந்த நெருப்பினை அணைத்த திவ்யா மறுபடியும் நட்புக்களுடன் அரட்டை அடிக்கத் துவங்கினாள்.
“நாளைக்கு பெரியவங்களை எப்படி வெளியே அனுப்பி வைப்பது” என்பது பற்றி தான் ஆலோசனை நடந்து கொண்டிருந்தது.
நாளை பக்கத்து ஊரில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிப்படும் விழா ஆரம்பமாகிறது ஆதலால் அனைவரையும் அங்கு அனுப்பி வைத்து விடுவோம் என திட்டமிட்டனர்.
இவர்கள் திட்டமிட்டபடி பெரியவர்கள் காலையிலேயே தலைமுழுகிவிட்டு விரதமிருந்து கோவிலுக்கு சென்றுவிட, அந்த நண்பர்கள் குதூகலித்தனர்.
அந்த நட்புகூட்டம் வீட்டில் சந்தோஷமாக உலா வந்த அதேநேரம் ராகுல் விமானநிலையத்திலிருந்து கிளம்பிவிட்டதாக என்று லதா மற்ற நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்க, எல்லோரும் அவன் வருகைக்காக மிகுந்த ஆவலோடு காத்திருந்தனர்.
“ஏய் லதா நீ போய் ஒரு நல்ல புடவையை எடுத்து கட்டு முதன் முதலில் உன் காதலனை சந்திக்கும் தருணம் இது ,இப்படி ஏனோதானோ என்று இருந்தால் நல்லாவா இருக்கும்” என்று திவ்யா கூற,
அவள் சொல்படி ஒரு நல்ல அரக்கு நிறச்சேலையை உடுத்திக்கொண்டு காத்திருந்தாள். “ஹாய் ப்ரண்ட்ஸ்” என்று கூச்சலிட்டபடியே வந்து வீட்டினுள் நுழைந்தான் ராகுல். அவனை கண்ட அடுத்த நொடி திவ்யா பின் ஒளிந்துக்கொண்டாள் லதா.
“ஆமா லதா எங்கே?” என்று அவன் வினவ.
ஒளிந்துக்கொண்டிருந்த லதா அவன் கண்முன்னே வந்து வெட்கத்தோடு நிற்க, அவளை முதன்முதலில் பார்த்த அந்த நொடி அவனை அவன் பெயரையே மறக்க வைத்தது.
“லதா.. இந்த புடவையில் நீ ரொம்பவே அழகா இருக்க” என்று அவன் கூற
வெட்கத்தில் அந்த இடத்தை விட்டு ஓடிச்சென்றாள். பின்னாடியே இவனும் அவளை பிடிக்க ஓடினான்.
“ம்ம்ம் சரியா போச்சு போ. இதுங்க காதல் கண்ணாமூச்சி விளையாட ஆரம்பிச்சாச்சு” என்று சிவா சளித்துகொள்ள.
“ஹலோ சிவா அவர்களே! தாங்களும் இப்படிதானே ஒரு காலத்தில் அனுவுடன் விளையாடிக்கொண்டு இருந்தீர்கள்”. என்று ஜெய் கலாய்க்க, “எனக்கும் ஒருகாலம் வரும் மச்சான் உங்களை கலாய்க்க அப்ப வச்சிக்கிறேன் கச்சேரி”. என்று சிவா கூற இப்படியே பேச்சு வளர்ந்தது.
ஓடிச்சென்ற லதா “அந்த அறைக்குள்” இருக்கும் கதவினை திறந்து உள்ளே ஓட அவளை விரட்டிய அவனால் அந்த அறைக்குள் செல்லவே முடியவில்லை கால் வைக்கிறான். ஆனால் நகரவே இயலவில்லை. இந்த மாற்றத்தை கண்ட அவனுக்கு அதிர்ச்சியில் தலை சுற்றியது.
“லதா…லதா..” என்று கத்தினான் அவன்.
என்ன ஆச்சு ராகுல் என்று ஓடிவந்து பார்த்த லதா, “உ…உன்னால ஏன் உள்ள வரமுடியல்லை” என்று கேட்க,
“தெரியவில்லை லதா” என்று பதறினான். இவனது பதற்றம் அவளுக்கும் தொற்றியது
“டேய் வாடா நம்ப போய்விடலாம். ஏற்கனவே இந்த அறைக்குள் இவங்க வீட்டில் யாரும் போகமாட்டாங்க நான் ஓடிவர அவசரத்தில் இந்த அறைக்கதவை திறந்துட்டேன். இரு இந்த கதவை சாத்திட்டு நம்ப போய்விடலாம்” என்று அவனுடன் வந்து ஹாலில் அமர்ந்திருக்கும் நட்புகளுடன் இவர்களும் அமர்ந்துக்கொண்டனர்.
“ஆமா மிஸ்டர் ராகுல் என்ன ஆச்சு முகமே வாடியிருக்கு?” என்று திவ்யா கேட்க.
“விடு திவ்யா அவரு பார்க்க கூடாததை எதையோ பார்த்து விட்டார் போல” என்று ஜெய் நக்கலடிக்க.
“அதெல்லாம் ஒன்றுமில்லை” என்று கூறிய ராகுல் மனதிற்குள் அந்த அறையை பற்றின எண்ணவோட்டங்களை ஓட்டிக்கொண்டிருக்க
“ஓகே எல்லாரும் சேர்ந்து டிபன் சாப்பிடலாம் நான் உணவகம் ல இருந்து வரவழைத்து இருக்கிறேன்” என்று திவ்யா கூறிவிட்டு அனைவருக்கும் தட்டை கழுவி டைனிங் டேபிளில் வைக்க,
அனைவரும் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் தோட்டத்திற்கு செல்லலாம் என்று முடிவெடுத்தனர். எல்லோரும் தயாராகிட்டு இருக்க ராகுல் ஏதோ ஒரு டைரியை கையில் வைத்துக்கொண்டு புரட்டிக்கொண்டு இருந்தான்.
“ராகுல் இது என்ன டைரி? வாங்க கிளம்புங்க” என்று லதா அவனிடம் கூற, அந்த டைரியை மூடியவன் தனது பையில் வைத்துவிட்டு அவர்களுடன் தோட்டத்திற்கு சென்றான்.
அழகிய சாமந்தி மலர்களின் செடிகளும் இருக்க, ஒருபக்கம் வாழைத்தோட்டமும் மறுபக்கம் தென்னந்தோப்பும் இருக்க, அந்த அழகிய கிராமத்து காட்சி இவர்கள் கண்முன்னே நின்றது.
“சூப்பரா இருக்கு இந்த இடம்” என்று அனு கூற.
“ஹாஹா இந்த இடம் எங்க தாத்தா காலத்தில் வாங்கியது. இப்ப இதை பராமரிப்பது எங்க அப்பா தான் என்று மெச்சிக்கொண்டாள் திவ்யா.
“ஆமாம் அங்கே என்ன கிணரு? இதுவும் உங்கள் தாத்தா தோண்டின கிணறா?” என்று அனு நக்கலடிக்க. அனைவரும் சிரித்தனர்.
அந்த கிணறு பொதுகிணறு யார் வேண்டுமானாலும் தண்ணீர் எடுத்துக்கலாம். அங்க குளியலும் போடலாம். பெரும்பாலும் எல்லாம் இங்கே தான் நீச்சல் கற்றுக்கொள்வார்கள் என்று திவ்யா கூற.
“அப்படினா அனு வா உனக்கு இங்கே நீச்சல் கற்றுத்தரேன்” என்று சிவா கூற
“ஆமாம்…நாமும் கொஞ்ச நேரம் குளியல் போடலாம்” என்று ஜெய்யும் விஜயும் கூற அனைவரும் கிணற்றில் குதித்தனர். ஆனால் திவ்யா மட்டுமே நீச்சல் தெரியாத காரணத்தால் கிணற்றில் குதிக்கவேயில்லை. அனுவிற்கு சுரக்காய் மட்டை இடுப்பில் கட்டிவிட்டதால் நீச்சல் பழகிக்கொண்டிருந்தாள்.
எல்லோரும் கிணற்றில் நீச்சலடித்து கொண்டிருந்த அந்த கணத்தில் எதிர்பாராவிதமாக திவ்யா கிணற்றில் தவறி விழுந்தாள். அவளை நண்பர்கள் அனைவரும் காப்பாற்ற போராடினர்.
“மச்சி அவ உள்ள போயிட்டா டா” என்று ஜெய் கூற.
“ஒன்றும் பயமில்லை உள்நீச்சலடித்து அவளை நான் தூக்கிட்டு வரேன்”. நீங்க எல்லாரும் அனுவை பார்த்துக்கோங்க அவளுக்கும் நீச்சலடிக்க வராது என்று சிவா கூறிவிட்டு உள்ளே ஆழத்தில் சென்றான் அவளுடைய கால்கள் துப்பட்டாவால் கட்டப்பட்ட நிலையில் அவள் போராடிக்கொண்டிருக்க சிவா அவளை பிடித்து மேலே தூக்கிவந்தான்.
அவளை படுக்க வைத்து அவள் குடித்துவிட்ட தண்ணீரை எல்லாம் வயிற்றில் அழுத்தம் கொடுத்து வெளியே எடுத்தனர்.
பிறகு மூச்சு வந்தது அவளுக்கு பயத்தில் என்ன பேசுவது என்று கூட அவளால் யோசிக்க முடியவில்லை.
“எப்படி நீ விழுந்த?” லதா கேட்க.
“எ..என்னால எதையும் சொல்ல முடியல கொஞ்சம் நேரம் என்னை அமைதியா விடுங்க நான் மற்றதெல்லாம் அப்றம் சொல்றேன்” என்று கூறிவிட்டு எழ முயற்சித்தாள்.
“சரி நீ களைப்பா இருப்ப இரு நான் சென்று உனக்கு எதாவது குடிக்க டீயோ காபியோ வாங்கிட்டு வரேன்” என்று விஜய் சென்றான். மற்ற அனைவரும் அங்கேயே நின்றிருந்தனர். லதாவும் அனுவும் அங்கிருந்த சாமந்தி செடியில் பூத்துக்குலுங்கும் மலர்களை கண்டு ரசித்துக்கொண்டே சில மலர்களை பறித்தபடி இருந்தனர்.
“இந்தா திவ்யா டீ குடி என்று நீட்டினான் விஜய்” டீயை வாங்கி மடக்கென்று பருகியவள்,
“சரி வாங்க எல்லாரும் வீட்டுக்கு போகலாம்” என்றழைக்க அனைவரும் வீட்டை நோக்கி பயணித்தனர். வீட்டுக்கு வந்தடைந்ததும் அவரவர் அறையில் சென்று புகுந்து கொள்ள..
“என்னங்க” என்று அனு பேச்சை துவங்கினாள்.
“சொல்லுடி” என்றான் சிவா.
“ஏங்க உங்கள் ப்ரண்டு திவ்யா எப்படிங்க கால்கள் கட்டிய நிலையில் கிணற்றில் விழுந்திருக்க முடியும்? எனக்கு என்னமோ யாரோ அவங்களை தள்ளி விட்டமாதிரி தோனுது.”
“நீ சொல்றது உண்மை தான் அப்படி என்றால் யார் அவளை தள்ளியிருக்க முடியும்? அவளை தவிர எல்லோரும் கிணற்றில் அல்லவா நீந்திக்கொண்டு இருந்தோம். நமக்கு அருகாமையில் ஆள் நடமாட்டம் இல்லாமல் தானே இருந்தது என்று சிவா விவரத்தை எடுத்து சொல்ல, “ம்ம்ம்” என்று தலையசித்து விட்டு
“சரிங்க நான் போய் எல்லாருக்கும் மதிய உணவு தயார் பன்னிட்டு வரேன். இப்ப இருக்கிற நிலமையில் திவ்யா சமையலறைக்கு போக வேண்டாம். லதாவும் ராகுல் வந்த சந்தோஷத்துல மெய்மறந்து அவனுடன் பேசிக்கொண்டு இருக்காங்க அதனால நானே சமைக்கிறேன் என்று கூற நகர்ந்த அவளை கையை பிடித்து இழுத்தவன்
“அனு…ஐ லவ் யூ” என்று அவள் கண்களை பார்த்து கூற,
“என்னங்க திடீருனு? நானே பலமுறை கேட்டாலும் இந்த ஐலவ்யூ சொல்லவே மாட்டிங்க இப்ப என்ன புதுசா?”
“ஹாஹா இவ்வளவு அட்ஜஸ்ட் பன்னி அழகா என்னோட வாழ்ற உனக்கு இந்த ஐலவ்யூ கூட சொல்லவில்லை என்றால் எப்படி?” என்று புன்முறுவலுடன் கூற.
“அப்படி என்ன நான் பன்னேன்” என்று அவள் கேட்க
“கல்யாணம் ஆன புதுசுல எல்லா புருஷனும் ஊட்டி கொடைக்கானல் னு கூட்டிட்டு போவான் ஆனால் நான் பட்ஜெட் ப்ராப்ளம் னு இப்படி ப்ரண்டு வீட்டுக்கு கூட்டி வந்துருக்கேன் னு நீ கொஞ்சம் கூட வருத்தமில்லாமல் என் ப்ரண்ட்ஸ் கூட சகஜமா பேசுற பழகுற எல்லா வேலையும் எடுத்து செய்ற இதைவிட வேறு என்ன வேண்டும்” என்று அவன் கூறி அவளை அணைத்து முத்தமிட்டான். அவனது பிடியிலிருந்து நழுவியவள் சமையலறைக்குச் சென்றாள்.
எந்த காய்கறியை சமைக்கலாம் என்ற குழப்பம் வந்துவிட குளிர்சாதன பெட்டியை திறந்தாள். முருங்கை காய் மற்றும் பீட்ரூட் தென்பட பீட்ரூட் பொறியல் மற்றும் முருங்கை சாம்பார் என முடிவுக்கு வர அடுத்து புளி கரைசலுக்கு புளி எங்கே எனத்தேட துவங்கினாள்.
அதற்குள் அங்கிருந்த விரகடுப்பை பற்றவைத்து அரிசி களைந்து சாதம் வேகவைக்க அடுப்பில் வைத்தாள். இதற்கிடையில் புளி டப்பா தேடும் பணி தீவிரமாக தொடர்ந்தது . “அய்யோ எங்க இந்த புளி டப்பா காணோம்” என்று மும்மரமாக தேடினாள்
இதற்கிடையில் பீட்ரூட் கழுவி விட்டு அதை கத்தியின் உதவியால் நறுக்கிக்கொண்டிருக்க திடீரென அவள் திரும்பி பார்க்க கேஸ் அடுப்பிலிருந்து பற்ற வைத்து தீ எரிந்துக்கொண்டிருக்க..
“நான் எப்போ கேஸ் பத்தவைச்சன்”? அது எப்படி தானாக எரிகிறது ஒன்னும் புரியலையே. சரி நம்ப கடாய் வைப்போம் சாம்பார் தாளிக்க என்று கடாய் வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி தாளித்தாள். எல்லாம் வதங்கிக்கொண்டிருக்க மீண்டும் புளி டப்பாவை தேடும் படலம் துவங்கியது.
அவள் ஒருபக்கம் தேடிக்கொண்டு இருக்க அவள் வைத்திருந்த பீட்ரூட்டை யாரோ நறுக்குவதுபோல் சத்தம் கேட்க திரும்பி பார்த்தால் யாருமில்லை.
“ஆத்தி…நம்ப மிச்சம் வைத்த பீட்ரூட் யாருடா நறுக்கியது”
இங்கே என்ன நடக்கிறது? சரி புளியை தேடுவோம் என்று பக்கத்தில் இருந்த ஸ்டுலை எடுத்து போட்டு ஏறினாள். அங்கு அட்டத்தில் வரிசையாக டப்பா அடுக்கி வைத்திருந்த நிலையில் புளி டப்பாவை ஒருவழியாக எடுத்து திறந்து பார்த்தாள்.
“அப்பாடா இப்பதான் ஒருவழியாக புளி கிடைச்சிது.. அய்யோ இந்நேரம் சாதமே குழைஞ்சிருக்குமே” என்று பயத்தில் ஸ்டுலில் இருந்து மெதுவாக இறங்கி விரகடுப்பை நோட்டமிட சாதம் வெந்த பதத்தில் இருந்தது.
‘சாதம் பதம் பார்த்து யார் இறக்கி வச்சாங்க அய்யோ ஒன்னும் புரியலையே?’ என்று அதிர்ச்சியில் குழம்பி நின்றாள் அனு!