En iniya pynthamizhe-3
3
பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் மாவட்டத்திலேயே முதல் மாணவியாக வந்திருந்தாள் பைந்தமிழ். மகளின் சாதனையில் சகுந்தலாவும், மதுசூதனனும் மகிழ்ந்து நெகிழ்ந்து போயினர்.
“படிச்சா நம்ம தமிழை போல படிக்கோனோம்” என்று அந்த ஊர் மக்கள் தம் பிள்ளைகளுக்கு பைந்தமிழை ஒரு உதாரண பெண்ணாக காட்டினர்.
அவளின் வெற்றியை அந்த ஊரே கொண்டாட, பேச்சி கிழவிக்கும் சந்திரனுக்கும்தான் இது எதுவும் பிடிக்கவில்லை. கடுப்பானது. அதுவும் அந்த சம்பவத்திற்கு பிறகு சந்திரன் பள்ளிக்கே போக மாட்டேன் என்று சொன்னதில் பேச்சி கிழவிக்கு அவள் மீது அளவில்லா துவேஷம் வேறு!
“என்ற பேரனோட படிப்பை கெடுத்து போட்டு… இவ மட்டும் நல்லா மார்க் எடுத்து பெரிய படிப்பு படிக்க போராளாக்கும்… எடுபட்ட சிறுக்கி… நல்லாவே இருக்க மாட்டா…. இவ போற இடம் விளங்காம போயிடும்” என்றவர் அவள் வெற்றியையும் வளர்ச்சியையும் பொறுக்க முடியாமல் திண்ணையில் அமர்ந்து கொண்டு வாய் நிறைய அவளுக்கு சாபத்தை சக்கரை பொங்கல் போல வாரி வாரி வழங்கி கொண்டிருந்தார்.
இன்னொரு புறம் சந்திரனுக்கு தான் ஆசைப்பட்ட கனி தனக்கு எட்டாத தரத்தில் விலகி போய் கொண்டே இருக்கிறது என்ற ஆதங்க தீ மனதில் கொழுந்துவிட தொடங்கியது.
‘சீ சீ இந்த பழம் புளிக்கும்’ என்று அவனால் சாதாரணமாக அவளை விட்டு விலகவும் முடியவில்லை. சமதானமாகவும் முடியவில்லை. அவள் மீது ஏற்பட்ட ஒரு ஆழமான ஈர்ப்பு. அது வெறும் ஈர்ப்பு மட்டும்தானா என்று அவனுக்கு சொல்ல தெரியவில்லை.
என்னவோ அவளை பார்த்த மாத்திரத்தில் பிடித்தது. அதுவும் பித்து பிடிக்குமளவுக்காக ஒரு பிடித்தம். அந்த பிடித்தம் அவள் கருவிழிகள் மீதா அல்லது அவள் கன்னத்தில் விழும் குழியின் மீதா அல்லது கலையான அவளது கருப்பு நிறத்தின் மீதா என்றெல்லாம் அவனுக்கு தெரியாது.
வெளியே வெறுப்பை காட்டினாலும் இன்னும் அந்த பிடித்தம் அவனுக்குள்ளாக ஆழமாக புதைந்து கிடந்த அதேநேரம் புகைந்து கொண்டும் இருந்தது என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.
ஆனால் பைந்தமிழுக்கு அவனை பற்றிய சிந்தனை கொஞ்சமும் இல்லை. அவளின் பேச்சு, மூச்சு, எண்ணம் எல்லாம் படிப்பு! படிப்பு! படிப்பு மட்டும்தான்.
அதுவும் அவளுக்கு பொறியியல் கலந்தாய்வில் சென்னையில் உள்ள பெரிய கல்லூரியில் இடம் கிடைத்தது. எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் திளைத்தாள். அதுவாக தேடி வரும் அரிய வாய்ப்பை அவள் தவறவிட விரும்பவில்லை.
வீடு, கிராமம், சொந்தபந்தம் என்று தனக்குத்தானே ஒரு கூட்டுக்குள் அடைபட்டு கொண்டு தன் வாழ்க்கையையும் கனவையும் அவள் சுருக்கி கொள்ள தயராகயில்லை. சில விஷயங்களை விட்டு கொடுத்தால்தான் நாம் நினைத்த விஷயங்களை பெற முடியும் என்று யோசிக்கும் எதார்த்தவாதி அவள்.
ஆனால் மதுசூதனனுக்கோ மகளை அத்தனை தூரம் அனுப்ப மனமே இல்லை. பக்கத்திலேயே அவளை ஒரு நல்ல கல்லூரியில் சேர்ப்பதாக சொன்னார். ஆனால் அவள்தான் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று பேசும் ரகமாயிற்றே.
ஆதலால் படித்தால் சென்னையில்தான் என்றவள் தீர்க்கமாக சொல்லிவிட, மதுசூதனனுக்குதான் என்ன செய்வதென்றே புரியவில்லை.
“அம்புட்டு தூரம் போய்தான் படிக்கோணுமா? இங்கனயே ஒரு நல்ல காலேசுல சேர்ந்துக்கலாமே… தமிழு கிட்ட வேண்டாம்னு சொல்லு புள்ள” என்று அவர் மனைவியின் உதவியை நாட,
“அவ அங்கனதான் படிக்கோணும்னு சொல்றான்னா சரியாதான் இருக்கோங்க மாமா… சேர்த்து போடுங்க” என்று மனைவியும் மகளின் பக்கம் சாய்ந்துவிட்டார்.
இந்த நிலையில் தமிழின் படிப்பு விஷயம் தெரிந்த அவளின் பெரியப்பா மகன் ரவி உதவி கரம் நீட்டினான். அவளை தன் வீட்டிலேயே தங்கி படித்து கொள்ளட்டும் என்று சொன்னான். உண்மையிலேயே அந்த நொடி மதுசூதனன் மனதிலிருந்த பயமும் கவலையும் நீங்கியிருந்தது.
ஒருவாறு அவள் சென்னையில் படிப்பதும் உறுதியானது.
கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் இந்த விஷயம் கசிய தொடங்கியதில் எல்லோரும் ஆளுக்கு ஒருவிதமாக கருத்து சொல்ல தொடங்கியிருந்தனர்.
அதிலும் பெரும்பாலானரவர்கள், ‘காலமே கேட்டு கிடக்கு… பொட்ட புள்ளைய அம்புட்டு தூரம் தனியா அனுப்பி படிக்க வைக்கறது எல்லாம் சரியா வராது” என்றனர். நாட்டில் நடந்து கொண்டிருக்கும் பாலியல் வன்முறைகளை சுட்டிகாட்டி ஒரு பெண்ணின் ஆசைகளையும் கனவுகளையும் வேரோடு வெட்டி வீழ்த்தும் வேலைகள் எப்போதும் போல நடந்தேறின.
ஆனால் சகுந்தலா இந்த போலியான பயமுறுத்தலுக்கு எல்லாம் அஞ்சிவிடவில்லை. அவருக்குள்ளும் பயம் கவலைகள் நிரம்பவே இருந்தது. இருப்பினும் மகளின் எதிர்காலம் அதை விட முக்கியமாகப்பட்டது. தன்னை போல எந்நிலையிலும் படிப்பறிவு இல்லாமல் அவள் காலத்திற்கும் அடுப்படியில் கிடந்து கஷ்டபட கூடாது என்று எண்ணியவருக்கு மகள் மதிப்போடும் உயர்வோடும் வாழ வேண்டுமென்ற பெரிய கனவு இருந்தது.
அதேநேரம் பெண் பிள்ளையை பெற்ற தாயிற்கே உண்டான தவிப்பும் சூழ்ந்து கொள்ள அவர் மகளிடம் தெளிவாக, “ஒன்ற அய்யன் நீ ஆசைப்பட்ட காலேசுலயே உன்னை சேர்த்து போட்டாரு… இனிமே உன் வேலை படிக்கிறது மட்டும்தான்… அதை வுட்டு போட்டு காதல் கீதல்னு ஏதாச்சும் தடம் மாறி போனியோ… பெத்த மக ன்னு கூட பார்க்க மாட்டேன்… சங்கை அறுத்து போடுவேன்” என்று எச்சரித்தார்.
ஆனால் தமிழுக்கு அந்த மாதிரியான யோசனை துளி கூட இல்லை. அவளுக்கு படிக்க வேண்டும். அவ்வளவுதானே ஒழிய காதல் மீதெல்லாம் அவளுக்கு கொஞ்சமும் ஆர்வமில்லை.
ஒருவேளை வயதுகோளாறு காரணமாக அவள் அத்தகைய உணர்வில் சிக்கி கொண்டாலும் அதிலிருந்து மீண்டு வருமளவுக்காய் அவளுக்கு முதிர்ச்சியும் தைரியமும் இருந்தது.
ஆதலால் தன் தாயின் கைகளை அழுத்தமாக பற்றி கொண்டு,
“எனக்கு இஞ்சினியரிங் படிக்கோணும் அம்புட்டுதான்… மத்தபடிக்கு எனக்கு வேறெதுவும் முக்கியமில்லிங்க ம்மா… எந்த சூழ்நிலையிலும் நம்ம குடும்பத்தோட பேரை நான் கெடுக்க மாட்டேனுங்க… இது சத்தியம்” என்று திடமாக உறுதி கூறிய மகளை பெருமிதத்தோடு உச்சி முகர்ந்து நெற்றியில் முத்தம் பதித்தார் சகுந்தலா.
இதெல்லாம் ஒரு புறமிருக்க அரசனும் செல்வியும் அவள் மீது அளவில்லா கோபத்திலிருந்தனர்.
இருவரும் ஏதோ கப்பல் கவிழ்ந்தது போல கன்னத்தில் கை வைத்து கொண்டு திண்ணையில் அமர்ந்திருக்க, “அரசா… செல்வி…” என்ற தமிழின் அழைப்பில் இருவரும் ஒரே போல முகத்தை திருப்பி கொண்டனர்.
“இரண்டு பேருக்கும் என்னாச்சு?” என்றவள் திண்ணையில் அமர இருவரும் அவள் முகத்தை கூட பாராமல் தோட்டத்திற்கு பக்கம் நடந்தனர்.
“ஏய் அரசா… செல்வி நில்லுங்க” என்றவள் கூப்பிட கூப்பிட அவர்கள் அவள் புறம் திரும்பி கூட பார்க்கவில்லை.
தமிழ் முன்னேறி சென்று அவர்களை வழிமறித்தபடி, “நில்லுங்க இரண்டு பேரும்” என்று இருவரின் கையையும் தடுத்து பிடித்துகொண்டாள்.
“நான் சென்னை போக போறேன்னுட்டு இரண்டு பேருக்கும் கோபமாக்கும்” என்று தமிழ் வினவ, விருட்டென அவள் கையை உதறி கொண்ட செல்வி,
“ஆமா… கோபம்தான்… நீ அம்புட்டு தூரம் போக போறேன்னு எங்ககிட்ட சொல்லோணும்னு கூட உனக்கு தோணலை இல்ல க்கா” என்று கேட்டாள்.
“ஐயோ! செல்வி… அம்மாதான்… எல்லா முடிவாகிற வரைக்கும் ஊருக்குள்ள யாருக்கும் விசயம் தெரிய வேணாம்னுட்டு சொன்னாங்க… தெரிஞ்சா அதை இதை பேசி தடுத்து போடுவாய்ங்கன்னு… அதான் புள்ள உன்கிட்ட கூட” என்றவளுக்கு வார்த்தை தொக்கி நின்றுவிட, அவளால் அதுக்கு மேல் பேச முடியவில்லை. உள்ளம் குறுகுறுத்தது.
ஒரு வார்த்தை தங்கை தம்பிகளிடம் சொல்லி இருக்கலாமே என்று அவள் மனம் தாமதமாக இடித்துரைக்க, அவள் குற்றவுணர்வில் ஆழ்ந்தாள்.
தான் விரும்பிய விஷயம் நடக்க போகிறது என்று தலை கால் புரியாத சந்தோஷத்தில் உடன் பிறந்தவர்களை பற்றி கூட யோசிக்காத தன் சுயநலம் அவளுக்கு அப்போதே உரைத்தது.
மனம் வலிக்க அவர்களை ஏறிட்டு பார்க்கும் துணிவில்லாமல், “சாரி அரசா… சாரி செல்வி… நான் உங்ககிட்ட சொல்லி இருக்கோணும்” என்றவள் மன்னிப்பு கோர அரசன் அவள் இடையை கட்டி கொண்டு,
“வேணாமுங்க க்கா… போவாதீங்க க்கா” என்ற அழ தொடங்கியிருந்தான். அந்த நொடியே உள்ளம் உருகி அவள் விழிகளிலும் கண்ணீர் ஆறாக பெருகி ஓட, அவளும் தம்பியை இடையோடு சேர்த்து அணைத்து கொண்டாள்.
ஆனால் செல்வி கொஞ்சமும் இறங்கி வராமல், “நீ சொன்னா அக்கா போகாமா இருக்க போவுதாக்கும்” என்க,
“என்ன புள்ள நீ… அவன்தான் சின்ன பையன் புரிஞ்சிக்காம பேசறான்னா” என்று தமிழ் தவிக்க,
“ஏன் க்கா… உனக்கு படிக்க இந்த ஊருல காலேஜே இல்லையாக்கும்” என்று செல்வி கேட்டு அவளை முறைத்து பார்த்தாள்.
“இங்க இஞ்சினியர் காலேஜ் நிறைய கிடக்கு… ஆனா நான் படிக்க போற காலேஜ்ல பீஸும் கம்மி… அதே போல படிப்பும் தரமா இருக்கும்… படிச்ச உடனேவே வேலையும் கிடைக்கும்… தெரியுமா?
இங்கன இருக்க காலேஜ் எல்லாம் காசைத்தான் பேய் மாதிரி புடுங்குறானுவுங்க… ஒன்னுத்துக்கும் லாயக்கு இல்ல… நல்ல டீச்சருங்க கூட கிடையாது… நம்ம திலீபன் சார் கூட இங்கன இருக்க பெரிய இஞ்சினியர் காலேஜ்லதானே முடிச்சாரு… என்ன பிரயோசனம்… வேலை கிடைச்சுதா… கடைசியா நம்ம ஸ்கூலிலதானே அவர் கம்பூயுடர் சைன்ஸ் டீச்சரா வேலைக்கு சேர்ந்தாரு” என்று அக்கா சொன்ன காரணங்கள் யாவும் செல்விக்கு புரியத்தான் செய்தது. ஆனாலும் மூளை ஏற்பதை மனம் ஏற்க முடியாமல் தவித்தது.
“நீ இல்லாட்டி போனா நாங்க எப்படி க்கா” என்று செல்வி முகம் சுருங்க அவளையும் இழுத்து தம் அணைப்பில் வைத்து கொண்ட தமிழ்,
“மழை வெயில்னு பார்க்காம அய்யன் காட்டுல மாடா உழைக்கிறாக… அம்மா வீட்டு வேலையெல்லாம் முடிச்சு போட்டு கால் கடுக்க நின்னு டீ ஆத்திட்டு கிடக்காவுங்க… நாள் கிழமைல கூட அவங்க நல்ல துணி உடுத்தி நான் பார்த்ததே இல்ல… நம்மல படிக்க வைக்க அவங்க சுக துக்கத்தை எல்லாம் மறந்து போட்டு எம்புட்டு கஷ்டபடுறாவுங்கன்னு நீயும்தானே பார்க்குற… அதுக்காகவாச்சும் நாம நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போவோனோம்டி… அவங்க கஷ்டத்தை எல்லாம் தீர்க்கோனோம்” என்று மனம் வெதும்பி சொன்ன தமக்கையின் மீது செல்விக்கு பாசத்தை எல்லாம் தாண்டி அந்த நொடி அளவில்லா மதிப்பு உண்டானது.
தன் பெற்றோர்களின் துயரங்கள் முன்னிலையில் நம்முடைய பிரிவின் துயரம் அத்தனை பெரியதல்ல என்றவள் சொல்லாமல் சொல்வது புரிந்தது.
“சரி க்கா… நீ சென்னையிலேயே படி… ஆனா லீவு வுட்டதும் எங்களை பார்க்க இங்க வந்துடோனோம்”
“இங்க வராம… வேறெங்கடி போக போறேன்” என்று சொல்லி தங்கையின் முகத்தை பார்க்க அரசன் தன் தமக்கைகள் புரிந்தும் புரியாமல் பார்த்தாள்.
“அப்போ நீ கண்டிப்பா போகத்தான் போறியா?” என்று அதே கேள்வியை அவன் திரும்பியும் கேட்க அவனிடம் இறங்கி அமர்ந்தவள்,
“அக்கா படிக்க போறேன் கண்ணு… நான் நல்லா படிச்சு வேலைக்கு போன புறவு ஒன்ற படிப்பு செலவை நானே பார்த்துக்குவேன்… நீ ஆசைப்பட்ட படிப்பை இந்த அக்கா படிக்க வைப்பேன்”
“உஹும்… எனக்கு அதெல்லாம் வேண்டாமுங்க… நீங்க எங்கயும் போவாம இங்கனயே இருந்து போடுங்க” என்று கூறியவன் தன் தமக்கையின் முகத்தை ஏக்கமாக பார்ததாள்.
“யக்கா… அவன் பிரச்சனை நீ இங்கன இருந்து போவுறதில்ல” என்று செல்வி கிண்டலாக சொல்லவும்,
“புறவு வேறு என்னடி?” என்று புரியாமல் கேட்டாள் தமிழ்.
“இனிமே யாரு அவனுக்கு குச்சி ஐஸ் வாங்கி கொடுப்பாங்கன்னு மருகுறான்” என்று செல்வி அவனை கலாய்க்க அரசன் தன் அழுகையை நிறுத்திவிட்டு அவளை முறைக்க தொடங்கினான்.
“சும்மா இருல… புள்ளைய போயிட்டு” என்று தங்கையை கண்டித்தவள், “அவ கிடக்கா… என் கண்ணு இல்ல… அழ கூடாது” என்று தம்பியின் கண்ணீரை துடைத்துவிட்டாள்.
அவள் மேலும், “நான் சேர்த்து வைச்சிருந்த காசை எல்லாம் ஒன்ற உண்டியில போட்டு வுட்டுட்டு போறேன்? உனக்கு வேண்டும்னு போது ஐஸ் வாங்கி சாப்பிடு… ஆனா அடிக்கடிக்கு சாப்பிட கூடாது“ என்க, அவன் அழுகை இன்னும் அதிகமானது.
“உஹும்…. எனக்கு அதெல்லாம் வேண்டாமுங்க க்கா… நீங்கதானுங்க வேணும்” என்று சொல்லி அவள் கழுத்தை மீண்டும் இறுக்கி கொண்ட தம்பியின் பாசத்தில் அவள் தவித்து போனாள். அவன் அழுகையை மட்டுபடுத்த அவள் எப்படி எப்படியோ பேசி பார்த்தாள். அவள் பிடிவாதமாக போக வேண்டாமென்று மறுத்த போது அவளுக்கு உண்மையிலேயே தான் இப்படி ஒரு முடிவை ஏன் எடுத்தோம் என்று தோன்றியது. மனம் வலித்தது.
அதுவும் அவள் ஒன்றும் அன்பையும் பாசத்தையும் பொழியும் அக்காள்கள் ரகமெல்லாம் இல்லையே. இன்னும் கேட்டால் கோபம் வந்தால் இளையவன் என்றும் பாராமல் வெளுத்து வாங்கியிருக்கிறாள்.
அப்படியிருக்க அவன் இந்தளவுக்கு தன்னுடைய பிரிவை எண்ணி வருந்துவான் என்று அவன் கிஞ்சிற்றும் நினைக்கவில்லை. செல்விக்கு அவளால் புரிய வைக்க முடிந்தது போல அவனுக்கு புரிய வைக்க முடியவில்லை. வெகுநேரம் அழுது ஓய்ந்து அவளின் மடியிலேயே படுத்து அவன் உறங்கி போக, தமிழின் மனம் கனத்து போனது.
அவன் தலையை தடவி கொடுத்தபடி செல்வியிடம், “தம்பி என்ன தப்பு செஞ்சிருந்தாலும் அவனுக்கு சொல்லி புரிய வை… அடிச்சு போடாதே… இனிமே நீதான் அவனை நல்லா பார்த்துக்கோனோம்” என்றாள். செல்வியின் விழிகளில் நீர் நிரம்ப அழுகையினூடே வார்த்தைகள் வராமல் சம்மதமாக தலையசைத்தாள்.
எப்படியோ அரசன் இரண்டொரு நாள் அழுதுவிட்டு ஒருவாறு சமாதானம் ஆகியிருந்தான். தமழ் சென்னைக்கு போகும் நாள் நெருங்கியிருந்த நிலையில் சகுந்தலா மகளுக்கு வேண்டிய பொருட்கள் துணிமணிகள் என்று தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து எடுத்து வைத்தார். அவர் வெளிப்படையாக தன் வருத்தத்தை காட்டி கொள்ளாவிடிலும் மகளின் பிரிவை எண்ணி மனதளவில் வெதும்பி கொண்டிருந்தது.
அடுத்த நாள் மாலை சென்னைக்கு தமிழ் ரயில் ஏறவேண்டும். என்பதால் ஒருவிதமான அழுத்தமான மௌனம் அவர்கள் வீட்டை நிறைத்திருந்தது. அந்த இறுக்கமான சூழ்நிலையை மாற்ற எண்ணி தம்பி தங்கைகளை அழைத்து கொண்டு ஊரடியிலிருந்த அவர்கள் நிலத்திற்கு சென்றாள். இப்படி கால் நடையாக அங்கே செல்வது மூவருக்கும் எப்போதும் வழக்கம்தான்.
கலகலப்பாக பேசி கொண்டே நடந்தவர்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை. மெல்ல இருள் சூழ தொடங்கவும் தமிழ் அவர்களிடம்,
“நேராமவுது… அம்மா தேடுவாங்க…. கிளம்பிலாம்” என்றாள்.
“இன்னும் செத்த நேரம் இருந்துட்டு போலாம் க்கா” என்று செல்வி இழுக்க,
“நாம கருப்பன் கோயிலுக்கு போயிட்டு போலாம்ங்க க்கா” என்று அரசன் அவளிடம் கெஞ்ச, அவளுக்கு ஏனோ நெருடலாக இருந்தது.
பொழுது சாய்ந்ததிலிருந்து காற்றின் வேகம் வேறு கூடி கொண்டே போனதை உணர்ந்தவள், “காத்து ஊங்காரம் போட்டுக்கிட்டு வருது… மழை கிழை பிடிச்சுக்கிட்டுன்னா… புறவு வீட்டுக்கு போக சிரமமா போயிடுமாக்கும்” என்றவள் எடுத்துரைத்த போதும் அவர்கள் இருவரும் கேட்டபாடில்லை.
பாவம் போல முகத்தை தொங்க போட்டு கொண்ட தம்பியை பார்த்து அவள் மனமிறிங்கி, “சரி கருப்பன் கோயிலுக்கு போயிட்டு போவோம்” என்றாள்.
மூவரும் அதன் பின் ஊரின் எல்லையிலிருந்த கருப்பன் கோவிலுக்கு வந்துவிட உக்கிரமாக அரிவாளை தூக்கி கொண்டிருந்த கருப்பனை வணங்கிவிட்டு, “சரி கிளம்புவோம்” என்று சொல்ல அரசன் கேட்காமல் கோவிலின் பின்னிருந்த கொய்யா மரத்திலிருந்த காய்களை பார்த்து சப்பு கொட்ட தொடங்கினான்.
“வேண்டாம் டா அரசா” என்று அவள் சொன்னதை செல்வியும் கேட்கவில்லை. அரசனும் கேட்கவில்லை. “சரி சீக்கிரமா வந்துடுங்க” என்று அவர்களை மட்டும் அனுப்பி வைத்தாள்.
“நீ வரலையா க்கா” என்று செல்வி கேட்க,
“இல்ல… நீங்க போங்க” என்று தமிழ் அந்த கோவிலின் சிறிய மண்டபத்தில் அமர்ந்து கொண்டாள். அவளுக்கு அப்போதைக்கு அந்த தனிமை தேவையாக இருந்தது.
அவள் மனம் ஏனோ ஒரு நிலைப்பாட்டிற்குள் இல்லை. அவள் ஆசைபட்டது நடக்க போகிறது. எனினும் அதற்குரிய சந்தோஷம் அவள் மனதில் துளியளவும் இல்லை.
விடியற் காலை பொழுதில் பறவைகளின் கூச்சல்களில் கண்விழிப்பதும், மரம் ஏறி பழம் பறிப்பதும், வயல்வரப்புகளில் நடப்பதும், கன்று குட்டிகளோடு கொஞ்சி விளையாடுவதும், திருவிழாவில் கருப்பன் ஆக்ரோஷமாக கத்தி பிடித்து ஆடி வருவதை பார்த்து மிரள்வதும், சீம்பால் ருசிப்பதும், மல்லிகை தோட்டத்து மணத்தில் மயங்கி கிறங்கி போவதும் என்று அவள் ரசித்த களித்த நினைவுகளை அசைபோட்ட அதேநேரம் தான் இந்த கிராமத்து வாழ்க்கையை விட்டு வெகுதூரம் விலகி போகிறோமோ என்ற கவலையும் தெரிந்தது.
அந்த சிந்தனையில் அவள் மூழ்கி இருந்த கணத்தில், “தமிழு” என்று மிகவும் குழைவாக அவளை ஒரு குரல் அழைக்கவும் அவள் நிமிர்ந்து பார்க்க, சந்திரன் நின்றிருந்தான்.
‘ஐயோ! இவனா?’ என்றவள் தலையிலடித்து கொள்ளும் போதே அவன் அவளுருகில் நெருக்கமாக அமர்ந்துவிட அவள் மிரண்டு போனாள்.
“பொறுக்கி பயலே” என்றவள் கோபத்தில் சீறியபடி எழுந்து கொள்ள பார்த்த போது, “ஏ தமிழு… உன் கிட்ட கொஞ்சம் பேசோணும்டி” என்று அவன் அவள் கரத்தை பிடித்து இழுத்து அருகில் அமர வைத்துவிட அவள் பதட்டமானாள்.
எப்போதும் அவன் கிண்டலும் கேலியுமாக பேசுவானே ஒழிய இப்படியெல்லாம் அநாகிரகமாக நடந்து கொள்ள மாட்டானே என்றவள் யோசிக்கும் போதுதான் அவன் தற்போது இருக்கும் நிலைமை அவளுக்கு ஓரளவு பிடிப்பட்டது.
“குடிச்சிருக்கியாடா?” என்றவள் அதிர்ச்சியாக கேட்க, அவன் பதில் பேசாமல் ஆமோதிப்பாக தலையை மட்டும் அசைக்க,
“அடப்பாவி!” என்று அதிர்ந்து போனாள்.
அதேநேரம் அவனும் அவன் தோற்றமும் அவளுக்கு ஒருவிதமான அருவருப்பு தன்மையை புகுத்த, “நீ செய்யாத ஒரே காரியம் இதுதான்… அதையும் செஞ்சு போட்ட… சை” என்றவள் முகம் சுளித்துவிட்டு எழுந்து கொள்ள அவன் கரம் அவள் மணிக்கட்டை அழுத்தி பற்றி கொண்டிருந்தது.
“கையை விடுறா” என்றவள் தவித்தபடியே, “அரசா… செல்வி…” என்றவள் கத்த தொடங்க அவள் குரல் அவர்களின் செவிகளை எட்டவில்லை.
அவனோ அவளை மீண்டும் அருகில் இழுத்து அமர வைத்து, “எங்கயும் போயிடாதே தமிழு” என்க, “என்னது?” என்றவள் புரியாமல் விழிக்க,
“சென்னைக்கு போகாதடி… என்னால தாங்க முடியல… மனசு கிடந்து தவிக்குது” என்று உளறி கொண்டிருந்தவனை மேலும் கீழுமாக ஒரு அலட்சிய பார்வை பார்த்தவள்,
“கிறுக்கு பய மாதிரி உளறிட்டு இருக்காதே…. ஒழுங்கா ஊடு போய் சேர வழிய பாரு” என்றவள் சொல்லிவிட்டு எழுந்து செல்ல எத்தனிக்க,
தள்ளாட்டத்தோடு எழுந்து நின்றவன், “என்னைய விட்டு போகாதடி” என்று அதே பாட்டை பாட அவளுக்கு கடுப்பானது.
அவனிடம் பேசுவது வீண் என்று புரிந்து கொண்டவள், “டே அரசா செல்வி” என்று அழைத்து கொண்டே பின்புறம் செல்ல காற்றின் சத்தம்தான் ஓங்கி ஒலித்தது.
“பேசிட்டு இருக்கேன்னு இல்ல… நீ பாட்டுக்கு எழுந்து போய்கிட்டே இருக்க… எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு போ” என்று சந்திரன் அவளை பின்தொடர்ந்து அவள் கரத்தை பற்றி கொள்ளவும்,
“என்கிட்ட நீ சாவடி வாங்க போற… பாரேன்” என்றவள் ஆக்ரோஷமாக கத்திவிட்டு அவள் கையை உதறி கொள்ள முற்பட,
“நீ வா…. எனக்கு இந்த கருப்பன் கோவிலில் சத்தியம் பண்ணி குடு” என்றவன் அவளை மீண்டும் கோவிலுக்கு இழுத்து கொண்டு போக,
“சத்தியமா… என்னத்துக்கு?” என்று கேட்டாள்.
“என்ன ஆனாலும் என்னையதான் கட்டிப்பேனு சத்தியம் பண்ணி கொடு” என்ற போது அவள் புருவங்கள் நெறிந்தன.
“லூசா டா நீ” என்றவள் கடுப்பாக,
“படிக்கோணும்னு போயிட்டு எவனயாவது நீ இழுத்து போட்டு வந்துட்டியான்னா… அதெல்லாம் சரியா வராது… நீ சத்தியம் பண்ணு” என்றவன் அவளை கோவிலுக்கு தரதரவென இழுத்து கொண்டு போனான்.
அவள் மிகவும் பிராயத்தனப்பட்டு அவனை இழுத்து தள்ளிவிட்டவள், “உன்னைய மாதிரி பொறுக்கி பயல நான் எதுக்குடா கட்டிக்கோணும்… எனக்கென்னடா தலையெழுத்து… நான் நல்லா படிச்ச ஒழுக்கமான பையனைத்தான் கட்டிக்குவேன்… உன்னைய மாதிரி குடிகார பயலை செத்தாலும் கட்டிகிட மாட்டேனாக்கும்” என்றவள் சொல்லிவிட்டு விறுவிறுவென கோவில் மண்டபதிலிருந்து பின்னே வந்து கொண்டிருக்கும் போதே அரசனும் செல்வியும் கொய்யா கனிகளை பறித்து கொண்டு நடந்து வர,
“உங்க இரண்டு பேரையும் எத்தனை வாட்டி கூப்புடுறது” என்றவள் அவர்களிடம் கோபமாக கத்த,
“இல்ல க்கா” என்று ஏதோ பேச எத்தனித்த செல்வியை, “வாயை மூடிட்டு வா” என்று அவளை அடக்கிவிட்டு முன்னே செல்லும் போது நீண்டிருந்த அவள் கூந்தலை சந்திரன் பற்றி இழுத்தான்.
“ஆஆஆஆஆஆஆஆஆ” என்றவள் வலியில் கத்த அரசனும் செல்வியும் அதிர்ந்து போயினர்.
சந்திரன் இம்முறை ஆக்ரோஷமாக அவள் கூந்தலை அழுந்து பற்றி இழுக்க, “வலிக்குதுடா… என் முடியை விடுறா” என்றவள் சத்தமிட,
“என்னைய வுட்டு போட்டு வேற ஒருத்தனை கட்டிகிடுவியா டி சிறுக்கி மவளே” என்றவன் கரம் இன்னும் மூர்க்கமாக அவள் கூந்தலை பற்றி இழுக்க, “அம்ம்ம்ம்ம்ம்மா” என்றவள் வலியில் கதறினாள்.
“விடுறா அக்காவை” என்று அரசனும் செல்வியும் அவனை அடிக்க, அவன் அவர்களை பொருட்டாகவும் மதியாமல் தள்ளிவிட்டு, “எங்கன போனாலும் நீ என்னய மறக்கவே கூடாதாக்கும்” என்றவன் கொத்தாக பிடித்திருந்த கூந்தலோடு அவளை அருகில் இழுத்து அணைத்திருந்தான்.
முரட்டுத்தனமான அவன் பிடியில் அவள் சிறைப்பட்டு வெளியே வர முடியாமல் சிக்கி தவிக்கும் போதே தம் இதழ்களால் அவள் இதழ்களை அழுத்தி மூடியிருந்தான்.
அரசனும் செல்வியும் அதிர்ந்து போயினர். நடப்பது இன்னதென்று புரியவே அவர்களுக்கு சில நொடிகள் பிடித்தது. அதற்குள்ளாக அவன் நினைத்ததை செய்து முடித்த திருப்தியோடு அவளை விலக்கிவிட,
“அக்கா” என்று செல்வி தமக்கையை அணைத்து பிடித்து கொள்ள,
சந்திரின் தன் கைலியை மடித்து கட்டி கொண்டு, “மவளே! இனிமே என்னைய வுட்டு போட்டு வேறு எவனயாச்சும் கட்டிக்கிறேன் சொல்லுவ” என்று மிரட்டலாக சொல்லிவிட்டு நகர பார்த்தான். அந்த நொடி அரசன் உக்கிரமாகி, “டே உன்னைய” என்று அவனை பிடித்து உலுக்க தொடங்கியிருந்தான்.
“அரசா வேண்டாம் விட்டுடு” என்று செல்வி சத்தமிட அவன் கேட்கவில்லை.
சந்திரனோ அவனை அனாயசமாக, “போடா” என்று பிடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
ஆனால் தமிழ் இது எதையுமே கவனிக்கவில்லை. அவள் அப்படியே தரையில் சரிந்து தலையை பிடித்தபடி குமட்டி கொண்டிருந்தாள். அந்த கணத்தில் உலகின் ஒட்டுமொத்த அசூயை உணர்வையும் அவள் தாங்கி நின்றது போன்ற பிரமை!
உங்கள் கருத்தை மறவாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்-
மாடி தோட்ட குறிப்பு- 2
நாங்கள் மாடி தோட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக நிறைய ரோஜா செடிகள் வைத்திருந்தோம். பூத்து குலுங்கி எங்கள் வீடே ரோஜா பூவனமாக காட்சியளிக்கும். செடிக்கு தேவையான உரம் போட்டு வீட்டில் சமையலுக்கு உதவும் அரசி களைந்த தண்ணீர், காய்கறி கழுவிய நீர் போன்றவற்றை ஊற்றுவோம்.
அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அந்த ரோஜா செடியோடு தக்காளி செடி ஒன்று முளைத்து காயாக காய்த்து தொங்கியதை பார்த்து வீட்டிற்கு வருப்பவர்கள் அனைவரும் ஆச்சரியம் கொண்டனர்.
அங்கிருந்துதான் எங்களின் மாடி தோட்டம் அமைக்கும் ஆசை வேர் விட்டது. அப்போதுதான் குடும்ப நண்பர் ஒருவர் மாதவரத்தில் அமைந்துள்ள அரசாங்க தோட்ட கலை பற்றி சொல்ல, அங்கே சென்று பார்த்தோம். கீரை மற்றும் காய்கறி விதைகள் உடன் தேங்காய் நார் கழிவும் தந்து அதனை எப்படி செய்வது போன்ற விளக்கத்தையும் தந்தனர்.
ஓரளவு எங்கள் வேலை சுலபமாக முடிந்தது.
அதில் முக்கியமான அம்சம்தான் தேங்காய் நார் கழிவு.
மண் வளம் குறைந்த, கடுங்குளிர் கொண்ட வெளிநாடுகளில் எப்படி விவசாயம் நடக்கிறது? அதிலும் குறிப்பாக ஹாலந்தில்தான் உலகிலேயே அதிக அளவு மலர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எப்படி? அவர்கள் மண்ணுக்கு பதிலாக பயன்படுத்தும் பொருள்தான் முக்கிய காரணம். அந்தப் பொருளும் நம் நாட்டில் இருந்தே அதிக அளவு ஏற்றுமதி ஆகிறது. ஆம்… நாம் தினந்தோறும் சமையலுக்குப் பயன்படுத்தும் தேங்காய் தான் அந்த பொருள். தேங்காய் நார் துகள்கள்தான் அங்கு விவசாயத்துக்குப் பயன்படுகின்றன!
தேங்காய் நார் மற்றும் தேங்காய் மட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் காயிர் சிப்ஸ் மற்றும் காயிர் பித். காயிர் சிப்ஸ் என்பது தேங்காய் மட்டையை சிறுதுண்டுகளாக வெட்டுவது, காயிர் பித் என்பது நாரிலிருந்து விழும் கழிவு. இவை இரண்டும் விவசாயத்துக்குப் பயன்படுகிறது. தேங்காய் நார் துகளை உலர வைத்து, செங்கல் போன்று தயாரிக்கப்படுகிறது. இந்த செங்கல்லை உதிர்த்து தண்ணீரில் ஊற வைத்தால் 5 மண் தொட்டிகள் அளவு கிடைக்கும். இயற்கையாகவே அதிகம் உரம் தேவைப்படாது. தண்ணீரின் தேவையும் மிகக்குறைவு.
மாடிதோட்டதிற்கு தேங்காய் நார் கழிவுகள் உபயோகிப்பது மிகவும் நல்லது.
Hi mam, thank you for ur response to my recent post.
mam, we want a full novel link on “En iniye pynthamizhae”. Please do favour
புத்த்கமாக வெளிவந்துவிட்டது. டிசம்பர்மாதம் மீண்டும் இந்நாவல் வெளியாகும்
In this link? thank u, Mam.