You don't have javascript enabled
Monisha Novels

En iniya pynthamizhe – 5

5

பேச்சியின் மரணச்செய்தி அந்த கிராமத்து மக்கள் எல்லோரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டிருந்தது.

சுறுசுறுப்பாக அந்த வயதிலும் ஓடி ஓடி உழைக்கும் பேச்சியைதான் அந்த ஊர் மக்களுக்கு தெரியும். அதோடு தினமும் குறைந்தபட்சம் ஒருத்தரிடமாவது சண்டை சச்சரவுகள் செய்யவில்லை என்றால் பேச்சிக்கு தூக்கமே வராது.  

யாராவது சீண்டிவிட்டால் போதும். இடம் பொருள் எல்லாம் பார்க்காமல் ஊரையே கூட்டி அதகளப்படுத்தி விடுவார். கத்தி கத்தி அவருக்கு தொண்டை வலிக்கிறதோ இல்லையோ? கேட்கிறவர்கள் காது நிச்சயம் வலிக்கும்

விடியற் காலை எழுந்து வாசல் தெளிக்கும் போது ஒலிக்க தொடங்கும் அவரின் குரல் இருள் சூழும் வரை நிறுத்தாமல் கேட்டு கொண்டேயிருக்கும்.

பக்கத்து அக்கத்து வீட்டிலிருக்கும் எல்லோருக்கும் பொழுது விடிவதும் சாய்வதும் பேச்சி கிழவியின் சுப்ரபாதத்தில்தான்.

‘அந்த கிழவிக்கு வேற வேலையே இல்ல… எந்நேரமும் புலம்பிட்டு கிடக்கு…. இல்ல யாரையாச்சும் சபிச்சிட்டு கிடக்கும்’ என்று கடுப்பாகி திட்டியவர்கள் கூட பேச்சியின் மரண செய்தி அறிந்து விக்கித்து போயினர். அந்த நொடி அவர்களுக்குமே மனம் கனத்து போனது.

அந்த ஊரில் உள்ள ஒவ்வொருவருக்குமே பேச்சி கிழவியின் மீது ஏதாவது ஒரு காரணத்திற்காக மனவருத்தமோ கோபமோ எப்போதும் உண்டு. அந்தளவு கிழவி ஊரிலுள்ள ஒருத்தரையும் விட்டு வைத்ததில்லை. ஆனால் அன்று யாருமே அந்த பகைமையையும் கோபத்தையும் மனதில் வைத்து கொள்ளாமல் பேச்சியின் இறுதி சடங்கிற்கு கூடிவிட்டிருந்தனர். அதுதான் கிராமத்து மனிதர்களுக்கும் நகரத்து மனிதர்களுக்குமான மிக பெரிய வித்தியாசம்.

சகுந்தலாவும் கூட கேள்விப்பட்ட மறுகணமே புறப்பட்டு சென்றுவிட்டார். அதேநேரம் விஷயம் கேள்விப்பட்ட தமிழ் அதிர்ந்து போனாள். வயதான அந்த பெண்மணி மீது அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிட்டோமே என்றவள் உள்ளம் புழுங்கி அழுதாள்.

பேச்சியின் கோபத்தையும் சாபத்தையும் அவள் நிறைவே வாங்கியிருக்கிறாள். ஆனால் அதெல்லாம் விட நேற்றைய அவரின் மௌனமும் இன்றைய அவரின் மரணமும் அவளை சுக்குநூறாக உடைத்தது.

‘எல்லாமே அந்த சனியன் பிடிச்சவனாலதான்… அவன் செஞ்ச கேவலமான காரியத்தாலதான் நான் அந்த கிழவியை அப்படியெல்லாம் திட்டு போட்டேன்’ குற்றவுணர்வில் வீட்டிற்குள் முடங்கியபடி தனக்குள்ளாகவே துடித்து கதறினாள்.

அதே சமயம் பேச்சி கிழவியின் வீடு முழுக்க அக்கம் பக்கத்தினரின் கண்ணீராலும் உறவினர்களின் ஒப்பாரியாலும் சங்கு மேள சத்தங்களாலும் மரணக்கோலம் பூண்டது. நாளை முதல் பேச்சி கிழவியின் குரல் கேட்காமல் நிரந்தரமாக அந்த வீடே மௌனம் கோலம் பூண்டுவிட போகிறது.

ஆனால் இன்றே அத்தகைய மௌன கோலத்தில் அமர்ந்திருந்தான் பேச்சியின் செல்ல பேரன் ராமசந்திரன்! அப்போது வரை அவன் விழிகளிலிருந்து ஒரு துளி நீர் கூட வரவில்லை.

தன் வாழ்வில் இப்படியொரு மோசமான விடியலும் வருமென்று அவன் எதிர்ப்பார்க்கவே இல்லை. எத்தனை மணிக்கு அவன் உறக்கத்திலிருந்து விழித்தாலும், “எழுந்திட்டியடா கண்ணு” என்று முகம் மலர காபியோடு அருகில் வந்து அமரும் அவனின் அம்மத்தா இன்று உறங்கி கொண்டிருநத்து, அவனுக்கு முதல் அதிர்ச்சி என்றால் அவர் உறங்கவில்லை உயிர் நீத்துவிட்டார் என்பது அவனுக்கு அதிர்ச்சியிலும் அதிர்ச்சி பேரதிர்ச்சியாக இருந்தது.

இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்தே அவன் மீளவில்லை

இன்று காலை விழிப்பு வந்த மறுகணம், “அம்மத்தா காபி” என்றபடிதானே எழுந்து கொண்டான்.

ஆனால் அந்த கிழவி அவன் தலையில் மொத்தமாக இடியை இறக்கிவிட்டு திரும்பிவர முடியாத தூரத்திற்கு சென்று விட்டாள்.

தாய் தந்தையின் பாசம் மட்டும் அல்ல. வேறெந்த உறவு முறைகளை பற்றியுமே அறியாதவன் அவன். அரவணைப்பு அன்பு என்று அவனுக்கு அனைத்தையும் கொடுத்தது அவனின் அம்மத்தா மட்டும்தான். அம்மாத்தாதான் அவன் அறிந்த ஒரே உறவு. ஏனைய உறவுகள் அவனுக்கு இருந்த போதும் அவரை தவிர்த்து அவன் வேறொரு மடி சாயந்ததில்லை. வேறெங்கயும் அவன் பசியாறியதில்லை. எல்லோரிடமும் கோபத்தை காட்டும் அவனின் அம்மத்தா அவனிடம் ஒரு நாளும் கோபத்தை காட்டியதில்லை

வெறும் கண்ணீர் மட்டும் அவன் அடைந்த அந்த பேரிழப்பிற்கு ஈடாகாது. சிலையாக திண்ணையில் அமர்ந்திருந்தவனின் விழிகள் அழவில்லை. ஆனால் அணுஅணுவாக தன் அம்மத்தாவின் இழப்பை எண்ணி உள்ளுர துடித்து மருகியது அவனுக்கு மட்டுமே தெரியும். 

அவன் இடிந்து போய் அப்படியே அமர்ந்திருக்க, பேச்சியின் மூத்த மகள் கோமதியும் அவளின் இரண்டு மகள்களும் கடைசி மகனும்தான் ஓவென்று ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தனர்.

“குடிக்கார பய… எப்படி கல்லு மாதிரி உட்கார்ந்துட்டு கிடக்கான் பாரு… அந்த கிழவி அவனை எப்படியெல்லாம் வளர்த்துது” என்று சொல்லி அங்கிருந்தவர்கள் எல்லோரும் அவனை சாட தொடங்கினர். யாருக்கும் அவனது ஆழ்மன உணர்வுகளும் வேதனையும் புரிப்படவைலேயே!

பேச்சியின் மூத்த மகளுக்கு அவனை சுத்தமாக பிடிக்காது. தன் பிள்ளைகளை எல்லாம் விட்டுட்டு தன் தாய் அவனை தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடுகிறார் என்று இத்தனை நாளாக உள்ளுர குமுறி கொண்டிருந்தார்.

”எம்பட சொத்து மொத்தம் என்ற பேரனுக்குதான்… அதுல யாரும் பங்கு கேட்டுட்டு வர கூடாதாக்கும்” என்று பேச்சி ஒருமுறை மகளிடம் சொல்ல,

“என்னைய என்ன தெருவுல இருந்து தூக்கிட்டு வந்து வளரத்தியா? நான் உன்ற மவ இல்லையா?” என்று கோமதியும் தன் தாயிடம் சண்டைக்கு நிற்க, “அவன் ஆயி அப்பன் இல்லாத புள்ள… எனக்கு அப்புறம் அவனுக்கு ஆரு இருக்கா?” என்று பேரனுக்காக அவர் பரிந்து பேச, அன்று கோமதியின் உள்ளம் எரிமலையாக தகித்தது.

பேச்சிக்கு மகளை பற்றி நன்றாகவே தெரியும். அவருக்கு பிறகு கோமதி நிச்சயம் சந்திரனை பார்த்து கொள்ள மாட்டார். அதற்கு மேலாக அவளின் கணவன் ஒரு முசுடு! அவனும் சந்திரனுக்கு ஆதரவாக இருக்க ஒப்புக்கொள்ளவே மாட்டான் என்று முன்னமே தெளிவாக கணித்திருந்தார். ஆனால் விதி வேறுவிதமாக விளையாடிவிட்டது.

பேச்சிக்கு செய்யும் எந்த இறுதி சடங்கிலும் சந்திரனை பங்கேற்கவிடவில்லை கோமதி. அனைத்தையும் அவரும் அவரின் மகன் மகள்களையே முன்னின்று செய்ய வைத்தார்.

சந்திரனும் தன் உரிமை என்று எதையும் கேட்டு வாங்கும் நிலைமையிலில்லை. அவனால் இன்னுமே நம்ப முடியவில்லை. இந்த உலகத்தில் அவனுக்கிருந்த ஒரே உறவும் அவனை விட்டு போய்விட்டதென்று!  

கிட்டத்தட்ட உயிரற்ற  ஜடம் போலவே அவன் கிடந்தான். அவனிடம் ஆறுதலாக பேச கூட ஒருவருமில்லை. அவன் தோள் சாய்ந்து அழ அவனுக்கென்ற இனி எந்த உறவுமில்லை. 

ஊர்மக்களுக்கு கோமதியின் செய்கை மிகவும் நெருடலாக இருந்தது. இருப்பினும் அவர்கள் குடும்ப விஷயத்தில் யார் தலையிடுவது. அதுவும் சந்திரனே எதுவும் கேட்காத போது வேறு யாராலும் எதுவும் கேட்க முடியவில்லை.

இறுதியாக கோமதி கொல்லி பானையையும் தன் மகனையே தூக்க வைத்தார். அப்போது ஊர் மக்கள் சிலர் பொறுக்க முடியாமல் முன் வந்து அவளிடம்,

“என்னதான் இருந்தாலும் கெழவி அந்த சந்திரன் பய மேலதான் உசுரா இருந்தது… அவன் கொல்லி போட்டாத்தான் சரியா வரும்” என்று சர்ச்சையை கிளப்ப,

“அந்த குடிகார பய என்ற ஆத்தாளுக்கு கொல்லி வைக்க கூடாது… அந்த பாவி பயலுக்காக உழைச்சு உழைச்சுதான் என்ற ஆத்தா இப்படி சீக்கிரம் உசுர வுட்டு போட்டுச்சு… பாருங்க… இப்ப கூட எப்படி கல்லாட்டும் உட்கார்ந்திருக்கான்னு படுபாவி பய” என்று கோமதி உருக்கமாக அழுது பேசியதில் மேலே யாரும் எதுவுமே பேச முடியவில்லை.

உயிரோடு இருக்கும் போது தன் தாய் இருக்கிறாளா அல்லது செத்தாளா என்று கூட பார்க்க வராத கோமதியின் வார்த்தைகள்தான் ஊர் மக்களுக்கும் நியாயமாகப்பட்டது. ஆனால் சந்திரன் இந்த நியாயம் தர்மம் எதற்குள்ளும் வரவில்லை. பசி, துக்கம், அழுகை என்று எல்லாமே மறந்த ஒருவித மோனநிலையில் கிடந்தான்.

பேச்சி கிழவியின் சவத்தை வைத்து கொண்டு நடக்கும் சண்டை சச்சரவு சடங்கு என்று எதிலுமே அவன் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் மாய்ந்து மாய்ந்து செய்யும் சேவைகள் அனைத்தும் அந்த உணர்வும் உயிருமற்ற உடலுக்குத்தானே!

அவனுக்கு அது வேண்டாம். அவன் உயிரும் உணர்வுமாக அவனை கட்டியணைத்து முத்தமிடும் அவனின் அம்மத்தா வேண்டும்.

“என்றா கண்ணு… பசிக்குதா?” என்று அவன் மனமறிந்து கேட்கும் அந்த அக்கறை வேண்டும்.

கொஞ்சமாக கறி குழம்பு வைத்து அதிலிருக்கும் மொத்த கறி துண்டையும் அவனுக்கே வைத்து, “நல்லா சாப்பிடு கண்ணு” என்று அள்ள அள்ள குறையாமல் அவனுக்கு அன்பையும் பாசத்தையும் பரிமாறும் அந்த கைகள் வேண்டும்.

 “இந்த உடுப்பில அப்படியே நம்ம வீட்டு பிள்ளை எம்.சி.ஆர் கணக்கா இருக்க… என்ற கண்ணே பட்டுடும்” என்றவனை கொஞ்சி கொஞ்சி ரசித்த அந்த கண்கள் வேண்டும்.

“எடுபட்ட பயலுங்க கூப்புடுறானுங்கன்னு ஆத்துப்பக்கம் போயிடாதே கண்ணு… தலச்சன் புள்ள… பொழுது சாய்ஞ்ச புறவு வெளியே சுத்தப்படாது” என்று இந்த உலகிலேயே அவன் பாதுக்காப்பை பற்றி கவலைப்பட்ட அந்த ஒரே ஜீவனின் உயிர் வேண்டும்.  

ஆனால் அவன் இனி என்ன வேண்டினாலும் அவன் அம்மத்தா அவனுக்கு திரும்ப வர போவதில்லை.

பேச்சி கிழவி தன் உயிருக்கு உயிரான பேரனை விட்டுவிட்டு உயிரற்ற வெறும் கூடாக அவரின் இறுதி பயணத்தை மேற்கொண்டுவிட,  அந்த நொடி சந்திரனுக்கு உலகம் சுழலாமல் அப்படியே நின்று போனது. என்ன செய்ய வேண்டும்? ஏது செய்ய வேண்டும்? என்று அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அவனுக்கு கண்களை இருட்டி கொண்டு வந்ததில் அப்படியே திண்ணையில் சாய்ந்தபடி மயங்கிவிட்டான். யாருமே அவனுக்கு என்ன ஆனது என்று கூட கவனிக்கவில்லை.

கோமதி அவன் மீது ஒரு வாலி தண்ணீரை எடுத்து வந்து ஊற்றிவிடவும்தான் அவனுக்கு விழிப்பே வந்தது.

அப்போதே அவன் கொஞ்சம் தெளிந்தான். அவனின் அம்மாத்தா அவனை விட்டு போனதை எண்ணி அழ தொடங்கினான். கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிய தொடங்கியது. எத்தனை மணி நேரம் என்றெல்லாம் தெரியாது. தேற்றுவார் யாருமின்றி அவன் அழுது அழுது ஓய்ந்த பிறகு எழுந்து வீட்டிற்குள் வர எத்தனிக்க, அவன் துணிகளை வாரி சுருட்டி அவன் முகத்தில் வீசினார் கோமதி!

“பெரியம்மா” என்றவன் கம்மிய குரலில் அழைக்க,

“அப்படி என்னைய கூப்பிட்டன்னா வாயை ஒடச்சி போடவனாக்கும்… புறக்கும் போதே என்ற தங்கச்சியை காவு வாங்குனவன்தானடா நீயி… இப்ப என்ற ஆத்தாவோட உயிரையும் பறிச்சு என்னைய அனாதையா ஆக்கி போட்டியேடா

பாவி பயலே… இதுக்கு மேலயும் உன்னைய இந்த வீட்டுள்ள சேர்த்தேன்னா என்ற குடும்பத்தையும் நீ நாசமாக்கி போடுவ… ஒழுங்கா போயிடு” என்று திட்டவட்டமாக சொல்லி கோமதி கதவை அடைத்துவிட அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏற்கனவே தன் அம்மத்தாவை  பறிகொடுத்து நின்றிருந்தவனுக்கு கோமதியின் வார்த்தைகள் பேரதிர்ச்சியை கொடுத்தது.

அவன் பிறந்து வளர்ந்த அவன் அம்மதத்தாவின் வீடு அது. அதில் தனக்குமே உரிமை இருக்கிறது என்று கேட்குமளவுக்காய் அவனுக்கு தெளிவுமில்லை. அப்போதைக்கு அவன் மூளைக்கு அதெல்லாம் தோன்றவுமில்லை. ஆனால் தன் பெரியம்மாவிற்கு இந்தளவு துவேஷமும் கோபமும் இருக்கும் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

“பெரியம்மா வீட்டுல இரண்டு நாள் தங்கிட்டு வரேன் அம்மத்தா” என்று அவன் ஆசையாக பேச்சியிடம் கேட்கும் போதெல்லாம், “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்” என்று அவர் தீர்க்கமாக மறுப்பதற்கான காரணம் அவனுக்கு அப்போது புரியவில்லை. ஆனால் இப்போது தெள்ளதெளிவாக புரிந்தது. 

அவன் அங்கேயே கால் கடுக்க நின்றாலும் கோமதி அவனுக்காக இறங்கியும் வரமாட்டாள். இரக்கமும் படமாட்டாள் என்று அவனுக்கு நன்றாக புரிந்துவிட்டது. தன் அம்மத்தா இல்லாத இடத்தில் இனி தான் இருந்து மட்டும் என்ன ஆக போகிறது என்று திக்கற்று திசை தெரியாமல் நடந்தவனுக்கு எங்கே செல்வது என்ன செய்வது என்று ஒன்றும் விளங்கவில்லை.

ஊர் எல்லையிலிருந்த கருப்பன் கோவிலில் வந்து படுத்து கொண்டான். அப்போதைக்கு அவனுக்கு அதை விட்டால் ஒதுங்க வேறு இடமுமில்லை. அந்தக் காவல் தெய்வம் கருப்பன் மட்டும்தான் அவனுக்கு அப்போதைக்கான ஒரே துணை.

கருப்பன் கோவில் அருகில்தான் மதுசூதனன் நிலமும் இருந்தது. தினமும் அந்த வழியாக போய் வருபவர் இரண்டு நாளாக கோவிலில் சோர்ந்து படுத்து கிடந்த சந்திரனை பார்த்து உள்ளம் கலங்கி போனார்.

அவனை கண்டும் காணாமல் கடந்து போக அவர் மனம் இடம்கொடுக்கவில்லை. அன்று அவனை கையோடு அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தவர், “ஏ புள்ள… சகுந்தலா” என்றபடி வீட்டிற்குள் நுழைய, தமிழ் மட்டுமே தொலைகாட்சி பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“நீ மட்டும்தான் ஊட்டுல இருக்கியா கண்ணு” என்றவர் கேட்கவுமே அவரை கவனித்தவள்,

“ஆமாங்க ஐயா… அம்மா தம்பி தங்கச்சி எல்லாம் எதிர்த்து வீட்டு செல்வி அக்கா சீமந்தத்துக்கு போயிருக்காவுக” என்றாள்.

“ஏங் கண்ணு… நீ போகலயாக்கும்?” என்றவர் வினவவும்

“இல்லிங்… அசதியா இருந்துச்சு… அதான் நான் மட்டும் வீட்டுலயே இருந்து போட்டேன்”

“சரி சரி” என்றவர், “வீட்டுல சோறெல்லாம் பொங்கி வைச்சிருக்கு  இல்ல உங்க அம்மா” என்று கேட்டதில் அவள் தலையசைத்து,

“இருக்குங்க ஐயா” என்க, அவர் சற்று நேரம் தயங்கிவிட்டு,

“நம்ம பேச்சி கிழவி பேரன்… சந்திரன் இல்ல… அவன் இரண்டு நாளா சோறு தண்ணி இல்லாம கருப்பன் கோவில படுத்துக்கிட்டு கிடந்தான்… பார்க்கவே பாவமா இருந்துச்சு… அதான் அவனை அழைச்சு போட்டு  வந்து திண்ணையில உட்கார வைச்சு இருக்கேன்… கொஞ்சம் சோத்த போட்டு அனுப்பிவிடு… உண்டுட்டு போகட்டும்” என்றவர் சொல்ல அவள் அதிர்ச்ச்யோடு அவரை ஏறிட்டு பார்க்க,  

“எனக்கு நம்ம ஊரு தலைவர் வீட்டுல கொஞ்சம் வேலை இருக்கு… முடிச்சு போட்டு வந்துடுறேன்” என்றதும் அவள் முகம் மாறியது.

“நேரமாயிடுச்சு… நீங்களும் உண்டுட்டு போங்களேன்” என்றாள்.

“இல்லடா கண்ணு… போயிட்டு வந்துடுறேன்… நீ அந்த புள்ளைக்கு பசியாற சாப்பாடு போட்டு அனுப்பி விடு” என்றவர் சொல்ல,

“நல்லா போட்டு அனுப்பி விடுறேன்… நீங்க போயிட்டு வாங்க ஐயா” என்று அவள் ஆமோதிப்பாக தலையசைத்துவிட்டு பின்புறமாக தோட்டத்திற்கு போய் வாழை இலையை பறித்து கொண்டு வந்து திண்ணையில் அமர்ந்திருந்தவனுக்கு அவன் முகத்தையும் பாராமல் உணவை எல்லாம் பரிமாறிவிட்டு அவன் சாப்பிட எத்தனித்த போது,

“மானம் வெட்கம் ரோஷம் இருக்க சரியான ஆம்பளயா இருந்தா இந்த சோத்துல நீ கை வைக்க கூடாது” என்றாள்.

“தமிழு” என்றவன் அதிர்ச்சியாக நிமிர,  “உன் வாயல என்ற பேரை சொல்லாதே… நாராசமா இருக்கு” என்றவள் சொல்ல,  

அவள் வேதனை தாளாமல், “என்ற பெரிம்மா என்னை வூட்டை  விட்டு வெளியே போன்னு சொல்லிடுச்சு… இந்த மாதிரி நிலைமையில நீயும் இப்படி பேசணுமா?” என்றவன் வேதனையாக கேட்கவும்,

“ஒன்ற பெரியம்மா செஞ்சது சரிதான்… உன்னைய மாதிரி ஆளை எல்லாம் வூட்டு உள்ற இல்ல?

 ஊருக்குள்றயே சேர்க்க கூடாது… ஈனபையன்…

இத்தனை வருசமா அந்த கெழவியை ஏச்சு பொழைச்சிட்டு இருந்த… இப்ப ஊர்கார்ய்ங்க கிட்ட எல்லாம் எனக்கு யாரும் இல்லன்னு சொல்லி பிச்சை வாங்கி திங்க போற… நீயெல்லாம் என்ன மாதிரி பிறப்பு?” என்றவள் கேவலமாக பேச,

 “தமிழு… போதும்… ஒன்ற அப்பன்தான் வலிய வந்து கூப்பிட்டாரு… அப்ப கூட நான் வரமாட்டேன்தான் சொன்னேன்” என்று அவன் சொல்லியபடி எழுந்து அவளை முறைக்க.

“நீ செஞ்ச கேவலமான காரியம் அந்த மனுஷனுக்கு தெரியாது… அதான் உன் மேல போய் இரக்கப்பட்டு இருக்காரு… தெரிஞ்சிருந்தா அன்னைக்கே உன்னை தலை வேற முண்டம் வேறயா வெட்டி போட்டிருப்பாரு…

இதுல நீ செஞ்ச காரியத்துக்கு உன்னைய என்ற விட்டு திண்ணையில உட்கார வைச்சு நான் சோத்தை போடணுமா?

சை! உன்னைய பார்த்தாளே எனக்கு பத்திக்கிட்டு வருதுடா… ஒழுங்கா இங்கிருந்து போயிரு சொல்லிட்டேன்” என்றவள் சீற்றமாக கத்தவும் அவன் முகம் இருளடர்ந்து போனது.

“இங்க இருந்து ஒழுங்கா போயிரு… உன்னைய பார்க்க கூட எனக்கு அருவருப்பா இருக்கு… அன்னைக்கு நீ குடிச்சு போட்டு வந்து செஞ்ச காரியத்தை இப்ப நினைச்சாலும் என் ஒடம்பு கூசி போகுது… அதுவும் என்ற தம்பி தங்கச்சிங்க முன்னாடி… சை! என்றா பாவம் செஞ்ச உனக்கு நானு” என்றவள் கேட்டு கொண்டே அழ தொடங்க அப்போதே அவனுக்கு தான் செய்த செயலின் தீவிரம் உரைக்க தொடங்கியது. அதுவரையில் அவனுக்கு அந்த யோசனை கூட இல்லை.

“இல்ல தமிழு… நீ ஊரை வுட்டு போறங்கிற வருத்தத்தில சாராயத்தை குடிச்சு போட்டேன்… ஆனா என்ற அம்மத்தா மேல சத்தியமா நான் அறிஞ்சு அப்படியொரு காரியத்தை செய்யல புள்ள” என்க,

மறுகணமே அவள் கோபமாக நிமிர்ந்து, “சீ… வாயை மூடு… நீயும் உன் சத்தியமும்… உயிரோட இருக்கும் போதே அந்த கெழவி மேல பொய் சத்தியம் பண்ணவன்தானே டா நீயி… இப்ப செத்த புறவு பண்ண மாட்டியா என்ன?” என்றாள்.

“இல்ல தமிழு… அன்னைக்கு நான் ஏதோ விளையாட்டா சத்தியம் பண்ணேன்”

“ஆமான்டா… விளையாட்டா சத்தியம் பண்ண… ஆனா இன்னைக்கு உண்மையாவே அந்த கெழவி செத்து போச்சு… இல்ல இல்ல… அது செத்து போகல… நீ அதை கொன்னு போட்ட”

அவன் அதிர்ச்ச்யில் குரல் நடுங்க, “என்ன பேசற தமிழு… நான் போய் என்ற அம்மத்தாவை” என்றவன் தாங்க முடியாமல் கேட்க,

“ஆமா… நீதான்டா ஒன்ற அம்மாத்தாவை கொன்ன… தருதலையா நீ ஊரை சுத்தறதையும் குடிச்சு குடிச்சு சீரழியறதையும் பார்த்துதான் அந்த கெழவி உசுரை வுட்டிருக்கும்… இதுல நான் வேற” என்றவளால் மேலே பேச முடியவில்லை. அவளுக்கு தொண்டையை அடைத்தது.

“இதுக்கு மேல ஒத்த வார்த்தை பேசாதே… நான் போயிடுறேன்… ” என்றவன் அங்கிருந்து நகரவும்,

“ஒன்ற ரோஷத்தை பேச்சல காட்டதே… செயலில காட்டு… ஒத்த வேளை சாப்பிட்டாலும் ஒன்ற சாம்பாத்தயத்துல கௌருதையா உழைச்சு சாப்பிடு… அதுதான் சாகிற வரைக்கும் சுயமா வாழ்ந்து செத்து போன ஒன்ற அம்மத்தாவுக்கு நீ செய்ற மருவாதை” என்றவள் சொன்னதை கேட்டவன் அவளை ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டான்.

அவளுக்கு ஏனோ தான் சொன்ன வார்த்தையில் அவன் திருந்திவிடுவான் என்ற நம்பிக்கை துளி கூட இல்லை. ஆனால் அந்த வாரத்தைகள்தான் அவன் வாழ்க்கையையே புரட்டி போட்டது.

சந்திரனை முற்றிலுமாக வேறொரு பரிமாணத்தில் பைந்தமிழ் பார்க்க நேர்ந்தது.

அருவெருப்பும் வெறுப்புமாக பார்த்தவள் வரும் காலங்களில் அவனை அளப்பரிய காதலோடு உயிருக்கு உயிராக நேசிக்க போகிறாள்.   

To comment, please click here

**********

மாடித்தோட்ட குறிப்பு – 4

பூச்சிவிரட்டி பச்சை மிளகாய், இஞ்சி. பூண்டு கரைசல்

 இன்றைக்கு இந்தியாவுக்கும், ஏன், உலக நாடுகளுக்கும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து இருப்பது, நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் நச்சு வேதிப்பொருட்கள் கலந்து, மனிதர்களை மெல்லக் கொல்லும் விஷமாக (ஸ்லோ பாய்சன்) அவை மாறி வருவது தான்.

அதற்கு காரணம் விவசாயிகள் ரசாயன வேதிப்பொருட்கள் கலந்த உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்துகின்றனர். அப்படி பயன்படுத்தப்படும் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு, ஒரு குறிப்பிட்ட அளவு உண்டு. ஆனால், அறியாமை, அதிக பூச்சித் தாக்குதல், பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப அதிக விளைச்சல் பெற வேண்டும் போன்ற காரணங்களால் உற்பத்தியாளர்கள், சிபாரிசு செய்யப்பட்ட அளவை விட அதிகமான அளவு உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி விடுகின்றனர்.

இதனால் அதிகமான அளவில் பயன்படுத்தப்படும் ரசாயன வேதிப்பொருட்கள் அடங்கிய உரங்களும், பூச்சிக்கொல்லிகளும், செடிகளையும் தாண்டி, அதில் விளையும் உணவு தானியங்களிலும் ஊடுருவி விடுகின்றன. இப்படியாகத்தான் உணவுப்பொருட்களில் நச்சு வேதிப்பொருட்கள் கலந்து விடுகிறது. 

இதையெல்லாம் தவிர்க்கதான் முடிந்தளவு நமக்கான காய்கறிகளை நாமே பயிரிட்டு விளைவிக்கும் இந்த மாடி தோட்ட முறை. இதில் முக்கியமாக நாம் தவிர்க்க வேண்டியது பூச்சி கொல்லை மருந்துகளைதான்.

எங்கிருந்தாலும் பூச்சிகள் நம் பயிர்களை தாக்கத்தான் செய்யும். அதிலிருந்து நம் பயிரை காப்பாற்ற இயற்கை மூளிகயிலான பூச்சிவிரட்டிகளே போதுமானது. அதில் முக்கியமாக நாங்கள் பயன்படுத்துவது பச்சை மிளகாய், இஞ்சி. பூண்டு கரைசல். மூன்றையும் சமளவில் எடுத்து அரைத்து கொண்டு செடியின் மீது வாரம் ஒரு முறை தெளிப்பதன் மூலமாக நல்ல பலன் கிடைக்கும். அதே போல பழைய புளித்த மோரை கூட தெளிக்கலாம். அதற்கு மேல் பூச்சிகளை விரட்ட மிகவும் கசப்பு வாய்ந்த இயற்க்கை மூலிகைகளை கூட பயன்படுத்தும் வழிமுறைகள் கூட உண்டு. அவற்றையும் கற்று நம் பயிரை காப்பதன் மூலமாக ஆரோக்கியமான உணவும் உடலையும் பெற முடியும்.

To comment, please click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content