En iniya pynthamizhe-6
6
பொறியியலின் இரண்டாம் வருட தொடக்கத்தின் முதல் நாள்!
காலியாக இருந்த வகுப்பறை இருக்கைகள் அனைத்தையும் மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து நிரப்பி கொண்டிருந்தனர். பைந்தமிழ் வெகுமுன்பாகவே வந்து பின்னே இருந்த தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
எல்லோர் முகத்திலும் இருந்த உற்சாகமும் களிப்பும் தமிழ் முகத்தில் கொஞ்சமும் இல்லை. இன்னும் கேட்டால் அவளுக்கே உரித்தான துடுக்குத்தனங்கள் தைரியங்கள் இது எல்லாமே முதல் வருடத்திலேயே வடிந்து காணாமல் போயிருந்தது.
அவள் வளர்ந்த சூழ்நிலைக்கும் அங்கிருந்த மாணவர்களின் மனநிலைக்கும் கொஞ்சமும் ஒத்து போகவே இல்லை. அவர்கள் உடையணியும் விதம் ஒப்பனை செய்து கொள்ளும் முறை பேசும் பாணி என்று எல்லாமே வேற்று கிரகத்தில் வசிப்பது போல ஒரு பிரமையை உண்டாக்கியிருந்தது.
ஆதலால் அவர்களோடு நட்பாக கலந்து பழகுவதில் அவளுக்கு தயக்கம் இருந்தது முதல் காரணம் என்றால் அவளின் கருப்பு நிறத்தை பார்த்து அவளிடம் பழகாமல் ஒதுக்கம் காட்டியவர்களிடம் பேச விரும்பாமல் அவளே ஒதுங்கி நின்றது அடுத்த காரணம்!
பள்ளியில் படித்த காலத்தில் அவளுக்கென்று தனித்துவமான அடையாளங்கள் இருந்தன. தலைமை ஆசிரியரிடம் கூட நேரடியாக சென்று தன் பிரச்சனைகளை சொல்லுமளவுக்காய் இருந்த துணிச்சல் ஏனோ கல்லூரியில் பாடம் நடத்தும் பேராசிரியரிடம் கூட வரவில்லை.
பாடம் நடத்துவதை கூட கடமையே என்று அவர்கள் செய்துவிட்டு செல்ல, புரிந்தாலும் புரியாவிட்டாலும் அவளே மண்டையை போட்டு உடைத்து கற்று கொள்ள வேண்டியதுதான். இல்லாவிடில் இருக்கவே இருக்கிறது ஆதி காலத்திலிருந்து செய்யும் மனப்பாட யுக்தி! அதனை கையாள வேண்டியதுதான் என்று அவள் அந்த முதல் வருடத்தை ஒருவாறு ஒட்டிவிட்டாள். ஆனாலும் பள்ளியில் பெயர் பெற்றது போல தனித்து தன்னை அடையாளப்படுத்தி கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் அவளுக்குள் எப்போதும் இருந்தது.
சரியாக சொல்ல வேண்டுமென்றால் நாட்டு கோழியாக திரிந்தவள் கூட்டத்தோடு கூட்டமாக பிராயிலர் கோழியாக மாறி போனாள். அதேசமயம் அவள் யாரிடமும் அதிகம் பேசாததால் அங்கே அவளுக்கென்று பெரிதாக நட்பு வட்டங்கள் அமையவில்லை.
இருப்பினும் மஞ்சு என்கிற மஞ்சுளா மட்டும் அவளிடம் நெருக்கமாக இருந்தாள். மஞ்சுளா பருமனாகவும் கருப்பாகவும் இருந்த காரணத்தால் அவளிடமும் அதிகமாக யாரும் பழக விரும்பவில்லை.
அதோடு மாணவர்கள் சிலர் அவளை, ‘புல்டோசர் வருதுடா’ என்று ஏளனம் செய்யவும் அவள் மனமுடைந்து தனியாக வந்து அழுது கொண்டிருந்த சமயத்தில் தமிழ் அவளுக்கு ஆறுதல் சொல்லி தேற்ற, இருவரும் அன்றிலிருந்து உற்ற தோழிகளாக மாறிவிட்டிருந்தனர்.
தமிழுக்கும் கூட இப்படியான அடைமொழிகள் எல்லாம் இருந்தன. ‘நாட்டுப்புறம்’ ‘ஊமைகொட்டான்’ இப்படியாக சிலர் அவள் காதுபடவே கேலி செய்தாலும் நன்றாக படித்து தன் குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டுமென்ற அவளின் கனவிற்கு முன்பாக இந்த கிண்டலும் கேலிகளும் அவளை பெரிதாக பாதித்துவிடவில்லை.
அதுவும் இந்த மாதிரியான அனுபவங்களுக்கு அவள் முதல் வருடத்திலேயே பழகிவிட்டிருந்ததால் இப்போதைய அவளின் கவலை அதுபற்றி அல்ல.
பேச்சி கிழவியின் பேரன்தான் அவளின் பிரச்சனை கவலை அனைத்திற்கும் ஒரே காரணி!
அன்று அவள் பேசிய பேச்சிற்கு அவன் திரும்பியே வரமாட்டான். தன் முகத்திலேயே விழிக்க மாட்டான் என்று அவள் எண்ணியிருக்க அவனோ அவள் நினைப்பிற்கு நேர்மாறாக அடுத்த நாளே அவளின் தந்தையோடு வீட்டிற்கு வர, அவளுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
“ஏனுங்க மாமா… இந்த பையனை இங்கன கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என்று சகுந்தலா வினவ,
“நேத்து இவனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சாப்பாடு போட்டு அனுப்பினோம் இல்ல… அதுக்கு ஏதாச்சும் வேலை செய்றங்க ஐயா… சொல்லி இன்னைக்கு நிலத்தில எனக்கு உதவியா அம்புட்டு வேலையும் செஞ்சு கொடுத்தான்… தெறவசான பையன்தான்… கூலி கொடுத்தா கூட வேண்டாம்னு சொல்லி போட்டான்… ஒரு வேளை சாப்பாடு போடுங்க … போதும்னு கேட்டான் அதான்” என்றவர் சொல்ல, கேட்டு கொண்டிருந்த சகுந்தலாவுக்கு வியப்பாக இருந்தது.
“இன்னைக்கு இருக்க நிலைமைல கூலி கொடுத்தா கூட எவனும் விவசாயம் பார்க்க வர்றதில்லைங்களே” என்று கணவனிடம் சொன்னவர்,
“அவனை வந்து உட்கார சொல்லுங்க மாமா… சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று உற்சாகமாக சொல்லி கொண்டே உள்ளே சென்று மகளிடம், “ஏ தமிழு… பின்னாடி போய் வாழை இலை அறுத்து போட்டு வா” என்க, நடந்ததை எல்லாம் பார்த்து கொண்டிருந்த தமிழுக்கு கோபம் கனலாக ஏறியது.
“வேலை செஞ்சான்னா கூலி கொடுத்து அனுப்பிவிடு சொல்லுங்க… இதென்ன புது பழக்கம்” என்றவள் கடுப்பாக கேட்க,
“என்ன பேசற புள்ள நீ… வேலை செஞ்சு போட்டு ஒரு வேளை சாப்பாடு போடுன்னு கேட்கிறவனுக்கு சோத்த போடுறதுல அப்படி என்ன குடி முழிகிட போகுது… அதுவும் இல்லாம அந்த புள்ளைக்கு இப்ப யார் இருக்கா” என்று சகுந்தலா கோபமாக ஆரம்பித்து பரிதாபமாக முடிக்க அவளுக்கோ அவர்கள் சொல்லும் காரணங்களை ஏற்க முடியவில்லை.
“இல்லீங்க ம்மா… இது இப்படியே பழகிட கூடாது இல்ல” என்றவள் தயக்கமாக இழுக்க சகுந்தலா முறைப்பாக பார்த்து,
“சொன்னதை செய்… போய் வாழை இலை அறுத்து போட்டு வா… அறுத்து போட்டு வா” என்று அவர் மிரட்டவும் மேலே அவளால் ஒன்றுமே பேச முடியவில்லை. வாழை இலையை அறுத்து கொண்டு அவள் வர,
“ஏன்? அப்படியே நிற்குற… தம்பிக்கு வை” என்றார்.
அவனுக்கு இலையை வைக்கும் போது அவனை அவள் கடுப்பாக பார்க்க அவனோ, ‘இப்ப நான் சாப்பிடலாம் இல்ல’ என்று அவன் பார்வையிலேயே கேட்ட தொனியில் அவளுக்கு உள்ளூர எரிந்தது.
அதுவும் தான் நேற்று பேசிய பேசியதற்காகவே இன்று வேண்டுமென்றே செய்கிறான் என்பது புரிய, அவளுக்கு ஆத்திரமாக வந்தது.
“உனக்கு இருக்கு பாரு திமிரு” என்றவள் பல்லை கடித்து கொண்டே பரிமாற, “பேச்சியோட பேரனாக்கும்’ என்று அவன் அவளை பார்த்து கர்வப்பார்வையை வீசவும் அவளுக்கு எரிச்சலானது.
“செஞ்சது கூலி வேலை… இதுல இவனுக்கு உருட்டாப்பு வேற” என்று அவள் ஏளன தொனியில் சொல்லிவிட்டு அங்கே நிற்க பிடிக்காமல் உள்ளே சென்றுவிட, அவனுக்குதான் அவள் சொன்ன வார்த்தை மனதை அறுத்துது.
ஆனால் அப்போதைக்கு அவனுக்கு வேறு வழியுமில்லை. எங்கேயாவது வேலை செய்துதான் பிழைக்க வேண்டுமென்ற நிலைமையில்தான் அவனும் இருந்தான். அதுவும் அவனை நம்பி யாரும் வேலை தர கூட தயாராக இல்லை. அதேநேரம் வைராக்கியமாக வேலை செய்துதான் சாப்பிட வேண்டுமென்ற முடிவில் இருந்தான்.
அந்த நிலையில் மதுசூதனன்தான் அவன் மீது இரக்கப்பட்டு வேலை கொடுத்தார். அவன் இருந்த பசிக்கு உணவை தவிர வேறு எதையும் கேட்க வேண்டுமென்று அவனுக்கும் தோன்றவில்லை.
பின்புறம் அவன் கை அலம்பி கொண்டிருக்க, அவன் முன்னே வந்து நின்றவள், “இதுவே கடைசியா இருக்கட்டும்… இனிமே என்ற வீட்டு பக்கம் வராதே சொல்லி போட்டேன்… அப்புறம் நீ செஞ்ச அசிங்கத்தை என்ற அய்யன் கிட்ட சொல்லி போடுவேன்” என்க,
“நான்தான் செஞ்சது தப்புன்னு ஒதுக்கிட்டேன் இல்ல… புறவு எதுக்கு சும்மா அந்த விசயத்தை சொல்லி காட்டிக்கிட்டே இருக்கவ”
“எனக்கு உன்னைய பார்க்கவே பிடிக்கல… இனிமே இங்கன வராதே… அமபுட்டுதான்” என்றவள் அவன் மீது எரிந்து விழ அதற்கு மேலாக அவளின் வெறுப்பை சுமக்க முடியாமல் அங்கிருந்து அகன்றவன் மீண்டும் அவள் முன்னே வரவில்லை.
கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டு அவன் உண்டு அவன் வேலை உண்டு என்றுதான் இருந்தான். ஆனால் விதி அவர்களை அப்படியே விட்டுவிடவில்லை.
தமிழ் தன் விடுப்பு முடிந்து ஊருக்கு புறப்பட ஆயத்தமாகி கொண்டிருந்தாள். துணிகளை எடுத்து வைத்துவிட்டு அவள் கொல்லை புறத்தில் குளிக்க சென்ற போது, “ஏ கருவாச்சி!” என்றவன் குரல் கேட்டு அவளுக்கு வெலவெலத்து போனது.
‘அன்னைக்கு மாதிரி குடிச்சிட்டு வந்திருப்பானோ’ என்றவள் படபடப்போடு திரும்ப, அவன் அவள் முன்னே விறைப்பாக நின்றிருந்தான்.
“ஒழுங்கா போயிரு… அன்னைக்கு மாதிரி சும்மா இருக்க மாட்டேன்… ஊரை கூட்டி போடுவேனாக்கும்” என்றவள் விரல் நீட்டி எச்சரிக்க, அவனோ கொஞ்சமும் அசறாமல்,
“எனக்கு உன்கிட்ட ஒரு விசயம் கேட்கோனோம்” என்க,
“எனக்கு உன்கிட்ட எதுவும் பேச வேணாம்… அன்னைக்கே நான்தான் தெளிவா சொன்னேன் இல்ல… எனக்கு உன்ற மொவரையை பார்க்கவே பிடிக்கலன்னு… புறவு எதுக்கு என்ற முன்னாடி வந்து நிற்கிறவன்… உனக்கு வெட்கம் மானம் ரோஷம் எதுவுமே இல்லையா?” என்று அவள் அவனை பேச விடாமல் பொறிந்து தள்ளிவிட்டு, “சை! நீயெல்லாம் என்ன பிறவியோ? உன்கிட்ட எல்லாம் நின்னு பேசுனா எனக்குதான் அது அசிங்கம்” என்றவள் அவனை கடந்து செல்ல பார்க்க, வம்படியாக அவன் அவளை வழிமறிக்க, அவளை அச்சம் தொற்றி கொண்டது.
அந்த நொடியே அவள், “அம்ம்ம்ம்ம்ம்ம்மமா” என்று அலற தொடங்கவும் அவன் அவள் வாயை அழுத்தி மூடி அங்கிருந்த மரத்தில் நெருக்கி நிறுத்த அவள் பயந்து போனாள்.
“கத்தாதேடி… உன்னைய நான் எதுவும் பண்ண மாட்டேன்” என்றவன் அவள் உதட்டிலிருந்த கரத்தை எடுத்துவிட்டு,
“அம்மத்தா சாவுறதுக்கு முன்னாடி நாள் நீ கருப்பன் கோவில வைச்சு ஏதோ பேசினியாமே… சாந்தி மவன் குட்டி சொன்னான்…
அதுவும் நீ பேசனதுல அம்மத்தா அழுதுக்கிட்ட வேற போச்சாம்… என்னத்த பேசி தொலைச்ச” என்றவன் கேட்க அவள் விக்கித்து நின்றாள்.
“அது… அது நான்” என்றவள் வார்த்தை வராமல் திக்கி திணற,
“என்னடி சொன்ன?” என்று அவன் மீண்டும் அழுத்தி கேட்க அவளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
“என்னடி சொன்ன? சொல்லி தொலையேன்” குரலை தாழ்த்தி கேட்டவனின் முகத்தில் அப்போது கோபத்தை விடவும் தவிப்பு அதிகமாக பிரதபலித்தது.
அவனின் தவிப்பே அவளை பேச விடாமல் செய்தது.
“சொல்லுடி… நான் உன்கிட்ட அன்னைக்கு கோவில நடந்துக்கிட்ட விசயத்தை எதையும் சொல்லி போட்டியோ?” என்ற போது அவன் முகத்தில் ஆழ்ந்த வலி!
“உஹும்… இல்ல… ஆனா அந்த கோபத்தல தான்” என்றவள் அவன் முகத்தை பார்க்க முடியாமல், “இப்படி ஒரு தருதலயை வளர்த்ததுக்கு நாண்டுகிட்டு சாவலாம்ம்ம்ம்னு” என்று சொல்லி முடிக்கும் போது அவன் அப்படியே தரையில் சரிந்திருந்தான்.
“அடிப்பாவி! என்ன வார்த்தைடி சொல்லி போட்ட” என்று தலையிலடித்து கொண்டு அழுதவன்,
“ஐயோ! அதான் ராத்திரி என்கிட்ட அது ஒரு வார்த்தை கூட பேசலயா… அது தெரியாம நானும் பாவி குடிச்சு போட்ட… சை!” என்று அவன் கதற துடிக்க, அவளுக்கு மனம் கனத்து போனது.
“இல்ல… நான் சத்தியமா மனசறிஞ்சு அப்படி சொல்லல… அப்போ இருந்த கோபத்துல” என்ற நொடி அவன் தன் அழுகையை நிறுத்திவிட்டு அவளை அவன் நிமிர்ந்து பார்த்து,
“அதுக்கு நீ அப்படி ஒரு வார்த்தைய சொல்லுவியாக்கும்” என்றவன் சீற அவள் மிரண்டு போனாள்.
அவள் பதிலற்று நிற்க அவன் மேலும் அவளிடம், “அப்ப கூட தப்பு நான்தானே செஞ்சேன்… என்னையதானே நீ தண்டிச்சு இருக்கோனோம்… என்ற அம்மத்தா என்னடி பண்ணுச்சு உன்னைய?” என்றவன் சீற்றமாக,
“நீ என்கிட்ட அப்படி நடந்துக்காம இருந்திருந்தா நான் ஏன் அந்த கிழவி கிட்ட அப்படியெல்லாம் பேசி இருக்க போறேன்” என்றவளும் குரலை உயரத்தினாள்.
அந்த நொடி தன் முகத்தை துடைத்து அவளை நிதானமாக ஏறிட்டவன், “என்ற மேலதான் தப்பு… ஒன்ற பின்னாடி பித்து பிடிச்சு சுத்துனேன் பாரு… எல்லாம் என்ற தப்புதான்
காதல் கன்றாவின்னு சொல்லி போட்டு உன்னைய நினைச்சு குடிச்சது இல்லாம ஒன்ற பேரை வேற நெஞ்சுல பச்ச குத்திக்கிட்டேன்… அப்பவே என்ற அப்பத்தா சொல்லுச்சு… இந்த கிறுக்குத்தனம் எல்லாம் வேணாம்டான்னு நான்தான் கேட்காம” என்று உணர்ச்சிவசப்பட்டவன், “என்னைய எல்லாம்” என்று அப்படியே தலையை பிடித்து கொண்டான்.
“என்னது? பேரை பச்ச குத்தியிருக்கியா?” என்றவள் அதிர்ந்தபடி உற்று கவனித்த போதுதான் விலகியிருந்த சட்டையின் வழியே அவன் மார்பு பகுதியில், ‘பைந்தமிழ்’ என்றவள் பெயரை பார்த்து நடுங்கி போனாள்.
“என்னடா காரியம் பண்ணி வைச்சு இருக்க… ஐயோ! ஊருக்குள்ள தெரிஞ்சா என்ற மானமே போயிடும்” என்றவள் தவிப்புக்க்குள்ளாக,
“இந்த விசயம் என்ற அம்மாத்தாவுக்கு மட்டும்தான் தெரியும்… அதுக்கு கூட நான் உன் பேரைதான் பச்ச குத்தியிருக்கேன் தெரியாது” என்றவன் சொல்ல,
“முத காரியமா அதை அழிச்சு போடு… சொல்லிட்டேன்” என்றாள்.
“அழிக்கத்தான்டி போறேன்… மனசுக்குள்ள இருக்க ஒன்ற நினைப்ப… ஆனா இதை நான் அழிக்க மாட்டேன்… இதை நான் பார்க்கும் போதெல்லாம் நீ என்ற அம்மாத்தாவை அவமானப்படுத்தி பேசுனது எனக்கு நியாவத்துக்கு வரோனோம்டி…
என்ற அம்மத்தாவோட வளர்ப்பு தப்பு இல்லன்னு உனக்கு நான் நிருப்பச்சி காட்டோனோம்டி… அப்பத்தான் நான் பேச்சியோட பேரன்” என்றவன் சவாலாக சொல்லிவிட்டு அகன்றுவிட அவளுக்கு தலையே சுழன்றது. அதுவும் அவன் பச்சை குத்தியிருந்ததை பார்த்து அவள் உள்ளம் படபடத்தது. இது ஊருக்குள் தெரிந்தால் என்னவெல்லாம் ஆகுமோ? என்று எண்ணி எண்ணி அவள் நிம்மதி பறிபோனதுதான் மிச்சம்.
வகுப்பறையில் அமர்ந்து கொண்டு அவள் இதே சிந்தனையிலிருக்க, “ஏ தமிழுழுழுழுழு” என்று அப்போது அவள் காதுக்குள் வந்து கத்தினாள் மஞ்சுளா.
“ஆ… எதுக்கு இப்ப காதுக்குள்ள வந்து கத்துனவ… நான் இங்கனதானே இருக்கேன்” என்றவள் அரண்டபடி காதை மூடி கொள்ள,
“எங்க இங்கன இருக்க… நான் வந்து எவ்வளவு நேரமாச்சு தெரியுமா? கூப்பிடுறேன்,,, கூப்பிடுறேன்… நீ பாட்டுக்கு என்னத்தையோ யோசிச்சிக்கிட்டே இருக்க”
“அப்படியா?”
“என்ன நொப்படியா? மேடம் இன்னும் ஊர்ல இருந்து வந்து சேர்ல போல… தம்பி தங்கச்சி நினைப்பிலயே இருக்கியோ?” என்றவள் கேட்கவும்தான் அவளுக்கு தான் அவன் நினைப்பிலிருப்பது உரைத்தது.
‘சை! கிளேஸ்ல வந்து அந்த வீணா போனவனை பத்தியே யோசிச்சிட்டு இருக்கேனே… எந்த ஜெனம்த்தில அவனுக்கு என்ன பாவம் பண்ணி தொலைச்சேனோ… என் உசுரை இப்படி எடுக்கான்’ என்றவள் மனதிற்குள் புலம்பி தீர்க்க,
“போதும் உன் கனவு உலகத்தில இருந்து திரும்பி வா… சார் வந்துட்டாரு” என்றதும் அவள் கவனத்தை சிரமப்பட்டு திருப்பிய அதேநேரம்
“ஹாய் ஆல்… என் பேர் காமராஜ்… நான் உங்களுக்கு ஆப்ஜெக்ட் ஒரியன்டட் பேப்பர் எடுக்க போறேன்… அன் நான்தான் இந்த வருஷம் உங்களோட க்ளேஸ் டீச்சர்” என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட அந்த ஆடவனை பார்த்த தமிழின் விழிகள் இரண்டு மடங்கு பெரிதானது. தன் தலையை அவசரமாக மேஜைக்கு கீழே மறைத்து கொண்டு,
‘அட கடவுளே! இவங்க லெக்சரரா?!!!!’ என்று அதிர்ச்சியானாள்
to comment please click here
*****
குறிப்பு-5
விதைகளே பேராயுதம்!
வருங்காலத்தில் விவசாயத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகப் போராட, விவசாயிகளின் கையில் இருக்கும் வலுவான ஆயுதம் நாட்டு விதைகளே.
நாட்டு விதைகளை அறிமுகப்படுத்திய நம்மாழ்வார் நம்மிடமிருந்து மறைந்துவிட்டாலும், அவர் காட்டிய பாதையில் செல்வதே விவசாயத்தின் வருங்காலத்தைத் தீர்மானிக்கும். இதை உணர்ந்து, மரபு விதைகளைக் காக்க விவசாயிகள் மட்டுமின்றி, மக்கள் அனைவருமே முன்வர வேண்டும்!.
மாடித்தோட்டம் வைக்க ஆசை கொண்டிருக்கிறீர்கள் எனில் மறவாமல் மனதில் கொள்ளுங்கள். பாரம்பரிய மிக்க நாட்டு விதைகளை காக்க வேண்டும். விதைக்க வேண்டும். நம் மண்ணும் உடலும் செழிப்பாகவும் வளமாகவும் அதுவே சிறந்த வழி.
நாட்டு விதைகள் நாளுக்கு நாள் நம்மிடமிருந்து அழிந்து வரும் நிலையில் அதை பேணி காக்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய பொறுப்பும் கூட. அந்த வகையில் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு நாட்டு விதைகளின் விற்பனை மீண்டும் பார்வை ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமான சமூதாயதிற்கான ஆரம்பம்.
தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப எந்தெந்த மாதத்திற்கு எந்த காய்களை விதைக்க வேண்டுமென்பதை நாம் அறிந்து விதைத்தோமேயானால் நிச்சயம் நல்ல உற்பத்தி கிடைக்கும்.
சாதரணமாக எல்லா மாதிரியான காய்கறிகளையும் நாம் பயிரிட முடியும். நாட்டு தக்காளி, வெங்காயம், கீரை வகைகள்., அவரைகாய், பீன்ஸ், சுரக்காய், பூசணிக்காய், பீட்ரூட், கேரட், முள்ளங்கி, கத்திரிக்காய், உருளை, வெண்டக்காய், நீட்டு மிளகாய், குண்டு மிளகாய், இன்னும் பல. அதுவும் சமீபமாக எங்கள் வீட்டில் காலிப்ளவரும் விளைந்தது. கீழே அதன் படம் இணைக்கப்படுகிறது.
மூலிகை வகைகளை பற்றியும் பழ வகைகளை பற்றியும் அடுத்த பதிவில் பேசுவோம்
நன்றே செய்வோம் அதையும் இன்றே செய்வோம்.
to comment please click here
அருமை 👌
wow akka cauliflower pic sooper 😍😍😍😍
ennaka puthusa kamaraj jaa kootittu vanthirukeenga enna vambu ilutha iva.. neenga mattum antha veena ponavan hero nu sollala naa naan ivanai thaan hero nu ninaichirupen 😂😂😂
unmai terinchiruchu enna veera vesama sabatham laam pottutu poraan virumaandi ( sorry kamal sir 😢)
So Kamaraj is the person she met on train
So Kamaraj is the person who Tamil met in train???