மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: En Iniya Pynthamizhe!En Iniya Pynthamizhe - 10&11Post ReplyPost Reply: En Iniya Pynthamizhe - 10&11

Quote from monisha on April 1, 2022, 10:00 AM

10
யாரிடமும் தன் வேதனையைக் கொட்ட முடியாமல் அவள் தனியே அழுதிருந்த சமயம் பார்த்துதான் சந்திரன் அங்கே வந்ததும் தேவையில்லாத களேபரங்கள் நடந்து முடிந்திருந்ததும்... சரியாக அந்த நேரத்தில் கல்லூரியிலிருந்து செல்வி வீட்டிற்குத் திரும்பியிருந்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்த தன் தமக்கையை நெகிழ்ச்சியோடு அவள் கட்டியணைத்துக் கொண்டாள். ஆனால் தமிழிடம் அத்தகைய உவகை இல்லை. “என்னங்க க்கா ஆச்சு” “உனக்கு என்னன்னு விஷயமே தெரியாது இல்ல” என்றாள் தமிழ். “உங்களுக்கு கல்யாண பேசுன விசயமா?” என்றவள் சரியாகக் கணித்து கேட்கவும் தமிழ் அவளைக் கோபமாக முறைக்க, “ஐயாவும் அம்மாவும் யோசிக்காம எதையும் செய்ய மாட்டாங்க க்கா” என்றவள் ஒரு காகித உரையை எடுத்து வந்து தமக்கையிடம் காட்டி, “இதுல மாப்பிளையோட ஃபோட்டோ டீடைல்ஸ் எல்லாம் இருக்குமுங்க க்கா” என்றாள். அந்த உரையிலிருந்த மாப்பிளையின் விவரங்களை முற்றிலுமாக ஆராய்ந்தவளுக்கு துரதிஷ்டவசமாக அவனை வேண்டாமென்று சொல்ல ஒரு சிறு காரணம் கூட கிடைக்கவில்லை. ஆனால் அவளுடைய எதிர்கால கனவு திருமணம் அல்லவே. நன்றாகப் படித்து தன் குடும்பத்தை மேம்படுத்துவதுதான். அவள் தன் விருப்பத்தை வீட்டினரிடம் சொல்லிப் பார்த்தாள். அவள் தந்தை தாய் உட்பட யாருமே அதனை ஏற்கவில்லை. மேலும் இந்த திருமணத்திற்கான ஏற்பாடே கல்லூரியில் காமராஜருடன் இணைத்து வைத்து பேசி அவள் பெயர் கெட்டுப் போய்விட்டதுதான் என்ற போது அவளால் எதுவுமே சொல்ல முடியவில்லை. அந்த விஷயத்தைப் பொறுத்த வரை அதில் அவள் தவறு எதுவும் இல்லை. ஆனால் யார் அவள் கருத்தை ஏற்க போகிறார்கள். அது குறித்து யாருக்கும் விளக்கம் தர அவள் விரும்பவில்லை. அவர்கள் விருப்பபடி எதையாவது செய்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டாள். அந்த வார வெள்ளிகிழமை மாப்பிளை வீட்டிலிருந்து வந்திருந்தனர். அவர்களை வரவேற்று மரியாதையாக உபசரிப்புகள் எல்லாம் செய்து அமர வைத்த பிறகு தமிழை அழைத்து வந்து அவர்கள் முன்னே நிறுத்தினர். ஆனால் அவளுக்கோ இந்த நாடக பாணியில் தலையைக் குனிந்து கொண்டு வருவதெல்லாம் பழக்கமில்லை. ஆதலால் அவள் இயல்பாகவே அவர்கள் முன்னே வந்து நின்றாள். அதேநேரம் ஒரு சாதாரண பெண் பார்க்கும் சடங்கிற்கு அங்கே அமர்ந்திருந்த கூட்டத்தைப் பார்த்து அவளுக்கு எரிச்சல் வந்தது. “வெறும் ஒரு பொண்ணு பார்க்கிற சடங்குக்கு இம்புட்டு பேரை அழைக்கோணுமாக்கும்” என்று தங்கையின் காதோரம் இறங்கிக் கடுப்பாகப் பேச, “இல்லைங்க க்கா… ஊர் பூராவும் நம்ம சொந்தக்காரவுங்க… ஒருத்தரைக் கூப்பிட்டு ஒருத்தரை விட்டா பெரிய தகராறு ஆகி போகும்ல” என்று சமாளித்த தங்கையை மெச்சுதலாக ஒரு பார்வையைப் பார்த்தவள், “நீ எனக்கு புறவு பிறந்திருக்க வேண்டியவ இல்லடி… எனக்கு முன்னாடி பிறந்திருக்க வேண்டியவை… எல்லாத்துக்கும் சமாளிப்பா ஒரு காரணத்தை வைச்சிருக்க… நல்லா” என்று பல்லைக் கடித்தபடி தங்கையிடம் காய்ந்தவளுக்கு உள்ளுர கோபம் தீயாக எரிந்து கொண்டிருந்தது. அதுவும் தன் விருப்பத்தைப் பற்றி கூட கேட்காமல் ஊர் மொத்தத்தையும் இப்படி வீட்டில் கொண்டு வந்து நிரப்பியிருப்பதை எண்ணுகையில் அவளுக்குக் கடுப்பாக இருந்தது. இது ஒரு புறமென்றால் அந்தக் கூட்டம் மொத்தமும் மாப்பிளையின் புகழினை பிரஸ்தாபம் செய்து கொண்டிருந்தன. “என்னுடைய ஒரு வருஷ இன்கம்…” என்றவன் சொன்னதைக் கேட்டு அங்கிருந்த கிழவி, “இம்புட்டா?” என்று வாயைப் பிளந்து கொள்ள, “காடு கன்னில என்ற புள்ளைங்க ரா பகலா உழைச்சாலும் இம்புட்டு எல்லாம் வராது இல்ல” என்று புலம்பினார். “வராது என்னவே? நம்மால எல்லாம் யோசிச்சு கூட பார்க்க முடியாது” என்று மற்றொரு கிழவி அழுத்திச் சொல்ல, தமிழ் இடைமறித்து பேசினாள். “என்ன ஆச்சிப் பேசுறீங்க நீங்க? அவங்க ஏதோ ஒரு கம்பெனிக்கு கீழ ஊழியம் பார்த்து சம்பளம் வாங்குறதுக்கும்… சொந்த நிலத்தில சுயமா உழைச்சு நம்ம அண்ணனும் ஐயனும் சம்பாதிக்கிறதும் சமமாகுமா என்ன? இந்த உலகத்துக்கே படியளக்குற விவசாயத்தை விட ஒசந்த தொழில் ஏதாச்சும் உண்டா? எம்புட்டு சம்பாதிச்சாலும் நம்ம கையால விளையுற உணவைத்தானே அவங்க சாப்பிட்டாகணும்” என்று அவள் பேசிய விதத்தில் அங்கிருந்த எல்லோருமே வாயைப் பிளந்துவிட்டனர். இதுவே மூன்று வருடம் முன்பாக இருந்தால் தமிழும் கூட அவன் சொன்ன சம்பளத்திற்கு அந்த ஆச்சியாடு சேர்ந்து தானும் வாயைப் பிளந்திருப்பாள்தான். ஆனால் காமராஜனுடன் இருந்து, இந்த மூன்று வருடத்தில் அவள் சிந்தனைகள் முற்றிலுமாக மாறியிருந்தன. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் அவன் மாற்றியிருந்தான். இன்று பேசியது அவளாக இருந்தாலும் அந்த ஒவ்வொரு வார்த்தையும் அவன் அவளிடம் சொன்னவைதான். ஆனால் அவள் பேசியதை அங்குள்ள யாருமே சரியான கோணத்தில் எடுத்து கொள்ளவில்லை என்பது அவர்கள் முகபாவத்திலேயே தெரிந்தது. அதுவும் மாப்பிளை வீட்டாரின் முகம் அப்பட்டமாக தங்களின் அதிருப்தியைக் காட்டிவிட, அவர்களை விடவும் அதிகமாகக் கடுப்பானது சகுந்தலாதான்! அப்போது மாப்பிளை வீட்டாரிலிருந்து ஒருவர், “விவசாயத்தைப் பத்தி வாய் கிழிய பேசுறதெல்லாம் சரிதான்… ஆனா இதுவே ஒரு விவசாயம் செய்றவனா பார்த்து கட்டிப்பாங்களான்னு கேட்டுச் சொல்லுங்க பார்ப்போம்?” என்று எக்காளமாக கேட்டுச் சிரிக்க, அங்கிருந்தவர்களும் அவர் சொன்னதைக் கேட்டு ஆமோதித்து சிரித்தனர். தமிழின் முகம் கோபத்தில் சிவக்க பதில் பேச வேண்டுமென்று அவள் உதடுகள் துடித்தன. ஆனால் தங்கையின் கரம் அவள் கரத்தை அழுந்தப் பற்றிப் பேச வேண்டாமென்று சமிஞ்சை செய்ததில் அவள் மௌனமாக இருக்க வேண்டிய கட்டாய நிலை. அதற்கும் மேல் அவள் அங்கே நிற்க வேண்டாமென்று சகுந்தலா மகளை உள்ளே போகும்படி அறிவுறுத்த, அதுதான் சமயமென்று செல்வி தமக்கையை அறைக்குள் இழுத்து வந்துவிட்டு, “நீங்க இப்படி எடாகுடமா பேசி, நடக்க இருக்க காரியத்தையே கெடுத்து போடுவீங்க போல… இனிமே மாப்பிளை வூட்ல ஒத்துகுறது சிரமம்தான்” என்றாள் செல்வி. அவள் சொன்னது போலதான் நடந்தது. மாப்பிளை வீட்டினர் எதுவும் சொல்லாமல் புறப்பட்டுவிட்டனர். வீட்டிற்குச் சென்ற பிறகு பெண் கருப்பாக இருப்பதாக தகவல் சொல்லி வேண்டாமென்று தட்டிக்கழித்துவிட்டனர். ஒரு வகையில் அவள் கருப்பாக இருப்பது மட்டும் காரணமில்லை. அவள் சுயமாக கருத்து சொன்னதுமே கூட ஒரு காரணம். சகுந்தலா மகளிடம் புலம்பித் தீர்த்துவிட்டார். “அப்படி என்ன திமிர் பேச்சு உனக்கு… கொஞ்சம் கூட அடக்கம் ஒடுக்கமே இல்லாம” என்றவர் மகளிடம் பொரிந்து தள்ள, “நல்ல படிப்பு… நல்ல வேலை… பெரிய குடும்பம் வேற…” என்று பரிமளம் வேறு அவரை இன்னும் ஏற்றிவிட்டார். தமிழ் அவர்களிடம் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் வாயிற்குள், ‘அவங்க ஒத்துக்காததே நல்லது’ என்று முனங்கிக் கொண்டாள். சகுந்தலாவின் கோபமும் அவரின் வசவுகளும் தமிழைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. ஆனால் தந்தையின் மௌனமும் பாராமுகமும்தான் அவளை ரொம்பவும் வேதனைக்குள்ளாக்கியது.
11
புயலடித்து ஓய்ந்தது போல அன்றுதான் அந்த வீடே கொஞ்சம் அமைதியாக இருந்தது. தமிழுக்கு அந்தத் தனிமை சற்றே நிம்மதியாக இருந்த நிலையில், “அரசா” என்று அழைத்துக் கொண்டு அவளின் பெரியப்பா மகன் வந்து நின்றான். அவளின் எதிர்வீட்டில்தான் அவர்களும் இருந்தனர். தமிழ் தன் கைபேசியில் தலையை விட்டு கொண்டே, “அவன் வூட்டில இல்ல கண்ணா” என்க, “எங்கங்க க்கா போனான்?” என்றவன் விசாரித்தான். “வேற எங்கன போயிருக்கப் போறான்…. கழுதைக் கெட்டா குட்டிச் சுவருதான்… ஃபிரண்ட்ஸோட கோவில் க்ரவுன்ட்ல கிரிக்கெட் விளையாடத்தான் போயிருப்பான்… லீவு வுட்டா போதும்… அதான் அவனுக்கு ஒரே வேலை” என்றவள் மேலும், “ஆமா… நீ எதுக்கு அவனைத் தேடிக்கிட்டு இருக்க” என்று கேட்டு அவனை நிமிர்ந்து பார்க்க, “இல்லைங்க க்கா… சந்திரன் அண்ணே!” என்றவன் இழுக்கவும், அவள் முகத்தில் பலவிதமான உணர்வுகள் நொடி நேரத்தில் மின்னி மறைந்தன. “என்ன உங்க சந்திரன் நொண்ணனுக்கு” என்றவள் எகத்தாளமாகக் கேட்கவும் அவன் தான் சொல்ல வந்ததைச் சொல்லாமல் தயங்க, “என்ன விஷயம்? சொல்லு கண்ணா” என்றவள் அவனை விடாமல் கேட்டாள். “இன்னைக்கு சந்திரன் அண்ணனோட அம்மத்தா நினைவு நாள்… ஒவ்வொரு வருசமும் நம்ம ஆச்சியைக் கூட்டிட்டுப் போய் சாமி கும்பிட்டு படையல் போட்டு அவங்க அம்மத்தாவுக்கு வாங்கி வைச்சிருக்க புது சீலையை நம்ம ஆச்சிக்கு அண்ணன் கொடுப்பாங்க… நான்தான் எப்பவும் ஆச்சியை அண்ணன் வூட்டுக்குக் கூட்டிட்டுப் போவேன்… ஆனா இன்னைக்கு அப்பாரு என்னைய சந்தைக்குப் போக சொல்லிட்டாரு… ஆச்சி பைக்லையும் உட்காராது… நம்ம வயக்காட்டுக்குள்ள நடத்திக் கூட்டிட்டுப் போறதுக்குள்ள நேரமாகிபோடும்… அதான் அரசன் பையன் இருந்தா அவனோட நம்ம ஆச்சியை அண்ணன் வூட்டுக்கு அனுப்பி போடலாம்னு வந்தேன்” என்றவன் சொன்னதைக் கேட்ட தமிழுக்கு அன்று அவள் கோவிலில் நின்று பேச்சியிடம் கோபமாகப் பேசியது நினைவுக்கு வந்து அவள் மனதை உறுத்த, “அரசன் இல்ல இப்போ யார் கூட ஆச்சியை அனுப்புறது” என்று யோசித்திருந்தான் கண்ணன். “அரசன் இருந்தா மட்டும் கூட்டிட்டுப் போயிடுவானாக்கும்…. அதுவும் அவன் வூட்டுக்கு” என்று அவள் வாயிற்குள் முனங்கினாள். “பேசாம நான் அண்ணனையே வர சொல்றேன்” என்று கண்ணன் ஒரு முடிவுக்கு வரும் போது தமிழ் இடைபுகுந்து, “வேண்டா கண்ணா… நான் ஆச்சியை அழைச்சிட்டுப் போறேன்… நீ சந்தைக்குப் போ” என்றாள். “நீங்களாங்க க்கா” என்றவன் தயங்க, “நான் சும்மாதான் இருக்கேன்… ஆச்சியைக் கூட்டிட்டுப் போயிட்டு அப்படியே நம்ம வயகாட்டை எல்லாம் பார்த்துட்டு வரேன்” என்றவள் சொன்னது அவனுக்கு ஓரளவு நிம்மதியாக இருந்தது. அவள் ஆச்சியை அழைத்துக் கொண்டு செல்ல அவரோ வழிமுழுவதும் அவளுக்கு மாப்பிளை பார்த்த கதையைப் பேசிப் பேசி அவளைப் பாடாய் படுத்திக் கொண்டு வந்தார். ஒரு நிலைக்கு மேல் பொறுமையிழந்தவள், “செத்த சும்மா வர மாட்ட… பெரிய மாப்பிளையாம்… மாப்பிளை மண்ணாங்கட்டி” என்று கடுகடுத்தவள், “திரும்பவும் அந்த விசயத்தைப் பத்தி பேசுன… உன்னை இங்கனயே வுட்டு போட்டு நான் பாட்டுக்குப் போயிட்டே இருப்பேன் சொல்லிட்டேன்” என்றாள். “நீ செஞ்சாலும் செய்வடி… நான் வேறு உன்னைய போய் நம்பி இம்புட்டு தூரம் வந்துட்டேனே” என்றவர் பீதியடைய, “பத்திரமா உன்னைய கொண்டு போய் சேர்க்கணும்னா கப்சிப்னு வரோணோம்” என்று அதட்டி மிரட்டி ஆச்சியை சந்திரன் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தாள். “என்னால முடியலடி… கண்ணைக் கட்டுது… நான் இங்கனயே திண்ணையில காத்தோட்டமா படுத்துக்கிறேன்… படையலை போடும் போது கூப்பிடு” என்று அவர் அசதியாக திண்ணையில் சாய்ந்து கொள்ள, தமிழ் தயக்கத்தோடு அவன் வீட்டு வாசலில் நின்று எட்டிப் பார்த்தாள். எதிரே பேச்சியின் படத்திற்குப் பூவெல்லாம் போட்டு விளக்கு ஏற்றி வைத்திருந்தது. வீடு முழுக்க ஊதுவத்தி மணம் கமழ ஒரே பக்திமயமாகக் காட்சி தந்தது அவன் வீடு! அந்த ஒற்றை அறையில் அவனைக் காணாமல் அவள் விழிகள் ஆவல் ததும்ப தேட, அவனோ பின்கட்டு வழியாக சாவகாசமாக உள்ளே வந்தான். அவன் வீடு மட்டுமில்லை. அவனே பக்திமயமாகத்தான் இருந்தான். வெள்ளை வேட்டியும் ஒரு சிவப்பு நிற சட்டையும் கூடவே நெற்றியில் பட்டையெல்லாம் போட்டுக் கொண்டு பக்தி பரவசமாக இருந்த அந்தக் கண்கொள்ளா காட்சியைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை. அவன் பள்ளியில் செய்த சேட்டைகள் தொடங்கி காதல் என்ற பெயரில் செய்த அளப்பறைகளும் கடைசியாக அவன் தந்த பலவந்த முத்தமும் அவள் நினைவில் ஓட, ‘அடப்பாவி! என்ன மாதிரி சேட்டையெல்லாம் பண்ணி போட்டு இப்ப என்னடானா அப்படியே பக்தி பழமாட்டும்ல இருக்கான்… சரியான கேடி பயபுள்ள’ என்று மனதிற்குள் அவனை வசைப்பாடிக் கொண்டே உள்ளே நுழைந்தாள். “ஹெலோ மிஸ்டர் எம். சி. ஆர்” அவள் குரல் கேட்டு அதிர்ந்து திரும்பியவன் இவள் எங்கே இங்கே என்று குழம்பிய அதேநேரம் கோபம் கொப்பளிக்க, “நீ எதுக்குடி இங்க வந்த… போடி வெளியே?” என்றான். “நான் ஒன்னும் ஒன்ற மொவரையைப் பார்க்க வரல… நான் பேச்சிக் கிழவிக்காக வந்தேன்” என்றவள் அவனை ஒரு பொருட்டாகவும் மதியாமல் பேச்சியின் படத்திற்கு தன் கரங்களால் தொடுத்து எடுத்து வந்திருந்த பூமாலையை அணிவிக்க முற்படவும் அவன் கைகளைக் குறுக்கே நீட்டி, “ஆரை கேட்டு என்ற அம்மத்தா படத்துக்கு நீ மாலை போட போற?” என்றான். “ஆரை கேட்கோணோம்… நான் போடுவேன்” என்று அவன் கைகளைத் தட்டிவிட்டுப் பிடிவாதமாக அந்த மாலையை அவர் படத்திற்கு அணிவித்துவிட்டாள். அவன் அந்த மாலையை எடுக்க போகவும் அவள் அந்தப் படத்தின் முன்னே மறித்து நின்று கொண்டு, “உன்னைய கெஞ்சிக் கேட்டுகிறேன்… ப்ளீஸ் அந்த மாலையை எடுத்து போடாதே” என்று அவள் தன் கரங்களைக் கூப்பி வேண்டி கொண்ட விதத்தில் அவன் மனம் கொஞ்சமாக இறங்கியது. அவளைத் திகைப்பாகப் பார்த்தவன் அந்த மாலையை எடுக்கும் முயற்சியைக் கைவிட்ட போதும், “ஆமா நீ எதுக்கு இங்க வந்த?” என்று அவளிடம் கடுகடுக்க, “கண்ணன் சந்தைக்குப் போகோணும்னு சொன்னான்… அதான் நான் ஆச்சியை கூட்டிட்டு இங்கன வந்தேன்” என்றவள் சொன்னதைக் கேட்டு அவன் விழிகள் விரிந்தன. அவள் தன் வீட்டிற்கு வந்திருப்பதில் அவனுக்கு வியப்பான போதும் அவள் மீதிருந்த கோபம் துளியும் குறையாமல், “சரி சரி நீ கிளம்பு… ஆச்சியை நான் கூட்டிட்டு வந்து வூட்டுல வுடுறேன்” “அதெல்லாம் முடியாது… நான் சாமி கும்பிட்ட புறவுதான் கிளம்புவேன்… சும்மா மசமசன்னு நிற்காம படையலைப் போடுறியா… எனக்கு இம்புட்டு தூரம் நடந்து வந்ததில பயங்கரமா பசிக்குது” என்றவள் சொன்னதைக் கேட்டு, “எது? உன்னைய உட்கார வைச்சு நான் சாப்பாடு போடவா?” என்று அதிர்ச்சியானான். “புறவு… ஒன்ற அம்மத்தாவுக்கு நீ சாமி கும்பிடதான் நான் என்ற ஆச்சியை அழைச்சு போட்டு வந்தேன்” என்றவள் சொன்னதைக் கேட்டு அவன் தலையிடித்து கொள்ளாத குறை! “எல்லாம் அந்த கண்ணன் பயலால” என்றவன் பல்லைக் கடித்துவிட்டு வேறு வழியில்லாமல் படையலுக்கு ஏற்பாடு செய்யும் வேலைகளை மும்முரமாக கவனிக்க, அவள் அந்த வீட்டின் பின்வாசல் கதவு வழியே வயல்வெளிகளின் பசுமையான அழகைப் பார்த்து ரசித்து, “நான் பின்பக்கமா போய் எங்க கழனியைப் பார்த்துட்டு வரேன்… நீ படையல் போடும் போது கூப்பிடு” என்றாள். “அடியேய்… அங்கன போகாதடி” என்றவன் கத்தியதை காதில் வாங்காமல் பின்புறமாகச் சென்று அவள் குதித்துவிட்ட சில நொடிகளில், “அம்ம்ம்மம்ம்ம்மம்ம்மா… காப்பாத்துங்க” என்ற அவளின் அபயகுரல் அந்த இடம் முழுக்க எதிரொலித்தது. அவன் முன்பே அதை எதிர்பார்த்தவனாக அங்கே சென்றுவிட, அவளோ விழிகளை இறுக மூடிக் கொண்டு மல்லாக்காக விழுந்திருந்தாள். எதிரே கம்பீர பார்வையோடும் மிரட்சியான தோற்றத்தோடும் தன் திமிலை சிலிர்த்துக் கொண்டு காளையன் அவள் மீது பாய முற்பட்டிருந்தான். “டே காளையா?” என்ற சந்திரனின் குரலில் காளையனின் சீற்ற பார்வை சட்டென்று தணிந்துவிட, அந்த நொடியே சந்திரன் அவன் கயிற்றைப் பிடித்து இழுத்தான். சந்திரன் குரல் கேட்டதும் அவள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு விழிகளைத் திறந்து பார்த்தாள். அவன் காளையனின் கயிற்றை இழுத்து சென்று கொட்டகையில் கட்டியபடி, “உன்கிட்ட எம்புட்டு தடவ சொல்லி இருக்கேன்… இப்படியெல்லாம் செய்ய பிடாதுன்னு… புதுசா ஆரைப் பார்த்தாலும் ஒன்ற வேலையைக் காட்ட ஆரம்பிச்சிடுவியாக்கும்?” என்று செல்லமாகக் கண்டித்து கொண்டிருக்க, அதனைப் பார்த்து கோபத்தின் உச்சத்திற்கே சென்றவள், “நீ வளர்க்குற மாடும் உன்னைய மாதிரிதானா… கொஞ்சம் கூட மூளையே இல்லையா… செத்த நேரத்தில நான் பயந்தே போயிட்டேனாக்கும்” என்றாள். “உன்னைய ஏறி அவன் மிதிக்காம விட்டதுக்கு நீ இதுவும் பேசுவ… இன்னுமும் பேசுவடி” “சீ பே” என்று ஒழுங்கேடுத்துவிட்டு அவள் எழுந்து கொள்ள முயன்றதைப் பார்த்து அவனுக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை. “அதெப்படிறி சுத்திலும் சேரு… நீ மட்டும் நடுவாப்பல வுழுந்திருக்க” அவள் அப்போதே தன்னை சுற்றிலும் இருந்த சகதியைக் கவனித்தாள். நல்ல வேளையாக அவள் விழுந்த இடத்தில் மட்டும் சகதி இல்லை. “ம்ம்… உவேக்” என்றவள் எந்தப் பக்கமும் கையை ஊன்றி எழுந்து கொள்ள முடியாமல் தத்தளிக்க, அவன் அடக்கப்பட்ட சிரிப்போடு அவளைப் பார்த்திருந்தான். அவளோ வேறு வழி எதுவும் புலப்படாமல் அவனை நிமிர்ந்து பார்த்து, “சிரிக்காதே எருமை… செத்த கையைக் கொடு” என்று அவனைப் பார்த்து தன் கரத்தை நீட்டவும், “எருமையா?” என்று முகம் சுளித்தான். “ஐயோ! படுத்தாதே கையைக் குடுடா” என்றவள் இம்முறை சற்றே கெஞ்சுதலாகக் கேட்க அவன் புருவத்தைச் சுருக்கி, “உனக்கு கையைக் கொடுத்தா ஏழேஏழு சென்மத்துக்கும் ஒன்ற பாவம் என்னைய அட்டை போல ஒட்டிக்கும்” என்றான். “போடா எருமை… உன்கிட்ட கேட்டதுக்கு” என்றவள் நீட்டியிருந்த தன் கையைப் பின்னுக்கு இழுப்பதற்குள் அவன் கரம் அவள் கரத்தைக் கெட்டியாகப் பிடித்து தூக்கிவிட்டிருந்தது. “புழைச்சு போ… ஆபத்துக்கு பாவம் இல்ல” என்றவன் அவளிடம், “ஒழுங்கா கையைக் காலை அலம்பிட்டு வந்து சேரு” என்றான். அவள் காளையனை முறைத்து கொண்டே அங்கிருந்த தண்ணீரில் கை கால்களை அலம்பியபடி, “ஒரு நாள் இல்ல ஒரு நாள்… நீயும் ஒன்ற எஜமானனும் என்ற கிட்ட வகையா சிக்குவீங்க… அப்போ வைச்சுக்கிறேன்… உங்க இரண்டு பேருக்கும்” என்று அவள் மிரட்டலாகச் சொல்லிவிட்டுச் செல்ல, காளையனோ, ‘சிக்குனாதானே’ என்று ஏளனமாகத் தலையை உலுக்கிக் கொண்டான். பாவம்! அவனுக்கு எதிர்காலம் தெரிந்திருக்கவில்லை. சந்திரன் பூஜைக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, “போய் ஆச்சியை அழைச்சிட்டு வா” என்க, அவளும் வெளியே சென்று ஆச்சியைக் கை தாங்கலாக அழைத்து வந்து நிறுத்தினாள். அவன் புது துணி வைத்து வாழை இலையில் வகையாக வகையாக உணவுகள் வைத்து படையலிட்டு தன் அம்மத்தாவின் படத்திற்குத் தீபாராதனைக் காட்ட, அவள் தம் கண்களை மூடி மனமுருகி மன்னிப்பு வேண்டினாள். “நான் அன்னைக்கு ஏதோ கோபத்துல அப்படியொரு வார்த்தையைச் சொல்லி போட்டேன் கிழவி… ஆனா சத்தியமா அந்த சமயத்தில உனக்கு அப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்ல… என்னைய மன்னிச்சு போடு” இவ்வாறாக அவர்களின் வேண்டுதலும் தீபாராதனையும் முடிய, சந்திரன் இலையில் படைத்த உணவுகளில் கொஞ்சமாக ஒரு சிறு இலையில் எடுத்து கொண்டு வாசலிலிருந்த கல்லின் மீது வைத்துவிட்டு பித்ருக்களின் அவதாரமான காக்கையை உண்ண அழைக்க அவன் குரலுக்கு ஒரே ஒரு காகம் கூட அங்கே எட்டிப் பார்க்கவில்லை. நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆச்சி வேறு, “ஒன்ற அம்மத்தாவுக்கு உன் மேல ஏதாச்சும் கோபமோ என்னவோ? படையல் போடுறதுல எதாச்சும் குறை கிறை வைச்சு போட்டியா என்ன?” என்று கொளுத்திப் போட அந்த வார்த்தையில் அவனின் மொத்த கோபமும் தமிழ் புறம் திரும்பியது. “நான் என்ற அம்மத்தாவுக்கு இதுவரை படையல் போட்டு ஒரு தரம் கூட இப்படி நடந்ததே இல்ல… சாமி கும்பிட்ட புறவு காக்காவுக்கு சாதம் வைச்சு ஒரு குரலுக்கே காக்கா வந்து நிற்குமாக்கும்… ஆனா இன்னைக்கு ஒன்னு கூட வரமாட்டேங்கது… எல்லா உன்னாலதான்… உன்னை யாருடி இங்க வர சொன்னது” என்றவன் அவளிடம் எகிற, “லூசா டா நீ… காக்கா வராததுக்கும் நான் வந்ததுக்கும் என்ன சம்பந்தம்… ஏதோ மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுற மாதிரி” என்றாள். “நீ வந்ததுனாலதான் காக்கா வரல” என்றவன் தீர்க்கமாகச் சொல்ல, “எது?” என்று அவள் புருவத்தை ஏற்றினாள். “என்ற அம்மத்தாவுக்கு ஒன்ற மேல இருந்த கோபத்துனாலதான் காக்கா வரல” என்றான் மீண்டும்! ‘ஐயோ! படுத்துறானே… இவன் கூட முடியலையே’ என்று உள்ளுர பொறுமியவள் சில நொடிகள் யோசித்துவிட்டு, “இப்ப என்ன சொல்ல வர… ஒன்ற அம்மத்தாதான் காக்கா ரூபத்தில வந்து இந்தப் படையல் சாப்பாட்டை சாப்படுறாங்கன்னு சொல்ல வரியா?” என்றவள் கேட்கவும், “ஆமா” என்றவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. “ஒழுங்கா இங்கிருந்து நீ கிளம்புவே” என்றவன் மேலும் அவளிடம் எரிந்துவிழ, “கிளம்புறேன்… ஆனா அதுக்கு முன்னாடி நான் ஒரு தரம் காக்காவைக் கூப்புட்டுப் பார்க்கிறேன்… ஒரு வேளை நான் கூப்பிட்டு காக்கா வந்துருச்சுன்னா” என்றவள் சொன்னதைக் கேட்டு இளக்காரமாகப் பார்த்தவன், “எது? நீ கூப்பிட்டு” என்று கேட்க, “ஏன்? வராதுங்கிறியா?” என்றாள். “வராது… என்ற அம்மத்தா உன் மேல அம்புட்டு கோபத்துல இருக்காங்க” “சப்போஸ் வந்துட்டா” என்றவள் கேள்வியோடு நிறுத்த, “இம்புட்டு நேரமா நான் கூப்பிட்டு வரலயாம்… நீ கூப்பிட்டு மட்டும் வந்துருமா?” என்றவன் அவளை நம்பாமல் பார்க்க, “அப்படி வந்துட்டா ஒன்ற அம்மத்தாவுக்கு என்ற மேல கோபம் இல்லன்னு நீ ஏத்துகோணோம்… என்ன?” என்றவள் கேட்ட தொனியில் அவளை ஆழமாக அளவெடுத்தவன், “எங்க கூப்பிடுறி பார்க்கலாம்” என்றான். அவன் சம்மதித்த மறுகணம் அவளை அச்சம் தொற்றிக் கொள்ள, ‘ஜம்பமா சவால் எல்லாம் வுட்டு போட்ட… இப்போ காகா வரல ஒன்ற மானமே போயிடும்… மொத்த சத்தியைப் போட்டு நல்லா கத்து’ என்றவள் தொண்டையைக் கணைத்துக் கொண்டு, “கா கா கா கா கா” என்று அவளும் காட்டுக் கத்தாகக் கத்திப் பார்த்தாள். கதறிப் பார்த்தாள். ஒரே ஒரு காகம் கூட அந்தத் திசைப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. அவளின் நம்பிக்கை மெல்ல தளர்ந்து போக, ‘நம்ம வூட்ல சாமி கும்பிட்ட போது கூட இப்படி காக்காவெல்லாம் கூப்பிட்டு முன்ன பின்ன பழக்கம் இல்லையே? நான் என்னத்த செய்வேன்… தேவையில்லாம சவாலை வுட்டு நானே எனக்கு ஆப்பு வைச்சுக்கிட்டேன் போலவே’ என்றவள் மனசாட்சி மானாவாரியாகப் புலம்பித் தள்ள, அவளும் தொண்டை தண்ணீர் வற்ற திரும்பவும் கத்தி ஓய்ந்து போய், ‘ஐயோ! பேச்சிக் கிழவி பழிவாங்கதே… வந்துடு’ என்று உள்ளுர கெஞ்சத் தொடங்கினாள். “நான் அப்பவே சொன்னேன் இல்ல… என்ற அம்மத்தா உன்னைய மன்னிக்க மாட்டாங்கன்னு” என்று சந்திரன் சொல்லி வாயை மூடுவதற்குள் அவன் அம்மத்தா அவன் வார்த்தையைப் பொய்யாக்கியிருந்தார். அவளின் அழைப்புக்காகவே வந்தது போல வெகுதூரத்திலிருந்து பறந்து வந்த ஒரு காகம் நேராக அந்தப் படையல் உணவிற்கு அருகில் வந்து அமர்ந்து சாப்பிட தொடங்க, சந்திரன் வாயடைத்து நின்றுவிட்டான். தமிழின் விழிகளில் கண்ணீர் நிரம்பியது. நடந்தது தற்செயலாக கூட இருக்கலாம். ஆனால் அவளுக்குள் அப்போது இறந்து போன பேச்சிக் கிழவியே அந்த காகத்தின் ரூபத்தில் வந்து அவளுக்கு மன்னிப்பு வழங்கியது போன்று தோன்றியது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா