மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumKrishnapriyanaryan completed novels: Poovum nanum veruKPN'S POOVUM NANUM VERU -10Post ReplyPost Reply: KPN'S POOVUM NANUM VERU -10

Quote from monisha on April 4, 2022, 9:35 AM

இதழ்-10
குளிர் நிலவு வேண்டாம் எனக்கு... சுட்டெரிக்கும் சூரியனாக நீ ! வெண் பனி வேண்டாம் எனக்கு...இருப்பதால் நீ சீறும் எரிமலையாகவே இருந்துவிட்டு போ! சூரியனின் வெப்பத்தை... எரிமலைக் குழம்பின் வெப்பத்தை... தாங்கும் நிலமாக நான் இருப்பதால்... பூவும் நானும் வேறுதான்! ஏற்கனவே தீபன் வசுந்தராவை பற்றி அனைத்தையும் தெரிந்துகொண்டதால் அவன் தன் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையில் தான் ஒரு படி இறங்கிவிட்டோமோ என்ற எண்ணத்திலிருந்தார் திவ்யபாரதி. அடிபட்ட புலியாகப் பழிதீர்க்க நேரம் பார்த்துக் காத்திருக்கும் தீபனிடம் வசு நன்றாகச் சிக்கிக்கொண்டிருப்பது அவருக்குத் தெளிவாகப் புரிந்தது. தீபனை பொறுத்தவரையில் அவனது மனதில் ஒன்றை நினைத்துவிட்டால், அதை நடத்தி முடித்த பின்புதான் ஓய்வான். அவனுடைய அந்த குணமும் அதீத புத்திசாலித்தனமும்தான் அவனுடைய அபரிமிதமான வளர்ச்சிக்குக் காரணம். நேரம் பார்த்துக் காத்திருந்து அவனுக்குத் தடையாக இருந்தவர்களையே வீழ்த்தி அவர்கள் மீதே ஏறி மேலே வந்தவன் அவன். அவனுடைய அந்த குணமே அவனிடம் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது பாரதிக்கு. வசுமித்ராவை பாதுகாப்பான இடத்தில் வைக்க, தெளிவான ஒரு முடிவை எடுக்கவேண்டிய அவசியம் உண்டாகி இருந்தது அவருக்கு. ஏற்கனவே ஒரு முறை திலீப் வசு திருமணம் பற்றிப் பேச அவரது தமக்கையையும் அவரது கணவரையும் சந்திக்க அவர்களுடைய வீட்டிற்குச் சென்றிருந்த சமயம், வசு காயம்பட்டு மருத்துவமனையில் இருந்த காரணத்தால் எதுவும் பேசாமல் திரும்பிவிட்டார் பாரதி. எனவே தீபன் அமெரிக்கா சென்ற அடுத்த தினமே நேரம் கடத்தாமல் அவரது அக்காவையும் மாமாவையும் சந்தித்துப்பேச அவர்களுடைய வீட்டிற்கு வந்தார் அவர். திலீப்புடைய அன்னை ராஜலக்ஷ்மி, தந்தை பராசரன். இருவருமே பாரதியிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள். பாரதி ஐ.பி.எஸ் முடித்து பணியில் சேர்ந்த சமயம், அவருடன் பணிபுரிந்த சந்திரகாந்த் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பாரதி மற்றும் ராஜலக்ஷ்மி இருவரின் தந்தை சுந்தரமூர்த்தி. பரம்பரை பணக்காரரான அவர் பாரதியின் திருமணத்தை முற்றிலும் எதிர்க்க, அவரை பகைத்துக்கொண்டு அவர்களுடைய திருமணத்தை முன்னின்று நடத்திவைத்தார் பராசரன். மிகவும் எளிமையான மனிதரான அவர், மற்றவர் உணர்வுகளுக்கு மிகவும் மதிப்பளிப்பவர். ராஜலட்சுமியும் கணவரின் மனநிலையைப் பிரதிபலிப்பவர். அவர்கள் இருவரையும் பற்றி நன்றாகப் புரிந்துவைத்திருக்கும் காரணத்தால், சுற்றி வளைக்காமல் திலீப் வசுவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவர்களிடம் சொன்னவர், எந்த இடத்திலும் தீபனை பற்றிக் குறிப்பிடாமல், வசுவை பற்றிய அனைத்தையும் தெளிவாகச் சொல்லி முடித்தார் பாரதி. அனைத்தையும் உள்வாங்கியவராக, மகனிடம் கலந்து பேசி யோசித்து முடிவெடுக்க இரண்டு நாட்கள் அவகாசம் கேட்ட பராசரன், சொன்னதுபோலவே திலீப்புடைய விருப்பத்தை அறிந்துகொண்டு திருமணத்திற்கு தங்கள் சம்மதத்தை பாரதியிடம் தெரிவித்தார். பழம் நழுவி பாலில் விழுந்த மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்தான் திலீப். மிகவும் நிம்மதியாக உணர்ந்தார் பாரதி! *** பள்ளி முடிந்து நேராக அவளது அம்மா தங்கி இருந்த தொண்டு இல்லத்தை நோக்கி அவளுடைய வாகனத்தைச் செலுத்தினாள் வசு. வசுவினுடைய கைப்பேசியை காவல்துறையினரிடம் ஒப்படைத்த பிறகு, வீட்டிற்கு வந்ததும் அவளுடைய அப்பாவின் போன் மூலம், பாரதியைத் தொடர்பு கொண்டு அனைத்தையும் சொன்னாள் வசு. மேற்கொண்டு எதையும் கேட்காமல் வெகு சகஜமாக, "நீ உடனே பேசிக் மாடல் போன் ஒண்ணு வாங்கிக்கோ வசு. ஒரு புது சிம் வாங்கி போட்டுடு! அந்த போனுக்காக காத்திருக்க வேண்டாம். நீதான் எந்த சோஷியல் மீடியாவும் யூஸ் பண்றதில்லையே; வாட்ஸாப் மட்டும்தான; அது இல்லாம கொஞ்ச நாள் அடஜஸ்ட் பண்ணிக்கோ; அதை அவங்க திரும்ப கொடுக்கும்போது கொடுக்கட்டும்!" எனச் சொல்லிவிட்டார் பாரதி. அவளுக்குமே அது சரியாகத் தோன்றவும் அப்படியே செய்துவிட்டாள் வசு. புதிய கைப்பேசி மற்றும் சிம் கார்ட் வாங்கி அது உபயோகத்திற்கு வர மூன்று தினங்கள் ஆனது. அன்றுதான் அந்த எண்ணை அவளுடைய அம்மாவிற்கே தெரியப்படுத்தியிருந்தாள் வசு. மதியமே கலைவாணியைக் கவனித்துக்கொள்ளும் செவிலியர், அவளை மாலை இல்லத்திற்கு வருமாறு அவளுடைய அம்மா அழைத்ததாக அந்த எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பியிருக்க, அவர் எதற்காக அழைத்திருக்கிறாரோ என்ற யோசனையுடனேயே அவரது அறைக்குள் நுழைந்தாள் அவள். கலை கட்டிலில் சாய்வாக அமர்ந்திருக்க, அருகே போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்த ராகவன் மகளை குழப்பத்துடன் பார்க்க, அருகிலேயே மற்றொரு இருக்கையில் தோரணையாக அமர்ந்திருந்தார் பாரதி. கொஞ்சமும் இளக்கமின்றி கடினத்துடன் இருந்தது அவரது முகம். ஏனோ உள்ளுக்குள்ளே கிலியைக் கிளப்பியது அவரது இந்த தோற்றம். அவர் பதவியிலிருந்த சமயம், ஒருமுறை இந்த பாவனையில் அவரை பார்த்திருக்கிறாள் வசு. அதன் பிறகு அவரை அன்பும் அக்கறையுமாகப் பார்த்திருக்கிறாளே ஒழிய, இப்படி ஒரு தோற்றத்தில் அவரை அவள் பார்த்ததே இல்லை. அவளைப் பார்த்ததும் முறுவலித்த கலை, "வசும்மா! வா! இங்க வந்து உட்கார்" எனக் கனிவுடன் அவருக்கு அருகில் உட்காருமாறு சுட்டிக்காட்ட, அவருக்கு உடல்நிலை எதாவது சரியில்லையோ என்ற பயம் தோன்ற, அதை வெளியில் காண்பிக்காமல் கண்களால் அவரை அளந்தவாறே அவருக்கு அருகில் போய் உட்கார்ந்தாள் வசு. உடனே அவர் கணவரின் முகத்தைப் பார்க்க, ராகவனோ தயக்கத்துடன் பாரதியைப் பார்த்தார். "என்னை ஏன் பார்க்கறீங்க! நீங்களே உங்க பொண்ணுகிட்ட பேசுங்க" என பாரதி அவரை நிர்ப்பந்திக்க, , "கண்ணா! இவங்க அக்கா மகன் திலீப் இருக்காரு இல்ல, பாரதி மேடம்,அவருக்கு உன்னைக் கேட்டு வந்திருக்காங்க!" என்றார் ராகவன் தயக்கத்துடனேயே. அவர் சொன்னதைக் கேட்டு "அப்பா என்ன சொல்றீங்க!" என்று அதிர்ந்தவள் பாரதியை பார்த்துக்கொண்டே, "என்னால கல்யாணம் என்கிற ஒரு விஷயத்தை கனவுல கூட நினைச்சு பார்க்க முடியாது" என முடித்தாள் அழுத்தத்துடன். "எனக்கும் மேடம் சொல்றதுதான் சரின்னு படுது வசும்மா! தயவு செஞ்சு மறுப்பா எதையும் பேசாத!" எனக் கலைவாணி மகளிடம் கெஞ்சும் குரலில் சொல்ல, "அது எப்படிம்மா மறுப்பு சொல்லாம இருக்க முடியும்! இதெல்லாம் ப்ராக்டிகலா சரிப்பட்டு வருமா? நம்மை பத்தின உண்மையை சொல்லாம, இப்படி ஒரு ஏற்பாடு செஞ்சா அது எவ்வளவு பெரிய துரோகம் தெரியுமா?" என அவள் அடுக்கிக்கொண்டே போக, "என்னை என்ன முட்டாள்னு நினைச்சியா வசு; உன் அண்ணன் என்ன ஆனான் என்பதைத் தவிர மத்த எல்லா விஷயத்தையும் மறைக்காமல் சொல்லி, நான் என்னோட அக்காகிட்டயும் மாமாகிட்டயும் தெளிவா பேசிட்டேன்! ஃப்யூச்சர்ல எந்த பிரச்சினையும் வராது; ஏன்னா அவங்க ரெண்டுபேரையும் பத்தி எனக்கு நல்லாவே தெரியும்!" என பாரதி சொல்ல, விக்கித்துப்போனாள் வசு. "அப்படினா திலீப் சாருக்கு எல்லாமே தெரியுமா?" உள்ளே போன குரலில் அவள் கேட்கவும், "அவனுக்கு இதைப் பத்தி இப்போதைக்கு சொல்லவேண்டாம்னு மாமா சொல்லிட்டாங்க! கல்யாணத்துக்குப் பிறகு நேரம் பார்த்து அவங்களே அவன்கிட்ட சொல்லிடுவாங்க! அதைப் பத்தி நீ கவலைப்படாத!" என அவளுக்குப் பதில் கொடுத்தார் பாரதி. அவருக்கு அவளுடைய மனநிலையை எப்படிப் புரிய வைப்பது என்பது விளங்காமல், சில நொடிகள் அமைதியாக இருந்தவள், "இல்ல பாரதிம்மா! திலீப் சாரோட லைஃப் ஸ்டைலுக்கு நான் செட் ஆக மாட்டேன்! அவரை மாதிரி இருக்கறவங்களுக்கு என்னையெல்லாம் பிடிக்குமோ என்னவோ; நிர்ப்பந்தப்படுத்தி இந்த ரிலேஷன்ஷிப்ல தள்ளக்கூடாது!" என அவள் மறுப்பை வேறு விதமாகத் தெரிவிக்க, "ரொம்ப புத்திசாலித்தனமா பேசறதா நினைப்பா வசு!" எனக் கிண்டலாகச் சொல்லிச் சிரித்தவர், "அவனுக்கு உன்னை ரொம்பவே பிடிச்சிருக்கு! அதனாலதான் இந்த கல்யாண பேச்சையே நான் தொடங்கினேன்! உண்மையை சொல்லனும்னா எங்க அக்காவோட நாத்தனார் பெண்ணைத்தான் அவனுக்கு பிக்ஸ் பண்றதா இருந்தாங்க! அவன் உன்னை விரும்பறான் என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் இந்த ஏற்பாட்டுக்கே அக்காவும் அத்தானும் சம்மதிச்சாங்க!" என விளக்கினார் பாரதி. மேற்கொண்டு ஏதோ பேச எத்தனித்த மகளைத் தடுத்து, "வசு! பெரியவங்க உன் நன்மைக்காகத்தானே சொல்றாங்க! சரின்னு கேட்டுக்கோ! அது என்ன எதுத்து எதுத்து கேள்வி கேக்கறது! பாரதி மேடம் தவிர வேற யாரு வந்து இப்படி சொல்லியிருந்தாலும் நாங்க சம்மதிச்சிருக்க மாட்டோம்; புரிஞ்சிக்கோ!" எனக் கடினமாகச் சொன்னார் கலை. அவர் சொல்வதை ஆமோதிப்பதைப் போல மௌனமாக இருந்தார் வரதன். "எதுத்து பேசலாம்மா!" என்றவள் கண்களில் துளிர்த்த கண்ணீரை உள்ளிழுத்தவாறே, "உங்க ரெண்டுபேரையும் இந்த நிலைமையில விட்டுட்டு, என்னால கல்யாணம் செஞ்சுக்க முடியாது!" என அவள் பிடிவாதத்துடன் சொல்ல, "உன்னை கல்யாணம் செய்து கொடுத்துட்டு, உன் கூடவே எங்களால இருக்க முடியாதுதான் வசு! அது கவுரவமாவும் இருக்காது. அதனால அப்பாவும் என் கூடவே இங்கேயே இருக்க ஏற்பாடு செஞ்சுடலாம்! பிரச்சினை இல்ல! இங்க இருக்கிற வீட்டை வித்து பணத்தை பேங்க்ல போட்டுடலாம்! என்னோட பென்ஷனோட சேர்ந்து அதில் வர வட்டியும் எங்க ரெண்டு பேருக்கும் போதும்! நாமக்கல் வீட்டை வித்து பணத்தை உனக்கு கொடுத்துடலாம்னு சொன்னேன்! ஆனா அந்த வீட்டை வித்தா தேவை இல்லாத பிரச்சனைன்னு பாரதிம்மா வேண்டாம்னு சொல்லிட்டாங்க! அதனால வீட்டை உன் பேரில் மாத்தி கொடுத்துடலாம்னு இருக்கோம்!" என அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய அவரது முடிவைச் சொன்னார் கலைவாணி. நாமக்கல் வீட்டைப் பற்றிப் பேசியதும் வெலவெலத்துப்போனாள் வசு. அவள் உடல் நடுங்குவது வெளிப்படையாகவே தெரியவும், எழுந்துவந்து ஆதரவாக அவளுடைய தோளைப் பற்றியவாறு, "கவலைப்படாத வசு! எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்!" என பாரதி சொல்ல, "அப்படினா சரிகா அண்ணா?" என அவள் கேள்வியாய் நிறுத்த, "அவன் உன்னைப் பத்தி கண்டுபிடிச்சுட்டான் வசு! அவன் மோசமான ஒரு பிடிவாதக்காரன். அவன் நினைத்ததைச் சாதிக்க என்ன வேணா பண்ணுவான்! அதனாலதான் இவ்வளவு அவசரமா இந்த ஏற்பாட்டை செய்யறேன்! திலீப் கையில் உன்னை ஒப்படைச்சிட்டா எல்லாருக்கும் நிம்மதி!" எனச் சொல்லிக்கொண்டே போனார் பாரதி. அவர் சொன்னதை கேட்டு திகைத்துப்போய் அன்னையை நோக்கினாள் வசு. ஆனால் அதை பெரிதாக எடுத்துக்கொண்டதுபோல் இல்லாமல், "நீ இதுக்கு சம்மதிக்கலன்னா இனி நான் அப்பா ரெண்டுபேருமே உன் முகத்தைக் கூட பார்க்க மாட்டோம்! சும்மா மிரட்டறேன்னு மட்டும் நினைக்காத!" எனக் கலைவாணி தீர்மானமாய் சொல்லவும், வசு ராகவனின் முகத்தைப் பார்க்க, "அம்மா சொல்றதுதான் என் எண்ணமும்! இப்படிப் பட்ட ஒரு பையனை எப்படி வேண்டாம்னு சொல்ல முடியும்?!" என்று கேட்டார் ராகவன். 'இதுதான் என் முடிவும்!' எனப் பிடிவாதத்துடன் ஒலித்தது அவர் குரல். 'பெக்கர்ஸ் ஆர் நாட் ச்சூஸர்ஸ்ப்பா! யார்யாரோ செய்த பாதகத்துக்கெல்லாம் தண்டனை மட்டும் எனக்காப்பா?' என மனதிற்குள் கேள்விகளாக அடுக்கியவள், அதை கேட்காமல், "நீங்க எல்லாரும் இவ்வளவு பிடிவாதமா சொல்லும்போது நான் அதை மறுக்கவா முடியும்?" என்றாள் வசு வேதனையுடன். அவளுடைய மனநிலையை உணர்ந்தாலும், அவர்களுடைய முடிவைக் கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்க முனையவில்லை பெரியவர்கள் மூவரும் அவளின் நன்மையை மட்டுமே எண்ணியதால். *** விமானப்பயணம் முழுதும் சாத்விகா அடித்த லூட்டியில் நொடி நேரம் கூட உறங்கவில்லை தீபன். தலைச் சுற்றல் காரணமாகத் தவித்த சரிகாவை வேறு இடையிடையே கவனிக்க வேண்டியதாக ஆகிப்போனது. விமானத்திலிருந்து இறங்கி ஒரு வழியாக அவர்கள் வீட்டிற்கு வந்துசேரக் காலை ஒன்பது மணி ஆகியிருந்தது. அரங்கநாதன் அருணா மட்டுமில்லாமல் சரிகாவின் மாமனார் மாமியாரும் அங்கே வந்திருக்க, ஆலம் சுற்றி உற்சாகமாக அவர்களை உள்ளே அழைத்துச்சென்றனர். அனைவரின் கவனமும் சரிகாவையும் சாத்விகாவையும் சுற்றியே இருக்க, 'ப்பா! நாம தப்பிச்சோம்! அம்மா இனிமேல் நேரத்துக்கு வரல, சாப்பிடலன்னு புலம்ப மாட்டாங்க!' என எண்ணிக்கொண்டே அவனுடைய அறைக்குள் புகுந்துகொண்டான் தீபன். அவன் குளித்து அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருக்க, அவனது கைப்பேசி ஒலித்தது. எதிர்முனையில் இருப்பது திலீப் என்பதை அறிந்து, அதை 'ஸ்பீக்கர்'ரில் போட்டுவிட்டு, சட்டையை அணிந்தவாறே, "சொல்லுடா! எதாவது முக்கியமான விஷயமா? இந்த நேரத்துல கூப்பிட்டு இருக்க!" என்று தீபன் கேட்க, "ஒரு குட் நியூசுடா மச்சான்! என்னன்னு கண்டுபிடி பார்க்கலாம்!" என உற்சாகமாக ஒலித்தது திலீப்புடைய குரல். எதிர்முனையில் மௌனம் நீடிக்க, அதை உணர்ந்த திலீப், "ஹலோ! என்ன பதிலையே காணும்?" என்று கேட்க, "என்ன உன்னோட பாசக்கார பாரதி சித்தி உங்க அம்மா அப்பா கிட்ட பேசி உன் கல்யாணத்தை பைனலைஸ் பண்ணிட்டாங்களா! வசுதான பொண்ணு?" என்று கழுத்தைச்சுற்றி டையை அணிந்தவாறே தீபன் கேட்க, அசந்தே போனான் திலீப்!

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா