மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: En Iniya Pynthamizhe!En Iniya Pynthamizhe - 15Post ReplyPost Reply: En Iniya Pynthamizhe - 15

Quote from monisha on April 6, 2022, 11:44 AM

15
அந்த பிரச்சனைகள் நடந்தேறி இரண்டு வாரங்கள் முடிந்திருந்தன. தமிழ் அன்று அப்படி சொன்னதை சகுந்தலாவால் தாங்கவே முடியவில்லை. “அடிப்பாவி! நம்ம குடும்பத்தோட கௌருத்தை எல்லாத்தயும் குழி தோண்டி புதைச்சு போட்டியே டி… ஒன்ற ஐயா இனிமே ரோட்ல தலை நிமிர்ந்து நடக்க முடியுமா… படுபாவி” என்று வசைபாடியபடி மகளை சகட்டுமேனிக்கு அடித்துத் தள்ளிவிட்டார். அவராக நிறுத்தும் வரை அவரை யாருமே தடுக்கவுமில்லை. அவரின் ஆக்ரோஷத்தைக் கட்டுபடுத்த முயலவும் இல்லை. மதுசூதனனுக்கு மனம் விட்டு போனது. மற்ற பிள்ளைகளையும் விட தமிழ் மீது அதிக பற்றுதலும் நம்பிக்கையும் கொண்டிருந்தார். அவள் பெரிதாக எதையாவது சாதிப்பாள். தங்கள் கஷ்டங்களை எல்லாம் அவள் அர்த்தமுள்ளதாக மாற்றுவாள் என்று அவர் கட்டியிருந்த மனக்கோட்டையை அவள் இடித்து தரைமட்டமாக்கியிருந்தாள். அதற்கெல்லாம் மேலாக மருமகனாக வருகிறவன் தங்கள் குடும்ப நிலையை விட உயர்ந்த நிலையிருக்க வேண்டுமென்றுதான் பெண்ணைப் பெற்ற தந்தைகள் எல்லோரும் எதிர்பார்ப்பது வழக்கம். அதுவும் அவரே ஒரு சாதாரண விவசாயி குடி எனும் போது சந்திரன் அதற்கும் கீழ்நிலையிலிருப்பவன். எப்படி அவரால் அவனை ஏற்க முடியும்.. சந்திரன் மீது அவருக்கு மதிப்பும் அன்பும் உண்டுதான். ஆனால் அவனை தன் மகளுக்கு கணவனாக மருமகனாக அவரால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. அதற்கு மேலாக அவளின் படிப்பிற்கு அவன் எந்தவிதத்தில் தகுதி? எப்படி அவனைப் போய் அவளுக்குப் பிடித்தது? இந்த காதல் என்ற கன்றாவிக்கு கண்கள்தான் இல்லையென்றால் மூளையும் இல்லை போலும் என்று எண்ணிக் கொண்டவருக்கு தான் பார்த்து பார்த்து பெருமிதப்பட்ட தன் மூத்த மகள் இப்படியொரு மூட்டாள்தனத்தைச் செய்வாளா என்று நம்பத்தான் முடியவில்லை. தங்கள் வீட்டுப் பெண்ணே தவறு செய்திருக்கும் போது அவனை அடித்து என்னவாகப் போகிறது என்று சந்திரனை அனுப்பிவிட சொல்லிவிட்டார். “இவனை எல்லாம் வுட கூடாதுங் மாமா… நம்ம புள்ள மனசைக் கெடுத்திருக்கான்” என்ற சங்கரன் சீற்றமாகச் சொல்ல, “இவன் மனசைக் கெடுத்தானா… அவளுக்கு எங்க போச்சு புத்தி… என்னத்த படிக்க வைச்சு என்ன பிரயோசனம்” என்று விரக்தியாகப் பேசியவர், “அவனை அனுப்பி வுடு! போய் தொலையட்டும்” என்று சொன்ன பிறகு சங்கரனும் மறுத்து எதுவும் பேசவில்லை. ஆனால் சந்திரனுக்கு நடப்பதும் நடந்ததும் ஒன்றும் புரியவில்லை. அத்தனை அடி வாங்கிய போதும் அவன் அதற்கு பெரிதாக எந்தவித எதிர்வினையும் காட்டிக் கொள்ளவில்லை. இதில் அனைத்தும் தன்னுடைய தவறுதான் என்ற ரீதியில் அவர்கள் கொன்றே போட்டிருந்தாலும் அந்த தண்டனையை அவன் ஏற்க தயாராகவே இருந்தான். ஆனால் இடையில் புகுந்த தமிழ் சொன்ன ஒரு வார்த்தையில் எல்லாமே தலைகீழானது. எதற்காக இப்படி ஒரு அபாண்டமான பழியை அவள் தன் மீது சுமத்திக் கொண்டாள்? தனக்காகவா? மனம் நம்ப மறுத்த போதும் அவன் கண்ணெதிரே நடந்த காட்சிகள் அவன் உயிரை உருக்கிப் போட்டது. “ஐயோ! அவ எந்த தப்பும் செய்யல” என்று கத்திக் கதற வேண்டும் போல இருந்தது. ஆனால் குரல் வராமல் அழுகையில் அவனுக்குத் தொண்டை அடைத்தது. அவன் முன்பாக சகுந்தலா மகளை அடித்த போது தடுக்க எத்தனித்தவனை சங்கரன் தள்ளிவிட்டார். “ஒழுங்கா போயிரு... இங்கனயே வெட்டி புதைச்சிருவேன் பார்த்துக்க” என்று மிரட்டினார். ‘தப்பு செய்யாமல் அவளுக்கு எதற்கு இந்த தண்டனை?’ என்று எண்ணியவனுக்கு அவளை அப்படியொரு நிலையில் விட்டு போக மனம் வரவில்லை. ஆனால் அத்தனை களேபரத்திற்கு இடையிலும், “நான் பார்த்துக்கிறேன்… எனக்கு ஒன்னும் ஆகாது… நீ போ” என்றவளின் பார்வை சந்திரனை விரட்டிக் கொண்டேயிருந்தது. ஆனால் அவன் கேட்காமல், “அவளை விட்டுடுங்க தப்பெல்லாம் என் பேர்லதான்” என்று கெஞ்சிப் பார்த்துவிட்டான். யாரும் அவன் சொல்வதை காதில் போட்டுக் கொள்வதாக இல்லை. நம்பவும் தயராக இல்லை. சங்கரன் வலுக்கட்டாயமாக அவனை இழுத்து வந்து வெளியே தள்ளிவிட்டு, “இனிமே உன்னைய இந்தப் பக்கம் பார்த்தேன்… கொன்னு புதைச்சிடுவேன்” என்றார். நடக்க கூட முடியாமல் வீட்டிற்குத் திரும்பியவனுக்கு அவளைத் தவிர்த்து வேறு எந்த நினைப்பும் இல்லை. தன்னால் இப்படியொரு துயரையும் அவமானத்தையும் அவள் அனுபவிக்கிறாளே என்று உள்ளுர துடித்த போதும் அவனால் அந்தச் சூழ்நிலையில் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இன்னொரு புறம் தன்னைக் காப்பாற்ற அப்படியொரு பழியை அவள் ஏற்று கொண்டதை எண்ணும் போது அடங்கா வியப்பு உண்டானது. தன் அம்மத்தாவிற்கு பிறகு தன்னிடம் அக்கறையும் அன்பும் காட்ட யாருமே இல்லை என்றவன் எண்ணியிருக்க, அவளின் செயல் உனக்காக நானிருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்வது போல இருந்தது. அவள் மீது கொண்ட காதல் இன்னும் ஆழமாக அபரிமிதமாகப் பெருகியது. மேலும் இந்த இரு வாரங்களில் ஊருக்குள் எல்லோருக்கும் பேச வேறு விஷயமே இல்லை. தமிழும் சந்திரனும்தான் அவர்களின் தலைப்பு செய்தியே! சகுந்தலாவின் கடைக்கு வருபவர்கள் எல்லோருமே இதை பற்றியேதான் பேசினர். சிலர் பரிதாபமாக பலர் குத்தலாக என்று ஆளுக்கொரு விதமாக விசாரித்தனர். அதனால் உண்டான கோபத்தையும் வெறுப்பையும் சகுந்தலா மகளிடம்தான் காட்டினார். அவளோ மௌனம்! மௌனம்! மௌனம்! என்று மௌனம் சாதித்தாள். அதில் இன்னும் எரிச்சலான சகுந்தலாவிற்கு அவளைத் திட்டித் திட்டி அலுத்துப் போனது. மதுசூதனனுக்கு ஆசை ஆசையாக வளர்த்த மகளை அப்படி திட்டித் தீர்ப்பதும் அவள் மூலையில் முடங்கிக் கிடப்பதையும் பார்க்க மிகுந்த அவஸ்த்தையாக இருந்தது . அதேநேரம் மகள் செய்த காரியத்தை மன்னிக்கவும் முடியவில்லை. இருதலைகொள்ளி எறும்பாக அவர் தவித்திருந்தார். இறுதியாக நெருங்கிய உறவினர்கள் சிலர் சொன்ன வழிமுறை ஊர் வாயை மூட சரியான தீர்வாகத் தோன்றியது. மகள் மீது அவர்கள் கொண்ட பாசம் பாரமாக கனத்ததில் இனியும் அந்தப் பாசம் என்ற பாரத்தைச் சுமக்க திராணியின்றி அதனை இறக்கிவைத்துவிட கணவன் மனைவி இருவரும் சேர்ந்து அந்த முடிவை எடுத்தனர். எத்தனை துரிதமாக முடியுமோ அத்தனை துரிதமாக சந்திரன் தமிழுக்கு எளிய முறையில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். தன் பெற்றோர்களின் கோபத்தில் நியாயம் இருக்கும் காரணத்தாலேயே தமிழ் மௌனத்தைச் சுமந்து கொண்டிருந்தது. ஆனால் இந்தத் திருமண முடிவு அவள் சற்றும் எதிர்பாராதது. இன்னும் ஒரு சில மாதங்களில் வேலைக்கு அழைப்பு வந்துவிட்டால் தான் இந்த இறுக்கமான சூழ்நிலையிலிருந்து தப்பிவிடலாம் என்றவள் போட்டு வைத்திருந்த கணக்கு மொத்தமும் வீணாகிப் போனது. இத்தனை நாள் மௌனமாக இருந்துவிட்டு இப்போது மட்டும் வாயைத் திறந்து திருமணம் வேண்டாமென்று சொன்னால் அவ்வளவுதான்! வீடே ரணகளமாகிவிடும். ஆதலால் அதற்கும் அவள் மௌனமாக இருக்க வேண்டிய இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டாள். சந்திரன் நிலைமை இன்னும் மோசம். அவனிடம் யாரும் முடிவு கேட்கவில்லை. இதுதான் தேதி என்று குறித்து அவன் கையில் கொடுத்துவிட்டனர். இதற்கிடையில் தமிழைப் பார்த்து பேசி அவள் மனநிலையைப் புரிந்து கொள்ளலாம் என்று பார்த்தால் அதற்கு அவனுக்கு வாய்ப்பும் அமையவில்லை. அவகாசமும் இல்லை. இருவரும் அதற்குப் பிறகு நேருக்கு நேராக சந்திக்க சந்தர்ப்பம் வாய்த்தது மணமேடையில்தான்! செல்வி அவர்களின் திருமணத்திற்கான கடைசி நிமிடம் வரை, “அக்கா இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லி போடுங்க க்கா… நீங்க சொன்னது எல்லாம் பொய்யின்னு அம்மாகிட்ட சொல்லிடலாமுங்க க்கா” என்று கெஞ்சினாள். எல்லாமே கை மீறிப் போய்விட்ட பிறகு இந்தத் திருமணத்தைத் தடுத்து என்னவாகப் போகிறது என்று சிந்தித்தவள் அந்த நிலைமையை ஒருவாறு ஏற்கும் மனநிலைக்கு வந்துவிட்டாள். அதுவும் மணமேடையில் அவனருகில் அமரும் வரை அவளுக்குள் இருந்த ஒரு விதமான சங்கட உணர்வு கூட அவன் அவள் காதோரம் ரகசியமாகச் சொன்னதைக் கேட்டு முற்றிலுமாக விலகிப் போனது. சந்திரன் அவளின் மனநிலைக்கு முற்றிலும் நேர்மாறான மனநிலையிருந்தான். அவள் மீது தான் கொண்டிருந்த காதல்தான் அவளுக்கு ஏற்பட்ட அத்தனை பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம் என்று எண்ணியவனுக்கு அந்தத் திருமண சம்பிராதயம் சடங்கு என்று எதில் மீதுமே கவனம் பதியவில்லை. அவள் மணமேடையில் வந்து அமர்ந்ததும் அவளிடம் பேசத் தவியாகத் தவித்தவன் கிடைத்த ஒரு சிறிய சந்தர்ப்பத்தில் அவள் காதில் ரகசியமாக, “என்னை மன்னிச்சிடுறி… சத்தியமா இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நினைக்கல” என்று வலியோடு சொல்ல, “மன்னிக்கெல்லாம் முடியாது” சட்டென்று அவள் குரல் தீவிரமாக ஒலிக்க அவன் துணுக்குற்றான். அவள் உதட்டில் விநாடி நேரத்தில் ஓடி மறைந்த அந்தப் புன்னகையை அவன் கவனிக்க தவறிவிட, தன் மீது அவள் மிகுந்த கோபத்தில் இருக்கிறாளோ என்றவன் பதட்டத்தோடு அவள் புறம் திருப்பினான். அவன் தவிப்போடு அவளைப் பார்க்க அவள் குறும்புத்தனமாகப் புன்னகைத்து அவனை நக்கலாகப் பார்வையிட்டவள் குரலைத் தாழ்த்திக் கொண்டு, “ஒன்ற தலைவிதி… நீ இந்த சென்மத்துல என்ற கிட்ட சிக்கி சின்னாபின்னாமாகோணோம்னு இருக்கு” என்றாள். அவளிடம் அளவில்லா கோபத்தை அல்லது வெறுப்பை குறைந்தபட்சம் விருப்பமின்மையை அவன் எதிர்பார்த்திருக்க, அவள் ஒரு சிறு புன்னகையில் அவன் மொத்த அச்சத்தையும் நீக்கிவிட்டிருந்தாள். கூடவே அவளின் கன்னத்து குழிக்குள் அவனைக் கொக்கிப் போட்டு இழுத்திருந்தாள். ஆழமான சுழலுக்குள் சிக்குண்டவன் போல அவன் பார்வையும் மனமும் சுற்றுபுறம் மறந்து அவளிடம் சிக்கிக் கொண்டுவிட, அத்தனை நேரம் அந்தத் திருமண நிகழ்வில் கடனே என்று ஒன்றாமல் அமர்ந்திருந்தவன் தற்போது தன்னுடைய மனம் கவரந்தவளை மணக்க போகும் மணமகன் மனநிலைக்கு வந்திருந்தான். அதன் பின் அவன் வானில்தான் மிதந்து கொண்டிருந்தானோ இல்லை மேகத்தில்தான் பறந்து கொண்டிருந்தானோ தெரியாது. கனவில் கூட நடக்குமா என்று எண்ணிய அந்த அழகிய தருணம் நடந்தேறியது. மதுசூதனனும் சகுந்தலாவும் ஊர்க்காரர்கள் மற்றும் சொந்தங்களைப் புன்னகை முகமாக வரவேற்ற போதும் மனதளவில் அவர்களுக்குத் துளி கூட இதில் சந்தோஷம் இல்லை. ஆனால் மணக்கோலத்தில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்த மறுகணம் இருவருமே வியந்து போயினர். அவர்களுக்குள் அப்படியொரு அழகான பொருத்தம் அமையபெற்றிருந்தது. மங்கள் வாத்தியம் முழங்க அவன் தம் வலிய கரங்களால் அவள் கழுத்தைச் சுற்றி அந்த மாங்கலயத்தைக் கட்டிய அதேநேரம், “அடியேய் கருவாச்சி… எப்பவோ ஒன்ற கன்னத்து குழில நான் சிக்கிப் போட்டேனேடி… புதுசா இனிமேதான் சிக்கணுமா என்ன?” என்று உணர்வு ததும்ப அவன் கேட்ட தொனியிலோ அல்லது காதோரம் உரசிய அவன் மூச்சு காற்றிலோ அல்லது அவளைத் தொட்டும் தொடாமல் சீண்டிய மீசை ரோமங்களிலோ அல்லது மூன்றிலுமா? அவளுக்குத் தெரியவில்லை. அவள் நாடி நரம்புகளில் சிலிர்ப்பாக ஓடி மறைந்த உணர்வுகளில் அவள் அவனிடம் மொத்தமாக வசப்பட்டாள். அதற்கு பிறகாய் நடந்தேறிய ஒவ்வொரு சடங்கிலும் இருவரின் பார்வையோடு உணர்வுகளும் ஒருமித்தமாக சங்கமித்துக் கொண்டன. இருவேறு மனங்கள் இணையும் அந்தத் திருமண மேடையில் கவித்துவமாக காதல் அவர்கள் வாழ்க்கைக்குள் அரங்கேறியது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா