மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: OodalOodal-FinalPost ReplyPost Reply: Oodal-Final <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-admin" href="#">monisha</a> on January 30, 2020, 11:48 PM</div><p style="text-align: center;"><strong>10</strong></p> நிதானமாக யோசித்தபோது என்னுடைய தவறுகள் எனக்கு புரிந்தன. நான் கொஞ்சம் கூட முன்யோசனையே இல்லாமல் அவசரத்தில் ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு வந்துவிட்டேன். கௌதமை அந்த செயல் எந்தளவு புண்படுத்தியிருக்கும். என் மீதே எனக்கு கோபம் கோபமாக வந்தது. கெளதமை உடனடியாகப் பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எனக்குள் ஆவல் பெருகியது. அதுதான் அடுத்து நான் செய்ய வேண்டிய முக்கியமான வேலை. அம்மா வீட்டிலிருந்து அடுத்த நாளே கிளம்பிவிட்டேன். என் பெற்றோர்களுக்கு ஒருபுறம் ஆச்சரியமாக இருந்ததென்றால் இன்னொரு புறம் பிரச்சனை முடிந்ததென்று நிம்மதியாகவும் இருந்தது. அப்பாவும் என்னோடு துணைக்கு வருவதாகச் சொன்னார். நான் மறுத்துவிட்டேன். அது சரியாக வராது. எங்கள் இருவருக்கிடையிலுள்ள பிரச்சனையை நாங்கள்தான் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். கெளதமின் கோபத்தை எப்படி சரி செய்வதென்ற யோசனை மட்டுமே அப்போதைக்கு எனக்கு. கெளதம் வாழ்க்கையில் நான் செய்த அநியாயத்திற்கு அவர் என்னை என்ன செய்தாலும் தகும். ஆனால் நடந்து முடிந்த விஷயங்களை சொல்லி எந்தவித தவறும் செய்திராத கெளதமின் மனதைக் கூறு போடுவதில் எனக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. அதைவிட அவருக்குப் பெரிய தண்டனை வேறெதுவும் இருக்க முடியாது. கடந்த காலத்தின் மிச்சம் மீதிகள் நம் நிகழ் கால சந்தோஷங்களை அழித்துவிடக் கூடாது. வளர்மதி மூலம் நான் உணர்ந்த உண்மை இது. கௌதமிற்கும் எனக்குமான உறவில் விழுந்த விரிசலை எப்பாடுபட்டாவது சரி செய்ய வேண்டும். நான் இவ்விதம் யோசித்துக் கொண்டு நடக்கையில் பெருமாள் கோயில் மணியோசை என் செவிகளைத் தீண்டியது. வாசலிலேயே நின்று இறைவனை வேண்டிக் கொண்டேன். என் பிரச்சனையெல்லாம் தீர்த்து வை என்றல்ல. எது நடந்தாலும் என்னோடுத் துணையாக இரு என்று. ஏனென்றால் என் வாழ்வில் ஏற்பட்ட அத்தனைக் குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் நான் மட்டுமே காரணம். அதை நான்தான் சரி செய்ய வேண்டும். அவர் இதில் என்ன செய்வார் பாவம்! என் வேண்டுதலை தடை செய்தார் போல் பின்னே இருந்து ஒரு குரல், “காயு” என்று அழைத்தது. வேறு யார்? கிரிஜா மாமிதான். கோயிலிருந்து பூஜைக் கூடையோடு வந்துக் கொண்டிருந்தார். வேக எட்டுக்குள் வைத்து மூச்சு வாங்க வந்தார். எப்படித்தான் இவர் கண்ணில் மட்டும் நான் சரியாக சிக்கித் தொலைக்கிறேனோ? அவசர அவசரமாக ஓடி வந்து என்னிடம் பேசுவதில் அவருக்கு அப்படி என்ன ஆர்வமோ? மாமி அதற்குள் என்னருகே வந்துவிட, “வாங்க மாமி.. என்ன மாமி சாமி கும்பிட்டுட்டீங்களா?” என்றேன். “நான் வர்றது இருக்கட்டும்… நீ எங்கடி போன இத்தனை நாளா?” “அம்மா வீட்டுக்குப் போயிருந்தேன்” “அதைச் சொல்லிட்டுப் போக மாட்டியா?” ‘போகும் போது நான் என் வீட்டுக்கார்கிட்டயே சொல்லிட்டுப் போகலயாம்… இதுல இவங்கக்கிட்ட வேற சொல்லிட்டுப் போகணுமாமே… வேற வேலை இல்ல’ என்று நான் எண்ணிக் கொண்டிருக்கும்போது, “நேத்து நான் கெளதம் கிட்ட உன்னைப் பத்தி கேட்டேன்?” என்றார். “என்ன கேட்டீங்க மாமி?” எனக்குப் படபடப்பானது. “நீ எப்போ வருவன்னுதான்?” “அதுக்கு அவர் என்ன சொன்னாரு” “திருதிருன்னு முழிச்சிட்டு அப்புறம் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு நீ இன்னும் இரண்டு நாளில் வருவன்னுட்டு போயிட்டான்” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் மனதிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது. ‘பாவம்! கெளதம்’ நான் செய்த வேலையால் தேவையில்லாமல் அவர் இந்த மாமியிடம் வந்து மாட்டிக் கொண்டார். மாமி என்னிடம் நெருங்கிவந்து, “ஆமா! உனக்கும் உன் வீட்டுகாரருக்கும் ஏதாச்சும் சண்டையா?” என்று ரகசியமாகக் கேட்க, வரும் கோபத்திற்கு ரோட்டோரம் இருக்கும் கல்லை எடுத்து இந்த மாமி மண்டையில் போட்டு உடைக்கலாம் போலிருந்தது. ஆனால் அப்படி நினைத்ததையெல்லாம் நம்மால் செய்ய முடியாதே! . “இல்ல மாமி… அப்படியெல்லாம் ஒன்னுமில்ல… சும்மாதான் அம்மா வீட்டுக்கு போனேன்” என்று சமாளித்துட்டு வேகமெடுத்து நடந்தேன். வீட்டு வாசலை அடைந்த பின்தான் என் மனதிற்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. “சரிங்க மாமி… அப்புறம் பேசுவோம்” என்று சொல்லிவிட்டு நான் என் வீட்டு காம்பவுண்டிற்குள் நுழையும் வேளையில் மீண்டும் அவனைப் பார்க்க நேரிட்டது. அவன் எனக்கு நேரெதிராக நடந்து வந்துக் கொண்டிருந்தான். சை! யார் முகத்தைப் பார்க்கவே கூடாது என்று நினைத்தேனோ அவன் முகத்திலேயே விழிக்க வேண்டுமா? அதுவும் வந்ததும் வராததுமாக. எரிச்சலோடு கண்டும் காணாமல் நான் அவனைக் கடந்து செல்ல, “காயத்ரி” என்று என்னைப் பெயரிட்டு அழைத்தான். என்னதான் நான் தைரியமாக இருப்பதுப் போல் காட்டி கொண்டாலும் அது உண்மையில்லை போல. அவன் குரலைக் கேட்ட நொடி என் தேகமெல்லாம் தடதடவென நடுங்கியது. அவன் அழைப்பிற்கு நிற்காமல் நான் முன்னே செல்ல, “காயு ஒரு நிமிஷம்” என்றான் அவன் என் பின்னோடு வந்தபடி. எனக்குத் தூக்கிவாரி போட்டது. இந்தப் பிரச்சனை என்னை அத்தனைச் சீக்கிரத்தில் விடாது போலிருக்கே! சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரும் இருக்கவில்லை. அவன் புறம் திரும்பிக் கூடப் பார்க்காமல், “நடந்த முடிஞ்ச எதையும் நான் யோசிக்க கூட விரும்பல… ஒழுங்கா போயிடு… எனக்கு உன் முகத்தில முழிக்கக் கூட விருப்பமில்லை” என்றேன். “எனக்கு உன் சங்கடம் புரியுது… கிட்டத்தட்ட என் நிலைமையும் அதுதான்… நான் வீட்டுக்குக் கொடுத்த அட்வான்ஸ் திருப்பி வாங்கத்தான் வந்தேன்… நான் இங்க குடி வர போறதில்லை” என்றான். அந்த வார்த்தைகளைக் கேட்ட நொடி என்னை அழுத்திக் கொண்டிருந்தப் பெரிய பாரம் இறங்கியது. நிம்மதி பெருமூச்சோடுத் திரும்பிப் பார்த்தேன். அவன் வாயிலைத் தாண்டிப் போய்விட்டான். என் வாழ்க்கையை தாண்டியும்தான்! சிலநேரங்களில் நாம் பூதாகரமாகப் பெரிதுப்படுத்திப் பயந்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் சோப்பு நுரையில் உருவாகும் குமிழ்கள் போல காணாமல் போய்விடுகிறது. மாடியேறி என் வீட்டு வாயிலை நோக்கி நடந்தேன். அவர் நிச்சயம் வீட்டில் இருக்க மாட்டார். அலுவலகம் சென்றிருப்பார். அதனால் ஒன்றும் பாதகமில்லை. எப்போதும் என் கைப்பையில் மற்றொரு சாவி இருக்கும். அதை நம்பித்தான் நான் புறபட்டு வந்ததே. அவர் எப்படியும் நடுநசியில்தான் வீடு வந்து சேருவார். நான் வீட்டிலிருக்கும்போதே அப்படிதான் எனும்போது இல்லாத போது எப்படியோ? ஒருவேளை அலுவலகத்திலேயே தங்கி விடுகிறாரோ என்னாவோ? நான் யோசித்துக் கொண்டே சாவியை எடுத்து திறக்க நினைக்க, கதவு தானாகவே திறந்துக் கொண்டது. ‘அடக்கடவுளே! வீட்டைப் பூட்டாமலே ஆபீஸ் போயிட்டாரு இந்த மனுஷன்’ என்று நான் சொல்லி கொண்டே உள்ளே வர, என் எதிரே கெளதம் நின்றிருந்தார். நான் நினைத்ததற்கு முற்றிலும் நேர்மாறாய்! இப்படியொரு அதிர்ச்சியை நான் எதிர்பார்க்கவேயில்லை. இந்த நேரத்தில் இவர் எப்படி வீட்டிலிருக்கிறார்? வீர தீரமாக அம்மா வீட்டிலிருந்துப் புறப்பட்டு வந்த போது இருந்த தைரியமெல்லாம் கெளதமின் உஷ்ண பார்வையில் வடிந்துக் கொண்டே போனது. அதேநேரம் முகத்திலிருக்கும் நான்கு நாள் தாடியும் சோர்ந்து போன விழிகளும் என் மனதை உருக்கியது. தான் இல்லாதது அவரை எந்தளவு பாதித்திருக்கும் என்பதை அவரின் வாடி வதங்கிய முகமே சொல்லாமல் சொல்ல, அவரோ அந்த நொடி என்னைப் பார்வையாலேயே எரித்து விடுவது போல் பார்த்து கொண்டிருந்தார். வெளியே போ என்று சொல்வாரோ? அல்லது கன்னாபின்னாவென்று திட்ட செய்வாரோ? ஒன்றும் புரியாமல் ஊமை போல அவரைப் பார்த்துக் கொண்டு நிற்க, நான் எதிர்ப்பார்த்த எதுவும் நிகழவில்லை. அவர் என்னை முறைத்துவிட்டு பேசாமல் உள்ளே சென்றுவிட்டார். என்னை வா என்றும் சொல்லவில்லை. போ என்றும் சொல்லவில்லை. மொத்தத்தில் அவர் என்னைத் திட்டவில்லை. அவரின் இந்த மௌனத்தை எப்படி எடுத்துக் கொள்வதென்றே புரியவில்லை. அவர் பாட்டுக்கு என்னைக் கண்டுகொள்ளாமல் சோபாவில் அமர்ந்து தன் மடிக்கணினிக்குள் மூழ்கிவிட்டார். நான் உள்ளே சென்று என்னுடைய பையை வைத்துவிட்டு அவரருகில் வந்தமர்ந்து, “சாரி ங்க” என்றேன் இறங்கியதொனியில். அவர் தள்ளி அமர்ந்துக் கொண்டார். என்னைப் பார்க்கவும் கூடாது என தன் பார்வையை அவரின் மடிக்கணினிக்குள் மூழ்கடித்துக் கொண்டார். “நான் செஞ்சது தப்புதான் சொல்லாம போயிருக்க கூடாது… ஐம் சாரி” என்றேன் மீண்டும். அப்போதும் மௌனமே உருவாக அமர்ந்திருந்தார். “நான் ஏதோ அப்ப இருந்த டென்ஷன்ல புத்தியில்லாம அப்படி செஞ்சிட்டேன்… இனிமே அப்படி செய்யமாட்டேன்” மிக கனமான மௌனம் அவரிடம். “பேசமாட்டீங்களா?” என் கேள்விக்குப் பதிலில்லை. கோபமாக ஒரு முறைப்புக் கூட இல்லை. “உங்க கோபம் எனக்குப் புரியுது… ஆனா அதுக்காக இப்படி பேசாம இருக்காதீங்க… வேணா ஏதாச்சும் திட்டுங்க” இப்போதும் அதே அழுத்தமான மௌனமே அவரிடம். பேசவே கூடாது என்றுப் பிடிவாதமாக இருக்கிறார். மெல்ல நகர்ந்து அவர் கரத்தைப் பிடித்து “ஐம் சாரி” என்று கேட்ட நொடி அவர் தன் கரத்தை உதறிக் கொண்டார். கோபத்தைத் தாண்டிய அந்த நிராகரிப்பு! என்னால் அதைத் தாங்கி கொள்ளவே முடியவில்லை. உடைந்து விடுவேன் போலிருந்தது. கண்ணீர் மெல்ல மெல்ல தன் கரைகளைக் கடந்துக் கொண்டிருந்தது. அழக் கூடாது என்று நினைத்தாலும் அது ஏனோ என்னால் முடியவில்லை. கண்ணீர் என் கன்னங்களைத் தாண்டி இறங்கவும் அதனை வேகமாகத் துடைத்துவிட்டு உள்ளே எழுந்து சென்றுவிட்டேன். இப்படி உடனடியாக மனம் தளர்ந்துவிடுவதா?. கூடாது. எனக்கு நானே அறிவுரை சொல்லிக் கொண்டு வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன். நிதானித்து மனதைத் திடப்படுத்தினேன். கெளதமின் மௌனம் என்னைக் கொல்லாமல் கொன்றது. இதே வேலையை நான் அவருக்கு செய்திருக்கிறேனே. அவருக்கு அந்த நொடிகள் எப்படி வலித்திருக்கும். அவர் எவ்வளவு தூரம் கெஞ்சினார். அப்போதும் கூட நான் பேசவேயில்லை. தன்வினைத் தன்னைச் சுடும். நான் செய்தது இப்போது எனக்கே திருப்பி நடக்கிறது. எனக்கு இதுவும் வேண்டும். இதற்கு மேலேயும் வேண்டும். ஆனால் ஒன்று. கெளதமின் இந்த மௌனத்திற்குப் பிண்ணினியிலிருப்பது கோபமாகத் தெரியவில்லை. அப்படிக் கோபமாக இருப்பவர் என்னை உள்ளே வர அனுமத்திருக்கமாட்டார். அவருக்கு என் மீதிருப்பது கோபம் இல்லை. வெறும் ஊடல்! அதீத காதலின்பால் விளைந்த ஊடல்! முகத்தைத் துடைத்துக் கொண்டு மீண்டும் முகப்பறைக்குள் வந்தேன். அந்த வீணாய் போன மடிக்கணியைதான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். வரும் கோபத்திற்கு அதைத் தூக்கிப் போட்டுச் சுக்குநூறாக உடைத்துவிடலாமா என்றிருந்தது. ஊஹூம் அப்படியெல்லாம் பொறுமையிழந்து எதுவும் செய்துவிடக் கூடாது. கெளதமின் கோபம் இன்னும் அதிகமாகிவிடும். தெளிவாக யோசித்து செயலப்பட வேண்டுமென்ற எண்ணத்தோடு மௌனமாக அவர் முன்னே நின்றுக் கொண்டிருந்தேன். அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைப் பார்க்கக் கூடாது என்பதற்காக மட்டுமே அவர் அந்த மடிக்கணியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். மற்றபடி அவர் கவனமெல்லாம் கொஞ்சமும் அதிலில்லை. எப்படியாவது அவரை நிமிர்ந்து என்னைப் பார்க்க வைக்க வேண்டுமே! சில நிமிடங்கள் யோசனைக்கு பின் ஒரு விஷயம் என் மூளையைத் தட்டியது. “நீ மாடர்னான பொண்ணுதானே… என்னைப் பேர் சொல்லி கூப்பிட்டா என்ன?” என்று கெளதம் மிகுந்த ஆசையோடு என்னிடம் ஒருமுறைக் கேட்டார். “எதுக்குப் பேர் சொல்லிக் கூப்பிடணும்” “கூப்பிடு காயு… எனக்குக் கேட்கணும் போல இருக்கு” “ஆனா எனக்கு அப்படி கூப்பிடணும் போல இல்லையே” “விதாண்டவாதம் பண்ணாத காயு… கூப்பிடு” “கஷ்டங்க… உங்களை முதல் தடவைப் பார்த்த நாளிலிருந்து எனக்கு மரியாதையாதான் கூப்பிட வந்தது… அப்புறம் அது அப்படியே பழகிடுச்சு” “எனக்காக கெளதம்னு கூப்பிட்டு பழகேன்” “என்ன திடீர்னு புதுசா?” “என் ஃப்ரெண்டோட வொய்ஃப் அவனை அழகா பேர் சொல்லிக் கூப்பிடுறாங்க தெரியுமா?” “லவ் மேரேஜா இருக்கும்… ஒரே ஏஜ் க்ருப்பா இருந்திருப்பாங்க… ஆனா நமக்கு அப்படியா? உங்களுக்கும் எனக்கும் பைவ் இயர்ஸ் டிஃப்பரன்ஸ்” “அது இப்போ ரொம்ப முக்கியமா? பேர் சொல்லிக் கூப்பிட சொன்னா ஏதேதோ கதை அளக்கிற” “எதுக்கு இப்போ நான் பேர் சொல்லிக் கூப்பிடணும்? உங்க அம்மாகிட்ட நான் வாங்கிக் கட்டிக்கவா?” “அவங்க என்னடி சொல்ல போறாங்க?” “அவங்க என்ன்ன்ன்ன சொல்லப் போறாங்களாவா?” என்று முறைப்பாக இழுத்த நான் மேலும், “ஒரு தடவை உங்க ஆசை தொங்கச்சி அவ புருஷனைப் பேரை சொல்லிக் கூப்பிட்டுட்டா… அதுக்குப் போய் பக்கம் பக்கமா லெக்சர் அடிச்சாங்க… அவங்கப் பொண்ணுக்கே அந்த நிலைமைன்னா என் நிலைமை” என்றேன். “ஓ!” என்று சில நொடிகள் யோசனையில் ஆழ்ந்தவர் பின் ஒரு முடிவுக்கு வந்து, “அப்படின்னா… நீ என்னை ரூம்க்குள் மட்டும் கெளதம்னு கூப்பிடு… சரியா?” என்றார். அவரைத் தீவிரமாக முறைத்துப் பார்த்த நான், “அப்ப கூட நீ கூப்பிடு… நான் என் அம்மாகிட்டச் சொல்லிக்கிறேன்னு சொல்ல தோணுதா உங்களுக்கு?” என்றேன் கோபமாக! “ஏற்கனவே இருக்கிற பிரச்சனைப் போதாதாடி?” என்றார் அவர். “அதைதான் நானும் சொல்ல வரேன்… ஏற்கனவே இருக்கிற பிரச்சனைப் போதும்… நான் உங்களை ரூம்ல கெளதம்னு கூப்பிட்டு… அந்தப் பழக்கதோஷத்தில வெளியே கூப்பிட்டு வைச்சு… அப்புறம் உங்க அம்மா அதைப் பார்த்து என்கிட்ட சண்டைக்கு வந்து… அப்புறம் நானும் சும்மா இல்லாம அவங்கக்கிட்ட மல்லுக்கட்ட போய்… நீங்க வந்து பஞ்சாயத்துப் பண்ணி” “அம்மா தாயே! போதும் நிறுத்து… கேட்கும்போதே எனக்கு தலைச் சுத்துது… வேண்டாவே வேண்டாம் நீ எப்பவும் போலவே என்னை கூப்பிடு” என்று கௌதம் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டார். ‘பேர் சொல்லிக் கூப்பிட சொன்னது ஒரு குத்தமாய்யா?’ என்று அன்று இரவெல்லாம் புலம்பித் தீர்த்தார். இப்போது அந்த நிகழ்வை நினைத்தால் எனக்குச் சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது. நான் அந்தளவு அவரைப் பாடாய்படுத்தியிருக்கிறேன். கெளதம் உண்மையிலேயே ரொம்ப பாவம்தான். அதற்குப் பிறகு என்னிடம் அப்படிக் கூப்பிடச் சொல்லிக் கேட்கவேயில்லை. எதற்கு வம்பு என்றிருந்துவிட்டார். எனக்கும் கணவனை உரிமையாகப் பெயரிட்டு அழைக்க வேண்டுமென்றெல்லாம் ஆசைகள் இருந்தன. அதுவும் கதைகளில் எல்லாம் கணவன்மார்களை நாயகிகள் செல்ல பெயர் சொல்லி அழைப்பதும் உரிமையாக வாடா போடா என்று சொல்வதும் எனக்குப் படிக்கும் போதே ரொம்பவும் பிடித்திருந்தது. ஆனால் நிதர்சனத்தில் என்னால் அத்தகைய ஆசைகளை நிறைவேற்றி கொள்ள முடியவில்லை. எல்லாம் என் முதல் காதலோடு காலாவதியாகி போனது. கௌதமிற்கும் எனக்கும் ஐந்து வயது வித்தியாசம். அவரிடம் பேசவே எனக்கு தயக்கமாக இருந்த சமயம் அது. திருமணத்திற்கு பிறகே எங்கள் உறவு மெல்ல மெல்ல மலர்ந்தது. அதற்குள் நான் அவரை ‘என்னங்க’ என்று அழைத்துப் பழகிவிட்டேன். இப்படியாக நீண்ட என் யோசனையில் எனக்கு தோன்றியது அந்த யுக்தி. கெளதமைக் கொஞ்சம் சீண்டிப் பார்த்தால் என்ன? அவர் முகமாற்றங்களைக் கூர்மையாக அளவெடுத்தபடி தொண்டையைச் செருமிக் கொண்டு, “கெளதம்” என்று அழைத்தேன். முதல் முறையாக! இமைக்கும் நேரத்தில் அவர் இமைகள் நிமிர்ந்து என்னைப் பார்த்துவிட்டு தாழ்ந்ததையும் என் விழிகள் வெகுத் துல்லியமாகக் குறித்துக் கொண்டன. “கெளதம் சாரி” என்று நான் மீண்டும் அழைத்து சொல்ல அவர் முகத்தில் எண்ணிலடங்கா மாற்றங்கள் மின்னலென தோன்றி மறைந்தன. ஆனால் அடுத்த நொடியே அவர் எழுந்து தன் மடிக்கணினியோடு படுக்கையறை நோக்கி நடக்கவும் என்னால் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே இயலவில்லை. “என்னங்க ப்ளீஸ்… எல்லாம் என் தப்புதான்னு நான் ஒத்துக்கிறேன் இல்ல… அப்புறமும் இப்படிப் பேசாம இருந்தா எப்படி… ஓ! பழிக்குப்பழியா… அன்னைக்கு நான் உங்ககிட்டப் பேசாம இருந்ததுக்கு நீங்க இதை சாக்கா வைச்சு என்கிட்டப் பேசாம இருக்கீங்க?” உணர்ச்சி வேகத்தில் கோபமாக நான் பேசிவிட வெடுக்கென அவர் என்னைத் திரும்பிப் பார்த்து முறைத்துவிட்டு உள்ளே சென்றுக் கதவை அறைந்து மூடிவிட்டார். அப்போதும் அவர் எதுவும் பேசவில்லை. அதுதான் எனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. பொறுமையாகப் பேசியிருக்கலாம். என் கோபமும் ஈகோவும் எனக்கு முன்னே வந்து குதித்துவிடுகிறதே! அடுத்த என்ன செய்வது? என்று யோசித்தேன். வேண்டாம்! அவரை இதற்கு மேல் தொந்தரவு செய்தால் அவர் கோபம் அதிகரித்துவிடும். இப்போதைக்கு மௌனமாக இருப்பதே நல்லது. ‘முதல என் வாய்க்குப் பெரிய திண்டுக்கல் பூட்டாபோடணும்… எல்லாம் என்னால’ என்று என்னை நானே கடிந்துகொண்டேன். இவ்வளவு களேபரத்திலும் எனக்குப் பசிக்க வேறு செய்தது. பயணித்து வந்தக் களைப்பு. ஏதாவது சமைத்து சாப்பிடுவோம் என்று சமையலறைக்குள் புகுந்த எனக்கு அந்த இடத்தின் பரிதாபகரமான நிலைமையைப் பார்த்து தலைச் சுற்றியது. சாமான்கள் எல்லாம் இருக்கும் இடத்தில் இல்லை. எல்லாமே இடமாறியிருந்தது. தலையை உலுக்கி மீண்டும் பார்த்தேன். இது என்னுடைய சமையலறைதானா? என்றே எனக்கு சந்தேகமாக இருந்தது. யானை சாமான் கடையில் புகுந்தது போல இது என்ன கொடுமை? ஒருவேளை என் மீதிருந்தக் கோபத்தில் வேண்டுமென்றே எல்லாவற்றையும் தூக்கிப் போட்டிருப்பாரோ? இருக்கும். செய்தாலும் செய்வார். இப்போது இதைச் சரி செய்ய வேண்டுமே. தலைக் கிறுகிறுத்தது. கெளதமின் கோபத்தைவிட சமையலறையின் இந்த அலங்கோலம் என்னை மிகவும் அதிகமாகப் பாதித்தது. ‘ஏன்டா அம்மா வீட்டுக்குப் போனோம்’ என்று தலையிலடித்து கொள்ளுமளவிற்கு! ‘நான் ஒரு பத்து நாள் வீட்டில் இல்லாததுக்கு இப்படியா?’ என்று புலம்பிக் கொண்டே அந்த அறையை சுத்தம் செய்ய தொடங்கிய எனக்கு பசியெல்லாம் காற்றோடு போனது. ப்ரிட்ஜில் இருந்த மொத்த காய்கறிகளும் பாதி அழுகிய நிலையிலிருந்தன. எல்லாவற்றையும் சுத்தம் செய்து முடிக்கும் போது சமையல் செய்து சாப்பிட எனக்குத் தெம்பில்லை. ‘எனக்கு இது தேவைதான்… இன்னொரு தடவை இப்படி செய்வியா நீ?’ என்று என்னை நானே கேட்டுக் கொண்டே முகப்பறை வந்து ஓய்வாகச் சாய்ந்துக் கொண்டேன். அப்போது டிவி அருகே இருந்த புத்தகம் என் கண்ணில் பட்டது. நான் வைத்த இடத்திலிருந்து அப்படியே இடம் மாறாமல் இருந்தது. அதனைக் கையிலேந்திக் கொண்டு சோபாவில் அமர்ந்தேன். பாதியில் நிறுத்தியதை இன்று முடித்துவிட வேண்டும். நேற்று வளர்மதி வேறு அந்தளவு பாராட்டினாளே இந்தக் கதையை! விட்ட பக்கத்திலிருந்துத் தொடர்ந்தேன். அதற்குப் பிறகு நான் எல்லாவற்றையும் மறந்து போனேன். முழுவதுமாக அந்தக் கதை என்னை உள்ளிழுத்துக் கொண்டது. //மாற்றம் என்பது தனிமனிதனிடமிருந்து ஆரம்பிக்கிறது. அடுத்து அவனைச் சார்ந்தவர்களிடம் மாற்றம் ஏற்படுகிறது. அடுத்தடுத்த படிகளில் சமுதாயமே மாற்றமடைகிறது// கதையிலிருந்த அந்த வரிகள் என் மனதின் அடி ஆழத்திற்குள் எழுச்சியான சிந்தனைகளைத் தோற்றுவித்தது. படிக்கவே முடியாது என்று ஆரம்பத்தில் நிராகரித்த கதை அதன் பயணத்தில் எனக்குள் நிறைய மாற்றங்களை உருவாக்கியது. கசந்த நிகழ்வுகளோடு இந்தக் கதைத் தொடங்கினாலும் இனிமையான காதலோடு முடிந்து மனதை நிறைத்தது. காதலை இப்படியும் கூட சமூக உணர்வுகள் சார்ந்து சொல்ல முடியுமா? நீண்ட நெடிய காத்திருப்பிற்கு பின் வரும் காதல் மிக அழகானது. ஆழமானது. என் விழியோரம் நீர் கசிந்திருந்தது. மனதை நெகிழ்த்திய அந்த உணர்வை வெறும் வார்த்தைகளைக் கொண்டு விவரிக்க முடியாது. கதை அதற்குள் முடித்துவிட்டதா என்று ஏங்குமளவுக்கு நான் ரசித்துப் படித்தேன். மெல்ல நிமிர்ந்துப் பார்த்தேன். மூடிய கதவு மூடியபடியே இருந்தது. ஏமாற்றமாக இருந்தாலும் மனதில் ஏனோ கோபம் எழவில்லை. காத்திருப்பதும் கூட ஒரு வகையில் சுகம்தான். கெளதம் என் மீது கொண்ட அளவில்லா காதலோடு அவரின் கோபம் நீண்ட நேரம் போட்டிப் போட இயலாது. இந்த யோசனையில் எனக்கு உறக்கமே வரவில்லை. கதவைத் திறந்துக் கொண்டு வெளியே சென்றேன். இன்று பௌர்ணமி. நேற்று விடவும் நிலவின் ஒளி இன்னும் பிரகாசமாகத் திகழ்ந்தது. மாற்றங்கள் நமக்குள் நிகழும் அதேநேரம் அது நம்மை சுற்றிலும் நிகழ்வது போல் ஓர் அழகான உணர்வு. நம் எண்ணங்களின் பிரதிபலிப்பின் தாக்கம் இந்த உலகத்தையே அழகாகக் காட்டுகிறதே! எல்லாமே நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் இருக்கிறதோ? அந்த நொடி நான் என் ஹெட்ஃபோனை காதுகளில் அணிந்துக் கொண்டு அந்த இரவு நிலவோடு தனிமையின் துணையோடு பாடல்கள் கேட்க ஆரம்பித்தேன். “கடவுள் இல்லையென்றேன் தாயை காணும் வரை கனவு இல்லையென்றேன் ஆசை தோன்றும் வரை காதல் பொய்யென்று சொன்னேன் உன்னை காணும் வரை கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை காதல் சுவையொன்றுதானே காற்று வீசும் வரை நேற்று இல்லாத மாற்றம் என்னது ? காற்று என் காதல் எது சொன்னது!” லயித்து ரசித்து நான் விழிகள் மூடி அந்த பாட்டின் வரிகளில் மூழ்கி கிடக்கும் போது சட்டென்று என் ஹெட்போன் பறிக்கப்பட்டது. அதிர்ச்சியில் விழிகள் திறந்த நொடி கெளதம் கோபமாக என் முன்னே நின்றிருந்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. “என்னங்க? என்னாச்சு?” என்று நான் கேட்க அவர் எதுவும் பேசவில்லை. என்னை முறைத்துவிட்டு உள்ளே சென்று இறுக்கமாக ஒரு பார்வைப் பார்த்தார். அந்தப் பார்வைக்கு அர்த்தம் உள்ளே வா என்பது. அவர் செய்கையில் கோபத்தைத் தாண்டி அதீத படபடப்பும் பயமும் ஒட்டிக் கொண்டிருந்தது. ஒருவேளை அறையை விட்டு வெளியே வந்து என்னைத் தேடியிருப்பார் போலும். நான் வெளியே இருப்பது தெரியாமல் ரொம்பவும் பதட்டமாகியிருப்பார். நான் சொல்லாமல் சென்றதன் வலி அவர் மனதில் ஆழமாகப் பதிவாகியிருந்தது. நான் அமைதியாக கதவை தாளிட்டுவிட்டு வந்தேன். கெளதம் அறைக்குள் சென்றுப் படுத்துவிட்டார். விளக்கையணைத்துவிட்டு மௌனமாக நானும் அவரருகில் சென்றுப் படுத்துக் கொண்டேன். நிச்சயம் அவர் என்னிடம் பேசமாட்டார். ரொம்பவும் அரிதாகவே வரும் கெளதமின் கோபம் அத்தனைச் சீக்கிரத்தில் அவரை விட்டு நீங்காது. இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இப்படிதான் போல. மனம் வலித்தது. ஆனால் இதையெல்லாம் ஆரம்பித்த புள்ளி நான்தானே! நிறுத்தாமல் பெருகிய கண்ணீரை நான் துடைத்து கொண்டே, “கெளதம் ஐம் சாரி… என்கிட்ட பேசுங்க” என்று நான் இறைஞ்ச, அப்போதும் அவரிடம் பதில்லை. ஒரே படுக்கையில் இப்படி இருவேறு மனங்களாகப் பிரிந்திருப்பது கொடுமை. என் முயற்சிகள் அனைத்தும் பொய்த்து போனது. உறக்கமின்றி கெளதமின் ஓர் அணைப்புக்காக என் மனம் தவித்துக் கொண்டிருந்தது. அந்த இரவை நான் கடப்பது அத்தனை சுலபமாக இல்லை. இருளும் அமைதியும் என் உணர்வுகளைக் கனமாக்கிக் கொண்டேயிருந்தது. வார்த்தைகளைவிட மௌனத்திற்கு அதிக சக்தி. என் உணர்வுகளைக் கூறுப் போடுகிறது. மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு எதுவும் பேசாமல் விழிகள் மூடினேன். கண்ணீர் பெருகி ஓடி என் தலையணையை நனைத்ததுதான் மிச்சம். உறக்கம் வரவில்லை. திடீரென்று கெளதமின் கைகள் என்னை இறுக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டன. நான் திகைத்துப் போனேன். அவர் கரங்கள் என்னை மூர்க்கமாகத் திருப்பின. நான் அரண்டு அவரைப் பார்க்க, “என்னைவிட்டு ஏன் டி போன?” என்றவர் சீற்றமாக என்னை நோக்கிக் கேட்க நான் அதிர்ந்தேன். “நீ இல்லாம நான் எவ்வளவு தவிச்சுபோயிட்டேன் தெரியுமா? என்னைப் பத்தி ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருந்தா நீ இப்படிப் போயிருப்பியாடி… அப்படி என்னடி பண்ணிட்டேன் நான் உனக்கு” “அன்னைக்கு நான் அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணி உன்கிட்ட கோபப்பட்டது மட்டும்தான் உனக்கு தெரியும்… அதுக்கப்புறம்… அம்மாகிட்ட நான் என்ன பேசுனன்னு தெரியுமா?” நான் அவரை நிமிர்ந்துப் பார்க்க, “காயு பாவம் அவளை ட்ரீட்மென்ட் பண்ணிக்க சொல்லி கம்பெல் பண்ணாதீங்கன்னு உனக்காக நான் என் அம்மாகிட்ட பேசுனே… இன்பேக்ட் கெஞ்சுனேன்… தெரியுமாடி உனக்கு… நீ பாட்டுக்கு நான் அவசரத்தில் சொன்ன வார்த்தையைப் பிடிச்சிகிட்டு என்னை டார்ச்சர் பண்ணா… ஏதோ கோபத்தில் கொஞ்சம் கத்திட்டேன்… அதுக்கு போய்” கௌதம் என்னைத் தீவிரமாக முறைத்துக் கொண்டபடித் தொடர்ந்தார். “டிவோர்ஸ் பேபெர்ஸ் அனுப்ப சொல்லி லெட்டர் எழுதி வைச்சிட்டுப் போயிட்ட… நான் மனசால எப்படி உடைஞ்சு போனேன் தெரியமாடி?” அவரின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது. வெறும் மன்னிப்பு என்ற வார்த்தை அவருக்கு நான் ஏற்படுத்திய வலிகளுக்கு நிகராகுமா? “என்னைப் பேசு பேசுன்னு சொன்ன இல்ல… இப்ப நீ பேசுடி… நான் கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்லு” எனக்கு அழுகைதான் வந்தது. பேச்சே வரவில்லை. தலையைக் குனிந்துக் கொண்டு அவர் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் கூனிகுருகிப் போய் அமர்ந்தேன். மீண்டும் அந்த அறையை மௌனம் நிறைக்க கண்ணீரால் கரைந்துக் கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் கழிந்த பின், “காயு… ஏன் இப்படி அழற? சரி விடு… போனது போகட்டும்” என்று என் அழுகையைப் பார்த்து அவர் மனம் இளகி சாமதானம் செய்தார். அவர் கரம் என்னை இலகுவாக அணைத்துக் கொண்டது. அந்த கரத்தின் அணைப்பில் இன்னும் இன்னும் நான் பாரமாகவே உணர்ந்தேன். அவரின் இந்தப் புனிதமான காதலுக்குப் பதிலாக நான் எதையும் அவருக்குக் கொடுக்க முடியாத பாவியாக நிற்கிறேனே. அவர் அன்பிற்கு நான் தகுதியானவள்தானா என்ற கேள்வி எழுந்தது. அவரிடம் நான் மறைத்த விஷயங்கள் என்னை உயிரோடு கொன்றுக் கொண்டிருந்தது. என் உயிரே போனாலும் அதையெல்லாம் அவரிடம் என்னால் சொல்ல முடியாது. கடைசி வரை அந்த குற்றவுணர்வோடே நான் வாழ்வதுதான் எனக்கான தண்டனை! “நான் தப்பு செஞ்சிட்டேங்க… ரொம்ப பெரிய தப்பு செஞ்சிட்டேன்” என்று அவர் மார்பில் சாய்ந்துக் கொண்டுக் கதறி அழ, “என்னடி… தப்பு அது இதுன்னு… அதான் நான் விடுன்னு சொல்றேன் இல்ல” என்றார். அவர் அணைப்பு இன்னும் அழுத்தமாக என் தேகத்தை அவரோடுப் பிணைத்தது. அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்த நான், “நான் அத்தை சொன்ன மாதிரி ட்ரீட்மென்ட் பண்ணிக்கிறேன்” என்றேன். “எதுக்கு? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நீ யாருக்காகவும் எதுவும் செய்ய வேண்டாம்” “யாருக்காகவும் இல்ல… நமக்காக” “அவசயமில்ல காயு… முக்கியமா எனக்கும் அதுல உடன்பாடில்லை… நம்ம ரெண்டு பேருக்குள்ள இதனால் வர சின்ன மனஸ்தாபங்கள் கூடப் பிடிக்கல… இயந்திரத்தனமா நம்ம உறவு மாற வேண்டும்…. நமக்கு அப்படி ஒரு குழந்தை பிறக்கணும்னு, நம்ம உண்மையான அன்புக்கும் காதலுக்கும் பிறக்கட்டும்… இந்த நாலு நாளா தனியா இந்த வீட்டுல இருந்தபோது நான் உணர்ந்த விஷயம் இது… நீ இல்லாத இந்த வீடு எனக்கு நரகமா இருந்துது… எந்தளவு நீ என் வாழ்க்கையோட அங்கமா மாறியிருக்கன்னு நான் ஃபீல் பண்ணேன்… அந்த நிமிஷம் நீ பக்கத்தில இருந்தா மட்டும் போதும்னு தோணுச்சு” பேசிக் கொண்டே கெளதமின் கரங்கள் என்னை இன்னும் அழுத்தமாக அணைத்தது. பிரிவின் வலியை அந்த அணைப்பு எனக்கு உணர்த்த, என் விழியோடு கலந்த அவர் பார்வையில் ஓர் ஆழமான பிணைப்பு. மெல்ல மெல்ல அவர் இதழ்கள் என் முகத்தில் இறங்கி என் உதடுகளோடு இணைந்தன. நான் இல்லாத தவிப்புகளை மூச்சு திணற வைத்த அவரின் முத்தம் சொல்ல, அவர் காட்டிய தாபத்தில் இத்தனை வருடத்தில் நான் உணராத ஏதோ ஒன்று இருந்தது. வலிகளோடு கூடிய சுகம் அது. வார்த்தைகள் கொண்டு அவற்றை விவரிக்க இயலாது. இதுதான் ஊடலில் பெருகும் காதல் உணர்வுகளோ? காட்டு தீயாக காற்றடிக்கும் திசையெல்லாம் பரவும் நெருப்பு போல கெளதமின் காதல் தீயாக எனக்குள் பரவிக் கொண்டிருந்தது. நேரங்களைத் தின்றுக் கொண்டிருந்தது. அழகான நீண்ட நெடிய வாழ்க்கைப் பாதை எங்களுக்காக விரிந்திருந்தது. கரங்கள் கோர்த்து உனக்கு நீ எனக்கு நான் என்ற துணையோடு காலங்களை நகர்த்தி சென்றோம். குழந்தை என்பது கிடைத்தற்கரிய வரம். ஒவ்வொரவரின் வாழ்க்கையின் தேவை. தேடல். வாழ்க்கையில் ஓர் இனிமையான அத்தியாயத்தின் தொடக்கம். ஆனால் அந்த இனிமையான அத்தியாயம் என் வாழ்வில் இடம்பெறாமல் போவதால் என் வாழ்க்கை புத்தகமே வெற்று காகிதமாகி போய்விடுமா என்ன? நிச்சயம் இல்லை. நான் அதை அன்பாலும் காதலாலும் நிறைத்துக் கொள்வேன். ********* இந்த விஷயம் பற்றிப் பின்னாளில் நானும் என் கணவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்திருந்தோம். எந்தவித சிகிச்சையும் இல்லாமல் இன்னும் இரண்டு வருடங்களில் எங்களுக்கு குழந்தை பிறந்தால் அது ஒரு வரம்தான். அப்படி அந்த வரம் தானாக எங்களுக்குக் கிடைக்க பெறவில்லையென்றால் மனித அலட்சியங்களால் சாபமாகி போன சில பிஞ்சுக்களின் வாழ்க்கைகளை நாங்கள் வரமாக மாற்றுவது என்று ஒருமனதோடு முடிவு செய்தோம். என் கணவரின் உயிரணுவை எனக்குள் ஊற்றி விதைத்து என் சதையிலும் ரத்தத்திலும் உருவானால்தானா வாரிசு? எங்களுக்கு உறவான பின் எங்கள் உணர்வுகளோடு சங்கமிக்கும் ஓர் உயிர் எங்கள் வாரிசாக கூடாதா என்ன? இந்த உலகில் அன்பிற்கு பஞ்சமில்லை. ஆனால் அவை ஆதரவற்றுக் கிடக்கின்றன. வளர்மதியிடம் இது குறித்து நான் கருத்துக் கேட்டிருந்தேன். “ரொம்ப ரொம்ப நல்ல முடிவு காயு… ஆனா அதுக்கு நிறைய பார்மாலிட்டீஸ் இருக்கும்… அப்புறம் உன் குடும்பத்தை நீ கன்வின்ஸ் பண்ணனும்… அதெல்லாம் தாண்டி இந்த முடிவை செயல்படுத்திறதுல உனக்கும் உன் கணவருக்கும் நிறையவே மனோதிடம் வேணும்… ஏன்னா இது உன்னை நம்பி வர போற ஒரு குழந்தையோட வாழ்க்கை… நல்லாயோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க” என்றாள். எங்கள் முடிவை நாங்கள் எங்கள் வாழ்க்கையிடம் விட்டுவிட்டோம். <p style="text-align: center;"><span style="color: #ff0000;"><strong>**********சுபம்*********</strong></span></p> <p style="text-align: center;"><strong>பொறுமையைப் பெருங்கோபத்திலிருந்து கற்றுக் கொள்!</strong></p> <p style="text-align: center;"><strong>ஞானத்தை ஒரு ஏமாற்றத்திலிருந்து கற்றுக் கொள்!</strong></p> <p style="text-align: center;"><strong>துயரத்திலிருந்து சமாதானத்தை கற்றுக் கொள்!</strong></p> <p style="text-align: center;"><strong>காதலை ஒரு பிரிவிலிருந்து கற்றுக் கொள்!</strong></p> <p style="text-align: center;"><strong>நன்றியை ஒரு நாய் குட்டியிடமிருந்து கற்றுக் கொள்!</strong></p> <p style="text-align: center;"><strong>நேசத்தை சிறுபுன்னகையிலிருந்து கற்றுக் கொள்!</strong></p> <p style="text-align: center;"><strong>ஊக்கத்தை ஓர் அவமானத்திலிருந்து கற்றுக் கொள்!</strong></p> <p style="text-align: center;"><span style="color: #ff0000;"><strong>வாழ்க்கையை மட்டும் அதனூடாகப் பயணித்து அதிலிருந்தே கற்றுக் கொள்!</strong></span></p> <p style="text-align: center;"><strong>-மார்ஷல்</strong></p></blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா