மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: En Iniya Pynthamizhe!En Iniya Pynthamizhe - 23Post ReplyPost Reply: En Iniya Pynthamizhe - 23

Quote from monisha on April 26, 2022, 12:09 PM

23
தோள்களில் தன் பேக்பேகை மாட்டிக் கொண்டு சாலையோரத்தில் நடக்க முடியாமல் சோர்வாக தமிழ் நடந்து வந்திருக்க, சந்திரன் தான் ஓட்டி வந்த வாகனத்தை அவள் அருகில் சென்று நிறுத்தினான். விழிகள் நான்கும் ஒரு சேர சங்கமித்து கொண்ட போது இன்பமாய் ஒரு உணர்வு அவர்களுக்குள் ஊற்றெடுத்ததில் இருவருமே அந்த சில நொடிகள் ஸ்தம்பித்தனர். “தமிழு” என்ற சந்திரனின் அழைப்பில் அவள் ஒருவாறு இயல்பு நிலைக்கு திரும்பி… “உன்னை யாரு வர சொன்னது… நான் கண்ணனைதானே வர சொன்னேன்” வராத கோபத்தை வலுக்கட்டயமாக வரவைத்துக் கொண்டாள். அவளின் இந்தத் தீடீர் கோபத்தில் திகைத்தவன் பின் சமாளிப்பாக, “அவனுக்குக் கொஞ்சம் வேலை இருந்துச்சு… அதான் நான் வந்தேன்” என்று சொல்ல அவள் முகம் இறுகியது. ‘உனக்காகத்தான் வந்திருக்கேன்னு சொன்னா என்ன குறைஞ்சு போயிடுவானா? அவனுக்காக நான் எம்புட்டு சிரமப்பட்டு அன்ரிசர்வேஷன்ல எல்லாம் அடிச்சுப் பிடிச்சு ஓடி வந்திருக்கேன்… சை! ஒரு வார்த்தை கூட எனக்காக வந்தேன்னு சொல்ல முடியல இல்ல’ அவள் பாட்டுக்கு மனதிற்குள் புலம்பிக் கொண்டே அவனைக் கண்டும் காணாதவளாய் முன்னே நடக்க, “எங்கடி போயிட்டு இருக்க… வந்து வண்டில ஏறு” என்று அவன் அந்த வாகனத்தைத் தள்ளிக் கொண்டே பின்னே நடந்து வந்ததை அவள் ஒரு பொருட்டாகவும் மதிக்கவில்லை. “ஏ தமிழு… நில்லுடி… என்னடி பிரச்சனை உனக்கு… என் கூட சண்டை போடத்தான் அம்புட்டுத் தூரத்துல இருந்து வந்தியாக்கும்?” “ஆமான் டா உன் கூட சண்டை போடத்தான் என் வேலையெல்லாம் வுட்டு போட்டு அங்கன இருந்து அடிச்சுப் பிடிச்சு சீட்டு கூட கிடைக்காம மூணு மணி நேரத்துக்கு மேல நின்னுக்கிட்டு வந்தேன்” அவள் சொல்லி முடிக்கும் போது அவள் விழிகளில் தாரைத் தாரையாக கண்ணீர் வழிந்தோட, அவன் தலையைப் பிடித்துக் கொண்டான். போன தலைவலி மீண்டும் வந்துவிட்டது போல இருந்தது அவனுக்கு. நெற்றியை அழுத்தித் தேய்த்துக் கொண்டே, “தெரியாம சொல்லி போட்டேன்டி… ஒன்ற கோபத்தைச் சண்டையெல்லாம் வூட்டுல வந்து போடு… நடுரோட்டுல இப்படி அழுதுக்கிட்டு நின்னு என்ற மானத்தை வாங்கிக் தொலைக்காத” என்றான். “நான் இம்புட்டு தூரம் சொல்லியும் உன் கூட சண்டை போட வந்திருக்கேங்குற மாதிரியே பேசுற… போடா… சத்தியமா நான் உன் கூட வரமாட்டேன்” என்று சொல்லிவிட்டு அவள் நடக்க எத்தனித்த போது சாலையில் தன் மாமா சங்கரன் பைக்கில் வருவதைப் பார்த்தாள். “மாமா வராங்க… நான் அவங்க கூட போயிக்கிறேன்” என்றபடி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவர் வண்டியை நிறுத்த சொல்லி கையசைத்தாள். அவள் கையை அவசரமாகப் பற்றித் தடுத்தவன், “அறிவிருக்காடி உனக்கு… நான் இங்கன இருக்கும் போது நீ அவங்க வண்டில ஏறி போனா நமக்குள் ஏதாச்சும் பிரச்சனைன்னு நினைச்சு போட மாட்டாங்களா?” என்று சொல்லும் போதே சங்கரன் வண்டியை அங்கே நிறுத்திவிட்டார். “மவளே! நீ அவங்க வண்டில ஏறுன நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்றவன் பல்லைக் கடித்துக் கொண்டு அவள் காதோரம் சொல்ல, “எப்படிம்மா இருக்க? நல்லா இருக்கியா? வூட்டுக்குப் போயிட்டு இருக்கியா?” என்று அவர் தம் விசாரிப்புகளைத் தொடங்க அவளும் நிதானமாக பதில் சொல்லி கொண்டே சந்திரனைப் பார்த்தாள். அவன் முகம் உஷ்ணமாகத் தகிக்க, “சரிங்க மாமா… நீங்க கிளம்புங்க” என்று அவரை அனுப்பிவிட்டாள். அந்த நொடிதான் சந்திரனுக்கு மூச்சே வந்தது. அவளோ, “நான் மாமா கூட போகல சந்தோஷமா? ஆனா ஒன்ற கூட சத்தியமா வர மாட்டேன்… நான் நடந்தே போயிக்கிறேன்” என்று முன்னே நடக்க, அவள் கரத்தைப் பிடித்து தடுத்தவன், “உனக்கு என் மேலதானே கோபம்… என்ற கூட வரமாட்டே அம்புட்டுதானே” என்று கேட்டு வண்டிச் சாவியை அவளிடம் நீட்டி, “நீ கண்ணனோட ஸ்கூட்டியை ஓட்டுவதானே… இந்தா சாவி…. நீயே எடுத்துட்டு போ” என்றான். ‘என் கூட வாடின்னு உரிமையா கூட்டிட்டுப் போகாம… சாவியைக் கொடுக்குறான்… பிசாசு’ என்று மனதில் அவனை வைதபடி சாவியை வாங்கிக் கொண்டாள். ‘ஹுக்கும்… கூட வரேன்னு சொல்லாம சாவியை மட்டும் வாங்கிக்குறா பாரு… அப்படியென்ன கோபம்… இவளுக்காகப் பறந்து கட்டிக்கிட்டு ஓடி வந்தேன் பாரு… என்னை’ என்று அவனும் அவளைப் போல உள்ளுர பொறுமினான். அவள் வண்டியில் ஏறி அமர்ந்து தன் பேகை முன்னே வைத்துவிட்டு அவனைத் திரும்பி பார்க்க, ‘போக வேண்டியதுதானே… இப்ப என்னத்துக்கு என்னைய திரும்பி பார்க்குற’ என்றவன் முனகங்வும் அவள் முகத்தில் புன்னகை அரும்பியது. “என்ன அப்படியே நிற்குற… வந்து உட்காரு” என்றாள் வண்டியை ஸ்டார்ட் செய்தபடி! “எது… நான் ஒன்ற பின்னாடி உட்காரவா?” “ஏன்? ஏன்? என் பின்னாடி உட்கார்ந்தா என்ன?” என்றவள் சீறிய அதேநேரம், “இப்ப நீ வந்து ஏறல… நான் இறங்கி நடந்து போயிட்டே இருப்பேன்” என்றாள். “படுத்துறாளே” என்று தலையிலடித்துக் கொண்டபடி பின்னே வந்து அவன் அமர, “ம்ம்ம்… வண்டியை எடுக்கவா? ஒழுங்கா உட்கார்ந்திட்டியா?” என்றவள் உறுதிபடுத்த, “உட்கார்ந்துட்டேன்… எடுடி” என்றான் கடுப்பாக! “ம்ம்கும்… தோளைப் பிடிச்சிக்கிட்டா குறைஞ்சு போயிடுவாறாக்கும்” என்று புலம்பியபடி அவள் வண்டியை இயக்க, அவனோ விறைப்பாக அவளை விட்டு தள்ளி பின்னே அமர்ந்து கொண்டு வந்தான். ‘முறைப்பா வர்றியா.. இரு உன்னைய எப்படி வழிக்குக் கொண்டு வர்றேன் பாரு’ என்றவள் சற்று தூரத்தில் கைகள் தடதடக்க தடுமாறவும், “என்னடி பண்றவ… உனக்கு ஓட்ட தெரியுமா தெரியாதா?” என்றவன் கடுப்பாகக் கேட்டான். “தெரியுமே… ஓட்ட பழகி இருக்கேன்” “எது பழகி இருக்கியா? அப்போ ஒழுங்கா ஓட்ட தெரியாதா?” அவன் அதிர்ச்சியாக, அவள் நமட்டு சிரிப்போடு ஸ்டியரிங்கை ஆட்டிக் கொண்டே வர, “அடியேய்… வண்டியை ஏதாச்சும் கழனில இறக்கி விட்டுட போறடி… பார்த்துடி… பார்த்து போ” என்றவன் பயந்து பதற, அவள் இன்னும் வேகமாக ஆட்ட, அதற்கு மேல் அவளின் வண்டி ஓட்டும் திறனை சோதனை செய்யாமல் தன் கரங்களை முன்னே நீட்டி ஸ்டியரிங்கை அழுத்திப் பிடித்து வண்டியை நிலைநிறுத்திக் கொண்டான். “ம்ம்கும்… இந்த லட்சணத்துல ஓட்டுறதுக்கு ஜம்பமா சாவியை வாங்குனியாக்கும்” என்றவன் அவளைத் திட்டத் தொடங்க, “நான் நல்லாத்தான் ஓட்டுவேன்” என்றவள் தலையைத் திருப்பி நொடித்துக் கொண்டாள். “ஓட்டுறேங்கிற பேர்ல நீ ஆட்டினத்தைதான் நான் பார்த்தேனே… வுட்டுருந்தா மொத்தமா வண்டியைக் கொண்டு போய் கழனில இறக்கி இருப்ப” என்றவன் மூச்சு விடாமல் திட்டிக் கொண்டே வர, அவள் அதையெல்லாம் காதில் கூட வாங்கவில்லை. அவளை நெருங்கி உரசிய அவன் தோள்களும் காதோரம் தொட்டுக் கொண்டிருந்த கன்னங்களிலும் தன் விரல்கள் மீது பதிந்திருந்த அவன் விரல்களிலும்தான் அவள் கவனம் நிலைத்தன. “ம்ம்க்கும் தோளைப் பிடிச்சிட்டு வர மாட்டேன்னு சீனைப் போட்டுட்டு… இப்போ என்னைய கட்டிபிடிச்சிக்கிட்டு வரியே… நியாயமா எம்.சி.ஆரு?” என்றவள் கேலி தொனியில் வினவ, “அடிப்பாவி… வேணும்டேதான் பண்ணியா?” என்றவன் அதிர்ந்தான். “ம்ம்ம்ம்” என்றவள் அவன் புறம் திரும்பிக் கேலியாக கண்ணடிக்கவும் இப்போது அவன் கைகள் நடுங்கி ஸ்டியிரிங் ஆட, “பார்த்து ஓட்டுடா” என்றவள் மேலும் தாபமாக அடுத்து ஒரு பார்வையை வீச, “வண்டி ஓட்டும் போது அப்படியெல்லாம் பார்த்து வைக்காதேடி… உள்ளே என்னவோ பண்ணுது இல்ல” என்றவனும் அப்போது அவள் பார்வையில் கிறங்கிவிட்டிருந்தான். “அப்போ வண்டியை நிறுத்து… நான் பின்னே உட்கார்ந்துக்கிறேன்” “பக்கத்துல வந்துட்டோம்… இன்னும் கொஞ்சம் தூரம்தானே” என்றவனுக்கு அந்த நெருக்கத்தை விட மனமில்லை. இன்னும் அழுத்தமாக அவள் தேகத்தோடு உரசியபடி நெருங்கி அமர்ந்தவன், அந்த நொடி எல்லாவற்றையும் மறந்திருந்தான். “எனக்காகதான் ஊருக்குப் புறபட்டு வந்தியா” என்று மெதுவாக அவன் கேட்க, அப்போது அவள் காது மடலில் குறுகுறுத்த மீசையில் உடலைச் சிலிர்த்து கொண்டு, “பின்ன வேற யாருக்காக வந்தேன்னு நினைச்ச?” என்றாள். “நானும் நீ வந்த விஷயம் கேட்டு எம்புட்டு சந்தோஷப்பட்டேன் தெரியுமா? இன்னும் கேட்டா உன்னைய பார்க்கத்தான் கண்ணன் கிட்ட சாவியைப் பிடுங்கிட்டு ஓடி வந்தேன்” என்றவன் சொல்ல, அவன் சொன்னதைக் கேட்டு அவள் கிறக்கத்தோடு அவன் புறம் திரும்ப அப்போது அவன் ப்ரேக் போட்டதில் இன்னும் அவன் கரங்கள் அழுத்தமாக அவள் விரல்களில் பதிந்தது. “அதுக்குள்ள வந்துட்டோமா? இன்னும் கொஞ்ச தூரம் இப்படியே போக மாட்டோமான்னு” “எனக்கும்தான்” “அண்ணே வந்துட்டீங்களா?” என்று கண்ணன் குரலில் இருவரும் அவர்களின் காதல் மயக்கத்திலிருந்து மீண்டு வந்தனர். சட்டென்று தன் கரங்களை அவள் கரங்களில் மீதிருந்து அவன் பிரித்து எடுக்க, அவள் இறங்கவே விருப்பமில்லாமல் அவனைத் திரும்பி பார்த்து கொண்டே இறங்கினாள். “வாங்க க்கா… எப்படி இருக்கீங்க?” என்ற கண்ணனின் குரலில் அவள் புன்னகைத்து, “நல்லா இருக்கேன் டா கண்ணா… நீ எப்படி இருக்க?” என்று விசாரித்து கொண்டே அவள் பார்வை அப்போது அவர்கள் நிலத்தின் மீது விழுந்தது. பயிர்கள் மொத்தமும் கருகி நாசமாகி கிடந்ததில் அதிர்ச்சியுண்டவள், “என்னடா இது? அம்மா சொல்லும் போது கூட நான் இப்படினு நினைக்கலையே” என்றவள் குரல் நடுங்க சந்திரன் அவள் பேகை கையில் எடுத்து கொண்டு, “உள்ளர வா… எல்லாத்தையும் புறவு சொல்றேன்” என்று அவள் தோளைப் பற்றி உள்ளே இழுத்து வர அவள் பார்வையைத் திருப்பாமல் பயிர்களைப் பார்த்து கொண்டே வந்தாள். நாசமாகி போனது பயிர் அல்ல… சந்திரனின் உழைப்பு! அப்படிதான் அவள் மனமும் விழிகளும் அந்தக் காட்சியை உள்வாங்கி கொண்டன. “நேத்துல இருந்து அண்ணன் சாப்பிடவே இல்லிங்க க்கா… ராத்திரி எல்லாம் அண்ணனுக்கு ஒரே தலைவலியாம்” என்று கண்ணன் சொல்ல அவள் வேதனையோடு தன் கணவனைப் பார்த்தாள். “டே கண்ணா… சும்மா இருடா” என்று சந்திரன் கண்ணனை அடக்கினான். “சரி அண்ணே… நான் போய் இரண்டு பேருக்கும் சாப்பாடு வாங்கிப் போட்டு வர்றேன்” “இல்ல கண்ணா… வேண்டாம்… நான் பார்த்துக்கிறேன்” “இல்லைங்க அண்ணே நான்” “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் கண்ணா… நான் பார்த்துக்கிறேன்” என்று அவன் அழுத்திச் சொல்ல, “அப்படின்னா நான் கிளம்புறேன் அண்ணே… வரேங்க க்கா” என்றவன் சென்றுவிட்டான். இருவரும் வீட்டிற்குள் நுழையவும் அவள் மெல்ல அவனை நெருங்கி, “ஏன் சந்திரா… தலை வலிச்சுதா… மாத்திரை ஏதாச்சும் போட்டியா? ஆமா நீ எப்போ சாப்பிட்ட… நேத்தெல்லாம் சாப்பிடவே இல்லையா?” என்று அவன் முகத்தை தடவியபடி அவள் அக்கறையாக வினவ அவன் விழியோரம் நீர் கசிய, “என் அம்மத்தாவுக்கு புறவு யாருமே இப்படியெல்லாம் என்கிட்ட அக்கறையா கேட்டதே இல்லடி” என்றான். “நான் உன் பக்கத்துல இல்லன்னு நீ ரொம்ப வருத்தப்பட்டியா?” அவள் குற்றவுணர்வோடு அவன் முகத்தைப் பார்க்க, “அதான் இப்போ வந்துட்டியேடி… இந்த நிமிஷம் நீ என் பக்கத்துல இருக்குறதே போதும்” என்றபடி அவன் அவள் கன்னங்களைப் பற்றி இழுத்தான். அவன் வேகத்தில் அவள் பதறியபடி அவன் முகம் பார்ப்பதற்குள் அவளை அணைத்துக் கொண்டான். அழுத்தமாக இருந்த அவன் அணைப்பிற்குள் அவன் பிரிவின் வேதனையும் காதலையும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அவளுமே அவன் கைவளைக்குள் அடங்கியபடி, “நீ இப்படி என்னை அணைச்சுக்கிட்டு… மாச கணக்கா ஆகியிருக்கும்” என்றவன் தழுவலில் கரைந்தபடி அவள் கிறக்கமாகக் கூற, அவன் அந்த நொடியே என்ன நினைத்தானோ? அவளை விட்டு விலகி வந்தான். “என்னாச்சு சந்திரா?” என்றவள் அவன் முகத்தை ஏக்கமாகப் பார்க்க, “நீ களைப்பா இருப்ப… போய் குளிச்சுப் போட்டு வா… நான் சமைச்சு வைக்கிறேன்” என்றான். “உன்னைய பார்த்தாலும் ரொம்ப களைப்பா இருக்க மாதிரி இருக்கு… நீயே சாப்பிடாம இருக்க” என்றவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “அதெல்லாம் எனக்கு ஒன்னும் இல்ல… நான் நல்லா இருக்கேன்… நீ போய் குளிச்சிட்டு வா… நான் சமைச்சு வைக்கிறேன்” என்றவன் அவள் கையில் துண்டை எடுத்து தந்து வலுக்கட்டயமாக அவளைக் குளியலறைக்குள் தள்ளிவிட்டு வந்தான். பின் அவன் உடனடியாக தன் வீட்டின் பின்னே இருந்த செடியில் காய்த்து தொங்கிக் கொண்டிருந்த கத்திரிக்காய், தக்காளி பறித்து, அங்கிருந்த வைக்கோலில் தன் கோழிகள் இட்டிருந்த முட்டையை வைத்து சமையலைத் தொடங்கினான். அவள் குளித்து முடித்து வெளியே வந்து காளையனிடம், “எப்படிடா இருக்க? நான் இல்லாம நீயும் உன் அண்ணனும் சந்தோஷமா இருப்பீங்களே… ஆமா உனக்கு என் ஞாபகமெல்லாம் இருந்துச்சா? இல்ல ஒரு மாசத்துல மறந்து போட்டியா?” என்று அவனை ஏக்கமாகக் கேட்டு அவன் நெற்றியில் முட்ட, அவன் தன் பாசத்தைக் காட்டும் விதமாக பலமாக தலையைச் சிலுப்பினான். அதன் பின் சமையல் வாசனையை தன் நாசிக்குள் இழுத்து முகர்ந்தவள், “வாசனை அள்ளுது… ஒன்ற அண்ணன் கருவாட்டு குழம்பு வைச்சு இருக்கான் போல” என்று சொல்லிவிட்டு அவள் நேராக சமைக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள். “கருவாட்டு குழம்பா டா” என்றவள் நாக்கில் சப்புக் கொட்ட, “ருசி பார்க்குறியா?” என்றவன் அவள் கரத்தை நீட்டிப் பிடித்து கரண்டியில் குழம்பைக் கொஞ்சமாய் ஊற்ற அவள் அதனை ருசிப் பார்த்துவிட்டு, “ம்ம்ம்… சூப்பர்டா எம்.சி.ஆரு” என்று மெய்மறந்து தலையைசைத்துவிட்டு, “உனக்கு தெரியுமா சந்திரா… இத்தனை மாசமா நாக்கு செத்துப் போய் கிடந்தேன்” என்றாள். “ஏன் டி? அங்கன நம்மூர் சாப்பாடு எல்லாமே கிடைக்காதா?” “கிடைக்கும்தான்… ஆனா நம்மூர் வாசத்தோடவும் ருசியோடவும் எல்லாம் உஹும்… அதுவும் கருவாட்டு குழம்பெல்லாம் கிடைக்கவே கிடைக்காது” என்று பேசிக் கொண்டே பின்னிருந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, “தேங்க்ஸ் டா” என்றாள். அவன் சற்றே தடுமாறி, “நான் இன்னும் குளிக்க கூட இல்லடி” என்று அவளை விலக்கி விட முயல, “பரவாயில்ல” என்று சொல்லியபடி இன்னும் நெருக்கமாக அவனோட ஒன்றிக் கொள்ள, “தமிழு” என்று அவள் கையைப் பிரித்தெடுத்து விலகி வந்தான். “ஏன் டா… என்னைய வுட்டு இப்படி விலகி விலகிப் போற? இன்னும் நான் பேசுனதை நீ மறக்கலையா?” என்று அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்து கொள்ள, அவன் மௌனமாக நின்றான். “ஊர் உலகத்துல எல்லாம் புருஷன் பொண்டாட்டிக்குள்ள பிரச்சனை வர்றதே இல்லையா? பேசக் கூடாததெல்லாம் பேசிப் போட்டு புறவு அவங்கெல்லாம் சமாதானம் ஆகிக்குறது இல்ல… நீ மட்டும் ஏன் இப்படி ஓவரா பண்ற?” என்று கோபமாகக் கேட்க, “என்னால அப்படி வுட முடியலடி… என்னைய அந்த வார்த்தையெல்லாம் உறுத்திக்கிட்டே இருக்கு… ஊருக்குள்ள கூட” என்றவன் அதற்கு மேல் பேச இயலாமல், “நான் சொன்னாலும் என் வலி உனக்கு புரியாது” என்று சொல்லியபடி அவள் கையை தன் சட்டையிலிருந்து பிரித்துவிட்டான். “ஏன் சந்திரா இப்படி பண்ற? நீ செய்றது எனக்கு எவ்வளவு வலிக்குது தெரியுமா? எங்க நமக்குள்ள இருக்க இந்த பிரிவு நிரந்தரமாகிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு” என்றவள் அழுதபடி முகத்தை மூடிக் கொள்ள, “தமிழு” என்று அவள் தோளை ஆதரவாகத் தொட அவன் கையைத் தட்டிவிட்டு விலகி வந்தவள், “நான் அன்னைக்கு பேசனது தப்புதான்… நான் வேணா அதுக்கு தண்டனையா?” என்று ஆவேசமாக அருகிலிருந்து காய் வெட்டும் கத்தியை எடுத்து கண் இமைப்பதற்குள் உள்ளங்கையில் கிழித்துக் கொண்டாள். “ஏ பைத்தியக்காரி… என்ன காரியம்டி பண்ற?” என்றவன் அவள் கையிலிருந்த கத்தியைப் பறித்து வீசிய அதேநேரம் அவள் கரத்தில் ரத்தம் சொட்ட தொடங்கியது. “ஐயோ! இரத்தமா கொட்டுதே… ஏன் டி ஏன் டி… இப்படி செஞ்ச… அறிவுகெட்டவளே!” என்று அவன் படபடத்து அவள் கை காயத்தைப் பார்க்க அது இரத்த சிவப்பாக மாறியிருந்தது. “ஆமா நான் அறிவு கெட்டவதான்… எப்போ உன்னைய காதலிச்சு தொலைச்சேனோ அப்பவே எனக்கு அறிவு இல்லாம போச்சு… ஒவ்வொரு விசயத்தையும் யோசிச்சு செய்ற நான்… ஏன் இப்படி லூசு மாதிரி நடந்துக்கிறேன்னு எனக்கே தெரியல” என்றவள் பேசிக் கொண்டிருக்கும் போதே விரைவாக ஒரு வெள்ளை துணியை தண்ணீரில் நனைத்து அவள் கையில் கட்டிவிட்டான். ஆனால் இரத்தம் நிற்காமல் சொட்ட, “ஏன்டி இப்படி பண்ண… வா ஹாஸ்பிட்டல் போலாம்…” என்றவன் சொல்லும் போதுதான் கவனித்தாள். காயம்பட்ட அவள் வடித்த கண்ணீரை விட அவன் விழிகளில் அதிகமாக கண்ணீர் வழிந்திருந்தது. அவளை விடவும் அதிகமாக அவன் தவித்துப் போயிருந்தான். “ஏ வாடி ஹாஸ்பிட்டல் போலாம்… இரத்தம் நிற்காது போல“ என்றவன் அழைக்க, அவள் மறுப்பாகத் தலையசைத்து, “உஹும்… அதெல்லாம் செத்த நேரத்துல அதுவா நின்னு போடும்” என்று அவள் எழுந்து திண்ணையில் வந்து அமர்ந்து தன் கரத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டாள். சில நொடிகளில் இரத்தம் நின்றுவிட, அவள் விழிகளில் நீர் வழிந்து கொண்டேயிருந்தது. வலியால் வழிந்த கண்ணீர் அல்ல அது. தான் ஏன் இந்தளவு முட்டாள்தனமாக நடந்து கொள்கிறோம் என்ற வேதனைதான் அவளுக்கு பெரிதாக இருந்தது. அவன் ஒதுக்கம் அவள் மனதை அந்தளவு பாதிக்கிறது என்பதை அவள் அப்போதே உணர்ந்திருந்தாள். ஆழமாக அவன் காதலை மட்டும் கண்ட அந்த விழிகள் அவளைத் தவிர்ப்பதை அவள் கொஞ்சமும் விரும்பவில்லை. அவள் மௌனமாக தலை சாய்த்து அமர்ந்து கொள்ள சந்திரன் உணவைப் பிசைந்து எடுத்து வந்து, “சாப்பிடு” என்று அவளுக்கு ஊட்ட, அவனைக் குழப்பமாகப் பார்த்தாள். “ஒழுங்கா சாப்பிடு” என்றவன் அவளுக்கு ஊட்டிவிட என்னவோ அத்தனை நேரம் அவளுக்குள் தகித்துக் கொண்டிருந்த கோபமும் வருத்தமும் தொலைந்து போனது. “நல்லா இருக்கா?” என்று அவன் அந்தப் பிரச்சனையை மறந்தவன் போல அவளிடம் பேசவும், அவள் புன்னகையாகத் தலையை அசைத்து அவளுக்கு ஊட்ட வந்த அவன் கரத்தைத் திருப்பி, “நீயும் சாப்பிடு” என்றாள். அப்போதே அவள் எதிரே இருந்த கருகிப் போன பயிரை எல்லாம் பார்த்து அந்த விஷயம் நினைவு வந்தவளாக, “ஆமா என்ன பிரச்சனை? ஏன் இப்படியாச்சு? யார் இப்படி செஞ்சா?” என்று அவள் விசாரிக்கத் தொடங்கினாள். அதன் பிறகு அந்தப் பிரச்சனையை இருவரும் மறந்து வேறு மனநிலைக்கு சென்றிருந்தனர். அவன் நடந்தவற்றை அவளிடம் நிதானமாகச் சொல்ல ஆரம்பித்தான். “நம் ஊருக்கு வர கால்வாய் தண்ணில சாயத் தொழிற்சாலைக் கழிவைக் கலக்க பார்த்தாங்க… ஏற்கனவே அந்தத் தொழிற்சாலை நம்ம ஊர் பக்கத்துல வர கூடாதுன்னு நம் ஊர்காராங்க போராடியும் அதிகாரிங்க அந்த கம்பெனியோட சேர்த்து இன்னும் இரண்டு கம்பெனிக்கு பெர்மிஷன் கொடுத்திருக்காங்க அந்த கம்பெனியோட கழிவு எல்லாம் நம்ம விவசாயம் பண்ற கால்வாயிலயும் நதிலையும் கலந்து போட்டா புறவு… விவசாயம் மட்டும் நாசமா போகாது… நம்ம ஊரே மொத்தமா நாசமா போயிடும்… ஏற்கனவே அந்த கம்பெனி இருந்து கழிவு கலந்த தண்ணியைக் குடிச்சதால ஊர் சுத்திலும் நிறைய பேருக்கு கேன்சர் வந்திருக்கு தெரியுமா?” என்றவன் சொல்லவும் அவள் அதிர்நது பார்க்க, “அதுவும் இப்ப அந்த கழிவை எல்லாம் நேரடியா நம்ம கால்வாயில கலந்தா… அம்புட்டுதான்” என்றான். “என்ன சந்திரா சொல்ற?” என்றவள் அதிர்ச்சியாக, “நைட்டோட நைட்டா கழிவை கலக்க வந்த அந்த லாரிக்காரனை அடிச்சு உதைச்சு வண்டியைத் திருப்பி அனுப்பி போட்டேன்… காலையில ஊர் தலைவர்கிட்டயும் இதை பத்தி சொல்லி போட்டேன் ஆனா அடுத்த இரண்டு நாள்ல இப்படி என்ற நிலத்தை” என்றவன் தன் பயிரைக் காண்பிக்க, தமிழ் யோசனையாக அவற்றைப் பார்த்துவிட்டு, “எப்பவும் நீ நம்ம வூட்டு திண்ணையிலதானே படுத்து கிடப்ப… உனக்கு தெரியாம எப்படி?” என்றவள் கேள்வி எழுப்ப, “அது நான்” அவன் பதில் சொல்ல முடியாமல் திக்குத் திணறினான். பின்னர், “அன்னைக்கு நான் வூட்டுக்குள்ளார படுத்துகிட்டேன்… நல்லா வேற தூங்கிப் போட்டேன்… அதான் எனக்கு சத்தம்… ஒன்னும் கேட்கல” என்று அவன் சொன்னதை அவளால் நம்ப முடியவில்லை. “தூங்கிப் போட்டியா? இல்லையே… அதுவும் உன் காளையன் புது ஆளுங்கள கண்டாலே வுட மாட்டேனே” “இல்ல அவனைக் கட்டிப் போட்டு வைச்சு இருந்தேன்” “வாயைக் கட்டல இல்ல… காளையன் கத்தியிருப்பானே?” என்றவள் சந்தேகமாக கேட்க, அவன் முகம் இருளடர்ந்து போனது. “தமிழ் வுடுறியா?… அது முடிஞ்சு போச்சு… முடிஞ்ச விசயத்தைப் பத்தி பேச வேண்டாம்… நீ சாப்பிடு” என்றவன் அவள் வாயில் உணவை அடைத்து அவளை பேச முடியாமல் செய்வதில் குறியாக இருந்தான். இருவரும் உண்டு முடிக்க அதன் பிறகு அவள் கைகளுக்கு மஞ்சளை அரைத்து தடவிவிட்டான். “வலிக்குது டா எரியுது டா” என்றவள் கத்த, “வலி தாங்க முடியல இல்ல… புறவு எதுக்கு இப்படி செய்யோணோம்” என்றவளைத் திட்டிக் கொண்டே மீண்டும் அவள் கரத்தில் கட்டுக் கட்டியவன், “உங்க ஐயனும் அம்மாவும் பார்த்தா என்ன நினைப்பாங்க… இதான் உன் பொண்ணைப் பார்துக்குற விதமான்னு கேட்க மாட்டாங்க” என்று அவன் சொல்ல, “அந்தப் பயம் இருக்கு இல்ல… இனிமே அப்படி நடந்துக்காதே சொல்லி போட்டேன்… நான் நாளைக்கு ஊருக்குப் போவோணும்… இப்படி நீ நடந்துகிட்டா நான் எப்படி அங்கன நிம்மதியா வேலை செய்ய முடியும்” என்றவள் சொன்னதில் அவன் முகம் சுருங்கிப் போனது. “நாளைக்கே போவோணுமா?” என்றவன் ஏக்கமாகக் கேட்க, “பின்ன போக வேண்டாமா… நான் என்ன லீவுல வந்தேனா? நானே இந்தப் பிரிச்சனையால அவசர கெதில அடிச்சுப் பிடிச்சு ஓடி வந்தேன் தெரியுமா?” என்றாள். அவனுக்கு அப்போதிருந்த கொஞ்சம் நஞ்ச சந்தோஷமும் வடிந்து போக அந்த உணர்வை தன் முகத்தில் காட்டாமல் மறைத்து கொண்டவன், “நீ நாளைக்கே போகப் போறேன்னா… போய் இன்னைக்கே ஒன்ற ஐயனையும் அம்மாவையும் போய் பார்த்துட்டு வந்திரு” என்று சொல்ல, “ஆமான் டா நானே உன்கிட்ட சொல்லோணும்னு நினைச்சேன்” என்றவளும் ஆர்வமாகக் கிளம்ப தயாரானாள். “சரி வா… நானும் உன் கூட துணைக்கு வரேன்” என்றவனும் அவளுடன் நடக்க, அவள் அந்தக் கருகிப் போன பயிர்களைத் தாண்டி நடந்து கருப்பன் கோவில் வழியாகச் செல்லும் போது, “நான் உன்கிட்ட ஒரு விசயம் சொன்னா நீ கோவிச்சுக்க கூடாது” என்றாள். “என்ன? நீயும் எதுக்கு உனக்கு இந்தத் தேவையில்லாத வேலைன்னு கேட்க போறியா?” என்றவன் சொல்லும் போதே அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. “அது இல்ல” என்றவள் அவனிடம் திரும்பி, “அந்த பேக்டரி எல்லாம் நம்ம தண்ணியை நாசமாக்குதுன்னு சொல்றீங்களே… ஆனா நம்ம மட்டும் என்ன பண்றோம்” என்றாள். “என்னடி சொல்ற? விளங்குற மாதிரி சொல்லு… ஒன்னும் புரியல” “இல்ல… நம்ம ரசாயன உரத்தையும் பூச்சிக் கொல்லியையும் கொட்டிக் கொட்டி நம்ம நிலத்தை நாமளே நாசமாக்குறோம்தானே…” என்றவள் கேட்டாள். அவள் சொல்வதை மறுக்கவும் முடியாமல் அதேநேரம் ஏற்கவும் முடியாமல் அவன் மௌனமாக நடந்து வர, “நம்ம போடுற இந்தப் பூச்சிகொல்லினாலயும் ரசயான உரத்துனாலயும் நம்ம மண்ணுல வாழுற கோடானு கோடி நுண்ணியுயிரிகளைக் கொன்னுட்டு இருக்கோம்… இதனால நம்ம மண்ணு மலடாகுறது மட்டுமில்லாம நம்ம சுற்றுபுறமும் நாசமாகுது… நீ சொன்ன தொழிற்சாலைகள் மட்டும் இன்னைக்கு கேன்சர் நோய் அதிகரிக்க காரணமில்ல… இந்தப் பூச்சிகொல்லி அடிச்ச உணவுப் பொருட்களை சாப்பிடுறதுனாலயும்தான்… ஏன் நம்ம சுவாசிக்குற காத்தில கூட இந்தப் பூச்சிகொல்லி மருந்து பரவி நிறைய பிரச்சனையை உருவாக்குது நீ கேள்விபட்டிருக்கியா? கேரளாவை சேர்ந்த பல்லாயிரம் ஏக்கர் முந்திரி காட்டுல ஏற்பட்ட பூச்சித் தாக்குதலைக் கட்டுபடுத்த ஹெலிகாப்டர் மூலமா என்டோசல்பான் பூச்சிகொல்லி மருந்து அடிச்சு இருக்காங்க அந்த மருந்து காத்துல பரவி பக்கத்துல இருக்க கிராமத்துல பரவி இருக்கு… அதை சுவாசிச்சு பல பேர் இறந்து போயிருக்காங்க… நிறைய பேர் தோல் நோய் புற்று நோயால பாதிக்கப்பட்டு இருக்காவுங்க இந்தப் பாதிப்பு இதோட முடிஞ்சு போகிற விஷயம் இல்ல… பல தலைமுறையா இந்தப் பாதிப்பு தொடருமாம்… ஆனா நம்ம இன்னும் என்டோசல்பான் மாதிரியான பூச்சிக்கொல்லி மருந்தைதான் நம்ம பயிருக்கு அடிச்சிக்கிட்டு இருக்கோம். இன்னும் நிறைய நாடுகளில் தடைசெய்யபட்ட பூச்சிமருந்தை நம்ம நாட்டுல பயன்படுத்திட்டு இருக்காவுங்க… இங்க நிறைய விவசாயிங்க கடன் தொல்லையால பூச்சி மருந்தை சாப்பிட்டு சாகுறாங்கன்னா நிறைய பேர் அந்த மருந்தை அடிக்கும் போது அதை சுவாசிக்குறதாலயும் செத்து போறாவுங்க… மகாராஷ்டிரா மாநிலத்தில இப்படி சுவாசிச்சு அம்பது மேற்பட்ட விவசாயிங்க இறந்து போயிருக்காங்க தெரியுமா?” என்றவள் சொல்வதைக் கேட்டு ஆச்சரியமாக, “இம்புட்டு விசயம் உனக்கு எப்படி தெரியும்” என்றான். “நெட்ல படிச்சேன்… நான் படிச்சது கொஞ்சம்தான்… ஆனா இதோட பாதிப்பு பெருசு சந்திரா” “பூச்சு மருந்து எல்லாம் அடிச்சு நாம செய்ற விவசாயத்தால யாருக்கும் இங்க லாபமும் இல்ல… நல்லதும் இல்ல… நாம் இந்த மாதிரி விவசாயம் செஞ்சு போட்டு இருந்தா விவசாயம்குற ஒன்னு இனிமே இல்லாம அழிஞ்சு போயிடும்… இப்பவே அழிவோட விளம்பிலதான் நாம நிற்குறோம். உனக்கு அன்னைக்கு எங்க ஐயா ஏன் பணம் கொடுத்தாருன்னு தெரியுமா?” என்றவள் தொடர்ந்து, “நீ விவசாயம் பண்ண வேண்டாம்… வேற எதாச்சும் வியாவாரம் பண்ணி பிழைச்சுக்கதான் அந்தப் பணத்தைக் கொடுத்தாரு அந்தளவுக்கு விவசாயத்து மேல எல்லோருக்கும் நம்பிக்கைப் போயிட்டு இருக்கு… இதுக்கெல்லாம் முக்கிய காரணம் நம்ம விவசாய முறைதான்… நிறைய உற்பத்தி வேணும்னு இரசாயன உரத்தைக் கொட்டுறதுனாலயும் பாரம்பரிய நெல் ரகத்தை அழிச்சிட்டு ஒட்டு ரக நெல் ரகத்தைப் பயன்படுத்துறதாலையும்தான்” “விசயம் புரியாம பேசாதே தமிழு” என்று பொங்கியவன், “பாரம்பரிய நெல் ரகத்தை பயன்படுத்துனா அந்தளவுக்கு விளைச்சல் வாரது” என்றான். “அப்போ உங்களுக்கும் அந்த பேக்டரிகாரங்க மாதிரி லாபம்தான் முக்கியம்… மக்களோட ஆரோக்கியம் முக்கியமில்ல… இந்த முறை விவசாயத்தால நம்ம மண்ணு மலடாகுறதைப் பத்தி கவலை இல்ல” என்றவளும் சீற்றமாகக் கேட்டாள். “அதான் நீயே சொல்றியே… மண்ணை மலடாக்கிப் போட்டோம்ன்னு… அப்புறம் எப்படி இனிமே இயற்கை விவசாயம் சாத்தியமாகும்னு நீ நினைக்குற?” “முயற்சி செஞ்சா முடியாதுன்னு எதுவும் இல்ல… நம்ம இயற்கை விவசாயம் செஞ்சு பார்ப்போமே” “நீ பேசற மாதிரி அது அம்புட்டு சுலபம் இல்லடி… இரண்டு மூணு வருஷமாச்சும் மண்ணைத் திருப்பித் திருப்பி உழுது போடணும்… மண்ணைத் திரும்பி வளமாக்க மூணு வருஷம் வரைக்கும் முழுசா நட்டத்தைப் பார்க்கணும்… அப்படி நட்டம் பார்த்தா மீண்டே வர முடியாம மொத்தமா கடன்ல மூழ்கிட வேண்டியதுதான்” என்றவன் சொல்ல, “மொத்தமா முதலைக்கே மோசமாகி மண்ணை மலடாகுறதை விட மூணு வருசம்தானே… சமாளிப்போம் சந்திரா? நான்தான் சம்பாதிக்கறேன் இல்ல… என் செலவுக்கு எடுத்தது போக இந்த ஆறு மாச சம்பளமும் பேங்க்ல அப்படியேதான் இருக்கு… அதை எடுத்துப்போமே” அவளை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்து, “ஓ… இப்ப புரியுதுடி… நீ எதுக்கு அடி போடுறன்னு” என்றவன் மேலும், “ஏற்கனவே ஊர்காரவுங்களும் உங்க ஐயனும் என்னைக் கேவலப்படுத்துறது போதாதா?” என்றான் கடுப்பாக! “கேவலபடுத்துறாங்களா?” “ஹும்… பொண்டாட்டி சம்பாத்தியத்துல புருஷன் உட்கார்ந்து சாப்பிட்டா கேவலமா பேச மட்டாங்களா? அதுவும் நான் ஒன்ற பணத்தை எதிர்பார்க்காத போதே என்னைய வைச்சு உன்னை அசிங்கப்படுத்தி அவமானப்படுதுறாங்க… இப்ப நீ சொல்ற மாதிரி மொத்தமா நான் ஒன்ற சம்பாத்தியத்தை நம்பி இருந்துட்டா அம்புட்டுதான்” என்றவன் முகத்தில் கோபத்தை விட அதிகமாக வெறுப்பு இருந்தது. “பொண்டாட்டி சம்பாத்தியம்னா கேவலமா சந்திரா? ஏன் இப்படியெல்லாம் நீ யோசிக்குற?” “இன்னைக்கு நல்லாத்தான்டி பேசுவ… ஆனா நாளைக்கே ஊர்க்காரவுங்க பேசறாங்கன்னு என்னை நீயே அசிங்கப்படுத்திப் பேச மாட்டேன்னு என்ன நிச்சயம்” என்றவன் தன் வார்த்தைகளால் அவளைக் குத்திக் கிழிக்க, மீண்டும் அவர்கள் பிரச்சனைச் சுழன்று ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றது. “சரி… ஒன்ற வூடு வந்துடுச்சு… நீ போ” என்றவன் சொல்லி திரும்பி நடக்க, “அப்போ நீ என் கூட வரலயா?” என்றாள். “நான் வந்தா உங்க வூட்டுல எனக்கும் மரியாதை கிடைக்காது… உனக்கும் மரியாதை கிடைக்காது… நீ மட்டும் போ” என்று சொல்லிவிட்டு அவன் விறுவிறுவென திரும்பிச் சென்றுவிட அவளுக்கு ரொம்பவும் ஏமாற்றமாக இருந்தது. அந்த மனநிலையோடு தன் பெற்றோரின் வீட்டின் பின்புற தோட்டத்தை அடைந்தாள். அங்கே அவள் கண்ட காட்சியைப் பார்த்து அதிர்ந்து, “ஐயா” என்று அழைக்க, “தமிழு… வாம்மா… சங்கரன் சொன்னாவுங்க… நீ ஊருக்கு வந்த விசயத்தை” என்றவர், “எப்படிம்மா இருக்க?” என்று அவர் முகத்தில் துணியால் மறைத்து கொண்டு மகளை வரவேற்க, “நான் நல்லா இருக்கேன்… நீங்க என்ன பண்றீங்க ஐயா?” என்று கேட்டாள். “மருந்து அடிக்கிறேன்ம்மா… நம்ம மாமரம் சரியாவே காய்க்கல பூவெல்லாம் கொட்டிப் போச்சு… அதான்… சரி சரி நீ உள்ளுர போ… நீ இங்கன நிற்காதே” என்றார். அவளுக்கு அப்போது ஒரு விஷயம் நன்றாகப் புரிந்தது. இங்கே யாரையும் இயற்கை விவசாயத்திற்கு அத்தனை சுலபத்தில் மாற்றிவிட முடியாது. அதற்காக இங்கே நிறைய போராட வேண்டும்! அப்போது தன் விழிகளில் வழிந்த கண்ணீரைத் துடைத்த போதுதான் அவள் தன் கை கட்டைப் பார்த்தாள். அதனைப் பார்த்தால் தேவையில்லாமல் கேள்வி எழும் என்று எண்ணியவள் அவசரமாக அதனை கழற்றி ஓரமாக எறிந்தாள். அந்தக் காயம் அவள் உள்ளங்கையில் இருப்பதால் யாருக்கும் அத்தனை சுலபத்தில் தெரியாது என்று எண்ணியபடி அவள் வீட்டிற்குள் நுழைய சகுந்தலா மகளைப் பார்த்த சந்தோஷத்தில் அவளை ஆசையாகக் கட்டிக் கொண்டு, “எப்படி கண்ணு இருக்க? நல்லா இருக்கியா… எம்புட்டு நாளாச்சு” என்று பாசமாக வினவ, “ம்ம்ம்… நல்லா இருக்கேன் ம்மா” என்றவள் தேடலாகப் பார்க்க, “எங்க ம்மா அரசனும் செல்வியும்?” என்று விசாரித்தாள். “இன்னும் வரல கண்ணு… வர்ற நேரம்தான்… நீ ஊருக்கு வர்றன்னு தெரிஞ்சிருந்தா அரசன் ஸ்கூலுக்கு மட்டம் போட்டிருப்பான்… நீ வர போறன்னு ஒரு ஃபோன் பண்ணி இருக்கலாம்ல” என்று சகுந்தலா கிட்டத்தட்ட ஆறு மாதத்திற்கு பிறகு பழைய கோபமெல்லாம் மறந்து மகளிடம் பாசமாகப் பேசினார். “இரு இரு… ஆட்டுக்கறி குழம்பு வைச்சு இருக்கேன்… உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வறேன்… அங்கன என்ன சாப்பிடுறியோ என்னவோ?” “ம்மா வேண்டாம்… நான் சாப்பிட்டுதான் வந்தேன்” என்றாள். “ஆட்டுக்கறி குழம்புன்னா ஆசையா சாப்பிடுவியே கண்ணு… ஒன்ற ஐயன் உனக்காகதான்டி வாங்கிட்டு வந்து கொடுத்தாரு… நீ சாப்பிடலன்னு தெரிஞ்சா சண்டைக்கு வந்து போடுவாரு” என்று சொல்லிக் கொண்டே சகுந்தலா உள்ளே செல்ல தமிழுக்கு அவரை என்ன சொல்லி தடுப்பது என்றே தெரியவில்லை. கையிலிருக்கும் காயத்தோடு எப்படி சாப்பிடுவது என்று அவள் யோசிக்கும் போதே தட்டில் உணவை எடுத்துவந்து அவள் கையில் கொண்டு வந்து தந்துவிட்டார். அவள் அந்த உணவை தன் காயத்தில் படாமல் சாப்பிட பெரும்பாடுப்பட்டு கொண்டிருக்க, “என்ன கண்ணு… நல்லா சாப்பிடு” என்று சகுந்தலா அவள் அருகில் வந்து அமரவும், “நீயே ஊட்டி வுடும்மா” என்றாள். சகுந்தலாவின் கண்கள் நிரம்ப, அவரே மகளுக்கு உணவைப் பிசைந்து ஊட்டினார். “என்ன ம்மா இன்னும் அரசனும் செல்வியும் வரலை” என்று அவள் சாப்பிட்டு கொண்டே வினவ பரிமளம் சரியாக அதே சமயத்தில் வீட்டிற்குள் நுழைந்தாள். ‘ஐயோ! சித்தியா… வந்து நொச்சு நொச்சுங்கம்மே’ என்று மனதில் புலம்பினாலும், “வாங்க சித்தி… எப்படி இருக்கீங்க?” என்று நலம் விசாரித்தாள். “நான் நல்லா இருக்கேன்… நீ எப்படி இருக்க தமிழு?” என்று விசாரித்தவர் மேலும் ஊர் பிரச்சனை உறவு பிரச்சனை எல்லாம் பேசத் தொடங்க, அவளும் வேறுவழியில்லாமல் கடுப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அப்போது பரிமளம் அவள் கையை எதச்சையாகக் கவனித்து, “கையில என்ன வெட்டு காயம்?” என்று பதற, தமிழுக்குப் பதட்டமானது. “என்னடி இது?” என்று சகுந்தலாவும் பதறித் துடிக்க, “ஐயோ! அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க ம்மா… காய் வெட்டும் போது பட்டிருச்சு” என்று அவள் சமாளித்தாள். “காய் வெட்டும் போது எப்படி இப்படி காயம் படும்… இது ஏதோ வெட்டுன மாதிரி இல்ல இருக்கு” என்று பரிமளம் சொல்ல, “ஆமா எனக்கும் அப்படிதான் தோனுது” என்ற சகுந்தலா மகளிடம், “உண்மையைச் சொல்லு தமிழ்” என்றார். “நீங்க நினைக்குற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லிங்க ம்மா… இது தெரியாம வெட்டிகிட்ட காயம்தானுங்க” என்றாள். “ஒரு கட்டு கூட போடாம இருக்க… இதான் ஒன்ற புருஷன் உன்னைப் பார்த்துக்குற லட்சணமா?” என்று சகுந்தலா கோபமாகக் கேட்டதும், “தெரியாம பேசாதீங்க… அவங்கதான் எனக்கு கட்டெல்லாம் போட்டு சாப்பாடு ஊட்டி விட்டாங்க… ஹாஸ்பிட்டடில் போலாம்னு கூட சொன்னாவுங்க நான்தான் வேண்டாமுனு சொல்லி போட்டேன்” என்றாள். “ம்ம்கும்… புருஷனைப் பத்தி ஒன்னும் சொல்லிட கூடாது” என்று நொடித்து கொண்ட சகுந்தலா, “ஒன்ற ஐயனுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சுதுன்னா அம்புட்டுதான்” என்றார். “வேண்டாமுங்க ம்மா… ஐயனுக்கு சொல்லாதீங்க… அவங்க பதறி போடுவாங்க” “சரி… நான் போய் துணி எடுத்து வந்து உனக்கு கட்டுப் போட்டு விடுறேன்” என்று சொல்லி சகுந்தலா எழுந்து சென்றுவிட்டார். தமிழ் பரிமளம் புறம் திரும்பி, “ஏன் சித்தி இப்படி பண்ணீங்க? நான் ஐயனுக்கும் அம்மாவுக்கும் தெரிய கூடாதுன்னுதான் கட்டியிருந்த கட்டைக் கூட தூக்கிப் போட்டுட்டு வந்தேன்” என்றாள். பரிமளம் அவளைக் கூர்மையாகப் பார்த்து, “சாதாரண காயமா இருந்தா ஏன் மறைக்கோணோம்… ஒன்ற புருஷனுக்கும் உனக்கும் ஏதாச்சும் பிரச்சனையா?” என்று கேட்டுவிட அவளுக்கு பக்கென்று இருந்தது. நேரில் பார்த்தது போல சொல்கிறார் என்று பயந்த அதேநேரம் தன் சித்தியிடம், “அப்படி எல்லாம் இல்லைங்க சித்தி” என்று மறுத்துவிட, “உங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையும் இல்லன்னா… ஏன் டி ஒன்ற புருஷன் மறுபடியும் குடிக்கிறாரு” என, “சித்தி… வேண்டாம் வாய்க்கு வந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க” என்று அவள் கோபமாகக் கத்திவிட்டாள். “நான் ஒன்னும் தெரியாம சொல்லல… ஒன்ற சித்தப்பாதான் சொன்னாவுங்க… முந்தா நாள் இராத்திரி அவங்க நேர்ல பார்த்து இருக்காங்க” என்று தெளிவாக உரைத்தாள். அந்த வார்த்தையில் அவள் தலையில் இடியே இறங்கிய உணர்வு. ஆனால் அவள் அதனை நம்பாமல், “இல்லைங்க சித்தி… இருக்காது… அவங்க இப்பெல்லாம் அப்படி இல்ல… சித்தப்பா ஏதோ தப்பா பார்த்திருப்பாங்க” என்று மறுக்க, “அப்படியா? அப்போ எவனோ களவாணி பயன் உங்க காட்டுல பயிரை நாசம் பண்ணிட்டுப் போனானனே.. அன்னைக்கு ஒன்ற புருஷன் எங்கன இருந்தாராம்?” என்றாள். அந்தக் கேள்விக்கு அவளால் பதில் பேச முடியவில்லை. அவனிடம் அது பற்றி கேட்ட போது அவன் சரியாக எந்தவித விளக்கமும் கொடுக்கவில்லை. அவளுக்கு தலையே சுற்றியது. அவனிடம் அப்போதே அது பற்றி கேட்டுத் தெளிவுப்படுத்த வேண்டும் என்ற அவசரத்தில் வெளியே வைத்திருந்த வாலியில் கையை அலம்பிக் கொண்டு தன் வீடு நோக்கி விரைந்துவிட்டாள்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா