மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumKrishnapriyanaryan completed novels: POOVE UN PUNNAGAYILKPN's Poove Un Punnagayil - 6Post ReplyPost Reply: KPN's Poove Un Punnagayil - 6

Quote from monisha on May 12, 2022, 10:51 AM

அத்தியாயம்-6
ஏறிய போதையின் பக்கவிளைவாக கருணாகரனின் முகமே வீங்கிப்போய் பார்க்க சகிக்கவில்லை அவரை. இந்த அழகுடன் வீட்டிற்கு சென்றார் என்றால் நிச்சயம் தாமரையின் பதட்டம் அதிகரிக்கும். எனவே இப்பொழுது வீட்டிற்கு செல்வதென்பது உகந்ததில்லை. இந்த விருந்தினர் இல்லத்துக்கு வரும்பொழுது அணிய ஏதுவாக லுங்கி டீ-ஷர்ட் போன்ற சில எளிய ஆடைகள் மட்டுமே அங்கே இருப்பில் இருந்தன. மற்றபடி முந்தைய தினம் அவர் அணிந்துவந்த உடையும் கூட மீண்டும் உடுத்தும் நிலையிலில்லை. எனவே அலுவலகத்திற்கும் போக இயலாது. காலை உணவை ஆன்லைனில் தருவித்துச் சாப்பிட வைத்தவன், அவரை மதியம் வரை அங்கேயே ஓய்வெடுக்கும்படி சொல்லிவிட்டு, மாற்று உடை எடுத்துவர வீட்டுக்குக் கிளம்பினான் சத்யா. உள்ளே நுழைந்ததுமே முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு 'உர்' என அவனை எதிர்கொண்டார் தாமரை. எதையாவது பேசிவைத்தால் சும்மா இருக்கும் சிங்கத்தைச் சொறிந்துவிட்டதுபோல் ஆகிவிடும் என்பதால், ஒன்றுமே நடக்காதது போன்று தன் அறைக்குள் போய் புகுந்துகொண்டவன், சில நிமிடங்களில் குளித்து அலுவலகம் செல்ல தயாராகி வந்தான். உணவு மேசையின் மேல் சிற்றுண்டிகள் தயாராக இருக்க, அவனுக்காக அங்கே காத்திருந்தார் தாமரை. 'பசங்க மாமா அத்தை எல்லாரும் சாப்டாங்களாக்கா, நீ சாப்பிட்டியா" எனக் கேட்டுக்கொண்டே அவன் வந்து உட்கார, "மணி பத்தாச்சு இன்னுமா சாப்பிடாம இருப்பாங்க?" எனக் குதர்க்கமாகத் தொடங்கியவர், "ஏண்டா, என்ன பார்த்தா உங்களுக்கெல்லாம் எப்படி இருக்கு" என உச்சஸ்தாயியில் தொடர, "டிபிக்கலா... கணவனே கண் கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் படத்துலயெல்லாம் வருவாங்க இல்ல அந்த ஹீரோயின் மாதிரி இருக்க..க்கா" என அலட்டிக்கொள்ளாமல் பதில் கொடுத்தான் அவன். அவன் சொன்ன பாவனையில் கோபம் கொஞ்சம் பின்னுக்குப் போனதால் எட்டிப்பார்த்த லேசான சிரிப்புடன், "டாய்" என அவர் போலியாகப் பற்களைக் கடிக்க, "பின்ன, பழைய படத்துல வர மாதிரி, 'என் அத்தானுக்கு என்ன ஆனதோ'ன்னு ஓவரா டயலாக் விட்டன்னா வேற எப்படி தோணும்?" என அவன் அதே பாணியில் தொடரவும், "ப்ச்... சத்யா" என இலகுவானவர், "நேத்து அத்தான் கிட்ட பேசறேன்னு சொல்லிட்டு போனவன், இப்பதான வீட்டுக்கு வர. என்னை பத்தி யாராவது கவலை படறீங்களா?" என விடாமல் படபடக்கவே, "ப்ச்... அக்கா, சைட்ல முக்கியனமான ஒர்க் போயிட்டு இருக்கு, நைட் அங்க தங்க வேண்டிய சூழ்நிலைன்னு போன் பண்ணேன் இல்ல, அப்பறம் என்ன" எனக் கொஞ்சம் குரலை உயர்த்தினான் சத்யா, அவரிடம் எதையும் உடைத்துச் சொல்லமுடியாமல் பொய் சாக்கு சொல்வதால் உண்டான இயலாமையில். அதற்கும் அவர் முகம் சுணங்கவும், 'ப்ச்... அத்தானுக்கு ஒர்க் டென்ஷன்தான் வேற ஒண்ணுமில்ல. அந்த வேலயும் இப்ப முடிஞ்சுபோச்சு. ஸோ, இனிமேல் நார்மலாயிடுவாருன்னு நினைக்கறேன்" என்றவன், "உன் ஊட்டுக்கார ஈவினிங் சீக்கிரமே ரிலீஸ் பண்ணி அனுப்பிவிடறேன், நீயே அவர்கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வா" என்று சொல்லிவிட்டு வேகமாக உண்டு முடித்து, அவருக்கான உடைகளை எடுத்துக்கொண்டு கிளம்பி வெளியில் வந்தான் சத்யா. அதே நேரம் எங்கோ வெளியில் செல்ல முழு ஒப்பனையுடன் தயாராகி, அருகிலிருப்பவரை மயக்கம் போடவைக்கும் அளவுக்கு வாசனை திரவியத்தின் நெடி தூக்கியடிக்க தன் இருசக்கர வாகனத்தில் கிளம்பிக்கொண்டிருந்தாள் ஹாசினி. அவளைப் பார்த்ததும் சற்று எரிச்சலாகிப்போனது சத்யாவுக்கு. ஆனாலும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவளுடன் பேசியே ஆகவேண்டும் என்பது நினைவுக்கு வர அவளை நிற்குமாறு அவசரமாகக் கைகாட்டி தடுத்தான். "என்ன ஆச்சு மாம்ஸ்?" எனக் கேட்டுக்கொண்டே காலை ஊன்றி அவள் நிற்கவும், "இந்த நேரத்துல எங்க கிளம்பிட்டு இருக்க?" என்றவாறு வேகமாக அவளை நெருங்கிவந்தான் அவன். "ப்ச்... என்ன மாமா இது, இப்பதான் உங்க பாசமலர் கிட்ட மொத்தத்தையும் எக்ஸ்ப்ளைன் பண்ணி முடிச்சேன். இப்ப நீங்களா" என அவள் தன் எரிச்சலை மறைத்துக்கொண்டு கேட்க, "என்ன அம்மாங்கற மரியாதை கொஞ்சம் கூட இல்லாம ஓவரா பேசிட்டே போற? பல்லை தட்டிடுவேன் ராஸ்கல்" என அவன் உக்கிரமாகவும் உண்மையிலேயே அரண்டு போனவள், "சாரி மாம்ஸ்... சும்மா விளையட்டுக்கு" என முணுமுணுக்க, "சீரியஸ்ஸா கேள்வி கேட்கும்போது என்ன விளையாட்டு வேண்டிக்கிடக்கு?" என அதே கடுமையுடன் அவன் தொடரவும், அவள் அப்பாவிடம் செய்வது போல் இரண்டு சொட்டு கண்ணீரில் அவனைக் கரைக்க முடியாது என்பதை நன்றாகவே அறிந்துவைத்திருப்பதால் என்ன சொல்வது என புரியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அவள். அதே போல் அவள் மிஞ்சினால் கெஞ்சும் ரகம் என்பதை நன்றாகவே அறிந்துவைத்திருப்பதால்தான் அவனும் குரலை உயர்த்தியதே. "என்ன, கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலை காணும்" என அவன் அதிலேயே நிற்கவே, "நெக்ஸ்ட் வீக் என் ஃப்ரெண்ட் வர்ஷாக்கு வெட்டிங். அதுக்காக ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ண போறேன்" என அவள் வேண்டா வெறுப்பாகப் பதில் கொடுக்க, "உன் ஃப்ரெண்டுக்குதான கல்யாணம்? என்னவோ நீதான் கல்யாண பொண்ணுங்கற ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுக்கற?" என நக்கலாக மொழிந்தவன், "எங்க பர்ச்சேஸ் பண்ண போற" என்று கேட்க, அவனிடம் தென்பட்ட கடுமையில் பயந்து வேறு வழி இல்லாமல், "&&& மால்" என அந்த இடத்தை சொன்னாள் ஹாசினி. "முடிய எவ்வளவு நேரம் ஆகும்?' என்ற அவனது அடுத்த கேள்விக்கு, "அங்கயே, மூவிக்கு டிக்கெட்ஸ் புக் பண்ணியிருக்கோம். எப்படியும் ஈவினிங் ஆயிடும்" என அவள் அதற்கும் அசராமல் பதில் கொடுக்க, கடுப்பானது அவனுக்க. "சரி, முடிஞ்சதும் எனக்கு மெசேஜ் பண்ணு, நான் அங்க வரேன். உன் கூட முக்கியமா பேசணும்" என அவன் அடுத்த குண்டை தூக்கிப் போட, அவளுடைய முகத்தில் இருள் படர்ந்தது. அதை உணர்ந்தவனாக, "ஆமாம், உனக்கு ஏன் இப்படி டென்ஷன் ஆகுது? உண்மையாவே ஃப்ரெண்ட்ஸ் கூடத்தான சுத்தப்போற" என கூர்மையாகக் கேட்டான் அவன். அதுதானே அவளுடைய அந்த அச்சத்திற்குக் காரணமே! ஏனென்றால் அவள் சொன்னதில் பாதிதான் உண்மை, மீதி பொய். அதாவது பர்ச்சேஸ் மட்டுமே தோழிகளுடன், சினிமாவை அவளுடைய ரகசிய சினேகிதனுடன்தான் பார்க்கப்போகிறாள். அதுவும் வேலை இருக்கிறது வரமாட்டேன் என்றவனை சிறு சண்டைக்குப் பின் கொஞ்சம் அதிகம் மிஞ்சி கிட்டத்தட்ட மிரட்டி வர சம்மதிக்க வைத்திருக்கிறாள். இப்பொழுது அவனை வரவேண்டாம் என்று மட்டும் சொன்னால், அவ்வளவுதான். இதுதான் சாக்கென்று வானத்துக்கும் பூமிக்குமாக குதிப்பான் அவன். யோசனையில் உறைந்தவள், சத்யா அவளையே பார்ப்பதை உணர்ந்து, "என்ன ஆச்சு மாம்ஸ், ஏன் இப்படியெல்லாம் கேட்கறீங்க" என அப்பட்டமான பயம் அவளது குரலில் எதிரொலிக்க அவள் கேட்டதில் வெறும் காற்றுதான் வெளியில் வந்தது. அதிலேயே அவளுடைய கள்ளத்தனம் நன்றாக வெளிப்பட, குடைவது போல் அவளை ஒரு பார்வை பார்த்தவன், "அதை அப்பறமா சொல்றேன், நீ இப்ப கிளம்பு" என்று முடித்துக்கொண்டு தன் வேலையைப் பார்க்கப் போனான் சத்யா. அதன்பிறகு அவளால்தான் தோழியருடன் உற்சாகமாகப் பங்கெடுத்து, பட்டியலிட்டு வந்த எதையும் வாங்கி குவிக்க முடியாத அளவுக்கு அவளது மனம் தடுமாறிப்போனது. பெயருக்குக் கண்ணில்பட்ட ஒரு சிலதை மட்டும் வாங்கியவள், அங்கேயே இருக்கும் உணவகத்தில் அவர்களுடன் மதிய உணவை முடித்துக்கொண்டாள். அதன் பின் எதையெதையோ சொல்லி அவர்களைக் கழற்றிவிட்டவள், அங்கே இருக்கும் திரையரங்கம் நோக்கிச் சென்று, அங்கே காத்திருப்புப் பகுதியில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டாள். சில நிமிடங்கள் காக்கவைத்து அதீதமாக அவளை எரிச்சல் படுத்திய பிறகே அங்கே வந்துசேர்ந்தான் அவளது காதல் மன்னன், கௌசிக். கோபத்தில் சிவந்த முகமும் அவளுடைய எரிக்கும் பார்வையும் அவனது பதட்டத்தைக் கூட்ட, "சாரி ஹசி, ஆஃபீஸ்ல கொஞ்சம் வேலை இழுத்துடுச்சு, டிராபிக் வேற அதான் லேட்" என அவளை அமைதிப்படுத்தும் விதமாகக் குழைந்த குரலில் விளக்கம் கொடுத்துக்கொண்டே அவளை உரசியவாறு வந்து உட்கார்ந்தான் அவன். கடுப்பில் அவனை விட்டுத் தள்ளி அமர்ந்தவள், "போடா... போறவன் வரவன்லாம் என்னை ஒரு மாதிரி பார்த்துட்டே போறான். நீ நொண்டி சாக்கு சொல்ற இல்ல" என அவள் சீற, 'மொக்க படமா இருந்தாலும் பரவாயில்ல, ஏதோ இவ கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு இந்த வேகாத வெயில்ல... ட்ராபிக்ல... இவ்வளவு தூரம் வண்டி ஓட்டிட்டு இவளுக்காகதான வந்திருக்கோம், கொஞ்சம் கூட புரிஞ்சிக்காம எவ்வளவு தெனாவெட்டா பேசறா பாரு... ச்சை' எனப் பொங்கிய ஆத்திரத்தை, ‘காலைலதான் ஒரு சண்டை முடிஞ்சு சமாதானம் ஆச்சு. எதையாவது சொல்ல போய் வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறினா ஆபத்து. நீ கொஞ்சம் அடங்கு' என அவனது மனசாட்சியே அவனை அடக்கியதால் உள்ளே தள்ளிப் புதைத்தவன், மிக முயன்று முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு, "படம் ஆரம்பிச்சுடும் ஹசி குட்டி, வா போகலாம்" எனக் கொஞ்ச, கொஞ்சம் தணிந்தவள் காலை நடந்ததை அவனிடம் விலாவாரியாக விளக்கியவாறு அவனுடைய கையுடன் தன் கையை கோர்த்துக்கொண்டு திரையரங்கினுள் சென்றாள். அவர்களுக்கான இருக்கையைத் தேடிப்பிடித்து உட்கார்ந்து, 'சினிமா' தொடங்கியபின் அதுவரை இருந்த பதட்டமெல்லாம் மறைந்து இலகு நிலைக்குத் திரும்பினாள் ஹாசினி. பாப்கார்ன், ஐஸ்க்ரீம், சின்ன சின்ன சீண்டல்கள் சகிதம் இருவரும் படத்துடன் ஐக்கியமாகிவிட, படம் முடிவை நெருங்கவும் மீண்டும் பதட்டம் வந்து தொத்திக்கொண்டது அவளுக்கு. அதில் அவளது கன்னம் உரசிய அவனுடைய கையை அனிச்சை செயலாக அவள் பட்டெனத் தட்டிவிட, "ப்ச்... என்ன ஆச்சு ஹாசினி" எனக்கேட்டான் அவன் குழப்பத்துடன். "நான் முடிஞ்சு போன் பண்றதுக்கு முன்னாலயே ஒரு வேளை சத்யா மாமா இங்க வந்துட்டாங்கன்னா?" என்றவள், 'நான் செத்தேன்" என முடித்தாள் உண்மையான அச்சத்துடன். "ப்ச்... என்ன ஹாசினி, உங்க அப்பாவே உன்னை எதுவும் கேட்கமாட்டாங்கன்னு சொல்லுவ, மாமாவுக்கெல்லாம் பயப்படற" என அவன் எரிச்சலுடன் சொல்ல, 'அவன் யார், உன் விஷயத்தில் தலையிட' என்கிற பாவனை தொக்கி நின்றது அவனுடைய குரலில். அதை அவள் உணர்ந்தாளா என்பதை கூட அவனால் புரிந்துகொள்ளமுடியாத ஒரு பாவத்தில் தொடர்ந்தாள் ஹாசினி. "உனக்கு தெரியாது கௌசி, அம்மா என்னை திட்டினா கூட அப்பா எனக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. ஆனா சத்யா மாமா எதுக்காவது கண்டிப்பா பேசினாலோ இல்ல திட்டினாலோ அப்பா கண்டுக்காத மாதிரி போயிடுவாங்க. முன்னாடிலாம் அப்பா இப்படி இல்ல. நான் செகண்ட் இயர் படிக்கும்போது ஒரு இன்சிடன்ட்ல மாமா என்னை தப்பா புரிஞ்சிட்டு கச்சாமுச்சான்னு திட்டி அடிக்க வேற செஞ்சிட்டாரு. அப்பாவுக்கு கோவம் வந்து, எனக்கு சப்போர்ட் பண்ணி மாமாவ, ‘உன் வேலையை மட்டும் பார்த்துட்டு போ, பசங்க விஷயத்துல தலையிடாத’ன்னு மூஞ்சில அடிக்கற மாதிரி பேசிட்டாங்க. வருத்தப்பட்டுட்டு மாமா ஊருக்கு போயிட்டாங்க. அதனால அம்மா அப்பாவுக்குள்ள சண்டையாயிடுச்சு. அப்பாவே போய் மாமாவ சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்தாங்க. அதுக்கு அப்பறம்தான் அப்பா இப்படி மாறிப்போயிட்டாங்க. மாமா கூட அடிக்கடிலாம் என்கிட்ட இப்படி கோப பட மாட்டாங்க. எப்பவாதுதான். இப்ப என்ன பிரச்சனைனு தெரியல, ஒரு வேள, நம்ம லவ் மேட்டர் தெரிஞ்சுபோச்சோன்னு கொஞ்சம் பயமா இருக்கு" என நீண்ட விளக்கம் கொடுத்தாள் அவள். 'ஆமாம் அன்னைக்கு உங்க மாமா ஏன் உன் மேல அந்த அளவுக்கு கோபப்பட்டாங்க?' எனக் கேட்டு அன்றைய பிரச்சனையின் மூல காரணத்தை அறிந்துகொள்ளும் அளவுக்கு அவள் சொன்ன கதையெல்லாம் அவனுடைய மனதிலேயே பதியவில்லை. ஆனால் கடைசியாக அவள் சொன்ன செய்தி மட்டும் அவனைக் கொஞ்சம் அதிரச்செய்ய, "அப்படிலாம் இருக்காது. டென்ஷன் ஆகாத, படம் விட்டதும் நீ முன்னால போய் ஒரு ரவுண்ட் பாரு. நான் ஒரு ஃபைவ் மினிட்ஸ்க்கு அப்பறம் வெளியில வரேன்" என அதற்கு ஒரு அவசர தீர்வு சொன்னான் கௌசிக். "ஐயோ, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் கூட இல்லன்னா கேள்வி மேல கேள்வி கேட்பாங்க" என்றவள், "நீ முன்னால போய் பாரு. மாமா இல்லன்னா எனக்கு கால் பண்ணு. நான் வெளியில வரேன். தென் காஃபி ஷாப்ல போய் நான் மாமாக்கு கால் பண்ணிக்கறேன். அப்ப கேட்டா, படம் விட்ட உடனே ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் கிளம்பி போயிட்டாங்கன்னு சொல்லி சமாளிக்கலாம்" என அவள் சொல்லிவிட, அந்த திரைப்படம் முடியவும் வெளியில் வந்தவன் ஒரு சுற்று பார்க்க, சத்யா அவனது கண்களில் தென்படவில்லை. பின் அவன் அவளுக்குத் தகவல் கொடுக்க, வெளியில் வந்து அவனுடன் இணைந்துகொண்டாள் ஹாசினி. தொடர்ந்து இருவருமாகக் கைகோர்த்தவாறு எஸ்கலேட்டரில் இறங்கி, தரை தளத்திலிருந்த காஃபி ஷாப்புக்கு வந்தனர். அவள் போய் ஒரு இருக்கையில் அமர, பணம் செலுத்தி இருவருக்குமாக காஃபியை வாங்கிவந்து அவளுக்கு எதிரில் அமர்ந்தான் கௌசிக். உடனே அவள் சத்யாவுக்கு அழைக்க, அதே தளத்திலிருந்த அந்த மாலின் அலுவலகத்தின் வரவேற்பில் அமர்ந்து காஃபியை பருகியவாறு கண்ணாடி தடுப்பின் வழியாகத் தெளிவாக இருவரையும் பார்த்தவாறே அந்த அழைப்பை ஏற்றான் சத்யா. அவன் முகத்தில் யோசனை, குழப்பம் அனைத்தும் படர்ந்திருக்க, உச்சபட்ச அதிர்ச்சியில் அவனுடைய நெற்றி நரம்புகள் புடைத்திருந்தன. காரணம் ஹாசினியின் அருகில் உட்கார்ந்திருந்தவன் அவர்களுடைய போட்டி நிறுவனத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் இருப்பவன். ****************

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா