மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumKrishnapriyanaryan completed novels: POOVE UN PUNNAGAYILKPN's Poove Un Punnagayil - 9Post ReplyPost Reply: KPN's Poove Un Punnagayil - 9

Quote from monisha on May 30, 2022, 11:46 AM

அத்தியாயம்-9
கோபித்துக்கொண்டு தன் அறைக்குள் போய் முடங்கியவள்தான், கருணா தவிர்த்து வீட்டில் உள்ள அனைவரும் மாற்றி மாற்றி ஒவ்வொருவராகப் போய் அழைத்துப் பார்த்தும் கூட சாப்பிட வரவில்லை ஹாசினி. குறைந்த பட்சம் அறையின் கதவைக் கூட திறக்கவில்லை அவள்.  அவர் இருந்த சூடான மனநிலைக்கு, "ஒரு வேளை சாப்பிடலன்னா ஒண்ணும் குறைஞ்சு போயிடமாட்டா, யாரும் அவ கிட்ட போய் கெஞ்சிட்டு இருக்காதீங்க" என கருணாகரன் போட்ட அதட்டலில் அனைவரும் அடங்கிப்போயினர்.  பெயருக்கு இரவு உணவை உண்டுவிட்டு எல்லோரும் அவரவர் அறைக்குள் போய் முடங்கிவிட, நடப்பது எதுவும் பிடிபடாமல் ஆயாசத்துடன் தோட்டத்து திண்ணையில் வந்து உட்கார்ந்தார் தாமரை.  அதற்காகவே காத்திருந்தாற்போன்று கருணாகரன், சத்யா இருவரும் அவரை நோக்கி வர, "என்ன நடந்தது ஏது நடந்ததுன்னு எதையும் என்கிட்டே சொல்லாம, அப்பாவும் பொண்ணும் இந்த ஆட்டம் ஆடறீங்க. அப்பறம் நான் ஒருத்தி எதுக்கு இந்த வீட்டுல" என வெடித்தவர், தன் முகத்தைத் திருப்பிக்கொண்டார் அவர்.  "ப்ச், தாமரை, விவரம் புரியாம கோபப்படாத" என கருணாகரன் தகைவாகவே சொல்ல, "என்ன விவரம் புரியல எனக்கு? உங்களுக்குத்தான் புரியல. ஹாசினிக்கு வயசுதான் இருபத்தி ரெண்டு ஆகுது. ஆனா இன்னும் அவளுக்குக் கொஞ்சம் கூட மெச்சூரிட்டியும் வரல, பொறுப்பும் வரல. அவளைக் கல்யாணம் செஞ்சு கொடுத்துட்டு, ஒவ்வொண்ணுத்துக்கும் நாம அவ பின்னாலயே போய் நின்னுட்டு இருக்க முடியுமா சொல்லுங்க? அவளுக்கு ஆபிஸ்ல ஏதாவது பொறுப்பு கொடுங்க. அதை விட்டுட்டு கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்? இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷம் போனாதான் என்ன?” எனப் பொரிந்து தள்ளினார் தாமரை.  "அக்கா, என்ன நடந்ததுன்னு தெரியாம இப்படி சாமி ஆடாத"  "என்னடா, என்ன? எனக்கு இப்ப என்ன தெரியணும்... ம், வந்துட்டான் அத்தானுக்கு பரிஞ்சுக்கிட்டு"  "போனவாரம், ஒரு சப்ளையர் கூட லஞ்சுக்கு போயிருந்தேன் இல்ல, அன்னைக்கு ஹாசினிய ஒரு பையன் கூட பார்த்தேன் தாமர"  அவருடைய கண்களைச் சந்திக்க இயலாமல் தலை குனித்தவண்ணம் கருணா சொல்லவும் அதிர்ந்தார் தாமரை.  "ச்ச...ச்ச... நம்ம குட்டிம்மாவா இருக்காது, நீங்க வேற யாரையாவது பார்த்திருப்பீங்க. அதான் யாரை பார்த்தாலும் நம்ம பொண்ணுமாதிரி தோணுமே உங்களுக்கு"  "ப்ச்... அக்கா, நம்ம ஹாசினிதான் அது. நானே அவ கிட்ட பேசிட்டேன்"  சத்யா அனைத்தையும் சொல்லி முடிக்க, சிறிதும் நம்ப இயலாமல் இறுகிப்போய் அசைவற்று உட்கார்ந்திருந்தார் தாமரை.  "தாமர, டென்ஷன் ஆகாத, நாம சீக்கிரமே நல்ல இடமா பார்த்து அவளுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சிடலாம். என்னை மீறி எதுவும் நடக்காது"  "ப்ச்... என்ன இப்படி பேசறீங்க. அறக்க பறக்க எடுத்தோம் கவுத்தோம்னு இப்படி முடிவு பண்றது ரொம்ப தப்பு. ஒண்ணு அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வெச்சு வேற விஷயத்தில் அவளை டைவர்ட் பண்ணணும், இல்ல அவ விருப்பத்துக்கு போயிடனும். இல்லன்னா அது அவளோட பிடிவாதத்தைதான் அதிகமாக்கும்"  தாமரை அவருக்கு புரியவைக்க முயல,  "நீ சொல்றதெல்லாம் வேலைக்கே ஆகாது. எனக்கு தெரியும் என்ன செய்யணும்னு'  ஆணவமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றார் கருணாகரன்.  'பாரு சத்யா இவர, அவ விஷயத்துல இப்படி என்னை அடக்கி அடக்கிதான், அவளுக்கு என்கிட்ட கொஞ்சம் கூட பயமும் இல்ல, மரியாதையும் இல்ல. அவளைக் கொஞ்சி கொஞ்சி, அவர் கிட்டயும் பயம் இல்லாம போயிடுச்சு. இனிமேல் என்னல்லாம் நடக்க போகுதோ"  வேதனையுடன் பேசிக்கொண்டே போன தமக்கையை உணர்வற்ற ஒரு பார்வை பார்த்தவன், "நானும் அத்தான் சொன்னதைத்தான் சொல்றேன், பதட்டபடாதக்கா. நாம நம்ம பார்ட்ல உருப்படியா என்ன செய்ய முடியும்னு யோசிக்கலாம். இப்ப போய் படு. மீதிய பொழுது விடிஞ்சு பார்த்துக்கலாம்" என முடித்தான் சத்யா.  வேறு வழி தெரியாமல் ஒரு ஆயாசத்துடன் வீட்டிற்குள் சென்றார் தாமரை. ***  அடுத்த நாள் காலை ஒரு கையில் காஃபி கோப்பையும் மற்றொரு கையில் செய்தித்தாளுமாக உட்கார்ந்திருந்தார் கருணாகரன். முந்தைய தின நிகழ்வை மறந்து, வழக்கம் போல மகள் எப்படியும் தன்னை தேடி வருவாள், நிதானமாகப் பேசி அவளுடைய மனதை மாற்றிவிடலாம் என அதீத நம்பிக்கையுடன் அவளை எதிர்நோக்கி அவர் காத்திருக்க, அவரை பார்க்கப் பார்க்கத் தாமரைக்குத்தான் பரிதாபமாக இருந்தது.  கருணாகரனை பொறுத்தவரை அவர்தான் இதுவரை எதற்குமே மகளுக்கு 'நோ' சொன்னதில்லையே தவிர தாமரை எவ்வளவோ முறை எதெதற்கெல்லாமோ மகளிடம் மறுப்பு தெரிவித்து சற்று அதிகமாகவே மூக்கு உடைபட்டிருக்கிறார்.  காரணம், அவளுடைய அப்பாவின் முழு ஆதரவு அவளுக்குத் தங்குதடையின்றி கிடைப்பதுதான்.  சொல்லப்போனால் ஹாசினியின் பிடிவாதம், பிடிவாதம் என்பதைக் காட்டிலும் 'நான் நினைப்பதுதான் இங்கே நடக்கும்' என்பது போன்ற அறியாமையுடன் கூடிய ஒரு திமிர் என்று கூட சொல்லலாம், அந்த திமிரை நீர் ஊற்றி வளர்த்து விட்டதே கருணாகரன்தான்.  இன்று அது அவருக்கு எதிராகவே திரும்பப்போகிறது. இந்த போராட்டத்தில் மகள் விஷயத்தில் கருணாகரன் ஜெயிக்க சாத்திய கூறுகள் மிக மிகக் குறைவே. யார் ஜெயித்தாலும் யார் தோற்றாலும் இதில் சேதாரம் தகப்பன் மகள் இருவருக்குமே கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.  இந்த ஆட்டத்தில் கைக்கட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க இயலும் தாமரையால். கணவரை மீறிச் செயல்படவும் இயலாது, மகளின் பிடிவாதத்தைத் தளர்த்தவும் முடியாது.  மனம் முழுவதும் பாரம் ஏறிப்போய் உட்கார்ந்திருந்தார் அவர்.  முதலில் மகள் தன்னை தேடி வந்துவிடுவாள் என்றிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை நேரம் செல்லச்செல்ல 'வருவாளோ மாட்டாளோ' என்பதாக ஆட்டம்காணத்தொடங்க, தாமரை சமையலைக் கவனிக்க எழுந்துச் சென்றுவிட, வழக்கம் போல அங்கே வந்த சந்தோஷும் குளிக்கப்பபோயிருக்க, அலுவலகம் செல்லும் நேரம் நெருங்க நெருங்க 'அவள் வரமாட்டாள்' என்பது திண்ணமாக விளங்கிப்போனது அவருக்கு.  அன்று மறைமலை நகர் சைட்டில் முக்கிய வேலை வேறு இருக்க, வேறு வழி இல்லாமல் குளித்து தயாராகிச் சாப்பிட வந்தார் கருணாகரன்.  சாப்பாட்டு அறை வெறிச்சோடிப்போயிருக்க, வீட்டில் யாருமே இயல்பான உற்சாகத்துடன் இல்லை என்பது புரிந்தது.  மனம் சலித்துப்போக, வெளியில் வந்தவர், மகளுடைய அறைக்கு வெளியில் நின்று, அவளைக் கெஞ்சியும் மிரட்டியும் சாப்பிட அழைத்துக்கொண்டிருந்த தாமரையைத்தான் பார்த்தார். அதற்குக் குதர்க்கமாக ஹாசினி ஏதோ சொல்வது புரிய, ஏற்கனவே பசியிலிருந்தவருக்குக் கோபம் சுள்ளென்று ஏறியது.  "நீ ஏன் அவகிட்ட கெஞ்சிட்டு இருக்க தாமர? பசின்னா என்னன்னாவது அவளுக்குத் தெரியுமா? இவளவு நேரம் தாக்கு பிடிச்சதே பெருசு. நீ வா, பசி காதை அடைச்சா அவளா வந்து போட்டுட்டு சாப்பிடுவா" என உறுமியவர், தாமரை அவரை பரிதாபமாக ஒரு பார்வை பார்க்க, கொஞ்சமும் இளக்கம் காண்பிக்காமல் பிடிவாதம் மேலோங்க, வா என்பது போல் ஜாடை செய்துவிட்டு நேராகப் போய் சாப்பிட உட்கார்ந்துவிட்டார். வேறு வழி இல்லாமல், "சந்து, சத்யா" எனக் குரல் கொடுத்தவாறு கணவரை நோக்கிச் சென்றார் தாமரை.  "அம்மா அப்பா சாப்பிட வரல?"  "இந்த கூச்சல் குழப்பமெல்லாம் அவங்களால டாலரேட் பண்ண முடியல. அதனால ரூம்லயே கொடுக்க சொல்லிட்டாங்க, அவங்க சாப்பிட்டு முடிச்சாச்சு"  "ஓ... தொடர்த்து கெஞ்சிட்டு நிக்காத. நான் கிளம்பி போனதுக்கு அப்பறம், நிதானமா அவ கிட்ட பேசி புரியவை"  "யாருக்கு என்ன புரிய வெக்கறதுன்னே தெரியல. இவ்வளவு காலமா அவ போக்குக்கே போய் பழக்க படுத்திட்டு, இப்ப புதுசா முறையை மாத்தினா? ப்ச்... அதனாலதான் அவ படிப்புல இருந்து எல்லாமே கோணல்"  பொய்யில்லை, அவள் பன்னிரண்டாம் வகுப்பில் வாங்கியிருந்த மதிப்பெண்ணுக்கு அவ்வளவு சுலபத்தில் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. அலையோ அலை என்று அலைந்து ஒன்றுக்கு பத்தாகப் பணம் கட்டிதான் கல்லூரியில் சேர்த்தார். அதிலும் ஏகப்பட்ட அரியர்ஸ் வேறு. ஒருவழியாக அவள் படிப்பை முடிப்பதற்குள் இவருக்குத்தான் நாக்கு தள்ளிப்போனது.  உண்மைதான் என்றாலும் தாமரை சொன்ன வார்த்தைகள் மனதைக் குத்தி தைத்தது.  அதன் பின் ஒரு வாய் உணவைக் கூட உண்ண இயலாமல் அப்படியே எழுந்து போனார் கருணாகரன்.  அதைப் பார்த்துக்கொண்டே அங்கே வந்த சத்யாவுக்கும் சந்தோஷுக்கும் கூட உணவு செல்லவே இல்லை.  ஒவ்வொருவராகக் கிளம்பி அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட, மறுபடியும் மகளை நோக்கிப் படையெடுத்தார் தாமரை. பலன்தான் பூஜ்ஜியமாக இருந்து.  மதியம் வரை இதுவே தொடர அதுவரை பசியில் ஈனஸ்வரத்தில் பேசிக்கொண்டிருந்த ஹாசினியிடமிருந்து, ஒரு நிலையில் பதிலே வராமல் போனது.  பதறித்தான் போனார் தாமரை.  "ஹசி... ஹசிம்மா... ப்ளீஸ் கதவை திற. நான் அப்பாகிட்ட பேசி பாக்கறேன் என அவர் இறங்கி வந்து பேசியும் அவளிடமிருந்து எந்த ஒரு ஏதிவினையும் இல்லாமல் போக, பொறுக்க முடியாமல் கதவை தடதடவென தட்டினார் தாமரை. பதறியடித்து அங்கே வந்த அவளுடைய தாத்தா பாட்டி இருவரும் அவர்கள் பங்கிற்கு அவளைச் சமாதானப்படுத்தும்விதமாக ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்க அப்பொழுதும் குரல் கொடுக்கவில்லை அவள். நல்ல வேளையாக அந்த நேரம் பார்த்து சத்யா அங்கே வரவும், நிலைமை உணர்ந்து ஒரு முடிவுக்கு வந்தவனாக, தாழ்ப்பாளை உடைத்து கதவைத் திறக்க, மயக்கமா அல்லது உறக்கமா எனப் புரியாத வகையில் கிட்டத்தட்ட நினைவு தப்பிய நிலையில் படுக்கையில் கிடந்தாள் ஹாசினி.  அவளுடைய கன்னத்தை தட்டி எழுப்பிப்பார்த்தும் தண்ணீர் தெளித்தும் கூட அவளிடம் அசைவே இல்லாமல் போக, "ஐயோ தாமர, இந்த பொண்ணு பிடிவாதத்துல எதையாவது செஞ்சிவெச்சிட்டாளா" என தானும் பதறி மற்றவரையும் பதறவைத்தார் பாட்டி.  தாமரைக்கு பயத்தில் உடல் நடுங்கத்தொடங்க, சந்தோஷ் வேறு ஒரு பீதியுடன் தமக்கையை வெறித்தவாறு பரிதாபமாக நிற்க, வேதனையாகிப்போனது சத்யாவுக்கு.  "ஐயோ அத்த, இவ அந்தமாதிரியெல்லாம் எதுவும் செய்ய மட்டா. மத்தவங்களைத்தான் சாகடிப்பா, கொஞ்சம் நிதானமா இருங்க" என தன் கோபத்தை அடக்கி அவருக்கு பதில்சொன்னவன், "அக்கா பயப்படாத" என்றவாறு அவளுடைய நாடியைப் பிடித்துப் பார்க்க, துடிப்பு மிக மிகக் குறைவாகவே இருக்க, அப்படியே அவளை தன் கைகளில் அள்ளியவன், நேராகப்போய் தான் வந்திருந்த காரிலேயே அவளைப் படுக்க வைக்க, தாமரை மகளின் அருகிலேயே உட்கார்ந்துகொண்டார்.  தாத்தா பாட்டி இருவரையும் வீட்டைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சந்தோஷ் வந்து முன்னால் அமர, "அப்பாவுக்கு போன் பண்ணி தகவலை சொல்லிட்டு, நேரா 'கேர் பார் லைஃப்' வரச்சொல்லு" என்றவாறே வாகனத்தைக் கிளப்பினான் சத்யா.  அங்கே போனபிறகு, பசியினால் உண்டான மயக்கம்தான், மற்றபடி பயப்பட ஒன்றும் இல்லை என்பது புரிந்தது.  ட்ரிப்ஸ் போட்டு சில நிமிடங்களையே அவளுடைய மயக்கம் தெளிய, மருத்துவர் அவளிடம் கேள்விமேல் கேள்வி கேட்கவும்தான் தெரிந்தது சத்யாவிடம் அவள் உண்மையைச் சொன்ன தினத்திலிருந்தே பயமும் பதட்டமும் ஒருசேர அவளை ஆட்கொண்டிருக்க, அவள் சரியாகவே சாப்பிடவில்லை, அதுவும் தந்தையோடான முந்தைய தின உரசல்களுக்குப் பிறகு அவள் தண்ணீர் கூட அருந்தவில்லை என.  அந்த சில நிமிடங்களுக்குள்ளாகவே அடித்துப் பிடித்து அங்கே வந்து, வதங்கிய கொடியாக மகளை அப்படி ஒரு கோலத்தில் பார்த்தவர்தான், கோபம் பிடிவாதம் எல்லாம் போன இடம் தெரியாமல் ஓடி ஒளிந்துகொள்ள, அப்படியே கரைந்தே போனார் கருணாகரன், தனக்கு இதில் உடன்பாடில்லை, விருப்பமில்லை, கொஞ்சமும் மகிழ்ச்சியில்லை என்றபோதிலும், மகளை அவளுடைய விருப்பப்படியே திருமணம் செய்துகொடுத்துவிடுகிறேன் என இறங்கிவரும் அளவுக்கு.  எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பெற்றவர்கள் இருவருமாகவோ அல்லது தாய் தந்தையில் யாரோ ஒருவரோ தாம் பெற்ற பிள்ளைகள் மேல் இப்படிப் பொழியும் சுயநலமில்லாத அன்பை ஒரு ஒரு ஆயுதமாகவோ அல்லது கேடயமாகவோ பயன்படுத்தும் பிள்ளைகள் உண்மையில், அந்த பெற்றவரின் நிழலிலேயே சுகத்தை அனுபவிப்பதால் அவ்வளவு சுலபத்தில் வாழ்க்கையின் வெற்றி எனும் பக்கத்தை எட்டுவதில்லை.  இதே அந்த அன்பு அவர்களைக் காக்கும் அரண் என்பதை உணர்ந்தால், அதைத் தவறாகப் பயன்படுத்தாமல் தங்கள் முயற்சியால் வாழ்வின் வெற்றிக்கனியைப் பறிப்பார்கள்.  அதை ஹாசினிதான் உணராமல் போனாள் என்றால் கருணாகரனும் அதை உணராமல் போனதுதான் தவறு இங்கே.  இந்த நேரம் அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை, அவளுடைய திருமணம் முடியும் வரை, ஏன் இந்த திருமணம் முடிந்த பிறகும் கூட அவருடைய அருமை புத்திரி அவரை எந்த அளவுக்கு பாடாய்ப் படுத்தி, ஆட்டிப்படைக்கப்போகிறாள் என்று! ****************

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா